Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உடைந்த மனங்கள் ஒட்டாதா?

உடைந்த மனங்கள் ஒட்டாதா? அத்தியாயம் 20

உடைந்த மனங்கள் ஒட்டாதா?…

அத்தியாயம் 20

ஜெகன் கண்விழிக்கும் வரை எல்லாம் மீனா அங்கு இருக்க வில்லை. உயிருக்கு ஆபத்து இல்லை என்றதுமே கிளம்பி விட்டாள். பரமு கூட,

“பிள்ளைகளை விட்டுட்டு போ மீனா. பெத்தவனுக்கு பிள்ளைகளை பார்க்க ஏக்கம் இருக்காதா?.. செத்து பொழச்சி வந்து இருக்கான் பிள்ளைகளாவது பார்க்கட்டும்” என்றார்.

மீனா முகத்தில் அப்படி ஒரு இயலாமை, “பிள்ளை பாசம் இருந்தால் அவன் என்றோ மாறி இருக்கணும். மனைவி, பிள்ளைகள் இருப்பவன் செய்யும் காரியமா இது?… ஒருத்தனை உயிர் போகும் அளவுக்கு அடித்தால் பின் விளைவு எவ்வாறு இருக்கும் என்று யோசிக்காதவனா?.. அப்படி ஒன்றும் முட்டாள் கிடையாது ஜெகன். அப்படி என்ன குடி, நிதானம் இல்லாத நிலை. தன்நிலை மறந்தாலும் பெற்ற பிள்ளைகளின் பச்சை முகம் மறக்கலாமா?.. முதல் முத்தை பெற்றெடுக்கும் போதே திருந்தாதவன். மூன்று பிள்ளைகளை பார்த்தால் திருந்த போகிறான். ஒருவேளை திருந்த நினைத்தாலும் இனி என்ன பயன்?” மீனா பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வீடு வந்து விட்டாள்.

தூரத்தில் நின்று கூட ஜெகனை காண அவள் மனம் துடிக்கவில்லை. ஆனால், என்னவோ அவன் உயிர் பிழைத்து வந்து விட வேண்டும் என்று நினைத்தாள். இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு அந்த வீட்டிற்குள் நுழையும் போது தொண்டையில் அப்படி ஒரு கேவல். கதவை அடைத்தவள், அப்படியே பிள்ளைகளோடு அமர்ந்து கொண்டாள். 

தற்போது எல்லோருக்கும் தெரியும் மீனா கர்ப்பமாக இருப்பது. இப்படி ஒருத்தனுக்கு மூன்றாவது பிள்ளையையும் சுமந்து கொண்டு மற்றவர்களின் கேலி பார்வையில் குறுகி போனாள். யார் முன் எல்லாம் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று நினைத்தாளோ, இன்று அவர்கள் உதவியை எதிர் பார்த்து நிற்கிறாள்.

ஒரு நல்ல காதலர்களாக தோற்றுப் போனார்கள். கணவன் மனைவியாகவும் தோற்றுப் போனார்கள். கடைசியில் பெற்ற பிள்ளைகளுக்கு தாய் தந்தையாக இருக்க வேண்டிய இடத்திலும் தோற்றுப் போயாச்சு. பசியை அடக்கும் வயதாய் இவர்களுக்கு?.. ஆனால், அப்படித்தான் முழுதாக மூன்று நாட்கள் பசியை அடக்கி கொண்டிருக்கிறார்கள். யாரோ என்னவோ பாவம் பார்த்து வாங்கி கொடுத்ததை உண்டு கொண்டு, தாயின் சூழல் புரிந்து அமைதி காத்திருக்கிறார்கள். 

