“இதுக்கு மேல முடியாது, மாமா. நீ சாப்பிடு,” என்று இன்னும் இரண்டு கரண்டி சோறு போட்டு குழம்பு ஊற்றினாள்.
அவளிடமிருந்து ஏப்பம் வந்த பின்னேதான் அவனும் சாப்பிட்டான்.
எல்லாத்தையும் எடுத்து அடுப்பங்கரையில் வைத்து, கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு கூடத்துக்கு வந்தாள்.
வீட்டின் அமைதி அவளுக்கு இன்னும் கவலையைத்தான் கொடுத்தது.
அதோடு சேர்ந்து, காலையில் நடந்த கலவரம் அவள் நெஞ்சில் புகுந்து அந்த நிகழ்வை மீண்டும் ஞாபகப்படுத்தியது.
திண்ணையில் இருந்தவனுக்கும் இன்னும் வீட்டுக்குள் போகும் எண்ணமில்லை. நடந்ததை எப்படி சரி செய்ய என்று எண்ணங்கள் அவனைச் சூழ்ந்தாலும்,
மனமோ குலதெய்வக் கோவிலிலேயே நின்று போனது.
கொள்ளியில் இருந்து அப்போதுதான் வீடு வந்தான் வெற்றி.
“என்ன அப்பத்தா, வீடு அமைதியா இருக்கு. எங்க உன் அருமை பேத்தியை காணோம்?” என்று கேட்டுக்கொண்டே,
வாசல் ஓரம் மூலையில் அண்டாவில் தண்ணீர் நிரப்பி இருந்ததில் இருந்து இரண்டு சொம்பு நீரில் காலை கழுவினான்.
“அவ எங்கைய்யா, வூட்டுல இருக்கா. அந்த முனிஸ் பொண்ணு கூட வெறகு எடுக்க குலதெய்வ கோவிலுக்கு போயிருக்காங்க,” என்றார்.
“ஏன் அப்பத்தா, அவ கேட்டான்னு அவ்வளோ தூரம் அனுப்பி இருக்க? அங்க ஆள் ஆரவம் கூட இருக்காது. அவ பயந்து வந்தா என்ன பண்ணுவ?” என்றான்.
“எதுக்குய்யா கேபப்படுற? நா மத்தவளுங்க வரதுக்கா மட்டும் அனுப்பி வைக்கல. முனிஸ் புள்ளை கூட போறதாலதான் விட்டேன்,” என்று இடி கல்லில் கொட்டை பாக்கு நசுங்கும் அளவுக்கு இடித்துக்கொண்டே பேரனிடம் சொன்னார்.
வாசலிலே நின்றவன், வீட்டிற்குள் கூட போகாமல் யோசனையோடு நின்றிருந்தான்.
“என்னைய்யா யோசினை?” என்று பேரனின் முகச் சுருக்கம் கண்டு கேட்க,
“ஒன்னுமில்லை, அப்பத்தா,” என்று மீண்டும் தெரு பக்கம் போகவும்,
‘என்னாச்சு ஐய்யாவூக்கு? வூட்டுக்கு வந்துட்டு வாசலோடு திரும்பி போறாரு,’ என்ற மயிலம்மா வாய் விட்டு புலம்பினார்.
“மயிலா, ஒரு ரெண்டு வெத்தலை கொடு. காலையிலிருந்து வாய் வேற நமநமன்னு இருக்கு,” என்று பக்கத்து வீட்டு கோடியம்மா கொழவி கேட்டுக்கொண்டே,
மயிலம்மா அருகில் அமர்ந்தார்.
“ரெண்டு வெத்தலை மட்டும் போதுமா? இல்லை, ரெண்டு மெத்தைக்கு சுண்ணாம்பும் வேணுமா?” என்று மயிலம்மா ஆரம்பித்தார்.
இங்கு வெளியே வந்த வெற்றிக்கு ஒரு மாதிரி இருந்தது.
