தனது மகள் சொன்ன விஷயங்களையே இரவு முழுவதும் கிருஷ்ணன் யோசித்துக் கொண்டு இருந்தார். அவரால் இந்த விஷயங்களை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ராதாவை பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும்.நிச்சயம் இந்த திருமணதிற்கு அவள் ஒப்புதல் கிடைக்கப் போவது இல்லை.
ஏற்கனவே ஒரு காதல் தோல்வியிலிருந்து தன்னை மீட்டுக்கொண்டு வந்த பெண்,மீண்டும் அவளது மனம் இவ்வளவு காலம் கழித்து ஒரு ஆணின் மீது படர்ந்திருக்கிறது. ஒரு பத்து வருஷங்களுக்கு முன்பு என்று இருந்திருந்தால் கிருஷ்னன் நிச்சயம் அவள் சொன்னதற்கு சம்மதித்து இருக்க மாட்டார்.காலங்கள் மாறும்பொழுது காட்சிகளும் மாறுகிறது.மனமும் சேர்ந்து மாற்றம் பெறுகிறது.குறுகிய வட்டத்துக்குள் மகளை சுழல வைக்க கிருஷ்ணனுக்கு விருப்பம் இல்லை.எவ்வளவு காலம் இந்த குடும்பத்துக்காகவே மகளை நேர்ந்து விட முடியும்’என்றெல்லாம் தோன்றவே ஒருகட்டத்தில் கட்டிலில் எழுந்து அமர்ந்தே விட்டார்.
இதெல்லாம் மீறி, சீதா அந்த பையன் ரகுவிடம் தனது விருப்பத்தை சொல்லி அவன் மறுத்துவிட்டால் அதை சீதாவால் தாங்கிக்கொள்ள முடியுமா? என்ற கேள்வி பூதாகாரமாக அவரை பயமுறுத்தியது. நடைமுறையில் இதுவெல்லாம் சாத்தியமா… என்றெல்லாம் சிந்தித்தவர்,தானே போய் அவர்களிடம் பேசினால்தான் என்று கூட யோசித்தார்.
Advertisement
விடியும் பொழுது நல்லதை தரட்டும் என்று நினைத்துக்கொண்டே உறங்கியும் போனார்.நிச்சயம் விடியும் பொழுது நல்ல பொழுதுதான். சீதாவின் அறையில் அவளது மனமும் ஒருநிலையில் இல்லாமல் தான் தவிக்கிறது. ரகு மறுத்துவிட்டால் என்ன செய்வது என்று பயம். அதற்குப் பிறகு மீண்டும் ஒருவரை மனதில் ஏற்பது நிச்சயம் அவளளவில் நடக்க முடியாத விஷயம். நினைக்கும் பொழுதே மனம் நடுங்கியது.
இப்போது சீதாவுக்கு தனது அம்மா பற்றிய பயம் ஏதும் இல்லை. நடப்பதை பார்த்துக்கொள்ளலாம்.அப்பாவின் ஆதரவு இருக்கிறது என்று எண்ணிக்கொண்டாள்.ரகு ,அவன் வீட்டினர் பற்றிய எண்ணங்கள் தான்.”என்ன பாவம் செஞ்சேன். ஏற்கனவே காதலிச்சதும் கைகூடல. கல்யாணமும் ஆகல.இப்போ திரும்ப ஒரு மனுஷன் மேலே விருப்பம் வந்து தொலைச்சிருக்கு .இதுவும் என்னவாகுமோ தெரியல”என்று தன்னையே நொந்து கொண்டது பெண்ணின் மனம்.
தகப்பனுக்கும்,மகளுக்குமாக ஒருவிதமாக விடிந்தது.இன்னமும் பொழுது புலரவில்லை.காலை மணி ஐந்தேகால் இருக்கலாம்.வீட்டின் காலிங் பெல் ஒலிக்க எழுந்த சீதாவுக்கு,”அம்மாவா இருக்குமா..ஆனா அம்மா வர இன்னமும் ரெண்டு நாள் ஆகுமே.இப்போ யாரா இருக்கும்? ஒருவேளை ஜானகியோ…என்று நினைத்தவளுக்கு சட்டென்று உடம்பில் ஒரு இறுக்கமும்,நடுக்கமும் பரவியது.இந்த நேரத்தில்…என்று யோசித்துக்கொண்டே வந்து கதவை திறந்தவளுக்கு நிச்சயம் வெளியே நின்று கொண்டிருக்கும் அந்த நடுத்தர வயது ஆணையும்,பெண்ணையும் தெரிந்திருக்கவில்லை.
