Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ – 14

 

அத்தியாயம் – 14:


Advertisement

வாணிஸ்ரீ சர்க்கரை ஆலை கலவரம் ஒருவழியாக முடிவுக்கு வந்திருந்தது. தொழிலாளர்களின் உரிமைகளுக்காக ஒற்றை ஆளாக போராடி ஜெயித்ததாக எம்.எல்.ஏ கொடிவீரனின் அதிரடி, தேனி மாவட்டத்தையே உலுக்கியிருந்தது. மக்கள் ஆதரவு பெருகியதால், அவனுக்கு ஒரு ஹீரோ அந்தஸ்தை பத்திரிக்கைகள் தந்திருந்தன. பிரச்சனை சுமுகமாக முடிந்தாலும், கலெக்டர் மீராவின் மனதில் எழுந்த புயல் அடங்கவில்லை.

Advertisement

மாவட்ட ஆட்சியர் குடியிருப்பின் தனி அறையில், நள்ளிரவைத் தாண்டியும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மீரா ஜன்னல் வழியே வெளியே தெரிந்த இருளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆலை வளாகத்தில் கொடிவீரன் முழங்கிய அந்த வார்த்தைகள் அவளது காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தன…

Advertisement

“அநியாயத்தை எதிர்த்து நிக்கிறது என் இரத்தத்துல ஊறுனது கலெக்டர் மேடம்.. !”

Advertisement

“பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நடந்தது  அந்த அநியாயத்தை கல்லெறிந்து தடுத்த அந்த சிறுவன் ஒரு வேளை…” மீரா தன் உதடுகளைக் கடித்துக் கொண்டாள். அவளது இதயம் பலமாக அடித்துக் கொண்டது.
“அப்படியென்றால், மதுரையில் அன்று என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடிய அதே வீராதான் இந்த கொடிவீரனா?”இந்தக் கேள்வி அவளைத் தூங்க விடாமல் வதைத்தது.
மெதுவாகத் தன் மடிக்கணினியை திறந்தாள். அரசு தரவுத்தளத்தைத் தாண்டி, கொடிவீரனின் கடந்த காலத்தை இணையத்தில் தோண்டத் தொடங்கினாள். அவனது தேர்தல் பிரமாணப் பத்திரம் (Affidavit) மற்றும் பழைய செய்திக் குறிப்புகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்தாள்.
அவள் தேடிய புள்ளிகள் மெல்ல இணையத் தொடங்கினாய்.
பள்ளிப் படிப்பு….மதுரை தல்லாகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி
கல்லூரிப் படிப்பு… மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அரசியல் அறிவியல் பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை (B.A & M.A Political Science).
“தல்லாகுளம் பள்ளி!”
மீராவுக்கு மூச்சு முட்டியது. அழகர் திருவிழா நடக்கும் அழகர்கோவில் ரோடு, தல்லாகுளத்தைக் கடந்துதான் செல்லும். அழகர் எதிர்சேவைக்கு வந்து நிற்கும் இடம் .  அன்று அவளைக் காப்பாற்றிய சிறுவன் தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்தவனாக இருக்க நூறு சதவீத வாய்ப்பு இருந்தது.
அவளது கைகள் நடுங்கியது.
கொடிவீரனின் நாளைக்கான அதிகாரப்பூர்வச் சுற்றுப்பயண விவரங்களை இணையத்தில் சரிபார்த்தாள்.
நாளை காலை 10:30 மணி: தேனி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ‘மாணவர்களும் அரசியலும்’ என்ற தலைப்பில் சிறப்புப் பேருரை.
மீராவின் கண்கள் தீர்க்கமாக மாறின. அலுவலகக் கோப்புகளைத் தாண்டி, கொடிவீரனின் அசல் முகத்தை, அவனது நிஜமான பேச்சுத் திறனை அவனது செயல்பாடுகளை நின்று கண்காணிக்க அவளது மனம் துடித்தது. ஒரு முடிவெடுத்தாள்.