“லீவு விடக்கூடாது எங்கன்னா, கூட்டாளிங்க கூட கிளம்பிடுது,” என்று தனக்குள்ளே புலம்பினான்.
“டேய் மாப்புள, என்ன தனியா பேசுற?” என்று அவன் முதுகிலே தட்டி அருகில் அமர்ந்தான் மாறன்.
“ப்ச்,” என்று அவன் சலிக்க,
“என்னடா, ரொம்பத்தான் சலிச்சுக்குற. பாரவதிமேல! தனியா ஒக்காந்து எந்த கோட்டையை புடிக்க ஆராய்ச்சி பண்ணுறன்னு கேட்டா, ரொம்பத்தான் உச்சு கொட்டு நீ?” என்று அவன் அருகிலே அமர்ந்து ஓடும் நீரில் கால்களை ஆட்டிக்கொண்டிருந்தான்.
“இல்லைடா, ஒரு மாறி இருக்கு. காலையிலிருந்து வேல்விழியை பாக்கல,” என்றான் சோகமாக.
“என்ன, ஒரே வீட்டுல இருந்துக்கிட்டு பாக்கலன்னு சொல்லுற?”
“இன்னைக்கு வெள்ளனவே எழுந்து கொள்ளிக்கு போயிட்டேன்… கொக்கு வெரட்ட,” என்ற வெற்றியைப் பார்த்து,
சிரிப்புதான் வந்தது இவனுக்கு. உதட்டை கடித்து சிரிப்பை மறைக்க பார்த்தாலும், அது முடியாமல் வெடித்து சிரித்தான்.
“உனக்கு சிரிப்பா இருக்கு. என் நிலமை,” என்று அவனை முறைத்தான்.
இவர்கள் இருப்பது தெரியாமல், மெல்ல தன் வண்டியை தள்ளிக்கொண்டு வந்தான்.
வெற்றி, மாறனை முறைத்துக்கொண்டு திரும்பி சிவாவை பார்க்க,
அந்த அறிவாளியோ, தன்னைத்தான் முறைக்குறான்னு நினைச்சு வண்டியை அங்கேயே போட்டு ஓடப் பார்த்தான்.
இவன் செயலைக் கண்டு, இருவரும் வித்தியாசமாக பார்த்தனர்.
பின்னே திரும்பி பார்த்து ஓடியவன், முன்னே வந்து பாட்டி மீதே மோதி கீழே விழுந்தான்.
பயத்தில், “ஐய்யோ, நா இல்லை… நா இல்லை,” என்று புலம்பினான்.
நண்பர்கள் மூவரும் அவனை சூழ்ந்துகொண்டு,
“என்ன நீ இல்லை?” என்று வெற்றி கைகளை முறுக்கிக்கொண்டு கேட்டான்.
மற்ற இருவரும் அவனை இன்னும் நெருங்கி நின்றனர்.
பயத்தில் அவனுக்கு வேர்த்து கொட்டியது.
சிவாவின் காலர் சட்டையை சரி செய்தவன்,
“சொல்லு பங்காளி, எதுக்காக எங்களை பார்த்து ஓடின? அப்படி என்ன நீ பண்ண? நா இல்லைன்னு கத்துற?” என்று வெற்றி கேட்க,
“அது… அது… வந்து…” என்று இவன் திணற,
“என்ன வந்து போய்னு சொல்லுற? நீ என்ன பண்ணி வச்சன்னு இப்ப சொல்லல, நானும் அவனும் பாசமழை பொழிஞ்சா, உன் நெலமை என்னன்னு யோசிச்சு பாரு,” என்றான் மாறன்.
“அது வந்து, வெற்றி… ராஜன் பண்ணுறதுக்கு நா எந்த விதத்திலும் சம்மந்தப்படல,” என்று எச்சில் விழுங்கினான்.
