Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

அகம் கொய்த அனலி -06

    கலைச்செல்வன் பேசிக் கொண்டிருக்கும் போதே போலீஸ் உள்ளே நுழைய தனம் பதற்றத்துடன் மகனைப் பார்த்தார்.

    “ப்ப்ச் யத்தா அவிய வரட்டும் அதுக்குள்ள ஏன் பம்முத”என்று திட்டியவன் திடமாகவே நின்றான். அது தான் திருமணம் நடக்கவில்லையே பிறகென்ன பயம்.



Advertisement

    “இங்கே கலைச்செல்வன் யாரு”என்று வந்த பெண் காவலர் கேட்க

    “நான் தான் மேடம்”என்றதும் “மைனர் பொண்ணை கல்யாணம் பண்ண வந்ததுக்காக”

Advertisement

Advertisement

    “பண்ண வந்ததுக்காக”குரலின் இறுக்கம் அவனின் கோபத்தை பறைசாற்றியது.

    “அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம்”என்றாள் அந்த இன்ஸ்பெக்டர் அலட்சியமாக

Advertisement

    “இங்கே மேரேஜ் நடக்கவே இல்லையே அப்புறம் எப்படி நீங்க என்னை அரெஸ்ட் பண்ண முடியும்”என்று அவன் கேட்க

    “சார் ஏற்பாடு பண்ணீங்களா இல்லையா இதோ இங்கே கோவில்ல கல்யாணம் நடக்கப் போறதா பதிவு எல்லாம் பண்ணி இருக்கீங்க. அதுவும் மைனர் பொண்ணை மேஜர் னு பொய் சர்டிபிகேட் வேற தந்து இருக்கீங்க”என்றதும் தனத்தை முறைத்தான் கலைச்செல்வன்.

    “அதுக்கு அத்தாச்சி என்ன இருக்கு.”என்று திடமாகவே நின்றான் கலை.

    “ஏன் இல்லை”என்றவர் பதிவு செய்த ரசீதை கொடுத்தார்.

    மணமகன் கலைச்செல்வன் மணமகள் இலக்கியசெல்வி என்றிருந்தது.

    “சரிங்க இப்ப இந்த கலியாணம் நடக்கலை ல்ல பெறவு என்னைத் தூக்கி உள்ள வைக்க எந்த சம்பவமும் இல்லை நாங்களே இன்னுஞ்செத்த நேரத்துல மண்டபத்தை காலி பண்ணிடுவோம். உங்களுக்கு அம்புட்டு சந்தேகம் இருந்தால் பொண்ணை கையோட கூட்டிட்டு போயிடுங்க”என்றான் அவனும்.

   “யோசனை எல்லாம் நல்ல யோசனை தாங்க ஆனா ஒங்க ஊருக்காரவங்களை நம்ப முடியாது. போன வாரம் இப்படி ஒரு கேஸுல நைட்ல கல்யாணத்தை முடிச்சு விட்டு இருக்காங்க. கைது பண்ண போனவங்க கிட்ட பிறந்த தேதியை காட்டி பதினெட்டு வயசு ஆகிடுச்சு னு நியாயம் பேசுறாங்க. பதினெட்டு வயசு ஆகறதா ஒரு பொண்ணோட மேரேஜ் தகுதி. வயசு முடிஞ்சா போதுமா என்ன சட்டம் பதினெட்டு வயசு பொண்ணுக்கு கல்யாணம் பண்ற வயசுனு சொன்னாலும் நமக்கு ஒரு அறிவு வேண்டாம். அந்த பொண்ணு கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தற அளவுக்கு தெம்பானவளானு யோசிக்க வேண்டாம்”என்றார் இன்ஸ்பெக்டர்.

    இதெல்லாம் எனக்கு தேவையா என்பது போல தாயைப் பார்த்தான் கலை.

    “இன்ஸ்பெக்டரம்மா நாங்க வயசு பாக்காம பொண்ணை மண்டபத்துக்கு கூட்டிட்டு வந்தது தப்புத் தான் இந்த கல்யாணம் எப்படியும் நடக்காது. என் மகனே இதுக்கு ஒத்துக்கவே மாட்டான்.நீங்க எங்களை நம்புங்க உங்களுக்கு அவ்வளவு சந்தேகம் னா ஒரு ஆளை எங்க வீட்டுக்கு கண்காணிக்க போடுங்க”என்றார் தனம்.

    அப்படி இப்படி பேச்சுவார்த்தை நிகழ முருகனை வணங்க சென்ற அழகினியன் குடும்பம் இலக்கியாவுடன் பேசியபடி மண்டபத்திற்கு வந்தது.