தேனி அரசு கலைக் கல்லூரி அரங்கம் மாணவர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. விசில்களும் கைதட்டல்களும் காதைப் பிளந்தன.கூட்ட நெரிசலுக்கு நடுவே, கருப்பு நிறப் புர்கா அணிந்து, முகத்தை முழுமையாக மூடியபடி ஒரு சாதாரண மாணவி போல அமர்ந்திருந்தாள் கலெக்டர் மீரா. அவளது கண்கள் மட்டுமே வெளியே தெரிந்தன. அதில் ஒரு துப்பறியும் வீராங்கனையின் பார்வை இருந்தது.
கொடிவீரனை மிக அருகில் இருந்து அவதானிக்க அவள் எடுத்த ஆபத்தான முடிவு அது.
திடீரென, அரங்கத்தின் வாசலில் சலசலப்பு ஏற்பட்டது. கம்பீரமான போலீஸ் உடையில், இடுப்பில் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தார் எஸ்பி வர்மன். எம் எல் ஏக்களின் பாதுகாப்பு வளைய ஏற்பாடுகள் போலும்.
வர்மனின் கூர்மையான கண்கள் கூட்டத்தை ஒருமுறை கழுகுப் பார்வையால் துழாவின. புர்கா அணிந்து அமர்ந்திருந்த மீராவின் மீது அவனது பார்வை ஒரு கணம் நிலைத்து, பின் மேடைக்கு அருகில் நகர்ந்தது. மீரா பதற்றத்துடன் தன் முகத்திரையை இன்னும் சற்று இறுகப் பற்றிக் கொண்டாள்.
சரியாக 10:45 மணிக்கு, பலத்த கோஷங்களுக்கு இடையே எம்.எல்.ஏ கொடிவீரன் அரங்கத்திற்குள் நுழைந்தான்.
அவனைக் கண்டதும் அரங்கத்தில் இருந்த மாணவிகள் கூட்டத்தில் ஒரு மெல்லிய சலசலப்பும் ஏக்கப் பெருமூச்சுகளும் எழுந்தன. அவன் ஒரு சராசரி அரசியல்வாதி போல இல்லை; ஒரு தமிழ் சினிமா ஹீரோவுக்குரிய அசாத்திய வசீகரத்துடன் இருந்தான். ஆறரை வடி உயரம், அடர்த்தியான கிருதாவுடன் கூடிய ட்ரிம் செய்யப்பட்ட தாடி, கத்தரித்து நேர்த்தியாக வாரப்பட்ட தலைமுடி, உடற்பயிற்சியால் செதுக்கப்பட்ட அவனது கம்பீரமான தோள்களுக்கு கச்சிதமாகப் பொருந்தியிருந்தது அந்தத் தூய வெள்ளை நிறக் காட்டன் சட்டை. முழங்கை வரை மடிக்கப்பட்டிருந்த சட்டைக் கைகளுக்குக் கீழே அவனது மாநிற மேனி பளபளத்தது.
முன்வரிசையில் இருந்த மாணவிகளில் ஒருத்தி
“செம்ம ஹேண்ட்சமா இருக்காருல…”
என்று தன் தோழியிடம் உருகிக் கூறினாள். சுற்றிலும் இருந்த பெண்கள் அவனது ஒற்றைப் புன்னகைக்காக ஏங்கி, தங்கள் பார்வைகளால் அவனைத் துரத்திக் கொண்டிருந்தனர்.
முகத்திரைக்குள் இருந்தபடி இதைப் பார்த்த மீராவின் உதடுகளில் ஒரு மெல்லிய கேலிப் புன்னகை அரும்பியது. ‘பெண்களைக் கவரத் தெரிந்த ஒரு சாதாரண ஆண்’ என்றுதான் அவளுக்கு முதலில் தோன்றியது. ஆனால், அவன் மேடை ஏறி மைக்கைப் பிடித்த அடுத்த நொடி, அந்த எண்ணம் முற்றிலும் மாறியது.
அவனது காந்தக் குரல் அரங்கம் முழுக்க எதிரொலித்தது.
“என் அன்பான மாணவக் கண்மணிகளே!
உங்கள இந்த கல்லூரிக்கு உங்க பெற்றோர்கள் எதற்காக அனுப்பி இருக்காங்க??
