Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அறம் காக்கும் அன்பு

அறம் காக்கும் அன்பு 3

அத்தியாயம் 3 

வராஹி வீட்டில் அவர்களது அப்பாவும் அம்மாவும் அடிக்கடி பேசிக்கொள்வது இல்லை. இருவரும் அவர் அவர் வேலையில் பிசியாகவே இருந்தார்கள்.



Advertisement

வல்லபன் இதை கவனித்து தங்கையிடம்,

“வரா, நம்ம அப்பா அம்மா மத்த அப்பா அம்மா மாதிரி ஜாலியா பேச மாட்டேங்கறாங்க இல்ல?” என்றான்.

Advertisement

“நமக்காக தானே அண்ணா, அவங்க மாறி மாறி வேலைக்கு போறாங்க.. அதனால் தான் அவங்களுக்கு நேரமே கிடைக்கிறது இல்ல”

Advertisement

“இல்ல வரா, எனக்கு முன்ன மாதிரி அவங்க இல்லைன்னு தோணுது.. நமக்கு வேணுங்கிறது எல்லாம் செய்றாங்க தான். ஆனாலும் நம்ம கிட்ட உட்கார்ந்து பேச மாட்டேங்கிறாங்க.. அவங்க ரெண்டு பேரும் கூட சேர்ந்து எங்கேயும் வெளியே போகல இல்ல?”

Advertisement

“நானும் உன்னை மாதிரி தான் யோசிச்சேன்.. வீர்யாகிட்ட கூட சொன்னேன். 

அவ தான் சொன்னா, ‘எங்க அப்பா அம்மா பார்த்து அப்படி இருக்கணும்னு நினைக்க கூடாது.. இப்ப உன்கிட்ட ராதிகா மாதிரி ப்ர்ஸ்ட் மார்க் வாங்கணும் சொன்னா உனக்கு பிடிக்குமா.. பிடிக்காது தானே, அதே மாதிரி அப்பா அம்மாவும் மத்த பெற்றோர்கள் மாதிரி இருக்கணும்னு நினைக்கிறது தப்புன்னு’” 

“அப்படியா சொல்ற?” என்றான் வல்லபன் அரைமனதாக.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகனுக்கும் மூன்றாம் வகுப்பு படிக்கும் மகளுக்கும் வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

திடீர் என்று ஒரு நாள் காலை ஊரில் இருந்து இரண்டு வீட்டு  பெரியவர்களும் அன்று வந்திருந்தார்கள்.

அனைவர் முகமும் கவலையாகவே காட்சி அளித்தது. அதனால் வராஹி அண்ணன் கையை பிடித்து கொண்டே நின்றுகொண்டாள்.

“என்ன அண்ணா? எதுக்கு எல்லாருமே இப்படி சீரியசா இருக்காங்க?” என்றாள் கிசுகிசுப்பாக.

“எனக்கும் ஒன்னும் தெரியல வரா.. ஆனா ஏதோ பெரிய விஷயம் போல?” என்றான் அவனும் ரகசிய குரலிலே.

இவர்கள் இருவரும் பள்ளிக்கு புறப்படுகிற வரையிலும் அனைவரும் எதுவும் பேச வில்லை.

காரணம் இருவரும் நல்ல அப்பா அம்மா தான், ஆனால் என்ன இனியும் தொடர்ந்து நல்ல கணவன் மனைவியாக வாழ விருப்பமில்லை இருவருக்கும்.

இவர்கள் முடிவை கூறியதும் ஊரில் இருந்து இரு வீட்டு பெரியவர்களும் வந்து இருந்தார்கள்.

“எப்படி இப்படி ஒரு  முடிவை எடுக்க முடியுது.. இந்த இரண்டு பிள்ளைகளையும் என்ன செய்ய போறீங்க?” என்று ஆரம்பித்தார் ராம் பிரசாத்தின் அம்மா.

“இது நாங்க சண்டை போட்டு எடுத்த முடிவில்லை அம்மா.. சேர்ந்து காதலுடன்  வாழ்ந்துட்டு கண் முன்னே எங்க காதல் சாகிறதை பார்க்கிறதை விட, பிரிந்து இருந்து நட்போடு இருக்கலாம்னு நினைக்கிறோம்..” என்றார் ராம்பிரசாத்.

“சினிமா பட வசனங்கள் எல்லாம் வாழ்க்கைக்கு உதவாது. என்னடா காதல் சாகிறது பார்க்க முடியாதுன்னு கதை விடறீங்க?” என்றார் அவரின்  தந்தை சூடாக.

“நல்லா சொல்லுங்க அண்ணா.. இது என்ன சின்ன பிள்ளை விளையாட்டா?” என்று இணைந்து கொண்டார் வினோதாவின் அம்மா.

