Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

21. சுபகீதா - ஆகாயமே என் ஆதாரமே

ஆகாயமே என் ஆதாரமே 19

ஆகாயமே என் ஆதாரமே 19

ஒருவழியாக ஜானகியும் ராகவனும் சென்னை வந்து சேர்ந்து விட்டார்கள். ராகவனுக்கு ஏற்கனவே வாங்கிக்கொண்டு இருந்த அதே சம்பளத்தில்தான் சென்னையில் வேலை கிடைத்தது. ராகவனின் அம்மா இப்போது மகளிடம் இருக்கிறார்.அடிக்கடி ராகவனிடம் வந்து இருப்பதெல்லாம் இல்லை. அதற்க்கு அவசியமும் இருந்திருக்கவில்லை.



Advertisement

ராகவனின் தங்கையும் ,அவளது கணவரும் ராகவனின் அம்மாவை தங்கத்தில் வைத்து தாங்குகிறார்கள் . தங்கையின் மாமியார் ,மாமனார் இருந்த காலத்தில் ராகவனின் அம்மா அங்கே சென்று அதிகமாக இருந்தது இல்லை. அவர்கள் காலம் முடிந்து விட்டது. குழந்தைகளை பார்த்துக்கொள்ள வீட்டில் யாராவது பெரியவர்கள் இருந்தாக வேண்டிய நிலை. பெண்குழந்தைகள் வேறு.காலம் இருக்கும் நிலையில் தனியாக விட்டு வேலைக்கு செல்ல முடியாது.அதனால் அதிகமாக ராகவனின் அம்மா பெண்ணின் வீட்டிலேயே தங்கிவிட்டார்.

என்னதான் முன்பு அளவுக்கு ஜானகி முகம் காண்பிப்பது இல்லை என்றாலும் ராகவனின் அம்மாவுக்கு தனது மகன் மீது கூட அதிகமான அதிருப்தி உண்டு. வெளியே இவையெல்லாம் அதிகமாக தெரியாவிட்டாலும் , மருமகளை அதிகமாக நெருங்கவும்,மகனிடம் மனம் விட்டு பேசவும் ஒரு தயக்கம் அவருக்குள் வந்துவிட்டிருந்தது.இதோ ,ராகவன் சென்னையில் இப்போது வேலை தேடிக் கொண்டு வந்திருப்பது கூட ,அவர்கள் தெலுங்கானாவிலிருந்து வருவதற்கு ஒரு வாரம் முன்புதான் தெரியும்.

Advertisement

Advertisement

அதுவும், சிலிண்டர் கனெக்ஷன் ராகவனின் அம்மா பெயரில் இருப்பதால் அதை முகவரி மாற்றுவதற்கு அவர் வர வேண்டும்.அதனால் வேறு வழி இல்லாமல் (?) சொல்லிப்பட்டதுதான் என்பது ராகவனின் அம்மா மனதில். எதையும் வாய்விட்டு சொல்லும் நெருக்கத்தில் மகனார் இப்போது இல்லை.அதேபோல திருமணம் முடிந்து பல ஆண்டுகள் முடிந்த நிலையில் பெண்ணும் கூட அயல் வீட்டினர் அளவுக்கு தான் இப்போது. மொத்தத்தில் பெண் – பிள்ளை இருவரிடமும் அவரால் தனது மனதில் அடைத்துக் கொண்டு இருப்பதை சொல்ல முடியாது.

மகன் கூப்பிட்டதில் சென்னை வந்து அவர்களுக்கு தேவையானவற்றை செய்துகொடுத்துவிட்டு அவர் மீண்டும் தனது பெண்ணிடம் சென்று விட்டார். அவ்வளவு தான்.ராகவன் தான் வாங்கியிருந்த வீட்டுக்கு குடித்தனம் சென்று விட்டான்.முதலில் அப்பா கட்டி வைத்திருக்கும்,தனது சிறு வயது ஞாபகங்கள் நிறைந்திருக்கும் தங்கள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றுதான் யோசித்திருந்தான் .ஆனால், ஏனோ கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டான்.இவர்கள் இப்போது இருக்கும் வீட்டுக்கும் மாமனார் வீட்டுக்கும் அரைமணிநேரம் பயணம்.

