Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மவுன நிலவும் மஞ்சள் லில்லி பூக்களும்

மவுன நிலவும் மஞ்சள் லில்லி பூக்களும் – 11

பண்ணையார் பரமசிவத்தை நோக்கி மறுபடியும் கேட்டார் எஸ்.ஐ.

“சொல்லுங்க இப்ப உங்க அக்கா பொண்ணு எங்க இருக்காங்க? அவங்க கிட்ட பேச முடியுமா?

அவங்க பேர் அஸ்வினி தானே?”

“ஆமாங்க சார். ஆனா என்ன விசயமா எங்க வீட்டுப் பொண்ணு கிட்ட விசாரிக்க வந்துருக்கீங்க?” தெரிந்து கொண்டே தெரியாதது போல கேட்டார் பரமசிவம்!



Advertisement

“இந்த ஊர் எக்ஸ் கவுன்சிலர் மஞ்சுவைக் காணோம்னு அவங்க ஹஸ்பன்ட் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காரு.

உங்க அக்கா பொண்ணும் அந்த மஞ்சுவும் ரொம்ப பிரண்ட்ஸ்ன்னு சொல்றாங்க.

அந்த மஞ்சு காணாம போன நாள்ல  இருந்து தான் உங்க வீட்டுப் பொண்ணும் இந்த ஊரை விட்டுப் போயிருக்காங்க!

Advertisement

உங்க பொண்ணை விசாரிச்சா எதுவும் தகவல் கிடைக்கலாம்னு தான் வந்திருக்கோம்”.

Advertisement

“சார்.. ஊர்ல எவளோ எவன் கூடவோ ஓடிப் போனதுக்கு எல்லாம் எங்க வீட்டு வயசுப் பொண்ணை வந்து விசாரிப்பீங்களா?

இது எல்லாம் நல்லா இல்ல சார். எங்க வீட்டுப் பொண்ணு கல்யாணம் ஆக வேண்டிய பொண்ணு!

இப்படி போலிஸ் கேஸ், விசாரணைன்னு அவளை நீங்க இதுல இழுத்து விட்டா, எங்க குடும்ப கவுரவம் என்னா ஆகுறது? அதெல்லாம் நான் அனுமதிக்க மாட்டேன்!”

Advertisement

“சார். ப்ளீஸ் கொஞ்சம் கோ ஆப்ரேட் பண்ணுங்க. ஒய்ஃபைக் காணோம்னு அந்த ரகு ரொம்ப பரிதவிச்சுப் போய் இருக்கார்.

உங்க வீட்டுப் பொண்ண நாங்க வேற எங்கயும் விசாரணைக்கு கூப்பிட மாட்டோம். ஜஸ்ட்.. இதோ உங்க முன்னாடி கொஞ்சம் கேள்விகள் மட்டும் கேட்டுட்டு டீடைல்ஸ் கலெக்ட் பண்ணிக்குவோம் அவ்வளவு தான்!”

“அதெல்லாம் முடியாது சார். முதல்ல எங்க வீட்டுக்கு எல்லாம் போலிஸ் வர்றதே எங்களுக்கு கவுரவ குறைச்சல்! இதுல எங்க வீட்டுப் பொண்ணை விசாரிக்க வேற செய்வீங்களா?

எங்களுக்கு எதுவும் தெரியாது சார். எங்க பொண்ணும் இப்ப ஊரில இல்ல! அவ அப்பாவோட சொந்தக்காரங்க வீட்டுக்கு போய் இருக்கா! அவ கிட்ட போன் எதுவும் இல்லை! அவங்க சித்தப்பா போன் தான்! அந்த ஆள் எப்ப வீட்டுக்கு வருவான், எப்ப வெளியில் இருப்பான்னு தெரியாது!

அவளா போன் பண்ணினா தான் உண்டு”.

“இப்படி சொன்னா எப்படி சார்? அந்த மஞ்சு கடைசியா உங்க வீட்டுப் பொண்ணோட தான் கோவிலுக்கு கூட போயிட்டு வந்திருக்கு!

அப்ப உங்க பொண்ணு கிட்ட பேசினா எதாச்சும் தகவல் கிடைக்குமான்னு தான் கேக்குறோம்!” எஸ். ஐ. கோபத்தை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு தணிவாக பேசினார்.

