Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ – 25 (நிறைவு)

அத்தியாயம் :25
அதிகாலை மூன்று மணி. அறையின் ஜன்னல் திரைகளைக் கிழித்துக் கொண்டு  குளிர்ந்த காற்று உள்ளே நுழைந்தது.  பட்டு மெத்தையில் ஒரு ஓரமாய் சுருண்டு படுத்திருந்த மீரா, படுக்கையின் ஒருபுறம் ஏற்பட்ட அழுத்தத்திலும், இரும்புப் பூட்ஸ் கால்களின் கணத்த சத்தத்திலும் சட்டென்று விழித்தாள்.


Advertisement

அறையில் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்த அந்த மங்கலான இருட்டிலும், வர்மன் தன் காக்கிச் சீருடையை அணிந்து, அதன் மேல் கனமான, கரும் சாம்பல் நிற புல்லட் புரூஃப் ஜாக்கெட்டை மாட்டி, அதன் லேட்ச்களை ‘க்ளிக் க்ளிக்’ என்று  இறுக்கிக் கொண்டிருப்பதை அவளது கண்கள் கண்டன.
அவனது இடுப்புப் பெல்ட்டில் கனத்த ரிவால்வர் துப்பாக்கியும், எக்ஸ்ட்ரா தோட்டாக்களும்  மெட்டாலிக் ஒலியுடன் ஏறி அமர்ந்தன.

Advertisement

Advertisement

நேற்றிரவு அவளைக் கோபமாய் கடிந்த  வர்மனின் முகம் இன்னும் அதே ஆத்திரத்துடனும், ரணமான ஈகோவுடனும் தான் இருந்தது.
மீரா மெல்ல மெத்தையை விட்டு எழுந்து அவன் அருகே வந்தாள். அவளது குரலில் நடுக்கம் இருந்தாலும், ஒரு மனைவியின் தவிப்பு மேலோங்கியிருந்தது.

Advertisement

“வர்மன்… இந்த அதிகாலை நேரத்துல புல்லட் புரூஃப் ஜாக்கெட்லாம் போட்டுட்டு எங்க போறீங்க? என்ன விஷயம் வர்மன்?” என்று அவனது கைகளைப் பற்றச் சென்றாள்.
அவளது கையைத் தட்டிவிட்டு, ஒரு அந்நியனைப் போல அவளைப் பார்த்தான் வர்மன்.
“நான் எங்க போனா உனக்கென்ன? ஒரு எஸ்பி அவனோட டியூட்டிக்குத் தான் போவான். அதை உன்கிட்ட சொல்லணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை.”
மீரா தீர்க்கமானாள்.
“ஒரு கலெக்டரா கேக்கிறேன். யூ ஆர் சப்போஸ் ட்டு ஆன்ஸர்! “
” ஓஹோ! ஒரு கலெக்டருக்கு என் ரூமில என்னடி வேலை…??”
“மிஷன் முடிச்சுட்டு ரிபோர்ட் தர்றேன் பார்த்துக்கோங்க கலெக்டர் மேடம்…”
மீராவின் கண்களில் நீர் முட்டியது.  “வர்மன், ப்ளீஸ்… சண்டையெல்லாம் அப்புறம் வச்சுக்கலாம். ஆனா நீங்க எங்க போறீங்க, எப்படி இருக்கீங்கன்னு எனக்குத் தெரியணும். ஒரு மனைவியா உங்க இருப்பிடம்,
வேர்அபவுட்ஸ்  எனக்குத் தெரியலைன்னா… நீங்க எங்க இருக்கீங்கன்னே தெரியாம என் மனசு எவ்வளவு தவிக்கும், நான் எவ்வளவு பதற்றமாவேன் என்று உங்களுக்குப் புரியலையா?” என
“நீ பதறுறதற்கு நான் உன் பதிமூனு வயசு வீரன் இல்ல …. வர்மன்!” என்று
கதவை அதிர மூடிவிட்டுப் புயலென வெளியேறினான்.
அவளது அந்தத் தவிப்பான முகமும், “நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரியாம நான் பதற்றமாவேன்” என்ற வார்த்தைகளும் அவனது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன. ஆனால், அவனது கோபம் அதைத் தூரத் தள்ளிவிட்டு, ஜீப்பை நோக்கி அவனை ஓட்டின.
காலை ஆறு மணி.
கம்பம் – குமுளி மலைப்பாதையின் விளிம்பில், முல்லைப் பெரியாற்றின் பனிமூட்டம் அடர்ந்து படிந்திருந்தது.
அந்த மலைச்சரிவின் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள், எஸ்பி வர்மன் தன் சிறப்பு அதிரடிப்படையுடன் பதுங்கியிருந்தான். அவனது அகன்ற மார்பில் இறுக்கப்பட்டிருந்த புல்லட் புரூஃப் ஜாக்கெட்  பனித்துளிகளால் நனைந்து மினுமினுத்தது. அவனது விரல்கள் துப்பாக்கியின் குளிர்ந்த மெட்டல் கைப்பிடியை இறுக்கமாகப் பற்றியிருக்க, கண்கள் அந்த வளைவுப் பாதையையே உற்று நோக்கிக் கொண்டிருந்தன.
 திடீரென்று, அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒரு பிரம்மாண்டமான இன்ஜினின் கர்ஜனை மலைப்பாதையின் கீழ் அடுக்கிலிருந்து கேட்டது.
பனிமூட்டத்தை ஊடுருவி, இரண்டு மஞ்சள் நிற ஹெட்லைட் வெளிச்சக் கற்றைகள் காட்டை நனைத்தன. அதுதான் அந்த கன்டைனர் லாரி! தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த சோழர் காலத்து ஐம்பொன் சிலைகளையும், விலைமதிப்பற்ற வரலாற்றுச் சின்னங்களையும் கேரளா எல்லைக்குக் கடத்திக் கொண்டு பாயும் மரண வாகனம்.
