Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

21. சுபகீதா - ஆகாயமே என் ஆதாரமே

ஆகாயமே என் ஆதாரமே 22

ஆகாயமே என் ஆதாரமே 22

அன்று காலையில் வாசலில் இருக்கும் அன்றைய நாளிதழை எடுக்கலாம் என்று சீதா வெளியே வரும் பொழுது அவள் கண்ட காட்சி உண்மையில் அவளை வியப்பில் ஆழ்த்தி இருந்தது. இவ்வளவு நாட்களாக அவள் நினைத்துக் கொண்டிருந்தது வேறாக இருக்கும் பொழுது நடப்பில் அது முற்றும் வேறாக இருந்தது.அப்படி என்னத்தை பார்த்துவைத்தாள் என்கிறீர்களா?



Advertisement

தனது வீட்டு வாசலில் ரகுவரன் கோலம் போட்டுக் கொண்டு இருப்பதைத்தான் சீதா வாயை திறந்து பார்த்துக்கொண்டு இருந்தாள் .சீதாவுக்கு நன்றாகவே கோலம் போட தெரியும். முன்பெல்லாம் கோலம் போட்டிகளுக்கு சென்று பெரிய தேர் கோலம் போடுவதை ரசித்து செய்தவள் தான். அப்படி என்றால் நான் சொல்வது இருவது வருஷங்களுக்கு முன்பு.

Advertisement

படித்து வேலைக்கு சென்ற பிறகு இதிலெல்லாம் அவளுக்கு நாட்டம் குறைந்து போனது.ராதா வீட்டு முன்பு ஏதோ நான்கு இழைகளை இழுத்துக்கொண்டு இருந்தாள் .இப்போதெல்லாம் ராதாவாலும் முடிவது இல்லை.வீட்டு வாசலில் கோலம் என்று இழுக்கவும், அடுக்ககத்தின் வாசலில் தெளித்துக்கோலம் போடவும் ஒரு அம்மாவை ஏற்பாடு செய்து விட்டாள் ராதா.என்ன நடக்கிறது என்பதை எல்லாம் சீதா கண்டு கொள்வது இல்லை .வெகு நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு அதிசயம் கண்ணில் படுகிறது. ஆச்சர்யம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?

Advertisement

அதுவும் வெள்ளிக்கிழமை என்று கோலம் போட்டு அதற்க்கு சுற்றிலும் ரகு காவி இழுத்துக்கொண்டு இருந்ததை ஒருவித மோன நிலையில் பார்த்தாள் சீதா. அவன் அருகில் அவனது பூமா.அப்பாவிடம் ஏதோ வளவளத்து கொண்டிருக்க பொறுமையாக அவளிடம் பதில் சொல்லிக்கொண்டே , ரகுவரன் வேலை செய்த பாங்கு , ஒரு அம்மாவை போல அவ்வளவு பொறுமை.

Advertisement

அந்த நொடி,அவர்கள் இருவரோடும் தானும் நின்று கொண்டிருப்பதை போல கற்பனை கண் முன் விரித்ததில் விதிர்விதிர்த்து போனது பெண்ணின் மனம். வெகுநேரமாக தான் இப்படியே நின்று கொண்டிருப்பதை ஒருவித கையாலாகாத்தனத்துடன் உணர்ந்தவளாக உள்ளே செல்வதற்கு திரும்பும் நேரத்தில் இவளை பார்த்துவிட்டு பூமா ‘ஆன்டி’என்று வேகமாக ஓடிவந்து இவளது இடுப்பை கட்டிக்கொள்ளவும்,பூபந்து தன் மீது மோதியதாக உணர்ந்த பெண்ணின் மனம் சிலிர்த்து நிமிர்ந்தது. ஜானகியின் பிள்ளைகள் இங்கே வந்து இருப்பதும் , தன்னுடன் நேரம் செலவழிப்பதும் எப்பொழுதும் நடப்பது தான்.ஆனாலும் ,தங்கையிடம் நெருங்கி பழக ஒருநாளும் ஜானகி தமது பிள்ளைகளை அனுமதித்தது கிடையாது. ஒரு அடி விலகி நின்றுதான் பேசுவார்கள்.அதிலும், கொஞ்சமும் ஒட்டாமல் யாரையோ அழைப்பது போல மரியாதையாக அழைக்கும் தருணத்தில் ஒருவித சலிப்பு ஆக்கிரமிக்கும். அதனாலோ என்னவோ வேறு குழந்தைகளிடம் பழகுவது கூட கொஞ்சம் தயக்கம்தான் சீதாவுக்குள்.