” படிப்புக்காக…. மாணவர்கள் கோரஸாக கூற….
“சரி படிப்பு மட்டும் போதுமா? ” நான் சொல்றேன் உங்களுக்கு உடனடி தேவை அரசியல்! “
மாணவர்களுடன் மீராவும் உன்னிப்பாக கவனிக்க துவங்கினாள்.
‘மாணவர்களுக்கு எதுக்கு அரசியல்? படிப்புதான் முக்கியம்’ அப்படின்னு பெரியவங்க சொல்றத நீங்க கேட்டிருப்பீங்க. நான் கேட்கிறேன்… ஏன் மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா?” என்று கையை உயர்த்தி முழங்கினான் கொடிவீரன்.
“நாம் உட்கார்ந்திருக்கிற இந்த பிரம்மாண்டமான கல்லூரி கட்டிடம் யாருடையது? அரசாங்கத்துடையதா? இல்லை! காலையில ரோட்டோரம் பூ வித்துட்டு இருக்காளே ஒரு ஏழைத் தாய்… வெயில்ல கஷ்டப்பட்டு ரிக்சா ஓட்டுறாரே ஒரு சாதாரண மனிதன்… அவங்க கஷ்டப்பட்டு உழைச்சு கட்டுன வரியில உருவானது இந்த கட்டிடம்! (Tax of an ordinary man). அப்போ, இந்தச் சமூகம் உங்களுக்கு இவ்வளவு பெரிய படிப்பைக் கொடுக்கும்போது, நீங்க திருப்பி என்ன கொடுக்கப் போறீங்க? படிச்சு முடிச்சுட்டு வெளிநாட்டுக்கு வேலைக்குப் போறது மட்டும்தான் உங்க லட்சியமா?”
அரங்கமே அவனது பேச்சில் நிசப்தமானது.
மீரா வியப்புடன் அவனையே உற்றுப் பார்த்தாள். அவனது தோற்றத்தை விட, அவனது எண்ணங்கள் அவளை ஈர்க்கத் தொடங்கின.
” மாணவர்கள் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டிய முக்கிய காரணம்…” சமத்துவம்! “
“….சமத்துவம் (Equality) என்கிற கொள்கையை நிலைநாட்டத்தான் தம்பிகளே நீங்க அரசியலுக்கு வரணும். சாதியால, மதத்தால பிரிக்க நினைக்கிற கூட்டத்துக்கு முன்னாடி, நாமெல்லாம் ஒண்ணுனு காட்டத்தான் மாணவர் சக்தி வேணும். இதோ… எனக்கு முன்னாடி ஒரு வரிசையில எத்தனையோ மாணவர்கள் உட்கார்ந்திருக்கீங்க. அங்கே பாருங்க… உங்களுக்கு நடுவுல ஒரு புர்கா அணிந்த பெண் அமர்ந்திருக்கிறாங்க… அவங்க போடுற உடை வேறயா இருக்கலாம், உங்க உடை வேறயா இருக்கலாம். ஆனா, இந்த நாட்டுல சமத்துவமும் நீதியும் மறுக்கப்படும்போது, உங்க எல்லாருடைய இரத்தமும் ஒரே மாதிரிதான் கொதிக்கும்! அதுதான் அரசியல்!”
“இந்த சமத்துவம் னா என்னன்னு தெரியுமா? அது நம்ம பண்பாடுலயே நம்ம கலாச்சாரத்துலயே இருக்கு.. நம்ம பக்கத்து ஊர் அழகர் திருவிழாக்கு எத்தன பேர் போயிருக்கீங்க?
உடனே மாணவர்கள் ” நான் …நான்..” என கையுயர்த்த …மீரா ஆச்சர்யமும் அதிசயமுமாய் பார்த்தாள்…
கொடி வீரன் தொடர்ந்தான்.
“நம்ம பண்பாடும் கலாச்சாரமும் எப்பவுமே மனிதர்களைப் பிரிக்கல, ஒண்ணா சேர்க்கத்தான் சொல்லிக் கொடுத்திருக்கு.”