Advertisement

இந்த் இடைவெளியாவது நிச்சயம் இருக்க வேண்டும் என்று ஜானகி ராகவன் இருவருமே யோசித்தார்கள். குழந்தைகளுக்கு வீட்டினருகே பள்ளி இருக்கிறது.ஏற்கனவே தெலுங்கானாவில் படித்துக் கொண்டிருந்த பள்ளியின் சென்னை கிளைகளில் ஒன்றில் மாறுதல் கொடுத்திருந்தார்கள்.அதனால் அந்த பெரிய பிரச்சனை தீர்ந்தது.

அதே போல ராகவனின் அலுவலகமும் இவர்கள் வீடும் வெறும் இருபது நிமிஷ பிரயாணம் தான். ஒருவழியாக சென்னை வந்து எல்லாம் சரி செய்து தினசரி வாழ்வுக்கு பழகிக் கொண்டார்கள். கணவனுடன் எங்கிருந்தாலும் சந்தோசம் தான் ஜானகிக்கு.நன்றாகவே சம்பாதிக்கிறான் .சொந்தமாக வீடுகள் இருக்கிறது. பெரியதாக கஷ்டங்கள் ஒன்றும் இல்லை. வாரத்தில் ஒருநாள் ஜானகி மட்டும் அம்மா வீட்டுக்கு சென்று பார்த்துவிட்டு வருவாள்.அப்போது ராகவன் குழந்தைகளை பார்த்துக் கொள்வான். ஜானகியின் குழந்தை பிறப்பு சமயத்தில் ராதா பேசியது இப்போதும் அவன் நெஞ்சு வரை கசக்கிறது. ஏதோ ஒரு அந்தரங்க தருணத்தில் விசும்பிக்கொண்டே ஜானகி சொல்லியிருந்தாள் . அதை புறம் தள்ள அவனால் முடியாது.இப்போதும் அதே சீதா தான். திருமணம் ஆகாத பெண் தான்.இப்போது முன்பை விட இன்னமும் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும். அதனாலேயே தேவை என்று வந்தால் மட்டும் அங்கே செல்வது என்று முடிவு செய்து தான் சென்னை வந்தது.

அங்கே வரும்பொழுதுகளில் ஜானகி தனியாக தங்கையிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு செல்வதை வழக்கமாக வைத்துக் கொண்டாள் .இதெல்லம் முன்பே செய்திருக்க வேண்டும்.தங்கையுடன் சிறுவயதில் இருந்தே ஒரு நட்புரணர்வையும் புரிதலையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தால் நிறைய விஷயங்கள் மாறி இருந்திருக்கும் என்கிறது ஜானகியின் மனது. ஒருவேளை அவர்கள் வீட்டில் எல்லோருமே காலம் கடந்து தான் ஞானம் பெறுவார்களோ என்னவோ!

முன்புபோல ஒதுங்கி இருக்காமல் ஜானகியும் உறவினர்கள் எல்லோருடனும் சகஜமாக பழகுவதற்கு பழகி இருந்தாள் . அதுவும் ஒருவித முன்னேற்றம் தான்.நாட்கள் அதுவாக்கில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறதே தவிர , சீதா விஷயத்தில் இன்னும் எதுவும் மாற்றங்கள் இல்லை.

ராதா தனது பயத்தினால் இன்னமும் மோசமாக நடந்துகொள்ள ஆரம்பித்துவிட்டாள். பொழுது புலர்வதே சீதாவை கண்காணிக்கத்தான் எனும் அளவுக்கு அவளது நடவெடிக்கைகள் மாறிப்போனது.ஜானகி வரும் நேரங்களிலும் அவளிடம் சண்டைகள் போடுவதை வழக்கமாக்கி கொண்டாள் .

ஜானகிக்கு வெறுத்துதான் போனது. தங்கை தனியாக வாரம் முழுவதும் அனுபவிப்பதை தான் வாரத்தின் ஒருநாளாவது அனுபவிக்கலாம் என்று தான் பொறுமையாக இருப்பது. அப்பாவின் நிலைமையையும் கணக்கில் எடுத்துக்கொண்டாக வேண்டும்.ராதாவுக்கு முன்பெல்லாம் சீதாவை எவ்வளவு பிடிக்குமோ,இப்போதும் ஜானகி மீது அதே பிரியத்தை வைத்திருப்பவர் அப்பா. அவரை யோசித்துதான் தீர வேண்டும்.