இதோ இப்போது பூமாவிடம் எந்த தயக்கமும் சீதாவுக்கு வரவில்லை.குழந்தை இயற்கையாக தன்னிடம் வரும்பொழுது ஒதுங்கி நிற்க அவசியம் என்ன? தானும் காலை மடித்து குழந்தையின் உயரத்திற்கு அமர்ந்து கொண்டு ஆவலுடன் பேசிக்கொண்டிருந்தாள்.ரகு இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்தாலும் அவனது முகத்தில் எந்த பாவமும் இல்லை. கர்ம அக்கறையாக கோலத்தில் காவி இழுத்துக் கொண்டிருந்தான்.

அவன் தன்னை நேராக பார்க்காதது ஒருபக்கம் நிம்மதியையும்,இன்னொருபக்கம் அவஸ்தையாகவும் இருந்தது பெண்ணுக்கு. சற்று நேரம் பூமா இவளுடன் பேசிக்கொண்டு இருந்தவள் அப்பா வேலையை முடித்து எழுந்திருக்கவும் இவளிடமிருந்து அப்பாவை நோக்கி ஓடினாள். சீதாவின் முகத்தில் புன்னகை அரும்பியது. சிறுமி செல்லும் முன் இவள் கையில் திணித்து விட்டு சென்றிருந்த சோக்கேலேட் அதுவும் இவளை பார்த்து சிரித்தது. நாளிதழுடன் உள்ளே சற்று நேரம் கழித்து நுழைந்த மகளை ஆராய்ச்சி பார்வை பார்த்தாள் ராதா.அதை உணரும் நிலையிலும் பெண் இல்லை.

மகளை பார்த்த ராதாவுக்குள் அபாய மணி அடிக்க தொடங்கியது. விரும்பத் தகாத விஷயங்கள் நடக்கபோகிறதோ!என்று அவளது மனம் பதைத்தது . வெளியே நடைப்பயிற்சிக்கு சென்றுவிட்டு வந்த கிருஷ்ணன் மனைவியின் அதிர்ச்சி நிறைந்த முகத்தை பார்த்துவிட்டு யோசனையானார். வாயை திறந்து எதுவும் கேட்டாரில்லை.கேட்டாலும் அவளிடமிருந்து உருப்படியாக ஒன்றும் வராது என்பது சமீப காலங்களில் அவர் உணர்ந்து கொண்ட ஒன்று. ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் வேறு பகுதி நேர பணியாளராக வேலைக்கு சேர்ந்துவிட்டதில் மனைவியிடம் பேசும் நேரத்தை வெகுவாக குறைத்துக்கொண்டார்.

