சுவற்றில் கை ஊன்றியபடி இவன் நின்றிருக்க, அவன் முதுகில் முகம் வைத்து, இருபக்கமும் டீசர்ட்டை மட்டும் பிடித்தபடி இவள் நின்றிருக்க, ஒதுக்க முடியாத நெருக்கம் இருவரிடமும்.
“சாரி..” என்ற வார்த்தை இவள் உதடுகளில் இருந்து உதிர்ந்திட, விரைத்தது இவன் உடல்.
டீசர்ட்டை பிடித்திருந்த இவள் கைகளை விலக்கி, அவளை தள்ளி நிறுத்தி “வீட்டுக்கு கிளம்பு, நேரமாச்சு” என சொல்லிவிட்டு திரும்பி கொண்டான்.
அங்கேயே இருக்கவும் முடியாமல், அங்கிருந்து கிளம்பவும் முடியாமல், நின்றிருந்தவள் மெதுவாய் மாடிப்படியில் இறங்க துவங்க,
Advertisement
“கமலி” என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு இவள் திரும்ப, கிரி கமலிக்காக வாங்கி வந்த பொருட்களை அதே பேக்கில் போட்டு, எடுத்து வந்து அவள்முன் நீட்டினான். “உன் நேரமா, இல்லை என் நேரமான்னு தெரியலை, முன்ன வாங்கினப்போவும் உனக்கு செட் ஆகலை. இப்போ வாங்கினப்பவும் செட் ஆகலை. உனக்குன்னு வாங்கினது. உன் இஷ்டம் என்னமும் பண்ணு” என அவள் முன் நீட்ட
அதை வாங்குவது போல் அருகில் வந்தவள், விரல் நுனியில் நின்று, அவன் இதழ்களோடு தன் இதழ்களை நச்சென சேர்த்திட, அவன் கண்களும் இதழ்களும் அவளுக்காக விரிந்தது. கையிலிருந்த பேக் தவறி நழுவியது.
இதழ் சேர்த்த அதே வேகத்தில் அவள் இதழ்களை பிரித்து கொண்டு ஓட எத்தனித்தனித்தவளின் பிடறியை பற்றி திரும்பி, ஆக்ரோஷமாய் தன் முகம் நோக்கி இழுத்து, விரிந்திருந்த இதழ்களை அவன் இதழ்களுக்குள் கரைத்து விழுங்க துவங்க விட்டான்.
Advertisement
ஒரு கை பிடறியை பற்றி இருக்க மறு கை விலகியவளின் இடையை இறுக பற்றி தன்னுடலோடு இறுக்க பிடித்து வைத்து கொண்டது.
Advertisement
கைகள் மேலேறிய நொடி, அதற்கு அவசரமாய் தடை போட்டு, அவனில் இருந்து விலகி நிற்க, இருக்கும் இடத்தை உணர்ந்து இவனும் பிடறியை வருடியபடி திரும்பி கொண்டான்.
முதல் முறை காதலால் நிரம்பி வழிந்த எண்ணிடலங்கா முத்தங்கள் அவர்கள் மனதை முழுதாய் குளிர் வித்தது.
கீழே கிடந்த போக்கை எடுத்து இவள் கையில் திணித்துவிட்டு “கிளம்பு” என்றிட, அதை வாங்கி கொண்டு கடகடவென கீழே இறங்கிவிட்டாள் கமலி. மாடி சுவற்றில் கை வைத்தபடி பார்த்துக்கொண்டிருந்த கிரியும், அவள் பின்னோடு இறங்கி சென்றான் அவளை விட வேகமாய்.
Advertisement
பைக்கை ஸ்டார்ட் செய்த நொடி, “இருட்டிடுச்சு தனியா போக வேண்டாம் தள்ளு” அவள் கையில் இருந்து பைக்கை தன் கைக்கு மாற்றி கொண்டு அதில் ஏறி அமர்ந்து, இவனையே பார்த்திருந்தவளிடம் “உக்காரு” என்றிட இவளும் பின் ஏறிக்கொண்டாள். பத்து நிமிட பயணமும் பத்தே நொடிகளில் கடந்து, அவளது வீடும் வந்துவிட்டது. வீட்டில் விட்டுவிட்டு, இவன் மட்டும் “கிளம்புறேன்” என தலையைசைக்க
“நீங்க நடந்தா போவீங்க.. வண்டிய எடுத்துட்டு போங்க. அப்புறமா நான் வந்து எடுத்துகிறேன்” என கமலி கூற
“இருக்கட்டும், பக்கத்துல தானே, நடந்து போயிப்பேன். நீ முதல்ல போ” என்றிட
“வீட்டுக்குள்ள வந்தா, உன் ரூம்க்குள்ளயும் வருவேன், அப்புறம் உனக்குள்ளேயும் வருவேன். ஓகேவா?” என்றதும்
குப்பென சிவந்து போன கமலி வீட்டினுள் ஓட்டமெடுத்துவிட, இவனது முகம் அதற்கு மேல் சிவந்து போனது.
********
மறுநாள் காலையில் ஒரு பதினோறு மணி போல செந்தில் அங்கே வந்தான்.
“வாங்க மாமா” என அழைத்தான் கிரி. செந்திலின் முகமோ சுருங்கி விட்டது. ராஜிக்கும், செந்திலுக்கும் ஒரே வயது தான். இவர்களை விட ஒரு வயது தான் சிறியவன் கிரி. அதை விட ஒரே தெருவில் வசித்தவர்கள் என்பதால் பெயர் சொல்லி அழைத்து தான் பழக்கம்.
