Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மவுன நிலவும் மஞ்சள் லில்லி பூக்களும்

மவுன நிலவும் மஞ்சள் லில்லி பூக்களும் – 9

காலை வெயில் கண்ணாடி ஜன்னலில் இருந்து எதிரொளிக்க, சுள்ளென்ற கதிரவனின் வெம்மைப் பட்டு தூக்கம் களைந்தான் ரகு.

விழிப்பு வந்து விட்டாலும் கண்களை திறக்க முடியவில்லை!

முன்தினம் இரவு அடித்த போதை இன்னமும் கொஞ்சம் பாக்கி இருக்க, கண்களை சிரமப்பட்டு திறந்தவன், அருகில் இருந்த போனை எடுத்து மணி பார்த்தான்.

காலை பத்து மணி! அன்று அவன் செய்ய வேண்டிய வேலைகளுக்கு எல்லாம் நேற்று மாலையே திட்டமிட்டு அந்தந்த இடங்களுக்கு ஆட்களை அனுப்பி விட்டிருந்தான்.



Advertisement

அவன் தான் சீக்கிரம் போய் சைட்டில் நிற்க வேண்டுமென்ற அவசியம் இல்லை!

மாலை சென்று வேலை நிலவரம் அறிந்தால் கூட போதும்!

எனவே தான் அவன் மெதுவாக எழுந்தது!

Advertisement

போனில் மணி பார்த்த போது, அன்றைய தேதியும் அவன் கண்ணில் பட்டது!

Advertisement

ஜூலை ஏழு!

அவன் கண்கள் அதிலேயே நிலைத்தன!

“ஏழு ஏழு தொன்னூத்து ஏழு! ஞாபகம் வச்சுக்கங்க, அதான் என்னோட டேட் ஆஃப் பர்த்!”

Advertisement

காதலிக்கும் போது மஞ்சு சொன்ன இந்த பேச்சுக்கள் இன்னமும் கூட அவன் காதில் ஒலித்தன!

மறக்க முடியுமா இந்த நாளை!

ஏன் இப்போதும் கூட அவனது போனின் லாக் பின் நம்பர் இது தானே!

இன்னிக்கு மஞ்சுவோட பிறந்த நாள்!

ஆனால் அவள் இல்லை!

அவன் மனம் போன வருடம் அவர்கள் கொண்டாடிய  அவளின் பிறந்த நாளை ஏக்கத்துடன் நினைத்துப் பார்த்தது!

அவன் சட்டென்று எழுந்து அவனது லேப்டாப்பை ஆன் செய்தான்!

அதன் வால் பேப்பரில் மஞ்சுவின் சிரித்த முகம்!

அவன் அதில் இருந்த ஒரு குறிப்பிட்ட வீடியோவை எடுத்து ஓட விட்டான்!

அதில் மஞ்சு பேசினாள்.

“மாமா.. இது நமக்கே நமக்கான வீடியோ! நீ பாட்டுக்கு வேற யாருக்கும் அனுப்பிடாதே.

பத்திரமா பாஸ்வேர்ட் போட்டு வச்சுக்கோ! நமக்கான ஸ்வீட் மெமரிஸ்! பயங்கர டிஸ்க்லைமரோடு  ஆரம்பித்தது அந்த வீடியோ!”

“நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூ அல்லவா..” என்ற அர்ஜுன் பட பாடலை பின்னணியாக கொண்டு, மொட்டை மாடியில் சுற்றிலும் மஞ்சள் லில்லி பூக்கள் பூத்து குலுங்கி இருக்கும் அழகான சூழ்நிலையில் அங்கிருந்த கிரானைட் கல் பதிக்கப்பட்ட கல்லால் ஆன திவான் போன்ற இருக்கையில் அவன் நெஞ்சில் மேல் சாய்ந்து அமர்ந்து அவள் பேசிக் கொண்டிருக்கும் வீடியோ!

பார்த்த ரகுவின் கண்கள் கலங்கின!