பெற்ற தாய் தந்தை குத்துகல்லாட்டம் இருந்தும் பிள்ளைகள் பசிக்கு அழுதார்கள் என்பது எவ்வளவு பெரிய கொடுமை. மனதில் அதிக வேதனை இருந்ததே தவிர அழுகை வரவில்லை. அடுத்து என்ன?.. இவன்தான் எல்லாம் என்று முடிவெடுத்து வந்தாயிற்று. இனி அவனே இல்லாமல் தான் இந்த வாழ்க்கையை பயணிக்க வேண்டுமா?…

கல்யாணம் முடித்து ஆரம்பத்தில் மீனாவும் செல்ல பிள்ளையாக கொஞ்சிக் கொண்டுதான் இருந்தாள். என்று கணவனின் போக்கு கஷ்டத்தில் கொண்டு வர வழி விட்டதோ அப்போதே உணர்ந்து கொண்டாள். அதிலிருந்து அனாவசியா செலவு, ஆடம்பரம் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு சராசரி மனைவியாக தான் அவனை இழுத்து பிடித்தாள். ஆரம்பத்தில் சண்டை போடுவது, பிள்ளைகளை கூட்டிக்கொண்டு தாய் வீட்டுக்கு செல்வது, அண்ணன்களை கூட்டிட்டு வந்து பஞ்சாயத்து பண்ணுவது என்று என்னென்ன பண்ணியும் ஜெகன் திருந்தவில்லை. 

சரி சண்டை போட்டு அவனை சரி கட்ட முடியவில்லை. சமாதானமாகியாவது சரிகட்டி விடுவோம் என்று தான், கணவனின் இழுப்புக்கெல்லாம் ஒத்துழைத்தாள். தாய் இல்லாமல் வளர்ந்தவன் தன்னைத் தவிர சொந்தம் என்று யாரும் இல்லை அவனை ஒதுக்கி வைக்கக் கூடாது என்று திரும்பத் திரும்ப கணவனுக்கு வாய்ப்பு கொடுத்தாள். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதைப் போல கணவனை சரி செய்ய என்னென்ன முயற்சி இருக்குமோ எல்லாவற்றையும் எடுத்தாயிற்று. 

அன்பால்தான் கட்டி இழுக்க முடியுமோ என்று அவன் என்ன செய்தாலும் அன்பை மட்டுமே திரும்ப கொடுத்து அவனுக்கு இணையாக இவளும் உழைப்பை கொடுத்து, அதற்கும் மேலாக அவனின் இரவுக்கு எல்லாம் துணை இருந்து என்று எப்படியாவது இந்த திருமண வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள தான் போராடினாள். கணவனின் ஆசை என்று மூன்றாவது பிள்ளையையும் வயிற்றில் வாங்கிக் கொண்டாயிற்று.. இனி அந்தக் கணவன் துணை இல்லை. ஆனால், அவன் கொடுத்த பிள்ளை வயிற்றில் தானே நிற்கிறது.

தன்னையே பெரிய முட்டாளாக உணர்ந்தாள். என்னவோ அவனை திருத்தியாச்சு, தன் கைப்பிடிக்குள் சரி வந்து விட்டான். தன் காதல் அன்பை உணர்ந்து கொண்டான். எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று நினைப்பெல்லாம் இன்று அவளைப் பார்த்து ஏளனமாக நின்றது. 

இதுவரைக்கும் கணவன் உயிரோடு வந்தால் போதும் என்ற போராட்டம் முடிந்து அடுத்து என்ன என்று மலைப்பு தோன்றியது. இனி, எப்படியும் ஜெகன் ஜெயில்தான். கணவன் உயிரோடு இருந்தும் இல்லாமல் வாழ்வது எவ்வளவு கொடுமையாக இருக்கும் என்று யோசிக்கக்கூட அவளுக்கு அவகாசம் கிடையாது. ஏனென்றால், அடுத்த வேலை உணவுக்கு பிள்ளைகள் தாய்முகம் பார்க்கிறார்கள். ஆரம்பித்த சின்ன தொழில் முழுதாக படுத்து விட்டது. அவளாக இனி எதுவும் செய்ய முடியாது. கொலைகாரனின் மனைவிக்கு யார் வேலை போட்டு தருவார்கள். எவ்வாறு பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பாள். மற்றவர்கள் மத்தியில் தனக்கு எவ்வாறு மதிப்பு கிடைக்கும். சுற்றத்தாரின் ஆதரவு இல்லாமல் தனியாக எவ்வாறு பிள்ளைகளை வளர்ப்பாள். ஜெகன் ஜெயிலுக்கு போனபின் வேலியில்லாத தோட்டம் போல் ஆகாதா இவர்கள் வாழ்க்கை. 