வீட்டில் கணவனும் சரி,மகளும் சரி தன்னிடம் அதிகம் பேசுவதில்லை என்பதால் ராதா இப்போதெல்லாம் குழுக்களில் சேர்ந்து கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக்கி கொண்டாள் .அனேகமாக வெளியூர் பிரயாணங்கள் தான்.அந்த நேரங்களில் சீதாவும்,கிருஷ்னனுமாக பேசிக்கொண்டே வீட்டு வேலைகளை செய்வார்கள். வீட்டில் சுத்தம் செய்வதற்கு ஒரு ரோபோ வாங்கிவிட்டாள் சீதா. அதில் வீட்டின் அமைப்பை பதிவு செய்து வைத்திருக்கிறாள். மூன்று நாட்களுக்கு ஒருமுறை வீட்டை அதை வைத்து சுத்தம் செய்வது கிருஷ்ணனின் வேலை.அதோடு பாத்திரம் தேய்க்கவும் மிஷின் வாங்கி வைத்தாகி விட்டது.அதனால் வீட்டில் சமைக்கும் வேலை தான். அதை அப்பாவும் பெண்ணுமாக செய்து கொள்வார்கள்.அவர்களுக்குள் பேசுவதற்கு பொது விஷயங்கள் ஆயிரம் உண்டு. அமெரிக்காவின் அதிபர் தொடங்கி அமைந்தகரையில் புதியதாக திறந்திருக்கும் கடை வரையில் அவர்கள் பேச்சில் அடிபடும். அதிகம் பேசாத ஜானகியே அப்பாவிடம் மனம் திறந்து பேசுவாள் எனும் பொழுது சீதாவுக்கு அப்பாவுடன் பேசுவதில் என்ன பிரச்சனை இருக்கப் போகிறது? முன்பெல்லாம் சீதா தனது அம்மாவிடம் தான் அதிகம் பேசுவாள்.அதற்க்கு காரணம் ராதா சீதாவை அதிகம் தனது அப்பாவுடன் பேசிப் பழக அனுமதிக்கவில்லையோ என்று எனக்கு இப்போது தோன்றுகிறது. ஆரம்பத்திலிருந்தே ஒரு கண்ணுக்கு தெரியாத திரைசீலையை ராதா போட்டு வைத்திருக்கிறாள் என்று தோன்றுகிறது. அதனாலேயே சீதா அதிகமாக அப்பாவிடம் பேசுவதற்கு அக்கறை காண்பிக்கவில்லையோ என்னவோ! போகட்டும்.இப்போதாவது அவளுக்கு தமது அப்பாவுடன் பழக வாய்த்திருக்கிறதே!

உள்ளே வந்த கிருஷ்ணன் கொஞ்சநேரம் நாளிதழ் படித்துவிட்டு,தனக்கான காபியை கலந்துகொண்டு வந்து ஹாலில் அமர்ந்தார்.அப்போதும் அவரது மனையாட்டி யோசனையிலிருந்து வெளியே வந்தது போல தெரியவில்லை. மனிதருக்கு சலிப்புதான் தட்டியது. பேசாமல் தங்கள் அறைக்கு சென்று குளித்துவிட்டு வந்தார். அவருக்கு அன்று திருச்செந்தூர் எக்ஸ்பிரெசில் பயணம் செய்யவேண்டும்.அலுவலக ஆடிட்டிங் . மூன்று நாட்களுக்கு தேவையானவற்றை சூட்கேசில் எடுத்து வைத்துக்கொண்டார்.

வயிறு பசிக்கத் தொடங்கியிருந்தது. அடுக்களையில் பாதி சமையல்தான் முடிந்திருந்தது. நறுக்கி வைக்கப் பட்டிருந்த கத்திரிக்காய் லேசாக நிறம் மாறி ,இவரை பரிதாபமாக பார்த்ததில் , இவரே சமையல் வேலையை தொடர ஆரம்பித்தார்.இன்று சீதா அலுவலகம் செல்கிறாளா அல்லது வீட்டிலிருந்து வேலையை ஆரம்பித்துவிட்டாளா என்று தெரியவில்லை.இவர் வந்ததில் இருந்து இன்னமும் மகளின் முகத்தை பார்க்கவில்லை.

