Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

அகம் கொய்த அனலி -04

               அகம் -04

“இப்ப என்ன த்துக்கு புளிஞ்சு புளிஞ்சு அழுவற நீ?” கடுப்பாய் கேட்டான் கலைச்செல்வன்.



Advertisement

“ஒனக்கென்ன?” என்று மூக்கை உறிஞ்சியவரைப் பார்க்க ஒரு பக்கம் பரிதாபமாக இருந்தாலும்,’ இவரை யார் போய் கேட்க சொன்னது?’ என்ற கோபம் தான் அவனுக்கு அதிகமிருந்தது.

Advertisement

“சாப்பிடு த்தா” என்றதும்,” இப்ப சோறு ஒண்ணுதேன் கொறைச்ச” என்று சிடுசிடுத்தார் அதற்கும்.

Advertisement

“இங்காருத்தா நா ஒன்னைய போயி பொண்ணு கேட்க சொன்னேனா?, நீயா போயி கேட்டுப்புட்டு வந்து மூக்கால அழுதா நா என்னத்த சொல்ல. எது கேட்டாலும் சள்சள்ளுனு பாயுத” என்று அவனும் அவன் பங்கிற்கு கத்த

Advertisement

“ஆமாமா அப்படியே நீயி பொண்ணு கேட்க சொல்லிட்டாலும், எந்த நேரத்துல அந்த மவராசிய கட்டி வச்சேனோ” என்று ஒப்பாரி வைக்க

“வாய மூடுத்தா நெதோம் (தினம்) இதே ரோதனை ஒங்கூட, இனிமேங்காட்டியும் பொண்ணு கேட்குதேனு கெளம்பு பெறவு இருக்கு சங்கதி” என்று கலையும் கத்தினான்.

“அப்புடித்தான்டா பேசுவேன் அப்புடியே தான் பேசுவேன். ஓ செத்துப் போன பொஞ்சாதிய பேசுறதுக்கே இத்தனை கொக்கறிக்கிற, என்னைய அங்க ஒவ்வொரு சிறுக்கியும் கேட்குதா ஒம்மவனுக்கு புள்ளையே பொறக்காதாமே அதுனால தான் சீரழிஞ்சவளை கெட்டினான்னு எனக்கு எப்படி இருக்கும்?” என்று நெஞ்சிலேயே அடித்துக் கொண்டு அழுதார் அவர்.

ஓடிவந்து அன்னையின் கையைப் பிடித்துக் கொண்டவன்,” ஏ ஆத்தா. என்னைய நீயும் உசுரோட கொன்டு (கொன்று) பொதைக்கித” என்று இரு கைகளையும் முகத்தில் வைத்துக் கொண்டான் அவர் அரற்றலில் கலங்கிப் போனவனாய்.

“ஒத்த கலியாணத்தை பண்ணிக்கய்யா பெறவு இந்த சென்மம் எதையும் ஒங்கிட்ட கேட்காது” என்று இறைஞ்ச அவனுக்கு மனம் கனிந்து போனது.

“பெறவு எம்புள்ளக்குட்டி எல்லாம் வேணாமாக்கும், கலியாணம் பண்ணுனா போதுமாட்டுக்கு இருக்கா?” என்று புன்சிரிப்புடன் கேட்டவனை, இன்ப அதிர்வுடன் பார்த்து விட்டு,” நெசமாத்தானா?!” என்றார் ஆவலாக.

“நெசத்துக்குமே தான். ஆனா எவன் பொண்ணு குடுக்க நிக்கிதான் ஓ மவனுக்கு?” என்றான் கிண்டலாக

அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டு ,”அதெல்லாம் எந்த சீமையில இருந்தாச்சும் கொண்டு வந்துபுட மாட்டேன். பெறவு எனக்கென்ன சோலிங்கேன். இந்த சில்லாவே கிடுகிடுக்க எம்மவன் கலியாணத்தை பண்ணிப்போட மாட்டேன். பாரு இந்த திருப்பரங்குன்றமே திரும்பி பாக்கும் அப்புடி கெடி கெடியா கலியாணத்தை நடத்துவேன்.” என்றார் பெருமிதமாக.

