முதல் நாள் இரவே கிளம்பி விட்டாள் மீனா. அவளோடு வெண்பாவும், அவள் அம்மாவும்… நீண்ட வருடங்கள் சென்று தனியான ஒரு பயணம். முக்கியமாக மனதில் எந்த அழுத்தமும் இல்லாமல் வெளிகாற்றை சுவாசித்து கொண்டே, இருளில் அமைதியான பயணம்.
முன்பு தந்தை இருக்கும் பொழுது இவ்வாறான பயணங்கள் செல்வார்கள். அப்பொழுதெல்லாம் கடைக்குட்டி தங்கத்துக்கு அவ்வளவு செல்லம். அன்று இருந்தது உற்சாகமும், சந்தோஷமும்.. இன்று இருப்பது அமைதியும் நிம்மதியும்.. திருமணம் குழந்தைகள் என்றானப்பின் அவளுக்காக எந்த ஒரு விஷயத்தையும் செய்ததில்லை. எப்போதும் பிள்ளைகள் மட்டுமே கவனம் பெறுவார்கள். மீனா அவ்வளவு எளிதாக யாரிடமும் பிள்ளைகள் பொறுப்பை ஒப்படைக்க மாட்டாள். யாரும் தன் பிள்ளையை தேர்ட் பர்சனாக நடத்துவது அவளுக்கு பொறுக்காது..
Advertisement
பெற்றவர்கள் என்பதன் சிறப்பு இதுதான்.. மீனாவுக்கு ஜெகனிடம் பிள்ளைகளை விட்டு வர எந்த தயக்கமும் கிடையாது. அவன் பிள்ளைகளை நன்றாக பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை மீனாவுக்கு வந்து விட்டிருந்தது.
மகள் கணவன் பிள்ளைகளோடு நன்றாக இருந்தாலும் கழுத்தில் தாலி இல்லாமல் இருப்பது பரமுக்கு என்னவோ மனதில் நெருஞ்சி முள்ளாக குத்தியது. தான் வெறும் கழுத்தாக நிற்பது போல் தன் மகளும் இருப்பதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. முன்பு சொல்ல முடியாது. இப்போதும் அப்படி இருக்க கூடாதே.. அதனால் வெண்பாவை விட்டு பேச வைத்தவர். இதோ, மீனாவை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டார்.
இவர்கள் பக்கம் நாத்தனார் தான் தாலி பிரித்து கோர்ப்பார் என்பதால் வெண்பாவே முன்னேற்பாடு செய்தாள். ஜெகன் கூட மனைவிக்கு இதனால் ஏதேனும் சங்கடமாகுமா என்று அவள் முகம் பார்க்க.. மீனாதான் இந்த கோயிலுக்கு வந்து தாலி பிரித்து கோர்க்க விரும்புவதாக சொன்னது.. அதன் பின் ஜெகன் தயங்கவில்லை அவன் ஆசைப்பட்டது போல.. புது தாலிக்கொடியும், அதன் உருக்களையும் தன் தமக்கையிடம் கொடுத்து விட்டான்.
Advertisement
அதிகாலை மூன்று மணிக்கு அங்கு வந்து சேர்ந்து விட்டார்கள். குட்டி மலையோடு சேர்ந்த கோயில் அது.. அப்போதே கிரிவலம் தொடங்க மீனாவும் மனதில் தன் வேண்டுதல்களை உரு போட்டுக் கொண்டே மலையை சுற்ற ஆரம்பித்தாள். தன் உடன் வரும் யாரையும் நிமிர்ந்தும் பார்க்கவில்லை பேசவும் இல்லை. முழுக்க மனதில் கடவுளை நினைத்துக் கொண்டே வேண்டுதலை நிறைவேற்றினாள்.