“அதுக்கு மிகச்சிறந்த உதாரணம் நம்ம மதுரை அழகர் திருவிழா (சித்திரைத் திருவிழா…
நம்ம பாட்டன், முப்பாட்டன் காலத்துல இருந்தே நம்ம ரத்தத்துலயும், நாம கொண்டாடுற கலாச்சாரத்துலயும் கலந்தது தான் இந்த சமத்துவம்!
வருசாவருசம் சித்திரைத் திருவிழா வந்துட்டா, அழகர் மலையில இருந்து கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்துல மதுரைக்குக் கிளம்புவாரு. வைகை ஆத்துல அழகர் இறங்குற அந்த ஒரு காட்சியைப் பாக்குறதுக்கு எத்தனை லட்சம் பேரு வர்றாங்க தெரியுமா? அத்தனை பேரும் ஒரே இடத்துல, ஒரே ஆத்துல, எந்தப் பேதமும் இல்லாம ஒண்ணா நிக்கிறாங்களே… அங்க இருக்குடா  தம்பி சமத்துவம்!
“அழகர் வர்ற வழியில பந்தல் போடுறவன் ஒருத்தன்…”
“அவருக்குத் தண்ணி தெளிச்சு ஆராதனை காட்டுறவன் ஒருத்தன்…”
“சாமியாடி வர்றவன் ஒருத்தன்…”
“அழகரைத் தன் தோள்ல சுமந்துட்டு வர்றவன் இன்னொருத்தன்…”
“அங்க கூட்டத்துல பிரச்சினை ஏதும் இல்லாம பார்த்துகிறது இன்னொருத்த ன்…”
மீராவுக்கு சிலிர்த்தது!
“அங்க சாதி பாக்குறானா? இல்ல மதம் பாக்குறானா? எல்லாரும் ‘கோவிந்தா… கோவிந்தா…’ன்னு ஒரே குரல்ல கத்தும்போது, அங்க மனுஷங்க மட்டும்தான்டா இருக்காங்க, வேற எந்தப் பிரிவினையும் இல்லை!”
கொடிவீரனின் இந்த அசாத்தியமான, நியாயமான பேச்சும், அவனது ஆளுமையும் மீராவை முற்றிலும் பிரமிக்க வைத்தது. இவன்தான் தன் வீராவோ  என அவளுக்கு நிச்சயமாய் இப்போது தோன்ற துவங்கிற்று.
அவள் உணர்ச்சிப் பெருக்கில் இருக்கையை விட்டு பாதியளவு எழுந்தாள். அவளது கவனம் முழுமையாகக் கொடிவீரனின் மீது இருந்ததால், பின்னால் இருந்து வந்த ஆபத்தை அவள் கவனிக்கவில்லை.
மாணவர் உடையில் இருந்த இருவர், தங்கள் கைகளில் கத்தியை மறைத்து வைத்துக் கொண்டு, புர்கா அணிந்திருந்த மீராவை நோக்கி மிக வேகமாக முன்னேறினர். அவர்கள் கொடிவீரனின் அரசியல் எதிரிகளால் ஏவப்பட்ட ரவுடிகளா? மீராவின் எதிரிகளா? கடவுளுக்கே வெளிச்சம் .”நகரு… நகரு…” என்று சத்தம் போட்டபடி அவர்கள் மீராவின் அருகே நெருங்கி, கத்தியை ஓங்கினர்.
“மீரா… விலகு!”
திடீரென அரங்கமே அதிரும் வண்ணம் ஒரு சிம்மக் குரல் கேட்டது.அடுத்த நொடியில், மேடைக்கு அருகில் நின்றிருந்த எஸ்பி வர்மன், மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து மீராவின் முன்னால் நின்றான். ரவுடியின் கத்தி வர்மனின் தோள்பட்டையைக் கீறிக் கொண்டு செல்ல, இரத்தம் பீறிட்டது. ஆனால், வர்மன் அந்த வலியைப் பொருட்படுத்தாமல், தன் இடுப்பில் இருந்த துப்பாக்கியை உருவி ரவுடியின் தலையருகே நீட்டினான்.”அப்படியே நில்லு! ஒரு அடி நகர்ந்தா மண்டை சிதறிடும்!” வர்மனின் குரலில் மரண பயமும் ஆவேசமும் கலந்திருந்தது.
