படங்களிலே வருவது போல பிடிக்காத உணவு, கேலி செய்யும் மாணவர்கள் என்று கற்பனையில் யோசித்து வைத்திருந்த போர்டிங் ஸ்கூல், உண்மையில் அப்படி இருக்கவில்லை.
Advertisement
அங்கே இருந்த உணவும் சரி, சக மாணவர்களும் சரி நன்றாக தான் இருந்தது. அதனால் அதிக சிரமம் இல்லாமல் அண்ணனும் தங்கையும் மெல்ல மெல்ல புது இடத்தில் தங்களை பொருத்தி கொண்டார்கள்.
பாய்ஸ் கேர்ள்ஸ் என்று இரண்டு ப்ளாக்குகள் இருந்ததால் அண்ணன் தங்கை இருவரும் வேறு வேறு ப்ளாக்கில் தான் இருக்க வேண்டியதாகிற்று. உணவு மட்டும் ஒரே ஹால் என்பதால், உணவு வேலையில் அண்ணனும் தங்கையும் ஒன்றாக தான் அமர்ந்து சாப்பிடுவார்கள். தங்கள் நாள் எப்படி சென்றது, என்று பேசி கொண்டார்கள்.
Advertisement
Advertisement
தினமும் ஏழு மணிக்கு போன் டைம். முதலில் தினமும் பேசிய வினோதாவும் ராம்பிராசாத்தும் இப்பொழுது வாரம் ஒரு முறை மட்டுமே அழைக்கின்றார்கள்.
வீர்யாதான் தினமும் அழைத்து பேசுவாள். அப்படி பேசுகையில், உங்க அம்மா கிட்ட பேசணும் என்று ஒரு நாள் கேட்டாள் வராஹி.
Advertisement
வீர்யாவும் போனை அம்மாவிடம் கொடுக்கவும், “ஆன்ட்டி எனக்கு தலை சீவ ரொம்ப கஷ்டமா இருக்கு. சிக்கு அதிகமாகி முடி கொட்டுது. என்ன செய்யலாம்?” என்றாள் வருத்தமாக.
நிவேதாவுக்கும் மனதிற்கு அந்த பிஞ்சின் குரல் வருத்தத்தை தந்தது. இருந்தும் அதை வெளி காட்டாமல், “நீ நைட் தூங்குறதுக்கு முன்ன ஒரு தடவை சிக்கு எடுத்து சீவிட்டு தூங்கு டா. காலையில அவசரமா சீவும் போது தான் சிக்கு போகாது.“
“இங்க நிறைய கேர்ல்ஸ் பாய் கட் பண்ணிருக்காங்க.அவங்க என்னையும் அப்படி பண்ணிக்க சொல்றாங்க. ஈஸியா மெயின்டேன் பண்ணலாம் சொல்றாங்க”
“அது அவங்களுக்கு எல்லாம் வராஹி மாதிரி சில்க்கி சாஃப்ட் ஹேர் இல்லை போல. நீ நான் சொல்ற மாதிரி செஞ்சு பாரு. நீ நெக்ஸ்ட் டைம் வீட்டுக்கு வரும்போது ஆன்ட்டி உனக்கு எப்படி ஈஸியா மெயின்டேன் செய்றதுன்னு சொல்லி தரேன். அப்படியும் கஷ்டமா இருந்தா கட் பண்ணிக்கலாம். ஓகேவா?”
“ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி. அப்புறம் இந்த பிராக் எல்லாம் எனக்கு மடிக்க வரலை. அம்மா வைச்சு கொடுக்கும் போது நீட்டா இருந்தது, இங்க வாஷ் பண்ணி கொடுத்தபுறம் நான் மடிச்சு வைக்கிறது இடமே பத்தலை”
“வீடியோ கால்ல வா” என்று கூறி வீர்யாவோட பிராக்கொன்றை வைத்து எப்படி அழகாக மடித்து வைப்பது என்று எளிமையாக கற்றுக்கொடுத்தார்.
“வாவ்.. சூப்பர் ஆன்ட்டி “ என்று குதூகலமாய் கூறினாள்.
“எங்க அண்ணாக்கும் கொஞ்சம் டவுட் இருக்கு, அவன் கிட்டவும் பேச முடியுமா? நாங்க உங்களை தொந்திரவு செய்றோமா?” என்றாள் தயக்கமாக.
