தினமும் ஜெகன் மனைவி அருகில் டீ வைத்தாலும் நிமிர்ந்து ஒரு பார்வை பார்ப்பாளே தவிர எடுக்க மாட்டாள்.. ஜெகனும் தன் முயற்சியை கை விட மாட்டான். அடாவடியாக மனைவியை அவனால் அணுக முடியும். அவன் மனைவி தானே.. அவனை தவிர யாரால் அவள் காதலை புரிந்து கொள்ள முடியும்.
தொடர்ந்து விடாப்பிடியாக கெஞ்சி, பேசி சரிகட்டி மனைவியாக தன் தாகத்துக்கு உட்படுத்த முடியும். மீனா எவ்வளவு கோபத்தை காட்டினாலும் கடைசியில் கணவனுக்கு என்று விட்டுக் கொடுத்து விடுவாள். மூன்று பிள்ளைகளுக்கு பெற்றோர்களான இவர்களுக்கு தாம்பத்ய வாழ்க்கை புதிது கிடையாது. முன்பு போலவே அவசரப்பட்டு மனைவியை தனக்குள் இழுத்துக் கொள்ள அவன் விரும்பவில்லை. ஜெகன் நிதானத்தை கடைப்பிடித்தான். போலியை முகத்தில் அணிந்து கொண்டு அரை மணி நேரம் தன்னை அனுசரிக்கும் மனைவியை விட முகத்தை திருப்பிக் கொண்டு கூட தனக்காக உணவை எடுத்து வைத்து காத்திருக்கும் மனைவியை ஜெகன் விரும்பினான். அந்த மீனாவை மீட்டு கொள்ள நினைத்தான்.
Advertisement
இப்போதும் மீனா கழுத்தில் தாலி எல்லை. அவனுக்கு தங்கத்தில் பெரிதாக எடுத்துக் கொடுக்க ஆசை தான். அவள் மனம் புரிந்தே அமைதியாக இருந்தான். அந்த அமைதியை பிள்ளைகளிடம் கடைபிடிக்க வில்லை. அவன் ஆசைப்பட்ட எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தான். படுக்கையறை சிறியது என்பதால் ஐந்து பேர் படுக்கும் அளவுக்கு கட்டில் போட முடியாது. அதனால் அரை முழுக்க மெத்தை வாங்கி போட்டான். ஜெகன் ஃப்ரீயாக இருந்தால் அவனே எல்லோர் துணியும் துவைத்து விடுவான். மனைவியே இதையெல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. மெஷின் இருக்கு நேரம் கிடைக்கும்போது அவனும், மற்ற நாட்களில் மீனாவும் வீட்டு வேலையை பகிர்ந்து கொள்வார்கள். ரொம்ப சகஜமான அன்னியோன்ய பேச்சுவார்த்தைகள் கிடையாது. ஆனால், பார்க்கும்போதே வீட்டில் கிடக்கும் வேலைகள் ஜெகன் கவனித்து விடுவான். மீனா சோர்ந்து போய் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கிடப்பில் போடும் வேலைகளை ஃப்ரீயாக இருக்கும்போது ஜெகன் பார்த்துக் கொள்வான்.
அன்று பேங்க் வேலையை முடித்துக் கொண்டு மீனா வீட்டுக்கு வரும் நேரத்தில் வழியில் ஆப்பக்கடை ஒன்றை பார்த்தாள். குட்டி மலருக்கு மிக பிடித்தம். லேசான சிரிப்போடு அவற்றை வாங்க நகர்ந்தாள். மலர்கனி முழு நேரமும் தந்தை பின்னோடு தான் சுற்றிக் கொண்டிருப்பாள். அடுத்த வருடம் தான் மேடம் ஸ்கூல் போகிறாள். ஜெகன் தன் கடைக்கு செல்லும் போது கூட மகளைக் கூட்டிக் கொண்டே சென்று விடுவான். மதிய உறக்கத்திற்கு தான் தாயை தேடுவது. வெளியில் சுற்றுவது மலருக்கு பிடித்தம் என்பதால் தந்தையை தான் துணை பிடித்துக் கொள்வாள். மற்ற இரு பிள்ளைகள் கூட ஸ்கூல் விட்டதும் நேர ஜெகனின் கடைக்கு தான் சென்று விடுவார்கள். அதற்குப் பக்கத்திலே பிள்ளைகளுக்கு டியூஷன் என்பதால் படிப்பு முடிந்ததும் அங்கே தான் இருந்து கொள்வார்கள். சாப்பாட்டுக்கும் இரவு உறக்கத்திற்கும் தான் பெற்றவளை நாடுவது..
