Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

21. சுபகீதா - ஆகாயமே என் ஆதாரமே

ஆகாயமே என் ஆதாரமே 23

ஆகாயமே என் ஆதாரமே 23

பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை என்ற கவலை என்னை பிடித்து ஆட்டுகிறது. ஒருபொட்டு தூக்கம் வருவது இல்லை என்று ராதா தனது தோழிகளிடம் கூறுவதும் அவர்கள் இவளுக்கு ஆறுதல் கூறுவதும் தொடர்கதையென்று ஆகிப்போனது. எதுவும் மாறுவதாக இல்லை.



Advertisement

ஆரம்பத்தில் ராதா சொல்வதில் இருந்த நம்பகத் தன்மையை கொண்டு நிறைய தோழிகள் தங்கள் பிள்ளைகளின் வரன்,தெரிந்த வட்டத்தில் இருக்கும் நல்ல வரன்கள், என்றெல்லாம் சொன்னார்கள்தான். ஆனால் ராதாவின் எதிர்பார்ப்புகள் அவர்கள் கொண்டுவந்த வரன்களில் பூர்த்தியாகவில்லை. தொடர்ந்து இப்படியே நடக்கவும் இவள் கூறுவதை பரம அக்கறையாக கேட்டுக்கொண்டாலும் ராதா இல்லாத சமயங்களில் இவள் சொல்லும் வார்த்தைகள் தொடங்கி அதற்க்கு இவளது உடல்மொழி என்று எல்லாமே பேசும்பொருளாகவும், கேலிக்கு உரியதாகவும் ஆனது. ராதா இருக்கும் சமயங்களில் பேசுபவர்களின் வார்த்தைகளில் தேன் வழியும்.

Advertisement

ராதாவுக்கும் தன்னை பற்றி சுற்றி இருப்பவர்கள் என்னவெல்லாம் பேசுகிறார்கள் என்று நன்றாகவே தெரியும். தெரியாமல் என்ன! அதற்கெல்லாம் அசருவதோ,பதில் சொல்வதோ அவளுக்கு பிடிக்காத ஒன்று. ஊரென்று இருந்தால் வார்த்தைகள் பேசுவதை தடுக்கவா முடியும்?என்று நம்மையே கேட்பாள் ராதா.

Advertisement

எத்தனையோ உறவுகள் ராதா கிருஷ்ணனின் காது படவே,”பொண்ணு ஓஹோன்னு சம்பாரிக்குறா.அதனால் கல்யாணம் செஞ்சுவைக்க பொண்ண பெத்தவங்களுக்கு இஷ்டம் இல்ல. அப்புறம் அவ்ளோ பணத்துக்கும் ஆடம்பர வாழ்க்கைக்கும் என்ன செய்யுறது?” என்று அங்கலாய்ப்பர்கள்.சில சமயங்களில் ராதாவிடமே எல்லாவற்றையும் பேசிவிட்டு “நீ என்ன சொல்றே ராதா?” என்று அபிப்ராயம் கேட்கும் நிகழ்வுகளும் உண்டு.

Advertisement

ராதா எதற்கும் அலட்டிக் கொள்ளவே மாட்டாள்.தன்னை பற்றி,தன்னிடமே வம்பு பேசியவர்களுடன் கூட முகம் திருப்பாமல் பேசிவிட்டு வருவாள்.அவர்களுக்குத்தான் சங்கடமாக இருக்கும். இப்போது வரை இவை எதுவுமே மாறவில்லை.

மாறுவது சீதாவின் மனதும்,வயதும் தான்.திருமணம் ஆகாமல்,கட்டுக்குலையாமல் இருக்கே சீதா “என்று சில தோழிகள் கிண்டல் அடிக்கும் பொழுது சீதா மோசமாக உணர்கிறாள். இதோ இப்போதும் சீதாவுக்கும் ராதாவுக்கும் இடையே பெரிய போரே நடக்கிறது.