“இதுல எனக்கு ஒன்னும் கஷ்டமே இல்லை வராஹி. என்ன வேணும்னாலும் நீயும் வல்லபனும் எங்க கிட்ட கேட்கலாம். ரொம்ப யோசிக்காத. சரி எட்டு மணி வரைக்கும் தானே பேச முடியும். நான் வல்லபன் கிட்டயும் இப்பவே பேசுறேன்” என்று அழைப்பை வைத்து விட்டு வல்லபனுக்கு அழைத்து பேசினார்.
வல்லபனுக்கும் அவனது ஷர்ட் பேண்ட் எல்லாம் எப்படி மடிப்பது என்று சொல்லி கொடுத்தார். அவன் எதோ ஒன்றை சொல்ல தயங்குவது புரியவே, ரகுநந்தனிடம் அவனிடம் என்னவென்று விசாரிக்க கூறினார்.
தயங்கிக்கொண்டே அவனுக்கு சிறுநீர் கழிக்கும்பொழுத்து எரிச்சல் அதிகமாக இருப்பதாக கூறினான். அங்கே உள்ள வார்டனிடம் பேசி வைத்தியரை பார்க்க கூறியதற்கு, ப்ளீஸ் யார் கிட்டயும் சொல்லாதீங்க என்று அழ ஆரம்பித்துவிட்டான்.
பின் தண்ணீர் சரியாக குடிக்கிறாயா? எவ்வளவு குடிக்கிறாய் என்று கேட்டு, அதுவம் ஒரு காரணமாக இருக்கலாம். தினமும் வாட்டர் பாட்டில்லில் நீர் நிரப்பி குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கும்படி அறிவுறித்தினான்.
இந்த பக்கம் மறைவாக நின்று நிவேதா கூற கூற ரகுநந்தன் வல்லபனுக்கு தைரியம் சொன்னான்.
“எனக்கு எதாவது பெரிய வியாதியா இருக்குமான்னு பயமா இருக்கு ரகு”
“லூசு மாதிரி பேசக்கூடாது. நீ முதலில் நிறைய தண்ணீர் குடி. கண்டிப்பா சரி ஆயிடும். இல்லைனா எங்க அப்பாவோட நானும் வரேன், நாம டாக்டரை பார்ப்போம். வேற யார்கிட்டயும் சொல்ல வேண்டாம் சரியா?”
“ரொம்ப தேங்க்ஸ் ரகு”
இப்படியாக தட்டி தடுமாறிய குழந்தைகளுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்தது வீர்யாவின் குடும்பம்.
அப்பா அம்மாவின் பிரிவை எண்ணி வருந்துவதற்கு கூட நேரம் இருக்கவில்லை. இருவருக்கும் தங்களை பார்த்து கொண்டு பள்ளிக்கு சென்று வருவதே சவாலாக இருந்தது.
வினோதா மறுமணம் செய்து கொண்டாலும், அவரால் அந்த புது வாழ்க்கையோடு ஒன்றை முடியவில்லை. திரும்பி வருவதற்கான வழியும் இல்லையே! பெற்றவர்களை எதிர்த்து, பெற்ற பிள்ளைகளையும் விடுத்து.. தானாக தேர்ந்தெடுத்து கொண்ட வாழ்க்கை அல்லவா?
அதை தக்க வைக்கவே அவருக்கு நேரம் சரியாக இருந்தது. மாதம் மாதம் ஒரு தொகையை பிள்ளைகளுக்கு என்று அனுப்ப சாரங்கன் எதுவும் சொல்லவில்லை. ஆனால், ராமப்ரசாத்தோடு பேசுவதை அறவே விரும்பவில்லை அவர். “பிள்ளைகளோடு அளவோடு பேசு.. நம்ம வாழ்க்கையை பாரு.. சந்தோசமா சுதந்திரமா இருக்க தானே என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்ட.. அப்புறம் இன்னும் என்ன?” என்று கூற ஆரம்பித்துவிட்டார்.
ராம் பிராசாத்திற்கு மனதிற்குள் சிறு குற்ற உணர்ச்சி இருந்தது தான். பாவம் பிள்ளைகள் என்று நினைத்து கொண்டார் தான். ஆனால், வெளிநாட்டில் ஆன் சைட் ப்ராஜெக்ட்டில் வேலை பிழிந்து எடுத்தார்கள். அங்கேயும் இங்கேயும் உள்ள நேர வேறுபாடு வேறு.. பிள்ளைகளோடு பேசும் நேரமும் குறைந்து போனது.
