Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ – 16

அத்தியாயம்: 16
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அந்தப் பிரம்மாண்ட அறையில், கோப்புகளுக்கு நடுவே மூழ்கியிருந்தாள் மீரா . கொடிவீரன் வழக்கின் அதிரடித் திருப்பங்களுக்குப் பிறகு, கடந்த சில நாட்களாகவே அவளது நாட்கள் எந்திரத்தனமாக, ஏதோ ஒரு வெறுமையோடுதான் நகர்ந்து கொண்டிருந்தன. கொடிவீரன் ‘வீரன்’ இல்லை என்ற நிம்மதி ஒருபுறம் இருந்தாலும், தன் மனதின் தீரா ப்புதிரான அந்த மதுரை அழகர் திருவிழா நாயகன் யார் என்ற கேள்வி அவளை இன்னும் குடைந்து கொண்டிருந்தது.
அதைவிட முக்கியமாக, கொடிவீரன் சம்பவத்திற்குப் பிறகு எஸ்பி வர்மனை அவளால் பார்க்கவே முடியவில்லை. மாவட்டத்தின் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள், விஐபி பாதுகாப்பு என அவன் தன் அசாத்திய வேகம் மற்றும் அதிகாரத்தோடு மதுரையின் ஏதோ ஒரு மூலையில் சுழன்று கொண்டிருக்கிறான் என்பதை மட்டும் செய்திகள் வழி அறிந்து கொண்டாள்.
அவளது எண்ண ஓட்டத்தைக் கலைப்பது போல, மேஜை மீது கிடந்த அவளது தனிப்பட்ட கைபேசி ‘கிண்’ணென்ற ரீங்காரத்தோடு அதிர்ந்தது. திரையில் ‘ரஞ்சனா ‘ என்று மின்னிய பெயர் கண்டதும், மீராவின் உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.
“சொல்லு டி ரஞ்சு… ?” என்று கைபேசியைச் காதில் அணைத்தபடி குரலில் உற்ற தோழியிடம் பேசுகிற போது வெளிப்படுகிற துள்ளலுமாய் நாற்காலியில் சாய்ந்தாள் மீரா.
இந்த ஒத்த மனதுடைய பெண் தோழிகளின் நட்பு தான் எத்தனை பாந்தமானது… அவர்களுக்கு நேரம் வெறுமனே பேசக்கிடைத்தால் மட்டும் போதும்…. குடும்பம் சமூகம் அரசியல் சினிமா என சம்பாஷனை எங்கெங்கோ கூட்டிச் சென்று  அவர்களையே இலகுவாக்கி விடும்…. மீராவும் ரஞ்சுவும் ஒரு நாள் விட்டு ஒரு நாளேனும் பேசிக்கொள்வார்கள்.
அது அவர்களுக்கே உரிய ஒரு ஸ்பேஸ்!
மறுமுனையில், மிடுக்கும், ஒரு தோழிக்கே உரிய துள்ளலும் கலந்த குரலில் பேசினாள் ரஞ்சனா. “ஹேய் மீரா! என்ன பண்ற? நம்ம அர்ஜுனோட  கல்யாணத்துக்கு இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கு. கல்யாணத்துக்கு எப்போ வர்றேன்னு கேக்கத்தான் போன் பண்ணுனேன் மா… சொல்லு என்ன ப்ளான்?”
அவர்களது பேட்ச் மேட்  கஸ்டம்ஸ் ஆபீசர் ஐஆர் எஸ் அர்ஜுனின்  திருமணம் மதுரையில் நடைபெறுவதாக அழைத்திருந்தான்.
” அர்ஜுன் நேத்து கூப்பிட்டான் மா… ஒரே குஷி தான் அய்யாவுக்கு…”என்று கலகலவென்று சிரித்தாள் மீரா.
” நிச்சயத்துக்கே நாம நாலு பேரும் இருக்கனுமாம்! ”
“நான் நிச்சயத்துக்கு முதல் நாள் நைட்டே மதுரை ரீச் ஆகிடுவேன் மீரா. நீ எப்போ கிளம்புற?”
“நான் நிச்சயதார்த்த விழா நைட் அங்க வந்துடுவேன் ரஞ்சனா. இந்த மாவட்டப் பொறுப்புகள் எல்லாம் ஓரளவு செட்டில் பண்ணிட்டு, ஒரு ரெண்டு நாள் நம்ம பேட்ச் பிரண்ட்ஸ் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து அரட்டை அடிக்கலாம்னு பார்க்கிறேன்,” என்றாள் மீரா, உற்சாகமாக.