“நீ இனிமே அந்த எதிர்த்தவீட்டு குட்டி ஷைத்தானை கொஞ்சவே கூடாது சீதா. போதாத குறைக்கு அவன் வேறே உன்னை பார்த்தாலே சிரிக்குறதும், ஏதாவது பேசிட்டு போகுறதும்,அவ்ளோ ஏன் நீ வர மாதிரி தோணிச்சுனாலே வீட்டு வாசல் கதவை திறந்து வச்சிக்குறான் .கல்யாணம் ஆகி குழந்தையோட இருக்கிறவன் செய்யற வேலையா இது?” என்று ராதா ஹை டெசிபலில் கத்திக் கொண்டு இருக்கிறாள்.

அதில் ஒரு சதவிகிதம் கூட உண்மை இல்லை.குழந்தையை குட்டி சைத்தான் என்று அம்மா சொன்னதில் சீதாவுக்கு கோவம் அதிகமானது. மொட்டை மாடி நிகழ்வுக்குப் பிறகு ரகுவரனையும்,பூமாவையும் அதிகமாக பார்க்கவே முடிவது இல்லை.எப்போதாவது ஒரு ஹாய். அவ்வளவுதான்.

சீதா பதிலுக்கு கத்தினாள்.”ம்மா..உளறாதே. அவரையும்,பூமியையும் நா பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு.கண்ணிலே படவே மாட்டேங்குறாங்க. அப்புறம் தானே பேசுறது எல்லாம். அதோட ஜானகி பசங்கள இப்படித்தான் பேசுவியா..பாவம் அந்த குழந்தை.அம்மா இல்லாம, அப்பாகிட்டே வளர்றா .நீ ஏதாச்சும் சொல்லாத.அப்புறம் நா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.”

இவ்வளவும் இவர்கள் வீட்டில் நடக்கும் பொழுது நல்லவேலையாக ரகு அவன் வீட்டில் இல்லை. ஒருமாத பயிற்சி தில்லியில்.வெகு நாட்களாக அவனது இறந்து போன மனைவி மைதிலி வீட்டிலிருந்து குழந்தையை கொஞ்சநாட்கள் தாங்கள் வைத்துக்கொள்வதற்கு ஆசை படுவதாக சொல்லி இருந்தார்கள். மைதிலியின் அப்பா இவனிடம்,

“மாப்பிள்ளை , மைதி இருந்தாலும் சரி, இல்லேன்னாலும் சரி.நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளை தான். இங்கே வரும் நேரங்கள்ல நீங்க நம்ம வீட்டுலதான் தங்கணும் .எங்களுக்கு பொண்ணுதான் போயாச்சு.மாப்பிள்ளையும்,பேத்தியும் இருக்கீங்க “என்றுவிட்டிருந்தார். அவர்ளுக்கு குழந்தையை வளர்க்க வேண்டும் என்றுதான்.ஆனால் , மனைவியும் இல்லாமல்,மகளும் இல்லாமல் ரகு உடைந்துவிடுவான் என்றுதான் பேத்தியை இவனிடமே கொடுத்துவிட்டார்கள்.

தங்களது இரண்டாவது பெண்ணை மணம் முடிக்கவும் ரகுவிடம் கேட்டார்கள்.அந்த பெண்ணும் கூட மாமாவை கல்யாணம் செஞ்சுக்க குடுத்து வச்சிருக்கணும்.மனசார சம்மதிக்கிறேன்”என்று சொன்னதாக கேள்வி.அந்த பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து ஆகி இருந்தது.இவர்களுக்கோ ரகுவை விட மனது இல்லை. ஆரம்பத்தில் மைதிலி ரகு திருமணத்திற்கு முழு மனதாக சம்மதம் சொல்லவில்லை.பிறகு மகள் வாழும் வாழ்ககையை பார்த்த பிறகு ரகுவரன் மீது பாசம் வந்துவிட்டது.

