Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயம் எழுதும் கவிதை நீ

இதயம் எழுதும் கவிதை நீ 3

அத்தியாயம் 3
ராஜீவன் பிரியா காதல் விவகாரம் தெரிய வந்ததும் ராமமூர்த்திக்கு அதிர்ச்சியே! ஏனெனில் கந்தசாமி யார் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அவனுடைய பேராசையும்,பொய் கணக்குப் புத்தியும், கந்துவட்டித் தொழிலும்… எதுவுமே ராமமூர்த்திக்கு புதிதல்ல.

கந்தசாமிக்கும் ராஜீவனின் திறமையைப் பற்றி நன்றாகவே தெரியும்.வெட்டி எடுத்து வரச் சொன்னால் வேரோடு பிடிங்கி வருபவன்தான் ராஜீவன்.அவனைவிட சிறந்த துணை தன் மகளுக்கு யாரும் இல்லை என்பதும் அறிந்தவர்.இருந்தும் ராம மூர்த்தியை அவமானப்படுத்த வேண்டும் என்பதே அவர் எண்ணம்.

ராம மூர்த்தி அம்பிகாவுடன் சென்றிருந்தால் கூட குழைந்து குழைந்து பேசி மகளை மணமுடித்துக் கொடுத்திருப்பார்.ஆனால் ராமமூர்த்தி மட்டும் தனியாக வந்திருப்பதைப் பார்த்ததும்,அவரை மட்டம் தட்ட கிடைத்த ஒரு வாய்ப்பாகவே அந்த சம்பந்த பேச்சை பயன்படுத்திக் கொண்டான். இருந்தும் அவர் உள்ளுக்குள்  இருக்கும் நயவஞ்சகனுக்கு ராஜீவனின் பிடிவாதத்தைப் பற்றி நன்றாகவே தெரியுமாததால் எப்படியும் தன் மகள் திருமணம் நடந்துவிடும் என தப்புக் கணக்கு போட்டான்.

ஆனால் அவனின் கணக்கு ராமமூர்த்தியின் மகன் பாசத்திற்கு முன்னால் தவிடு பொடியாகியது. இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும் கந்தசாமி கூறிய அவமான வார்த்தைகள் அவர் மனதை விட்டு நீங்காது..மேலும் மேலும்  காயப்படுத்தியது. இதை அம்பிகாவிடம் கூட அவர் தெரிவிக்கவில்லை.மகனின் வாழ்க்கையை நினைத்து அவ்வளவு பயம்.



Advertisement

தம்பியை பற்றி தவறாக கூறினால் அம்பிகா ஏற்றுக் கொள்ள மாட்டாள். அதற்கு மேல் ராஜீவனின் பிடிவாதம் வேறு.நாம் என்ன சொன்னாலும் இருவரும் கேட்கப் போவது இல்லை.

ஆனால் இந்த விஷயத்தில் நாம் விட்டுக் கொடுத்துப் போகக் கூடாது.வாழ்க்கைத் துணை என்பது சாதாரணமானதல்ல. நம் சுக துக்கத்தில் பங்கேற்று ஈரேழு ஜென்மத்திலும் உடன் வரப்போகும் உறவு.அது மட்டும் சரியாக அமைந்து விட்டால் போதும்…வாழ்க்கை சிறப்பாகிவிடும்…

ராஜீவனின் பிடிவாத குணத்திற்கு நல்ல பொறுமையும்..விட்டுக் கொடுத்து செல்லும் குணமுடைய பெண்தான் சரியாக இருப்பாள்.இவனை போலவே அவளும் பிடிவாதமாக அமைந்துவிட்டால்…வாழ்க்கை அவ்வளவுதான் போராட்ட களமாக மாறிவிடும்.தன் மகன் வாழ்க்கை தன் கண்முன்னே வீணாக போவதை காணும் சக்தியெல்லாம் தனக்கு இல்லை.