ஏதேதோ நினைவு வந்து பயமுறுத்த, பட்டென்று எழுந்து கொண்டாள். ஒரு பாத்திரத்தில் பாலை காய வைத்தவள். வீட்டின் பின் பக்கம் சென்றால், அங்கிருந்து சின்ன தோட்டத்திற்காக வாங்கி வைத்த பூச்சி மருந்து இருக்க எடுத்துக் கொண்டாள். வைராக்கியமாக பாலில் கலந்து வேகமாக ஆற்றி எடுத்தாள். தமிழ் உறக்கத்தில் இருக்க, புகழ் தாயை தேடி வந்தான். அம்மா பால் ஆற்றி கொண்டிருப்பதை பார்த்ததும் அவனுக்கு ஒரே கொண்டாட்டம்.

ஒன்றரை வயது குட்டி வாண்டு. தத்தக்கா பித்தக்காவென நடந்து தனது பால் பாட்டிலை வேகமாக எடுத்துக் கொண்டு வந்தான். மீனா பெருமூச்சு விட்டு திரும்பி பார்க்க, மகன் தாயை நோக்கி தனது பால்பாட்டிலே நீட்டினான். புகழுக்கு அதிகமாக பசி இருக்கும் போது அவனாகவே தனது பால் பாட்டிலை எடுத்துக்கொண்டு தாயிடம் கொடுப்பான். அப்போது மீனா புரிந்து கொள்ளணும் மகனுக்கு பசி வந்துவிட்டது என்று…

தனது அரிசி பற்கள் தெரிய சிரித்துக் கொண்டு தன்னை நோக்கி பால் பாட்டலை நீட்டி கொண்டிருக்கும் மகனை இமைக்காமல் பார்த்தாள் மீனா. பெற்றவள் கையில் இருப்பது விஷம் என்று மகனுக்கு தெரியுமா?. எவ்வளவு நம்பிக்கை தாய் மீது.. ஆனால், நான்?…

இந்த உலகில் எப்படிப்பட்ட கொடுமைகாரனும் பெற்ற பிள்ளைகளுக்கு நல்லது மட்டுமே நினைப்பான். என் திமிருக்கு பிள்ளைகளை பெற்று போட்டு வாழ வழி இல்லாமல் வாழ்க்கையை முடிக்க நினைக்கிறேன். புகழ் தாயின் சேலையை பிடித்து இழுத்து திரும்பவும் தனது பாட்டிலை அம்மா கையில் கொடுத்தான்.

அவனை இந்த உலகில் கொண்டு வருவதற்காக துடித்த வலியை விட இன்று அதிகமாக வலித்தது. தன் மகனின் அரிசி பல் சிரிப்பை அழிக்க முடியுமா? என்னை நம்பி பெற்றவள் என்று பசிக்கு கை நீட்டும் மகனுக்கு விஷத்தை கொடுக்க முடியுமா?… 

மீனா பிள்ளையை வாரி அணைத்துக் கொண்டாள். பல பேர் சொல்வார்கள் குடியால் குடும்பம் அழிந்தது என்று… இன்று அவள் குடும்பமும் அழிந்துவிட்டது. குடும்பத் தகராறில் பிள்ளைகளோடு மனைவி தற்கொலை என்று பேப்பரில் படிக்கும் போதெல்லாம் அவள் நினைத்துக் கொள்வாள் “எப்படித்தான் பெத்த பிள்ளைகளை கொல்ல மனசு வருமோ!” என்று…

இன்று அவளும் அந்த முடிவைத்தான் எடுப்போம் என்று ஒரு நாளும் நினைத்து பார்க்கவில்லை. புளிய விதை போன்ற கருவை வயிற்றில் தாங்கி, பத்து மாதமும் தொட்டுப்பார்த்து சுமந்து, கை கால்களை தடவி உருவி வளர்த்த என் பிள்ளைகளை நான் கொல்வதா? நொடி நேர ஆத்திரமும் அவசரமும் வாழ்க்கையை குறித்த பயமும் எங்கோ கொண்டு சென்று விட்டது அவளை…

போனது போகட்டும் இனி நான் என் பிள்ளைகளுக்காக… மகனை இறக்கி விடாமல் இடுப்பிலே வைத்துக் கொண்டவள், அவசரமாக குக்கரில் பருப்பு சாதம் வடித்தாள். ஜெகன் என்ற ஒருவனை மறக்கவே நினைத்தாள். அப்படி அல்லாமல் என்றும் தன் பிள்ளைகளுக்காக வாழ முடியாது.  