அதோடு நாற்பதுகளில் பிரயாணம் செய்ய ஆரம்பித்திருக்கும் ஜானகிக்கு உலகம் வேறு நிறங்களை காட்டிக்கொடுக்க ஆரம்பித்திருந்தது. மனிதர்களை அவர்கள் இயல்பிலேயே ஏற்க ஆரம்பித்திருந்தாள்.மாமியார் மீது கூட அவளுக்கு அக்கறை வந்திருந்தது. அதே நிதானத்தை அம்மாவிடம் காட்டினாள். அம்மா பேசுவதை காதில் போட்டுக் கொண்டு மனதை குழப்பிக் கொள்வதும் இல்லை.கணவனிடம் சென்று புலம்புவதும் இல்லை. மனம் மட்டும் எப்படியாவது சீதாவுக்கு திருமணம் ஆனால் போதுமே!என்றது.

கோவிலில் யாரோ சொன்னார்கள் என்று தங்கைக்கு திருமணம் ஆகவேண்டும் என்று பிரார்த்தனைகள் செய்து சுந்தர காண்டம் வாசித்தாள் . துர்க்கைக்கு வெள்ளிக்கிழமைகளில் விளக்கு ஏற்றினாள் .தெய்வம் மனது வைத்தால்தான் தங்கைக்கு திருமணம் கைகூடும் என்று அவளுக்குள் ஒரு எண்ணம் வந்து விட்டிருந்தது.உண்மையில் தனது திருமணம் கைகூட வேண்டும் என்று கூட ஜானகி இவ்வளவுக்கு வேண்டவில்லை.

சீதாவுக்கு முன்பு மனதில் அக்காவின் மீது இருந்த கோவம் நன்றாகவே குறைந்திருந்தது.அவளாவது கணவன்,குழந்தைகள் என்று நிம்மதியாக இருக்கட்டுமே என்று யோசிக்க ஆரம்பித்தாள்.அத்தானை சென்னைக்கு வர சொல்லி சண்டை போட்டு இருக்க வேண்டாம் என்று கூட தோன்றியது.அதையெல்லாம் மீறி வரம் தவறாமல் ஜானகி வந்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கவே அக்காவின் வரவை எதிர்நோக்கினாள் . மறந்தும் தமது குழந்தைகளை மட்டும் ஜானகி அழைத்து வ்ருவது இல்லை.

சீதாவும்,கிருஷ்ணனும் நேரம் கிடைக்கும் பொழுது சென்று குழந்தைகளுடன் இருப்பதுதான்.ராதாவுக்கு ஈகோ,”உன் குழந்தைகளை உனக்கு இஷ்டம் இல்லன்னா கூட்டி வராதே. அப்படி ஒன்னும் இங்கே உறவு பயிர் வளர்க்க வேண்டாம் ” என்று வாய் விட்டே சொல்லும் அன்னையை என்ன சொல்ல முடியும்?

மாற்ற முடியாது என்று சொல்லும் பலவிஷயங்களை காலம் வெகு அனாயசமாக மாற்றிக் காட்டும். இதுதான் உலக நியதி.அது இங்கேயும் நடக்கிறது.என்னை பொறுத்தவரை சீதா வாழ்க்கையில் இது இரண்டாம் பாகம் என்பேன். இதுதான் காதல் என்று யாராலும் அறுதியிட்டு சொல்லிவிட முடியாது. கண்களால் காண முடியாத அந்த உணர்வை வெளிப்படுத்துவதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதை நிச்சயம் இருக்கும். அப்படி ஒரு காதல் வாழ்க்கையில் நம் சீதாவையும் உட்படுத்தி காலம் எழுதப்போகும் புது அத்யாயம் தான் ரகுவரன்.

ஒருவேளை ரகு வரனாக வருவதற்கு தான் சீதா இவ்வளவு வருஷங்களாக காத்திருக்கிறாளா என்றெல்லாம் எனக்கு தெரியாது. அல்லது ரகுவரன் எவ்வளவு ஒசத்தி என்றெல்லாம் யாரையும் உயர்த்திக்காட்டவும் நான் விரும்பவில்லை. எது ஏதுவாக இருக்கிறதோ அதை அதுவாகவே எடுத்துக்கொள்வது நலம் என்றால் ரகுவரன் நிச்சயம் நல்ல தெரிவுதான் .