Advertisement

கந்தசாமியின் கந்துவட்டி தொழில் என்பது சாதாரண தொழில் இல்லையே. ஊராரின் கண்ணீரும்,சாபச் சொற்களும் விழுந்த தொழில்…காலப் போக்கில் மகனையும் அதில் இழுத்து விட்டுவிட்டால்….அது தனது பேரக்குழந்தை வரை பாதிக்குமே…

Advertisement

யார் என்ன சொன்னாலும் இந்த விஷயத்தில் இறங்கி போகக் கூடாது. ராஜீவனுக்கு ஒரு நல்ல துணையை அமைத்துக் கொடுத்துவிட வேண்டும் என பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மனமுருக மகனுக்காக வேண்டிக் கொண்டிருந்தார் ராம மூர்த்தி.

கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து இரண்டு அகல் விளக்குகளை ஏற்றி வைத்து தூணில் சாய்ந்தபடி அமர்ந்தார். அப்போது அவரின் தூரத்து சொந்தமான அலமேலு வந்தார்.

ராமமூர்த்தியின் தாய் தந்தை உயிருடன் இருந்த வரை, உறவினர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வார்கள். அவர்கள் மறைந்த பிறகு, அந்த வருகைகளும் மெதுவாகக் குறைந்து போயின.  ஏதாவது திருமணம், விசேஷம், அல்லது துக்க நிகழ்வு என்றால் மட்டும் சந்திப்பு. அதைத்தவிர, ராமமூர்த்தியின் உலகமே அவரது அண்ணன், அக்கா குடும்பங்கள்தான்.

Advertisement

இன்று அலமேலுவை கோவிலில் பார்த்ததும் அவ்வளவு சந்தோசம் ராமமூர்த்திக்கு,”வாங்க அத்தை எப்படி இருக்கீங்க? “

நான் நல்லா இருக்கே மூர்த்தி..நீ எப்படி இருக்கே?உன் அண்ணன் அக்கா எப்படி இருக்காங்க?வீட்டுல எல்லாரும் செளக்கியமா?

எல்லாரும் செளக்கியங்க அத்தே..

நான் உன்னை கோவிலுக்கு வந்ததுமே பார்த்துட்டே..ஆனா நீ ரொம்ப உருக்கமா சாமிகிட்ட வேண்டிட்டு இருந்தே..அதான் அப்ப உன்னை தொல்லை பண்ண வேண்டானு விட்டுட்டே…

மன்னிச்சிடுங்க அத்தே.நான் நீங்க வந்ததே கவனிக்கல…வாங்க வீட்டுக்கு போலாம்.

இல்ல மூர்த்தி கொஞ்சம் வேலை இருக்கு இன்னொரு நாள் வரேன்.

தனியாவா வந்தீங்க?அத்தே

இல்ல மூர்த்தி என் பேத்தி அங்கே விளக்கு போட்டுட்டு இருக்கா. அவளுக்குதான் மாப்பிள்ளை தேடிட்டு இருக்கேன்.ஏதாச்சு நல்ல பையன் இருந்தா சொல்லேன்.

எந்த மாதிரி பையன் எதிர்பார்க்கறீங்க அத்தே.

நல்ல குணமா இருந்தா போதும்ப்பா. உனக்கு எல்லாம் தெரியும்தானே…ஏழு வயசு பையனையும்,அஞ்சு வயசு பொண்ணையும் விட்டுட்டு என் பையன் தொழில் தோல்வினாலே தற்கொலை பண்ணிட்டான்.அவன் போன ரெண்டு மாசத்துல என் மருமகளும் பின்னாடியே போய்ட்டா…அதுக்கு அப்பறோம் நான்தான் அந்த ரெண்டையும் வளர்த்து ஆளாக்குனே.

