ரகுவரனுக்கு அங்கே நடப்பவை எதுவுமே புரியவில்லை. கிருஷணன் -சீதா இருவரும் இதுவரை ரகுவரனின் வீட்டுக்கு வந்தது கிடையாது. முதல்முறையாக வருகிறார்கள் . போதாத குறைக்கு இங்கே சுதாவின் குடும்பம் வேறு.மனதில் ஏதோ கெட் டு கெதர் மாதிரி வீடு மனிதர்களால் வழிந்தது. ரகுவுக்கு குழப்பமாக இருந்தது. உள்ளே வருமாறு அழைத்தவன் அதற்க்கு மேல் அவர்களிடம் என்ன பேசுவது என்று புரியாமல் நின்றான்.
வீட்டில் கலவையான பேச்சுக் குரல்கள்.மைதிலியின் அம்மாவும், ரகுவரனின் அம்மாவும் சமையல் அறையில் காஃபி கலந்து எடுத்து வந்தார்கள். வீட்டில் ஏதோ தின்பண்டங்கள் வாங்கி வைத்திருப்பதை தட்டுகளில் வைத்து ரகு எல்லோருக்கும் கொண்டு வந்து தர, சீதாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது. கையில் இருக்கும் தட்டுடன் பெண்ணை ஒருமார்கமாக பார்த்தவனுக்கு உள்ளே குறுகுறுப்பை உணர்ந்தான். அவள் சிரித்ததன் பொருள் முதலில் புரியாதவன்,புரிந்து கொண்டபிறகு அவளை முறைத்தான் .வீட்டில் இருப்பவர்களும் அங்கே நடப்பதை கண்டும் காணாததுமாக கவனித்துக்கொண்டே இருந்தார்கள்.
இருவருக்குமிடையே அவர்கள் இருவர் மட்டும் உணராத ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் ஓடிக்கொண்டிருக்க அங்கே இருப்பவர்ளுக்கு புரிந்ததுதான் பூமா ,சுதா வீட்டிலிருந்து வந்தவர்களுடன் உடன் வந்த குழந்தைகளுடன் விளையாட தனது அறைக்கு சென்றுவிட ஹாலில் பெரியவர்கள் மட்டுமே இருந்தார்கள். அவ்வளவு நேரம் கலகலப்பாக இருந்த இடம் சட்டென்று ஒரு அமைதியை கையிலெடுத்துக் கொண்டது.
Advertisement
சுதா தான் ரகுவின் அப்பாவிடம் பேச்சை ஆரம்பித்தார்.”அண்ணே ,நீங்க ரகுவுக்கு ரெண்டாவது கல்யாணத்துக்கு தீவிரமா பாக்கறீங்கன்னு தெரியும்.எங்க வீட்டு பொண்ணு சீதாவை உங்க பையனுக்கு பாக்கலாம்னு ஒரு யோசனை”என்றுவிட்டு சீதாவை பார்த்தாள் .
அத்தனை நேரமாக நிமிர்ந்து அமர்ந்திருந்த சீதாவின் முகம் சட்டென தலை தாழ்ந்தது.தன்னை பற்றி ரகுவரன் என்ன நினைப்பரோ.. என்ற தயக்கம் வந்துவிட்டதில் கொஞ்சமே கொஞ்சம் சங்கடமாக உணர்ந்தாள். இதற்கு மேலும் தனது அவன் மீதான விருப்பத்தை சொல்லாமல் மூடி வைப்பதில் பிரயோசனம் இல்லை என்பது அவளுக்கு புரிந்திருந்தது. இன்று இல்லாவிட்டால் என்றுமே இல்லை என்ற நிலையில் தான் இங்கே வந்திருக்கிறாள். வேறென்ன செய்வது என்றும் அவளுக்கு புரியவில்லை.வீட்டின் பெரியவர்கள் மேற்கொண்டு பேசவும் தயார் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் பொழுது எதற்காக ரகுவரனிடம் பேசி,அவனை சம்மதிக்க வைத்து ,தலையால் தண்ணீரை குடித்து ஒருவேளை அவன் முடியவே முடியாது என்று மறுத்துவிட்டால் அதற்குப் பிறகு தாங்கி கொள்ளும் சக்தி அவளுக்கு சத்தியமாக இல்லை.அதற்குப் பதிலாக நேராக அவன் வீட்டுக்கே தனது வீட்டு மனிதர்களுடன் சென்று பேசிவிடுவது நல்லது. பெரியவர்கள் பேசி அவரை சம்மதிக்க வைக்கும் வாய்ப்பு அதிகம் என்று யோசித்து தான் சீதா இன்று தனது அப்பாவுடன் வந்திருக்கிறாள்.
