“சரியான கிறுக்குபய குடும்பமா இருக்கும் போல எவனாச்சும் இப்புடி ஒரு உயிலை எழுதி வைப்பானா ப்பா”என்று முருகன் வந்ததில் இருந்து இரைந்து கொண்டிருந்தான். “விடுய்யா இதுலயும் ஒரு சாதகமான விஷியம் நமக்கு இருக்குது”என்று செல்வத்தின் அம்மா கூற “இதுல என்னத்த அப்பத்தா லாவம் நமக்கு”என்று சிடுசிடுத்தான். “உயிலுபடி அவ ரெண்டாங்கல்யாணம் பண்ணிக்கணும் தான. அதை நம்மாள் ல ஒருத்தனை பாத்து பண்ணி வச்சுட்டா நமக்கு அடக்கமா இருக்கப் போறியான். அப்பப்ப அவங்கிட்ட இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வாங்கிடுவோம்”என்றார் இலகுவாக “ம்ம்க்கும் அந்த ராங்கி ஒத்துக்கணுமே அதுக்கு. அதான் போனீயே அந்த தனஞ்சயன் வீட்டுக்கு ஏதாவது நடந்ததா… அவன் இதை சாக்கு வச்சு புடிச்ச புள்ளையை கட்டிட்டான் இது இன்னும் மூளியா சுத்துது”என்றான் முருகன் எரிச்சலாக “அவளா நாமளானு பாத்துடுவோம்டா”என்று அவர் கூற “நல்லா சம்மதிச்சா உன் பேத்தி, போம்மா எனக்கே அலுப்பா இருக்குது எவனாவது வந்து திடுக்குனு தாலி கட்டினா தான் உண்டு”என்றவர் “பேசாம இருக்கறது போதும்னு நினைச்சுக்கடா முருகா. இல்லாட்டி எனக்கு தெரிஞ்சது சொல்றேன் அவளை அனுசரிச்சு போ. நீ கேட்காமலேயே அவ எல்லாம் செய்வா”என்று செல்வம் கூற அதற்கும் இரைந்தான் முருகன். “காலம் முழுக்க அவ கிட்ட கையேந்தணுமா நானு”என்றதும் செல்வம் மௌனமாய் நிற்க “எய்யா நீ கையும் ஏந்த வேணாம் காலும் ஏந்த வேணாம். நாஞ்சொல்றதைக் கேளு”என்ற செல்வத்தின் அம்மா தனது திட்டத்தை விவரித்தார். “சரியா வருமா அப்பத்தா”என்று தாடையை சொறிந்த முருகன் நம்பிக்கை இன்றி பார்க்க “அதெல்லாம் சரியா வரும்.அவளை சம்மதிக்க வைக்கிறது எம்பொறுப்பு. நீ மத்த ஏற்பாட்டை கவனி”என்றார் நம்பிக்கையுடன். முருகனுக்கு இந்த திட்டம் சரிவருமா என்று சந்தேகம் இருக்க அவனின் அப்பத்தா கொடுத்த நம்பிக்கையில் அந்த திட்டத்தை செயல்படுத்த தீர்மானித்தான். ********* “பொண்ணு வீட்டுல இருந்து வந்திருக்காவ ஆத்தா”என்று காத்தமுத்து உள்ளே வர தனம் பரபரப்பாய் அடுக்களையில் இருந்து ஓடி வந்தார். “வாங்க வாங்க வாய்யா வா செண்பகம்”என்று வரவேற்க வந்தவர்களும் மகிழ்ச்சியாக உள்ளே நுழைந்தனர். “என்ன சொல்லாம கொள்ளாம திடுதிப்புனு”என்றவர் “முத்து போய் எளநீயை சீவிக் கொண்டா”என்று அவனை அனுப்பி வைத்து விட்டு அவர்களோடு அமர்ந்து கொண்டார். “இங்கன ஒரு விசேஷம் மயினி அதேம் அப்புடியே உங்களையும் ஒரு எட்டு பாத்துட்டு போவலாம்னு வந்தோம். இன்னம் நம்மாளுவ வரலையோ”என்று சொந்தங்கள் யாரும் வரவில்லையா என்று கேட்க “ஆருக்கும் இன்னும் தாக்கல் சொல்லலை செண்பகம்.