அவர்களுக்கு இன்சைடர் லீக் என இன்ஃபார்மர் அறிவித்தது இதைத்தான்!
லாரி செங்குத்தான வளைவில் திரும்பிய அந்த மில்லிசெகண்டில், வர்மன் தன் கையை உயர்த்தி சமிஞ்கை செய்தான்.
மூவ்! மூவ்! மூவ்!”
வர்மனின் அதிரடிப்படை வாகனங்கள் பனிமூட்டத்தைக் கிழித்துக் கொண்டு, லாரியின் முன்பக்கமும் பின்பக்கமும் குறுக்காகப் பாய்ந்து சாலையை லாக் செய்தன. லாரியின் பிரேக் கட்டைகள் அலறி, சக்கரங்கள் தார்ச் சாலையில் ரப்பர் புகையைக் கக்கின.
“போலீஸ்! யாரும் அசையக் கூடாது!”
ஆயுதம் ஏந்திய கமாண்டோக்கள் லாரியைச் சூழ்ந்து கொள்ள, வர்மன் சிறுத்தையைப் போலப் பாய்ந்து சென்று டிரைவர் பக்கக் கதவை ஒரே இழுப்பில் உடைத்துத் திறந்தான்.
டிஎஸ்பியும் ஏறி வர
டிரைவரையும் அவனது உதவியாளரையும் கீழே தூக்கி வீசினர்.
லாரியின் கன்டைனர் கதவுகள் திறக்கப்பட்டன. உள்ளே, சாதாரணக் காய்கறி மூட்டைகளும், தக்காளிப் பெட்டிகளும் அடுக்கப்பட்டிருந்தன. ஆனால், வர்மனின் கழுகுப் பார்வை சாதாரணமாக ஏமாந்துவிடாது. அவன் உள்ளே நுழைந்து, அந்த மூட்டைகளை ஆக்ரோஷமாகத் தூக்கி எறிந்தான்.
அங்கே… கன்டைனரின் உள்பகுதியில் ஒரு ரகசிய இரும்பு கம்பார்ட்மென்ட் அமைக்கப்பட்டிருந்தது. அதைத் தகர்த்துத் திறந்தபோது, உள்ளே இருந்த காட்சி வர்மனின் கண்களில் தீயை மூட்டியது.
பட்டுத் துணிகளாலும், வைக்கோலாலும் சுற்றப்பட்டிருந்த சோழர் காலத்து நடராஜர் ஐம்பொன் சிலை, ராஜராஜ சோழன் காலத்து நந்தி தேவர் சிலை மற்றும் ஒரு பிரம்மாண்டமான பச்சை மரகத லிங்கம்! தமிழ்நாட்டின் ஆன்மாவையும், 1000 வருடப் பாரம்பரியத்தையும் வெளிநாட்டிற்கு விற்கத் தயாராக வைத்திருந்தனர்.
“அரெஸ்ட் பண்ணுங்க இந்த நாய்ங்களை!” வர்மனின் குரல் அந்தப் பள்ளத்தாக்கையே அதிர வைத்தது.
ஆனால்… வர்மன் எதிர்பார்த்த பதற்றமோ, பயமோ அந்த லாரி டிரைவரின் முகத்தில் இல்லை. அவன் தரையில் மண்டியிட்டுக் கிடந்தாலும், தன் உதட்டோரம் ஒரு வக்கிரமான சுழிப்போடு வர்மனைப் பார்த்துப் பேய்த்தனமாகச் சிரித்தான்.  அவனது அந்தச் சிரிப்பு வர்மனின் நெஞ்சில் ஒரு இனம் புரியாத விபரீத அதிர்வை ஏற்படுத்தியது.
அவன் சாவகாசமாகத் தன் பாக்கெட்டில் இருந்த ஒரு சாட்டிலைட் போனை எடுத்து, வர்மனை நோக்கி நீட்டினான்.
“போனை வாங்குங்க எஸ்பி சார்… உங்ககிட்ட ஒருத்தர் பேசணுமாம். பேசினா… இந்தச் சிலையெல்லாம் உங்களுக்குச் சாதாரண களிமண் பொம்மையாத் தெரியும்,” என்றான் நையாண்டியுடன்.
வர்மனின் கைகள் துப்பாக்கியிலிருந்து மெல்ல விலகி, அந்தப் போனை நோக்கிச் சென்றன. அந்த அதிகாலை குளிரையும் தாண்டி, அவனது நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பத் தொடங்கின. சூழ்நிலை ஒரு நொடியில் மிகக் கொடூரமான நிசப்தத்திற்கு மாறியது.
பனிமூட்டம் அடர்ந்த அந்த மலைப்பாதையில், சாட்டிலைட் போனின் சிக்னல் இரைச்சலையும் தாண்டி, மறுமுனையில் இருந்த கடத்தல் கும்பல் தலைவனின் கரகரப்பான குரல் வர்மனின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது.
” வணக்கம் வர்மன் ஐபிஎஸ்… சிலைகளைப் பிடிச்சுட்டீங்க போலயே,  வாழ்த்துகள்! . “
” யார்ரா நீ?”
” என்னைத் தெரியலையா??”
” பூம்பாறை சாமுண்டிய என்ட்டேர்ந்து பறிச்சியே..”
” டேய்… பலராமா….!”
” நானே தான்! “
” உன்ன உள்ள அனுப்புனேனே”
” உள்ள போனவன் ஜாமீன்ல வந்ததே உனக்காக தான்டா…   நீ ரொம்ப பேச நேரம் இல்ல….இப்போ உன் வீட்டுல உன் அறையில  இருக்கணுமே உன் புதுப் பொண்டாட்டி… கலெக்டர் மீரா வர்மன்… அவ எங்க இருக்கானு தெரியுமா??”