என் சக்திக்கு தகுந்த மாதிரி ரெண்டையும் படிக்க வெச்சேன்.பேரன் காலேஜ் படிப்பு எல்லாம் படிச்சு ஐடி கம்பெனில வேலைக்கு சேர்ந்துட்டான். அப்பாடா இனி பேத்திய பத்தின கவல இல்லைனு நெனச்சேன்.ஆனா எம்பேரன் வீட்டுல வயசுக்கு வந்த பொண்ணை வெச்சிட்டு அவன் கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டான்.

தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிட்டு அப்பறம் தனக்கு பண்ணிருக்கலாமே அத்தே. அதுதானே  நம்ம பழக்கமும் கூட.

ஆமாப்பா.சரி வந்தவளாச்சு அவனுக்கு புத்திமதி சொல்வானு பாத்தா.அவ இவனுக்கு மேல இருக்கறாப்பா. அவளோட தம்பிக்கு எம்பேத்தியே கல்யாணம் பண்ணனும்னு நிக்கிறா.

நல்லதுதானே அத்தே.கல்யாணம் செஞ்சு வெச்சிர வேண்டியதுதானே.

பையன் நல்லவனா இருந்தா நான் ஏன்ப்பா யோசிக்க போறேன்.அவன் ஒரு கேடுகெட்டவன்.ஊருல இருக்கற அத்தனை கெட்ட பழக்கமும் அவனுக்கு இருக்கு..பத்தாவதுக்கு ரெண்டு மூனு போலீஸ் கேஸ் வேற… அப்படிப்பட்டவனுக்கு எம்பேத்திய கட்டிக் கொடுக்க எனக்கு விருப்பமில்லப்பா.

அப்படிப்பட்ட பையன் வேண்டாங்க அத்தே.நீங்க உங்க பேத்தி ஜாதகம் இருந்தா கொடுங்க.நான் எங்க அண்ணங்கிட்ட கொடுத்து நல்லா பையனா பார்க்க சொல்றே.

நான் இப்போ ஜாதகம் எதுவும் எடுத்துட்டு வரலப்பா.நானும் எம்பேத்தியும் வாராவாரம் வெள்ளிக்கிழமை இங்க வந்துட்டு இருக்கோம்.அடுத்த வெள்ளிக்கிழமை கொண்டு வரேப்பா.

சரிங்க அத்தே.

சரி மூர்த்தி நான் கிளம்பறே.வீட்டுல எல்லாரையும் கேட்டதா சொல்லு.

“வாங்க அத்தே! உங்கள பஸ் வெச்சு விட்டுட்டு நான் கிளம்பறே” என இருவரும் பேசிக் கொண்டே விளக்கு போடும் இடத்திற்கு வந்தனர்.

மூர்த்தி, அதோ அங்க மஞ்சள் கலர் புடவை கட்டிட்டு விளக்கு போட்டுட்டு இருக்காளே அவதான் என் பேத்தி ரஞ்சிதா.

ராமமூர்த்தியின் பார்வை அந்த திசையில் திரும்பியது.

ஐந்தரை அடிக்கு சற்றே குறைவான உயரம். மாநிற முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லாத இயற்கை அழகு. பெரிய கருவண்டுக் கண்கள் எப்போதும் ஏதோ சொல்லத் துடித்தன. சிரிக்கும்போது கன்னத்தில் மெல்லிய குழி விழுந்தது.நெற்றியில் சிறிய குங்குமப்பொட்டு. அடர்த்தியாக வளர்ந்த குட்டையான முடியை அழகாக பின்னி லப்பர் பேண்ட் போட்டிருந்தாள்.
எளிமையான மஞ்சள் நிற பருத்தி சேலையில், எந்த ஆடம்பரமும் இல்லாமல் இருந்தாள். குடும்பப் பெண்ணுக்கே உரிய நிதானம் அவளின் செய்கையில் இருந்தது.