Advertisement
“இங்கே… ரகுராமன்ன்னு ஒருத்தரு ,சின்ன குழந்தை கூட இருக்கு.பூமா. அவர் வீடு எதுன்னு சொல்ல முடியுமா?” கேட்டவர்கள் அந்த நேரத்திலும் சீதாவை கவனித்துப் பார்த்தார்கள்.சீதாவும் அவர்களின் பார்வையை அலசியவளாகதான் பதில் சொன்னாள் .
Advertisement
“இதோ…எதிர்த்த வீடுதான்.நீங்க..?”ரகுவரனின் வீட்டில் இன்னமும் யாரும் எழுந்திருந்திருக்கவில்லை . கதவு உள்பக்கமாக தாழிட பெற்றிருந்தது.
“நாங்க அவரோட பேரண்டட்ஸ். இங்கே அவன் மாற்றலாகி வந்த சமயத்தில் நாங்க எங்களோட பெரிய பிள்ளைக்கிட்டே போயிருந்தோம்.அவன் வெளிநாட்டுல செட்டில் ஆகிட்டான். இப்போ இவனை பார்க்கலாம்னு வந்திருக்கோம்”என்று நிதானமாக பதில் சொன்னார் ரகுவின் அப்பா.
சரி’ என்று தலையாட்டிவிட்டு உள்ளே வந்துவிட்டாள் சீதா. அவர்கள் முகத்தில் அப்படி ஒரு பணக்களை தெரிந்தது.பரம்பரை பணக்காரர்களாக இருப்பார்கள் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.இன்னமும் கிருஷ்னன் தனது அறையிலிருந்து வெளியே வரவில்லை, இதற்க்குமேல் நின்றுகொண்டிருந்தால் அலுவலகம் செல்ல தாமதமாகும் என்று நினைத்துக்கொண்டே குளியலறைக்குள் நுழைந்துகொண்டாள்.அவளது எண்ணங்களை அவனது பெற்றவர்கள் ஆக்கிரமித்திருந்தார்கள்.
Advertisement
சீதா குளித்துவிட்டு வந்து வாசல் கதவை திறக்கவும், எதிர்வீட்டில் ரகுவின் மாமியார் கோலம் போட வரவும் சரியாக இருந்தது.இவர்கள் வீட்டு வாசலில் ஏற்கனவே கோலம் போடப்பட்டிருந்தது.பால் பாக்கெட்டுகளையும்,தினசரி நாளிதழையும் எடுத்துக்கொண்டு சீதா வந்துவிட்டாள் . “அவர்கள் பெற்றவர்கள் என்றால் இவர்கள் யாரு ?” என்ற அதிமுக்கிய கேள்வி அவளது மனதில் எழுந்தது. அதற்க்கு விடைதான் தெரியவில்லை.
இவள் பில்டரில் காஃபி டிகாஷன் இறக்கி,பால் காய்ச்சவும் கிருஷ்ணனும் வந்துவிட்டார். காலை ரகுவின் வீட்டுக்கு வந்த அவனது பெற்றவர்களை பற்றி தந்தையிடம் சொன்னவள்,”ஏற்கனவே அவங்க வீட்டுல இருக்குறவங்க தான் அவரோட பேரன்ட்ஸ்னு நினச்சேன்ப்பா. இப்போ பார்த்தா அவங்க இல்லையாம். வந்தவங்க முகத்துல பணத்தோட செழுமை நல்லாவே தெரியுது. இவர் ரொம்பவே சிம்பிள் இல்லப்பா…”என்று தந்தையிடம் அபிப்ராயம் கேட்டாள் சீதா. அவரும் ஆமோதிப்பக தலையை ஆட்டிவிட்டு,”ஒருவேளை இங்கே இருக்குறவங்க அவரோட சித்தப்பா -சித்தி அந்த மாதிரி இருக்கலாம். அவரும் அப்பா,அம்மான்னு தானே கூப்பிடுறாரு” என்று சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்று விட்டார்.அவரது மூளை சொன்ன பதிலை ஏனோ அவரது மனமே ஏற்க மறுத்தது. பெண்ணிடம் எதையும் காண்பித்துக் கொள்ளவில்லை.