    இலக்கியாவின் அம்மா ஏதோ வேண்டுதல் என்று மகளை வற்புறுத்தி கோவிலுக்கு அழைத்து வந்திருக்க முருகன் தன் தந்தையுடன் சேர்ந்து கலைச்செல்வன் திருமணத்திற்கு வந்திருந்தான்.

   “சாரி கலை உங்க மேரேஜ் ன்னு சொல்லி இன்விடேஷன் வந்தது. நான் டேட் கவனிக்கலை பட் பாருங்க இவங்களை மீட் பண்ணி உங்க மேரேஜுக்கே வந்திட்டேன் நான்”என்ற இலக்கியா அப்போது தான் இன்ஸ்பெக்டரை கவனித்தாள்.

    ஒன்றும் புரியாமல் அவள் நிற்க அழகினியன் “ஏதாவது இஷ்யூவா கலை”என்று கேட்க அவனும் நடந்ததை விவரித்தான்.

    “ஷிட்”என்ற அழகு இன்ஸ்பெக்டரிடம் “கலைச்செல்வன் அந்த மாதிரி பண்றவர் இல்லை மேடம். இது தெரியாமல் நடந்ததா இருக்கலாம். அஸ் பர் லா நீங்க அவர் மைனர் பொண்ணை மேரேஜ் பண்ணா மட்டும் தான் அரெஸ்ட் பண்ண முடியும். இங்கே எதுவும் தான் நடக்கலையே. அவர் சொல்ற மாதிரி நீங்க பொண்ணை அழைச்சுட்டு போங்க”என்றான்.

    இன்ஸ்பெக்டர் செண்பகம் பரமன் இருவரையும் கண்டித்து திட்டி விட்டு கலையிடமும் கவனமாக இருக்கும்படி சொல்லி விட்டு கிளம்பினார்.

    திருமணம் நின்று போனதில் அனைவருக்கும் வருத்தம்.

    கலை முகத்தை இறுக்கமாக வைத்தபடி “இனிமே கலியாணம் கிலியாணம்னு அலைங்க பேசிக்குதேன்”என்று சொல்ல தனம் மயங்கி விழுந்து விட்டார்.

    “ஆத்தா”என்றவனுக்கு பேச்சே எழவில்லை.

    இலக்கியா சடுதியில் செயல்பட்டவள் தனத்தை மயக்கம் தெளிய வைத்தவள் கலைச்செல்வனை முறைத்தாள்.

    “அவங்க தான் வேதனையில் இருக்காங்கன்னா நீங்களும் இப்படி பேசி அவங்களை மேலும் சங்கடப்படுத்துறீங்க”என்று திட்ட

    “வேற என்ன தான் நான் செய்யத்தா என்னால முடியல”என்று சொல்லியே விட்டான் ஆற்றாமையாக

    “பொறுமையா பேசுங்க கலை. அவங்களும் பாவம் இல்லையா”என்றவள் “வெளியே இருங்க அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்”என்றதும் “ஆஸ்பத்திரிக்கு எதுவும்”என்றதில் புன்னகைத்தவள் “அவ்வளவு சீரியஸ் எல்லாம் இல்லை. ஸ்ட்ரெஸ் ஆகிட்டாங்க அவ்வளவு தான்”என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே தனம் எழுந்து விட்டார்.

    அவர் எழுந்ததும் ஒப்பாரியைத் துவங்க கலைச்செல்வன் கடுப்பானான்.

    இலக்கியாவின் அம்மா அங்கே வந்தவர் விஷயத்தை யூகித்தவராய் தனத்தை ஆறுதல்படுத்த முயன்றார்.

    தனமோ அழுகையை நிறுத்தாமல் இருக்க கலை அங்கிருந்து வெளியேறப் போக இலக்கியாவின் அம்மா “தம்பி இருப்பா அவங்களை இப்படி விட்டுப் போகாத”என்றார் தன்மையாக

    “வேறென்ன (அ)த்தே என்ன செய்ய சொல்றீய அவக பேசற பேச்சை பாருங்க. இப்பவே கலியாணம் நடக்கணுமின்னா பொண்ணு என்ன வானத்துல இருந்தா குதிக்கும் சும்மா ஒப்பாரி வச்சுக்கிட்டு “என்று சலித்தான்.

    பேச்சுவார்த்தை மட்டுப்பட்டு மண்டபத்தை காலி செய்து கொண்டு கிளம்பி இருந்தனர் கலையின் வீட்டினர் அனைவரும்.

    திருமணம் நடக்கவில்லை என்பதை விட கலைக்கு ஏதோ குறை என்று தான் அதிகமாக பேச்சு அடிபட்டது.