விளக்கில் எண்ணெய் ஊற்றி, திரி போட்டு…தீபமேற்றி…இரு கைகளையும் கூப்பி கண்களை மூடி அவள் வேண்டிக் கொண்ட விதத்தில் ஒரு பணிவும், பொறுப்பும் தெரிந்தது.

அவளைப் பார்த்துக் கொண்டிருந்த ராமமூர்த்தியின் மனதில் தன்னிச்சையாக ஒரு எண்ணம் தோன்றியது.

“ஒரு குடும்பத்தை வழிநடத்தற பொண்ணு இப்படித்தான் இருக்கணும்… இவ மாதிரி ஒரு பொண்ணு என் வீட்டுக்கு மருமகளா வந்தா… என் ராஜீவனோட வாழ்க்கை நிச்சயம் சிறப்பா இருக்கும்…”என எண்ணினார்.

அந்த ஒரு நொடியில், ரஞ்சிதாவை தன் மருமகளாக மனதிற்குள் முடிவு செய்து விட்டார் ராமமூர்த்தி.

“ரஞ்சிதா… இவங்க நம்ம தூரத்து சொந்தம். உனக்கு மாமா முறை வேணும்…” என்று அலமேலு அறிமுகப்படுத்தினார்.

ரஞ்சிதா உடனே ஒரு புன்னகையோடு,
“நல்லா இருக்கீங்களா மாமா?”என்று மரியாதையுடன் கேட்டாள்.

அவ்வளவுதான்…அந்த ஒரு புன்னகை, மரியாதையான நலம் விசாரிப்பு எல்லாம்.. இப்பவே மருமகளை தன் வீட்டிற்கு கூட்டிச் செல்ல ஆசை வந்துவிட்டது ராம மூர்த்திக்கு..

ராமமூர்த்தியின் மனதில் இதுவரை தோன்றாத ஒரு எண்ணம் மெதுவாக முளைத்தது.

இவ்வளவு நாளாக ராஜீவனின் பிடிவாதத்தையும், பொறுப்பற்ற நடத்தையையும் மாற்றுவதற்காகவே வருடக்கணக்காக போராடி வந்தவருக்கு, மகனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற அவசரமோ, பேரன் பேத்திகளைத் தூக்கிக் கொஞ்ச வேண்டும் என்ற ஆசையோ  இருந்ததில்லை.

ஆனால்…ரஞ்சிதாவைப் பார்த்த அந்த நொடியில், ஏனோ அவர் மனம் அந்த ஆசைகளை நினைக்க வைத்து விட்டது.

ஒரு கணம்…ராஜீவனின் அருகில் மணமகளாக ரஞ்சிதாவை மனக்கண்ணில் கற்பனை செய்து பார்த்தார்.அந்தக் கற்பனை அவருக்கு ஒரு நிறைவைத் தந்தது.

“இவள்தான்… என் மகனின் வாழ்க்கையை சரியான பாதைக்கு அழைத்துச் செல்லப் போகும் பெண்…”
என்று மனதிற்குள் உறுதியாக முடிவு செய்தார் ராமமூர்த்தி.

சிறிது நேரம் பேசிவிட்டு..இருவரையும் பஸ் வைத்துவிடும்போது, “அத்தே அடுத்த வெள்ளி தவறாமே உங்க பேத்தி ஜாதகம் கொண்டு வாங்க” என ஞாபகப்படுத்தினார்.

கிளம்பும்போது,”மாமா நாங்க போய்ட்டுவறோம். நீங்க பார்த்து வீட்டுக்கு போங்க” என சொல்லிச் சென்றாள் ரஞ்சிதா.

அடுத்த வாரம் ராம மூர்த்தியின் கைகளுக்கு ஜாதகம் வந்தது.

“தாயில்லாத பொண்ணு நல்ல பையனா பார்த்து சொல்லுப்பா” என்றார் அலமேலு.

