Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சோடு ரீங்காரம்

ரீங்காரம் – 14

இனிமையான நினைவுகளோடு சென்னைக்குச் சிரமப்பட்டுப் பயணித்தவன் கையில் இருந்தது தன் உழைப்பின் நம்பிக்கையும், அவளது அன்பின் பிரதிபலிப்பாய் அந்தச் சாக்லேட்டும் மட்டுமே! மனம் பாரமாகத்தான் இருந்தது.

முதல்முதலாய் ஆசையாக வாங்கிய தன் இருசக்கர வாகனத்தை விற்றுவிட்டான் தமிழ். சரத்சந்திரன் கோபமாகக் கூறிவிட்டுச் சென்றிருக்க, தமிழ்ச்செல்வனால் எளிதாக அதனைத் கடந்து போக முடியவில்லை. அவர் கூறிய வார்த்தைகளின் தாக்கம் அப்படி! 

அவரையும் குற்றம் கூறிவிட முடியாது; அவரால் முடிந்தமட்டும் போராடிப் பார்த்துவிட்டார். அதனால்தான், வண்டியை விற்ற பணத்தைக் கையேடு அன்றே அவர் முன் கொண்டு வந்து வைத்துவிட்டான்.

“டேய், நான் ஏதோ கோபத்துல…” என அவர் பேச வர,



Advertisement

அவரைத் தடுத்தவன், “வேண்டாம் சார், என்னால யாரும் கஷ்டப்பட வேண்டாம். உங்க மேல இருக்கிற கோபத்துல நான் இதைச் செய்யலை; உங்களோட நிலைமை புரிஞ்சுதான் பண்றேன்” என்றான் நிதானமாக.

“சரி, பணத்துக்கு எங்க போன?”

“வண்டி…” ஒற்றை வார்த்தையில் பதில் கூறியவன்தான், அன்றே சக்தியைப் பார்க்கச் சென்றிருந்தான்.

Advertisement

அந்த ஒரு பெண்ணிற்காக அனைத்தையும் இழக்கத் தயாராகிவிட்டானா என்கிற வியப்புதான் அவனுடன் இருந்தவர்களுக்கு. அதே நினைவுகளோடு சென்னை திரும்பியவன் உடலில் ஒரு தனி தெம்பு இருந்தது.

Advertisement

இறுதி வேலைகளைப் பார்வையிட எடிட்டிங் ஸ்டூடியோவுக்கு வந்தவன், அங்கு கூடியிருந்த அவனது அணியிடம், “என்னடா தூங்கலையா? ஃபைனல் அவுட் ரெடிதானே? நாளைக்குக் காலையிலேயே சென்சாருக்கு அனுப்பிப்பிடலாம்ல?” என்றான்.

நிமலன், சுசிகரன், பேரழகன் என அவன் ஆட்கள் மட்டுமல்ல, முக்கால்வாசிப் படக்குழுவினர், ஏன் தயாரிப்பாளர் கூட அங்குதான் இருந்தார். ஆனால், எவருமே வாயைத் திறக்கவில்லை.

“ஓ… டிஸ்ட்ரிபியூட்டர் கிடைக்கலைன்னு வருத்தமா? அதெல்லாம் பார்த்துக்கலாம்டா, முதல்ல செர்டிபிகேட் வாங்கி வைக்கலாம்” என்றான் அவனாகவே யூகித்து.

Advertisement

இவன் வந்த செய்தி கேட்டு அங்கு வந்த சரத்சந்திரன், கோபமாக எழுந்து நாற்காலியை எட்டி உதைத்தார். “உன் கற்பனைக் குதிரையைப் படத்துல மட்டும் காட்டுடா, நிஜம் வேற! படிச்சுப் படிச்சுச் சொன்னேன் கேட்டியா? இப்போ படம் நெகடிவ் ரைட்ஸ்ல போயிடுச்சு!”

தமிழ்ச்செல்வனுக்குக் காலுக்குக் கீழ் உலகமே நழுவுவது போல் இருந்தது. அவனுடைய இரண்டு வருட உழைப்பு ஒரே நாளில் கையை விட்டுத் தூரம் சென்றிருந்தது.

நிமலன் மெதுவாகத் தமிழின் காதில், “சக்தி அக்காவோட தாத்தாதான் படத்தை வாங்கியிருக்க மாதிரி சொல்றாங்க தல” எனச் செய்தி கூறினான்.