அரங்கமே நிசப்தமானது. மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு கலை யத்துவங்க…. கொடிவீரன் மேடையிலிருந்து அதிர்ச்சியுடன் கீழே பார்த்தான்.வர்மன், தன் காயமடைந்த கையால் மீராவின் முகத்திரையை மெதுவாக விலக்கினான். அவளது அதிர்ச்சியடைந்த கண்கள் தெரிந்தன.”கை விலங்கைப் போடுங்க!” என்று கர்ஜித்த வர்மன், தன்னைச் சுற்றியிருந்த போலீசாரிடம் அந்த இரண்டு ரவுடிகளையும் உடனடியாக ஒப்படைத்தான். வர்மனின் தோள்பட்டையிலிருந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது, ஆனால் அவனது கவனம் முழுக்க மீராவின் மீதே இருந்தது.
“ஹேய்… இது யாருடி! சினிமால இன்டர்வெல் பிளாக்ல வர்ற மாதிரி புதுசா ஒரு போலீஸ் ஹீரோ  மாஸ் என்ட்ரி குடுக்குறாரு!”
என்று முன்வரிசையில் இருந்த ஒரு மாணவி தன் தோழியைக் கிள்ளி, கண்கள் விரிய உருகிக் கூறினாள் .” பார்க்கவே செம்ம கெத்தா இருக்கார்ல்ல !” என்று சுற்றிலும் இருந்த பெண் பிள்ளைகளின் மொத்த கவனமும் வர்மன் மேல் விழ  முகத்திரைக்குள் இருந்த படி இதைக் கேட்ட மீராவுக்குள் இந்த சூழலிலும் ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டது. அவளுக்கு அந்த மாணவிகளின் வழிசல் சற்றும் பிடிக்கவில்லை.
அடுத்த நொடி, மீரா எதையும் சுதாரிக்கும் முன்பே, வர்மன் அவளது கையைத் தன் பலமான கைகளால் இறுகப் பற்றிக் கொண்டான். அங்கிருந்த பெரும் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல், அவளது கையைப் பிடித்து விறுவிறுவென்று அரங்கத்தை விட்டு வெளியே இழுத்துச் சென்றான்.அரங்கத்தின் வாயிலை நெருங்கும்போது, வர்மன் சட்டென்று திரும்பி மேடையில் நின்ற கொடிவீரனைப் பார்த்தான். தன் கையை உயர்த்தி, பேச்சைத் தொடருமாறு அவனுக்கு சைகை காட்டினான்.மேடையில் இருந்த கொடிவீரன் இந்தத் திடீர் திருப்பங்களால் முற்றிலும் அதிர்ச்சியடைந்து, வார்த்தைகளின்றி வாயடைத்துப் போய் நின்றான். அவனது கண்கள் கோபத்தில் சிவந்தன. உண்மையில், அவன் வேறு ஒரு பெரிய திட்டத்தோடுதான் அங்கு வந்திருந்தான்.
எங்கும் எதையும் ஒரு அஜென்டாவோடு செய்யும் நரித்தனம் அரசியல்வாதிகளுக்கு சகஜம் தானே.
ஆனால், வர்மனின் இந்த அதிரடி என்ட்ரி அவனது ஒட்டுமொத்த திட்டத்தையும் தவுடுபொடியாக்கியிருந்தது.
கல்லூரி வளாகத்தின் ஒதுக்குப்புறமான, மரங்கள் அடர்ந்த பகுதிக்கு மீராவை இழுத்து வந்த வர்மன், அவளது கையை விடுத்தான். அவனது மூச்சு கோபத்திலும் வலியிலும் பலமாக வாங்கியது.