“வாவ் டி!  ஒரு வழியா ப்ளான் பண்ணிட்டையா .. நாம நாலு பேரும் முசொரிக்கு   அப்புறம் இப்பதான் ஒண்ணா ஒரு விசேஷத்துல ஒண்ணா சேரப்போறோம். பக்கா ராயல் ஸ்டைல்ல அர்ஜுனோட நிச்சயதார்த்தமும் கல்யாணமும் நடக்கப் போகுதுன்னு கேள்விப்பட்டேன். ரொம்ப ஹேப்பியா இருக்குடி. சரி, வர்மனோட பிளான் என்னன்னு தெரியுமா? அவன் எப்போ வர்றானாம்?” என்று ரஞ்சனா சாதாரணமாகக் கேட்க, மீராவின் இதயம் ‘டக்’கென்று ஒரு நொடி தடம் புரண்டது.
“அவன்… வர்மன் பிளான் பத்தி எனக்குத் தெரியலடி. கொடிவீரன் கேஸ்க்கு அப்புறம் நானும் அவனைப் பார்க்கல, பேசவும் இல்ல,” என்று தன் குரலில் இருந்த தவிப்பை மறைத்துக்கொண்டு சொன்னாள் மீரா.


Advertisement

“என்னடி சொல்ற? ரெண்டு பேரும் ஒரே டிஸ்ட்ரிக்ட்ல  இருந்துட்டு இன்னும் பேசிக்கவே இல்லையா? சரி சரி… நீ வர்மன் கிட்டயே கேட்டுக்கோ. மதுரைல மீட் பண்ணுவோம். எனக்கு ஒரு அபிஷியல் கால் வருது பார்க்கலாம்…. பாய்!” என்று ரஞ்சனா அழைப்பைத் துண்டிக்க, மீரா கைபேசியைப் பார்த்தபடி சில நொடிகள் மௌனமானாள்.
அவளது இதயம் அவளையும் அறியாமல் வர்மனின் எண்களை அழுத்தத் துடித்தது. ‘அவன் எப்போ கிளம்புறான்? எப்படிப் போறான்?’ என்று கேட்கும் சாக்கில், அவனது அந்தக் காந்தக் குரலைக் கேட்க அவளது பெண்மை ஏங்கியது. கூடவே இது  ஏன் என புத்தி கேட்க… மனம் வருந்தி பதுங்கியது.
மூன்று நாட்களுக்கு பின்னர் தேனியிலிருந்து மதுரை நோக்கிய அந்தத் தேசிய நெடுஞ்சாலையில், மீராவின் அதிகாரப்பூர்வ வாகனம் அல்லாத  அந்த  கார் மிதமான வேகத்தில் பாய்ந்து கொண்டிருந்தது.
காரின் ஓட்டுநர் இருக்கையில்,  கியரை மாற்றி காரை லாவகமாகச் செலுத்திக் கொண்டிருந்தான் எஸ்பி வர்மன் ஐபிஎஸ்.
மீரா ஒருவாறு தயங்கி தயங்கி அர்ஜுனின் நிச்சயம் அன்று காலை வர்மனுக்கு ஃபோன் செய்தாள்..
” சொல்லு ” என்றான் எடுத்த எடுப்பிலேயே…
” இல்ல அர்ஜுன் நிச்சயதார்த்தம்..”
“ஆமா ஹாப் அன் அவர்ல கிளம்பறேன்…
ஒரு நொடி நிசப்தம்….
” நானும் ஜாயின் பண்ணிக்கவா?”
” இதென்ன …வெள்ளை காக்கா மல்லாக்கா பறக்குது!”
“எதே…..?”
” இல்ல…இது யாரு மேடம்… கலெக்டர் மீரா மேடமா பேசறது?”
“ஆமா , வரவா? வேண்டாமா?””
“வரேன்.”
இப்படி
மீராவின் அழைப்பு வந்த அடுத்த அரை மணி நேரத்தில், அவளது தேனி குவார்ட்டர்ஸ் வாசலில் தன் காரோடு வந்து நின்றிருந்தான் வர்மன். அவளும்  அவனுடன் காரில் ஏறி அமர்ந்திருந்தாள்.