பூண்டு ரசம் வைத்து,கத்திரிக்காய் -வெங்காயம் போட்டு வதக்கல் செய்தார். ஏற்கனவே முருங்கைக்காய் சாம்பார் செய்து வைக்கப் பட்டிருக்க விஞ்சிப்போன பசியில் தட்டில் தேவையானவற்றை போட்டுக்கொண்டு வெளியே டைனிங் டேபிளில் போய் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்.அப்போதுதான் லேசாக யோசனை தெளிந்தவளாக ராதா இவரிடம் சாவதானமாக,”நீங்களே சமைச்சிட்டீங்களா… ஓ ..சாப்பிடவும் ஆரம்பிச்சாச்சா..சரி..சரி..”என்றுவிட்டு அடுக்களைக்குள் சென்று கணவர் சமைத்து வைத்த பதார்த்தங்களை டேபிளில் கொணர்ந்து அடுக்கினாள் .அதே சமயம் சீதாவும் அலுவலகம் செல்ல தயாராகி ஹாலுக்கு வந்துவிட்டாள் .

அப்பாவும் மகளும் சாப்பிட்டு முடிக்கவும் சீதா ” அப்பா.. நீங்க இன்னிக்கு ஊருக்கு போகணும் தானே?எல்லாம் தயாரா.. “என்று கேட்டவள் ,”ப்பா.. உங்கள நானே ஆபிஸ்ல விட்டுடறேன். கிளம்புங்க.” என்றுவிட்டாள் . இருவரும் கிளம்பியவுடன் ராதாவும் தனது யோசனைகளில் மூழ்க ஆரம்பித்துவிட்டாள் .

கொஞ்ச நேரத்தில் எதிர்த்த வீட்டு கதவு பூட்டப்படும் சப்தம் கேட்டது. இன்று அந்த பையனிடம் ‘இனி என்னோட பொண்ணோட பேசாதே”என்று சொல்லிவிடும் வேகத்தில் ராதா தமது வீட்டில் கதவை திறந்து கொண்டு செல்வதற்குள் எதிர்த்த வீட்டு பையன் அங்கிருந்து சென்றுவிட்டான். கோவத்தை மரியாக்க முடியாமல் கதவை சாற்றிக்கொண்டு வந்து அங்கிருக்கும் கதிரையில் அமர்ந்துகொண்டு ராதா புலம்ப ஆரம்பித்து விட்டாள் .

நடுவில் ராதாவின் தோழிகள் சிலர் அழைக்க அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்ததில் மனம் கொஞ்சம் தெளிந்தது.ஆனாலும்,இதற்கெல்லாம் என்ன முடிவு என்று மனதில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. விளைவு அந்த வார இறுதியில் சீதாவை பெண் பார்க்கவென்று ஒரு குடும்பம் வந்தது. முன்பே என்றால் சீதா வந்திருக்கும் வரனை பற்றி கொஞ்சமாவது சிந்தித்து இருப்பாளோ என்னவோ… இப்போது அவள் மனதில் புதியதாக முளை விட்டிருக்கும் ரகுவரன் மீதான காதலும்,பூமாவின் மீதான பாசமும் சீதாவை யோசிக்க விடவில்லை.மாறாக ,”அப்பா இங்கே இல்லாத பொழுது இந்தமாதிரி சீன்ஸ் வேணாம்மா.அதோடு இந்த பையன் என்னோட எதிர்ப்பார்ப்புக்கு இல்ல”என்றுவிட்டாள் சீதா.

சீதா இப்படித்தான் சொல்வாள் என்று எதிர்பார்த்துதான் இருந்தாள் ராதா. உண்மையில் வந்திருந்த குடும்பம் கொஞ்சம் சுமார்தான். மணமகன் அதிகமாக படிக்கவில்லை.பேச்சும் அவ்வளவாக சரியாக இல்லை. சீதாவுக்கு ஏற்கனவே கல்யாண விஷயத்தில் பெரிய கனவுகள் இல்லை. மணமகன் நல்லவனாக இருக்க வேண்டும்.என் சம்பளம்,படிப்பு இதெல்லாம் விஷயமே இல்லை என்பது தான் அவளது நிலைப்பாடாக இருந்திருக்கிறது. இந்த மணமகனின் பார்வையே சரி இல்லை. இவளை மேலிருந்து கீழ் வரை அவன் பார்த்த அப்பட்டமான பார்வை இவளுக்கு அருவருப்பை கொடுத்தது.அதிலும்,அவன் பேசிய பேச்சு..நினைத்தாலே பெண்ணுக்கு உமட்டியது .