” டேய்…” வர்மன் உறும…
” அவ, உன் அரும பொண்டாட்டி , இப்போ எங்க கஸ்டடியில! “
வர்மனுக்கு சொரேர் என்றது!
மண்டைக்குள் சுத்தியல் இறங்கியது போலானது.
” மீரா…” என வாய் முனுமுனுத்தது.
அவன் தொடர்ந்தான்.
” என்ன சத்தத்த காணோம்?”
“இப்போ என் டிமாண்ட் என்னன்னா… பிடிபட்ட சிலைகளையும் லாரியையும் அப்படியே எங்க ஆட்களிடம் ஒப்படைச்சிட்டு, உன் டீமை கூட்டிட்டு நீ பின்வாங்கணும். இல்லைன்னா… இன்னும் சில மணி நேரத்துல உன் பொண்டாட்டியோட பிணம்தான் உனக்குக் கிடைக்கும்!”
வர்மனின் உடம்பில் இரத்தம் ஒரு நொடி உறைந்து போனது.
“டேய்!!!” அவனது சிம்மக் குரல் அந்த மலைப்பகுதியையே அதிர வைத்தது. “என்னடா உளறுற?! எனக்கு… எனக்கு…. மீராகிட்ட பேசணும்!”
மறுமுனையில் இருந்தவன் வக்கிரமாகச் சிரித்தான். “அவ்வளவு சீக்கிரம் அவளை உனக்குக் காட்ட மாட்டேன் எஸ்பி சார். நான் சொன்ன டிமாண்டுக்குச் சம்மதமான்னு முதல்ல யோசிச்சுச் சொல்லு…”
வர்மனின் நெற்றி நரம்புகள் புடைத்தன. துப்பறியும் மூளை ஒருபுறம் வேலை செய்தாலும், உள்ளுக்குள் பதற்றம் அவனைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்னத் தொடங்கியது. அவன் தன் குரலைத் தட்டுத்தடுமாற விட்டு, ஒரு போலி சரணாகதியை அவர்களுக்குக் காட்ட நினைத்தான்.
“டேய்… நான் நினைச்சா மட்டும் இந்த லாரியை இப்போவே விட்டுட முடியாதுடா. ஒரு கோடி மதிப்புள்ள சிலைகள் பிடிபட்டிருக்குன்னு ஆல்ரெடி கண்ட்ரோல் ரூமுக்குத் தகவல் போயிடுச்சு. நான் என்னோட ஹையர் ஆபீஸர்ஸ்  கிட்ட பேசணும். அவங்ககிட்ட ஏதோ ஒரு பொய் சொல்லி, நெகோஷியேட்  பண்ணி, ஃபைலை மூட எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்!” என்று வர்மன் பதற்றத்துடன் பேசி நேரத்தைக் கடத்த முயன்றான்.
மறுமுனையில் இருந்தவன் வர்மனின் குரலில் இருந்த நடுக்கத்தைக் கேட்டு ஏமாந்தான். ஆனால் அவன் ஏமாளியல்ல.
“உனக்கு நாள் கணக்குல எல்லாம் டைம் தர முடியாது எஸ்பி சார்! உனக்கு அரை நாள் மட்டும்தான் டைம்! இன்னைக்கு மத்தியானத்துக்குள்ள சிலைகளை ரிலீஸ் பண்ணுற வழியைப் பாரு… இல்லைன்னா உன் மீராவோட உயிரில்லாத உடலைத்தான் தூக்குவ…”என்று கூறிவிட்டுப் போனைத் துண்டித்தான்.
வர்மன் வெளிறிப்போனான்.
இதயம் வலித்தது….!
டி எஸ்பி “சார் ..” என ஓடி வந்தார்.
“மீராவ தூக்கிட்டாங்க அண்ணாதுரை!”
” கலெக்டர யா??!!” என அவரும் பதற… வர்மன் தெளிந்தான்!
இது பதறிக்கிடக்கும் நேரமல்ல எனப்புரிந்தது.
” கமான் டீம்.. “என கடகடவென கட்டளைகள் பிறந்தன.
கடத்தல்காரன் கொடுத்த அந்த அரை நாள்  வர்மனுக்கு நரகமாக மாறியது. வர்மன் தன் ஒட்டுமொத்த போலீஸ் படையையும் களமிறக்கினான். கடத்தல்காரர்கள் மீராவை நகருக்கு வெளியே இருக்கும் ஏதோ ஒரு பாழடைந்த இடத்தில் தான் மறைத்து வைத்திருப்பார்கள் என்று வர்மன் கணித்தான்.
போலீஸ் டீம்கள் பிரிக்கப்பட்டு, தேனியை சுற்றியுள்ள அனைத்துப் அதாவது பழைய குடோன்கள் (Godowns), கைவிடப்பட்ட கிடங்குகள் (Warehouses) மற்றும் மனித நடமாட்டமற்ற ஆள் அரவமற்ற பகுதிகள் (Remote Places) அனைத்திலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. வர்மனே நேராகச் சென்று பல ரகசிய இடங்களின் கதவுகளை உடைத்துத் தேடினான். ஆனால், எங்கு தேடியும் மீரா அங்கே இல்லை!
நேரம்… நொடியும் விநாடியும் முட்களாகக் கரையக் கரைய, வர்மனின் பதற்றம் உச்சத்தைத் தொட்டது.