“நீங்க எல்லாரும் தான் பழைய பஞ்சாங்கத்தை பேசிட்டு நிக்குறீங்க. நாங்க இரண்டு பேரும் நிறைய யோசிச்சு உட்கார்ந்து பேசி, பக்குவமா தான் இந்த முடிவை எடுத்திருக்கோம். இப்ப நாங்க சொன்னதும் நீங்க எல்லாம் முதல் கட்ட அதிர்ச்சில இருந்து பார்க்கிறீங்க. நீங்களும் நிதானமா யோசிச்சா தான் நாங்க சொல்றதுல இருக்க நியாயம் புரியும்” என்றாள் வினோதா நிதானமாக.

“எப்பவுமே உன்னோட நிதானமான பேச்சை கேட்டு ஒரு அப்பாவா பூரிச்சு போயிருக்கேன். இப்ப தானே தெரியுது, உன் நிதானத்துக்கு பின்னாடி இருக்கிறது நேர்மை இல்லைன்னு”

“அப்பா, நாங்க பிரியரத்துக்கும் நேர்மைக்கும் என்ன சம்பந்தம்?”

“நீங்க பிரியறதுனால பாதிக்கப்பட போறது பிள்ளைங்க.. அதை யோசிச்சேங்களா?”

“நாங்க கணவன் மனைவி பந்தத்துல இருந்து தான் விலகுறோம், ஆனா நாங்க அப்பா அம்மாவா எங்க கடமைகளை சேர்ந்து செய்வோம்”

“நீங்க பேசுறது எல்லாம் மெச்சூரிட்டின்னு நினைக்கிறீங்க போல? சுத்த பைத்தியக்காரத்தனம்”

“நாங்க எங்க முடிவுல தெளிவா இருக்கிறோம்” என்றனர் ராமும், வினோதாவும்.

காரணம் என்னவென்று கேட்டால், கம்பாட்டிபிலிட்டி இஷ்யூஸ் என்றனர்.

எவ்வளவு எடுத்து கூறினாலும் இருவரும் உறுதியாக நின்றனர்.

“பக்குவமா பிள்ளைகள் கிட்ட நீங்க தான் சொல்லணும்” என்று பெற்றோர்களிடம் இருவரும் கேட்டு கொள்ளவும்,

வாய்க்கு வந்தபடி நன்றாக திட்டி விட்டு அவர்கள் ஊருக்கு புறப்பட்டு விட்டனர்.

“நாமளே எடுத்து சொல்லலாம்.. நல்ல போர்டிங் ஸ்கூல்ல சேர்த்துடலாம்.. நாம கணவன் மனைவியா இல்லனாலும் அவங்களுக்கு அப்பா அம்மாவா  கண்டிப்பா சேர்ந்து நிப்போம்னு அவங்களுக்கு நம்பிக்கை குடுக்கணும்” என்றாள் வினோதா.

“கண்டிப்பா செய்வோம் வினோ..”

இத்தனை அழகாக திட்டமிட முடிந்தவர்களால், சேர்ந்து ஏன் இருக்க முடியும் என்று தோன்றவில்லை என்று விதி இவர்களை பார்த்து சிரித்தது.

விஷயத்தை கூறியதும், குழந்தைகளுக்கு புரிந்தும் புரியாத நிலைதான்.

வராஹியை விட வல்லபனுக்கு கொஞ்சம் புரிவதாய்..

“இந்த வீட்ல யார் இருக்க போறீங்க.. நாங்க எங்க இருக்கணும்” என்றான் இருவரையும் பார்த்து.

“அது எல்லாம் இன்னும் யோசிக்கலை வல்லபா. உங்க கிட்ட சொல்லணும்னு தான் சொல்றோம்.. மெதுவா ஒன்னொன்னா செய்யலாம் சரியா..” என்றார் வினோதா.

“நீங்க ரெண்டு பேரும் எதுவுமே யோசிக்க வேண்டாம். உங்களை பொறுத்தவரை எப்பவுமே நாங்க அப்பா அம்மா தான். நாங்க சேர்ந்து இருந்தாலும் பிரிஞ்சு இருந்தாலும்” என்றார் ராம்பிரசாத் இரு பிள்ளைகளையும் அனைத்துக்கொண்டு.

அப்பாவும் அம்மாவும் பாசமாக தான் இருக்கிறார்கள். எங்களை பத்தி யோசிப்பது போலத்தான் பேசுகிறார்கள். ஆனால் எதற்காக இந்த பிரிவு என்று குழந்தைகளுக்கு புரியவில்லை. 