“இந்த படம் அப்படியே பெட்டிக்குள்ளதான் இருக்கும். எங்க வீட்டுப் பொண்ணை விட்டு அவன் போன அடுத்த நிமிஷம் படம் வெளிய வரும்னு உன்கிட்ட சொல்லச் சொல்லியிருக்கார்” எனப் பேரழகன் கூடுதல் தகவல் கொடுத்தார்.

[இன்றைய காலத்தில் ஒரு படத்தின் மாஸ்டர் காப்பி மற்றும் அதன் சட்டபூர்வமான உரிமத்தை (Legal Ownership) வைத்திருப்பவரே படத்தின் அசல் உரிமையாளர் ஆவார். ஒரு படத்தின் தயாரிப்பாளர் வாங்கிய கடனைத் திருப்பித் தரவில்லை என்றால், கடன் கொடுத்தவர்கள் சட்டப்படி அந்தப் படத்தின் ‘நெகடிவ் ரைட்ஸ்’ எனப்படும் திரையரங்கு, தொலைக்காட்சி மற்றும் ஓடிடி (OTT) உரிமைகளைக் கைப்பற்றிவிடுவார்கள். படத்தின் வெளியீடு தாமதமானதால் சரத்சந்திரனால் கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட, படம் அவர் கையை விட்டு நழுவியிருந்தது.]

தமிழ்ச்செல்வன் கைகள், தனக்கு முன்பிருந்த கணினித் திரையில் ஓடிக்கொண்டிருந்த அவனது படத்தின் செதுக்கப்பட்ட காட்சியை வருடியது. அவன் கனவு, அவன் குழுவின் அர்ப்பணிப்பு, அனைவரின் கூட்டு உழைப்பு!

அதோடு இணைந்து, அவள் வீட்டினர் முன்பு தன்னை ஒரு படி மேலே நிறுத்தும் கருவியாக அந்தப் படத்தின் வெற்றியைத்தான் அவன் நம்பியிருந்தான். இப்போது அதே குடும்பத்தினர் அவன் கனவை விலை கொடுத்து வாங்கி, மூலையில் பூட்டி வைத்துவிட்டனர்.

“அவங்க பொண்ணை நான் விரும்புறேன்றதுக்காக, என் குழந்தையை (படத்தை) என்கிட்ட இருந்து பறிக்கிறது எந்த விதத்துல நியாயம் சார்?” மெல்லிய சிரிப்போடு கேட்டான். “தப்பு யார் செஞ்சாலும் தட்டிக் கேட்கணும் சார், அதான் என் அப்பா எனக்குச் சொல்லிக் கொடுத்தது. கேட்கணும்ல? ம்ம்ம்… கேட்கிறேன்!”

அடிபட்டிருந்தவன் கண்களில் கலக்கத்திற்கு மாறாக வைராக்கியம் தென்பட்டது. உடனடியாகத் தன்னுடைய உதவி இயக்குநர்களிடம் சில கட்டளைகளை இட்டவன், வேகமாய் வெளியில் சென்றான்.

தமிழ் கொடுத்த வேலைகளை முடிக்கச் சரியாக இரண்டு நாட்கள் பிடித்தன. தமிழ்ச்செல்வனின் கண்கள் சிவந்து போயிருந்தன; இரண்டு நாட்களாகத் தூக்கமே அவனுக்கு அரிதாகிப் போனது. காரணம், அவன் சேர்க்க வேண்டிய தகவல்களும், செய்யப் போகும் விஷயமும் யார் காதுகளையும் எட்டிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

அவன் கண்கள் முன்பு சக்தி குடும்பத்தின் கார்மெண்ட்ஸ் பிசினஸ் பற்றிய தகவல் அடங்கிய அத்தனை பழைய நாளிதழ்கள், குறிப்புகள் மற்றும் இணையத் தரவுகள் குவிந்திருந்தன. அவர்களைப் பற்றிய ஏதாவது ஒரு பலவீனமான செய்தி கிடைக்காதா எனத் தவித்தவனுக்கு, தொக்காக ஒன்று சிக்கியது! அதைப் பார்த்த தமிழுக்கு அல்வா கிடைத்தது போன்ற மகிழ்ச்சி.