அப்போதுதான், அந்த நரக நிமிடங்களில் வர்மனின் நினைவலைகள் பின்னோக்கிப் பாய்ந்தன.  அதிகாலை அவர்களது அறையில் அவளுக்கும் அவனுக்கும் இடையே நடந்த அந்த காரசாரமான விவாதம் அவனது மனத்திரையில் நிழலாடியது. அவன் கோபத்தின் உச்சத்தில் அவளை வார்த்தைகளால் காயப்படுத்தியபோது, அவள் கண்கள் கலங்கி, நெஞ்சு உருக அவனிடம் சொன்ன அந்த வார்த்தைகள் வர்மனின் நெஞ்சில் இப்போது சம்மட்டியாக இறங்கின:
” வர்மன்… என் மேல இருக்கிற கோபத்துல என்னை இப்படித் தவிக்கவிடுறீங்களே… உங்க இருப்பிடம்  என்னன்னே புரியாம  நான் தவிக்கனுமா?”
“நீ கேட்ட அந்த கேள்வி … இப்போ நான் அந்த   நிலைமைல தான் இருக்கேன் மீரா… உன் நினைப்பு என்ன பைத்தியமாக்குது டீ… !!.. “
அவள்  சாபமாகச் சொல்லவில்லை, ஒரு தீர்க்கதரிசியாகத் தன் தவிப்பைச் சொல்லியிருக்கிறாள் என்பதை உணர்ந்த வர்மனுக்கு ஒட்டுமொத்த உலகமும் ஸ்தம்பித்தது போல இருந்தது.
“மீரா… நீ சொன்னது பலிச்சிடுச்சுடி… நீ இப்போ எங்க இருக்க? எந்த இருட்டுல இருக்க? உன் இருப்பிடம் தெரியாம இப்போ என் மனசு நரக வேதனைப்படுதே கண்ணம்மா… என்னை மன்னிச்சிடுடி…” என்று ஒரு சிங்கத்தைப் போன்ற அந்த வீரனின்  இதயம் நொந்து கிடந்தது.
தன் கோபத்தால் அவளைக் காயப்படுத்தி, அவளது இருப்பிடத்தையே தொலைத்துவிட்டு நிற்கிறோமே என உள்ளே அரற்றினான்.
“அவளின்றி தானா…..???!!” என்னவெல்லாமோ  யோசித்தான் வர்மன்.
சரியாகக் கொடுக்கப்பட்ட அரை நாள் கெடு முடிவடையும் தருவாயில், அந்தச் சாட்டிலைட் போன் மீண்டும் அடித்தது. வர்மன் போனை எடுத்த உடனே,
“டேய்… நான் ஹையர் ஆபீஸர்ஸ் கிட்ட பேசிட்டேன். சிலைகளை விடுவிக்க ஏற்பாடு பண்ணிட்டேன். ஆனா, மீரா உயிரோடதான் இருக்காளான்னு எனக்குத் தெரியணும். அவளை எனக்குக் காட்டு!” என்று கத்தினான்.
” அதெல்லாம் முடியாது”
“உன் சிலையெல்லாம் … ரெய்டட் கண்டெய்னரோட நான் விடனும்ல…
அத விடுறதுக்கு முன்ன நான் என் மனைவிய , அவ எந்த நிலைல இருக்கான்னு பார்க்கனும்…”
மறுமுனையில் இருந்தவன்… ஒரு நிமிடம் யோசித்து,
“சரி, இந்தா பாத்துக்கோ,” என்று வீடியோ கால் லைனை ஆன் செய்தான்.
அந்த  வீடியோ கால் மிக மிகக் குறுகியதாக  இருந்தது. கேமரா ஆன் ஆன அடுத்த இரண்டு விநாடிகளில், இருட்டான ஒரு பின்னணியில் மீராவின் முகம் மங்கலாகத் தெரிந்தது.
கை கால்கள் கட்டப்பட்டு வாயில் ப்ளாஸ்திரி ஓட்டப்பட்டு காணப்பட்டாள்.
” மீரா…”
“வர்மன்…” இருவரது விழிகளும் கலந்தது… வர்மன் கலங்கினான். மீரா அவனையே பார்த்திருந்தாள்… திடமாக…!
சட்டெனக் கட் ஆனது.
இருந்தாலும், அந்த இரண்டு விநாடி காட்சியில் வர்மனின் துப்பறியும் கண்கள் சில முக்கிய க்ளூக்களைப் பிடித்தன! அந்த இருட்டிலும் மீராவின் தலைமுடி கற்றைகள் காற்றில் பலமாகப் பறந்து கொண்டிருந்தன. கேமரா படுவேகமாகக் குலுங்கியதுடன், ஒரு விசித்திரமான அதிர்வும், பின்னணியில் இரும்பு இரைச்சலும் கேட்டது.
அவள் ஒரு குடோனிலோ அல்லது அறையிலோ அடைக்கப்படவில்லை… அவள் ஒரு நகரும் கன்டைனர் லாரிக்குள்  அடைக்கப்பட்டுப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதை அந்த அதிர்வும் பறக்கும் கூந்தலும் அவனுக்கு நூறு சதவீதம் உறுதி செய்தன!
“டொக் ” கால் கட்டானது.
” போதுமா ??” என்றான் கடத்தல் காரன்
வீடியோ கால் கட் ஆனதும், வர்மன் மீண்டும் ஆடியோ காலில் வந்த கடத்தல்காரனிடம் பதறுவது போல நடித்தான். “டேய்… டேய்… ப்ளீஸ்டா!எனக்கு அவ முகமே சரியா தெரியல! அவளை அடிச்சீங்களாடா?? …. அவ முகம் ஏதோ காயம்பட்ட மாதிரி மங்கலா தெரிஞ்சுது. நான் மீராவோட முகத்தை நல்லா பாக்கணும்! . அவ முகம் முழுசா நல்லா தெரிஞ்சாதான் நான் சிலைகளை ஒப்படைப்பேன். ப்ளீஸ்டா, இன்னொரு தடவை காலை ஆன் பண்ணு!” என்று வர்மன் கெஞ்சுவது போலத் தன் குரலை மாற்றிக் கேட்டான்.