உண்மையில் மீனாவின் தோளின் சுமை குறைந்தது. வீட்டு வேலை, கடை வேலை, மூன்று பிள்ளைகளின் பராமரிப்பு என்று பம்பரமாக தான் சுற்ற வேண்டும். அவளின் பார்வை வட்டம் பிள்ளைகளை தாண்டி நிற்காது. தற்போது அவளுக்கான நேரம் கிடைக்கிறது. நிதானமான ஒரு அமைதியான தேநீரோடு மாலை நேரத்து ரசிக்கிறாள். ரொம்பவும் இல்லை ஒரு அரை மணி நேரம் பிடித்த பாடலை கேட்கிறாள். இப்போதெல்லாம் அடிக்கடி மீனாவின் தலையில் பூ இடம் பெறும். இருபது ரூபாயை மிச்சம் பிடித்தால் கூட நிறைய குறைந்து விடுமோ என்ற எண்ணம் எல்லாம் போய் தனக்கென்று சின்ன சின்ன செலவுகளை செய்தாள்.
அந்த முதிய பெண்மணி திரும்பி தன் கணவரை ஒரு பார்வை பார்த்தவள், “மழை வர மாதிரி இருக்கவும் எடுத்து வச்சோம் கண்ணு செத்த நேரம் நில்லு” என்றவர் ஆப்பத்தை போட ஆரம்பிக்க,
லேசாக தூரல் ஆரம்பிக்க,அவர் கணவர் முறைத்தார்.
“என்ன பாக்குறீங்க. தினமும் வாங்கற புள்ள.. தட்ட முடியாது”
Advertisement
மீனாவைப் பார்த்து லேசாக சிரித்த அந்த பெரியவர், “மழைல நின்னா உனக்கு தான் முடியாம போகும். ராத்திரி நீ தான் மூச்சு விட முடியாமல் அணைத்திட்டு கிடப்ப”
“ரெண்டு நிமிஷம் ஒன்னும் ஆவாது” என்றதும் மீனா,
“பரவாயில்லை அம்மா இன்னொரு நாள் வாங்கிக்கிறேன் மழை வர மாதிரி தான் இருக்கு நீங்க கிளம்புங்க” அவர்கள் வாக்குவாதத்தை பார்த்து மீனா சொல்ல,
“ரெண்டு நிமிஷம் இரு தாயி.. எங்களுக்கும் வருமானம் தானே” சிரித்து கொண்டே சொன்னார் அந்த பெண்மணி.
“பசங்க இருக்காங்களாம்மா?” மீனா கேட்க.
“இருக்காங்க தாயி. மூணு பிள்ளைக…” என்றவர்,
“நாங்க தனியா தான் இருக்கோம். எங்க பொழப்புக்கு ஒரு கடையை போட்டுட்டு அமைதியா வாழ்ந்துட்டு போறோம்” என்றவரை கேள்வியாக பார்த்தாள் மீனா. மேற்கொண்டு அவரிடம் கேட்க தயக்கமாக இருந்தது. தவறாக எடுத்துக் கொள்வாரோ என்று…
அவளைப் பார்த்து சிரித்தவர், “இந்த வாழ்க்கையே பிள்ளைகளுக்காகன்னு உழைச்சு வாழ்ந்தோம். அதுக்காக எங்களுக்காக நீங்க வாழுங்கன்னு நம்ம சொல்ல முடியுமா தாயி?.. நம்ம பெத்த பிள்ளைகளா இருந்தாலும் அவங்களுக்கும் குடும்பம், பிள்ளைக, பொழப்புன்னு இருக்குல்ல.. என்னதான் பெத்து வளர்த்தாலும் கட்டிட்டு வந்த ஒரு மாதிரி பெத்த பிள்ளை கிட்ட கூட உரிமை வரமாட்டுது. இருக்கிற கொஞ்ச காலத்துக்கும் இந்த கிழவனும் நானும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா நிப்பேன்னு வந்துட்டோம். நாங்க நல்லா இருக்கோம். வேற என்ன?” என்ற முதிய பெண்மணியை இமைக்காமல் பார்த்தாள் மீனா.