காலையில் வந்தார்கள் என்று சொன்ன பொழுது அவளது முகத்தில் ஒரு பதட்டமும்,நடுக்கமும் இருப்பதையும் அவள் வார்த்தையில் வரும் தடுமாற்றங்களையும் கவனிக்க கிருஷ்ணன் தவறவில்லை. இதற்கு சீக்கிரமாக ஒரு தீர்வு கொடுத்தால் நல்லது.அதுவும் ராதாவின் காதுகளுக்கு செல்வதற்கு முன்பு .என்றும் யோசித்தார்.
எதிர்த்த வீட்டில் இரு பாட்டிகள்,தாத்தாக்களுடன் பூமாவுக்கு கொண்டாட்டம் தான். அவளது சந்தோஷ குரல் நாள் முழுவதும் கேட்டது.போதாத குறைக்கு நெய்யின் இனிப்பு மணம் வேறு. ஏதாவது இனிப்புகள் செய்கிறார்கள் போலும்.சீதாவின் வீடும் சேர்ந்து மணத்தது.நடுவில் சீதாவின் அண்ணி,அதாவது சுதாவின் மூத்த மருமகள் வந்துவிட்டு சென்றாள் . அவள் வந்திருக்கும் பொழுதே சீதாவையும்,கிருஷ்ணனையும் அழைத்து நல்லவிதத்தில் அறிமுகம் செய்துவிட்டு சென்றதில் அதுவரை பெரியவர்களுக்கு இருந்த ஒதுக்கம் குறைந்தது. இவர்கள் இருவரிடமும் நன்றாகவே பழகினார்கள். ஏற்கனவே ரகுவின் முன்னாள் மாமனாருக்கும் கிருஷ்ணனுக்கும் பார்த்தால் சிரிக்கும் அளவுக்கு பழக்கம் உண்டாகி இருக்க இப்போது ரகுவின் அப்பாவுடனும் அடிப்படை சிநேகம் வந்திருந்தது. ஆனாலும் இன்னமும் தயக்கம் விடவில்லை. அங்கே இருக்கும் ஆண்களில் ஒருவர் ரகுவின் மனைவி மைதிலியின் அப்பா என்று தெரிந்து கொண்டதில் கிருஷ்ணனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. மைதிலியின் அம்மா ரயில்வே துறையில் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். ரகுவின் அப்பாவோ இந்திய ஆட்சிப் பணியில் இருந்தவர்.
ரகு இன்னமும் மைதிலியின் பெற்றவர்களிடம் உறவு வைத்திருப்பதும்,அவர்களை தன்னுடன் வைத்துக்கொள்ளும் அளவுக்கு அவனது குணம் இருப்பதும் ஒரு வகையில் கிருஷ்ணனுக்கு சந்தோசம் தான். மைதிலியுடனான திருமணம் காதலித்ததால் வீட்டுப் பெரியவர்கள் சேர்ந்து செய்துவைத்த திருமணம் என்று தெரிந்த பொழுது கிருஷ்ணனுக்கு சங்கடமாக இருந்தது. இதை சீதாவிடம் சொல்லவும் அவர் தயங்கவில்லை.ஏமாற்றம் வந்தால் பெண் தடுமாறி நின்றுவிட கூடாது என்று அவருக்குள் மெல்லிய நடுக்கம். இன்னமும் மைதிலியை ரகுவரன் மறந்துவிடவில்லை என்பது தெளிவாகவே கிருஷ்ணனுக்கும் சீதாவுக்கும் புரிந்தது. மனதளவில் சீதாவுக்கு சிறு தாக்கம் இருக்கிறது.