சுதா சொன்னவற்றை கேட்ட ரகுவரனின் வீட்டினருக்கு சட்டென்று ஏதும் சொல்ல முடியாமல் அமைதியாக இருக்க,ரகுவரனின் பார்வையோ பெண்ணை கூறு போட்டது.அதோடு குற்றம் சாட்டியது.ரகுவரன் இந்த நிலையை அறவே வெறுத்தான் .அவனுக்கு நன்றாக தெரியும்.இன்னோரு பெண்ணுடன் தன்னால் நிச்சயம் திருமண உறவை அமைத்துக்கொள்ள முடியாது.அவனது மூளை -மனது இரண்டுமே மைதிலியை நிரப்பிக் கொண்டிருக்கிறது. அவள் உயிரோடு இல்லை என்று சுற்றியிருப்பவர்கள் சொன்னலுமே இன்னமும் அவளது இழப்பை நம்ப முடியாமல் தவிக்கிறான். வெறும் காதல் என்ற அடைப்புக்குள் அவர்களது உறவை நிரப்பிவிட முடியாது.
Advertisement
நல்ல காதலியாக,மனைவியாக, தோழியாக அவ்வளவு ஊனோடு உயிராக கலந்திருந்தவள்.அவள் இல்லாமல் இன்னமும் இவனது உடலில் உயிர் தங்கி இருப்பதே பூமாவுக்காக தான். பூமா பிறக்காமல் இருந்திருந்தால் என்றோ அவனது உயிர் பறவை பறந்திருக்கும் .
Advertisement
சங்கடமான ஒரு சூழ்நிலை.ரகுவரனின் அம்மாதான் ஆரம்பித்தார். பொண்ணோட அம்மாவுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு … ஒருவேளை அவங்க வந்து பிரச்சனை செஞ்சா என்ன பண்ண முடியும்? அதோட நீங்க வந்த கேப்பீங்கன்னு நாங்க எதிர்பாக்கல. இன்னமும் இன்னொரு கல்யாணம் செஞ்சுக்க ரகு ஒப்புதலும் கொடுக்கல.அப்படி இருக்கும்பொழுது…”அவரால் வாக்கியத்தை முடிக்க முடியவில்லை. சீதாவை அவருக்கு அவ்வளவு பிடிக்கிறது.வந்த நாளில் இருந்து அவளை பார்த்துக்கொண்டு இருக்கிறாள். மச்சினர் பெண்ணின் வழியாக சீதாவை பற்றி அவ்வளவு கேள்விப் படுகிறார்.
“சீதா நல்ல படிப்பு. வேலையும் நல்ல வேலை. சம்பளமும் அதிகம்.ரகு இப்போ இருக்குற அபார்ட்மெண்டுல அவளுக்கும் ஒரு வீடு வாங்கி இருக்கா. வெளிநாடுகளுக்கு அடிக்கடி போயிட்டு வரா .ஆனா,துளி கர்வம் இல்ல.ரொம்ப சிம்பிள். கடவுள் நம்பிக்கை அதிகம். அதிர்ந்து கூட பேசமாட்டா .குடும்ப பொறுப்பான பொண்ணு “என்று அவள் பேசும்பொழுது சீதா என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டாலே போதும்.காதுகள் ரத்தம் சிந்தும் அளவுக்கு சீதா புராணம்தான்.