உள்ளிருந்து வேகமாக ஒரு கேவல் வெளிப்பட, லாப்டாப்பை அப்படியே அணைத்து விட்டு, கட்டிலில் தொம்மென்று விழுந்து மவுனமாக அழத் தொடங்கினான் ரகு!

அவன் நினைவோ, அவளின்  போன வருட பிறந்த நாளை எண்ணி பின்னோக்கி சென்றது!

—-

நள்ளிரவு பனிரெண்டு மணி!

அசந்து தூங்கிக் கொண்டிருந்த மஞ்சுவை காதலுடன் பார்த்தான்!

‘தூங்கும் போது கூட என் பொண்டாட்டி அழகு தான்! ஆனா  நான் இப்ப உன்னை தூங்க விட மாட்டேனே!’ என்று மனதுள் உல்லாசமாக நினைத்துக் கொண்டே, அவள் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டான்.

தூக்கத்தில் இருந்த மஞ்சுவிற்கு தன் கன்னங்கள் திடீரென்று சில்லென ஆவதை உணர்ந்து கண் விழித்தாள்.

விழித்தவள், கணவனின் முத்த மழையால் தான் அந்த சில்லிப்பு என்று அறிந்து, சிணுங்கலுடன், “மாமா.. என்ன இது? இப்படி தூங்கும் போது..” என்றிட,

“ஹாப்பி பர்த்டே மை டியர் பொண்டாட்டி!” என்று சொன்னவன், அவள் பதில் சொல்லுமுன் அவள் இதழ்களை கவ்வி இருந்தான்.

“ம்ம். தாங்க்ஸ் மாமா” என்றாள் அவன் அவளை விட்ட பின் முகம் முழுக்க மகிழ்வுடன்!

“நேத்து நைட்டே நினைச்சேன் மாமா. உனக்கு ஞாபகம் இருக்கும்னு.

ஆனா உன் கையில் ஒண்ணுமே கொண்டு வரலையா, சரி. வேலை பிசியில மறந்துட்டே போலன்னு நினைச்சுட்டேன்!”

“அது எப்படிடி உன்னோட பர்த்டே எனக்கு மறக்கும்?”

“மறக்காது தான்! ஆனா என்னோட ஃபிரன்ட் ஒருத்தி சொன்னா. எல்லாம் நமக்கு பிள்ளைப் பிறக்கிற வரைக்கும் தான் இந்த பர்த்டே சர்ப்ரைஸ் எல்லாம் கிடைக்கும்!

அதுவும் பெண் குழந்தையா இருந்திட்டா போதும்! நம்ம இடத்தை அவ பிடிச்சுப்பா. டாடிஸ் லிட்டில் பிரின்சஸ்ன்னு!

அப்புறம் நாம இந்த க்வீன்மாரெல்லாம் அப்படியே ஒதுங்கிக்க வேண்டியது தான் என்றாள்.

சோ.. நானும் அதுக்கு ரெடியா இருந்தேன் மாமா. மனசளவுல!

இனிமே எல்லாம் மீனுக் குட்டிக்கு தான் முன்னுரிமைன்னு!”

“அப்படியெல்லாம் இல்ல! யார் எப்படியோ? எனக்கு என்னோட குவீன் தான் பர்ஸ்ட்! பிரின்சஸ் நெக்ஸ்ட் தான்!” என்றான் ரகு காதலுடன்!

“ஏன் மாமா அப்படி சொல்ற? நமக்கு எல்லாமே நம்ம மீனுக் குட்டி தானே!”

“நமக்கு எல்லாமே அவ தான்! ஆனா என்னிக்கு இருந்தாலும் அவ இன்னொருத்தன் வீட்டுக்குப் போகப் போறவ!

ஆனா நீ என்னோட கடைசி காலம் வரை என்னோடயே இருக்க போறவ!

அதனால தான் நான் அவ மேல ஒரு அளவுக்கு மேல் பாசம் வச்சுடக் கூடாதுன்னு கொஞ்சம் நினைக்கறேன்.

