Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அறம் காக்கும் அன்பு

அறம் காக்கும் அன்பு 5

அத்தியாயம் 5 

ராம்பிரசாத்தின் சொந்த ஊர் கும்பகோணம். சுந்தராஜன் கும்பகோணத்தில் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இப்பொழுது அவர்களது பூர்விக நிலத்தில் கொஞ்சமாக விவாசாயம் பார்த்து கொண்டிருக்கிறார்.



Advertisement

ஹரிப்ரசாத் கும்பகோணத்தில் ஒரு தனியார் கல்லூரியில் லேப் அசிஸ்டெண்டாக வேலை செய்கிறான். அவர்கள் வீட்டிலே அவன் மட்டுமே படிப்பில் சுமார் ரகம்.

அவனுக்கு பெண் கிடைக்காமல் இருப்பதற்கு அக்கா, அண்ணன், அண்ணன் பிள்ளைகள் என்று மற்றவர்கள் மீது பழி போட்டானே தவிர தன்னிடம் என்ன குறை என்று யோசிக்கவே இல்லை.

Advertisement

Advertisement

வராஹியும், வல்லபனும் இங்கே வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது. ஹாஸ்டலில் உணவு வேலையில் மட்டுமே பார்க்க முடிந்த இருவருக்கும், நாள் முழுவதும் சேர்ந்து இருப்பது ஒன்றே மனதிற்கு ஆறுதலாக இருந்தது. சரியாக சாப்பாடு நேரத்திற்கு டைனிங் டேபிள் மீது சூடாக உணவு இருக்கும். இருவரும் யாரும் இல்லாத சமயமாக பார்த்து சாப்பிட்டுவிட்டு மறுபடியும் அறைக்குள் சென்று விடுவார்கள்.

பரிமளாவிற்கு கூட பிள்ளைகளின் இந்த அமைதி வருத்தமாக தான் இருந்தது. நம் வீடு என்று உரிமையாக இந்த பிள்ளைகள் வளம் வரவில்லையே என்று ஏக்கமாக கூட இருந்தது. இங்கே பேரப்பிள்ளைகளை அனுப்புவதில்லை என்று பலநாட்கள் ராமுடனும் வினோதாவுடனும் சண்டை பிடித்திருக்கிறார். அதற்கு காரணம் நீதான் என்று மகளையும் திட்டி உள்ளார். இப்பொழுது ஏனோ வந்த பிள்ளைகளை சீராட மனமில்லாமல் போனது!

Advertisement

“இவளை என் முன்னாடி வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேனா இல்லையா? காலையிலே வேலைக்கு போகும்போது இவ முகத்துல முழிச்சா விளங்குமா?” என்று ஹரி கத்தும் சத்தம் கேட்டு பயந்து போனார்கள் இருவரும். தங்களுக்காக தினமும் அத்தை தான் சமைக்கிறார் என்பது புரிந்து இருவருக்கும் அவர் மீது பாசம் துளிர் விட ஆரம்பித்திருந்தது 

“அண்ணா, இந்த சித்தப்பா ரொம்ப மோசம். பாவம் அத்தை” என்றாள் வரா.

“ஆமா, ஆனா ஏன் தாத்தாவும் பாட்டியும் அவரை ஒன்னும் சொல்ல மாட்டேங்குறாங்க..”

“தெரியலையே.. நாம அத்தைகிட்ட பேசுவோமா?”

“நானும் நினைச்சேன். நமக்காக அவங்க தானே எல்லாம் செய்றாங்க. ஆனா அவங்க முகத்தை பார்க்க பயமா இருக்கு..”

இருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

அன்று வீர்யாவுடன் பேசுகையில் அத்தையை பற்றி கூறினாள் வராஹி.

இரண்டு தினங்களுக்கு ஒரு முறை வீர்யாவிற்கு அழைத்து பேசிவிடுவாள்  வராஹி.

“உங்க அத்தை பாவம் தானே வரா.. அவங்க பார்க்க அழகா இல்லாட்டி அது அவங்க தப்பா?”

“ஆமா வீரு.. நானும் அதை தான் யோசிச்சேன்.”

“நீயும் வல்லபனும் அவங்க கிட்ட பேசுங்க.. சரியா?”

“சரி வீரு”

“வெளியே எங்கயாவது போனீங்களா? நாங்க எங்க அம்மாச்சி ஊருக்கு வந்திருக்கோம். இங்கே கோவில் திருவிழா.. “

“ஓ..நாங்க எங்கேயும் போகல வீரு.. இங்க நானும் அண்ணாவும் கேரம் போர்ட், செஸ் எல்லாம் விளையாடுறோம்.” 

மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பை வைத்துவிட்டாள்.

பின் அண்ணனும் தங்கையும் அத்தையிடம் பேசலாம் என்று முடிவு செய்து கொண்டார்கள்.

காலை ஒரு பதினொரு மணி போல, சமையல் வாசனை வரவே.. இருவரும் மெல்ல அடுப்படிக்கு சென்றார்கள். 

இவர்கள் வரும் அரவம் கேட்டு, இவர்களுக்கு முகத்தை காட்டாமல், “ஏதாவது வேணுமா?” என்றார் மணிமேகலை.

“சாரி அத்தை, நாங்க உங்க கிட்ட பேசாம இருந்தது தப்பு” என்றாள் வராஹி.

“எங்களுக்காக இவ்வளவு செய்றீங்க, தேங்க்ஸ் அத்தை”  என்றான் வல்லபன்.

மணிமேகலை கண்களில் இருந்து மணி மணியாய் நீர் துளி இறங்கியது. தன்னிடம் மன்னிப்போ நன்றியோ இதுவரை யாரும் கூறியதாக அவருக்கு நினைவே இல்லை..

“இனி நம்ம பிரெண்ட்ஸ் ஓகே..” என்று கையை நீட்டினாள் வராஹி.

கண்களில் நீர்த்துளி வைரமாய் நிற்க, நடுங்கிய உதடுகள் புன்னகைக்க முயற்சி செய்ய, நடுங்கும் கையை வாராஹியின் சிறிய கை மீது வைத்தார்.

வல்லபன் அவர் கை மீது அவன் கையை வைத்து ‘பிரெண்ட்ஸ்..’ என்றான்.

இப்பொழுது அத்தையின் முகத்தை சாதாரணமாக பார்த்தனர் இருவரும்.

அதில் ஒரு சிறு துளி கூட ஒவ்வாமை இருவருக்கும் வரவில்லை.

மணிமேகலையின் அறையில் தனியாக தொலைக்காட்சி இருந்தது. இவர்கள் அதன் பிறகு அங்கே அமர்ந்து கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்த்தார்கள்.

மணிமேகலைக்கு நாள் முழுவதும் வேலைகள் இருந்து கொண்டே இருந்தது. கிடைக்கும் நேரத்தில் அண்ணன் பிள்ளைகளோடு ஆசையாக நேரத்தை செலவிட்டார்.

அன்று பரிமளாவின் தோழிகள் வீட்டிற்கு வருவதாக இருந்தது. அதற்கான விருந்தை மணிமேகலை தான் தயார் செய்தார். வாராஹியும் வல்லபனும் அவருக்கு சிறு சிறு உதவி செய்து கொடுத்தார்கள்.

“சீக்கிரம், வேலை முடிச்சாச்சுன்னா உள்ளே போ, அவங்க வர நேரமாச்சு” என்று அவசரப்படுத்தினார் பரிமளா.

“ஏன் பாட்டி, எதுக்கு அத்தையை உள்ளே போக சொல்றீங்க?” என்றாள் வராஹி.

திடீர் என்று வராஹி இப்படி கேட்கவும் ஒரு நிமிடம் பதிலின்றி வாயடைத்து போய் விட்டார் பரிமளா..

பின்னே இது எப்பொழுதும் நடக்கும் ஒன்று. யாரும் வெளிப்படையாக ஏன் எதற்கு  என்று கேட்டது இல்லை.

“இல்ல வரா, வரவங்க இவளை பார்த்து ஏதாவது சொல்லிட்டா மணி மனசு சங்கடபடுமில்ல? அதுக்கு தான்”

“வரவங்க  உங்க ப்ரண்ட்ஸ் தானே பாட்டி.. அவங்களுக்கு அத்தை பத்தி தெரியதா? அவங்க சொல்றது இருக்கட்டும், இப்ப நீங்க சொல்றது தான் அத்தைக்கு கஷ்டமா இருக்கும்.”

“உனக்கு தான் எல்லாம்  ரொம்ப தெரியும் போல. அப்படியே உங்க அம்மா வாய் உனக்கு. சொல்றதை மட்டும் எல்லாரும் செஞ்சா போதும், புரியுதா?

நீங்களும் பேசாம உள்ளாரவே இருங்க, இல்லைனா வரவங்களுக்கு அடுத்து உங்க விஷயம் தான் வாய்க்கு அவலாகும்..” என்று வெடுக்கென்று கூறி நகர்ந்து விட்டார்.