பிடிக்காத வாழ்க்கையில், தனக்கான ஸ்பேஸ் இல்லாத நிலையில் சேர்ந்து  இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது அவர்கள் எண்ணமாகி போனது.

பிள்ளைகள்.. அவர்களை பற்றி நினைக்காமல் இல்லை, தேவையானதை எல்லாம் திட்டமிட்டு செய்து விடலாம் என்று நினைத்து கொண்டார்கள்.

வினோதாவுடன் பணி புரியும் சாரங்கன் மீது அவருக்கு ஒரு ஈர்ப்பு. உனக்காக வாழனும் வினோதா என்ற அவரது அறிவுரைகள் அவளுக்கு பிடித்திருந்ததது. கணவர் பிள்ளைகள் மட்டுமே வாழ்க்கையா? உனக்கு பிடித்ததையும் செய்ய வேண்டும். உன் திறமைகளை எதற்காக விட்டுக்கொடுக்க வேண்டும்? குழந்தைகளுக்கு நாம தேவைதான், இருந்தாலும் உங்களுக்கான சுயத்தை தொலைத்துவிடாதீங்க என்று அவர் கூறிய ஆறுதல் வார்த்தைகள் அவருக்கு பிடித்திருந்தது.

இந்த நட்பு அவரிடம் ஒரு சலனத்தை ஏற்படுத்தியது. அதுவே இந்த பிரிவிற்கான முதல் வித்து என கூறலாம்.

ராம் பிரசத்திற்கு இந்த வாழ்க்கை ஒரு சலிப்பை ஏற்படுத்தியது என்பது உண்மை. சக நண்பர்களின் வீட்டில் அவர்களது மனைவிமார்கள் குடும்பம் குழந்தைகளின் பொறுப்பை முழுதும் ஏற்றுக்கொண்டு, கணவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருப்பதாக நினைத்தார். இங்கோ சமையல், வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பு என்று அனைத்திலும் கணவன் மனைவி இருவரும் சரிபங்கு செய்தார்கள். ஆனால், ஒரு முறை கூட அதற்காக வினோதா தன்னை மெச்சவில்லை என்று உறுத்தியது. 

வேலை நேரமும் மாறி மாறி செல்வதால் கணவன் மனைவிக்கான தனிமை நேரங்களும் குறைந்தது. வரவர அவருக்கு எல்லாமே கசந்தது.

வீட்டிலும் வேலை செய்வதால் அலுவலகத்தில் அவரால் முழு கவனம் செலுத்த முடியவில்லை என்று நினைத்தார். 

சிறு விலகல் விரிசலாக மாறி, இப்பொழுது விவாகரத்தில் வந்து நிற்கிறது.

அதன் விளைவே இந்த பிரிவிற்கான காரணம்.

இருவரும் உடன்பட்டு விவாகரத்துக்கு மனு செய்திருந்ததால் ஆறு மாதத்தில் கிடைத்துவிடும் என்றார்கள்.

ஆறு மாதத்தில் இந்த வருட பள்ளியும் முடிந்துவிடும். நல்ல போர்டிங் ஸ்கூலில் இருவரையும் சேர்த்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள்.

வல்லபன் அமைதியாக சரி என்று ஏற்றுக்கொண்டான்.

வராஹி தான் வீர்யாவை விட்டுட்டு வேறு பள்ளிக்கு எல்லாம் போக மாட்டேன் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்.

அழுது அழுது அவளுக்கு ஜூரமே வந்து விட்டது.

புதிதாக முளைத்திருந்த காதல், வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்ற ஆசை.. வேறு ஒரு உலகத்தை கற்பனை செய்துகொண்டு, நிகழ் காலத்தில் இருக்கும் சொர்க்கத்தை மறந்து தான் போனார்கள் இருவரும். 

வல்லபனை தங்கைக்கு எடுத்து சொல்லச்சொன்னார்கள். ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் தன்னை விட இரண்டு வருடமே சிரியவளான தங்கைக்கு எதை எடுத்து சொல்ல முடியும்?

ராம்பிரசாத்திற்கு ஆன் சைட் செல்லும் வாய்ப்பு வரவே, அவர் வெளி நாட்டிற்கு சில வருடங்கள் செல்வதாக முடிவு செய்தார்.

இந்த வீடு வினோதா ராம் இருவர் பேரிலும் இருந்தது. அதை பிள்ளைகள் இருவருக்கும் என்று ஒரு மனதாக முடிவு செய்தார்கள். இப்பொழுது இதை வாடகைக்கு விட்டுவிடலாம். வரும் வாடகை பணத்தை பிள்ளைகள் பெயரில் போட்டுவிடலாம் என்று வினோதா கூறினார்.