அப்படி ரொம்ப பாசம் வச்சுட்டா, அப்புறம் அவ கல்யாணம் ஆகி போறப்ப ரொம்ப கஷ்டமாகிடும்!

நான் தானே பார்த்தேனே உன் அப்பா நம்ம கல்யாணத்தின் போது இருந்த நிலைமையை!

அதான் ப்ரீகாசனா இருக்கேன்! சரி.. அத பத்தி  அப்புறம் பேசிக்கலாம். இப்ப வா என் கூட” என்று சொல்லி அவளை தன் கைகளில் அள்ளிக் கொண்டான்.

அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, “எங்க மாமா தூக்கிட்டு போறே?” என்றவள், அவன் கைகளில் இருந்தவாறே எக்கி கட்டில் அருகே இருந்த தன் மொபைல் போனையும் எடுத்துக் கொண்டாள்.

“ஏண்டி. இந்த போன் என்ன உன்னோட கவச குண்டலமா? எங்க போனாலும் எடுத்துகிட்டு! அங்க உன் பொண்ணு தூங்கிட்டு இருக்கா. அவளைப் பத்தி கூட நினைக்காம போனை மட்டும் கையில் எடுத்துட்டு வர்றா பாரு!” அவன் கிண்டலடிக்க,

“அய்யோ மாமா..பாப்பா..நல்லா தூங்கிட்டு இருக்கா! இப்போதைக்கு எழுந்துக்க மாட்டா! அதுக்குள்ள நீ இருக்க பாரு..” அவள் செல்லம் கொஞ்சிக் கொண்டே வர, மொட்டை மாடிக்கு அவளை அழைத்து சென்றான் ரகு.

அங்கே நிறைய தொட்டிகளில் மஞ்சள் லில்லி பூக்கள் பூத்து குலுங்கி கொண்டிருந்தன! கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து இருக்க, நேற்று மொட்டாக இருந்தவை எல்லாம் இன்று பூத்துக் குலுங்கி இருந்தன!

அந்த இடமே மஞ்சள் வண்ணமாக தெரிந்தது!

வானத்திலோ நல்ல நிலா வெளிச்சம்! பவுணர்மிக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் போதே அழகாக தெரிந்தது அந்த வான் நிலா!

அந்த நிலவொளியில் மஞ்சள் நிற பூக்கள் தங்கம் போல தக தகத்தன!

பூச்செடிகள் சுற்றிலும் இருக்க நடுவில் ஒரு சிறிய ஸ்டூல் போட்டு அதன் மேல் அழகான விரிப்பு விரித்து அதன் மேல் பர்த்டே கேக்!

மஞ்சுவின் கண்கள் விரிந்தன!

“எப்ப மாமா வாங்கிட்டு வந்த? நான் பார்த்தேனே, நைட் நீ வீட்டுக்கு வரும் போது! கையில் கேக் டப்பா எதுவும் இல்லையே! அப்புறம் எப்படி?”

“நான் வரும் போது மழையில் நனைஞ்சு கிட்டு தானே வந்தேன்.

வந்தவன் வாசலில் கேக்கையும் ரெயின் கோட்டையும் கழற்றி வைத்து விட்டு தானே வந்தேன்!

நீ தூங்கின பிறகு கேக்கை கொண்டு வந்து பிரிட்ஜில் வச்சுட்டேன்! எப்பூடி..?” என்றான் காலரை தூக்கி விட்டுக் கொண்டு!

“அது சரி.. இந்த பூச்செடி அலங்காரம்! நீ மாடிக்கு சும்மா எல்லாம் வர்ற ஆள் இல்லையே! அதுவும் இந்த மழையில!

உண்மைய சொல்லு மாமா. தம் அடிக்க தானே இங்க வந்த?”

அவன் அசடு வழிந்தான்.