    சந்தியாவின் இறப்பும் அவளோடு நடந்த அவன் திருமணம் என்று அனைத்தும் விவாதிக்கப்பட தனம் நொந்தே போனார்.

    கலைச்செல்வன் மேலும் இறுகிப் போனான் திருமணம் நின்றதில். சந்தியாவை நாசமாக்கிய குடும்பத்தினர் வேறு கலையை வெகுவாய் சீண்டி இருக்க திருமணப் பேச்சே இந்த வீட்டில் எடுக்கக் கூடாது என்று அத்தனை தீர்மானமாக தனத்திடம் சொல்லி விட அவரோ அந்த மன அழுத்தத்திலேயே உடல் நலத்தைக் கெடுத்துக் கொண்டார்.

    சலித்துப் போனான் நடந்த நிகழ்வுகளில்.

    இதனிடையே அழகினியன் அழைத்துப் பேச”நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே”என்று அவன் கேட்க

    “கேளுங்க கலை ஏன் இவ்வளவு தயக்கம்”என்றதும் சிஷ நிமிட அமைதிக்குப் பிறகு “ஆத்தாவை என் கூட ரெண்டு நா எங்கேயாச்சும் அனுப்பி வைக்கிறீங்களா”என்று தயக்கமாக கேட்கவும் அழகினியன் மனதே கனிந்து போனது.

    “திருச்சிக்கு வாங்க கலை நாங்க இங்க இருக்கோம்.”என்று அழைக்க கலை உள்ளூர நகைத்துக் கொண்டான்.

    ‘மவளை அனுப்ப மனசு வராதே இவருக்கு’என்று எண்ணிக் கொண்டவன் வருகிறேன் என்று ஒப்புக் கொண்டான்.

    மதுரையில் இருந்து கிளம்பியவன் சில மணி நேரங்களில் திருச்சியை அடைந்திருக்க வளவன் இருக்கும் இடமான பிஹெஈஎல் குவாட்டர்ஸிற்கு தான் வர சொல்லி இருந்தான் அழகன்.

    “வந்துட்டேன் இனியா. இதுக்கு மேல எந்த பக்கம் வாரதுனு தெரியல. எல்லா வீடும் ஒரே மாதிரி இருக்கு”என்று அந்த நீண்ட தெருவை பார்த்தபடி பதிலளித்தான் கலைச்செல்வன்.

    “இதோ வர்றேன் நீங்க அங்கேயே நில்லுங்க”என்ற இனியன் சில நிமிடங்களில் அங்கே வந்து சேர்ந்திருந்தான். கூடவே ஆத்யாவும் வந்திருக்க கலையின் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி.

    “ஆத்தா”என்று அழைத்ததுமே “கலைப்பா”என்று அவள் அழைத்ததில் நெகிழ்ந்தவன் பிள்ளையை தூக்கிக் கொண்டான்.

    “இங்கே சுத்தி பார்க்க இடம் நெறய இருக்கும் கலை அதான் உங்களை இங்கே வரச் சொன்னேன். பாப்பாவுக்கும் ஹாஃப் இயர்லி லீவ் விட்டுட்டாங்க”என்று விளக்கம் தந்தவன் “அங்கே வந்தா பாப்பாவை யாராவது”எனும் போதே “புரியுது இனியா.”என்று முடித்துக் கொண்டான் கலைச்செல்வன்.

    இரு அறைகள் கொண்ட ஒரு வீட்டை பெற்றிருந்தான் வளவன். சமீபத்தில் அவனுக்கு கிடைத்த பதவி உயர்வுடன் வீட்டின் வசதியும் சற்று விசாலமாக கிடைத்தது அவனுக்கு. முதலில் இருந்தது ஒற்றை படுக்கையறை கொண்ட வீடு. விருந்தினர் வந்தால் தங்க முடியாது. இப்போதோ இரண்டு பெட்ரூமும் பெரிய ஹாலும் ஒரு சமையலறை கொண்ட வீடு கிடைக்க அங்கே தங்கள் ஜாகையை மாற்றி இருந்தனர் வளவன் குடும்பம்.

    காந்தா மதிய உணவை தயார் செய்து இருக்க உணவருந்தி முடித்தவர்கள் சிறிது நேர உறக்கத்திற்கு பிறகு மாலை வெளியே கிளம்ப முடிவு செய்து இருந்தனர்.