டிவோர்ஸ் கிடைத்தும், சாராங்கனை மணந்து கொள்ளலாம் என்று வினோதா முடிவு செய்திருந்தார். இதே ஊரில் இருந்தால் சங்கடம் என்று நினைத்து, சாரங்கனுடன் ஹைதெராபாத் சென்றுவிட திட்டமிட்டுள்ளார். இவர்கள் அலுவலகத்தின் கிளை அங்கேயும் உள்ளது.

பிள்ளைகள் தாத்தா பாட்டிக்கு அழைத்து கூறி அழுதார்கள். அவர்களும் பிள்ளைகளுடன் சேர்ந்து வருத்தப்பட்டார்களே தவிர வேறு என்ன செய்வது என்று புரியாமல் தவித்தனர்.

வீர்யாவிடம் தான் அனைத்தையும் கூறி அழுது புலம்பினாள் வராஹி. வீர்யாவிற்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள் வயதிற்கு இது பெரிய விஷயம் அல்லவா? தோழி வேறு பள்ளிக்கு சென்று விடுவாள் என்பது அவளுக்கும் சொல்லொண்ணா துயரத்தை கொடுத்தது.

வீட்டில் சென்று அவள் அம்மாவிடம் சொல்லி மிகவும் வருந்தினாள்.

“நாம் என்னடா செய்ய முடியும். அது அவங்க அம்மா அப்பா முடிவு.. நீ நல்ல தோழியா இருக்கலாம்.. வேற ஒன்னும் முடியாதுடா” என்றார் அவர்.

“எனக்கு வராவை அப்படி பார்க்கவே கஷ்டமா இருக்குண்ணா” என்றாள்  தமயனிடம்.

“பாவம்தான் வீர்யா.. நாம என்ன செய்றது, விடு”

“அப்பா அம்மாவும் கூட இருக்க மாட்டாங்க. வேற ஸ்கூல் போனா என்னையும் பார்க்க முடியாது.. என்ன அண்ணா செய்வா?”

“வேற ஸ்கூல் போனாலும் நீ அவளுக்கு தோழிதானே.. நாம போன்ல பேசலாம்னு சொல்லு. அங்கேயும் அவளுக்கு நல்ல தோழி கிடைப்பாங்கன்னு நீ தான் அவளுக்கு தைரியம் சொல்லணும்” என்றான் அவனுக்கு தெரிந்த வரையில்.

போர்டிங் ஸ்கூல்லில் எல்லாம் விசாரித்து வந்தனர் ராமும் வினோதாவும்.

நம்ம குழந்தைங்களை பார்க்காம விட்டுட்டோம்னு யாரும் சொல்ல கூடாது.. பெஸ்ட் ஸ்கூல்ல சேர்க்கணும் என்று பார்த்து பார்த்து செய்தனர்.

பார்க்காமல் போனது பிள்ளைகளின் மனதை… என்ன சொல்ல?

சென்னையில் ஒரு தனியார் பள்ளி மிகவும் திருப்தியாக இருந்தது. பிள்ளைகளுக்கும்  காட்டினார்கள். 

இதில் பிள்ளைகளுக்கு கவுன்சிலிங் வேறு அழைத்து சென்றார்கள், இந்த சூழலை பழகிக்கொள்ள.. பணம் மட்டும் கொடுத்தல் போதும் அனைத்தும் சாத்தியமானது.

ஒவ்வொன்றாக சேர்ந்து திட்டமிட்டு அழகாக பிரிந்தார்கள் வினோதாவும் ராம்பிரசாத்தும். பிள்ளைகளை போர்டிங் ஸ்கூலிலும் சேர்த்துவிட்டு, லோக்கல் கார்டியனாக வீர்யாவின் பெற்றோர்களை தான் போட்டிருந்தார்கள்.

இவர்கள் பிரிவினை உறவினர்களும் நண்பர்களும் ஏற்றுக்கொள்ளவே இல்லை. வேறு யாரிடம் கேட்பது என்று யோசிக்கையில், வராஹி தான் இந்த யோசனையை கூறினாள்.

அவளே வீர்யாவிடம் பேசி, அவர்கள் பெற்றோர்களிடமும் கெஞ்சி இந்த ஏற்பாடு செய்தாள்.

பிள்ளைகளை ஸ்கூலில் சேர்த்துவிட்டு, வீட்டையும் வாடகைக்கு விட்டுவிட்டு ராம் பிரசாத் வெளிநாட்டிற்கும், வினோதா ஹய்தெராபாதிற்கும் என சென்றுவிட்டனர் புது வாழ்வை தேடி.

——————————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!