“நீங்க ஏன் அத்தை அப்புறம் அவங்களுக்காக சமைச்சு வைக்குறீங்க?” என்றாள்  வராஹி கோவமாக.

“என்ன வேலை செய்றதுன்னு தேர்ந்தெடுக்க எல்லாம் எனக்கு ஆப்ஷன் இல்ல வரா.. சரி அதை விடுங்க.. இன்னிக்கு நாம் மூனு பேரும் ஒரு போர்டு கேம் விளையாடலாம். நான் இன்னிக்கு மதியம் விளையாட ஏற்கனவே எடுத்து வச்சிட்டேன்” என்று பிள்ளைகளின் கவனத்தை திருப்பி உள்ளே அழைத்து சென்றுவிட்டார்.

“ஏன் அத்தை எல்லாரும் உங்களை போய் அழகா இல்லைன்னு சொல்றாங்க.. நிஜமா நீங்க எப்படி இருக்கீங்க தெரியுமா?”

“எப்படி இருக்கேன்?”

“ஏஞ்சல் மாதிரி இருக்கீங்க.. இவங்க சொல்றதை எல்லாம் நீங்க கண்டுக்காதீங்க..”

“சரி பெரியமனுஷி.. இப்ப வாங்க விளையிடுவோம்”

அன்று இரவு மீண்டும் வீட்டில் சண்டை. மணிமேகலை அவர் அறையிலும், வராஹி வல்லபன் அவர்கள் அறையிலும் இருந்தார்கள். இருந்தும் கூடத்தில் நடக்கும் பேச்சு வார்த்தை மிகவும் தெளிவாக கேட்டது.

பரிமளா அம்மா வீட்டின் பக்கம், தூரத்து சொந்தத்தில் ஒரு பெண்ணின் ஜாதகம் ஹரிபிரசாத்திற்காக வந்திருக்கிறதாம். “வீட்ல கல்யாணம் ஆகாம அக்கா கூட இருக்கும்போது எப்படி பொண்ணும் மாப்பிள்ளையும் சகஜமா இருக்க முடியும். அவங்களை எங்கயாவது ஹாஸ்டல் மாதிரி சேர்த்து விட்டுட்டீங்கன்னா நாங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கிறோம்” என்று பெண்ணின் அப்பா கூறியிருக்கிறார்.

விஷயத்தை பரிமளா கூறியதும், சுந்தராஜனுக்கு வந்ததே கோவம்..

“என்ன விளையாடுறீங்க, அவங்க பொண்ணு வந்து வாழ என் பொண்ணை நான் அநாதையா அனுப்பனுமா?”

“இப்ப எதுக்கு அனாவசிய வார்த்தையை சொல்றீங்க?நல்ல வசதியான  ஹாஸ்டல்ல நாமளே சேர்ப்போம்.. அடிக்கடி போய் பார்த்துட்டு வருவோம்.. ராம் வாழ்க்கையும் வீணா போச்சு.. மணிக்கு கல்யாணம் அமையவே இல்லை.. ஹரி வாழ்க்கைவது நல்லா இருக்கட்டுமே” என்று நாடகத்தை அரங்கேற்றினார் பரிமளா.

எல்லாம் ஹரி ஏற்கனவே சொல்லி கொடுத்திருந்தது…

“இப்படி வீட்டு பொண்ணை ஹாஸ்டல்ல சேர்க்க சொல்ற பொண்ணு எப்படி குடும்பத்துக்கு ஒத்து வரும்?” என்றார் சுந்தர்ராஜன்.

“என்னப்பா நீங்க? இங்க என்ன பொண்ணுங்க க்யூலையா நிக்குறாங்க.. வர்றதே ஒன்னு ரெண்டு.. அதையும் முடிக்கலைன்னா அப்புறம் நானும் ஒண்டிக்கட்டியா இருக்க வேண்டியது தான்” என்றான் ஹரி எரிச்சலாக.

“டேய்.. நீ வேணா கல்யாண பண்ணிக்கிட்டு தனி குடித்தனம் போ.. அதுக்காக எல்லாம் மணியை நான் ஹாஸ்டல் அனுப்ப ஒத்துக்க முடியாது”

“நீ என்னம்மா பேசாம இருக்க? நீயாவது எனக்காக பேசுமா.. அப்பாகிட்ட சொல்லும்மா.. என் சம்பளத்துல தனிக்குடித்தனம் எல்லாம் போக முடியாது”

என்று அம்மாவை துணைக்கு இழுத்தான்.

