Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சோடு ரீங்காரம்

ரீங்காரம் – 12.2

மகனை நன்கு அறிந்தவர்தானே அவன் தந்தை, இருந்தும் அவருக்கும் கோபம்தான். 

“தாத்தாவைக் குறை சொல்லாத தம்பி. விஷயம் வெளிய தெரிஞ்சு நாலு பேர் ஒவ்வொரு மாதிரி பேசுவாங்க” என்றவர், மச்சான்கள் பக்கம் திரும்பி, “தப்பா நினைக்காதீங்க மச்சான், இந்த மனஸ்தாபம் நீங்க சக்தி சம்மதம் கேட்டிருந்தா நடந்திருக்காது” என்றார்.

மகன் முடிக்க, “நிச்சயம் பண்ணப்பக் கூட அந்தப் புள்ள நல்லாதானேயா இருந்துச்சு? படம், மியூசிக்னு இவங்க அனுப்பப் போய்த்தான் இவ்வளவும்!” என்று அனைவரின் எண்ணத்தையும் அவரது அன்னை போட்டுடைத்தார்.

சேந்தன் எழுந்து கைகூப்பி நிற்க, அண்ணனைப் பார்த்துத் தானும் முரளி பதறி எழுந்து கைகூப்ப, வீராவின் தாடை இறுகியது. 



Advertisement

“எங்க மேலதான் எல்லாத் தப்பும். நீங்க எதுவும் நினைக்கலைன்னா, ஒரு மாசத்துல பொண்ணுகிட்ட பேசி…” அதனை கேட்கும் பொழுதே அது எத்தனை அபத்தமான வேண்டுதல் எனப் புரிந்தாலும், கேட்காமலும் சேந்தனால் இருக்க முடியவில்லை.

“இல்லை மாப்பிள்ளை, இனி இது சரிவராது” என்றுவிட்டார் நிர்மலாவின் மாமனார் ஒரே வரியில்.

சஞ்சீவும், “தாத்தா சொல்றது சரிதான் மாமா. இது நான் கோபத்துல பேசலை. எனக்கு உங்க மேலயோ, சக்தி மேலயோ எந்தக் கோபமும் இல்லை. மனசுக்கு யார் தேடுதோ அவங்ககூட வாழ்க்கையை ஆரம்பிக்கணும்னு நினைக்கிறது தப்பு இல்லையே… நீங்களும் உங்க மனசை மாத்திக்கப் பாருங்க” என்று வீராந்தகனைப் பார்த்து அழுத்தமாக, “உனக்கும் சேர்த்துதான் சொல்றேன்” என்றான்.

Advertisement

நிர்மலாவின் வீட்டை விட்டு வெளியே வந்த ஆண்களுக்கு மனமெல்லாம் பாரமேறியிருந்தது. இனி இந்த வீட்டிற்கு முன்பு போல் இவ்வளவு உரிமையாகச் செல்ல முடியாது என்பதும், சகோதரியின் குடும்பத்தினருடனான வரவு அத்தனை இயல்பாக இருக்காது என்பதுமே அவர்களை அதிகம் வருத்தியது.

Advertisement

அன்றைய நிகழ்விற்குப் பிறகு, வீட்டினரின் பாராமுகத்தை மட்டுமே சக்தி அதிகம் பார்க்க நேரிட்டது. வீராந்தகன் அவள் கைபேசியைக் கேட்டதுதான், அவள் அவனை நேரடியாகப் பார்த்த கடைசி நாள். தாத்தா, பாட்டி, பெரியப்பா என அனைவரும் அவளிடம் பேசக் கூட விரும்பவில்லை. அதனால் பெண்ணவளும் அறையை விட்டு வருவதையே நிறுத்திவிட்டாள். அவளை வற்புறுத்தி எவரும் அழைக்கவும் முன்வரவில்லை என்பதே அவளை இன்னும் முடக்கியது.

அதோடு, தமிழ்ச்செல்வனிடம் சேந்தன் பேசப் பார்த்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தன. வீட்டினர் அடிக்கடி தீவிர யோசனையிலும் ஆலோசனையிலும் மூழ்கிப் போயிருக்க, சக்திக்கு பயம் கூடியது.