ரகுவரன் வருமானவரி துறையில் வேலை செய்கிறான்.நல்ல சம்பளம்.நான் நிச்சயம் மென்பொருள் நிபுணர்களின் சம்பள அளவை கொண்டு சொல்லவில்லை.மத்தியதர வகுப்பினரின் நல்ல சம்பளம் என்பதன் விளக்கம் என்னவோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வகையில் நல்ல உயர்வான பதவியும்,வாழ்க்கை தரமும் தான். சுதாவின் பெரிய மருமகளின் ஒன்று விட்ட அண்ணன் (?)என்று சொல்லி சீதாவின் அடுக்ககத்தில் இருக்கும் தனது வீட்டின் போஷனில் ரகுவை தங்க வைத்திருக்கிறாள் சுதா. (மூச்சு வாங்குது )

சரியாக சொல்லவேண்டும் என்றால் சீதா வீட்டில் நேரெதிர் வீடு. தானும் தனது நான்கு வயது மகளுமாக இங்கே வந்திருப்பவன் ஏற்கனவே வேலை செய்தது பாண்டிச்சேரியிலாம் இப்போது சென்னைக்கு மாற்றல் ஆனதில் இங்கே ஜாகை. அவன் அந்த வீட்டுக்கு குடிவந்த நொடியில் ராதாவுக்கு உள்ளே பயம் பிடித்துக்கொண்டதில் சுதாவை அலைபேசியில் அழைத்து எதற்க்காக இவனை உன் வீட்டில் குடி வைத்திருக்கிறாய் என்று சண்டை பிடிக்க சுதாவோ சற்றும் அலட்டிக் கொள்ளாமல் இது என்னோட மருமகள் முடிவு. நா எதுவும் சொல்ல முடியாது என்று குடித்துவிட்டாள் .ராதாவால் பற்களை கோவத்தில் கடிக்க மட்டுமே முடிந்தது.

ரகுவரன் பார்ப்பதற்கு வெகு நன்றாகவே இருந்தான்.எம்பிஏ படித்திருக்கிறான்.ஆறடி உயரம். ஹிந்தி பட ஹீரோ போல் என்று சொல்ல மாட்டேன். இப்போதெல்லாம் ஆறடி சாதாரணமாகிவிட்டது. திருமணம் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆகிறது.மனைவி இறந்துபோய் மூன்று ஆண்டுகள் ஆகிறது என்றாள் சுதா. குழந்தைக்கு ஒரு வயது ஆகும் பொழுது ஊசி போடவென்று குழந்தையுடன் ஆட்டோவில் சென்றுவிட்டு திரும்பும் பொழுது ஆட்டோ கவிழ்ந்து தலையில் அடிபட்டு இறந்து போனாளாம்.

பலவருஷங்கள் காதலித்து வீட்டில் ஒப்புதல் வாங்கி திருமணம் செய்வதற்க்கே நான்கு ஆண்டுகள் ஆனதாம். பிறகு ,மனைவி இறந்த பிறகு வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று குழந்தையுடன் தனியாக இருக்கிறானாம்.பெற்றவர்கள் வருவது அபூர்வமாம்.அவனது அண்ணன் வெளிநாட்டில் இருப்பதால் அவ்வப்பொழுது அங்கே சென்று விடுவார்களாம். இன்னும் அவனுக்கு அலுவலகத்தில் வீடு அலாட் ஆகவில்லை என்பதால் இங்கே குடிவந்திருக்கிறானாம்.இதெல்லாம் சுதா தனது அண்ணனிடம் சொன்ன விஷயங்கள்.ராதா மற்றும் சீதா காதுகளிலும் விழுந்தது தான் .

ஆனாலும் ராதாவின் மனம் ரகுவரனை பார்த்த நொடியிலிருந்தே நிலைக்கொள்ளாமல் தவிக்கிறது. தனது கைப்பொருளை எடுத்து செல்லும் திருடனை போல ராதாவின் மனதில் ரகுவரனின் உருவம் பதிந்து போனது.சீதா தனது வீட்டிலிருந்து வெளியே வந்தாலே ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிக்கொண்டு ராதாவும் கூடவே வருகிறாள்.அது சீதாவுக்கு கடுப்பை ஏற்றுகிறது. அம்மாவை வாயை திறந்து கண்டிக்க முடியவில்லை.