“ஹ்ம்ம்”என்றவன், அப்போதைக்கு திருமண விஷயத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டோம் என்ற நிம்மதியில் அங்கிருந்து சென்றான்.

அதற்குள் அவர் பரபரத்தார் பெண் தேட வேண்டும் என்று . பின்னே சட்டென மனதை மாற்றி கொண்டான் எனில் அதனலாயே இந்த அவசரம் அவருக்கு.

********

மகனின் கையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் இலக்கியா.

“மம்மி வாட் ஹேப்பண்ட்?” என்று சிறு குரலில் சஞ்சய் கேட்க

“நத்திங் டியர். நீங்க தூங்கிட்டு இருந்தீங்களா அதான் மம்மி டிஸ்டர்ப் பண்ணாம உட்கார்ந்து இருக்கேன்.”என்று வந்த கண்ணீரை அவன் காணாமல் துடைத்துக் கொண்டாள்.

“ஐம் ஹங்க்ரி” என்றதும் ,”இதோ உங்களுக்காக ஃபுட் ரெடி.” என்று குரலில் உற்சாகம் கூட்டினாள்.

மருத்துவரின் ஆலோசனைப்படி தான் உணவு கூட அவனுக்குத் தரப்பட்டது.

சர்க்கரை உள்ள உணவு, ப்ராசஸ் செய்த எந்த உணவு பண்டமும் அவனுக்கு தரக் கூடாது. அதனாலேயே சிரத்தை எடுத்து அவனுக்கான உணவை கொண்டு வருகிறாள். முடிந்த அளவு அவனுக்கு வலி இல்லாமல் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதை மேற்கொள்கிறாள்.

‘இப்படி காப்பாற்ற வேண்டுமா?’ என்று அவளது பிறந்த வீட்டினர் நொடிக்க, அதற்காக அவனைக் கொல்லவா முடியும். கடவுள் படைத்த உயிர் எப்போது பிரியுமோ அப்போது தானே பிரியும். அவனுக்கு பார்க்க நான் இருக்கிறேன் இருக்கும் வரை அவன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தான் போராடுகிறாள். பெற்றவள் அவளைத் தவிர அக்கறை கொள்ள யாரால் முடியும்.

மகன் விழித்திருக்கும் வரை அவனோடு நேரம் செலவிட்டு உறங்க வைத்து விட்டு பின் தன் வேலையைத் தொடர்ந்தாள்.

“குட் மார்னிங் பாப்பா தம்பி முழிச்சா கூப்பிடுறேன்” என்றபடி வந்தார் சஞ்சய்க்கான ஹோம் நர்ஸ் வெரோனிகா.

“குட் மார்னிங் சிஸ்டர். ஓகே.” என்று எழுந்து கொண்டவள் மகனின் முகத்தை வருடி முத்தமிட்டு வெளியேறினாள்.

“என்ன இலக்கியா இங்கே?”என்ற குரலில் யாரது என்பது போல திரும்பியவள் கலைச்செல்வனைக் கண்டு இனிமையாக அதிர்ந்தாள்.

“மிஸ்டர் கலைச்செல்வன் நீங்களா நான் இங்கே தான் என் பையன் சஞ்சுவை அட்மிட் பண்ணி இருக்கேன்.டெய்லி வருவேன்” என்றாள்.

 ஏற்கனவே காத்தமுத்து மூலம் இலக்கியா பற்றி அறிந்திருந்தவன் சட்டென வருத்தம் கொண்டு ,”தம்பிக்கு இப்ப எப்படி இருக்கு?” என்று கேட்க

“அப்படியே தான் இருக்கான். பட் இப்போ என் கிட்ட பேசறான் அது ஒண்ணு மட்டும் தான் எனக்கு ஆறுதல்” என்றாள் தன் வேதனையை வெளிக்காட்டாமல்.