அன்பரசியின் கைபேசியை வாங்கி, செய்திகள் மற்றும் திரைத்துறை சார்ந்த செய்திகளை மட்டுமே பார்த்துவிட்டுத் தந்துவிடுவாள். அன்பரசிக்கு, அவள் எதற்காக இதனைப் பார்க்கிறாள் என ஒருவித சந்தேகம் தோன்றத் துவங்கியது. அதனை ஒரு நாள் கேட்கவும் செய்தாள்.

Advertisement

“உங்க வீட்டுல அந்த அண்ணனை எதுவும் பண்ணிடுவாங்கன்னு பயமா அண்ணி?”

சக்தியும் சிரித்துக்கொண்டே, “அவ்வளவு மோசமா நினைக்கலை அண்ணி, ஆனா செல்வாவை பின்வாங்க வைக்க அவனோட அடையாளத்தையே சிதைக்கப் பார்ப்பாங்க. அந்தப் பயம்தான்” என்றாள்.

அன்பரசி, “உங்க அண்ணாகிட்ட நான் பேசிப் பார்க்கவா?” என, உடனே மறுத்துவிட்டாள் சக்தி.

“வேண்டாம் அண்ணி, இந்தப் போராட்டம் எங்களுக்கானது!” என ஜன்னல் வழியே பார்வையை விட்டாள், மறையும் சூரியனை நோக்கி.

எப்பொழுதும் போல் இன்றும் தமிழின் உருவம் தூரத்தில் தெரிந்தது அவளுக்கு. கண்மூடி, ‘வர வர ரொம்ப டிஸ்டர்ப் பண்ற செல்வா. ஆனா, எனக்காகக் கூட உன்னோட உழைப்பை என்னைக்கும் விற்றாதே செல்வா’ என்கிற ஒரு எண்ணம்தான் அவள் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

“அண்ணி, அது அண்ணாவா?” அன்பரசி அதிசயித்து வெளியே பார்க்க, அங்கு நின்றது தமிழ்ச்செல்வனேதான்.

சக்தியும் அறை ஜன்னல் வழியே பார்க்க, தமிழோ தெருவில், அதாவது இவர்கள் வீட்டின் மதில் சுவற்றிற்கு அருகில் நின்றிருந்தான். அவன் நிற்பது அவளுக்குத் தெரிந்தாலும், சக்தியைத் தமிழ் உற்றுப் பார்த்தால் மட்டுமே அவனுக்குத் தெரியும். கண்களைச் சுருக்கிப் பார்த்தும்விட்டான். அவள் தான் என உறுதியான பிறகு, அவன் முகத்தில் சட்டென ஒரு புன்னகையின் சாயல் படர, முகமே மலர்ந்து போனது.

அவளை, அவள் நினைவுகளை மட்டுமே நெஞ்சில் வைத்துப் பூட்டிப் பூட்டி, அவள் நினைவுகள் தீண்டும் பொழுது பார்த்துப் பழகியவன்தான் அவன். இருந்தும் இன்று நேரில் பார்ப்பது வேறுதானே? அவன்தான் வேண்டுமென்று அவள் வீட்டினருகே எதிராய் நிற்கிறான், அவனுக்காக!

அவன் காத்திருப்பின் தூய்மையில் இறை அருளே தோற்றுப்போகும். அதனைப் பத்திரமாக வைத்திருந்ததாலோ என்னவோ, அவளுக்குக் கண்ணியமாக இருக்கிறது அவளுக்கான அவன் இதயத்தில் இருக்கும் இடம் ஒன்று. வாரங்கள், வருடங்கள் தாண்டி மெதுவாக, ஆயுளின் இறுதியில் வந்தால் கூட அவன் எப்பொழுதும் போல் சிரிப்போடு அவளை வரவேற்றிருப்பான் என்பது அசைக்க முடியாத உண்மை.

அந்தக் காத்திருப்பிற்குப் பரிசாகத்தான் இந்த அழகிய உணர்வு கிடைத்தது போல! தமிழின் கண்களில் தெரிந்த அந்த ஜோதியே அவள் கண்களில் நீரைத் திரட்டியது.