காரணம் குரு மூர்த்தி!

 அவன் சொல்லி தான் அனுப்பி இருந்தான்! “அந்த பண்ணையார் கிட்ட போய் ரொம்ப ரூடா பேசிடாதே!

அந்த ஆள் வில்லங்கம் பிடிச்சவன்! தேரை இழுத்து தெருவில் விட்டுடுவான்!

உன்னோட விசாரனை கொஞ்சம் பட்டும் படாமல் இருக்கட்டும்” என்று!

அதை எல்லாம் மனசில் வைத்துக் கொண்டு தான், பரமசிவம் விட்டேத்தியான பதில்களுக்கு பொறுமை காத்தார் எஸ்.ஐ.

“ஏங்க சார். இப்ப வந்து அந்த ரகு கம்ப்ளைன்ட் பண்றான்னு சொல்றீங்களே? இத்தனை நாள் என்ன பண்ணினானாம்?”

“கேட்டோம் சார். நாங்க கேட்டதுக்கு, அவங்களா தேடிட்டு இருந்ததா சொல்றாங்க!”

“சுத்த பொய் சார்! அந்த பொண்ணு ரொம்ப தெளிவா லெட்டர் எழுதி வச்சுட்டு தான் போய் இருக்கு! இன்னார் கூட போறேன்னு!

அத உங்க கிட்ட சொல்லாம, சும்மா ஓடிப் போனவள தேடு தேடுன்னா நீங்களும் தான் எப்படி தேடுவீங்க?” பரமசிவம் குரலில் நக்கல்!

“என்ன சார் சொல்றீங்க?” எஸ்.ஐ கேட்க,

“ஆமா சார். மாமா எனக்கு வடிவேலைப் பிடிச்சுருக்கு. நான் அவன் கூட என் வாழ்க்கையை வாழப் போறேன்னு லெட்டர் எழுதி வச்சுட்டு தான் ஓடிப் போய்டுச்சு அந்த மஞ்சு!

அதனால தான் அவங்களும் அப்ப போலிஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கல!

இப்ப ஏதாச்சும் சட்ட சிக்கல் வந்துடக் கூடாதுன்னு தான் இப்ப, இத்தன நாள் கழிச்சு வந்து கம்ப்ளைன்ட் பண்றாங்க!

ஒண்ணு அந்த ரகுப் பையன் வேற கல்யாணம் பண்ணிக்க போறானா இருக்கும்!

இல்ல.. சொத்துப் பிரச்சினையா இருக்கும்! ஏன்னா அவங்க வீடு அந்த மஞ்சு பேர்ல தான் இருக்கு!

நீங்க அங்க போய் நல்லா விசாரிங்க சார்.

 வீணா எங்க வீட்டுப் பொண்ணை தொந்திரவு செய்யாதீங்க” என்று பரமசிவம் சொல்லி விட, எஸ்.ஐ அத்துடன் அங்கு அந்த விசாரணையை முடித்துக் கொள்ள வேண்டியதாகிவிட்டது!

—-

“ஏங்க.. உங்க ஒய்ஃப் ஏதோ லெட்டர் எழுதி வச்சுட்டுப் போய் இருக்காங்களாமே!

அப்ப அவங்க வாலன்டரியா தான் அவங்களுக்குப் பிடிச்சவங்க கூட போய் இருக்காங்க. இல்லீகர் அஃப்பேர்!

இத சொல்லாம ஏங்க சார் எங்க டைமை வேஸ்ட் ஆக்குறீங்க?”  எஸ். ஐ ரகுவிடம் கடுப்புடன் சொல்ல,

“சார். அப்படி ஒரு லெட்டர் கிடைச்சது தான் சார். ஆனா என் மஞ்சு அப்படிப் பட்டவ இல்ல சார்.

அந்த பையனும் நல்லவன் தான் சார். அவங்க ரெண்டு பேருக்கும் நடுவில தப்பான அஃபெர்ஸ் எதுவும் நிச்சயமா இல்ல சார்.

அதுவும் இல்லாம என்னோட ஒய்ஃப் ஒரு சோசியல் ஆக்டிவிஸ்ட். நிறைய தப்புகளை தட்டிக் கேட்டு சண்டைப் போட்டுருக்கா!

அவளுக்கு கொஞ்சம் எதிரிகள் இருக்காங்க இந்த ஊர்ல!