வராஹி தன் புது இடத்தில் பொருந்த தன்னை முழுதாக அதில் ஈடுபடுத்த, வீர்யாவிற்கு இங்கு பள்ளியே பிடிக்கவில்லை.
“பேசாம என்னையும் வராஹியோட ஹாஸ்டல்ல சேர்த்து விடுங்க” என்று ஒரே அடம்.
அந்த போர்டிங் ஸ்கூலின் கட்டணம் பலமடங்கு அதிகம்.
சம்பவ்விடம் தான் புலம்பிக்கொண்டே இருப்பாள்.
“அப்ப நான் உனக்கு பெஸ்ட் பிரண்ட் இல்லையா?” என்று சம்பவ் கேட்க அது கொஞ்சம் வேலை செய்தது. அப்படி இப்படி என்று வராஹியும் வீர்யாவும் நான்காம் வகுப்பை முடித்து விட்டார்கள்.
கோடை விடுமுறை விட்டதும் ஹாஸ்டலில் இருந்து அனைத்து பிள்ளைகளும் அவரவர் வீட்டிற்கு புறப்பட்டனர்.
அப்பா அம்மா அழைப்பார்கள் என்று காத்திருந்து ஏமாந்து போயினர் பிள்ளைகள்.
விநனோதாவோ ராமபிராசாத்தோ அதை பற்றி யோசிக்கவே இல்லை.
வராஹி சோகமாக வீர்யாவிடம் இதை கூறினாள். வீர்யா உடனே அவள் அம்மாவிடம் முறையிட,
நிவிதா தான் வேறு என்ன செய்ய என்று தெரியாமல், வினோதாவிற்கு அழைத்து பேசினார்.
இவர் குழந்தைகளின் மனநிலையை எப்படி அவருக்கு விளக்குவது என்று யோசித்து கொண்டிருக்கையில் அவரோ ‘ஓ..’ என்று ஒரே அழுகை.
“எனக்கு யார்கிட்ட சொல்லன்னு தெரியலங்க.. நான் செஞ்ச பாவம் தான் என்னை தொடருது போல.. குழந்தை வேண்டாம்னு கவனமா தான் இருந்தோம். இப்ப கன்சீவ் ஆயிட்டேன். என்னோட உடம்பு வீக்கா இருக்கறதுனால அபார்ஷன் செய்ய முடியாதுன்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க. இப்ப மெடிக்கல் லீவ்ல வீட்ல தான் இருக்கேன். குழந்தை உண்டானது தெரிஞ்சு சாரங்கன் வீட்ல எல்லாருக்கும் ஒரே சந்தோசம். சாரங்கன் அண்ணாவுக்கும் குழந்தை இல்லை. அதனால இந்த குழந்தைக்காக ஆவலா இருக்காங்க. இப்ப எல்லாரும் இங்க வந்து இருக்காங்க. என்னால வராஹி வல்லபனை இப்ப இங்க அழைச்சிட்டு எல்லாம் வரவே முடியாதுங்க.. அவங்க கிட்ட போன்ல கூட பேச முடியல என்னால. அங்கேயே இருக்கட்டும். உங்களால முடிஞ்சா இந்த விஷயத்தை வராஹி அப்பாகிட்ட சொல்லிடுங்க. என்ன கிட்ட தட்ட ஹவுஸ் அரெஸ்ட் மாதிரி வச்சிருக்காங்க.. யாரோ வராங்க நான் வச்சிடுறேன்” என்று அவசரமாக போனை வைத்து விட்டார்.
நிவேதாவுக்கு எப்படி இதை கையாளுவது என்றே புரியவில்லை.
கணவரிடம் விஷயத்தை கூறினார். பின் இரவு ராம் பிரசாத்திற்கு அழைத்து பேசினார்கள்.
குழந்தைகளின் விடுமுறை அவர்கள் ஹாஸ்டலில் தனித்து இருப்பது , வினோதாவிற்கு அழைத்து பேசியது, வினோதா கூறியது என்று சுருக்கமாக விஷயத்தை கூறினார் நிரஞ்சன்.
“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை சார். ஒரு மணி நேரம் கூட பிள்ளைகளை தனியா விட கூடாதுன்னு நாங்க மாறி மாறி ஷிப்ட்ல வேலைக்கு போனோம். பார்த்து பார்த்து தான் ஒன்னொன்னையும் செஞ்சோம். எங்களுக்குள்ள எந்த பேய் புகுந்து ஆட்டுச்சோ தெரியலை. இப்ப இப்படி அவங்களை தனியா விட்டுட்டு பிரிஞ்சு நிக்குறோம். தப்பான முடிவுன்னு இப்ப புரியது. ஆனா அதை சரி செய்ய முடியாத இடத்துக்கு வந்துட்டோம். என் பிள்ளைகளுக்காக இவ்வளவு அக்கறை எடுத்துக்கிறீங்க. எப்படி நன்றி சொல்லன்னே தெரியலை” என்றார் உண்மையான வருத்தத்தோடு.