    “ஷன்மதி ஊருக்கு போயிருக்காங்க.அத்தையும் டெடியும் இங்கே தான் இருப்பாங்க. உங்களை அத்தை பார்த்துப்பாங்க நீங்க இங்க இருங்க கலை”என்று இனியன் கூற “நீங்க”என்று கலை நிறுத்தவும் புன்னகையுடன் “உங்க ஆத்தாவோட நீங்க இருக்க தான் இந்த ஏற்பாடு. நாங்க லால்குடியில் இருப்போம்”என்றான்.

    கலை கண்கலங்க இனியனின் கைகளைப் பிடித்துக் கொண்டு அமைதியாக நிற்க”எனக்காக என் டெடியை நீங்க தந்திருக்கும் போது இதை கூட நான் செய்ய மாட்டேனா கலை.”என்றவன் வேறெதுவும் பெரிதாக பேசிடவில்லை.

    “டாடி. நான் ரெடி”குடுகுடுவென ஓடி வந்தாள் ஆத்யா. கலை எடுத்துக் கொடுத்த கவுன் தான் அணிந்திருந்தாள். நீளமான இரட்டை சடையும் சிறு முகத்தில் அகலமான விழிகளும் அவனுக்கு சந்தியாவின் இளம்பிராயத்தை தான் நினைவுபடுத்தியது.

    “அவுக அம்மாவை மாதிரியே எங்க ஆத்தா”என்று மென்னகை புரிந்தவன் அவளைத் தூக்கிக் கொண்டு கிளம்பினான். அழகினியன் வேலை இருக்கிறது என்று அவர்கள் இருவரை மட்டும் அனுப்பி வைத்தான்.

    அங்கே இருந்த மான் பார்க்கிற்கு சென்றனர் இருவரும்.

    குழந்தையோடு விளையாட்டு ரயிலில் ஒரு பயணம் ஐஸ்கிரீம் சாண்ட்விச் என்று அவள் கேட்டதை தானும் வாங்கி உண்டு அவளோடு குழந்தையாக மாறி தன்னை மறந்த சில மணி நேரங்கள் உண்மையிலேயே கலைக்கு ஆசுவாசத்தை தந்திருந்தது.

    மனது இறகைப் போல லேசாய் இருக்க பெறாத மகளோடு ஒரு பொக்கிஷ நேரம் மனதில் கல்வெட்டாய் பதிந்திருந்தது.

    ஒரு வாரம் திருச்சி தஞ்சை என்று ஆத்யாவும் கலையும் சுற்றி களைத்து பின் அவரவர் இல்லம் திரும்பி இருந்தனர்.

    **************

    “இப்போ எதுக்கு இவ்வளவு டார்ச்சர் பண்றீங்க”என்று கோபமாய் அலுத்துக் கொண்டபடி இலக்கியா கோவிலுக்குத் தயாராகி கொண்டிருக்க

    “இந்தாருடி இது வேண்டுதல் நெறவேத்தலைனா சாமி குத்தம் ஆகிப் போயிரும் மருவாதியா கெளம்பு. ஒம்பேச்சுக்குத் தான நாங்க ஆடி கிட்டு கெடக்கோம் இத்த செய்ய ஒனக்கு ஆவலையோ”அப்பத்தா நீட்டி முழக்கியதில் கடுகடுப்புடன் கிளம்பி அவர்களோடு பயணித்தாள்.

    அண்ணன் கூட அமைதியாக வந்தான் அது தான் இலக்கியாவிற்கு பெரும் ஆச்சரியத்தை தந்தது.

    மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு தான் அழைத்து வந்திருந்தனர்.

    ‘இவ்வளவு நல்லவங்களா இவங்க நம்ப முடியலையே’என்ற எண்ணத்தோடு தான் கிளம்பி இருந்தாள் இலக்கியா.

    கூட்டம் கணிசமாகவே இருக்க நூறு ரூபாய் டிக்கெட்டில் போய் அம்மாவையும் சொக்கரையும் தரிசித்து விட்டு வரலாம் என்று அப்பத்தா கூற இரண்டிற்கும் சேர்த்தே டிக்கெட் எடுத்தனர்.

    சொக்கருக்கு தாமரை மொட்டு மாலையும் பந்தாய் கட்டிய மல்லிகைப் பூ மீனாட்சிக்கும் வாங்கினான் செந்தில் ‌

    “மனோரஞ்சிதம் வாங்குண்ணா”என்று பணத்தை நீட்ட

    “நானே தர்றேன்”என்று அவனே பணத்தை தரவும் அதுவே பெரிய அதிசயமாக இருந்தது அவளுக்கு.

    அதற்கான பதிலை சில நாட்களிலேயே தெரிந்து கொண்டாள் இலக்கியா.

    ….. தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!