முன்பே அவர்கள் மீனாவுக்கு நல்ல பழக்கம் தான். இன்று பத்து நிமிடம் நிற்க நேரமிருந்தால் குடும்பக் கதையை சொல்கிறார். தனக்கானதை வாங்கியவள் பெருமூச்சோடு நடக்க, அவர்களும் கடையை சாத்தினார்கள். என்னவோ மீனாவுக்கு மனதில் அழுத்தம் சிறிது தூரம் நடந்தவள் நின்று திரும்பி பார்க்க, முதியவருக்கு வயது கூடி முதுகு கூன் போட்டது. கண் பார்வை கூட கொஞ்சம் மங்கி போனதாம். அப்படி இருந்தும் ரோட்டை கடக்கும் வரை மனைவியின் பிடித்த கையை விடாமல் நடந்தார்.
இவள் கூட இந்த வாழ்க்கையை மூன்று பிள்ளைகளுக்காக தான் வைராக்கியமாக கடத்துகிறாள். இவளுக்கும் கூட பிள்ளைகளின் வளமான வாழ்க்கை தான் கனவு. என் பிள்ளைகளை எனக்காக பிடித்து வைக்க முடியாவிட்டால் நான் யாரை பிடித்து வைப்பது?.. என் இறுதி காலத்தில் யார் உடன் நிற்பார்?.. என்றோ ஒரு நாள் மூச்சு அடங்கும் போது தலை தாங்க தனக்கு யாரும் இல்லையா?.. நிச்சயம் செத்தால் தூக்கி போட பிள்ளைகள் இருப்பார்கள். ஆனால் மரணம் எனும் கரையைத் தொடும் வரை கணவன் உடன் இருப்பானா?…
இதுவரை மீனா இவ்வளவு தூரம் எல்லாம் யோசித்தது கிடையாது. என்றோ ஒருநாள் வரும்போது பார்ப்போம் என்ற நினைப்புதான். இன்று எல்லாம் முட்டிக்கொண்டு முன்னே வந்தது. இதையே யோசித்துக் கொண்டு ஜெகனின் கடை வரை வந்துவிட்டாள். மலர் உள்ளே தான் இருக்கிறாள். அப்பம் சூடாக இருக்க இப்படியே வீட்டுக்கு செல்ல மனம் வரவில்லை. அதற்காக உரிமையோடு கணவனின் கடைக்கு செல்லவும் விருப்பமில்லை. தயங்கி நிற்க.
“வாங்க அண்ணி” என்றான் கடை வேலை செய்யும் முருகன். அவன் தான் மீனாவுக்கு ஒத்தாசையாக இருப்பதும்..
“மலர்” என்றாள் கேள்வியாக.
“பாப்பா உள்ள தான் அண்ணன் கிட்ட இருக்கு அண்ணி, நீங்க உள்ள வாங்க”
கொஞ்சம் உள்நோக்கி நகர்ந்தவள், “இங்க நிக்குறேன் முருகா. நீ போய் பாப்பாவ தூக்கிட்டு வா” என்றதும்,
“அண்ணே, அண்ணி உள்ள தான் நிக்குறாங்க” என்றான்.
“யாரடா சொல்ற உங்க அண்ணியா?” என்றான் ஜெகன் அவன் நினைவில் கூட மீனா இல்லை அப்படியெல்லாம் அவள் வந்துவிட மாட்டார் என்று அவன் நன்கறிவான்.
“எனக்கேது அண்ணி, நான் நம்ம அண்ணியை சொல்றேன்” என்றதும் ஜெகன் பரபரப்பானான். அவனால் நம்பவே முடிய வில்லை. மினாவா வந்தது. வேகமாக வெளியே வந்தான்.
அவன் மனைவியே தான். நெஞ்சு நிறைந்து போனது.
“வா, மீனா” பொதுவில் ஒதுங்க முடியாது என்பதால்,
“மலர்” என்றாள்.