ஒருவேளை சீதாவை ரகுவின் அம்மாவுக்கு பிடித்துபோனதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இங்கே அவர் வந்ததிலிருந்து ராதாவை வீட்டில் அதிகம் பார்க்கவில்லை. எப்போது கேட்டாலும் கோவிலுக்கு சென்று இருப்பதாக சொல்வார்கள்.ரகுவின் அம்மாவுக்கும் ,மாமியாருக்கும் அவ்வளவு ஆச்சர்யம்!
Advertisement
திருமணம் ஆகாத அழகான பெண் வீட்டில் இருக்கும் பொழுது அதை பற்றிய கவலையே இல்லாமல் எப்படி ஊர் ஊராக சுற்ற முடிகிறது?என்ற பில்லியன் டாலர் கேள்வி அவர்களை குடைகிறது. ரகு ஏற்கனவே திருமணம் ஆனவன். அவனுக்கு மறுமணம் முடிக்கவே ரகுவின் பெற்றவர்களுக்கு அவ்வளவு கவலை ஆட்டுகிறது. அப்படி இருக்கும் பொழுது இந்த பெண் புது குத்துவிளக்கு போல நின்று கொண்டிருக்கிறாள் என்று அங்கலாய்த்தவர்கள் தான்.
இப்போதும், இந்த பெண் எதற்காக இரண்டாம் தாரமாக அதுவும் குழந்தையுடன் இருப்பவனை திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுகிறாள் என்று வேறு அவர்களுக்கு குழப்பம்.
ஏற்கனவே திருமணம் தோல்வியை தழுவிய பெண்கள் கூட குழந்தையை பற்றி பேசும்பொழுது , விருப்பமின்மையை காண்பிக்கிறார்கள்.அப்படி இருக்கும் பொழுது,இந்த பெண் எதற்காக இப்படிப்பட்ட வாழ்க்கையை தெரிவு செய்கிறாள் என்று ரகுவின் வீட்டாருக்கு தெரிய வேண்டி இருக்கிறது.
அதைப்பற்றி இவர்கள் கேட்பது பெரிய சங்கடத்தை கொடுக்கக் கூடும்.ஆனால் அதற்க்கு நிச்சயம் விடை தேவை.நேராக கேட்கக் கூடியவன் ரகுவரன் தான்.அவன் இந்தப் பெண்ணிடம் பேசுவானா…ஒருவேளை இருவரும் தனியாக பேசிப் பார்த்தால் பிடிக்கவும்,திருமணம் செய்து கொள்ளவும் வாய்ப்புக்கள் அதிகம் என்று நினைத்தார்கள் ரகுவின் வீட்டிலிருக்கும் ஆண்கள்.
எல்லோருடைய மன நிலையையும் புரிந்தவனாக, அவர்களது எதிர்பார்ப்பதை பொய்யாக்காமல் ,”எனக்கு சீதாவோட தனியா பேசணும்.பேச நிறையவே இருக்கு. என்னை அவளுக்கு புரிய வைக்கணும்.அதுக்கு இந்த சந்திப்பு அவசியம்”என்றான் சீதாவை அழுத்தமாக பார்த்தபடிக்கு.அதற்க்கு அர்த்தம் இப்போது அவளுடன் ஒன்றும் பேசப் போவது இல்லை என்பதே!
நிச்சயம் இங்கே இருக்கும் சூழ்நிலையில் சீதாவிடம் தன்னை ,தன் மனதை புரியவைக்க முடியாது. புரிந்தால் அவளே ஒருவேளை தனது விருப்பத்தை மாற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு என்று நினைத்தான் ரகுவரன். சீதா சட்டென்று எழுந்து கொண்டாள் .
அங்கே எல்லோருக்கும் அவள் எழுந்ததை பார்த்து சங்கடமாக இருக்க,அவளோ அங்கிருக்கும் காலி காபிக்கோப்பைகளையும்,தட்டுகளையும் எடுத்துக்கொண்டு சென்று சமையலறையை நோக்கி நடந்தாள் . அவளது செய்கையில் ரகுவின் அம்மாவுக்கு புன்னகை அரும்பியது. பெண்ணை பெற்றவருக்கோ அவள் முடிவு செய்துவிட்டாள் .பின்வாங்கும் வாய்ப்புகள் குறைவு என்று புரிந்துவிட்டது. அவளை எப்படி கையாள்வது என்று திகைத்து பார்த்தான் ரகுவரன்.