“ம்ம். அது நேத்து பூரா சரியான மழை இல்ல. நான் வேற ரொம்ப நனைஞ்சுட்டேன்! குளிர் நடுக்குச்சு! அதான் ஒரே ஒரு தம் அடிச்சேன்! ப்ளீஸ் விடேன் ஒரு நாளைக்கு!”

“நோ வே. தம் அடிச்ச வாய்க்கு இனி கிஸ் கிடையாது!” அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்!

“சரி.. சரி.. கோச்சுக்காத..இனி மாட்டேன்! வா இப்ப கேக் வெட்ட வேண்டாமா?”

“ம்ம். சரி.” என்று பிகு பண்ணிக் கொண்டு ஒத்துக் கொண்டவள்,

“ஷ். மாமா ஒரு நிமிஷம்.. நாம இத.. இந்த ஹேப்பியான நேரத்தை ரெக்கார்ட் பண்ணனும்!

இரு வர்றேன்” என்று போனை எடுத்து அங்கிருந்த ஒரு ஜன்னலில் வாகாக நிறுத்தி வைத்தாள்!

“அங்க வச்சா ரொம்ப சரியா இருக்கும்! நான் ரீல்ஸ் எடுக்கும் போது அங்க தான் வச்சு ரெக்கார்ட் பண்ணுவேன்!”

“இப்ப கேக் வெட்டலாமா?” என்று போனை ரெக்கார்ட் மோடில் வைத்து விட்டு வந்தாள்!

“உன்னை.. திருத்தவே முடியாது. சரியான ரீல்ஸ் பயித்தியம்டி நீ!” என்றவாறு, கேண்டிலை ஏற்றி வைத்தான்.

அவள் அதை ஊதி கேக் வெட்டி எடுத்து அவனுக்கு ஊட்ட வந்தாள்!

“நோ..லேடிஸ் ஃபர்ஸ்ட்” என்றவன் கேக்கை வாங்கி அவள் வாயில் ஊட்டினான்!

ஊட்டிய அதே வேகத்தில் லபக்கென்று அதை தன் வாயில் வாங்கியும் கொண்டான்!

“கேக் தான்மா சாப்பிட்டேன். நான் என்ன கிஸ்ஸா அடிச்சேன்!” என்று அவன் உல்லாசமாக கேட்க ,அவளோ அவன் நெஞ்சில் குத்தினாள்.

“ஃபிராடு.. ஃபிராடு..”

“எஸ். டெஃபனட்லி!” என்று அவளை கைகளில் அள்ளிக் கொண்டு சுவரோரம் அங்கிருந்த திவான் கட்டில் போன்ற சாய்மான அமைப்பில் மஞ்சு கட்டி செஞ்சு வைத்த கல்லில் அவளோடு அமர்ந்தான்.

அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அவளும்!

“நல்லா ஜில்லுனு இருக்குடி இந்த கிரானைட் கல்! உன் ஐடியா சூப்பர்! இப்படி மழை பேஞ்சு விட்ட பின்னே, இப்படி மாடியில சுத்திலும் பூக்களோட, மடியில பொண்டாட்டிய கொஞ்சுற சுகம் இருக்கே! சொர்க்கம்!”

“ஆமாம் மாமா. நான் கூட காணி நிலம் வேண்டும் பாரதியார் பாட்டு போல  பாடப் போறேன்!

மாடி ஒன்று வேண்டும்!அதில் மஞ்சள் லில்லி பூக்கள் பூக்க வேண்டும்!

புருசன் மடி வேண்டும்! அப்புறம் அவனின் முத்தங்களும் வேண்டும் அப்படின்னு!”

“ஓ.. அதுக்கென்ன கொடுத்துட்டா போச்சு!”

அடுத்த பெய்த முத்த மழையில் நனைந்தவள்,

“எனக்கு இப்படியே சந்தோசத்துல உசிரே போனா கூட போகட்டும் மாமா! அப்படி ஒரு நிறைவா இருக்கு!”

“உதைப்பேன் ராஸ்கல்! பர்த்டே அதுவும் பேச்சை பாரு!