ஜெகன் தூக்கி வந்தான். மற்ற பிள்ளைகளை மனைவியின் கண் தேடுவதை கண்டவன்,
“ரெண்டு பேரும் டியூஷன் போயிருக்காங்க மீனா. இப்ப வர நேரம் தான். நான் போய் கூட்டிட்டு வரேன். நீ கடையில் இரு” என்றவன் அவசரமாக வெளியே சென்று விட்டான். பின்னே அவன் நின்றால், அவள் கிளம்புகிறேன் என்று விடுவாளே!…
மீனா கடையை ஆராய்ந்தால்.. முன்பு கூட கேள்விப்பட்டிருக்காளே ஒழிய பார்த்ததில்லை. இன்று தான் முழுதாக கடையை காண்கிறாள். நல்ல விஸ்தாரமாக செழிப்பாக இருந்தது.. பார்க்கும்போதே ஜெகனின் முன்னேற்றம் தெரிந்தது.
“உள்ள வந்து உட்காருங்க அண்ணி. வெளியே நிறைய கஸ்டமர்ஸ் வருவாங்க. உங்களுக்கு தான் சங்கடம்” என்று முருகன் அவளை சரிகட்டியே ஜெகனின் அலுவலக அறைக்கு தள்ளிக் கொண்டு வந்து விட்டான்.
அடுத்த ரெண்டு நிமிடத்தில் ஜெகனும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வர, உணவை பார்த்ததும் அங்கேயே அமர்ந்து உண்ண தொடங்கினார்கள். ஜெகன் அனாவசியமாக பார்வையால் கூட மீனாவை தீண்டவில்லை. வான நீலத்தில் காட்டன் சேலையும், கையளவு பூவுமாக ஜம்மென்று இருந்த மனைவியை நிறைவாக பார்த்தான். முகத்தில் எதையும் காட்டவில்லை. எதார்த்தமாக கண்டுகொள்ளாமல் இருந்தால் மட்டும்தான் மீனாவை சரி கட்ட முடியும். அவனை நன்றாக புரிந்து கொண்ட மனைவி என்பதால் கொஞ்சம் ஜெகனின் பார்வை மாறினாலும் முகத்தை தூக்கிக் கொண்டு கிளம்பி விடுவாள்.
மீனாவுக்கு எப்படியோ?.. ஜெகனுக்கு இது நீண்ட நாள் கனவு. நிறைய நாள் அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் மனைவியை பார்த்திருக்கிறான். நாம் முன்னேறி விட்டோம் மீனா, நீ முதலாளியாகி விட்டாய், நம் செல்வ நிலையில் பார் என்று எல்லாவற்றையும் மீனாவிடம் காட்ட மனம் பொங்கும். அவனோடு காய்கறி கடையில் அவளும் தானே கஷ்டப்பட்டாள். இந்த உழைப்பும், வருமானமும் தான் மட்டும் நன்றாக வாழ வா ஓடிக் கொண்டிருக்கிறான். இந்த வசதி, பணம், சம்பாத்தியம் எல்லாம் யாருக்கானது?…
ஒரு நேர உணவாக இருந்தாலும் சரியாக பகிர்ந்து கொண்டு தனக்கு நிகராக உழைத்த தன் மனைவியை விட்டா தனக்கான ஆடம்பரம். எத்தனை நாள் வருத்தப்பட்டு இருப்பான். இன்று கை கூடி விட்டது. இங்கு பத்து பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள் எல்லோருக்கும் தெரியும் அவன் மனைவி என்று.. அந்த மரியாதையை அவர்கள் கொடுக்கவும் செய்ய, மீனாவுக்கு தான் சற்று சங்கடமாக இருந்தது.
அதே அறையில் இருந்து கொண்டு ஜெகன் ஆபீஸ் வேலை பார்ப்பது போல தள்ளி நின்றான். மீனாவும் கணவனை கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். சாதாரண பனியனும், கைலி வேட்டியும் கட்டிக் கொண்டு காய்கறி மூட்டையை தூக்கிக் கொண்டிருந்த தன் கணவன் இன்று முதலாளியாக அமர்ந்திருக்கிறான். மனதில் எத்தனை கோபமும் வருத்தமும், இருந்தாலும் அவ்வளவு நிறைவாக இருந்தது. பட்ட பாட்டை வெற்றியாக மாற்றிக் கொண்டானே!.. இந்த சூட்சமத்தை முன்பே கடைபிடித்து இருந்தால் என்ற ஏக்கம் எழாமல் இல்லை.