“நான் எங்க அப்பா அம்மாக்கு போன் பண்ணி பேசுறேன் சார். அவங்க வந்து பசங்களை அழைச்சுட்டு போக சொல்றேன். இப்ப ப்ராஜக்ட்டை பாதில விட்டுட்டும் வரமுடியாது. மூனு வருஷ கான்ட்ராக்ட் சைன் பண்ணி இருக்கேன். பசங்களை இங்க கூட்டிட்டு வரது எல்லாம் சாத்தியமான்னு கூட தெரியலை”
“உங்க நிலைமை எனக்கு புரியது சார். நாங்களும் எங்க சொந்த ஊருக்கு அடுத்த வாரம் போக வேண்டியதா இருக்கு. இல்லைன்னா எங்க வீட்ல கூட வச்சுப்போம்”
“நீங்க இவ்வளவு செய்றதே பெருசு சார். நான் எங்க அப்பா அம்மாவை கூட்டிட்டு போக சொல்றேன்”
மீண்டும் ஒருமுறை இவர்களுக்கு நன்று கூறி அழைப்பை வைத்தார் ராம்பிரசாத்.
ராம்பிரசாத் கேட்டுக்கொண்டதால் அவரின் அப்பா சுந்தர்ராஜன், வந்து பேரனையும் பேத்தியையும் ஊருக்கு அழைத்து சென்றார்.
ஹாஸ்டல் வாசத்தால் இரு பிள்ளைகளுமே சற்று மெலிந்து காணப்பட்டனர். முகத்தில் இருந்த குழந்தைதனம் குறும்புத்தனம் எல்லாம் காணாமல் போயிருந்தது.
ராம்பிரசாத்தின் அப்பா சுந்தர்ராஜன், அம்மா பரிமளா. அவர்களுக்கு நான்கு குழந்தைகள். பெரிய பெண் கல்யாணமாகி மதுரையில் இருக்கிறார். அவருக்கு காலேஜ் செல்லும் வயதில் இரண்டு பிள்ளைகள். அடுத்தது ராம்பிரசாத் . மூன்றாவது பெண் மணிமேகலை. முப்பத்தி நான்கு வயதாகியும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. கடைசி பையன் ஹரிப்ரசாத். முப்பத்தி ஒரு வயதாகிறது. திருமணமாகாத அக்கா வீட்டில் இருப்பதாலோ என்னவோ அவனுக்கு பெண் அமைவது சிரமமாக இருந்தது. இந்த சூழ்நிலையில் ராமின் டிவோர்ஸ் விஷயம் வெளிய தெரியவும், பெண் அமையவே இல்லை.
பெரும்பாலும் லீவிற்கு என்று ஆரம்பத்தில் இருந்தே ஊருக்கு அழைத்து வரமாட்டார்கள் ராமும் வினோதாவும். அங்கேயே சம்மர் கிளாஸ்களில் சேர்த்து விடுவார்கள். தாத்தா பாட்டிகள் மட்டும் வந்து எப்பொழுதாவது இவர்களை பார்த்து செல்வார்கள்.
சித்தப்பா அத்தை எல்லாருமே இவர்களுக்கு தூரத்து உறவு போலத்தான்.
அப்பாவுடன் வந்த அண்ணன் பிள்ளைகளை பார்த்ததும்,
“சுத்தம் ஏற்கனவே வீட்ல ஒரு டிக்கெட் முடங்கி இருக்கு.. இப்ப அதுக்கு ஜோடியா இன்னும் ரெண்டு டிக்கெட்” என்று கடுப்பாக கூறி உள்ளே சென்றுவிட்டான் ஹரி.
வராஹிக்கும் வல்லபனுக்கும் அவர் கூறியது புரியாவிட்டாலும், சித்தப்பாவிற்கு அவர்கள் வருகை பிடிக்கவில்லை என்று தெரிந்தது.
மலங்க மலங்க விழித்து நின்ற குழந்தைகளை மணிமேகலை தான் ஒரு ரூமிற்கு அழைத்து சென்றார். இருவரையும் குளித்து உடை மாற்றி வருமாறு கூறினார்.