அந்த கோவத்தை வார்தைகளாக்கி அம்மாவுக்கே திருப்பிவிட்டாள் . ஏனோ கண்களில் நீர் முட்டியது. தோழமையாக சாய்ந்து கொள்ள ஒரு பலமான தோளை தேடியது அவள் மனம். மொட்டை மாடியில் இரவின் இருளில் நின்றுகொண்டு அகண்ட வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் சீதா. பூமாவை சுதா வீட்டில் விட்டுவிட்டு வந்திருந்தான் ரகுவரன். அவனது தங்கை வெகுநாட்களாக கேட்டுக்கொண்டிருந்தாள்.”பூமாவை ஒருநாளாவது இங்கே விடு அண்ணா.நாங்க பார்த்துக்கறோம்.அவளுக்கும் உன்னை தவிர வேறே மனுஷங்களோட இருக்கவும்,பழகவும் தெரியணும். நிறைய மனுஷங்களோட அவ இருந்தா தான்,தன்னை சுற்றி மனுஷங்க இருக்காங்க.ஆபத்து இல்லன்னு அவளுக்கு மனஸுக்குள்ள நம்பிக்கை வரும் ” என்று வற்புறுத்தி பலமுறை சொல்லி,இப்போதுதான் ரகு மனம் இறங்கி வந்திருக்கிறான். அங்கே இருக்கும் குழந்தைகளோடு பூமாவும் சேர்ந்துகொள்ள ,

“நீ கிளம்பு ரகுண்ணா .அவளை நாங்க சமாளிச்சுக்கறோம்.நாளைக்கு சாயங்காலம் வந்து கூட்டிட்டு போ. கவலை படாதே.”என்று சொல்லி சாப்பிட வைத்து அனுப்பி வைத்தாள் அவனின் தங்கை.

இங்கே வீட்டுக்கு வந்தவனுக்கு ஒன்றும் ஓடவில்லை. கொஞ்சநேரம் காற்று வாங்கலாம் என்றுதான் அவனும் மொட்டை மாடிக்கு வந்தான்.அங்கே பார்த்தால் ஏற்கனவே சீதா கைப்பிடி சுவரில் சாய்ந்து கொண்டு வானத்தை வெறித்துக்கொண்டு நின்றிருந்தாள். இதை ரகு எதிர்பார்த்திருக்கவில்லை.பேசலாமா..வேணாமா..என்று யோசித்துக் கொண்டே பெண்ணின் அருகே சென்றவனின் வருகையை உணர்ந்த சீதா அவனை எதுவும் கேட்கவும் அனுமதிக்காமல், அவனருகே சென்று அவனது தோளில் சாய்ந்து கொண்டாள் .அவளின் கண்ணீரை உணர்ந்தவனுக்கு கேட்க எதுவும் தோன்றவில்லை.அவளின் உடல்மொழி , சொன்ன விஷயத்தில் அமைதியாகி விட்டான்.அவளுக்கு இப்போது தேவை ஆறுதலும் தோழமையும் தான் என்று புரிந்தவன் அசையாமல் நின்றிருந்தான். சற்று நேரத்தில் தெளிந்தவள்,”சாரி எல்லாம் சொல்ல மாட்டேன். தாங்க்ஸ் சொல்லவும் மாட்டேன்.நீங்கன்னு தெரிந்து தான் சாஞ்சுகிட்டேன். இப்போ ஐ பீல் பெட்டெர்.”என்றுவிட்டு கீழே இறங்கி சென்றுவிட்டாள். ரகு பெரியதாக எதுவும் அலட்டிக்கொள்ளவில்லை. அவளது கண்ணீர் ஈரம் அவன் சட்டையில் பார்த்ததில் அவனுக்கு கொஞ்சம் ஒருமாதிரி இருந்தது.இவளுக்கு என்ன பிரச்சனையாக இருக்கக் கூடும் என்று யோசித்துக்கொண்டே கொஞ்சநேரம் அங்கே இருந்தவன் பிறகு கீழே இறங்கி வந்துவிட்டான்.