மறுமுனையில் இருந்தவன் வர்மன் முற்றிலும் பயந்து நடுங்குகிறான் என்று நம்பி வக்கிர சந்தோஷம் அடைந்தான்.
“சரிடா எஸ்பி … உன் பொண்டாட்டி முகத்தை இப்போ நல்லா பாத்துக்கோ!”என்று கூறி மறுபுறம் இரண்டாவது வீடியோ காலை ஆன் செய்தான்.
இந்த முறை வீடியோ கால் சற்று நீளமாக வந்தது. வர்மன் கணித்தது போலவே, அது ஒரு நகரும் கன்டைனரின் இருட்டுப் பகுதி. மீராவின் கன்னத்தின் ஓரத்தில் லேசான ரத்தக் கசிவு இருந்தது… அவளை அவர்கள் தாக்கியிருந்தனர்!
வர்மனுக்கு “ஐயோ…” என்றிருந்தது.
மீராவுக்கு மீண்டும் வர்மனை பார்த்ததும் அவளது விழிகளில் ஒரு ஆசுவாசம் தெரிந்தது.
ஆனால், அந்தத் துயரத்திலும் அவளது ஐஏஎஸ் மூளை வேலை செய்தது. தன் கணவனின் கழுகுப் பார்வையின் மேல் அவளுக்கு அசாத்திய நம்பிக்கை இருந்தது. அவன் அவளுடைய ராஜாளி ஆயிற்றே!
அவள் நேராகக் கேமராவை உற்றுப் பார்த்து, தன் கண்களை விசித்திரமாகச் சிமிட்டத் துவங்கினாள்.
சில நொடிகள் நீண்ட சிமிட்டல், சில நொடிகள் குறுகிய சிமிட்டல் …. வர்மன் உறைந்து போனான்.
அது மோர்ஸ் கோட் (Morse Code) !
சிவில் சர்வீஸ் பயிற்சியின் போது அவர்கள் கற்றுக் கொண்ட ரகசிய சமிஞ்கை முறை!
அவளது கண்கள் நீண்ட நேரம் மூடித் திறந்தும் (Dash), குறுகிய நொடிகளில் சிமிட்டியும் (Dot) காட்டிய அந்த மோர்ஸ் கோடை வர்மனின் மூளை மின்னல் வேகத்தில் பதிவெடுத்தது.
ஒரு நீண்ட சிமிட்டல் பின் நான்கு குறுகிய சிமிட்டல் கள்
“− · · · ·”
ஒரு Pause.
ஐந்து நீண்ட சிமிட்டல்கள்
“− − − − −”
ஒரு Pause.
இரு நீண்ட சிமிட்டல்கள இரு குறுகிய சிமிட்டல்கள்
“− − · ·”
மொத்தம் பதினான்கு சிக்னல்ஸ்.
அடுத்த நொடி, கடத்தல்காரன் அவளது போனைப் பறித்துக் கட் செய்தான்.
வர்மன் பரபரத்தான்.
உடனடியாக அவனது மூளை
மொழிபெயர்த்தது.
” − · · · · = 6″
ஒரு Pause.
“− − − − − = 0”
ஒரு Pause.
“− − · · = z”
60 Z……
T N – 6 0 – Z ! அது கனரக வாகனங்களின் நம்பர் சீரிஸ்.
வர்மனுக்கு லாரியின் நம்பர் சீரிஸ் கிடைத்துவிட்டது!
TN 60 Z — அது போடிநாயக்கனூர் வட்டாரப் பதிவெண் கொண்ட ஒரு வாகனத்தின் நம்பர் சீரிஸ்! வர்மன் உடனடியாக தேனி ஆர்டிஓ (RTO) மற்றும் செக் போஸ்ட் கண்ட்ரோல் ரூமைத் தொடர்புகொண்டான்.
“போடி சீரிஸ்ல `TN 60 Z` கொண்ட, ஜிபிஎஸ் ஆஃப் செய்யப்பட்ட கன்டைனர் லாரிகள் எத்தனை இருக்கு?” என்று கத்தினான்.
“சார், மொத்தம் 8 லாரிகள் இருக்கு சார். அதுல ஒரு லாரி மட்டும் நேத்து செக் போஸ்ட்டைக் கடந்து கேரளா பார்டரை நோக்கி அதிவேகமா போயிருக்கு. அதோட சிசிடிவி விசுவல்ஸ் இதோ அனுப்புறோம்,” என்றனர்.
வீடியோவை பார்த்த வர்மனின் கண்கள் சிவந்தன. அதுதான் அந்த லாரி! அவனது கழுகுப் பார்வை இலக்கைத் துல்லியமாகக் கண்டுபிடித்துவிட்டது.
“டீம்… ஃபாலோ  பண்ணுங்க. நான்  ஷார்ட்கட்ல போறேன்!” என்று தன் ஸ்போர்ட்ஸ் பைக்கை எடுத்துக்கொண்டு, மலைப்பாதையின் செங்குத்தான வளைவுகளில் 120 கிமீ வேகத்தில் பறந்தான் வர்மன்.
கேரளா எல்லையின் அடர்ந்த காட்டுப் பாதையில் அந்தப் பிரம்மாண்டமான கன்டைனர் லாரி போய்க் கொண்டிருந்தது. திடீரென்று, காட்டின் நடுவே இருந்த ஒரு உயரமான பாறையிலிருந்து, மின்னல் வெட்டுவதைப் போல வர்மனின் பைக் காற்றில் பாய்ந்து வந்து, லாரியின் முன்பக்கமாக லேண்ட் ஆனது!