சக்தியின் வீட்டினர் ஒரு வெளிநாட்டுப் பல்க் ஆர்டருக்காக ஒரு புதிய பிராண்டை சட்டபூர்வமாகத் தொடங்கப் போகிறார்கள் என்பது அவனுக்குத் தெரியும்; அதற்கான பெயரைக் கூட சக்தி மூலம் அவன் கேள்விப்பட்டிருக்கிறான்.

அந்தப் பிராண்டின் பெயரும் லோகோவும் இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஏதோ சில காரணங்களுக்காக அந்தப் பெயரை அவர்கள் இன்னும் காப்புரிமை வாங்காமல் வைத்திருந்தனர்.

அந்தப் பிராண்டிற்கு, ‘எலாரா’ (ELARA – எட்ட முடியாத உயரத்தைக் குறிக்கும் சொல்) எனப் பெயரிடப்பட்டு, அதை லான்ச் செய்யப் பல கோடி ரூபாய் செலவு செய்து விளம்பரப் படமும் எடுத்து வைத்திருந்தனர். ஆனால், அதை இன்னும் டிரேட்மார்க் பதிவிற்குப் பதிவு செய்யவில்லை என்பதைத் தமிழ் திரட்டி வைத்திருந்தான். அதுவே தமிழுக்குக் கிடைத்த முதல் வெற்றியின் படி!

கிடைத்த செய்தியைத் தன் ஆட்கள் மூலம், அந்த விளம்பரத்தை எடுத்த இயக்குநரிடம் உறுதி செய்த பின்னர், நினைத்த வேலையை கச்சிதமாக முடித்தான்.

அவன் செய்ததாவது: அவர்கள் தங்கள் பிராண்டிற்கு வைத்திருந்த அதே ‘ELARA’ என்ற பெயரில், தான் ஒரு நிறுவனத்தை இரவோடு இரவாகப் பதிவு செய்துவிட்டான்! அதோடு, அந்தப் பதிவு செய்த நிறுவனத்தின் பெயரில் ஒரு வீடியோ தயார் செய்து, அதை வீராந்தகனுக்கு அனுப்பியும் வைத்திருந்தான்.

மறுநாள் காலை, அலுவலகத்தில் இன்னும் இரண்டு வாரத்தில் அந்த விளம்பரத்தை வெளியிட்டுப் பெரிய விழாவாக நடத்துவது பற்றித்தான் பேச்சுகள் ஓடிக்கொண்டிருந்தன. அப்போதுதான் வீரா இந்தச் செய்தியோடு வேகமாக உள்ளே வந்தான். பெரியவர்களுக்கு இதை எப்படிச் சொல்வதென்று அவனுக்குப் புரியவில்லை.

அவர்கள் பேச்சில் தீவிரமாக ஈடுபட்டிருக்க, அங்கு திரையில் ஓடிக்கொண்டிருந்த அந்த விலை உயர்ந்த ஆடைகளும் மாடல்களும் தோன்றும் காணொளியை மாற்றி, தனக்கு வந்த வீடியோவை அதில் ஓடவிட்டான் வீரா.

அந்தக் காணொளியில் குப்பை மேடுகளும், தெருவோரங்களில் இருக்கும் கழிவுகளும் ஓட, அதன் நடுவே பெரிய எழுத்துகளில், “ELARA GARBAGE – குப்பைகளை அகற்ற எங்களை அழையுங்கள்” என வார்த்தைகள் வந்தன.

சேந்தன் ஸ்தம்பித்துப் போனார். “என்னடா இது?!” என்று பதறினார்.

“யார் பார்த்த வேலை வீரா இது?” வேலுவின் சினம் அவர் கண்ணிலேயே தெரிந்தது.

வீரா, “அந்தத் தமிழ்ச்செல்வன்தான்!” என்றான் பற்களைக் கடித்தபடி.

“ஓஹோ… அந்தப் பயலுக்கு அந்த அளவு தைரியம் வந்தாச்சா?” வேலு யோசிக்க,

சேந்தன், “நாம அவன் படத்தை முடக்குன கோபம் அவனுக்கு இருக்கத்தானே செய்யும்? இப்போ இதுக்கு என்ன செய்றது? வீரா, இந்த வீடியோ வெளிய வந்துடுச்சா?” என்றார் பதற்றமாக.