கலியாணம் முடியவும் இங்கன ஒரு வாரத்துக்கு விருந்துதேம். கறிக்கஞ்சிதேம்.”என்று பூரிப்பாய் கூற செண்பகம் தயக்கத்துடன் மென்று விழுங்கினார். “என்ன எதையோ சொல்ல மறுவுற பெறவு மென்னு முழுங்குத என்ன விஷியம் செண்பா”என்று நேரடியாகவே தனம் கேட்டு விட “ஒண்ணும் இல்லை க்கா அவ கெடக்கா”என்று பெண்ணின் தந்தை பரமன் மனைவியை பேச விடாமல் தடுத்தார். “நீ இரு பரமா செண்பா சங்கதி என்னான்டு சொல்லு”என்று அழுத்தமாக கேட்க “மயினி ஒனக்கேத் தெரியும் எம்மவ பன்னென்டாங்கிளாஸோட படிப்பை நிறுத்தி வீட்டோட இருக்கான்டு” “ஆமா அதுக்கு” “ஒண்ணும் இல்லை. கலியாணத்துக்கு பெறவு படிக்கணும்ன்டு தம்பி சொல்லுச்சாம்” “இது எப்ப” “ரெண்டு நா முன்னாடி ஏதேச்சமா கோவில்ல பாத்துருக்கும் போல. அப்பதைக்கு தான் சொல்லி இருக்கு” “அதுனால என்ன படிக்கட்டும்”என்று தனம் கூற “அட ஏ மதனி நீங்க வேற அவ பன்னென்டாங்கிளாஸையே தக்கி தடுமாறித்தேன் பாஸு பண்ணா. இதுக்கு மேற்பட்டு காலேசு எல்லாம் போவ மாட்டேன் னு சொல்லிட்டா நாங்களும் சரிதான்னு விட்டுட்டோம். இப்போ தம்பி படிக்க சொல்லவும் வேணாம்னு நிக்குதா அவளுக்கு படிப்பு மேல ஆசையில்ல மயினி. மாமேன் கலியாணத்துக்கு பெறவு படிக்க சொன்னா என்ன செய்யன்னு அழுகுதா”என்று செண்பகம் சொல்ல தனம் சிரித்துக் கொண்டே “ப்பூ இதான் விஷியமா நாங்கூட பெருசா என்னவோ சொல்லப் போறீயோன்னு பயந்துட்டேன். கலை வரவும் நா பேசிக்கிறேன். கலியாணம் கட்டுன பெறவு புள்ளக்குட்டி ஆகிப் போச்சுன்னா இதுக்கு நேரம் எங்கே இருக்கும்”என்றார் சமாதானம் செய்வது போல. செண்பகம் முகம் மலர்ந்து “அப்பிடின்னா செரி மயினி நாங்க பொறப்படுதோம்”என்று எழுந்து கொள்ள “இரு இரு ஆக்கி வச்சுட்டேன். ரெண்டு வா உண்கிட்டு போவ”என்று தனம் பரபரக்க “விஷேஷ வீட்டுல ஆச்சு மயினி அதுவே நெஞ்சுக்கு நிக்குது அதேம் எளநி குடிச்சோமே கெளம்புதோம்”என்று விடைபெற்று கொண்டனர். “ஏன்டி மாத்திப் பேசுன”என்று மனைவியை கடிந்து கொண்டார் பரமன். “பெறவு இவ படிக்கிறேன்னதும் கலையும் ஒத்துக்கிட்டாப்டி. இவ படிக்கப் போறேன்னு ஏதாவது துக்கிரித்தனம் பண்ணவா ஏற்கனவே அந்த சந்தியா பண்ணி வச்சதே போதும். எம்புட்டு பெரிய சம்மந்தம். இவ ஒழுங்கா வாழணுமில்ல”என்றார் செண்பகம். “அதுவுஞ்செரித்தேன்”என்று மனைவியிடம் பேசியபடி நடந்தார் பரமன். தனமும் மகனிடம் இதைப் பற்றி திருமணத்திற்கு பிறகு தான் பேச வேண்டும் என்று தீர்மானித்து கொண்டவர் அப்போதைக்கு விஷயத்தை மறைத்து வைத்தார். ********** அனைவருக்கும் திருமணத்திற்கு