Advertisement
சூரியன் உதயத்தில் கிழக்கு பார்த்த அமர்ந்து வெண்பாவின் துணையோடு தன் கழுத்தில் புதுமஞ்சள் தாலியை ஏற்றுக்கொண்டாள். என்னவோ மீனாவுக்கு சாதாரண நிகழ்வாக கடக்க முடியவில்லை. மனதில் நெகிழ்ச்சி இருந்தாலும் கண்களும் கலங்கியிருந்தது. சில வருடங்களுக்கு முன்பு இங்கு தான் இதே அதிகாலை வேளையில் என் கணவன் தவறானவனாக இருந்தாலும் உயிரை மட்டும் காத்துக் கொடுத்துவிடு என்று தன் தாலிக்கயிற்றை இந்த கோயிலுக்கு காணிக்கையாக கொடுத்தாள். அவ்வாறு காத்து கொடுத்த கடவுளின் சன்னிதியில் தன் தாலி கயிற்றை மாற்றிக் கொண்டாள். அப்போது தான் மனநிறைவாக இருந்தது.
எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வெளியில் வரும் நேரம் மீனா யாரோ ஒருவரை பார்த்தாள். அவள் மனம் தேவி என்ற சத்தமிட நேராக கால்கள் அந்த பெண்ணை நோக்கி போனது..
எப்படி மீனாவால் இந்த முகத்தை மறக்க முடியும். திவாகரின் மனைவி தேவி. உயிரற்ற உடலாக வெளியில் கொண்டு வந்த கணவனை கட்டிக்கொண்டு அழுத முகத்தை மீனாவால் என்றும் மறக்க முடியாது. நெருக்கமான ஒருவரின் இறப்பு எப்படி இருக்கும் என்பதை அனுபவிக்காமலே தேவியின் அழுகையை பார்த்தே வலியை உணர்ந்து கொண்டவள். இன்று வரை மனதில் மூளையில் ஏதோ ஒரு இடத்தில் தேவியின் அழுக முகம் நிலை நிற்கும்.
Advertisement
“தேவி” என்று அழைத்ததும், நிமிர்ந்து பார்த்தவள். அதிர்ந்து பின் லேசாக சிரித்தாள்.
“எப்படி இருக்க மீனா. பிள்ளைக எப்படி இருக்காங்க? ஆமா, நீ மூணாவது பிள்ளைக்கு மாசமா இருந்த தானே” என்னவோ நீண்ட நாள் பழக்கம் போல தேவி கேள்வி கேட்டாள்.
அவள் கைகளைப் பிடித்துக் கொண்ட மீனாவுக்கு கண்கள் கலங்கி போனது. வெண்பாவுக்கு ஒரே பதட்டம் இது என்ன வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையாக…
“என்னை இவ்வளவு ஞாபகம் வச்சிருக்கீங்களா?”
“மறந்துட்டு கடந்து போற அளவுக்கு நம்மளை விதி வைக்கலையே மீனா”
“இதுல தயங்க என்ன இருக்கு மீனா. ஜெகன் அண்ணா மேல தான் தப்பு கிடையாதே” என்றவளை ஆச்சர்யமாக பார்த்தாள் மீனா.
உண்மைதான் திவாகர் கொலைக்கும் ஜெகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நண்பனுக்காக போனவன் உள்ளே மாட்டிக்கொண்டான். ஆனாலும் தேவியை பார்க்கும்போது அவளின் மனதில் வலி அதிகமானது. இந்த நல்ல பெண்ணுக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம் என்று ஆதங்கம் நெஞ்ச நிறைய இருந்தது.
“இங்க கடை போட்டு இருக்கீங்களா?” என்றாள் மீனா.