அதற்குள் தமிழ்ச்செல்வனோ ஏதோ சைகை செய்ய, சக்தி மற்றும் அன்பரசியின் பார்வை அவ்விடத்தையே சுற்றியது; எவர் கண்ணும் அவனைப் பார்த்துவிடக் கூடாதென்று! அவனுக்கோ அந்தப் பயம் எதுவுமில்லை போல. நிதானமாக ஏதோ காகிதத்தில் கிறுக்கிக்கொண்டிருந்தான். நினைத்ததை எழுதி முடித்த நொடி, டிரோன் (Drone) ஒன்றில் அந்தக் காகிதத்தைக் கட்டி, அதனைப் பறக்கவிட்டு அவள் ஜன்னலை நோக்கிச் செலுத்த, சக்திக்கு உடலே உதறல் எடுத்தது.

“அட பாவி! உன்னைக் கொல்றதுக்கு பதிலா என்னைத்தான்டா போட்டுத் தள்ளப் போறாங்க!” பதறியவள் அந்த டிரோனைத் திரும்பச் செலுத்துமாறு சைகையில் சொல்லிப் பார்க்க, அதற்குள் அது அவளையே அடைந்திருந்தது.

இவனோ வாகனத்தில் நன்றாகச் சாய்ந்து, கைகட்டி நின்றுவிட்டான்—’நீ அதைப்படிக்கும் வரை நான் நகர மாட்டேன்’ என!

சக்தி அந்த டிரோனில் கட்டப்பட்டிருந்த காகிதத்தை எடுத்துப் பார்க்க, அதில், “ஹாய்” என்ற ஒற்றை வார்த்தையும், அதற்குத் கீழ் அந்தக் காகிதத்தையே நிறைக்கும் அளவிற்கு இதயம் ஒன்றையும் வரைந்து, சிவப்பு நிறத்தில் வண்ணம் தீட்டியிருந்தான்.

கீழே ஒரு பின்குறிப்பு வேறு: “பதில் கடிதத்தை இதிலேயே வைத்து அனுப்பவும்” என்று. கடுப்பில் தலையைத் தூக்க, அன்பரசியோ இங்கிருந்த தமிழ்ச்செல்வனிடம் நலவிசாரிப்பில் இருந்தாள் சைகை மூலம்.

‘இது வேறயா!’ என நொந்தவள் பேனாவை எடுக்க, “அதுக்குள்ள படிச்சிட்டீங்களா?” என நமட்டுச் சிரிப்போடு அன்பரசி பார்த்தாள்.

சக்தி காகிதத்தை நன்கு விரித்துக் காட்டி, “இதுதான் உங்க அண்ணன் கொடுத்த லவ் லெட்டர். இதுக்கென்ன எனக்கு ஒரு நாளா தேவைப்படும்?” என்றாள்.

அன்பரசி வாயைப் பொத்திச் சிரித்தபடியே தமிழிடம் ‘சூப்பர்’ எனச் சைகை செய்ய, அவனோ பலகாலத்து வெள்ளைக்காரர்கள் முறைப்படி பாதி உடலை வளைத்து, தலையைப்பணிவாக வணங்கி நன்றி கூறினான்.

“ரொம்பத்தான் பணிவு!” தமிழைத் திட்டிக்கொண்டே, “போடா லூசு” என எழுதித் திருப்பி அனுப்பி வைத்தாள்.

“அண்ணி, உருகி உருகி காதல் கடிதம் எதிர்பார்த்த மாதிரி இருக்குதே!” அன்பு கிண்டல் செய்தாள்.

“அவன் சிரிப்பும், அந்த லெட்டர்ல இருந்த ஹார்ட்டும் போதுமே அண்ணி அவன் மனசைச் சொல்ல… வேற எதுவும் தேவையில்லை” என்றாள் தமிழைப் பார்த்துக்கொண்டே.

அன்பரசி, “நீங்க லவ் பண்ணலைன்னு சொன்னா நான் கூட நம்ப மாட்டேன்” என்ன, அன்பரசியின் கேலிக்குச் சக்தி மெல்லிய சிரிப்போடு நிறுத்திக்கொண்டாள்.

தமிழ்ச்செல்வன் அவள் அனுப்பிய பதிலைப் பார்த்துச் சிரித்துவிட்டு, இருவருக்கும் கை அசைத்து வாகனத்தை உயிர்ப்பித்துக்கொள்ள, கிளம்பிவிட்டான் என இருவரும் நினைத்தனர். அதற்கு மாறாக வாகனத்தை அவள் வீட்டின் நுழைவாயிலிற்கு விட்டான்.