அழைப்பு விடுத்திருக்க கலைச்செல்வன் ஆத்யா திருமணத்திற்கு வந்தாக வேண்டும் என்று அழகினியனுக்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்தான். அவனும் குடும்பத்துடன் வருவதாக ஒப்புக் கொண்டான். “திருப்பரங்குன்றத்தில் தான் கல்யாணம். எல்லாரும் வந்திடணும்”என்ற கலை ஆத்யாவிற்கு புது பட்டுப் பாவாடை சட்டை ஒன்றை கொடுக்க அவளோ ஓவியாவைப் பார்த்தாள். “வாங்கிக்கடா டெடி”என்றதும் வாங்கிக் கொள்ள அவள் உயரத்திற்கு மடங்கி அமர்ந்து கொண்ட கலை “ஆத்தா மொத நாளே வந்திடணும் செரியா”என்றான் அவள் கன்னத்தை பிடித்துக் கொண்டு “டாடி கூட வர்றேன் கலைப்பா”என்று தெளிவாக கூற கலைக்கு அத்தனை மகிழ்ச்சி. “செரி தாயி நீ வந்தா போதும்”என்றவன் கிளம்பி விட்டான். ******* திருப்பரங்குன்றத்தில் தான் திருமணம் நடைபெற வேண்டும் என்று அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தையே புக் செய்திருந்தார் தனம். முருகன் அருளால் இன்றோடு என் மகனின் கடந்த கால கசப்பு ஒழிந்து விடும் என்ற நம்பிக்கை அந்த அம்மாவிற்கு. “யப்பா எல்லாம் வந்துகிட்டு இருக்காங்க கலை வேட்டிய மாத்து ஏ முத்து அண்ணனுக்கு நாலு இட்லியை வச்சு இங்கனயே கொண்டு வந்து குடு பந்திக்கு போனா ஒழுங்கா உண்க விடமாட்டாய்ங்க”என்ற தனம் பட்டுச் சேலை சரசரக்க பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் அலைந்தார். “மருமவனே இந்த கடியாரத்தை கட்டு”என்று சந்தியாவின் தந்தை கைக்கடிகாரத்தை அவனுக்கு அணிவித்து விட அவன் முகத்தில் கீற்றாய் புன்னகை. அது சந்தியா அவனுக்காக அமெரிக்காவில் இருந்து வாங்கி வந்த கைக்கடிகாரம். “என்னண்ணே மூஞ்சியில இவ்வளவு வெளிச்சம்”என்றபடி அவன் கையில் இட்லி தட்டைக் கொடுக்க “இது உங்க மயினி வாங்கிட்டு வந்தது”என்றான் புன்னகையுடன். “எண்ணே “என்று அழைத்த காத்தமுத்துவிற்கு மனமெல்லாம் ஒரு திடுக்கிடல். இன்னும் சந்தியாவையே நினைத்துக் கொண்டிருக்கிறானே அப்போது வரும் பெண்ணின் நிலை. எப்படி அவளை மனைவியாக ஏற்பான் என்ற கவலை அவனுள். “ப்ப்ச் என்னடா சொல்லக் கூட கூடாதா?”என்று அலுத்தவன் இரண்டு நிமிடத்திற்குள் இட்லியை உண்டு முடித்து விட்டுத் தயாராகச் சென்றான். “இந்த பெரியாத்தா வேற விழுக் விழுக்குனு அலையுது இவரு இன்னமும் சந்தியா மயினி நெனைப்பையே வெலக்காம திரியுதாரு இதெல்லாம் எங்க போய் முடியுமோ தெரியலையே”என்று புலம்பிக் கொண்டே அவன் வெளியே செல்ல அவன் மனைவி அவனை வேகமாக அழைத்தாள். “மெல்லத் தான் வாயேம்டி உன் மாமியாளுக்கு மேல அலையுத”என்று சலிப்பாக திட்டி விட்டு பார்க்க “யோவ் நீ வேற என் அவசரம் புரியாம”என்று பதிலுக்கு திட்டியவள் “மாமனோட பிரண்டு குடும்பத்தோட வந்திருக்காரு. சந்தியாக்கா மகளையும் தான் தூக்கியாந்துருக்காவ பாக்க அப்புடியே சந்தியாக்கா மாதிரியே இருக்குதுய்யா. ஊர்க்காரனுவ பாத்தா என்னத்துக்கு ஆவும்.