“இப்படியே நின்னுறாதீங்க மாப்பிளை .வயசு இருக்கு.வாழ்க்கையும் இருக்கு. பெண் குழந்தை வேறே.யோசியுங்க”என்று மாமியாரும் மாமனாரும் பேசும்பொழுது எல்லாம் சொல்வார்கள்தான். ரகு அவர்களுக்கு பதில் எதுவும் சொன்னது இல்லை.

இதோ இப்போது மாமனார் கேட்டதற்கு இணங்க ஒருமாதமும் குழந்தையுடன் அங்கே தான் தங்கி இருக்கிறான்.மைதிலியின் தங்கைக்கு மறுமணம் முடிந்து இப்போது அவள் அவுஸ்திரேலியாவில் இருக்கிறாள்.அவளுக்கு ஒரு வயதின் குழந்தை உண்டு.

சீதா பேசுவதை கேட்ட ராதாவுக்கு கொதித்துக் கொண்டு வந்தது.இதற்கு மேல் பேசினால் மகள் என்ன செய்வாளோ என்று பயம் வேறு. ஏதோ முணங்கி கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டாள்.வீடே புயல் கொண்டு ஓய்ந்தது போல இருந்தது.கிருஷ்னன் ஊரில் இல்லை.வேலை விஷயமாக மூன்று நாட்களுக்கு மதுரைக்கு சென்றிருக்கிறார்.வர இரண்டு நாட்கள் ஆகும்.கணவர் வீட்டில் இல்லாத தைரியத்தில்தான் ராதா மகளிடம் பேசியது.

சீதாவுக்கு இதற்குமேல் அம்மாவிடம் பேசுவதில் பயன் இல்லை என்று புரிந்துவிட்டதில் வேறு மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் கிளம்பி வெளியே சென்று விட்டாள் . இப்போதெல்லாம் அம்மாவிடம் பேசுவதற்கு அவளுக்கு சுத்தமாக இஷ்டமில்லை. முக்கியமாக ரகுவரன்,பூமா பற்றிய பேச்சுக்கள் தான் ராதாவால் பேசப்படுகிறது.

அதில் அதிகபட்ச சந்தேகமும்,அவர்கள் மீதான வெறுப்பும் கொட்டிக்கிடக்கும் .காதுகளை கொண்டு கேட்க முடியாத அளவுக்கு பேசுகிறாள் ராதா.

வெளியே வந்த சீதாவுக்கு அலைபேசியில் அழைத்தான் ரகு . பள்ளியில் ஒருமாத விடுப்புக்கு அனுமதி அளிக்க முடியாது என்றும்,ஒப்புக்கொள்ளும் படிக்கு காரணமும் கேட்டிருந்தார்கள்.

தமது மேலதிகாரியிடமிருந்து ஒரு கடிதம் வாங்கி வைத்திருந்தான் ரகு . இந்த உரையாடல் கூட அது சம்மந்தமாகத்தான்.

“எனக்கு மெயில் அனுப்புங்க ரகு . நா அதை ஸ்கூல் ப்ரின்ஸிகிட்டே கொடுத்துடறேன்”என்று சுலபமாக முடித்துவிட்டாள் சீதா. கொஞ்சநேரம் பூமாவுடனும் ஒரு சிறு அரட்டை அடித்ததில் சோர்ந்திருந்த சீதாவின் மனம் சுறுசுறுப்பு கொண்டது. அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று கொஞ்சநேரம் இருந்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் சீதா.ராதா இன்னமும் மலை இறங்கவில்லை.சீதா கண்டுகொள்ளும் நிலையில் இல்லை.தனது அறைக்கு சென்று அலுவலக வேலைகளை ஆரம்பித்துவிட்டாள். எவ்வளவு முடித்தாலும் அள்ளஅள்ள குறையாத அட்சய பாத்திரம் அது. இவளும் சோர்ந்து அமராமல் செய்துகொண்டே இருப்பதால் தான் இவ்வளவு பெரிய பொறுப்பும்,சம்பளமும்,வெளிநாட்டு பயணங்களும் வாய்த்திருக்கிறது.