இதைவிடவும் நாசூக்காக எப்படி தனது விருப்பத்தை பதிவு செய்வது என்று சீதாவுக்கு புரியவில்லை. ரகுவரனின் பார்வை அவள் நகருமிடம் எல்லாம் தொடர்ந்தது. அவளுக்கும் புரிகிறது. திருமண உறவிலிருந்து வெளியே வருவது எவ்வளவு வலியோ அதைவிட பலமாக தாக்கக்கூடியது துணையை நிரந்தரமாக இழப்பது .அதிலும் இவர்களது காதல் திருமணம் என்று சுதா அத்தை பேச்சு வாக்கில் சொல்லியிருந்தாள் . பெண்ணுக்குள் பெருமூச்சு தான் எழுந்தது.
இந்த காதல் படுத்தும் பாடு இருக்கிறதே! வார்த்தைகளுக்குள் அடங்காது.காதலின் வலி, சொற்களில் வடிக்க முடியாது. நிச்சயம் தன்னால் ரகுவரனை புரிந்துகொண்டு நன்றாகவே வாழ முடியும் என்று சீதாவுக்குள் அவ்வளவு நம்பிக்கை. பார்க்கும் எல்லா ஆண்களையுமா திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்ணுக்கு பிடித்துவிடும்?நான்சென்ஸ். இவனோடு வாழ்ந்தால் சந்தோசமாக,நிம்மதியாக இருப்பேன் என்று பெண்ணுக்கு தோன்ற வேண்டும்.இது ஆணுக்கும் பொருந்தும். அப்ப்டோதுதான் வாழ்க்கை குட்டையாக தேங்கி நிற்காமல் அதன் பாங்குக்கு ஓடும்.
சீதாவின் பெரிய பொறுப்பு தான் எந்தவிதத்தில் ரகுவுக்கு பொருத்தம்.தன்னை கல்யாணம் செய்துகொண்டால் சந்தோஷமான வாழ்க்கைக்கு அவள் எப்படி உதவி செய்வாள் என்பதை ரகுவரனுக்கு புரியவைத்தாக வேண்டும்.இப்போது அவனது பிரச்சனை சீதாவுடனான திருமணம் இல்லை. இரண்டாவதாக ஒரு பெண்ணை மணப்பது,அது தனது காதலுக்கு செய்யும் அநீதி என்று நினைக்கிறான்.
காதல் என்பது அன்பின் இன்னொரு பரிமாணம். அது என்றுமே தீராது. ஒருவர் மீது வைத்திருக்கும் அன்பும் காதலும் வேறு ஒருவரிடம் வராது என்பதெல்லாம் இல்லை.எப்பேர்ப்பட்ட ரணத்தையும் காலம் ஆற்றும். எந்தவொரு மனதையும் காலம் மாற்றும். இதோ ரகுவையும் ,அவனது தீராத காதலையும் காலம் தன்னிடம் கொண்டுவந்து சேர்த்துவிடும் என்று சீதா ஆழமாக நம்புகிறாள். அவனுடன் தனியாக பேசுவதற்கு நேரம் பார்க்கவேண்டும்.
ரகு அங்கிருப்பவர்கள் முன்பாகவே சீதையிடம் சொல்லிவிட்டான்.”எனக்கு கொஞ்சம் நேரம் வேணும் ஸீதே . எனக்கு ப்ரோமோஷனுக்கு பிறகு ஆபிஸ் வேலைகள் கூடிடுச்சு. ஒரு ரெண்டு நாள் கழிச்சு எப்போ நாம மீட் பண்ணலாம்ணு சொல்றேன்.”