ஒரு பேப்பர் பிளேட்டில் வைத்துப் பிள்ளைகளுக்கு கொடுத்தவள், அதே மாதிரி ஒன்றை எடுத்து கணவன் அருகில் வைத்தாள். உங்களுக்காக சாப்பிடுங்கள் என்ற உபச்சாரம் எல்லாம் இல்லை. ஆனால், அவனுக்காகவும் எடுத்து வைத்தாள். ஜெகன் மனைவியை ஆச்சரியமாக பார்த்தான். அவள் வந்ததை பெரிது என்று நினைத்திருக்க, இதையெல்லாம் அவன் எதிர்பார்க்கவே இல்லை.
மீனா பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கிளம்ப நினைக்க, ஜெகன் தான் மழை வருமா என்று நினைத்தான். அதையே சொல்ல,
“லேசா விழுந்த தூரல் கூட நின்று போச்சு. நாங்க மெதுவா போய்டுவோம். இனி இருட்டிடும் பிள்ளைக இருக்க வேண்டாம்” என்று மனைவி சொன்ன பின்,
“முருகா.. நம்ம வண்டி எதுவும் வெளியே நிற்கிதா? எனக்கு கொஞ்சம் வேலை வேற இருக்கு. மீனாவ கூட்டிட்டு போக முடியாது”
“இல்ல வேணாம் நாங்க மெதுவா நடந்து போய் விடுவோம்” என்றவள் மலரை தூக்கிக் கொள்ள, அதையே ஜெகனும்,
“இல்ல வேணாம் கொஞ்ச தூரத்தில் மழை வந்துட்டா.. பிள்ளைங்க ஸ்கூல் பேக் லஞ்ச் பாக்ஸ் எல்லாம் இருக்கு. தனியா இழுத்துட்டு போகணும்” என்றதும், அவளுக்கு ஒரு வேகம்.
இவ்வளவு நாள் இதை எல்லாம் தனியாக தானே செய்தாள். அப்போதெல்லாம் யார் துணை என்று இருந்தார்கள். இதை விட சிறுபிள்ளையாக மலரை வைத்துக்கொண்டு அவள் சீரழிந்தது கொஞ்சமா? நஞ்சமா?.. இப்போது அக்கறை உள்ளவன் போல எவ்வளவு பேச்சு. இந்த பொறுப்பெல்லாம் அன்று எங்கே போனது. இவன் மட்டும் அன்றே ஒழுங்காக இருந்திருந்தால், வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.
ஜெகன் மனைவியின் முகத்தைப் பார்த்தான் இதுவரை நன்றாக தானே இருந்தாள். என்ன ஆச்சு? யோசனையானது.
வேற என்ன?.. எவ்வளவு நன்றாக வாழ்ந்து இருக்கலாம் என்ற ஏக்கம் தான். எப்போதும் ஜெகனிடம் பட்டென்று கொத்திக் கொண்டே இருப்பவள். மனதில் நினைத்ததை இன்று வெளியில் சொல்லவில்லை. அமைதியாகிக் கொண்டாள்.
மனைவி, பிள்ளைகளை பார்ப்பது ஜெகனின் கடமை தான் என்றாலும் என்னால் முடியாது என்று ஒதுங்கும் எத்தனையோ ஆண் மக்கள் இருக்க தானே செய்கிறார்கள். அதைப் பார்த்து உன் வாழ்க்கையை சரி கட்டிக் கொள் என்று தாய் சொல்லும் போதெல்லாம் கத்துபவள், இன்று அதையே நினைத்து மனதை அமைதியாக்கி கொண்டாள். அவனுக்கு மனைவி மீது காதல் இல்லை என்று சொல்லவில்லையே. குடும்பஸ்தனாக பொறுப்பில்லை என்று தானே கத்தினாள்.