அன்று முழுவதும் சீதாவுக்கு மீட்டிங் வரிசையாக சென்று கொண்டிருந்ததில் வீட்டில் பிரச்சனைகள் இருபப்தையே மறந்து போனாள் . ஒரு மாதம் முடியும் முன்பே ரகு வந்துவிட்டான். இரண்டு நாட்கள் முன்பாகவே அவனது பயிற்சி நிறைவு பெற்றிருந்தது.அவனுடன் இந்தமுறை மைதிலியின் பெற்றவர்களும் வந்திருந்தார்கள்.

ஏற்கனவே ரகுவின் பெற்றவர்கள் அவன் மீது கடும் அதிருப்தியில் இருக்கும்பொழுது இந்த மாதிரி அவன் மைதிலியின் பெற்றவர்களையும் தன்னுடன் அழைத்து வந்திருப்பதில் இன்னமும் அவன் மீதான கோவம் கூடிக் கொண்டே போனது.

இப்போது அவர்கள் தில்லியில் தான் இருக்கிறார்கள்.மகளைக் கூட்டிக்கொண்டு வார் விடுமுறையில் அங்கே சென்று இருந்துவிட்டு மீண்டும் மைதிலியின் வீட்டுக்கே சென்றுவிட்டான் ரகுவரன். பெற்றவர்களுடன் தங்கக் கூடாது என்றெல்லாம் இல்லை.மைதியின் வீட்டிலிருந்து அவனது அலுவலகம் பக்கத்தில் பதினைந்து நிமிஷ கார் பயணம்.இவனது வீட்டிலிருந்து ஒரு மணிநேரம் ஆகும்.வேறு வழி இல்லை என்றால் சரி.அங்கிருந்து சென்று வந்திருக்கலாம்.மைதிலியின் பெற்றவர்களும் மகளை இழந்துவிட்டு வருத்தத்தில் இருக்கிறார்கள்.பேத்தியாவது அவர்களுடன் ஒருமாதம் இருக்கட்டுமே என்று ரகு நினைத்திருக்க பெற்றவர்களுக்கு அது நிறம் மாறி தெரிந்தது.

மைதிலியின் பெற்றவர்கள் வீட்டை கவனிக்க உத்யோக உயர்வில் ரகுவுக்கு வேலை பளு அதிகமானது.வேலை சம்மந்தமான கோப்புகளை பார்த்து விவரங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.அதேசமயத்தில் அந்த வேலைக்கான தினசரியை பார்த்தாக வேண்டும்.பெரியவர்கள் வந்தது அவனுக்கு மூச்சு விட நேரம் தந்தது. அவர்களையும் அம்மா -அப்பா என்று அழைக்க ஆரம்பத்திலேயே பழகியிருந்தான். அதனால் அவர்களுக்கும் இவனோடு இருப்பதில் தயக்கம் எதுவும் இல்லை.

ஆனால்,சீதாவுக்குத்தான் ரகுவை சரியாக பார்க்க,பேச முடிவது இல்லை.காலை நேரத்தில் பால் பாக்கெட்டை அவன் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் யாராவதுதான் எடுக்கிறார்கள். வெள்ளிக்கிழமையில் அந்த மாமி கோலம் போடுகிறார். பூமா கூட பாட்டி தாத்தாவுடன் ஐக்கியம் ஆகிவிட்டாள் .தினமும் அந்த வீட்டில் இருக்கும் மாமா தனது பேத்தியை அருகில் இருக்கும் பார்க்குக்கு அழைத்து சென்று விளையாட வைத்து கூட்டி வருகிறார்.மொத்தத்தில் அவர்கள் வீடு இயல்பாக இருக்கிறது. சீதாவுக்கு அவனையும்,குழந்தையையும் சரியாக பார்க்காமல்,பேசாமல் தவிப்பு கூடியது.