அவங்களால் எதாச்சும் அவளுக்கு ஆகி இருக்குமோன்னு எனக்கு பயமா இருக்கு சார்” ரகு உடைந்த குரலில் சொன்னான்.

ஓ.. அப்படியா.. என்று கொஞ்சம் யோசித்தவர், “வீட்டுல பணம் நகையெல்லாம் செக் பண்ணினீங்களா?”

ரஞ்சிதா இப்போது வாயைத் திறந்தாள்.

“பாங்கில் லாக்கரில் வச்சுருந்த நகை எல்லாம் அப்படியே இருக்கு. ஆனா வீட்டில் வச்சுருந்த ஒரு பெரிய டாலர் செயினைக் காணோம்!

ரெண்டு வளையல்களை காணோம்.

பாப்பாவோட செயின் மோதிரத்தையும் காணோம்.

பாங்கில் இருந்து மொத்தமா ரெண்டு லட்ச ரூபாய் எடுத்துருக்கா.  வீட்டு பீரோவில் அவ பாஸ்புக்கோட என்ரில பார்த்தேன்”.

“ஓகே. அவங்க காணாம போனதுக்கு அப்புறம் அவங்க அக்கவுண்டில் இருந்து பணம் எடுத்துருக்காங்களா?”

“தெரியலையே சார். அக்கா.. நீ எதுவும் செக் பண்ணி பார்த்தியா?”

“ம்ஹும். இல்லையே! அவளோட ஏடிஎம் கார்டையும் காணோம்! தேடிப் பார்க்கிறேன்”.

“அப்ப செக் பண்ணிட்டு சொல்லுங்க” என்றார் எஸ்.ஐ.

“சார்.. மஞ்சுவோட போன் நம்பர், அந்த வடிவேலோட போன் நம்பர் இரண்டையும் ட்ரேஸ் பண்ணிப் பார்த்தா ஏதும் கண்டுப் பிடிக்க முடியாதா?” நந்தினி இடையிட்டு கேட்க, அவளை கோபத்துடன் முறைத்துப் பார்த்த எஸ்.ஐ,

“அதெல்லாம் எங்களுக்கு தெரியும். நீங்க உங்க வேலைய மட்டும் பாருங்க. எதாச்சும் தகவல் வந்தா சொல்றோம்” என்று கடுப்புடன் சொல்லி விட்டு கிளம்பினார்.

அவர் சென்றவுடன், “அண்ணே, எனக்கு இவர் மேல நம்பிக்கை இல்லைண்ணே. ஏதோ கண் துடைப்புக்கு விசாரிக்கிற மாதிரி இருக்கு!

அதே போல அந்த பரமசிவம் மேலயும் எனக்கு டவுட் இருக்குண்ணே.

ஏன்னா.. அந்த அஸ்வினியும் மஞ்சுவும் நல்லா பேசிக்குவாங்க. ஆனா ஹிந்தியில!

மஞ்சு, உங்க கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு சேட்டோட ஜவுளிக் கடையில் வேலைப் பார்த்தா இல்ல. அதனால அவளுக்கும் ஹிந்தி நல்லாவே பேச வரும்.

அஸ்வினியும் மஞ்சுவும் அடிக்கடி ஹிந்தியில ரகசியம் பேசிக்குவாங்க. எனக்கு அது புரியாததால, நான் அவங்க கிட்ட சண்டை கூட போட்டுருக்கேன்!

அப்பவெல்லாம் மஞ்சு என்னை சமாதானம் செய்வாளே தவிர என்ன பேசிக் கிட்டாங்கன்னு மட்டும் சொல்லவே மாட்டா!

கேட்டா, அது அஸ்வினியோட பர்சனல்! அத உன்கிட்ட சொல்ல மாட்டேன்! அதே மாதிரி உன்னோட பர்சனல் விஷயத்தை அவ கிட்ட சொல்ல மாட்டேன்! இத்தோட விடேன் அப்படின்னு சொல்லிட்டா!

மஞ்சு கடைசியா அவ கிட்ட தான் ஏதோ ரகசியம் பேசிட்டு இருந்தா!

நானும் அப்ப கடையில வேலை ஜாஸ்தி இருந்ததால் பெரிசா எடுத்துக்கல!