முருகன் ஆட்டோவை எடுத்து வர செல்ல.. புகழ், “அப்பா கேக்”என்றான்.
“என்னடா இப்போ தான சாப்பிட்டீங்க. எப்ப இருந்து ரொம்ப செல்லம் கொஞ்சம் ஆரம்பிச்சீங்க” என்று மீனா கடிந்து கொள்ள,
“மீனா அதட்டாத. டியூஷன் போறதுக்கு முன்னாடியே கேட்டான். நான்தான் நீங்க வந்ததும் வாங்கி தரேன்னு சொன்னேன்” என்றவன் மகனை அழைத்துக்கொண்டு சாலையை கடந்து செல்ல போக,
“அப்பா நானு” என்ற மலரும் தகப்பனின் தோளில் தொற்றிக் கொள்ள மற்ற இருவரும் சென்ற பின் தமிழ் மட்டும் எவ்வாறு அமைதியாக இருப்பாள் அவளும் தந்தையோடு ஓடிவிட்டாள். மீனா கடுப்போடு நான்கு பேரையும் பார்த்துக் கொண்டிருந்தாள். முன்பெல்லாம் இவ்வளவு செல்லம் கிடையாது. அப்பா வந்தபின் இவள் கவனிப்பில் இருந்து வெளியேறி அவனிடம் ஐக்கியமாகி விட்டார்கள்.
கேக் மட்டும் என்று போன மக்கள் கைநிறை அள்ளி வர, அவர்களை ஒன்றும் சொல்ல முடியாமல் கணவனைப் பார்த்து முறைத்தால் மீனா.
“நாளைக்கு ஸ்கூல் கொண்டு போக வேண்டும் தானே” என்று மனைவியை ஜெகன் சமாதானம் செய்ய,
“ரொம்ப செல்லம் கொடுக்காதீங்க. பிள்ளைக கேட்டா எல்லாத்துக்கும் தலையாட்டக் கூடாது. இதுதான் லாஸ்ட்” என்று மொத்தமாக நான்கு பேரையும் எச்சரித்தாள்.
பிள்ளைகளை மனைவியோடு ஆட்டோவில் ஏற்றிவிட்ட ஜெகன், நிறைவாக மனைவியை பார்த்திருந்தான் என்னவோ அவளிடம் கொஞ்சம் மாறுதல் தெரிந்தது. அப்படியே முன்னேறினால் நன்றாக இருக்கும் என்று கடவுளிடம் அவசர வேண்டுதல் வேறு வைத்தான்.
ஜெகன் வேலையை முடித்து இரவு வீட்டுக்கு வந்த போது சாப்பாட்டுக்கடை ஆரம்பமானது. பிள்ளைகள் மூவரும் வரிசையாக அமர்ந்திருக்க.. மீனா சாப்பாட்டை எடுத்து வைத்தாள்.
ஜெகன் வந்தவன், குளிக்க மேலே சென்று விட்டான். “தமிழ், அப்பாவ சாப்பிட கூட்டிட்டு வா…” என்றாள் மீனா.
“அப்பா” என்ற சத்தம்,
“என்னடா தமிழ்”
“சாப்பிட வர சொல்லி அம்மா சொன்னாங்கப்பா”
“யாரு சொன்னா?”
“அம்மா வர சொன்னாங்க. இன்னும் யாரும் சாப்பிடல” என்றதும்,
“தமிழ், அம்மாவா வர சொன்னா?” என்றதும் மகள் புரியாமல் தந்தையை பார்க்க,
மகளிடம் எதையும் வெளிக்காட்ட முடியாமல் அவளோடு சேர்ந்து நடந்தான் ஜெகன். அவனுக்காக, அவன் குடும்பம் காத்திருந்தது. அவசரமாக வந்து அமர்ந்தவன் மலரை தூக்கி மடியில் வைக்க,
கணவனை முறைத்து, “அவளை கீழே இறக்கி விடுங்க. இன்னும் ஆறு மாசத்துல ஸ்கூல் போகணும். தனியா சாப்பிட்டு பழகட்டும்” என்றதும், நல்ல பையனாக மனைவி பேச்சை கேட்டான்.