“ஹ்ம்ம் சீக்கிரம் சரி ஆகிடும் இலக்கியா.”என்றவனுக்கே அவநம்பிக்கை தான். அவ்வளவு விரைந்து குணமாகும் நோய் அல்லவே அது. மரணத்திற்காக நாட்களை எண்ணுபவன் அந்த குழந்தை என்று நன்றாக தெரிந்தாலும் சிறு பொய் கூட அவளுக்கு ஆறுதல் தராதா என்ற எண்ணம் தான் அவனுக்கு.

“ஹ்ம்ம்” என்றவள்,” சரி நீங்க இங்க என்று நிறுத்த,” வேண்டப்பட்டவங்க ஒருத்தரை பார்க்க வந்தேன் மா ” என்றான்.

“ஓஓஓ”என்றவள், வேலைக்குச் செல்ல வேண்டும் என்று கிளம்பி விட்டாள்.

    எத்தனை திடம் இந்த பெண்ணிடம் என்று வியந்தபடி அங்கிருந்து சென்றான் கலையும்.

    நாட்கள் நகர இருவரின் சந்திப்பு ஏதேச்சையாக எப்போதாவது நிகழத் தான் செய்தது. அப்படியே இருவரும் பேசிக் கொண்டதில் தான் இலக்கியா தன் மனைவி சந்தியாவுடன் படித்தவள் என்றும் கலைச்செல்வனைப் பற்றி முன்னரே சிலபல விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறாள் என்றும் தெரிந்தது கலைச்செல்வனுக்கு.

    “ஏத்தா சந்தியா கூட படிச்ச புள்ளையா நீ அது சரி”என்றவனுக்கு சந்தியா காதலித்தவனைப் பற்றி தெரிந்து இருக்குமா என அறிய வேண்டி இருந்தது.

    ஆனால் இலக்கியாவிற்கு சந்தியா பற்றியும் கலை பற்றியும் மட்டும் தான் தெரிந்தது. இதற்கு மேல் துருவ வேண்டாம் என்று அவனும் விட்டு விட்டான். பிறிதொரு நாளில் சந்தியா விரும்பியவனையும் அவள் குழந்தையையும் குடும்பத்தோடு சந்திக்கப் போவது இலக்கியாவால் தான் என்று உணர்ந்து கொண்டான் கலைச்செல்வன்.

    அழகினியன் குடும்பத்தை (அழகோவியம் உயிரானது நாவல்) சந்தித்தப் பிறகு இலக்கியா கலைச்செல்வன் சந்திப்பு அடிக்கடி நிகழ்ந்தது. ஆனால் அது வெறும் நட்பு ரீதியாகவோ அல்லது ஏதேனும் உதவிக்காகவோ மட்டும் தான் இருந்தது.

    இந்த நிலையில் தான் தனம் ஒரு வழியாக மகனுக்கு பெண் பார்த்து திருமணம் வரை கொண்டு வந்திருந்தார். சொந்தத்தில் தான் பெண் அமைந்தது. தனத்தின் அண்ணியின் ஒன்று விட்ட தங்கச்சி மகள் என்றதில் முறை வருகிறதா என ஆராய்ந்து ஒரு வழியாக மகனையும் சம்மதிக்க வைத்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார் தனம்.

    “இதோப்பாரு கலை உன் மனசுக்கு மதிப்பு குடுத்து நாங்க அமைதியா கெடந்தோம் இனிமேட்டுங்கும் அப்படியே இருந்தா சரியா வராது. நீயி என்னமும் பண்ணிக்க. ஒனக்கு வார பொதன்கெழமை திருப்பரங்குன்றம் முருவன் கோயில்ல கலியாணம் வெச்சிருக்கோம். பொண்ணு நம்ம சின்னமனூர் அத்தை மவதேன். ஒனக்கு பொருத்தமா இருக்குது சாதகம்.”என்றவர்

“இதுக்கு மேற்பட்டு முடியாது வைக்காதுனு ஆராச்சும் பேசுனீக என்னிய உசுரோடவே பாக்க முடியாது”என்றார் கடுமையான குரலில்.