“அவன் சொல்றதுலயும் நியாயம் இருக்கத்தானே செய்யுது.. மணி மேலே எனக்கு பாசம் இல்லைன்னு இல்லை. இருந்தாலும் இந்த ஜென்மத்துல அவளுக்கு கல்யாணம் ஆக வாய்ப்பில்லை. நாம இருக்க வரைக்கும் பரவாயில்லை, அப்புறம் இவனுக்கு பாரமா நிக்க கூடாது இல்ல. நாம அவளை ஹாஸ்டல்ல சேர்க்கிறது தப்பு இல்லைங்க..நாம இருக்கும்பொழுதே அவளுக்கு ஒரு பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுத்திடலாம்” என்று நயமாக பேசினார்.

“இப்ப எனக்கு வர கோவத்துக்கு உங்க ரெண்டு பேரையும் தூக்கி போட்டு மிதிக்க போறேன் பாருங்க.. இத்தனை நாள் நான் நீங்க செய்ற அக்கரமத்தை எல்லாம் பார்த்து பேசாம இருந்தது என் தப்பு.. இனிமேலும் அப்படி இருப்பேன்னு நினைக்காதீங்க.. இந்த பேச்சை இத்தோடு  நிப்பாட்டுங்க.. இல்லைனா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்று ருத்ரதாண்டவமே ஆடிவிட்டார்.

இவ்வளவு கோவம் அபூர்வம் அவரிடம். அதனால் அம்மாவும் மகனும் அப்பொழுதைக்கு அமைதியாகினார்கள். ஆனால் இதை விட்டுவிடும் எண்ணம் எல்லாம் அவர்களுக்கு  இல்லை.

கேட்டுக்கொண்டிருந்த மணிமேகலை விரக்தியாக சிரித்து கொண்டார்.

இப்படி தான் இவள் எங்களோட ஸ்கூலுக்கு வந்தா எல்லாரும் எங்களை கிண்டல் செய்றாங்க.. இவ ஸ்கூல் வரக்கூடாது என்று ஆட்டம் ஆடி மணிமேகலையின் படிப்பை பத்தாவதோடு முடித்து வைத்திருந்தனர் சகோதரர்கள்.

அப்பொழுது சுந்தராஜன் ட்ரான்ஸபர் ஆகி ஈரோட்டில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவருக்கு தெரியாமலே மணிமேகலையை வீட்டோடு இருக்க செய்திருந்தார்கள். அதன் பிறகு பெரிய பெண்ணின் கல்யாணம், மகன்களின் கல்லூரி செலவு என்று அடுத்தடுத்து வரவே சுந்தராஜனும் கண்டும்காணாமலும் விட்டுவிட்டார்.  

வராஹிக்கும் வல்லபனுக்கும் அவர்கள் வயதிற்கே வீட்டில் நடப்பது அநியாயம் என்று புரிந்தது. இருவரும் அமைதியாக படுத்துவிட்டார்கள்.

வல்லபன் சற்று நேரத்தில் தூங்கி இருந்தான். வராஹிக்கு பல எண்ணங்கள்.. தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள்.

ஹாலில் யாரோ நடமாடுவது போல தெரியவும் யார் என்று எட்டி பார்த்தாள்.

சுந்தர்ராஜன் தான் நடந்து கொண்டிருந்தார்.

இவள் மெல்ல எழுந்து கதவை மூடிவிட்டு தாத்தாவிடம் சென்றாள்.

“என்ன தாத்தா தூக்கம் வரலியா?” என்றாள்.

வராஹியை அந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லை அவர். 

“நான் தூங்கிறது இருக்கட்டும்.. நீ தூங்காம என்ன செய்ற?”

“எனக்கும் தூக்கம் வரல தாத்தா.. நிறைய விஷயங்கள் மனசுல ஓடிட்டே இருக்கு”

“சின்ன பொண்ணு நீ, நீ எதுக்கு கண்டதையும் யோசிக்கிற? வீட்ல நடக்கிற சண்டை பார்த்து பயந்துட்டியா?”

“பயப்படலை தாத்தா.. ஆனா வருத்தமா இருந்துச்சு.”