சக்கரங்கள் அலற லாரி நின்றது. வர்மன் பைக்கை கீழே தள்ளிவிட்டு, ஒரு சிறுத்தையாக லாரியை நோக்கி நடந்தான். அவனது காக்கிச் சீருடையின் மேல் இருந்த புல்லட் புரூஃப் ஜாக்கெட் அவனுக்கு ஒரு அசாத்தியமான ராணுவத் தோற்றத்தைத் தந்திருந்தது.
கன்டைனரிலிருந்து ஆயுதங்களுடன் குதித்த ஐந்து கடத்தல்காரர்கள் வர்மனைச் சூழ்ந்து துப்பாக்கியால் சுட்டனர். தோட்டாக்கள் வர்மனின் புல்லட் புரூஃப் ஜாக்கெட்டில் பட்டு ‘டங் டங்’ என்று தீப்பொறியுடன் தெறித்து விழுந்தன. அவனுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை! கடத்தல்காரர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்ற அந்த மில்லிசெகண்ட் கேப்பில், வர்மன் ஆக்ரோஷத்தின் உச்சத்துக்கே போயிருந்தான்.
அது ஒரு  வெறித்தனமான சண்டையாக மாறியது . ஒருவன் கத்தியால் குத்த வர, வர்மன் லாவகமாக விலகி, அவனது கையைப் பிடித்து ஒரே சுழற்று சுழற்றி லாரியின் டயரிலேயே அவனது தலையை மோதச் செய்தான். அவன் மண்டை உடைந்து விழுந்தான். இன்னுமொருவன் பின்னாலிருந்து தாக்க வர, வர்மன் காற்றில் எழும்பி ஒரு அசாத்தியமான சுழல் சுழன்று உதை  கொடுத்தான். அவன் நெஞ்செலும்பு முறிந்து தூரப் போய் விழுந்தான்.
“என் மீராவையாடா கை வச்சீங்க?!” வர்மனின் ஒவ்வொரு இடியும் இரும்புச் சுத்தியலால் அடிப்பது போல இருந்தது. அவனது அகன்ற மார்பும், தோள்களும் காட்டிய ஆவேசத்தில், அடுத்த சில நிமிடங்களில் ஐந்து ரவுடிகளும் ரத்தக் வெள்ளத்தில் தரையில் சுருண்டு கிடந்தனர்.
வர்மன் லாரியின் கன்டைனர் பூட்டைத் தன் துப்பாக்கியால் சுட்டு உடைத்தான். கதவைத் திறந்து உள்ளே பாய்ந்தான்.
உள்ளே, அந்த கும்மிருட்டில் மீராவை,  ஒளியாய்,  வர்மன் கண்டான். அவளது உதட்டின் காயத்தைப் பார்த்துக் கலங்கியபடியே அவளது கட்டுகளை அவிழ்த்த அடுத்த கணமே… மீரா “வர்மன்!!!” என்று  அவனது மார்போடு ஒன்றிக்கொண்டாள். அவனது கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள் . அவளது மெல்லிய உடல் அவனது கனமான புல்லட் புரூஃப் ஜாக்கெட்டோடு அழகாக பொருந்தி இருந்து கொண்டது.
அவளுக்கு அவ்வளவு இதமாக வீடு வந்து சேர்ந்தது போன்ற நிறைவு!
வர்மன் அவளைத் தன் இரு கரங்களால் அப்படியே வாரி அணைத்துக் கொண்டான். அவனது பலமான, அகன்ற மார்போடு அவளது மெல்லிய உடல் ஒடுங்கியிருந்தது அவனுக்கும் ஆத்மார்த்தமாய் அனைத்தும் நீயே என சொல்லாமல் சொல்லியதாக இருந்தது.
அவளது கண்ணீரும், அவிழ்ந்த கூந்தலும் அவனது காக்கிச் சட்டையை நனைத்தன.
“என்னை மன்னிச்சிடு கண்ணம்மா… . உன்னைக் காயப்படுத்திட்டுப் போயிட்டேன். நீ எங்க இருக்கன்னு தெரியாம நான் அனுபவிச்ச அந்த நரகம் இருக்கே… செத்தே போயிருப்பேன்டி நான்,” வர்மனின் குரல் உடைந்து, அவனது கண்களிலிருந்து கண்ணீர் மீராவின் தோள்களில் விழுந்து தெறித்தது.
மீரா அவனது முகத்தைத் தன் கைகளில் ஏந்தி, அவனது கண்ணீரைத் துடைத்தாள். “எனக்குத் தெரியும் வர்மன்… நான் தைரியமா தான் இருந்தேன். என் ராஜாளி என்னை விட்டுடுவாரா என்ன?”
அவளை அப்படியே அள்ளி ஏந்தி கொண்டான்.
லாரியிலிருந்து வெளியே வந்தனர்.
கடத்தல்காரர்களை விலங்கிட்டனர்
. டீம்  கிளம்பினர்.
வர்மன் அவளைத் தன் நெஞ்சோடு அணைத்தபடி, புதியதொரு விடியலை நோக்கித் தன் ஜீப்பிற்கு திரும்பினான்.
வறண்ட அந்த மலைப்பாதையின் நடுவே, அத்தனை ரத்தக் களரிக்கும் மத்தியிலும், அவர்களின் காதல் மீண்டுமொருமுறை தெய்வீகமாய் வென்றிருந்தது.
அவளது மங்கல நாண், அவனது இதயத்துடிப்பின் தாளத்திற்கு ஏற்ப அவனது மார்பில் அசைந்து கொண்டிருக்க, இரு உடலும் ஒரு உயிருமாய் அவர்கள் மனதால் இணைந்திருந்தனர்.