ராதா ஊரிலிருந்து வந்தவுடன் “எதிர்த்த வீட்டில் யார் யாரோ வந்திருக்காங்க போல ” என்று கணவரிடம் விவரம் கேட்டு தெரிந்து கொண்டாள் .அவள் மனமோ , இனி மகளை கண்காணிக்க அவசியம் இல்லை என்று முடிவு செய்து கொண்டது. அதனால் எதிர்த்த வீட்டு பையனை பற்றிய அவளது அங்கலாய்புகள் குறைந்தது. மீண்டும் கிருஷ்னனுடன் அவருக்கு நேரம் கிடைக்கும் சமயங்களில் கோவில்களுக்கு சென்று வர ஆரம்பித்தாள்.
இரண்டு மாதங்கள் நிமிஷங்களாக கரைய, மீண்டும் தமது குழுவுடன் ‘கேதார்நாத்’ யாத்திரைக்கு கிளம்பி சென்றாள் ராதா , கிருஷ்ணனை டிக்கெட் புக் செய்யும் பொழுது தங்களுடன் வருவதற்கு ராதா துளைத்து எடுத்தாள். நிச்சயமா நீயோ,நானோ சீதாவுக்கு கூட இருக்கணும்.நா அவளுக்கு துணையா இருக்கேன்.நீ போய்ட்டு சாமி கும்பிட்டு வா.கூடவே நம்ம பொண்ணுக்கு இன்னும் தாமதம் ஆகாம வரன் தகையணும்னு வேண்டிக்கிட்டு வா” என்றும் சொல்லி பதிவு செய்து அனுப்பினார். கணவரின் சொற்கள் ராதாவுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை.மனதில் நொடித்துக்கொண்டு,வெளியில்’ சரிங்க ‘ என்றுவிட்டு கிளம்பினாள். செலவுகளுக்கென்று சீதா தாராளமான தொகையை ராதாவின் வங்கி கணக்குக்கு அனுப்பியிருந்தாள். ராதாவின் சந்தோஷத்திற்கு அளவேது! அப்பாவுக்கும் மகளுக்கும் ராதா கிளம்பி சென்றதும் அப்படி ஒரு சிரிப்பு.
“அம்மா திருந்தவே மாட்டாப்பா. இன்னமும் இதே மனநிலைல இருந்தா எப்படி” என்று முணுமுணுத்துவிட்டு வேலைகளை பார்க்க சென்றுவிட்டாள் சீதா.
மாலை வாக்கிங் செல்லும் பொழுது ரகுவின் அப்பா,” நல்ல இடமெல்லாம் நம்ம ரகுவுக்கு வருது. குழந்தையோட பொறுப்பை மைதிலியோட பேரண்ட்சும்,நாங்களும் எடுத்துக்கறோம்னு சொல்லி பார்த்தாச்சு.ரகு ஒத்துக்குவே மாட்டேங்குறான். தனியா நிற்கும் வயசா அவனுக்கு.வர பொண்ணுங்களுக்கு இவனை பிடிச்சிருக்கு.குழந்தை பற்றித்தான் யோசிக்கிறாங்க.ஏற்கனவே விவாகரத்து ஆன பொண்ணுங்களும் கூட குழந்தையை ஹாஸ்ட்டல்ல விட்டா பிரச்சனை இல்லைன்னு சொல்றாங்க.இவனும் முடியவே முடியாதுன்னு சொல்றான்.அவனுக்கு அவனோட பூமா எப்படியோ எங்களுக்கு எங்க மகனும் அப்படித்தானே?” என்றார்
கிருஷ்ணனுக்கு அவரது வார்த்தைக்களில் ஸுத்தமாக உடன்பாடு இல்லை. நான்கு வயது குழந்தை ஹாஸ்டலில் இருப்பதும்,பெற்றவன் இருக்க பாட்டி தாத்தாவுடன் இருப்பதும் எப்படி சரியாக இருக்கும்.பிள்ளைகளை பெற்றவர்கள் தாமே வளர்க்கணும். அப்பனை பிரிந்து வளர்ந்தால் குழந்தையின் மனம் என்னவாகும்?என்று அவரது மனம் பதறியது. கூடவே நடந்து வந்த மைதிலியின் அப்பா வாயை திறந்து சொல்லாவிட்டாலும் அவரது துக்கம் புரிந்தது.கிருஷனும் அவருக்கு வார்த்தைகளால் ஆறுதல் சொல்லாவிட்டாலும் அவரது வலது உள்ளங்கையை அழுத்தமாக பிடித்துக்கொண்டார் .