“ஆமா, மீனா வெளியில எங்கெங்கோ வேலைக்கு போனேன். செத்தவன் கவுரவத்தை சேர்த்து வைக்கலையே?.. எங்க போனாலும் செவுத்துல பட்ட பந்து போல திரும்ப வந்தாச்சு. பண்ணாத தப்பு இல்லை, மகராசன் போய் சேர்ந்துட்டான். அவனுக்கு பிறந்த பாவத்துக்கு பிள்ளைக தான் அல்லல்பட்டு போயிட்டாங்க. நல்ல பேரும் இல்லை. கௌரவமான வாழ்க்கையும் இல்லை” என்று கண்களை துடைத்து கொண்டவள்,
“பத்து பேரு கெட்டது பேசினா, நாலு நல்லது சொல்ற மனுஷங்க இருக்கத்தான் செய்கிறாங்க. அதான் கோயில் முன்னாடி கடையை போட்டேன். இங்க விதவன்னு சொல்லி ஒதுக்கி வைக்கிறதுக்கும், சரி இல்லன்னு சொல்லி குத்தி காட்டுறதுக்கும் ஆள் கிடையாது. கோயில் பரிசுத்தமானது மனசுல அழுக்கு இருந்தாலும், கோயில் ஸ்தலத்துல வார்த்தைல சுத்தம் இருக்கும். கட்டினவன் தான் சரி இல்ல ரெண்டு குடும்பமும் நல்ல சப்போர்ட். பிள்ளைகள் படிக்கிறாங்க நிம்மதியா தான் இருக்கு” என்றதும் வேறு பேச வார்த்தை வராமல் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டாள் மீனா.
“நாங்க எப்பவும் உங்க கூட இருப்போம். எதுனால எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லுங்க. நாங்க ஓடோடி வந்துருவோம்” என்றாள் மீனா.
“சொல்லவும் வேணுமா? இன்னமும் ஜெகன் அண்ணா எங்க கிட்ட பேசிட்டு தான் இருக்காரு பிள்ளைகள் படிப்பு கூட அவர் பார்க்கிறேன்னு தான் சொன்னாரு. நான் தான் பிள்ளைகள் பெருசாகட்டும் உதவின்னு வந்தா உங்க கிட்ட கேட்கிறேன்னு சொல்லி அனுப்பி இருக்கேன்”என்றாள் சிரித்த முகமாக..
மீனாவுக்கு அந்த பெண்ணை நினைத்து அவ்வளவு பெருமையாக இருந்தது. தான் எல்லாம் என்ன போராடினோம் என்று கூட நினைத்தாள். கணவன் மீது அவ்வளவு கோபம் இருந்தாலும் அவன் இல்லாத ஒரு உலகத்தை எல்லாம் கற்பனை கூட செய்ய முடியாது. தேவி அப்படியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறாள். என்னதான் சரியில்லாதவனாக இருந்தாலும் இந்த உலகத்தில் இல்லை என்ற பின் அதற்கான இழப்பு இந்த பெண்ணுக்கு தானே…
தேவியை நினைத்து மனம் வருந்தினாலும் இதுவரை நெஞ்சை அடைத்துக் கொண்டிருந்த அழுத்தம் விலகியது. ஒரு பெண்ணின் அழுகையை, ஒரு குடும்பத்தின் சாபத்தை, தகப்பன் இல்லா பிள்ளைகளின் ஏக்கத்தை தன் தலையில் வாங்கிக் கொண்டுமே என்ற வலி இன்று விலகியது. முன்பே ஜெகன் மீது தவறில்லை என்று சொன்னாலும் எளிதாக தேவியை கடக்க முடியவில்லை. இன்று மனதில் அவ்வளவு நிம்மதி. தேவி நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டவள் மனம் லேசாகி வீடு புறப்பட்டாள்.
ஜெகன் பார்வை மனைவியையே சுற்றியது. புதுமஞ்சள் தாலியில் முகம் மின்ன நின்றவளை கண்டு நெஞ்சு நிறைந்து போனது. அவளையே சுற்றி வர, திரும்பி பார்த்தவள்.
“இன்னைக்கு நான் கோயிலுக்கு போன இடத்துல தேவியை பார்த்தேன்” என்றதும், யோசனையாக பார்த்தவன், புரிந்ததும் திகைத்தான்.
“எப்படி இருக்காங்க” என்றான் சத்தமில்லாமல்..
தேவி தன்னிடம் பேசியதை கணவனிடம் சொல்லி அவன் முகம் பார்க்க.. ஒரு நொடி முகத்தில் வேதனையை கொண்டு வந்தவன் எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று முடங்கி கொண்டான்.