என்னவோ மனதில் ஒரு வைராக்கியம். பிள்ளைகளுக்கு வயிறார உணவை கொடுத்தவள், அதே திடத்தில் தன் வாயில் உணவை அள்ளி வைக்கும் போது தொண்டையில் விக்கி கொண்டது. வேண்டாம், இப்படி அவனவே நினைத்துக் கொண்டிருந்தால் கையில் இருக்கும் பிள்ளைகளை இழந்து விடுவோம். எங்கள் வாழ்க்கை தான் முடிந்து விட்டது. எங்கள் பிள்ளைகளுக்காகவாது ஒரு வளமான எதிர்காலத்தை அமைக்க வேண்டும். என்ன ஒன்று இனி போராட்டம் தனியாக தொடங்கும்…

கணவனைப் பார்க்க மகள் வரவே இல்லை என்றதும் பரமு தேடி வந்துவிட்டார். மீனா துணிகளை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். நன்றாக உண்டதில் பிள்ளைகள் உறக்கத்தில் இருந்தார்கள். அவர்களை தடவி விட்டாள். பெரிதாக எதுவும் கொடுக்கவில்லை அரிசியும் பருப்பும் ஒன்றாக கிண்டி கொடுத்தாள். பெற்றவள் கை மனம் வயிறார உண்டு உறங்கி விட்டார்கள். 

“என்ன மீனா நீ வருவன்னு நினைத்தேன். உன் புருசனை பார்க்க வரலையா?” மகள் பதில் பேசாமல் இருக்கவும் அடுப்படி சென்று பார்த்தார். 

பால் காய வைத்து ஒரு பக்கம் இருக்க, உணவு சமைக்கப்பட்டு இருந்தது. மகளை வித்தியாசமாக பார்த்தவர் பாலை சூடு பண்ண, 

“அம்மா அந்த பாலை கீழ கொட்டி விடு”

“ஏன்”

“அதுல பூச்சி மருந்து கலந்தேன்” என்றதும் அதிர்ந்து போனவர், 

“என்ன சொல்ற” என்றவர் வேகமாக பேரப்பிள்ளைகளைப் போய் தொட்டுப் பார்த்தார். 

“என்னடி சொல்ற பைத்தியக்காரி” அதிர்ச்சி விலகாமல் தாய் கேட்க.

“என்னவோ மன கஷ்டம் பட்டுன்னு தோணுச்சு. அப்புறம் என் பிள்ளைக முகத்தை பார்த்து விட்டுட்டேன்” 

“என்ன மீனா அசால்டா சொல்ற, என் நெஞ்சே துடிக்குது”

“வேற என்ன பண்ண சொல்ற.. எனக்கு வாழவே வழி தெரியல. நான் யோசிக்காதது ஒரு கற்பனையாக கூட நினைக்காததெல்லாம் என் வாழ்க்கையில் நடக்குது. இதுக்கு அப்புறம் எனக்கு என்ன பண்ணனே தெரியல. மனசு முழுக்க வலி மட்டும் தான் இருக்கு”

பெற்றவருக்கு தாங்கவில்லை “கொஞ்சம் அமைதியா இரு மீனா. உன்னை பெத்தவ நான் உயிரோட தான் இருக்கேன். எல்லாத்தையும் நான் சரி பண்றேன்”

“அது தாம்மா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நீ பெத்த நாலு பிள்ளைகள்ள நான்தாம்மா உனக்கு கஷ்டத்தை கொடுக்கிறேன். உங்க அளவுக்கு என்னை படிக்க வச்சு நகை போட்டு நல்லாத்தான் கல்யாணம் பண்ணி கொடுத்தீங்க. எனக்கு தான் வாழவே தெரியல. வயதான காலத்தில் நான் உன்னை பாக்கணும். ஆனா, நீ என்ன பார்க்கிறேன் என்று சொல்ற.. என்னை பெத்தவங்களையும் என்னால பாத்துக்க முடியல, நான் பெத்தவங்களையும் என்னால பாத்துக்க முடியல”

பரமேஸ்வரி புரியாமல் மகளை பார்த்தார். அவரைப் பொறுத்தவரை எப்படியும் மகள் கணவனை விட்டு இருக்க மாட்டாள். தற்போது இருக்கும் சூழல்தான் அவளை அப்படி யோசிக்க வைப்பது என்று நினைத்தார். 