“முழுசா சொல்லி தொலைடா. எருமை, ஒரே நாத்தமா இருக்கு,” என்று மற்றொரு பக்கமிருந்த பாண்டி சொல்ல,
“அது ஒன்னும் நாத்தம் இல்லை. சென்டு எங்க மாமா தந்தாரு,” என்ற சிவாவை மும்மூர்த்திகளும் சேர்ந்து நெருங்க,
“அடேய் தள்ளி போங்கடா. மூச்சு முட்டி செத்துட போறேன்,” என்று ராஜன் சொன்னதும்…
நண்பர்கள் மூவரும் கொலைவெறியுடன் ‘அவனை நெரேங்கினர்’..
“ராஜன் இன்னைக்கு குலதெய்வ கோவில்ல, வேல்விழி கழுத்துல தாலி கட்டப் போறான்,” என்று தலைக்கு மேல் கைகளை வைத்து சொல்லி முடித்தான்.
அவன் சொன்னதை கேட்ட மூவருக்கும், நம்பவே முடியவில்லை.
“டேய், நீ சொல்லுறது நிசம் தானா?” என்று நம்பாமல் கேட்டான் வெற்றி.
“நிசம் தான், வெற்றி. அவன் குலதெய்வ கோவிலுக்கு போறதுக்கு முன்னாடி எங்கிட்ட சொல்லிட்டு போனான். அவன் பண்ணுறதுல எனக்கும் சம்மந்தம் இருக்கும்னு நீ என்னை அடிச்சிட்டா, என்ன பண்ணுறதுன்னு தெரியாம வெளியூருக்கு கெளம்ப பார்த்தேன். வண்டியில பெட்ரோல் காலி,” என்றான் சிவா.
கண்கள் சிவக்க நின்றவனின் கோபத்தின் அளவை, சிவாவின் கன்னத்தில் இறக்க, அவனின் ரெண்டு கடவா பல்லு கையோடு வந்தது.
“ஐய்யோ, பல்லு போச்சே!” என்ற புலம்பலை கேக்க, அந்த இடத்தில் ஒரு ஈ, காக்கா கூட இல்லை.
*****
வெற்றி தன் எமாகாவை புயல் வேகத்தில் இயக்கிக் கொண்டிருந்தான்.
பாண்டி தன் டிவிஎஸ் 50-யை ஆமை வேகத்தில் இயக்கினான்.
“அடேய், என்னடா வண்டி இது? அவன் கண்ணுக்கே அகப்படல. இந்த ஓட்டை வண்டியை தூக்கிப்போட்டு புது வண்டி வாங்குனா என்னடா?” என்று பாண்டியை திட்டிக்கொண்டே வந்தான் மாறன்.
“நீ நிறுத்துடா, நா நடந்து போய் அவனை புடிக்குறேன்,” என்றவனை, முறைத்தான் பாண்டி.
“என்ன மெறைப்பு?” என்றான் அவனும்.
இப்படியே இருவரும் மல்லுக்கட்டிக்கொண்டு தான் கிளம்பினர்.
இங்கு புயல் வேகத்தில் சென்றவனோ! வண்டி கல்மீது ஏறி ஹை ஜம்ப் செய்த நேரத்தில், இவனும் வண்டியை விட்டு ஒரு அடி குதித்து, பின்பு வண்டியில் அமர்ந்தான்.
இவனின் வண்டியின் வேகத்தை விட இதயம் அதிவேகமாக துடித்தது. மனதில் சிறு பயமும் வந்து போனது.
இங்கு வேல்விழியோ! ‘இவ்ளோ தானா என் நிலமை? காலத்துக்கும் ஒருத்தனுக்கு அடிமையா இருக்கணுமா?
இவன் கையாலே என் கழுத்துல தாலி ஏறுறதும் ஒன்னு, நா சாகுறதும் ஒன்னுதான்,’ என்று மனதோடு புலம்பினாள்.
ஆசரிரி போல அன்று மாமன் சொன்ன வார்த்தை காதில் ரீங்காரம் செய்ய, தன் ஒட்டுமொத்த சக்தியையும் ஒன்று திரட்டி கண்களைத் திறந்தாள்.