அதற்குப்பிறகு வந்த நாட்களில் ரகு ,பூமா இருவரையுமே சீதாவின் கண்களில் படவில்லை. பூமாவுக்கு பள்ளிக்கூடம் ஆரம்பித்திருந்தது.விடுமுறை தினங்களில் பூமாவை தங்கையின் வீட்டில் விட்டுவிட்டு தனது வேலைகளை பார்க்க தொடங்கி இருந்தான் ரகு .அவன் தங்கள் போர்ஷனுக்குள் நுழைந்தவுடன் வாசல் கதவை சாற்றிவிடுவான்.சீதாவுக்கு அலுவலக வேலை அதிகமானது.நடுவில் ஒருவாரம் பெங்களூரு வேறு சென்றுவிட்டு வந்தாள் .நாட்கள் வேகமாக கடந்தது.சீதாவின் மனதில் ரகுவின் நினைவுகள் இன்னமும் இறுக்கியது. தள்ளி இருக்கும் பொழுது இன்னமும் மனம் அவனை தேடியது.இத்தனைக்கும் அவன் சிரித்துக் கூட இவள் பார்த்தது இல்லை. நின்று அவனுடன் பேசிய விஷயங்கள் சொற்பமே! இவன் எப்படி தனது மனதில் நுழைந்தான் என்று புரியவில்லை.வேறு எந்த ஆணிடமும் தோன்றாத உணர்வு.

இவனுடன் தனது வாழ்நாள் முழுவதும் இருக்கவேண்டும் என்று தவிப்பு.எவ்வளவோ வருஷங்கள் கழித்து இப்படி ஒரு உணர்வை மனதில் அனுபவிக்கிறாள். லியோ உடனான நாட்களில் கூட இப்படி தோன்றியது இல்லை. பூமா இவளுக்கு அந்நியமாக தோன்றவே இல்லை.எல்லாவற்றையும் யோசித்து சுய ஆராய்ச்சியில் இறங்கியிருந்தாள் பெண்.

சீதாவுக்கு ,ரகுவின் மீதான தனது காதல் உள்ளங்கை நெல்லிக்கனியாக நன்றாகவே புரிகிறது.மேற்கொண்டு இதை எப்படி கொண்டு செல்வது என்றுதான் தெரியவில்லை.இன்னமும் பெண் முதலில் காதலை சொல்வது இரண்டாம் பட்சமாகத்தான் பார்க்கப்படுகிறது.அதிலும் திருமணம் ஆகி, மனைவியை இழந்து கையில் ஒரு பெண் குழந்தையுடன் இருக்கும் ஆணை ஒருபெண் திருமணம் செய்துகொள்ள ஆசை படுகிறாள் என்றால் …குழப்பம் சீதாவின் மூளையை தின்றது.

அப்பாவிடம் தனது மனக்குழப்பத்தை சொல்லலாம் என்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தது பெண்.அந்த சந்தர்ப்பம் விரைவிலேயே கிடைக்கவும்,கூடவே அவள் எதிர்ப்பார்க்காத ஒரு விஷயமும் நடந்தது. அது அவள் வாழ்க்கையின் புதிய பதிப்பா..இல்லை பெரும் பாதிப்பா என்று ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!