பட்டீஸ்வரரை நன்றாக கும்பிட்டுவிட்டு குடும்ப ஜோதிடரிடம் இருவரது ஜாதகத்தையும் கொடுத்து பொருத்தம் பார்க்கச் சொன்னார் ராம மூர்த்தி.

கட்டங்களை சரிபார்த்த ஜோதிடர்.  “இருவருக்கும் பத்து பொருத்தம் இருக்கு.”என்றார்.

அந்த வார்த்தையைக் கேட்டதும் ராமமூர்த்தியின் முகத்தில் சிறிய நிம்மதி தோன்றியது.

பின் நெற்றியை சுருக்கியவாறே, “ஆனா..உங்க பையன் ஜாதகம்தான் இங்க பிரச்சனையா இருக்கு. பையனோடது வெட்டிட்டு போறே ஜாதகம்.. வாழ்க்கையில அவனே சில முடிவுகள் எடுத்து தன்னையும், தன்னைச் சேர்ந்தவங்களையும் கஷ்டப்படுத்துற யோகம் இருக்கு.
ஆனா… இந்தப் பொண்ணு ஜாதகம் வேற மாதிரி. எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் தாங்கி நின்னு குடும்பத்தை வழிநடத்தற யோகம் இருக்கு என்றார்.

தன் பையனை பற்றித்தான் ராமமூர்த்திக்கு தெரியுமே.எப்படியும் இந்த திருமணத்திற்கு அவன் சம்மதிக்க போவதில்லை.கல்யாணமாகி குழந்தை என்று வந்துவிட்டால் அவன் மாறிவிடுவான் என்று தனக்குத்தானே நம்பிக்கை சொல்லி திருமணத்திற்கு தேதியை குறித்து வாங்கிச் சென்றார்.

திருமணத்திற்கு தேதி குறித்தவரை எல்லாம் சரிதான்.ஆனால் இதைப்பற்றி ராஜீவனிடம் எப்படி கூறுவது என்ற யோசனையோடு அமர்ந்திருந்தார்.

அம்மா மூலம் தன் காதலுக்கு தூதுவிட்டு அப்பாவின் முடிவை எதிர்நோக்கியிருந்தான் ராஜீவன்.

இரவு எட்டுமணி சாப்பிட்டுவிட்டு வாசலில் சேர் போட்டு யோசனையாக அமர்ந்திருந்தார் ராமமூர்த்தி.

அம்பிகாவும்,ராஜீவனும் அவர் முன்பு வந்து நின்றனர்.அவர்கள் நோக்கம்தான் இவருக்கு தெரியுமே…சுற்றி வளைக்காமல் நேரே விஷயத்தை சொல்லி விட்டார்.

அதிர்ச்சியுடன்”பிரியா இருக்கும்போது எதுக்குங்க வேற பொண்ணு?”எனக் கேட்டாள் அம்பிகா.

கந்தசாமி கூறிய “வீட்டோட மாப்பிள்ளை” நிபந்தனையையும், அவமானப்படுத்தியதையும் ராமமூர்த்தி கூற..

அம்பிகா,”என் தம்பி அப்படி பேசறே ஆளில்லை…”என தம்பிக்கு ஆதரவாக பேசினார்.

கோபத்தின் எல்லையில் இருந்த ராஜீவன்,”நான் பிரியாவைத்தான் கல்யாணம் பண்ணுவேன்.”என வெடித்தான்.

இந்த ஜென்மத்துல அந்த வீட்டுல இருந்து பொண்ணு எடுக்கப் போறது இல்ல. இதுதான் என் முடிவு.

யாரை கேட்டு முடிவ பண்ணுணீங்க?என ராம மூர்த்தி முன்பு நெஞ்சை நிமிர்த்தி நின்றான் ராஜீவன்.

யாரை கேட்கனும்?என இவரும் பதிலுக்கு நெஞ்சை நிமிர்த்தி நின்றார்.

–கவிதை எழுதும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!