அன்று முழுக்க அப்படி தான் இருந்தான். பள்ளி விட்டு வரும் பிள்ளைகளை அழைத்துச் செல்லக்கூட ஜெகன் செல்லவில்லை.
“ஸ்கூல் விடுற நேரம் ஆச்சே” என்றாள் மீனா.
“முருகன் போயிருக்கான்” என்று முடித்துக் கொண்டான்.
மீனாவும் அமைதியாக கணவனை பார்க்க பள்ளி விட்டு வந்த பிள்ளைகளை கூட ஜெகன் கவனிக்கவில்லை. இரவு உணவு வரைக்கும் அப்படியே தான் இருந்தான். சின்ன மகளை விட்டு தான் கணவனை சாப்பிடவே அழைத்தாள் மீனா.
பேருக்கு உண்டவன் மீண்டும் அறையில் முடங்கிக் கொள்ள மீனாவுக்கு தான் திரும்பவும் என்னவோ என்று பயமாய் போனது. வீட்டின் அரவம் குறைந்து மீனா வெளி வாசலில் கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருக்க, பக்கத்தில் அமர்ந்தான் ஜெகன்.
கேள்வியாக அவனைப் பார்த்தாள் மீனா. தள்ளிப் போய் எல்லாம் அமரவில்லை. இன்று இவனுக்கு என்னவானது?.. பிள்ளைகளை கூட கவனிக்கவில்லை. உறங்க வைத்தது எல்லாம் மீனாதான்.
“மீனா” அவள் கைகளை பிடித்து கொண்டவன், அவள் திகைத்து போய் பார்க்க,
பிழைப்புக்காக வேற ஊர் வந்து விட்டாலும் அதிக அளவு உழைப்பை போட்டாலும் கூட வறுமையற்ற ஜீவனம் தானே தவிர செழிப்பான வாழ்க்கை அமையவில்லை. ஜெகனுக்கு மூன்று பிள்ளைகளாக போகிறதே முன்னேறாமல் இருக்கிறோமே என்ற கவலை. யாருமற்று நின்றவனால் பரம்பரை சொத்தை கூட வாங்க முடியவில்லை. அதனால் தினகரனோடு கைகோர்த்துக் கொண்டான். மனைவி சொல்லியும் அவன் தீனாவை விட்டு விலகவில்லை . பெரிய ஆள், அரசியல் செல்வாக்கு உள்ளவன் அவன் மூலம் முயன்றால் தன் சொத்துக்களை எல்லாம் கைப்பற்றி விடலாம் என்று பெரிதாக நம்பினான்.
அவனின் கூட்டாளி தான் திவாகர் அவனோடு நான்கு, ஐந்து நண்பர்கள் அவர்களோடு ஒருவராக ஜெகனும் சேர்ந்து கொண்டான். பெரும்பாலும் அவர்களுடன் நிற்க மாட்டான். அவன் வேலை அதற்கு ஒத்து வராது. ஆனால், வார இறுதி நாட்களில் அங்கு தான் கிடப்பான்.
தேவிக்கு அவர்கள் நட்பு வட்டம் பழக்கவழக்கம் எல்லாம் தெரியும். மீனாவுக்கு ஆரம்பம் முதல் பிடிக்காது என்பதால் அவள் தள்ளியே நிற்பாள். விரலுக்கு தக்க வீக்கம் என்ற சிறு வட்டத்தில் மீனா நிற்க. எத்தனை நாட்கள் இப்படி குறுகிப் போய் இருப்பது.. எப்போது தாங்களும் முன்னேற என்று பெரிய கனவுகளோடு நின்றான் ஜெகன்.
அவர்கள் நட்பு வட்டத்தில் குடிப்பழக்கம் மிக சகஜமான ஒன்று.. மீனாவுக்கு அதில் எவ்வளவு கவலை என்று ஜெகன் அறிவான். ஆனாலும் நிறுத்த முடியவில்லை. அவ்வளவு உழைப்பவனுக்கு அந்த ஓய்வு தேவையாக இருந்தது. வாரத்தில் ஒரு நாள் தானே என்று தன் தவறை தானே சமாதானம் செய்து கொண்டான்.