வெதும்பி போனது பெண்ணின் மனம். ராதா வேறு மனம் நோகும்படிக்கு ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கிறாள். சுதா வேறு சீதாவுக்கு அழைத்து ,”சீது , ரகு ரொம்ப நல்ல மாதிரி.என்ன..கொஞ்சம் சிடுமூஞ்சி.அவனோட மனைவி தவறிய பிறகு யாரோடையும் அதிகம் பேச கூட மாட்டேங்குறான். அவனோட பொண்ணு ரொம்ப ஸ்வீட். ஒரு கண் பார்த்துக்கோ டா. “என்று சொல்லிவைக்க சீதாவுக்கு ஏகத்துக்கும் கடுப்பு ஏறியது.

இதற்கு நடுவில் ரகுவரனால் தனியாக சமாளிக்க முடியவில்லை. பகல் நேரம் முழுவதும் குழந்தை டேகேரில் இருப்பாள்.மாலை இவன் வரும் பொழுது காரிலேயே அழைத்து வந்துவிடுவான். வீட்டுக்கு அப்பாவும் பெண்ணும் வந்த பிறகு வாசற்கதவு திறந்திருக்காது. சாற்றிக்கொண்டு போனவன் மறந்தும் திறக்க மாட்டான்.மறுநாள் காலை தான் அவன் வெளியே பாலை எடுப்பதற்க்காக வருவது. அதுவரையில் ராதா நிம்மதியாக உணர்ந்தாள். அவள் பயம் லேசாக குறையத் தொடங்கியது.

குழந்தையை பள்ளியில் சேர்க்க வேண்டும்.கேந்திரிய வித்யாலயாவில் சேர்க்கலாம்.அதற்க்கு ஆறு வயது பூர்த்தியாக வேண்டும்.ஒன்றாம் வகுப்பில்தான் சேர்க்க முடியும்.இன்னமும் குவாட்டர்ஸ் வேறு கிடைக்கவில்லை. இவன் இருக்கும் பகுதியில் நல்ல பள்ளிக்கூடம் எதுவென்று தெரியவில்லை. யாரிடம் கேட்பது என்று குழப்பம். அவனுக்கு சுதா குடும்பத்தை தவிர சென்னையில் தெரிந்தவர்கள் கிடையாது.இதுவே தில்லியாக இருந்திருந்தால் நிலைமையே வேறு.மனதுக்குள் ஒரு பெருமூச்சு எழ கூகிள் செய்து பார்த்திருந்தான்.

அவர்கள் வீட்டு அருகிலேயே ஒரு சிறந்த பள்ளிக்கூடம் இருக்கிறதுதான்.அங்கே சேர்வதற்கு யாரின் துணையாவது நிச்சயம் வேண்டும். உள்ளுக்குள் யோசித்தவனாக மீண்டும் சுதாவுக்கு அழைத்து பேசினான்.

மீண்டும் சுதாவிடம் உதவி கேட்பது ரகுவுக்கு சுத்தமாகவே விருப்பம் இல்லை.ஆனால் வேறு வழி இல்லை. அவனது தங்கைக்கே சென்னை இன்னமும் புது ஊர் தான். இங்கே அலுவலகம் தவிர வேறு எதுவும் அவள் இன்னமும் தெரிந்து வைத்திருக்கவில்லை. அவள் கணவன் வீட்டில் அனுசரணையாக இருப்பதால் மேடேமின் வண்டி சிக்கல் இல்லாமல் ஓடுகிறது.இந்த நிலைமையில் எங்கிருந்து அவள் அண்ணனுக்கு உதவுவது?

சுதா பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லை. “ரகு ,அந்த ஸ்கூல் நம்ம சீதா படிச்ச ஸ்கூல் தான்.நா அவகிட்டே சொல்லி விசாரிக்க சொல்றேன்.கொஞ்சம் வெயிட் பண்ணு .அதோட உன்னோட பொண்ணு பூமாவும் வயசு கம்மிதான்.இவ்ளோ சீக்கிரம் ஸ்கூல் போக அவசியம் என்ன என்றாள் . அவள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. ஆனால் ,இவனது நிலைமை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!