காரின் ஸ்டீரியோவில்  மெல்லிய மெலடி இசை மிகக் குறைந்த சத்தத்தில் ஒலித்துக் கொண்டிருக்க, ஜன்னல் வழியே தெரிந்த அந்திப் பொழுதின் செவ்வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா. அடர் நீல நிறக் காஞ்சிபுரம் பட்டுப்புடவையில், காதுகளில் அடுக்கு ஜிமிக்கி அசைய அமர்ந்திருந்த மீரா, வர்மனை  ஓரக்கண்ணால் பார்க்க அவன் விழிகள் சாலையில் பதிந்திருந்தன.
ஹரிச்சரனும் ஷ்வேதா மோகனும் உருகி கொண்டிருந்தனர்.
“……வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது…
அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது….
வராமல் போகும் நாட்கள் வீண் என….
வம்பாக சண்டை போட வைக்குது…
சொல்ல போனால் என் நாட்களை….
வண்ணம் பூசி தந்தவளும் நீதான்…..
துள்ளல் இல்ல என் பார்வையில்
தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்..”
வர்மன்  மீராவை பார்த்தானோ இல்லையோ மீரா அவனது பக்கவாட்டு தோற்றத்தை தன்னையுமறியாமல்  ரசித்து கொண்டு வந்தாள்…  அலை அலையாக புரளும் அவன் சிகையை, நீண்டு கோடிட்டுருந்த அந்த தாடையை ,அந்த நாசியை, அந்த மீசையை… பாராது பார்த்திருந்தாள்.
வர்மன் காரின் வேகத்தைச் சற்றே குறைத்தான். இடது கையை ஸ்டீயரிங்கிலிருந்து எடுத்து, சீட்டுக்கு நடுவே வர்மன்  எதேச்சையாக வைக்க , அங்கே மீராவின் மென்மையான வலது கரத்தின் மீது வைத்திருந்தான்.
அவனது கைகளின் சூடு பட்ட அடுத்த நொடி, மீராவின் உடம்பில் ஒரு மின்சாரம் பாய்ந்தது.
சரே லென வர்மன் கை எடுக்க… இவளுக்கு
” பெரிய இவன் இவன்… போடா என்றானது”…
“…..பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே….
ராசாவை தேடி கண்கள் ஓடுமே…..
ரோசாபூ மாலை ரெண்டு வேண்டுமே…
பேசாமல் மாட்டி கொள்ள தோன்றுமே”
அவளறியாமல் அவள் தன்னையும் வர்மனையும் மனக்கோலத்தில் கற்பனை யில் கண்டாள்.
அவளது முகத்தில் பட்டுப்புடவையின் நிறத்திற்கு இணையாகச் சிவப்பு படர்ந்தது.
காரின் ஏசி குளிரையும் மீறி அவளுக்குள் ஒரு புது சிலிர்ப்பு ஓடியது.
“வர்மன் மீண்டுமாய் அவள் கரத்தில்  தன்  கரம் வைத்திருந்தான்”. விரலோடு விரல் கோர்த்து கொண்டான்.
“வர்மன்… கார் ஓட்டுறீங்க… கையை விடுங்க…” என்று அவள் மெல்லிய குரலில் தவிப்போடு சொல்ல, வர்மன் காரை சாலையின் ஓரமாக நிறுத்தினான். நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்த பெரிய ஆலமரத்தின் நிழலில் கார் நின்றது.
வர்மன் தன் உடம்பைச் சற்றே திருப்பி, மீராவின் முகத்திற்கு மிக அருகில் குனிந்தான். அவளது கழுத்தில் இருந்த அடுக்கு ஜிமிக்கிகள் அவளது பதற்றத்தில் லேசாக நடுங்குவதை அவன் ரசித்தான். அவனது மூச்சுக்காற்று மீராவின் கன்னங்களில் பட, அவள் தன் கண்களை அறியாமல் மூடிக்கொண்டாள்.
அவன் முத்தமிடவில்லை… வெறுமனே அவளை ப்பார்த்திருந்தான்.
விழி நீர் வழிந்தது…
வீரா … விழி நீராய் வழிந்தான்..!
பெண்ணவள் வர்மனுக்கும் வீராவுக்கும் இடையில் மாட்டிகொண்டு துவள்ந்தாள்.
அவனுக்கும் நிச்சயமாய் தெரிந்தது… ஏதோ ஒன்று!
இவளை ஏதோ ஒன்று பாடாய்படுத்துகிறது…!