நல்ல உழைப்பாளிகள், நிம்மதியான குடும்பம், வாரத்தில் ஒரு நாள் தங்களுக்கென்று கொண்டாட்டம் என நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. அதில் தடம் மாறி போனது திவாகர் தான். அவனுக்கு திருமணம் ஆகி இரு பிள்ளைகள் இருந்த போதும் சபல புத்தி கொண்டவனின் பார்வை தினகரன் தங்கை மேல் படிந்தது. நட்பின் இலக்கணம் மறந்து போய் நண்பனின் தங்கையை நெருங்க, பயந்து ஒதுங்கினாள் பெண். வீட்டிற்கு சொல்ல அஞ்சு தள்ளியே செல்ல சாதகமாகி போனது திவாகருக்கு.. அவளின் அமைதி அவனுக்கு துணிவை கொடுக்க எல்லை மீறி உடல் ரீதியான துன்புறுத்தல்களை கொடுத்தான்.
ரொம்பவும் முடியாமல் தான் விஷயம் தினகரன் வரை சென்றது. ஜெகனுக்கு இது எதுவும் தெரியாது. எப்பவும் போல வார இறுதியில் நண்பர்களோடு சேர்ந்து குடிக்க.. உண்மையில் திவாகரை அடிக்கும் எண்ணத்தோடுதான் தினகரன் வந்தது. விஷயம் புரியாமல் ஜெகன் உள்ளே விழுக, நொடியில் வெட்டுக்குத்தாகிப் போனது. சமரசம் செய்து தடுக்கப்போனவன் ரெண்டு பக்கமும் அடி வாங்கிப் போனான். திவாகரை தாக்கி விட்டு தினகரன் தலைமறைவாக, அடிபட்டு கிடந்தவன் கைதாகி போனான்.
ஜெகனுக்கு நினைவு திரும்பும்போது எல்லாம் கைவிட்டு போனது. அவனின் பெரிய வலியே மனைவியை நினைத்துத்தான். எத்தனை முறை பொறுமையாக எடுத்து சொல்லி இருப்பாள் ஒன்றையாவது காது கொடுத்து கேட்டானா?…
தினகரன் தலைமறைவு திவாகர் இறந்து விட்டான். அந்த இடத்தில் இருந்தது ஜெகன் மட்டும்தான். அதனால் அவன் ஜெயிலுக்கு சென்று விட்டான். அவனுக்கு நினைவெல்லாம் மனைவி பற்றி தான் எல்லாம் தெரிந்தும் அவர்களை நன்றாக வாழ வைப்பதாக நினைத்து பெரிய புதைக்குழியில் தள்ளி விட்டான். தினகரன் எஸ்கேப்பாக, ஆள் பலமும், பண பலமும் இல்லாத ஜெகனால் நிச்சயம் இதிலிருந்து வெளியே வர முடியாது.
மீனாவே ஒதுங்கிய பின் அவளை சார்ந்த சொந்தங்களும் தள்ளி நின்று கொண்டார்கள். வலது கை தோள்பட்டையில் வெட்டுப்பட்ட அவனால் எப்படி திவாகரனை வெட்டி இருக்க முடியும். கேஸ் திசை மாறியது.
ஆறு மாதங்களுக்குப் பின் தினகரன் வெளியில் வந்தான். அவனுக்கு பின் பெரிய படைபலம் இருந்தது. ஆனால், ஜெகன் ஒரு பெரிய முடிவை எடுத்தான்.
“தீனா, நிச்சயம் என் குடும்பம் என்னை ஏத்துக்காது. என் மனைவி பாவம். என்னை நம்பி வந்தா.. எனக்கு மூணு பிள்ளைகள் இருக்கு.. அவங்களுக்கு என்னால எதுவுமே பண்ண முடியல ஒவ்வொரு தடவையும் நம்பிக்கையை கொடுத்து என் மனைவியை ஏமாத்துறேன்” மனைவி நினைப்பில் கண்களில் நீர் வழிந்தது.