எதிரே நின்றவனோ, கையிலிருந்த மஞ்சள் கயிறை இவள் பார்க்கக் காத்திருந்தவன் போல், கைகளில் சுழற்றிக்கொண்டு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான்.
அவன் அருகே நெருங்க நெருங்க, உள்ளுக்குள் தீ பற்றி எரியும் நிலைதான் அவளுக்கு.
ஒருபக்கம் தோழி மயக்கத்தில் இருக்க, இவனிடமிருந்து எப்படி தப்பிக்க என்று பார்வையைச் சுழலவிட்டாள்.
முள் மரம் சற்று தடிமனாக கைக்கெட்டும் தூரத்தில் இருக்க, கீழே குனிந்து அந்த விறகுக் கட்டையை கையில் எடுத்தாள்.
அவளுக்கும், அவனுக்கும் கை எட்டும் தூரம்தான் இருந்தது.
“ச்ச்சு… ச்ச்சு…” என்று உச்சுக்கொட்டியவன், வாய் விட்டு சிரித்தான்.
அதே நேரம் தபதபவென இருவர் ஓடி வந்தனர்.
“சொல்லுங்க சாமி, என்ன பண்ணனும்?” என்று இருவரும் கைகட்டி கேட்டு நின்றனர்.
வேல்விழிக்கு ஒன்றுமே புரியவில்லை. திடீரென இவர்கள் எங்கிருந்து வந்தனர் என்று யோசிக்கும் முன்னே, அவர்கள் சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் நின்றாள்.
“இந்த அதிர்ச்சி பாத்தாதே! எனக்கு இன்னும் வேணும்,” என்று திரும்பி முனிஸ்வரியை பார்த்தவன், தன் ஆட்களுக்கு கண்ணடித்தான்.
“சரிங்க சாமி,” என்று சொல்லி, கையில் ஜாண் அளவுள்ள கத்தியை கொண்டு போய் அவள் கழுத்தில் வைத்தனர்.
“வேணாம்… அவளை எதுவும் பண்ணிடாதீங்க,” என்று ஓடப் பார்த்தவளின் கை, ராஜனிடம் சிறைப்பட்டிருந்தது.
“விடுடா… அவளை எதுவும் பண்ண வேணாம்னு சொல்லுடா,” என்று கேட்டுக்கொண்டே அவன் நெஞ்சில் ஒற்றைக் கையால் அடித்தாள்.
இழுத்து விட்டான் ஒரு அறை. அவ்வளவுதான். அவன் அடித்த அடியில் தலை சுற்றி கீழே விழுந்தாள்.
அவள் அருகே முட்டி போட்டு அமர்ந்தவன், “சத்தம் காட்டாம இருந்தா உனக்கு அடி இல்லை,” என்று ஒரு விரல் கொண்டு மிரட்டினான்.
அவனின் வார்த்தைகள் எங்கோ தூரத்தில் கேட்பது போல இருந்தது. காலையிலிருந்து இவன் படுத்திய பாட்டில், தண்ணீர் கூட இல்லாமல் நா வறண்டு போயிருந்தது.
அவனோ அவளை கையைப் பிடித்து நிற்க வைத்து, கையில் சுற்றியிருந்த தாலியை எடுத்தான்.
அவன் கையிலிருந்த தாலியை பார்த்துக்கொண்டே, இவள் கொஞ்சம் கொஞ்சமாக மயக்கத்துக்குள் சென்றுகொண்டிருந்தாள்.
கடைசியாக அவன் தாலிக் கயிறை தன் கழுத்துக்கு கொண்டு வந்த நேரம், முழுவதுமாக மயக்கத்துக்கு சென்றிருந்தாள்.
புயல் வேகத்தில் வந்த வெற்றி, தன் பைக்கை ராஜனுக்கும் வேல்விழிக்கும் நடுவில் நிறுத்தியவன், அவன் கைகளிலிருந்த தாலிக் கயிறை தன் கைகளால் வாங்கி, வேல்விழியின் கழுத்தில் கட்ட, கண் இமை மூடி திறப்பதற்குள்ளே அனைத்தும் நடந்து முடிந்தது.