என் போன் வேற ரிப்பேரா ஆகிடுச்சு. மஞ்சு தான் அதை சரிப் பண்ணி தரேன்னு வாங்கி வச்சுருந்தா. அதனால நான் அவ கிட்ட அவ காணாம போன சமயம் போனிலும் பேசவே இல்லை!

அண்ணே உங்க பிரண்ட்ஸ் சர்க்கிளில் யார்கிட்டயாச்சும் நம்பர் கொடுத்து விசாரிக்க சொல்லுங்க அண்ணே” என்றாள் நந்தினி.

“சரிம்மா பார்ப்போம்” என்றான் ரகு நம்பிக்கை இல்லாத குரலில்!

—–

“ஏம்பா..அப்ப அக்கா கிட்ட நீங்க போனில் பேசவே இல்லையா?” பரமசிவத்தைக் கேட்டாள் கனிகா.

“ஏன் பேசல? அதெல்லாம் பேசிக்கிட்டு தான் இருக்கேன்!”

“அப்ப ஏன்ப்பா அக்கா எங்க கிட்ட மட்டும் பேசவே இல்லை! அம்மாவும் பாவம். அவ கிட்ட பேசணும்னு ரொம்ப தவிக்கிறாங்க.

அப்படி என்னப்பா வேலைப் பார்க்கிறா? ஒரு போன் கூட பேச முடியாத படி!

அவ நம்பருக்கு அடிச்சா ஸ்விட்ச் ஆஃப்னே வருது. ஆனா நீங்க மட்டும் எப்படியோ பேசிட்டு இருக்கீங்க! அவங்க சித்தப்பா நம்பரை என்கிட்ட கொடுங்கப்பா. நானும் பேசனும்ப்பா அக்கா கிட்ட!”

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்! அதான் நான் பேசிட்டேனே? எல்லாம் நல்லா தான் இருக்கா! போதுமா?” கடுப்படித்தார்!

“இல்லப்பா நீங்க பொய் சொல்றீங்க!”

“ஆமாங்க எனக்கு கூட நீ எதையோ மறைக்கிற மாதிரி தான் இருக்கு!” என்று கனியின் அம்மாவும் சேர்ந்து கொண்டார் இப்போது!

“எனக்கு உங்க மேல தான் டவுட்டா இருக்கு! அன்னிக்கு அவங்க அம்மா அப்பா செத்துப் போய் அந்த பொண்ணு தனியா நின்ன போது கூட உங்களுக்கு பெரிசா அவ மேல பாசமோ இரக்கமோ வரல!

அப்ப கூட நான் தான் அவள் மேல இரக்கப்பட்டு, உங்க கிட்ட  பிடிவாதம் பண்ணி இங்க கூட்டிட்டு வந்தேன்.

நான் கூட ஆரம்பத்துல என் பிடிவாதத்தால தான் அவள இங்க கூட்டிட்டு வந்தீங்கன்னு நினைச்சேன்!

 ஆனா நீங்க உங்க பரம்பரை சொத்தில் அவ அம்மாவுக்கு உள்ள பங்கைக் கேட்டு அவளோட சித்தப்பாக்கள் மூலம் கேஸ் போட்டுட போறான்னு பயத்துல அவள உங்க கண்ட்ரோலில் கொண்டு வச்சுருக்கீங்கன்னு அப்புறம் தான் எனக்கே புரிஞ்சது!

சொல்லுங்க.. இப்ப அவளைக் காணோம்! என்ன பண்ணிங்க அவள? கொன்னே போட்டுடீங்களா?

இந்த பாவம் எல்லாம் என் பிள்ளைங்க தலையில தானே விழும்! அடப்பாவி மனுசா!

இப்படி சொத்துக்காக சொந்த அக்கா பொண்ணையே கொல்ல துணிஞ்சுட்டிங்களா?” அவர் பரமசிவத்தின் சட்டையைப் பிடித்து உலுக்க,

“ஏய்.. நிறுத்துடி.. அந்த ஓடுகாலிய பத்தி பேசாதே!

அன்னிக்கு அவ ஆத்தா ஒரு வடக்கத்திக் காரனோட ஓடிப் போய் என் குடும்ப மானத்தை வாங்கினா!

இன்னிக்கு பொண்ணும் அதையே தான் செஞ்சுட்டுப் போய் இருக்கா!