“வருத்தப்படாத வராஹி ம்மா, தாத்தா பார்த்துகிறேன்”

“அத்தையை பாட்டியும் சித்தப்பாவும் பார்த்துகிறது கஷ்டமா இருக்குன்னு எல்லாம் பேசுனாங்க.. ஆனா நிஜம் அத்தை தானே அவங்க ரெண்டு பேரையும்..  நம்ம எல்லாரையும் பார்த்துக்குறாங்க?” என்றாள் குழப்பமாக.

“ஹா ஹா ஹா.. ரொம்ப சரியா சொன்ன.. இது புரியாம அந்த ரெண்டு அரைவேக்காடுகளும் தையா தக்கான்னு குதிக்குதுங்க.. உண்மையை சொல்லட்டுமா. அவங்க ரெண்டு பேருமே டம்மி பீஸ்சுங்க..”

தாத்தாவின் பேச்சை கேட்டதும் வராஹியின் உதட்டிலும் லேசாக புன்னகை வந்தது.

“தாத்தா எனக்கு ஒரு ஐடியா.. சரியா தப்பான்னு தெரியல..”

“என்னன்னு சொல்லு கேட்போம்.. எனக்குதான் ஒரு யோசனையும் வர மாட்டேங்குது.”

“எனக்கு ஹாஸ்டல்லாம் பிடிக்கல.. அண்ணாக்கும் பிடிக்கலை.. இதுல அத்தையை வேற  ஹாஸ்டல்ல விடணும்னு பேசுறாங்க.. பெரியவங்களுக்கு கூட ஹாஸ்டல் எல்லாம் இருக்குமா? ஆனா அங்க எல்லாம் வீடு மாதிரி இருக்காது தாத்தா.. எங்களுக்காச்சு படிக்கிற வேலை இருக்கும் ஸ்கூல் இருக்கும். அத்தை என்ன செய்வாங்க?”

“நான் உங்க அத்தையை ஹாஸ்டல்ல எல்லாம் விட மாட்டேன் வரா.. நீ கவலை படாதே..”

“இல்ல தாத்தா, நான் என்ன நினைக்கிறேனா, நானும் அண்ணாவும் அத்தையும் ஒண்ணா ஒரு வீட்ல இருக்கலாமே.. நாங்க அத்தையை பார்த்துகிறோம்..” என்றாள் தயங்கி தயங்கி…

அத்தை எங்களை பார்த்துக்கட்டும் என்று கூறாமல், அத்தையை நாங்க பார்த்துகிறோம் என்று பேத்தி கூறியது சுந்தராஜனை மிகவும் நெகிழ்த்தியது.

“நீ சொன்னதே சந்தோசமா இருக்குடா.. ஆனா இது எந்த அளவு சாத்தியம்னு சொல்ல முடியாது..”

“முயற்சி செய்யலாமே தாத்தா. இதுல எங்களுக்கும் ஆதாயம் இருக்கு அத்தைக்கும் இருக்கு.. வின் வின் டீல் தானே தாத்தா?” 

“எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் கொடு டா.. இங்க உங்க பாட்டியும் சித்தாப்பாவும் ஒரு ரகம் .. அவங்களை நான் சமாளிச்சிடுவேன். ஆனா  உங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் தனி ரகம்..  சாமி ஆடுவாங்க டா..”

“அது எல்லாம் முன்ன தாத்தா.. இப்ப அவங்களுக்கு எங்களை பத்தி கவலை பட எல்லாம் நேரமில்லை. நீங்க எடுத்து சொன்னா, நான் பொறுப்புன்னு சொன்னீங்கன்னா ஒத்துப்பாங்க. நாம சேர்ந்து சமாளிப்போம் தாத்தா. நீங்க இது சரியாய் வருமான்னு மட்டும் சொல்லுங்க.. அப்புறம் நாம இதை நடித்திடலாம்.”

“சரி வராஹி.. இதை வேற யார்கிட்டயும் சொல்லாத.. நான் யோசிக்கிறேன். அப்புறமா நாம் பேசி ஒரு முடிவுக்கும் வருவோம்”

“தேங்க்ஸ் தாத்தா” என்று தாத்தாவின் கைகளை கெட்டியாகி பிடித்து கொண்டாள்.

அவள் கைகளை அழுத்தி பிடித்திருப்பது, எப்படியாவது இதை நடத்திக்கொடுங்கள் என்று கேட்பதாக தோன்றியது அவருக்கு..