குழந்தையுடன் இருக்கும் ரகுவை தானே தன் மகள் விரும்புகிறாள். நிச்சயம் ரகு சரியென்று சொல்வான் என்று கிருஷ்ணனின் மனம் நம்பியது.
வீட்டுக்கு சென்றவுடன் சீதாவை தேடிச்சென்று ரகுவரனின் அப்பா சொன்னவற்றை பகிர்ந்து கொண்டார் கிருஷ்னன். “எனக்கென்னவோ ரகு உன்னை கல்யாணம் செஞ்சுக்க மறுக்க மாட்டான்னு தோணுது சீதா.நீ இன்னமும் அவன்கிட்டே பேசலியா…இதுக்கு மேல தள்ளிப் போடாதே .அவங்க வீட்டுல தீவிரமா பொண்ணு தேடுறாங்க. இன்னிக்கு இல்லேன்னாலும் நாளைக்கு அந்த பையனை சம்மதிக்க வச்சிருவாங்க. மைதிலியோட பேரன்ட்ஸ் இங்கே தங்கி இருக்குறதுக்கு காரணம் அவங்க மாப்பிள்ளைக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சு வச்சிட்டு போக தான்.தேவைப்பட்டா அவங்க பேத்தியை தங்களோட தில்லி அழைச்சிட்டு போகவும் அவங்க தயார்தான். இதுக்கு மேலயும் தள்ளிப் போடாம விஷயத்தை எதிர்கொண்டா நல்லது.நானே இன்னிக்கு பேசியிருப்பேன். உன்கிட்ட டிஸ்கஸ் செஞ்சுட்டு மேற்கொண்டு ப்ரொசீட் பண்ணலாம்னு வந்திட்டேன்”என்றுவிட்டு தனது அறைக்குள் சென்றுவிட்டாள்.
இன்னொரு பக்கம் ரகுவரனின் அம்மா சுதாவிடம் சீதா பற்றி விவரங்கள் கேட்டுக்கொண்டு இருந்தாள் .சுதாவுக்கு அவர் கேட்க வருவது நன்றாகவே புரிந்தது. நேராகவே சொல்லிவிட்டாள் ,”சீதாவோட அம்மா ராதா என்னோட அண்ணிதான். பெண் கொடுத்து பெண் எடுத்தாங்க எங்க வீட்டுல. ராதை பற்றி எங்களுக்கு தெரியும்.முன்னாடி எல்லாம் இப்படி இல்லை. இப்போ நிறைய மாறிட்டா.நிச்சயம் இந்த கல்யாணத்துக்கு அவகிட்டேந்து சம்மதம் கிடைக்காது. எங்க சைடுல நாங்க எல்லோருமே இந்த கல்யாணம் நடந்தா சந்தோசம் படுறவங்க தான். பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு. அவ இப்படி தனியா நிக்குறது எங்க எல்லாருக்கும் வருத்தம் தான்.உங்களுக்கு சம்மதம்னா மேற்கொண்டு பேசலாம் அண்ணி.”
சுதா சொன்னதை கேட்ட ரகுவின் அம்மாவுக்கு பொண்ணோட அம்மா சம்மதம் இல்லாம எப்படி?என்றுதான் தோன்றியது. இவ்வளவு நடக்கும் பொழுதும் ரகுவுக்கு தன்னை சுற்றி நடப்பவைகளை தெரிந்து கொள்ளாமல் இருக்கிறான். சுதா ரகுவின் அம்மா பேசியவற்றை ஒரு வார்த்தை விடாமல் தனது அண்ணன் கிருஷ்ணனுக்கு சொல்லிவிட்டாள் . அன்று மாலையே கிருஷ்னனும் ,சீதாவும் ரகு வீட்டில் இருக்கும் நேரத்தில் அவர்கள் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினார்கள் .கதவை திறந்த ரகுவுக்கு அதிர்ச்சி.அவன் நிச்சயம் அவர்கள் இருவரையும் எதிர்பார்க்கவில்லை .என்பது அவன் முகத்திலிருந்து தெரிந்தது.அவர்கள் இருவரும் வந்த சற்று நேரத்திற்கெல்லாம் சுதாவின் குடும்பமும் வந்து சேர்ந்தது.