ஊருக்குள்ள எவ்வளவு கவுரவமா இருந்த குடும்பம்!

அவ அம்மாக்காரியால அசிங்கப்பட்டு போனுச்சு!

அவளாவது நல்லா ஒரு பணக்கார வட நாட்டான் கூட ஓடிப் போனா!

ஆனா இவ.. ஒரு பரதேசிப் பன்னாடை, அனாதைப் பயக் கூட ஓடிப் போய் இருக்கா!

நினைக்கும் போதே எனக்கு அப்படியே மண்டை சூடாவுது!” கோபத்தில் கத்தினார் பரமசிவம்.

திரும்ப திரும்ப ஊருக்குள் இதே அவமானம்!

மஞ்சுவின் அப்பாவும் இந்த பரமசிவம் எல்லோரும் ஒரு வகையில் உறவினர்கள் தாம்!

ஒரே ஜாதி!

பரமசிவத்தின் அக்கா ஓடிப் போய் கல்யாணம் செய்து கொண்டதை பேச்சில் அதிகம் குத்திக் காட்டுவார் மஞ்சுவின் தந்தை! ஜாதி சங்க மீட்டிங்கில் கூட ஜாடைப் பேசுவார்!

அப்போது எல்லாம் அவமானத்தில் குறுகிப் போவார் பரமசிவம்!

ஆனால் அவர் பெண் மஞ்சுவே,  காதல் திருமணம் என்று வேறு ஜாதியை சேர்ந்த ரகுவைத் திருமணம் செய்த போது, பரமசிவம் இப்போது தன்னுடைய முறை என்று, அவரைக் குத்திக் காட்ட  எண்ணி பேசப் போக, “உன் அக்கா மாதிரி ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கல என் பொண்ணு.

பிடிவாதமா, வைராக்கியமா நின்னு தில்லா கல்யாணம் பண்ணி இருக்கா” என்று அப்போதும் கெத்துக் குறையாமல் பேசினார் மஞ்சுவின் அப்பா!

அதனால் எப்போதுமே மஞ்சுவின் மீதும் அவள் குடும்பத்தின் மீதும் ஒரு துவேஷம் உண்டு பரமசிவத்திற்கு!

இப்போது அவர் அக்கா பெண்ணின் காதலுக்கும் அந்த மஞ்சுவே உதவி செய்தாள் என்று அறிந்த போது அவரின் கோபம் உச்சத்தைத் தொட்டது!

“மாமா.. உங்க கிட்ட சொன்னா நீங்க ஏத்துக்க மாட்டீங்கன்னு தெரியும்! அதான் சொல்லாம போறேன்!

சொத்து விசயமா கூட என்னைத் தேடாதீங்க! எல்லாத்தையும் நீங்களே வச்சுக்கங்க. என்னை வடிவேல் வச்சுக் காப்பாத்துவார்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு!

அவருக்கு வேற வேலை கிடைச்சுருக்கு! நாங்க போறோம்!

என்னைத் தேடாதீங்க” என்று வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அவருக்கு அனுப்பி இருந்தாள் அஸ்வினி!

அஸ்வினிக்கு தமிழ் எழுதப் படிக்க தெரியாது! அவள் பள்ளிக் கல்வியை எல்லாம் நாக்பூரில் படித்ததால்! தமிழில் பேச மட்டுமே தெரியும்!

அதிகாலை அம்மன் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் சொல்லி விட்டு வந்த அவளை வடிவேலுடன் மஞ்சு தான் ரயில் ஏற்றி விட்டு விட்டு வந்திருக்கிறாள் என்பது அவருக்கு அவரது ஆட்கள் மூலம் பிற்பாடு தெரிந்த செய்தி!

ஆனால் எந்த ஊருக்கு சென்றார்கள் என்பது மட்டும் அறிய முடியவில்லை!

அஸ்வினி ரூமில் ஆராய்ந்த போது அவருக்கு கிடைத்தது ஒரு லெட்டர் மட்டுமே!

“மாமா வடிவேலை எனக்குப் பிடிச்சுருக்கு. நான் அவனோட என்னோட வாழ்க்கைய ஆரம்பிக்க போறேன்!”

‘நிச்சயம் அது அஸ்வினி கையெழுத்து இல்லை! அவளுக்கு தமிழில் எழுத வராது!