இட்லி பருப்பு கூட்டு, கார சட்னி ஜெகனுக்கு அமிர்தமாக இருந்தது. மலரின் குட்டி கைகளுக்கு அடக்கமாக கொஞ்சம் பிட்டு வைத்தான். இன்னைக்கு என் பொண்டாட்டிக்கு என்னமோ ஆகி போச்சு. காலைல கூட நாள் இவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்கவில்லையே…
உறக்கம் எப்போதும் போல பிள்ளைகளின் நடுவில் விட்டு ஆளுக்கு ஒரு மூலையில் முடங்கி கொண்டார்கள். ஆனாலும், மனதில் என்னவோ ஒரு நெருக்கம்.
மீனா அமைதியாக கண்மூடி கொண்டாள். எவ்வளவு நாள் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியும். நிச்சயம் நியாயம் மீனா பக்கம் தான்.
என்னதான் ஜெகன் மனைவி மக்கள் என்று அவர்களையே சுற்றி வந்தாலும்.. அவன் பொறுப்பெற்ற தன்மையும் குடிப்பழக்கமும் அவனைக் கெடுத்தது மட்டுமல்லாமல் அவனோடு வாழ வந்த மனைவியையும், அவனை நம்பி வந்த பிள்ளைகளையும் சீரழித்து விட்டது. எல்லாருக்கும் வாழ்க்கை இரண்டாம் வாய்ப்பை தருவதில்லை. ஜெகனை மாறி பொறுப்பற்ற குடிகாரர்கள் பலர் திருந்துவதும் இல்லை. சில பெண்கள் இப்படிப்பட்ட கணவனை காலம் முழுக்க அனுசரித்தே கடந்து விடுவார்கள். சிலர் மிகவும் போராடி முடியாமல் வெட்டிக்கொண்டு தனியாக சமுதாயத்தை எதிர்கொண்டு போராடுவார்கள். ஆனால், நல்ல மனமாற்றம் முன்னேற்றம் எல்லோருக்கும் அமைவதில்லை. போராடியை ஓய்ந்து போனவர்களும் உண்டு. திருந்தவே மாட்டான் என்று தண்ணீ தெளித்து விடுபவர்களும் உண்டு.
என்னவோ ஜெகனுக்கு ஒரு வாய்ப்பை மீனாவே கொடுத்தாள். எப்போதும் போல இப்போதும் மீனாவே முதற்படியே எடுத்து வைத்தாள். பொதுவாக குடும்பத்தில் நியாயத்தை கொண்டு வரக்கூடாது. எல்லா உறவுகளும் சரியாக இல்லாத பட்சத்தில் நியாயம் பேசினால் நாம் தவறாகி போவோம்.
கணவன், மாமியார், நாத்தனார், மாமனார், கொழுந்தனார் என்று சுற்றி இருக்கும் குடும்பத்தில் ஒவ்வொருவரிடமும் நியாயத்தை பேசினால் நாம் தனியாகத்தான் இருக்க வேண்டும். உறவுகளோடு கலந்தாட முடியாது. நியாயம் பேசி வெட்டுபவர்களை விட சரிகட்டியே குடும்பத்தை ஓட்டுபவர்கள் தான் அதிகம்.
மீனாவும் அந்தப் பக்கம் நின்று கொண்டாள். அவளோடு பயணித்தவர்கள் ஜெகனை வெட்டி விடுவது தான் சரி என்று கூட சொல்வார்கள். ஆனால், இங்கு யாருடைய குடும்பம் சிதைந்து போகும். மன்னிப்பு என்ற ஒன்றை மீனா வழங்காவிட்டால் அவர்களுக்கான குடும்பம் இல்லாமல் போகும். தன்னுடைய வலிக்கு நியாயம் தேடி தன் வாழ்க்கையை பாழாக்க முடியுமா?…
காலமும், நேரமும் யாருக்காகவும் நிற்காது வைராக்கியத்தை நெஞ்சில் சுமந்தால், உடம்பில் வலு இருக்கும் மட்டும் வாழ்க்கை ஓடும். திரும்பி பார்த்தால் வெறுமையான வாழ்க்கையால் யாருக்கு புண்ணியம். நிச்சயம் தங்களுக்கான ஒரு வாய்ப்பை தாங்களை எடுத்துக் கொண்டார்கள்.