மகன், “இல்லைப்பா, இன்னும் அவன் இதைப்பப்ளிக் பண்ணலை. ஆனா பண்ணிட்டா, இந்த பேரை நாம யூஸ் பண்ண முடியாது. அப்புறம் நமக்கு ஆகுற நஷ்டத்தைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை” என்றான்.

“அவனுக்குப் போன் போடு!” என்றார் வேலு தீவிரமாக.

ஒரு நிமிடம் தயங்கிய வீராந்தகன், தமிழுக்கு அழைத்து ஸ்பீக்கரில் போட்டான்.

அழைப்பை நிதானமாக ஏற்ற தமிழ்ச்செல்வன், “வணக்கம் வீரா மச்சான்! நல்லவேளை இப்போ கால் பண்ணீங்க. இன்னும் அஞ்சு நிமிஷத்துல என்னோட புது பிசினஸோட புரொமோஷன் வேலையில பிஸி ஆகியிருப்பேன். நல்லவேளை, லக் உங்க பக்கமும் இருக்கு போல!” என இழுத்துக்கொண்டே கூறினான்.

பற்களைக் கடித்த வீரா, “என்னடா இது வீடியோ? என்ன விளையாடுறியா?”

“அச்சச்சோ… நான் ஏன் விளையாடப் போறேன்? நான் நிஜமாவே அப்படி ஒரு பிளான்லதான் இருக்கேன். ஓ… புரியுது! இன்னும் நீங்க என்னைச் சின்ன பையனாவே நினைச்சிருக்கீங்க போல, அதான் நேத்து அனுப்புன வீடியோவுக்கு இப்போ போன் பண்றீங்க” வீரா பேசுவதிலிருந்தே அவனைச் சுற்றி ஆட்கள் இருப்பது தெரிந்து, அவர்களை வம்புக்கு இழுக்க இதுவும் அவனுக்கு உதவியது.

வேலு பேரனைக் குற்றம் சாட்டும் பார்வையில் முறைத்தார்.

“என் பிராண்ட் நேம்ல நீ விளையாடலை… என்னோட ஈகோவோட விளையாடுற நீ!” தானே முன்வந்து கம்பீரக் குரல் கொடுத்தார் வேலு.

அவர் கூற்றைக் கேட்டுத் தமிழ் போனில் விசில் அடிக்க, வேலு கண்மூடித் தன் கோபத்தைக் கட்டுப்படுத்தினார். 

“அய்யயோ… என்னமா பஞ்ச் டயலாக் விடுறீங்க! விசில் அடிக்க வேண்டிய சீன்தான். ப்ளீஸ் வேலு சார், என் படத்துல தேவைப்படுறப்போ இதை வச்சுக்குறேனே, காப்புரிமை மட்டும் வாங்கிடாதீங்க!” உல்லாசமாகப் பேசியவன் குரலில் நக்கல் இழையோடியது.

“சரி, விஷயத்துக்கு வர்றேன்” குரலைச் செறுமிக்கொண்டு தொடர்ந்தான் தமிழ், “நீங்க இந்தப் பேர்தான் வச்சிருப்பீங்கன்னு என் உள்மனசு சொல்லுச்சு வேலு சார். விசாரிச்சா இன்னும் ரெஜிஸ்டர் பண்ணலையாமே? இதுல விளம்பரம் எடுத்து வேற வச்சுட்டீங்க! அதான் அதே பேர்ல ‘குப்பை வண்டி சேவை’ கம்பெனி ஒன்னு ஆரம்பிச்சு, நைட்டோட நைட்டா ரெஜிஸ்டர் பண்ணிட்டேன். இதோ அதுக்கான டிரேட்மார்க் அப்ளிகேஷன்…” அதையும் வீராவின் எண்ணிற்கு அனுப்பி வைத்தான்.

அதைப் பார்த்த வேலுவுக்குக் கட்டுக்கடங்காத ஆத்திரம் வந்தது.