———————

வழிமாறி போன ஒரு மகனின் வாழ்க்கை… கண்முன்னே தவிக்கும் பிஞ்சு குழந்தைகளின் எதிர்காலம்.. நிர்கதியாக நிற்கும் மகள்.. சுயநலம் மிக்க சின்ன மகன்.. அவனுக்கு தாளம்போடும் மனைவி.. இப்படி எல்லாரும் கண்முன்னே வர.. வராஹி கூறிய யோசனை பல சிக்கல்களுக்கு நல்லதொரு தீர்வாக பட்டது.

அதன் பிறகு அவர் தீர்மானமாய் இதை செய்ய முடிவு செய்துவிட்டார். ஆனால் முதலில் அவர் சம்மதம் கேட்டது மகளிடமே!

“மணி.. அப்பா உனக்கு நியாயமா நடந்துக்கலை.. உனக்கு தப்பு நடக்கும்போது நான் காத்த மௌனம் மிகவும் தப்பு.. என் தப்பை சரி செய்ய இதை ஒரு ப்ராயச்சித்தமா நினைக்கிறேன். நீ ராம் பசங்களோடு சென்னைக்கு போறியா? உனக்கு அவங்களும், அவங்களுக்கு நீயும் துணையா இருக்கலாம்? இதை என்கிட்டே சொன்னதே அந்த சின்ன பொண்ணு தான்” என்று கூறி மேலும் வாராஹியுடனான பேச்சுவார்த்தைகளை கூறினார்.

“அங்க நான் சமாளிச்சுப்பேனா அப்பா.. பல வருஷமா இந்த வீட்டுக்குள்ள கைதி மாதிரி தானே இருக்கேன்”

ஒரு அப்பாவாய் அவர் தோற்றுப்போனதாய் உணர்ந்தார்.

“அப்பா இருக்கேன் டா.. நான் உங்க கூட வர்றேன். நான் அங்கேயும் இங்கேயுமா இருந்து பார்த்துகிறேன்..” சொல்லும் போது அவர் குரல் தழுதழுத்தது.

“எனக்கு சம்மதம் அப்பா” என்று கூறிவிட்டார் மணிமேகலை.

அடுத்து பரிமளாவும், ஹரியும் மகிழ்ச்சியாகவே சரி என்று கூறிவிட்டார்கள்.

ராமிடம் பேசினார். ராமிற்கு நிறைய யோசனை. 

“சரியா வருமா அப்பா? இப்ப வினோதாகிட்ட பேச கூட முடியறதில்லை.. நான் ஒரு முடிவு எடுத்திட்டு  அப்புறம் வருத்தப்பட கூடாதில்ல.. ஏற்கனவே எடுத்த முடிவால நாங்க நாலு பேருமே இப்ப நிம்மதியா இல்லை”

“உனக்கு உன் பிள்ளைகளின் எதிர்காலம் பத்தி கவலை.. ஒரு அப்பாவா அது நியாயம்.. எனக்கு ஒரு அப்பாவா என் பொண்னோட எதிர்காலம்.. ஒரு தாத்தாவா என் பேரப்பிள்ளைகள் எதிர்காலம்னு ரெண்டும் இருக்கு. என்னை நம்பி ஒத்துக்கோ”

“சரி அப்பா.. ஆனா அதுக்கு நிறைய வேலைகள் இருக்குமே?”

“நான் முடிஞ்ச அளவு பார்த்து வைக்கிறேன். நீ முடிஞ்சா ஒரு வாரம் மட்டும் வந்துட்டு போக முடியுமான்னு சொல்லு”

“சரி ப்பா.. தேங்க்ஸ்..”

“—————–”

எல்லாம் பேசி முடித்த பிறகே வராஹியிடமும் வல்லபனிடமும் கூறினார் சுந்தர்ராஜன்.

வல்லபனுக்கு தாத்தா கூறியது புரியவே சிறிது நேரம் ஆனது. அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. 

“நாம இனிமே ஹாஸ்டல் போக வேண்டாமா வரா..” என்றான் தங்கையிடம் ஆச்சர்யமாக.

“ஆமா அண்ணா.. நாம இனிமே சேர்ந்து இருக்கலாம்.. நீ நான் அத்தை எல்லாரும்” என்றாள் வராஹி மகிழ்ச்சியாக.

“அப்ப தாத்தா..” என்றார் சுந்தர்ராஜன்.

“நீங்க வருவீங்களா தாத்தா.. சூப்பர்” என்று இருவரும் தாத்தாவின் இருபக்கமும் நின்றுகொண்டார்கள். 

இருவரையும் நெஞ்சோடு ஆசையாக அனைத்து கொண்டார் சுந்தர்ராஜன் .

————————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!