“என்ன பண்றார் உங்க ஆளு?” அதே பீதிதான் சக்திக்கும். “ஏதே… என் ஆளா? உங்க அண்ணன் இல்லையா?” சக்தி அன்பரசியை அதிர்ந்து பார்க்க, அந்தப் பக்கம் பதில் இல்லை.

தமிழ் அங்கிருந்த காவலாளியிடம் தீவிர பேச்சுவார்த்தையில் இருந்தான். அமைதியானதுதான் என்றாலும் முகம் தீவிரமாக இருந்தது. இறுதியாக ஏதோ பேசியபடியே அவர் கையில் பணம் ஒன்றைத் திணித்து ஒரு காகிதத்தைக் கொடுக்க, அந்தப் காவலாளி அதை வேகமாகத் தன்னுடைய காற்சட்டையில் ஒளித்துவைத்துக்கொண்டான்.

அவ்வளவுதான் எனத் தமிழ் வந்த தடம் தெரியாமல் மறைந்து போக, அன்பரசி, “உண்மையான லெட்டர் அதுவாத்தான் இருக்குமோ?” எனச் சரியான கேள்வியைக் கேட்டு வைக்க, சக்திக்கு பயம் துளிர்த்தது.

“அண்ணி, பயமுறுத்தாதீங்க!”

அந்தக் காவலாளி வீட்டை நோக்கி நடக்க, “நீங்க ரூம் விட்டு வராதீங்க, நான் வாங்கிட்டு வரப் பார்க்கிறேன்” என்று அன்பரசி கீழே ஓடிவிட்டாள்.

அன்பரசி கீழே வந்து பார்க்க, அந்தப் காவலாளி மாடியைப் பார்த்துவிட்டு, பிறகு அங்கு நாளிதழில் மூழ்கியிருந்த வீராந்தகனிடம் வந்தான். ‘போச்சு, எமன்கிட்ட கொடுக்கப் போறான்!’ அவள் எண்ணியது தவறாமல், வீராவின் கையில் அந்தக் காகிதம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

“நீங்க சொன்ன மாதிரியே அவர் வந்தார் சார். ஒரு லெட்டர் சக்தி மேடம்கிட்ட கொடுக்க முடியுமான்னு கேட்டார். நான் எவ்வளவோ மறுத்துப் பார்த்தும் காசு கொடுத்துப் பார்த்தார். நான் வாங்கலைன்னா வேற யார் மூலியமாவது கொடுப்பாரோன்னு வாங்கிட்டேன்” என்றான் அவன்.

“குட் ஜாப்” வீரா பாராட்ட, பணிவாகத் தலையசைத்து அவன் சென்றுவிட்டான்.

அந்தக் காகிதத்தைப் பிரித்த வீரா, அதனைப் படிக்கவே அத்தனை யோசனைவயப்பட்டான். இருந்தும் மனம் கேட்காமல் எடுத்துப் படித்தவன், கோபத்தில் அதனைக் கசக்கிக் குப்பையில் போட்டுவிட்டு, வேகமாக வீட்டை விட்டு வெளியேறியிருந்தான்.

வீரா தூக்கிப் போட்டதை எடுத்து அன்பரசி சக்திடம் கொடுத்தாள். “உங்க அண்ணன் ரொம்பக் கோபமா தூக்கிப் போட்டுட்டுப் போய்ட்டார். அவ்வளவு ரொமான்ஸ் இருக்கு போல!” என்கிற கிண்டல் வேறு.

அதனைப் பிரித்துப் பார்த்த சக்தி, “ரொமான்ஸ் இல்லை அண்ணி, புரோமான்ஸ் (Bromance)!” என்றாள் இதழோர புன்னகையோடு.

“என்னது?” புரியாமல் விழித்த அன்பரசி, தானும் அதனைப் பார்த்து ஒரே சிரிப்பு சிரித்தாள். “இருந்தாலும் உங்க ஆளு ஒரு தனி டைப்தான்!” என்றாள் சிரிப்பு வற்றாமல்.

அப்படி என்னதான் அந்த கடிதத்தில் இருந்தது??!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!