” என்னம்மா? ஏன்? என்ன நடக்குது உனக்குள்ள …?”
என்று அவள் முகத்தை ஏந்தி அவன் கேட்க…, அந்த  அளவற்ற காதலும், அவளது தவிப்பைத் தீர்க்கும் பாசமும் மீராவை மொத்தமாக உருக வைத்தது. அவளது கைகள் அறியாமல் வர்மனின் கறுத்த பட்டுச் சட்டையை இறுகப் பற்றின. சில நொடிகள் அந்த அந்தரங்க நிசப்தத்தில் இருவரது இதயத் துடிப்புகளும் மட்டுமே பேசிக்கொண்டன.
“ப் பாம் ப்பாம்….”
ஹாரன் நாராசமாய் அந்த மெல்லிய அழகிய கணத்தை துளைத்து களைத்து போட்டது..
தன்னிலை உணர்ந்த அவள் விலக வர்மன் காரை எடுக்க,   மீரா ஜன்னல் பக்கமாகத் திரும்பிக் கொண்டாள்.
கார் மதுரை மாநகரத்திற்குள் நுழைந்த போது, அந்திச் சூரியன் முழுமையாக மறைந்து நிலவொளி படரத் தொடங்கியிருந்தது. பாரம்பரியக் கோட்டைச் சுவர்களைப் போல எழுப்பப்பட்டிருந்த அந்தப் பிரம்மாண்ட மகாலின் வாசலில் வர்மனின் கார் வந்து நின்றது.
வாசலில் நின்றிருந்த தந்தப் பல்லக்குகளும், காற்றில் அசைந்தாடிய செவ்வரளிச் சரங்களும், மண்டபத்தின் உள்பகுதியில் தூண்களில் செதுக்கப்பட்டிருந்த கம்பீரமான யாழிச் சிற்பங்களும் உள்ளே நுழைபவர்களுக்கு ஒரு சாதாரணத் திருமண மண்டபத்திற்குள் நுழையும் உணர்வைத் தரவில்லை; மாறாக, காலப் பெருவெளியில் பின்னோக்கிச் சென்று ஏதோ ஒரு சமஸ்தானத்து அரசவைக்குள் நுழைவது போன்ற பிரம்மையையே ஏற்படுத்தின.
இன்று மணமகன் அர்ஜுன்  மற்றும் மணமகள் கௌதமி ஆகியோரின் பிரம்மாண்ட  நிச்சயதார்த்த வைபவம் . சாதாரண நடுத்தரக் குடும்பத்து நிகழ்வுகளைப் போலன்றி, இந்த விழாவின் ஒவ்வொரு அசைவும் ஒரு தனித்துவமான அரச பாணியில் திட்டமிடப்பட்டிருந்தது.
மணமகன் அறையில், பதற்றத்தின் உச்சத்தில் இருந்தான் கஸ்டம்ஸ் கமிஷனர் அர்ஜுன். எத்தனையோ கடத்தல் கன்டெய்னர்களை ஒற்றைப் பார்வையில் முடக்கிய அவனது கைகள், இன்று இளம்பச்சை நிறக் காஞ்சிபுரம் பட்டுச் சட்டையையும் பட்டு வேட்டியையும் கட்டுவதற்குள் நடுங்கிக் கொண்டிருந்தன.
அறையின் கதவைத் திறந்து கொண்டு மீராவும் வர்மனும் உள்ளே நுழைந்தனர்.
“என்னடா கஸ்டம்ஸ் ஆபீசர்… முகம் இப்படி வெளுத்துப் போயிருக்கு? கடத்தல் பார்ட்டிங்க முன்னாடி கூட நீ இப்படி நடுங்குனது இல்லையே?” என்று வர்மன் தன் காந்தக் குரலில் கிண்டலடித்தபடி அர்ஜுனின் தோளைத் தட்டினான்.
“டேய் வர்மன்! சும்மா இருடா… சுத்தி நடக்குற அரேஞ்ச்மென்ட்ஸ் எல்லாம் பார்த்தாலே ஏதோ ராஜா காலத்து விசேஷம் மாதிரி இருக்கு. அதான் ஆல்ரெடி ஹார்ட் பீட் எகிறிட்டு இருக்கு,” என்று அர்ஜுன் பாவமாகச் சொல்ல, வர்மனின் உதடுகளில் ஒரு மர்மப் புன்னகை அரும்பியது.