தமிழ் தொடர்ந்தான், “இப்போ கூகுள்ல யாராவது ‘ELARA’னு சர்ச் பண்ணா, உங்களோட காஸ்ட்லி துணிமணி வராது; என்னோட குப்பை வண்டிங்கதான் வரும்! அய்யய்யோ… உங்க ஃபாரீன் பார்ட்னர்ஸ்கிட்ட, ‘என் பிராண்ட் பேர்ல ஒரு குப்பை வண்டி கம்பெனி ஓடுது’னு சொல்லுவீங்களா? இல்லை, ‘ஒரு சின்ன டைரக்டர், அட்ரஸே தெரியாத ஒரு போடிப் பையன் என் பிராண்ட் பேரை எடுத்துட்டான்’னு சொல்லுவீங்களா?”

முரளி கோபமாக, “என்னடா எங்களையே மிரட்டிப் பார்க்கிறியா? இந்த செகண்ட் நாங்க நினைச்சாலும் நீ ஜெயில்லதான் இருக்கணும்!” என மிரட்டிப் பார்த்தார்.

தமிழ்ச்செல்வனோ சிரித்துக்கொண்டே, “தாராளமா எங்க வேணாலும் தள்ளுங்க சார். என்ன… கேஸ் முடிய அஞ்சோ பத்தோ வருஷம் ஆகும். அதுவரை நீங்க இந்த பேரை யூஸ் பண்ணவே முடியாது, உங்க மெகா ப்ராஜெக்ட் முடங்கிடும். அப்புறம் உங்க இஷ்டம்!” என்றான் அனைத்து சாத்தியக்கூறுகளையும் யோசித்து வைத்தவனாக.

வீராவிற்கு இது எங்கு போய் முடியும் என்பது புரிந்து, அடுத்த கேள்வியைக் கேட்டான், “உனக்கு என்ன வேணும்?”

திரையின் அந்தப் பக்கம், ஒரு விரிந்த புன்னகையோடு தன் சட்டைக் காலரை உயர்த்திக்கொண்டவன், “என் படத்தோட நெகடிவ் ரைட்ஸ்! நீங்க விலைக்கு வாங்குன என் உழைப்பை, என் பேருக்கு மாத்தி என்கிட்டயே திருப்பித் தரணும். இந்த செகண்ட்டே நான் என் குப்பை வண்டி கம்பெனி பேரை கேன்சல் பண்றேன். நீங்க உங்க பிசினஸை ராயலா லான்ச் பண்ணலாம்” சரியாக அவர்களுக்குச் செக் வைத்தான்.

“முடியாதுனு நான் சொன்னா?” வேலு கேட்க,

“படத்துக்குப் பேர் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு பிசினஸ்க்கு பிராண்ட் பேர் முக்கியம்… எனக்கு அது நல்லாவே தெரியும்” குரலைச் சற்றுத் தாழ்த்தியவன், “உங்க பேரனுக்கு அனுப்புன அதே வீடியோ உலகம் முழுக்கப் போகும். இதுவரை என் பி.ஆர் டீமை நான் நெகடிவா யூஸ் பண்ணதில்லை சார், அதுக்கு வேலை வச்சிடாதீங்க!” என்றவன், டக்கென்று அழைப்பைத் துண்டித்தான்.

சக்தியின் குடும்பமே ஸ்தம்பித்துத்தான் போனது. இந்த வேகத்தையும் புத்திசாலித்தனத்தையும் அவர்கள் தமிழிடம் எதிர்பார்க்கவே இல்லை! பல நாட்கள் அவர்கள் தேடித் தேர்ந்தெடுத்த ஒரு உயர்ந்த பெயரை, ஒரு குப்பை வண்டியோடு இணைத்து அதன் மதிப்பைத் தரைமட்டமாக்கி, அதற்குச் சட்டரீதியாக ஒரு பொறியையும் வைத்து, தன் இயக்குநர் புத்தியைக் காட்டி அவர்களின் கர்வத்தை அடக்கிவிட்டான் தமிழ்.

அதே நேரம் வேலுவின் கண்கள், அங்கு லூப்பில் ஓடிக்கொண்டிருந்த அந்த விளம்பரத் திரையிலேயே நிலைத்திருக்க, “அவன் படத்தை ரிலீஸ் பண்ணி விட்டுடு வீரா…” எனப் பேரனுக்குப் பெரியவர் கட்டளையிட்டார். அவர் குரலிலும் கண்களிலும் ஒரு தீ நிற்காமல் கொழுந்துவிட்டு எரிவதைப் பார்த்த மூவரும், அதற்கு மேல் பேசுவதற்கோ செய்வதறியாமலோ மௌனமாக நின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!