ஆனால், மீனா தளரவில்லை. ரெண்டு நாட்கள் அமைதியாக இருந்தாள். பரமு எங்கும் செல்லாமல் மகளை அடைகாத்தார். அது தேவையே இல்லையெனும் விதமாக மீனா தெளிவாக இருந்தாள். 

“வக்கீல் எதுவும் வைப்போமா மீனா” என்று கேட்டு வந்த பெரிய அண்ணனிடமும்..

 “எதுவும் வேண்டாம்ண்ணா உண்மை என்னவோ அதுபடி நடக்கட்டும்” என்று முடித்துக் கொண்டாள். 

தனது அடுத்த கட்ட நிலையை தெளிவாக சிந்தித்தாலும் ஜெகனை தள்ளி வைக்க மீனாவின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. தங்களை நட்டாற்றில் விட்டவனுக்கு தாங்கள் இல்லாத வாழ்க்கையே தண்டனை என நினைத்து சாகப் போனாலும், கணவன் சாகட்டும் என்று மனம் நினைக்கவில்லை. அதனால் மீனா அந்த ஊரிலே இருந்தாள். தன்னில் ஒரு அங்கமாக இருக்கும் கணவனை அவ்வளவு எளிதாக விளக்க முடியவில்லை. தெரிந்தே மனம் ஒத்துக்கொண்ட கசப்பான விஷயம் ஜெகன் மீது மீனா கொண்ட காதல்.

நான்கு நாட்களுக்குப் பின் ஜெகன் கண்விழி தான். ஆனால், உற்றவர் என்று ஒருவர் கூட அவன் அருகில் இல்லை. மனைவியே சென்று பார்க்காத போது மற்றவர்களுக்கெல்லாம் என்ன அக்கறை?…

கணவன் எழுந்து விட்டான் என்ற செய்தி கேட்ட பின் தான் மீனா ஊரைவிட்டே சென்றாள். முன்பு போல பக்கத்து ஊரில் அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்லவில்லை. ரொம்ப தூரமாக அவளுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத சென்னையை நோக்கி அவள் பயணம் இருந்தது. 

மீனா ஆரம்பத்தில் ஷூ கம்பெனிக்கு தான் வேலைக்கு போனாள். கணவனைப் பற்றிய எந்த செய்தியையும் அவள் காதில் கேட்டுக் கொள்ள தயாராக இல்லை. அப்படி ஒருவன் இல்லை என்ற மனத்திடத்தை வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தாள். மலர் கனி பிறக்கும் போது ஆபரேஷன் தான் செய்தார்கள். நிறைய மன அழுத்தம் பிரஷரை அதிகமாக ஆபரேஷன் செய்யும் கட்டாயம். முழு ஓய்வில் தான் மீனா இரண்டு மாதங்கள் இருக்க வேண்டிய நிலை. 

மீனா முன்பே தெளிவாக இருந்தாள் தன் அண்ணன்களை எதிர்பார்க்கக் கூடாது என்று.. ஆனாலும் சூழ்நிலை அவ்வாறு அல்லாமல் போக, பரமுவாலும் மூன்று பிள்ளைகளை கவனிக்க முடியவில்லை. அந்த நேரத்தில் துணையாக நின்றது அண்ணன்கள் தான். ஆனாலும் ரெண்டு மாதத்திலே மீனா எழுந்து கொண்டாள். மலர்க்கனியையும் வைத்துக்கொண்டு, வெளி வேலைக்கு செல்வது சாத்தியமில்லாமல் போக, அடுத்து என்னவென்று யோசித்தாள். 

அவள் வசிக்கும் ஏரியாவில் இவளை போலவே வேலைக்கு செல்வோர்தான் அதிகம். அதுவும் காய்கறி கற்கள் மண் ஏற்றும் லோட்மேன் வேலைகள் செய்பவர்கள் அதிகமாக இருக்க.. அதிகாலை மூன்று மணிக்கு அவர்கள் வேலை நாள் தொடங்கி விடும்.. அதை நன்றாக யோசித்து தான் மீனா வீட்டோடு உணவு கடையை தொடங்கியது. பரமுவும் மகளுக்கு துணை நிற்க தன்னை தேற்றிக்கொண்டாள் பெண்.