அவங்க கெளம்புற வரைக்கும் கூடவே இரு சாமி”என்றாள் பதற்றத்துடன். ‘இதை யோசிக்கவில்லையே நாம்’என்று நினைத்தவன் “சரி புள்ள நா பாத்துக்கிறேன் நீ போய் புள்ளையலோட இரு”என்று மனைவியை அனுப்பி விட்டு அழகினியன் குடும்பத்தை காணச் சென்றான் காத்தமுத்து. ஊரார் எல்லாம் வந்து கொண்டிருந்தனர். இன்னும் சற்று நேரத்தில் மணமக்களை மணமேடைக்கு அழைத்து விடுவார்கள். பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் அந்த திருமண மண்டபம் இருக்க கலைச்செல்வன் தயாராகி விட்டான். மணப்பெண் அங்கு நடுவில் நிற்க செண்பகமும் பரமனும் அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர். தனம் வேறு கையைப் பிசைந்து கொண்டு நிற்க கலை நேரே அவர்களிடம் சென்று விட்டான். “என்னத்தா”என்று கலையின் குரல் கேட்க திடுக்கிட்டு திரும்பி பார்த்தார் தனம். “மச்சான் ஒங்க கிட்ட நேரடியாவே நாஞ்சொல்றேன்.எனக்கு இந்த கல்யாணம் வேணாம்”என்றாள் அழுத்தமாக. ஏன் என்பது போல அவன் பார்க்க “இந்த கல்யாணத்தை நான் பண்ணிக்க முடியாது மச்சான். எனக்கு இன்னும் பதினெட்டு வயசு முடியவே இல்லை”என்று கூற கலை அதிர்வாக பார்த்தான். “அதெல்லாம் இல்லை தம்பி. அது ஏதோ வெளையாட்டுப் புள்ளை”என்று செண்பகம் மென்று விழுங்க “அதெல்லாம் இல்ல மச்சான். என்னைய நாலு வயசுலயே ஒண்ணாவது சேத்துட்டாங்க. நான் இப்ப காலேஜு மொத வருஷம் தான் படிக்குதேன். அப்ப நீங்களே கணக்கு பண்ணுங்க. “என்றவள் “எங்கூட்டாளிக போலீசுக்கு போன் போட்டுட்டாளுக மச்சான். இப்போ இந்த கல்யாணம் நடந்தா உங்களை தான் போலீஸ் புடிக்கும். அதேம் வேணாம் னு நிக்குதேன் இவங்க கேட்க மாட்டிக்குதாக”என்றாள் வருத்தமாக. “இத்த அன்னைக்கே சொல்லத்தானத்தா. மண்டபம் வரைக்கும் விஷியம் வந்திருக்காதே”என்ற கலை “செரி நீ போ இங்கன ஆரும் ஒன்னைய எதுவும் சொல்லாம நா பாத்துகிடுதேன் போ”என்று உறுதி கொடுத்தவன் “லே காத்து அந்தப் புள்ளைக்கு அது விருப்பம் இல்லாமல் கலியாணம் நடக்க கூடாது. பத்திரமா கூட்டிட்டு போய் வீட்டுல விடு”என்றான். “எய்யா கலை”என்று தனம் தயங்க “ப்ப்ச் நீயென்னத்தா எஞ்சீவன வாங்காம விட மாட்டியா. ஒண்ணுத்தையும் விசாரிக்காம எங்கன கொண்டு வந்து நிறுத்தி இருக்கப் பாரு”எனும் போதே போலீஸ் உள்ளே நுழைந்தது. ….. தொடரும்.