“திவாகரை கொன்னது நீ.. ஆனா, நான் உன்னை காட்டிக் கொடுக்கல. இங்க செத்தா அவன் குடும்பத்துக்கு பணம் கொடுப்பாங்கல்ல.. உனக்காக நான் ஜெயிலுக்கு போறேன். ஆனா நீ, எனக்காக.. எங்க சித்தப்பா கிட்ட இருந்து எனக்கு சேர வேண்டிய சொத்தை என் குடும்பத்துக்கு மீட்டு கொடுக்கணும். என் மனைவி வைராக்கியமானவ, நிச்சயம் பிள்ளைகளை வளர்த்திடுவா.. ஆனாலும் அவங்களுக்கு நியாயமா சேர வேண்டியது கிடைக்கணும். இனி என்னால் போராட முடியாது. காலத்துக்கும் ஜெயில்தான். கண்காணாத இடத்துல என் குடும்பமாவது நல்லா இருக்கட்டும்” என்றான் கண்ணீரோடு..
தினகரனுக்கு மனம் உருகி போனது. அமைதியாக வாழ்ந்த அவன் குடும்பத்தை உள்ளே இழுத்து விட்டது அவன் அல்லவா.. ஜெகனின் யோசனை தினகரனின் தந்தைக்கு சரியாகப்பட்டது. ஆனால் தீனா, மித்ர துரோகம் என்று நினைத்தான். தன்னுடைய தவறுக்கு ஜெகனை மாட்டி விடுவது நியாயமாகாது என்று நினைத்தவன் தாமாக முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டான். அப்படி இருந்தும் ஜெகன் கேஸிலிருந்து முழுமையாக வெளியே வர ஒரு வருடத்திற்கு மேலானது.
அவன் ஜெயிலில் இருக்கும் போது தான் மீனாவுக்கு மலர் கனி பிறந்தாள். அவன் ஆசைப்பட்டு பிறந்த மகள் தொட்டு தூக்க கூட முடியவில்லை. மனதளவில் மிகவும் நொறுங்கிப் போனான். தினகரனின் தந்தை உதவியோடு தன் சித்தப்பாவிடமிருந்து பூர்வீக சொத்துக்களை கைப்பற்றினான். முன்பு போல அவசரப்படாமல் கொஞ்சம் நிதானமாக தன்னை நிலை நிறுத்தி எல்லாவற்றையும் சரி செய்து மனைவியைத் தேடி வந்து விட்டான்.
மனதில் இருந்ததை இறக்கி வைத்து மனைவியின் மடியில் தஞ்சம் புகுந்திருந்தான். அவனின் குலுங்கியவுடல் மீனாவுக்கு அதிர்வை ஏற்படுத்தியது. மெல்ல அவன் கைகளை அழுத்தி கொடுக்க..
“எப்படியாவது முன்னேறனும் உங்களை நல்லா வச்சுக்கணும்னு தான் மீனா நான் தீனா கூட சேர்ந்தேன். என்கிட்ட குறைகள் இருந்தாலும் உன் மேல வச்ச காதல்ல எந்த குறையும் இல்லை மீனா. இப்படி எல்லாம் நடக்கும்னு நான் யோசிக்கக்கூட இல்லை. நீ பிள்ளைகளோட சாகப் போனேன்னு தெரிஞ்ச உடனே வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. அந்த ஜெயில் வாழ்க்கை எல்லாம் நரகம். அங்கிருந்த ஒவ்வொரு நொடியும் என் மனசு முழுக்க உன்கிட்ட தான் இருந்துச்சு” என்று கண்களை துடைத்து கொண்டவன்,
“அவ்வளவுதான் எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நினைச்சேன். கடைசி வரைக்கும் என் குடும்பத்தை பார்க்க முடியாம போயிருவனோன்னு ரொம்ப பயந்தேன். மனசுல நினைக்கிற கடவுள் கிட்ட எல்லாம் வேண்டுனேன்” அவள் கைகளை அழுத்தமாக பற்றி கொண்டவன்,
“என்ன நம்பு மீனா. ரொம்ப போராடி உங்களை மீட்டு இருக்கேன். திரும்பவும் இழந்துட்டு நிக்க மாட்டேன். நம்ம பிள்ளைகளை பார்த்தியா ஆசைப்பட்டதை கேட்டு வாங்கி சாப்பிட்டு எவ்வளவு நிம்மதியா உறங்குறாங்கன்னு.. நிச்சயம் அந்த நிம்மதியை அவங்களுக்கு கொடுப்பேன். எம் பொறுப்பிலிருந்து இனி தடுமாற மாட்டேன் மீனா” என்று உறுதி கொடுக்க,
தலையாட்டி கொண்டவள், “பனி விழுகுது வாங்க தூங்கப் போவோம்” என்று கணவனை உள்ளே அழைத்து வந்தாள்.