எப்பாடுபட்டாவது தன் பிள்ளைகளுக்கு நல்ல உணவும் சிறந்த கல்வியையும் கொடுத்து விட வேண்டும். படிப்பு அவர்களுக்கு ஒரு நல்ல வேலையை கொடுக்குமோ என்னவோ, எதிர்காலத்தில் நல்ல முறையில் கட்டமைக்கும் சிந்தனையை கொடுக்கும். தன்னைப் போல் அல்லாமல் அவர்கள் வாழ்க்கை முழுமை பெற வேண்டும். அதற்காகவே இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறாள் மீனா. 

கடந்த கால வாழ்க்கை இருவருக்குமே நல்ல உறக்கத்தை கொடுக்கவில்லை. ஒரு மாதிரி சோகமாகவே இருந்தாள் மீனா. ஜெகன் எப்பவும் போல காலை சாப்பாட்டுக்கு கீழே வர, மீனாவிடம் முழு அமைதி. 

மற்றவர்கள் பார்வை இப்போதும் இவர்களிடம் தான். மீனா அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. எப்படியும் நீண்ட நாட்கள் மறைக்க முடியாது என்று தெரியும். வெளியே வந்தது உண்மை என்பதால் அமைதியாகிக் கொண்டாள். 

ஜெகன் எப்பவும் போல பிள்ளைகளோடு தன் வட்டத்தை அமைத்துக் கொண்டான். அதற்கெல்லாம் மீனா ஒன்றும் சொல்லவில்லை. மீனா, காய்கறி பலசரக்கு எல்லாவற்றையும் ஒரு கடையில் மொத்தமாக வாங்குவாள். சில நாள் இவள் போவாள் பல நாள் கடையில் இருந்து கொண்டு வந்து வீட்டில் போடுவார்கள். 

இன்று பொருட்களை எதிர்பார்த்து மீனா காத்திருக்க கொண்டு வந்ததோ ஜெகன். மீனா கேள்வியாக பார்க்க, 

“நம்ம வண்டி தான் டூருக்கு புடிச்சாங்க. அப்போ இருந்தே பழக்கம். கடை பையன் வெளியே போயிருக்கானாம். உங்க வீட்டம்மா கிட்ட கொடுத்திருங்கன்னு என்கிட்ட கொடுத்து விட்டாங்க”

 மீனா எதுவும் பேசவில்லை தலையாட்டி கொண்டாள். மற்றவர்கள் பார்வையின் அர்த்தம் மீனாவுக்கு புரியாமல் இல்லை. எவ்வளவு பேருக்கு விளக்க முடியும்?.. ஜெகன் பார்க்க நன்றாக இருப்பான். இப்போது வசதி வாய்ப்பில் செழுமை அவனிடம் நன்றாக தெரிந்தது. சொத்து தொழில் என்று நல்ல பேரோடு இருக்கிறான். 

ஆனால், மீனா ஒரு சமையல்காரி. பெரிதாக கவர்ந்திழுக்கும் அழகு கிடையாது. பார்ப்பவர்களுக்கு ஜெகனுக்கு பொருத்தமான பெண் இல்லை என்று தான் நினைப்பார்கள். 

அதனால்தான் ஜெகன் இவ்வளவு இறங்கி வரும்போது, மீனாவின் வைராக்கியம் பார்ப்பவர்களுக்கு வீம்பாக தெரிந்தது. எல்லாம் தெரிந்த தன் அண்ணன் வீட்டார்களே ஜெகனுக்கு துணை நிற்கும் போது மற்றவர்களை என்ன சொல்ல?… 

யாரும் என்னவும் நினைத்துக் கொள்ளட்டும் குத்து பட்டவனுக்கு தான் வலி தெரியும். அவனோடு வாழ்ந்து மூன்று பிள்ளைகளை பெற்றவள் அவளுக்கா தெரியாது. ஒரு நிமிடம் காலில் விழுவான் அடுத்த நிமிடம் கழுத்தில் கத்தி வைப்பான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!