மணி அத்தை.. இவரை பார்க்க கூடாது என்று தான் அம்மா இவர்களை இங்க அதிகம் அழைத்து வரமாட்டார் என்று வராஹிக்கு நியாபகம் வந்தது.
நல்ல கருப்பு.. பெரிய கண் என்று கூற முடியாது.. முட்டை கண்.. கண் வெளியே ஒரு இன்ச் அளவிற்கு நீட்டிக்கொண்டு இருக்கும். உதடும் மிகவும் தடிமனாக இருக்கும்.. சுமார் அழகு என்று கூட சொல்லமுடியாது. பார்த்ததும் ஒரு ஒவ்வாமை கொடுப்பது போலான தோற்றம். அதனாலே அவருக்கு கல்யாணம் கூடி வரவில்லை.
இவர்கள் வரும்போது பொழுது சாய்ந்துவிட்டது. பிரயாணத்தில் களைத்திருந்த பிள்ளைகள் குளித்து வந்தார்கள்.
அங்கே பாட்டிக்கும் தாத்தாவுக்கும் ஒரே வாக்கு வாதம்.
“அப்படி சொல்லாத பரிமளா.. பிள்ளைங்க என்ன செய்யும் சொல்லு?”
“அதை தானே நானும் தலைபாடா அடிச்சுக்கிட்டேன்.. பிள்ளைகளை நினச்சு பாருங்க பாருங்கன்னு.. கேட்டாங்களா?”
“ப்ச்.. இப்ப பிள்ளைகளுக்கு ஏதாவது சாப்பிட கொடு.. வாடி போய் இருக்குங்க..”
“ஏற்கனவே உங்க பெரிய மகன் பண்ண வேலையால வெளிய தலை காட்ட முடியலை. இப்ப உங்க சின்ன மகன் எனக்கு ஒரு வழி செய்ன்னு என் தலையை பிடிச்சு ஆட்டி வச்சிட்டு போயிருக்கான்.. என்னால சுத்தமா முடியலை” என்று மூச்சு வாங்க பேசினார் பாட்டி.
“இப்ப என்ன அண்ணா செய்றது?” என்று பாவமாக அண்ணனிடம் கேட்டாள் வராஹி.
மணிமேகலை அமைதியாக சமையலை முடித்துவிட்டு,
“அப்பா சாப்பாடு வச்சிருக்கேன். பசங்களை சாப்பிட சொல்லுங்க.. ” என்று அடுப்படியில் இருந்து குரல் கொடுத்தார்.
தன்னை பார்த்து பிள்ளைகள் பயப்படுகிறார்கள் என்று புரிந்து ஒதுங்கி நின்றுகொண்டார்.
ஆவி பறக்க இட்லியும், சின்ன வெங்காய சாம்பாரும் பசியை தூண்டியது.
சுந்தர்ராஜன் பேரப்பிள்ளைகளை அழைக்க,
“நாங்களே போட்டு சாப்பிட்டுப்போம் தாத்தா”, என்று வராஹி பெரிய பெண்ணாய் கூறி அண்ணனையும் அழைத்து சாப்பிட சென்றாள்.
சமர்த்தாக சாப்பிட்டு விட்டு, மீதம் உள்ளதை மூடி வைத்து தட்டையும் கழுவி வைத்து பிள்ளைகள் அவர்களுக்கு ஒதுக்கிய அறைக்கு சென்று அமர்ந்து கொண்டார்கள்.
“சூப்பர் சாம்பார் இல்ல வரா..” என்றான் வல்லபன்.
“ஆமா அண்ணா.. நம்ம ஹாஸ்டல் இட்லி மாதிரி இல்லாம எவ்வளவு சாப்ட் இட்லி இல்ல?”
பயண களைப்பு… குளித்தது… வயிறார சாப்பிட்டது.. இருவருக்கும் கண்கள் தூக்கத்திக்கு சொக்கவே, அடுத்து என்ன என்று எல்லாம் யோசிக்காமல் தூங்கிவிட்டார்கள் இருவரும்.
பிள்ளைகள் தூங்கியதும் இருவருக்கும் போர்வையை போர்த்தி, விளக்கை அனைத்து , ஃபேனையும் மிதமான வேகத்தில் போட்டுவிட்டு சென்றார் மணிமேகலை.
நாளைய புதுவிடியல் யாருக்கு என்ன வைத்திருக்கிறதோ!!!