அப்ப யார் எழுதிக் கொடுத்திருப்பா?

 ஒரு வேளை அந்த வடிவேலே தானா?

இல்லையே ஒரு பெண் பிள்ளை கையெழுத்து போல தானே இருக்கு!

அப்போ இத யார் எழுதி இருப்பா?

ஒரு வேளை மஞ்சு தான் இவளுக்காக எழுதி இருப்பாளோ?’

சட்டைப்பையில் பத்திரப்படுத்தி இருந்தார் அவர்!

——–

“பாப்பா.. மீனும்மா சாவிய கொடு.. நான் வீட்டுக்குப் போகனும். நிறைய துணி சேர்ந்துடுச்சு. போய் துவைக்கணும். நான் இன்னொரு நாள் உன்கூட இங்கயே தங்கிடறேன்! இன்னிக்கு விடு”. நந்தினி மீனுவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

மீனு, அன்று சனிக்கிழமை விடுமுறையாதலால், “கவி டீச்சர் கூட இருக்கேன்” என்று ரகுவிடம் பிடிவாதம் பிடித்தது.

ரகுவுக்கும் போன் நம்பர் லோகேசன் கண்டுப்படிக்கிற வேலைக்காக கொஞ்சம் அலைய வேண்டியிருந்தது!

அதனால் அவனும் அதற்கு சரியென்றே சொல்லி இருந்தான்.

மீனு விளையாட்டாக நந்தினியின் மொபெட் சாவியைத் தூக்கிப் போட்டு விளையாட, அந்த சாவியோ ஒன்று இருமுறை கீழே விழுந்து, பின் டிவி கேபினட் பின் புறம் போய் விழுந்து விட்டது!

டிவியின் பின்னால் போய் விழுந்த சாவியை அதன் பின்புறம் கையை விட்டு எடுக்க முயன்றாள் கவி!

“விடுங்க டீச்சர் கையை கிழிச்சுக்காதீங்க!” என்று சொல்லி டிவியை அப்படியே அலாக்காக தூக்கிப் பிடித்துக் கொண்டு,

“டீச்சர் சீக்கிரம் சாவியை எடுங்க” என்ற சொல்லி டிவியைப் பிடித்துக் கொண்டு சொன்னாள் நந்தினி!

“இருங்க எடுக்கிறேன்” என்று டிவியின் பின்புறம் சாவியை எடுக்க,

“ ஐ.. அம்மாவோட போன்” என்று துள்ளிக் கொண்டு அங்கிருந்த பிங்க் நிற கவர் கொண்ட அந்த மொபைல் போனை கையில் எடுத்தது மீனு!

“எங்க கொடு” என்று கிட்ட தட்ட டிவியை தரையில் வைத்து விட்டு அதைக் கையில் வாங்கினாள் நந்தினி!

ஆமா இது மஞ்சுவோட போன் தான்!

ஆஃப் ஆகி கிடந்தது அது!

சார்ஜரில் இணைத்து சார்ஜ் போட்டாள்.

இதுக்குள்ள சார்ஜர் இல்ல இது! சார்ஜ் ஆக லேட்டாகும் போல என்றாள் அரைமணி நேரம் சார்ஜ் போட்டும் அது ஆன் ஆகாததால்!

“சரிங்க டீச்சர் எனக்கு லேட் ஆகுது!

இது சார்ஜ் ஏறி ஆன் பண்ணின உடனே எனக்கு போன் பண்ணுங்க. நான் காலையில வர்றேன்!” என்று மனதே இல்லாமல் சென்றாள் நந்தினி!

“இங்கயே இருக்கலாமே நந்தினி! மீனு பாப்பா சொல்றது போல!

இப்ப கரென்ட் வேற இல்லை! இங்க இன்வேர்ட்டர் இருக்கு. அங்க போய் கொசுக் கடியில தானே படுக்கப் போறீங்க?”

“இல்ல டீச்சர். நான் கிளம்புறேன்” என்று விடாப்பிடியாக விடைபெற்றாள் நந்தினி!

ஒருவேளை அவள் அங்கேயே இருந்து இருந்தால் அடுத்த நாள் காலையிலேயே  கவிக்கு ஊர் முன்னே அவமானத்தில் நிற்க வேண்டி இருந்திருக்காதோ!

விதி வலியது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!