அவன் எதுவும் கூறத் துவங்கும் முன்னே மீரா தன்னிச்சையாக நேராக அவன் விழிகளை பார்த்து  “ஆர் யூ அவுட் ஆஃப் யுவர் மைன்ட்? அங்க என்ன பெரிய ரவுடிங்க கூட்டமா இருந்தது? ஜஸ்ட் இரண்டு பேர்… எதுக்கு தேவையில்லாம கத்தியை உன் மேல வாங்கிக்கிட்ட? பூம்பாறை வில்லேஜ்ல காயம்பட்ட அதே ஷோல்டர்ல திரும்பவும் காயம்…. இது உனக்கு தேவையா…” என்று ஆத்திரத்தில் கத்தினாள்.
“எனக்கு என்ன ஆனா உனக்கென்னடி ??? ஏன்… நேத்து அவன்  உன்னை அவ்வளவு இம்ப்ரெஸ் பண்ட்டாணா… இன்னிக்கு அவன் ஸ்பீச் கேட்க இப்படி வந்திருக்கீங்க கலெக்டர் மேடம்?” என்று அவளது அடிமனதைத் துளைப்பது போலக் கேட்டான். அவனது மூச்சுக்காற்று அவளது முகத்தில் சூடாகப் பட்டது.
வர்மன், நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க…” மீரா அவனது கண்களில் இருந்த காதலின் ஆவேசத்தைக் கண்டு மிரண்டு போனாள்.
“நான் என்ன கேட்கணும் மீரா? முதல்ல நீ எதுக்காக இந்த இடத்துக்கு வந்த? என்ன நடக்குது உனக்குள்ள? ஒரு கலெக்டர் தன் அந்தஸ்தை மறந்து, புர்கா போட்டுட்டு ஒரு அரசியல்வாதியை ரகசியமா பின்தொடர்ந்து வர்ற அளவுக்கு அவன்கிட்ட என்ன இருக்கு? வாட் ப்ரிங்ஸ் யூ ஹியர்?” என்று கோபத்தின் உச்சியில் வார்த்தைகளைக் கொட்டினான்.
மீரா பேச முயன்று வார்த்தைகளின்றி மௌனமாக நிற்க, வர்மனின் கண்கள் மெல்லக் கசிந்தன. கோபம் சட்டென்று ஒரு தீராத காதலாக அவனது குரலில் மாறியது.”உனக்கு என்னதான்டி வேணும் ? எதுக்காக என்ட்டேர்ந்து ஓடற… இப்படி இங்க வந்து எவன் பின்னாடி யோ நிக்கிற???
ஆனா ஒன்னு…என் கண் முன்னாடி உனக்கு ஒரு சின்ன கீறல் விழுந்தா கூட என்னால தாங்கிக்க முடிலடி !  உன்னை இழக்குற பயம் எனக்குள்ள எந்த அளவுக்கு இருக்குனு உனக்குத் தெரியுமா?” என்று ஆழமான காதலோடு, அவளது முகத்தை தன் கைகளுக்குள் ஏந்தி, மிக மென்மையான ஆனால் ஆத்திரமான குரலில் கேட்டான்.
பின்  மெல்லத் தன் கைகளைத் தள்ளி எடுத்து, கசப்பான ஒரு புன்னகையோடு சொன்னான்: “அவனைப் பத்தி தெரிஞ்சுக்க உனக்கு அவ்வளவு ஆசையா இருந்தா, இந்த மாதிரி புர்கா போட்டுட்டு ஆபத்துல மாட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவனோட மொத்த ஜாதகத்தையும், அவனோட கடந்த கால வரலாற்றையும் உன் மேஜைக்கு நானே கொண்டு வந்து சேர்க்கிறேன்! ஆனா, அதுவரைக்கும் அவன்கிட்ட இருந்து தள்ளியிரு… ஏன்னா, நீ எனக்கு மட்டும்தான் சொந்தம்!”கடைசி வார்த்தையை ஒரு தீர்க்கமான உத்தரவாகப் போட்டுவிட்டு, தன் காயத்தைப் பிடித்துக் கொண்டு வர்மன் அங்கிருந்து விறுவிறுவென்று காரை நோக்கிச் சென்றான்.மீரா தன் நெஞ்சில் கையை வைத்தபடி, வர்மன் சென்ற வழியையே வெ றித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள். அவளது உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகையும், கண்களில் கண்ணீரும் கலந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!