உன்னால எல்லாம் என்னைய விட்டுட்டு, அப்புறம் மீனுக் குட்டிய விட்டுட்டு போக முடியுமா?

இல்ல நான் போக விட்டுருவேனா?

வேணாம் இந்த பேச்சு!” ரகு கொஞ்சம் கோபமாக பேச,

“அச்சோ.. ஏதோ உணர்ச்சி வசப்பட்டு உளறிட்டேன் மாமா! சாரி. நீ சொல்றது சரி தான்!

என்னால எல்லாம் உங்கள விட்டு போக முடியாது! அப்படியே போனாலும் ஆவியா உன்னை தான் சுத்தி வருவேன்!” கண்களை உருட்டி பயமுறுத்தினாள் விளையாட்டாக!

அவன் இன்னமும் கோபமாகவே இருக்க, “சரி.. சரி,, இந்த பேச்சு வேண்டாம்!

இன்னொரு வாட்டி கேக் சாப்பிடறியா மாமா?” என்று சொல்லி கண்ணடித்தாள்! அதில் கோபம் குறைந்தவன்,

“ம்ம். சாப்பிட்டா போச்சு” என்று அவள் இதழ்களை கவ்விக் கொண்டான்!

கொஞ்ச நேரம் கழித்து, “அச்சோ.. மாமா..” என்று அவனை விலக்கினாள்!

“ஏண்டி என்ன ஆச்சு?”

“போன்ல எல்லாம்  ரெக்கார்ட் ஆகிட்டு இருக்கு!”

“அச்சச்சோ.. எடு.அத நிறுத்து.” என்று அவனும் வேகமாக எழ, அவள் போனை எடுத்து அந்த வீடியோவை டெலீட் செய்ய போனவள், கொஞ்சம் நிறுத்தினாள்!

“மாமா.. வேண்டாமே.. இத நாம அப்படியே ஒரு ஞாபகார்த்தமா வச்சுப்போமே!

வயசான காலத்துல ரீ கலெக்ட் பண்ணிக்கலாம் நல்ல மெமரிசை!”

“ஆனா..பார்த்து பத்திரம்! நீ தான் சோசியல் மீடியாவில் அதிகம் புழங்குறவ! தவறுதலா அப்லோட் பண்ணி வச்சுட போறே!”

“இல்ல மாமா.. இத நான் உன்னோட லேப்ட்டாபில் காபி பண்ணிட்டு ஏன் போனில் டெலீட் பண்ணிடறேன்!”

“அப்ப சரி!”

ரகுவின் போனிற்கு அழைப்பு வர,  பழைய நினைவுகளில் இருந்து திரும்பினான்!

தன் உதவியாளர் கேட்ட ஏசி இன்ஸ்டாலேசன் சம்மந்தமான கேள்விக்கு பதில் அளித்து விட்டு எழுந்தவன், அலமாரியில் இருந்த மது பாட்டிலை எடுத்து அப்படியே கவிழ்த்துக் கொண்டான்!

———-

நாதன் சிட்டி.

ரியல் எஸ்டேட் அதிபர் பூமி நாதனின் இப்போதைய ப்ராஜெக்ட்!

ப்ராஜெக்ட் என்றால் ஏதோ சிறிய ப்ராஜெக்ட் அல்ல!

அதுவொரு தனியார் ஒருங்கிணைந்த நகர அமைப்பு(Private Integrated township). அதில் பாதுகாக்கப் பட்ட குடியிருப்பு வளாகம், மருத்துவ மனைகள், பள்ளிக் கூடங்கள், பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள், கடைகள், வணிக வளாகங்கள் என்று அத்தனையும் ஒரு குடையின் கீழ் இருப்பது போன்ற அமைப்பு!

ஒரு மினி சொர்க்க பூமி!

மிகப்பெரிய அந்த ப்ராஜெக்ட்டில் பல முன்னாள், இந்நாள் அமைச்சர்களின் கருப்பு பணமும் இறக்கப்பட்டு இருந்தன!