பிள்ளைகள் மூவரும் ஒன்றாக உறங்கிக் கொண்டிருக்க.. அவர்கள் முகங்களை பார்த்ததும் இதுவரை இருந்த அழுத்தங்கள் எல்லாம் பெற்றவர்களுக்கு கரைந்து போனது. மகளின் அருகே படுத்துக் கொண்டவன் ஒரு கையால் பிள்ளைகளை வருடி கொடுத்தான்.
இரவு விளக்கை அணைத்துவிட்டு ஜெகன் அருகே சற்று தள்ளி படுத்தாள் மீனா. ஆச்சரியப் பார்வை அவனிடம்.. எப்போதும் இருவருக்கும் இடையே பிள்ளைகள் இருப்பார்கள் இன்று என்னவாம் என்று திரும்பி மனைவியை பார்க்க, அவள் கண்களை மூடி இருந்தாள்.
ஜெகனும் அமைதியாக கண்களை மூடிக்கொள்ள.. மீனா மனதில் பலவித யோசனை.
இங்கு எது முக்கியம்?.. பணம், நகை, வசதியான வாழ்க்கை, கெளரவமா?.. உயிர். உயிர் அல்லவா முக்கியம்.. எதைக் கொடுத்தாலும் மாண்ட உயிரை மீட்க முடியுமா?.. உயிர் இருக்கும் வரை தான் இந்த உடலுக்கு கூட மதிப்பு. பெரும் விபத்து, நிலநடுக்கம், சுனாமி என்று தினம் தினம் எத்தனை விஷயங்களைக் கடக்கிறோம். கண்ணால் பார்க்கிறோம். காதால் கேட்கிறோம். எவ்வளவு பேர் எத்தனை கனவுகளோடு மாண்டு போய் இருப்பார்கள். எத்தனை குழந்தைகள், கர்ப்பிணிகள், இளைஞர்கள்? நிறைய எதிர்கால கனவுகள் இருந்திருக்கும்?…
நிலையில்லாத வாழ்க்கை எத்தனை பேருக்கு வரமாக நிலை நிற்கும். எழுந்து அமர்ந்து பார்த்தாள். கணவன், அவன் அருகில் மூன்று பிள்ளைகள் உறங்கி கொண்டிருந்தார்கள். இழந்திருந்தால்?… என்ன செய்து மீட்க முடியும். எல்லோருக்கும் கடவுள் மறு வாய்ப்பு வழங்குவதில்லையே?.. என் வாழ்க்கையை நான் இறுக்கி கொள்ள வேண்டும். கணவனை ஒன்றி அணைத்து கொள்ள, விழித்து பார்த்தான் ஜெகன்.
அதிசயமாகத்தான் இருந்தது. என் மீனாவா?.. அவளை நகர்த்தி பார்க்க, இறுக அணைத்து இருந்தாள்.
“மீனா” என்று அழைத்து பார்க்க, அவளிடம் அசைவில்லை. மனைவியை தன்னோடு சேர்த்து அணைத்தவனும் இந்த வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து விட வேண்டும் என்ற தவிப்பு இருந்தது.