அங்கிருப்பவர்கள் எல்லோர் முகத்திலும் ஒரு எதிர்ப்பார்ப்பு நிறைந்திருப்பதை ரகுவரனால் புரிந்துகொள்ள முடிந்தது.தனது திருமணம் பற்றிய பேச்சுக்கள் எங்கே,எப்போது எப்படி ஆரம்பித்தது என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டான். அவனுக்கு சீதாவை பிடிக்காது என்றெல்லாம் இல்லை.அந்த பிடித்தம் திருமணம் செய்து கொள்ள போதுமா?என்பதுதான் அவனது கேள்வி.
சீதாவும் கிருஷ்னனும் அங்கிருந்து கிளம்ப சுதாவும் அவர்களுடனே கிளம்பிவிட்டாள்.இவ்வளவு தூரம் வந்துவிட்டு இப்போது அண்ணன் வீட்டுக்கு செல்லாமல் திரும்ப முடியுமா? இப்போது சுதாவின் குடும்பம் மொத்தமாக இங்கே கிருஷ்ணனின் வீட்டில். பேச்சும் சிரிப்பும் அமர்க்களப்பட்டது .சீதாவின் சிரிப்பு சப்தமும்,பிள்ளையவர்களின் கும்மாளமும் எதிர்வீட்டு படுக்கையறை வரை ஒலித்தது.இன்னமும் குழந்தைகள் இங்கே பூமாவுடன் தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் ரகுவின் வீட்டில் பூமாவின் அறையில். பெரியவர்கள் பேசும் இடத்தில குழந்தைகளுக்கு பொழுது போகாது என்றுதான் குழந்தைகளை தொல்லை செய்யாமல் விட்டு வந்ததே.
இங்கே ரகுவரனின் வீட்டில் சீதா வீட்டிலிருந்து வந்த சிரிப்பு சப்தத்தில் இவர்களுக்கும் கூட லேசாக சிரிப்பு எட்டிப் பார்த்தது. ரகுவரனுக்கோ,’இந்தப்பெண் சீதா இவ்வளவு சிரிப்பாளா…இவள் சிரித்து நான் பார்த்ததே இல்லையே!எப்போதும் முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டுதானே பேசுவாள்?” என்று தீவிர சிந்தனை.அவனது மனமோ,’நீயி மட்டும் என்ன பாஸு ஒழுங்கு?உனக்கு மட்டும் என்ன சிரிக்கவே தெரியாதோக்கும்! எப்போப்பார்த்தாலும் முகத்தை விறைப்பா வச்சிட்டு சுத்த வேண்டியது. உண்மையா சொல்லு…உனக்கு சிரிக்க தெரியாது?’எண்டு இவனிடம் கேள்விகளை அடுக்க பதில் சொல்ல பிடிக்காமல் அயர்ந்து போனவன் ஆர்னிகா நாசரின் நாவலில் ஆழ்ந்து போனான்.
இரவு சுதா குடும்பம் வந்திருந்ததில் கிருஷ்னன் எல்லோருக்குமான உணவை வெளியிலிருந்து தருவித்து விட்டார். வெளியே டின்னர் போகலாம் என்றாள் சீதா. ஆனால் வீட்டு பெரியவர்களுக்கு ‘என்னிக்கோ ஒருநாள் வரோம்.அப்போதும் வெளியே சுத்திக்கிட்டு… வீட்டுக்கே புட் வர ஆர்டர் போட்டுடுங்க.”என்றுவிட அதே போலவே ஆர்டர் செய்தும் விட்டார்கள்.
சீதா இவர்கள் வீட்டு குழந்தைகளுடன் சேர்த்து பூமாவுக்கும் உணவு தருவித்துவிட்டாள் .இலகுவகை உணவு வகைகளுடன் சேர்த்து எல்லா குழந்தைகளுக்கும் ஐஸ்க்ரீம் வேறு வரவழைத்திருந்தாள் . அந்த உணவுகளை சுதாவின் பெரிய பையன் கொண்டுபோய் ரகுவின் வீட்டில் கொடுத்துவிட்டு வந்தான்.
அன்றைய இரவு வெகு நாட்களுக்குப் பிறகு சீதாவுக்கு அருமையான உறக்கம். இங்கே ரகுவரனுக்கு தூக்கத்தை எடுத்துக்கொண்ட இரவு.