எல்லோருக்கும் பூமி நாதன் தான் பினாமியாக இருந்து செயல்பட்டு வருகிறார்!

அவரது ஏஜென்ட் குரு மூர்த்தி!

அவன் தான் அவர்களின் ப்ராஜெக்ட்டுக்கு தேவையான நிலங்களின் சொந்தக்கரர்களை சந்தித்து, சாம பேத தான தண்டம் அனைத்தையும் உபயோகித்து கையகப்படுத்தி தந்து கமிசன் பெற்றுக் கொள்வான்.

அவனால் முடிந்த வரை அவனே பார்த்துக் கொள்வான்!

அப்படி முடியாத பட்சத்தில் பிரச்சினை ஏற்படுத்தும் நபரை பற்றிய விபரங்களை பூமி நாதனின் உதவியாளர்களுக்கு தெரியப்படுத்தி விடுவான்!

பின் அவர்கள் “பார்த்துக் கொள்வார்கள்!”.

அந்த குரு மூர்த்தியுடன் தான் ரமேஷ் வந்திருந்தான் பூமி நாதனைப் பார்க்க.

மெயின் ரோட்டுக்கு அருகில் இருந்த அவனது நிலம் ஒன்று அவர்களுக்கு தேவைப்பட்டது!

அதை கிரயம் செய்து கொடுப்பது சம்மந்தமாக வந்திருந்தான் அங்கு.

அங்கு பூமி நாதனின் உதவியாளர்கள், இவன் கிராமத்து பேரைக் கேட்டவுடன், “அந்த ஊரா..ஏண்டா நீங்க அடங்கவே மாட்டீங்களா?

எங்கள சும்மா எதிர்த்து சும்மா சோசியல் மீடியாவுல போட்டுகிட்டே இருந்துச்சே ஒரு பொம்பள.

பத்தாததுக்கு சுய உதவி குழு நடத்துற பொம்பளைங்க மூலமா எங்களுக்கு குடைச்சல் கொடுத்துச்சு!

இப்ப பார்த்த இல்ல! அதோட நிலைமை!”

என்று ரமேசை மிரட்ட, “அய்யோ அண்ணே நீங்க தப்பா நினைச்சுட்டீங்க! நான் கிரயம் பண்ணிக் கொடுக்க வந்தவன்!” என்று காலில் விழுந்தான் அவன்!

“பார்த்து சூதானமா இருந்துக்கங்க! ஆள் யாருன்னு தெரியாம கொடி பிடிச்சா அந்த பொம்பள கதி தான் பார்த்துக்கோ” என்று மீண்டும் ஒரு முறை மிரட்டி விட்டு சென்றான் அந்த ஆள்!

“ஏன்யா.. அந்த மஞ்சு அந்த வடிவேல் கூட ஓடிப் போய்டுச்சுன்னு இல்ல ஊருக்குள்ள பேசிட்டு இருக்காங்க! இவர் என்னய்யா இப்படி சொல்லிட்டு போறாரு!” என்று குரு மூர்த்தி காதில் கேட்டான்!

“அது அப்படி தான் சொல்ல சொல்லி இருப்பாங்க! நீ சும்மா இருடா. இது எல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம்!”

 அதுவும் சரி தான் என்றான் ரமேஷ்.

—–

அதே நாள்!

இரவு கனவில் எதையோ கண்டு பயந்து அலறினாள் ரஞ்சிதா!

“ஆமா..ஆமா..நான் அப்படி சொல்லி இருக்க கூடாது தான்! ஆனா அந்த பரமசிவம் தான் உன்னைப் பத்தி தப்பா பேசிட்டு இருக்காரு!” என்று ஏதோ உளறினாள்.

“என்னடி.. என்ன ஆச்சு?” என்று ரத்தினம் தனது ஒரு கையால் அவளை எழுப்பினான்.

மஞ்சள் லில்லி பூக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!