இந்த நேரத்தில் தான் ராதா மூன்று நாட்கள் வாடப்பள்ளி,மட்டப்பள்ளி நரசிம்மர் கோவில்களுக்கு குழுவுடன் பக்தி சுற்றுலா சென்றாள் .கிருஷ்னனும் அதிகமாக வேலைகள் இல்லாமல் வீட்டில் இருந்தார். இதுதான் சமயம் என்று தனது ரகு மீதான காதலை ஒருவித எதிர்பார்ப்புடன் அப்பாவிடம் சொன்னாள் சீதா.

“இது காதல்னு நா பெயரெல்லாம் வைக்க ஆசைபடலப்பா .ஒருகாலத்துல லியோவை ரொம்பவே காதலிச்சேன். அவருக்கு கல்யாணம் ஆகி குழந்தைகள் கூட இருக்கு. அவருக்கு கல்யாணம் ஆனபிறகு அவரை காதலிச்சேன்னு சொல்லுறது கூட தப்புன்னு தோணிச்சு.மனசை கல்லாக்கிட்டு வெளியே வந்தேன்.இப்போ..ரகு மேல வந்திருக்கறது காதலோ,ஈர்ப்போ இல்லை. அவரோட ஒரு வாழ்க்கை வாழணும்னு தோணுது.எனக்கான குடும்பம் அதுதான்ன்னு மனசு அடிச்சிக்குது. அவர் வீட்டுல,அவரோடயும் குஹந்தையோடவும் ஒரு அழகான குடும்ப வாழ்க்கை. ஏக்கமா இருக்குப்பா…”

மகளின் குரலில் இருக்கும் உணர்வுகளை சரியாக படித்து கொண்டார் கிருஷ்னன். இதோ மே மாதம் வந்தால் சீதாவுக்கு நாற்பத்தியொரு வயது ஆகிவிடும்.இவ்வளவு வருஷங்களில் மகளை இப்படி நிறுத்தி வைத்திருப்பதே பெரும் தவறு. அவள் விரும்பிய வாழ்க்கையை தெரிவு செய்ய அவளுக்கு உரிமை இருக்கும் பொழுது ,பெண் தகப்பனிடம் அனுமதி கேட்டு நிற்கிறது.நிச்சயம் இதற்கு ராதா ஒப்புக்கொள்ள போவது இல்லை.இதற்கு மட்டும் அல்ல. சீதாவின் திருமணத்தின் பெரிய தடை ராதா தான் என்று நினைத்துக் கொண்டவர்,”எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லடா.உங்கம்மா நிச்சயம் ஒத்துக்க மாட்டா.நீ பதிவு கல்யாணம் செஞ்சுக்க வேண்டி வரலாம். அதுவும் அம்மாவுக்கு தெரியாம.அதோட,ரொம்ப முக்கியமான ஒண்ணு ..நீ உன்னோட எண்ணங்களை அந்த பையன்கிட்டே சொன்னியா…மனசு விட்டு பேசினியா ? அது மட்டும் இல்ல.அவங்க வீட்டு பெரியவங்க ஒத்துக்கணும். இதெல்லாம் கடந்துவந்தா தான் உன் ஏக்கம் நிஜமாகும். அப்பா என்ன செய்யணும்னு சொல்லு.செய்யறேன். முதல்லே அந்த பையன்கிட்டே பேசு சீதா.”

அப்பாவின் சம்மதம் அவளுக்கு பெரிய தெம்பாக இருந்தது. அடுத்து ரகுவரனிடம் எப்படி பேசுவது என்று சீதா திணறிக் கொண்டிருக்கும் பொழுது காலம் அதற்க்கான நேரத்தை தானே அமைத்துக் கொடுத்தது.

ரகுவரன் இன்னமும் மைதிலியின் எண்ணங்களில் இருந்தே வெளியே வரவில்லை. சீதாவை திருமணம் முடிக்க எப்படி சம்மதிப்பான்? ஏனோ சீதாவின் மனம் அலை பாய ரகுவரனுக்காக காத்திருக்கிறாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!