“ஆத்தா… அப்பத்தா !”என்று ஆளாளுக்கு அரற்ற

“என்னடே… என்னிய அரட்டுனா கம்மினு இருப்பேனு நெனப்போ…? நாஞ்சொன்னா சொன்னதுதேம். இது எம்ம வீட்டு மனுசன் மேல சத்தியம் “என்க

‘போற போக்குல என்னைய கொல்ல ப்ளான் போடுதா பாரு.’என்று அவரின் கணவன் மனதில் புலம்பிக் கொண்டார்.

    “ம்மோவ் பரிசம் போட வேணாமா நேரா கல்யாணம் னு சொல்ற அதுவும் ஒரு வாரத்துல எப்படித்தா”என்று கலை தாடையை தேய்த்தபடி கேட்க மற்றவர்களுக்குமே அதே யோசனை தான்.

    “அட அந்த புள்ளைக்கு அடுத்த மாசம் வரைக்கும் பரிச்சை இருக்குதாம்டா. அதான்”என்றிட

    “அப்ப படிக்கிற புள்ளையா என்னத்தா நீயி. ரெண்டாங்கல்யாணம் அதுல போய் சின்னப்புள்ளைய பொண்ணு பாத்து இருக்க”என்று கலை கடிந்து கொள்ள

    “ப்ப்ச் நான் அப்படி பார்ப்பேனா… இந்த புள்ள ஏதோ மேல்படிப்பு படிக்குதாம் அதுல பரிச்சையாம் வயசு 27 ஆச்சு. அவ ஆத்தா அப்பன் சரின்னு சொல்லி புள்ளையும் சம்மதிக்க போய் தான் இந்த கலியாணம்”என்று நீண்டதொரு விளக்கம் கொடுத்தார் தனம்.

    “நல்ல படிக்கிற புள்ள போலவே. ஏன்த்தா அதெப்படி இங்கே வந்து செலாத்தலா இருக்கும்.”என்று அடுத்ததாய் அவன் மறுக்க தனம் கடுப்பாக “இப்புடியே ஏதாவது சொல்லி ஏழ்ரைய கூட்டாதடா. அதெல்லாம் இருக்கும். இங்கே என்ன வசதி இல்லை.சந்தியாவுக்குனு பாத்து பாத்து எளைச்சு தான வீட்டை கட்டியிருக்க இதுல இருக்க கசக்குமா?”என்று சொல்லி விட கலைக்கு மறுப்பதற்கு வழி இல்லாமல் போனது.

    தனம் தான் அனைவருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஊரையேக் கூட்டியிருந்தார். இலக்கியாவின் வீட்டிற்கும் பத்திரிக்கை வைத்து இருக்க செல்வம் தன் மனைவியோடு வருவதாக கூறியிருந்தார்.

    *********

    “எதுவுமே செய்ய முடியாதா மேம்”வருத்தமாக கேட்ட இலக்கியாவை ஆதூரமாகப் பார்த்த அந்த வழக்கறிஞர் “ஒன்லி ஆப்ஷன் உங்களோட ரீ மேரேஜ் தான் மேடம். நீங்க செகண்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டா மட்டும் தான் இந்த சொத்துக்களை என்ன வேணும்னாலும் செஞ்சுக்கலாம்னு உங்க மாமனார் மாமியார் எழுதி இருக்காங்க. இல்லாட்டி அவங்களோட சொந்த பந்தங்களுக்கு போகிற மாதிரி எழுதி இருக்காங்க”என்று சொல்ல இலக்கியாவிற்கு மனதிற்கு வருத்தமாக இருந்தது.

    அவர்கள் எண்ணம் சரி தான் என்றாலும் சொத்துக்களை ஏதாவது ஆசிரமத்திற்கு செல்லும் வகையிலாவது எழுதி இருக்கக்கூடும் கூடாதா என்று ஆதங்கப்பட்டுக் கொண்டாள்.

    “ஓகே மேம் நான் பார்க்கிறேன்”என்று எழுந்து கொண்டவள் வெளியே வந்து இந்த தகவலை தனது தோழி ஒருத்திக்கு சொல்லிக் கொண்டிருக்க அதனை மிகச் சரியாக அவளது அண்ணன் முருகன் கேட்டிருந்தான்.

    ….. தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!