” ஹே , வந்துட்டீங்களா ?” என்ற படி ரஞ்சனாவும்  அந்த அறைக்குள் வந்து அவர்களுடன் இணைய…. மீரா அவளைக் கட்டியணைத்துக் கொண்டாள். “ஹேய் மீரா… சொன்ன மாதிரி கரெக்டா வந்துட்டியே! வர்மன் சார்… என்ன இன்னைக்கு பட்டு வேட்டியெல்லாம் கட்டிட்டு செம்ம ராயலா இருக்கீங்க?” என்று ரஞ்சனா வம்புக்கு இழுத்தாள்.
மேடையில் நிச்சயதார்த்தப் பத்திரிகை வாசிக்கப்படும் சடங்கு முற்றிலும் விசித்திரமாகத் தொடங்கியது. பட்டுத் துணியில் எழுதப்பட்டிருந்த பத்திரிகையை, இருவீட்டுப் பெரியோர்களும் கைகளில் ஏந்தி, மங்கல நாதஸ்வர இசை முழங்க, ஒரு அரச சாசனத்தை வாசிப்பது போல வந்தனர். மணமகள் கௌதமி அசாத்திய நாணத்துடன் மேடைக்கு வர, அவளுக்குப் பின்னால் தூய வெள்ளை நிறப் பட்டுச் சட்டையும், ஜரிகை வேட்டியும் அணிந்த ஒரு வாலிபன் மேடைக்கு வந்தான்.
ஆறடி உயரம், தீர்க்கமான கண்கள், காதில் மின்னிய ஒரு சிறிய வைரக் கடுக்கன் என அவன் மேடைக்கு ஏறிய கணமே, அந்த இடத்தின் ஒட்டுமொத்த வெளிச்சமும் அவன் மீது விழுந்தது போலிருந்தது.
“டீ அவர்   கௌதமியின் சொந்த அண்ணன்” என ரஞ்சனா கிசுகிதத்தாள்.  லண்டனில் பெரிய தொழிலதிபராக இருக்கும் அவன், தன் தங்கையின் விசேஷத்திற்காக வந்திருக்காராம்”.
இதை சொல்லும் போதே  மீரா கவனித்துவிட்டாள் ரஞ்சனாவின் முக மாற்றத்தை. ரஞ்சனாவின் கன்னங்களில் லேசாக அரும்பிய  சிவப்பைக் கண்டு, மீரா அவளது காதருகில் குனிந்து, “ஏய் என்னடி நடக்குது இங்க..?”
“ஏய்… மீரா… சும்மா இருடி… பையன் செம்ம கிளாஸா, அதே சமயம் செம்ம மாஸா இருக்கான் ல…” என்று ரஞ்சனா அறியாமல் தன் வாயை விட, மீரா கலகலவென்று சிரித்தாள். மேடையில் இருந்த அந்த மணப்பெண்ணின் அண்ணன், இவர்களின் சிரிப்பொலி கேட்டுச் சட்டென்று திரும்பினான். அவனது தீர்க்கமான கண்கள் நேராக ரஞ்சனாவை நோக்கின.  ரஞ்சனா சட்டென்று தன் பார்வையைத் திருப்பிக் கொள்ள, அவன் உதடுகளில் ஒரு மெல்லிய, வசீகரப் புன்னகை அரும்பியது. பின் அவன் இவர்களை நோக்கி வந்தான்…
ரஞ்சனா பதற….
மீரா இவன் எதற்கு இங்கு வருகிறான் என பார்க்க…
. . ஆனால் வர்மனோ எந்தப் பதற்றமும் இல்லாமல் அவனைப் பார்த்து ஒரு கம்பீரமான புன்னகையை வீசினான்.
அவன் நேராக வர்மனின் அருகில் வந்தான்.  பார்த்தான். பின்னர், யாரும் எதிர்பாராத விதமாக, தன் கைகளை விரித்து வர்மனை இறுகக் கட்டியணைத்துக் கொண்டான்!
“என்னடா வர்மன்…  ஐபிஎஸ் டிரெய்னிங் முடிச்சிட்டு மதுரைக்கே எஸ்பி-யா வந்து மாஸ் காட்டிட்டு இருக்க? லண்டன்ல இருந்து நான் வர்ற வரைக்கும் ஒரு ஃபோன் கூட பண்ணல?” என்று  உரிமையோடு வர்மனின் தோளில் குத்தினான்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனும் மீராவும்  ரஞ்சனாவும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். “டேய் வர்மா..… நீயும் இவரும் கட்டிப்பிடிச்சுக்கிறீங்க? என்ன நடக்குது இங்க?” என்று அர்ஜுன் கண்கள் பிதுங்கக் கேட்டான்.