கேரள எல்லையின் மலைப்பாதைகளை எல்லாம் கடந்து, வர்மன் ஓட்டிய அந்த போலீஸ் ஜீப் போடிமெட்டின் ஊசிமுனை வளைவுகளையும் கடந்து கீழே இறங்கியது. சமவெளிப் பகுதி தொடங்கும் அந்தப் பிரதான புள்ளியான  முந்தல்  பகுதியை வண்டி நெருங்கியது.
மலைப்பாதை முடிந்து, போடி-தேனி நெடுஞ்சாலை தொடங்கும் அந்த அடிவாரப் பகுதி அது. ஒருபுறம் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் இருண்ட நிழல்; மறுபுறம் கொட்டக்குடி ஆற்றின் சலசலப்பும், செக்போஸ்ட்டை ஒட்டிய அடர்ந்த தென்னந்தோப்புகளும் அந்த நள்ளிரவில் ஒரு தனித்துவமான அமைதியைத் தந்திருந்தன. மலைகளில் பெய்து ஓய்ந்திருந்த மழையின் ஈரப்பதம் காற்றில் கலந்திருந்தது.
அந்த முந்தல் சோதனைச் சாவடியைத் தாண்டியதும், சாலையோரம் இருந்த அந்த வ்யூபாயின்டில் ஜீப்பை ஓரங்கட்டச் சொல்லி வர்மனின் தோளைத் தொட்டாள் மீரா.
“வர்மன், வண்டியை கொஞ்சம் நிறுத்துங்க…” என்றாள் மெல்லிய குரலில்.
வர்மன் ஜீப்பை நிறுத்தி இன்ஜினை அணைத்தான். சுற்றிலும் காடுகளின் சலசலப்பும், தூரத்துத் தோட்டத்துச் சத்தங்களும் மட்டுமே கேட்டன.
அவ்வளவு அழகான இடம்!
மீராவும் மெதுவாகக் கீழே இறங்கி, வண்டியின் முன் பகுதிக்கு வந்து, அந்த இரும்பு பம்பரில் சாய்ந்து அமர்ந்தாள். அந்த இரவு, மலைகளின் பிரம்மாண்ட பின்னணியில் இன்னும் தீர்க்கமாகக் காட்சி தந்தது.
அவள் வர்மனின் முகத்தைத் உற்று நோக்கினாள்.
” நீங்க  வர்மனா… வீரன் கிட்ட தோற்று நின்னீங்கள்ள??”
“நீ வீரன தான் காதலிச்சன்னு என்ன தள்ளி வச்சீங்கள்ள…??”
” விடும்மா … அதெல்லாம் விதி!”
வர்மன் மனதுள் “ஆனது ஆனது… வீரனும் நானே வர்மனும் நானே… என் லாஜிக் விதண்டாவதம் எல்லாம் போதுமப்பா போதும்!”  என்ற மனநிலைக்கு வந்திருந்தான்.
“உள்ள கன்டெய்னர் லாரில ரொம்ப யோசிச்சு பார்த்தேன் வர்மன்! “
”  என்னை அன்னைக்குக் காப்பாத்திய பையன் எப்படி இருந்தான் வர்மன்?” மீரா தன் மனதிற்குள் பல வருடங்களாகப் பூட்டி வைத்திருந்த ரகசியக் கேள்வியைக் கேட்டாள்.
“என்ன?” வர்மன் புரியாமல் அவளைப் பார்த்தான்.
“அவனோட முகம் எனக்கு  நினைவிருந்ததா??”
வர்மன் திகைத்தான். அவனுக்கு அந்தப் பழைய சம்பவமே ஞாபகத்தில் இல்லை. அவனது கடந்த காலம் ஒரு மூடுபனி போல மறைந்திருந்தது. தன் நினைவுகளைத் துழாவிப் பார்த்தவன், “இல்ல… எனக்கே எதுவும் நினைவில் இல்லை” என்றான் குழப்பத்துடன்.
” எனக்கும் பெருசா அந்த முகம் ஞாபத்தில் இருந்திருக்க வாய்ப்பில்ல ல்ல “???
“குரல்?”
“இல்ல…”
“அவன் உயரம்? நடை? சிரிப்பு?”
ஒன்றுமே ஞாபகத்தில் இல்லை வர்மன்!
வர்மனிடம் எந்தப் பதிலும் இல்லை.
மீரா மெதுவாகச் சிரித்தாள். அவளது இதழ்களின் ஓரத்தில் இருந்த அந்த மெல்லிய ரத்தக் காயம் அவளது சிரிப்பில் இன்னும் அழகாகத் தெரிந்தது.
“ஈவன் ரஞ்சனா கூட அந்தப் பையனோட அடையாளங்களை வச்சு ஏஐ-ல (AI) ஒரு படம் வரையச் சொல்லி என்னைக் கேட்டா… ஆனா நான் அதுக்குச் சம்மதிக்கல… ஏன்னா, என் நினைவில் இருந்ததெல்லாம்…”
அவள் வர்மனின் அருகே இன்னும் ஒரு அடி நெருங்கி வந்தாள். அவனது காக்கிச் சட்டையின் காலரைப் பற்றிக் கொண்டு, அவனது கண்கள் வழியே அவனது ஆன்மாவைத் தொடுவது போல் பேசினாள்…
“ஒரு கரம்பிடித்தல்…. ஒரு கையணைப்பு… ஒரு அரண்… ஒரு பாதுகாப்பு! நான் அன்னைக்கு என்னை
அந்த சித்திரை திருவிழாவில  காப்பாத்தினவனோட முகத்தையோ, அவன் சிறுவனா, மனுஷனா, வீரனான்னோ தேடல வர்மன்… நான் தேடினது ஒரு பாதுகாப்பை!”
“முதன் முதலா பூப்பெய்திய அந்த  வலியில உங்க பாதுகாப்பத்தான்  மனசுக்குள்ள முடிஞ்சுகிட்டேன்
முதன் முதலா பூப்பெய்திய அந்த  வலியில உங்க பாதுகாப்பத்தான்  மனசுக்குள்ள முடிஞ்சுகிட்டேன்.”