ராஜியுடனான திருமணத்திற்கு பின்பும் அப்படியே தான் தொடர்ந்தது. ஆனால் இப்போது மாமா என அழைத்து தூர நிறுத்தியது போல உணர்ந்தான் செந்தில்.
சேரை இழுத்து போட்டவன் ‘உட்காருங்க மாமா’ என்றவன் ‘க்கா’ என குரல் கொடுக்க, ராஜிக்குமே அதிர்ச்சி தான். என்னதிது புதிதாய் அக்கா என முறை சொல்லி அழைக்கிறான். நேற்று கூட ஏதோ வாய் தவறி அழைத்திருப்பான் என நினைத்திருக்க, இன்றோ ஊர்ஜிதமானது இவனது பிடித்தமின்மை. கைகளை துடைத்தபடி சமையலறையை விட்டு வந்தாள்.
இவன் வருவது ராஜிக்கு தெரியுமாகையால், இவள் அமைதியாய் வந்து நிற்க, எப்போதும் வாசலோடு செல்லும் செந்தில் இன்று வீட்டினுள் வந்து அமர்ந்திருக்க “வாங்க மாப்பிள்ளை..” என கேட்டபடி பேத்தியை இடுப்பில் வைத்து கொண்டு வந்தார் வசந்தா.
என்ன விசயம் என கிரியும், வசந்தாவும் பார்வையை விட, அவர்கள் பார்வை உணர்ந்து இவனும் “தனியா வாடகைக்கு வீடு பார்த்திருக்கேன். ராஜியை அழைச்சிட்டு போகட்டுமா?” என கிரியை பார்த்து கேட்டான்.
“வேணாம்னு தானே அனுப்பி வச்சீங்க.. இப்போ என்ன?”
“இருக்கும் போது அருமை தெரியலை”
“ஓ.. இப்போ தெரிஞ்சிடுச்சா” என இவன் நக்கலடிக்க, தலை நிமிரவில்லை செந்தில்.
“கிரி போதும்..” என ராஜி குரல் கொடுக்க, சட்டென திரும்பி ராஜியை பார்த்த கிரி, புருவங்களை நெறிக்க “நான் தான் தனியா வீடு பார்க்க சொன்னேன், நான் சொல்லி தான் அவர் இங்கே வந்திருக்கார்” என கணவனுடன் சேர்ந்து கொண்டாள் ராஜி.
பிடறியை அழுத்தமாய் வருடிக்கொண்டவன், செந்திலின் பக்கம் திரும்பி “அவளை, குழந்தைகளை கஷ்டபடுத்தி, திருப்பி அனுப்பி வைக்க மாட்டீங்கன்னு நம்பிக்கை கொடுத்தா, அனுப்பி வைக்கேன்” என்றான் கிரி
பதிலுக்கு “கண்டிப்பா இனி அவளை கஷ்டபடுத்த மாட்டேன்” என்றான் தலைநிமிர்ந்து, லேசாய் புன்னகையை படறவிட்டபடி
“இப்படி தான் கல்யாணம் பண்ணும் போதும் சொன்னதா நியாபகம்” என கிரி நேரம் பார்த்து சிக்ஸர் அடித்தான்.
‘பொண்ணை மட்டும் கொடுங்க.. சொத்து பத்து யாரு கேட்டா!’ என பகுமானமாய் ராஜியோடு கோவிலில் திருமணம் செய்து கொண்டது சட்டென நினைவு வந்தது செந்திலுக்கு.
ஆனாலும் இப்போது பேசாவிட்டால் ராஜி தனக்கில்லை என உணர்ந்து “இல்லை இனி எதுவும் கேட்கமாட்டேன் கிரி” உறுதியாய் வந்தது இவன் குரல்.
“இனி கேட்டாலும் கிடைக்காது மாமா.. ஏன்னா நான் இனி பாரின் போக போறதில்லை. வேலையை ரிசைன் பண்ணிட்டு தான் வந்திருக்கேன்” என்ற கனம் செந்தில் பார்வையில் சிறு குழப்பத்தோடு பார்க்க, ராஜியோ அதிர்வோடு பார்த்தாள்.
வசந்தாவோ ஒரு படி மேலே போய், “இங்க இருந்து என்னடா பண்ண போற! செலவுக்கு என்ன பண்றது” கிரி இங்கே இருந்தால் இவரது தாராள செலவுகள் குறைந்திடுமே, என்ற கவலை அவருக்கு.
“வீட்டு செலவு தானே.. அந்த கஷ்டம் உனக்கெதுக்கும்மா.. நான் பார்த்துகிறேன்” அழுத்தமாய் கூறியவனை கண்டு, அப்படியே வாய் மூடிக்கொண்டார் வசந்தா.
“இனி என் பக்கத்தில் இருந்து எதுவும் கிடைக்காது” ராஜி, செந்தில் இருவருக்கும் பொதுவாகவே கூறினான் கிரி.
ராஜி தன் கணவனையே பார்த்திருக்க, எச்சில் கூட்டி விழுங்கினான் செந்தில், பின் உறுதியோடு, “ராஜி, குழந்தைகளே எனக்கு போதும் கிரி. வேற எதுவும் வேண்டாம். வீடு பார்த்திட்டேன். நாளை மறுநாள் குடிபோகலாம்னு இருக்கோம்” தன்னோடு ராஜியையும் சேர்த்து கொண்டான் செந்தில்.