வர்மன் சத்தமாகச் சிரித்துவிட்டு, அர்ஜுனின் தோளில் கையைப் போட்டான். “டேய் மாப்பிள்ளை … உனக்கு இன்னும் விஷயம் தெரியாதா? நீ கட்டிக்கப் போற கௌதமியோட குடும்பத்துக்கும், எங்க குடும்பத்துக்கும் இருக்கிற பழைய பாரம்பரிய பந்தம் உனக்குத் தெரியாதுல்ல?”
“என்ன?!” மீராவும் அர்ஜுனும் ஒரே குரலில் கத்தினர்.
”  கௌதமியோட அம்மா வழி ப்பாட்டியும் என்னோட அப்பா வழிப் பாட்டியும் சிஸ்டர்ஸ்…அந்த முறையில, கௌதமியும் நானும் வர்மனுக்குத் தங்கை, தம்பி முறை வேணும்.  ”
அர்ஜுன் வாயடைத்துப் போய் வர்மனைப் பார்க்க, வர்மன் தன் வேட்டி மடிப்பை அலாதியான மிடுக்கோடு தூக்கிச் செருகிக் கொண்டு, ” டேய் நான் இப்போ பொண்ணு வீடாக்கும் ” என  தோரணையாக அர்ஜுனைப் பார்த்துப் புன்னகைத்தான்.
… அப்போ இங்க பெரிய மாமன்- மாப்பிள சண்டையே நடக்கும் போலயே!” என்று கௌதமியின் அண்ணன் லேசான புன்னகையோடு வர்மனிடம் சொல்லிக் கொண்டே, தன் பார்வையை மெதுவாக ரஞ்சனாவின் பக்கம் திருப்பினான்.
அவன் பார்ப்பதை உணர்ந்து சட்டென்று நிமிர்ந்த ரஞ்சனா, அவனது கள்ளமற்ற, கூர்மையான விழிகளை எதிர்கொள்ள முடியாமல் தன் இதழ்களைக் கடித்துக் கொண்டாள். காடுகளின் அதிகாரியாக வலம் வரும் அவளது மிடுக்கு, அவனது அந்த ஒற்றைப் பார்வையில் அப்படியே சரிந்து போவதைப் போலிருந்தது.

Advertisement

ரஞ்சனாவின் இதயம் ‘டக் டக்’ என மேளமடிக்க, அவளது காதோரக் கூந்தலை காதுக்கு பின்னால் ஒதுக்கியபடி,  நாணமும் துள்ளலும் கலந்த ஒரு மெல்லிய புன்னகையை அவனுக்குப் பரிசாக அளித்தாள். இருவருக்குள்ளும் பரிமாறப்பட்ட அந்த விநாடி நேரக் கண் ஜாடைகளும், திருட்டுத்தனமான பார்வைகளும் அந்தப் பரபரப்பான அறையிலும் ஒரு புதிய ரகசியக் காதலின் தொடக்கத்திற்கு அச்சாரமிட்டன.

Advertisement

நாதஸ்வரம் முழங்க தொடங்க….மண்டபத்தின் பிரம்மாண்ட மேடை முழுவதும் இப்போது புது மெருகுடன் ஜொலித்தது. நறுமணம் வீசும் மல்லிகைப் பூச்சரங்களும், அடர் சிவப்பு நிற ரோஜாக்களும் மேடையின் தூண்களை அலங்கரித்திருக்க, நடுவே இருந்த பெரிய பித்தளைக் குத்துவிளக்குகள் சமஸ்தானத்துத் தோரணையை அப்படியே பிரதிபலித்தன.
மேடையில், இருவீட்டுப் பெரியோர்களும் பட்டுப் பாய்களில் அமர்ந்திருக்க, நடுவே தாம்பூலம் மாற்றுவதற்கான  சடங்குகள் தொடங்கின. பழங்காலக் கைவேலைப்பாடுகள் கொண்ட பெரிய செப்புப் பேழைகளில், காஞ்சிபுரம் பட்டுப்புடவை, பட்டு வேட்டி, குங்குமம், சந்தனம், மற்றும் நவதானியங்கள் அழகாக அடுக்கப்பட்டிருந்தன.