“உங்ககிட்ட மட்டுமே  உணர்ந்த அந்த பாதுகாப்ப…. பின்னாடி இத்தன வருஷத்துக்கு அப்புறம் வெவ்வேறு காலகட்டங்கள்ள இந்த பிரபஞ்சம் எனக்கு உணர்த்திட்டே இருந்தது”
” முசோரில ஃப்ரம் டே ஒன்… அன்னைக்கு உங்களை யாருன்னே தெரியாம, வெள்ளை குதிரைல  நீங்க என்னைத் தூக்கினப்போ… அந்த தீண்டல் எனை அசைத்து பார்த்தது”.
அன்னிக்கே  மனசு எச்சரித்தது.. நான் தான் அத புரிஞ்சுக்கல…”
“அப்புறம் கலெக்டரா பூம்பாறையில நான் பள்ளத்துல விழுந்து என்னை நீங்க அள்ளித் தூக்கினப்போ…”
“வாணிஸ்ரீ மில்ஸ்ல பெட்ரோல் குண்டு விழுந்தப்போ… ”
“காலேஜ் ஃபங்ஷன்ல கொடிவீரன் ஸ்பீச் அப்ப, அந்த ரவுடிகளைத் துவம்சம் பண்ணி என்னை உங்க கையோடு சேர்த்து இருந்து காப்பாத்தி வந்து நினைப்போ…”
இந்த பிரபஞ்சம் மீண்டும் மீண்டும் காட்டிட்டே இருந்தது… நீங்க அதே பாதுகாப்ப குடுத்திட்டே இருந்தீங்க…”
” நான் அந்த உங்க அருகாமை ல அரவணைப்புல பாதுகாப்புல ஈர்க்கப்பட்டுட்டே தான் இருந்தேன்….”
” நீங்க சொல்றீங்கள்ள நான் வீரனத்தான் காதலிச்சேன்னு…”
” நான் நினைச்சிருந்தேன்னா உங்கள தவிர்த்திருக்க முடியாதா??”” யோசிச்சு பாருங்க….”
வர்மனுக்கும் தோன்றியது “முசோரி முத்தத்தில் துவங்கி… எத்தனை முறை என் ட்ட நெகிழ்ந்து நெகிழ்ந்து தானே பின் விலகினாள் … நானும் அதை  சுகமான ரணமா அனுபவிச்சேனே!  “
ஈவன், செம்பியனைப் பார்த்து நான் பயந்து, குழம்பி மயங்கி விழுந்தப்போ… நீங்க என்னை அணைச்சு தூக்கினப்போ  கூட… என் இதயத்துக்கு உங்க இதயம் சொல்லிட்டே இருந்தது. அந்த அரவணைப்பு நீங்கதான்னு என் உள்மனசு  எனக்குள்ள சொல்லிக்கிட்டே இருந்தது வர்மன்…”
“நீங்க வர்மனா வந்து புதுசா நிக்கல… எனக்கு இறைவன் தந்த பாதுகாப்பா என்னோடயே இருக்கீங்க… அப்படி வேற யாரையும் நான் வீரன்னு போயிருந்தாலும் உடனே எனக்கு தெளிந்திருக்கும்…”
மீரா சொல்லி முடிக்கும் போது அவளது கண்கள் பனித்திருந்தன.
வர்மன் உணர்ச்சிப் பெருக்கில் அப்படியே உறைந்து நின்றான்.
இப்பொழுது அவன் திண்ணமாய் உணர்ந்திருந்தான்..
கடந்த கால நினைவுகள் அவனுக்குத் தேவையில்லை. அவனது நிகழ்காலமும் எதிர்காலமும் இந்த நொடியில் அவனது கைகளில் இருந்தது.
அவன் வர்மனல்ல … வீரனல்ல…
அவளுக்கென இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்ட  அரண்!
” போதும் டீ போதும்… உன் ஒரு விளக்கமும்  எனக்கு தேவையில்லடி!”
அடுத்த நொடி, வர்மன் அவளைத் தன் இரும்புக் கரங்களால் அள்ளி, தன் அகன்ற மார்போடு மிக இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
அத்தனை மணி நேரப் பிரிவும், மரண பயமும் தங்களுக்குள் தந்த தவிப்பை வார்த்தைகளால் கடத்த முடியாத இருவருமே, வெகுவாக உணர்வுக்குவியலாக மாறி இருந்தனர்.
வர்மன் அவளது நெற்றியிலும், கண்ணீர் வழிந்த கன்னங்களிலும், அவளது இதழ்களின் ஓரத்தில் இருந்த அந்தச் சின்னஞ்சிறு காயத்தின் மீதும் தன் ஆழமான, ஆராதனை முத்தங்களைப் பதித்தான். அவனது முத்தங்களின் தீண்டலில் அவளது உடலின் நடுக்கம் மெல்ல அடங்கியது. மீராவும் அவனது அகன்ற நெற்றியிலும், அவனது கரடுமுரடான கன்னங்களிலும், அவனது இதழ்களிலும் தன் காதலை முத்தங்களாக அள்ளித் தெளித்தாள்.
அந்த முந்தல் அடிவாரத்தின் குளிர்ந்த காற்றில், இருள் சூழ்ந்த அந்தப் பாதையோரத்தில், அவளது மங்கல நாண் அவனது காக்கிச் சட்டையின் ஊடே உரசிக்கொண்டிருக்க,
ஒரு ராஜாளியின் சிறகுகளுக்குள் அடங்கிய ரோஜாப்பூவாக
மீரா அவனோடு கலந்திருந்தாள்.!
நிறைவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!