வேல்விழி மயங்கி கீழே விழப்போனவளை தன் கை வளைக்குள் தாங்கிக்கொண்டவன், ஒரே தள்ளில் ராஜனை முள் மரத்தின் கிளைகளை ஒன்றுமேல் ஒன்று போட்டிருக்கு.. அதன் மீதே விழு வைத்திருந்தான்.
வெற்றி வந்ததை கண்டு அடியாட்கள் அவசரத்தில் கத்தியை எடுக்க, அதுவோ முனிஸ்வரியின் இடது கன்னத்தை கிழித்தபடியே சென்றது.
வெற்றி வண்டியில் அமர்ந்தபடியே ஸ்டாண்ட் போட்டு, அவளை கைகளில் அள்ளிக்கொண்டு பக்கத்தில் சமதளமாக இருந்த பாறையில் படுக்க வைத்தான்.
அடுத்து முனிஸ்வரியை நெருங்க,
“நாங்க பாத்துக்குறோம் மாப்புள… நீ உன் பங்காளியை கவனி,” என்ற மாறனும் ,பாண்டியும் முனிஸ்வரியை நெருங்கினர்.
அவள் இடது கன்னம் முழுவதும் இரத்தம் வழிய மயங்கி கிடந்தாள்.
பாண்டி அவள் மூக்கில் கை வைத்து பார்க்க, அவளின் மூச்சுக்காற்று மெதுவாக வந்தது.
“டேய், என்னடா இந்தப் புள்ளைக்கு இப்படி அடிபட்டிருக்கு?” என்று சொல்லிக்கொண்டே மாறன் அவளின் தலையில் தொட்டு பார்த்தான்.
அதற்குள் பாண்டி தன் கைலியின் ஒரு பகுதியை கிழித்து, அவள் காயத்தை துடைத்தான்.
இருவரும் சேர்ந்து அவளுக்கு பச்சிலை மருந்து வைத்து தலையில் கட்டுப் போட்டனர்.
முள் மீது விழுந்தவன் வலியில் முணங்கிக்கொண்டே எழுந்து நின்றான்.
ஆடைகள் கிழிந்து, அங்கங்கே முட்கள் குத்தியிருந்தன.
அவனை நெருங்கிய வெற்றி, வாயிலே ஒரு குத்து குத்தினான். கீழ் உதடு கிழிந்து இரத்தம் கொட்டத் தொடங்கியது.
அவன் காலரை பிடித்து, கண்மண் தெரியாத அளவுக்கு வெளுத்து வாங்கியவன்,
“உடம்பு நல்லா இருக்குறதாலதானே கொழுப்பெடுத்து திரியுற? இனி தின்னுறதும், கழுவுறதும் ஒரே கையா இருந்தா புத்தி வருமான்னு பாக்குறேன்,” என்று சொல்லி, அவன் வலது கையை ஒரே முறுக்கு முறுக்கினான்.
“கடக்!” என்ற சத்தத்தோடு, “அம்மா…” என்று அலறினான் ராஜன்.
வேல்விழி இன்னும் மயக்கத்தில் இருக்க, முனிஸ்வரியின் நிலை கொஞ்சம் கவலையாகத்தான் இருந்தது.
நண்பர்களிடம் கலந்து பேசி, முனிஸ்வரியை பாண்டியும் மாறனும் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போக சொல்லி, தன் வண்டியை கொடுத்தான்.
“நாங்க போயிட்டா, இவனை என்னடா பண்ணுறது?” என்று நண்பர்கள் இருவரும் கேட்க,
“வீட்டுக்கு போறளவுக்கு உடம்புல தெம்பு இருக்கு,” என்றான் அவனைப் பார்த்து வெற்றி.
“டேய், அந்தப் புள்ள மயக்கத்துல இருக்குடா. தண்ணி கொண்டுவா, தெளிய வச்சிட்டு போகலாம்,” என்ற மாறனை தடுத்தான் வெற்றி.