கௌதமி அசாத்திய நாணத்துடன் மேடையின் ஒருபுறம் அமர்ந்திருக்க, அவளது அண்ணன் வர்மனின் அருகில் வந்து நின்றான்.
“வர்மன், நம்ம குடும்ப வழக்கப்படி அந்தப் பூப்பந்து மாற்றும் சடங்கையும், நிச்சயதார்த்தப் பத்திரிகைக்குப் பொட்டு வைக்கிறதையும் நீதான் முன்னாடி நின்னு எடுத்துத் தரணும்,” என்று கௌதமியின் அண்ணன் சொல்ல, வர்மன் கம்பீரமாகத் தலையசைத்தான்.
நிச்சயதார்த்தப் பத்திரிகையில் இருவீட்டுப் பெரியோர்களும் கையெழுத்திட்ட பிறகு, அந்தப் பத்திரிகைக்கு மஞ்சள் மற்றும் குங்குமத்தால் பொட்டிடும் மங்கலச் சடங்கு தொடங்கியது. வர்மன் மேடையில் இருந்த வெள்ளிக்கிண்ணத்தில் இருந்த குங்குமத்தை தன் விரலால் தொட்டு, பத்திரிகையின் நான்கு மூலைகளிலும் பொட்டிட்டான்.
அப்போது மேடைக்குக் இடப்புறம் நின்று கொண்டிருந்த மீராவை வர்மனின் கண்கள் தேடிப் பிடித்தன. வர்மன் தன் விரலில் இருந்த மீதி குங்குமத்தைப் பார்த்தபடி, மீராவை நோக்கித் தன் புருவங்களை உயர்த்தி, ‘உனக்கு எப்போ நான் பொட்டு வைக்கிறது?’ என்பது போல ஒரு தீர்க்கமான பார்வையை வீசினான்.
வர்மனின் அந்தப் பகிரங்கமான செய்கையில் மீராவின் இதயம் ஒரு நொடி ஸ்தம்பித்தது. சுற்றிலும் இத்தனை பெரிய மனிதர்கள், அதிகாரிகள் இருக்கும் வேளையில், இந்த வர்மன் தனக்கு மட்டுமே புரியும் மொழியில் காதலைக் கடத்துவதை அவளால் நம்பவே முடியவில்லை. அவளது கைகள் தானாக அவளது நெற்றியைத் தொட்டுக் கொண்டன.
சடங்கின் அடுத்த கட்டமாக, மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் பரஸ்பரம் பூக்கள் மற்றும் பழங்கள் நிறைந்த தாம்பூலத் தட்டுகளை மாற்றிக் கொண்டனர். கௌதமியின் அண்ணன் ஒரு பெரிய வெள்ளித் தட்டை ஏந்தி அர்ஜுனின் தந்தையிடம் கொடுக்க, மறுபுறம் வர்மன் மற்றொரு தட்டை ஏந்தி வந்து அர்ஜுனிடம் கொடுத்தான்.
“இந்தாங்க மாப்பிள்ளை சார்… எங்க வீட்டுப் பொண்ணை உங்களுக்கு முறைப்படி நிச்சயம் பண்ணித் தர்றோம். ஜாக்கிரதையா பார்த்துக்கணும்,” என்று வர்மன் அதிகாரத் தொனியில் சொல்ல, மேடையில் இருந்த பெரியவர்கள் அனைவரும் கலகலவென்று சிரித்தனர்.
அர்ஜுன் சிரித்துக் கொண்டே, “கண்டிப்பா மாமா!” என்று வர்மனின் கைகளைப் பற்றிக் கொள்ள, அந்தப் பிரம்மாண்ட அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது.
மீராவுக்கும் ரஞ்சனாவுக்கும் அருகில் நின்றிருந்த பெரியம்மா உரக்கக் கூறினார்
“நாளைக்கு பாட்டிமா கையால எடுத்துக்கொடுத்த தாலி  வாங்கிட்டான்னா நம்ம குழந்த தீர்க்க சுமங்கலி தான்..” நிச்சயதார்த்த சடங்குகள் யாவும் அந்த சுபயோக சுபதினத்தில், அரச தோரணையுடன் நிறைவடைய, நாதஸ்வர இசை இன்னும் மங்கலமாக ஒலிக்கத் தொடங்கியது.
மீராவுக்கு “யாரு பாட்டிமா…?” என உள்ளே கேள்வி ஒடத்துவங்கியது!

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!