Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அறம் காக்கும் அன்பு

அறம் காக்கும் அன்பு 8.2

அத்தியாயம் 8.2

“இந்தா மணி, நீ சொன்ன பொருள் எல்லாம் வாங்கிட்டேன்” என்று பொருட்கள் நிறைந்த பையை மணிமேகலையிடம் கொடுத்தார்.



Advertisement

“நான் என்னமோன்னு நினைச்சேன் மணி, இந்த ஊர்ல எல்லாரும் ரொம்ப மரியாதை தெரிஞ்சவங்களா இருக்காங்க..”

“ஏன்ப்பா அப்படி சொல்றீங்க?”

Advertisement

Advertisement

“என்னன்னு தெரியலை, வழியில பார்க்கிறவங்க எல்லாம் ரொம்ப மரியாதையா என்ன பார்த்தும் குட் மார்னிங் சார்ன்னு வணக்கம் வைக்கிறாங்க..”

“ஓ..”

Advertisement

“உனக்கு எப்படிம்மா இருக்கு இந்த ஊரு?”

“எனக்கு கூட இங்க ஒரு வித்யாசம் தெரியுது ப்பா. நம்ம ஊர்ல கூட சில பேர் என்னை பார்த்தும், ‘என்ன இந்த பொண்ணு மூஞ்சி இப்படி இருக்கு? பயமா  இருக்கே அப்படின்னு’ முகத்துக்கு முன்னவும் சொல்லவாங்க பின்னவும் சொல்வாங்க.. ஒரு மாதிரி வெறிச்சு பார்ப்பாங்க.. முகத்தை சுளிப்பாங்க..

ஆனா இங்க அப்படி ஒன்னும் நடக்கலை ப்பா… ரொம்ப நல்ல மனுஷங்களா  இருக்காங்க”

“அப்படியா மணி சொல்ற? ஆனா எங்கேயோ இடிக்குது மணி..”

இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான் வல்லபன். அவன் அங்கே தான்  வீட்டு பாடம் செய்து கொண்டிருந்தான். வராஹி வீர்யா வீட்டிற்கு சென்றிருந்தாள்.

“ஏன் தாத்தா அப்படி சொல்றீங்க?” என்றான் அவன் தாத்தாவிடம்.

“இல்ல டா, சாதாரணமா குட் மார்னிங் சொல்றது சரி தான். ஆனா நான் டீ குடிக்க போனா, உட்கார்ந்திட்டு இருக்கவங்க எழுந்து நீங்க உட்காருங்க சார்ன்னு இடம் கொடுக்கிறாங்க.. அதுகூட பரவாயில்ல, இன்னிக்கு ஒரு ஆள் என்னை பார்த்து விறைப்பா போலீசுக்கு அடிக்கிற மாதிரி சல்யூட் வேற அடிச்சான்..”

“நீங்க சொல்றது சரி தான் ப்பா.. ஆரம்பத்துல சிலர் என்னை கூட ஒரு மாதிரி பார்த்த மாதிரி தான் இருந்துச்சு. அப்புறம் அப்படி எதுவும் நடக்கவே இல்லை. எல்லாரும் மரியாதையா ஒரு எல்லையோடு இருந்துகிறாங்க” என்றார் மணிமேகலையும் கொஞ்சம் குழப்பமாக.

“எல்லாம் அந்த வீர்யா வேலையா இருக்கும் தாத்தா”

“இதுல அந்த பாப்பா என்ன செஞ்சிருக்கும்னு சொல்ற?”

“அவ எல்லாம் சாதாரண பாப்பா இல்லை.. நீங்க சொல்றதை பார்த்தா கண்டிப்பா ஏதோ விஷயம் இருக்கு.”

“அப்படி இருந்தா வரா நம்ம கிட்ட சொல்லி இருப்பாளே?” என்றார் மணிமேகலை.

“இல்ல அத்தை, வரா கிட்ட சொல்லி இருக்க மாட்டா… அவளுக்கு இன்னொரு முகம் இருக்கு. அது வராவுக்கே தெரியாது. “

“என்னடா நீ, செம பில்ட்டப்பா இருக்கே?”

சரியாக அந்த நேரம் சம்பவ் வீர்யா வராஹியை தேடி இவர்கள் வீட்டுக்கு வந்தான்.

“தாத்தா இவன் தான் வீர்யாவுக்கு அல்லக்கை.. இவன்கிட்ட விசாரிச்சா உண்மை தெரிஞ்சிடும்..” என்றான் ரகசிய குரலில்.

“உள்ள வாப்பா.. “ என்று குரல் கொடுத்தார் சுந்தர்ராஜன்.

அவனும் உள்ளே வந்தான்.

“நீயும் இந்த ஏரியா தானா?”  என்று பேச்சு கொடுத்தார்.

“ஆமா தாத்தா..”

“இங்க எல்லாருமே ரொம்ப மரியாதையா இருக்காங்களே?”

“உங்க கிட்ட தானே தாத்தா.. அப்படி தான் இருப்பாங்க” என்றான் பெருமையாக.

 

“ஏன் நான் என்ன ஸ்பெஷல்?”

அவன் அலெர்ட் ஆகிவிட்டான்..”இல்ல தாத்தா நீங்க பெரியவங்க இல்ல  அதான்”

அதுவரை வல்லபன் கூறினான் என்று தான் பேச்சு கொடுத்தார். இப்பொழுது அவன் முகத்தை பார்த்ததும் ஏதோ விஷயம் இருக்கு என்று புரிந்து போனது.

“மணி, தம்பிக்கு குலாப் ஜாமுன் கொடும்மா”

“உனக்கு ஜாமுன் பிடிக்குமா?”

“பிடிக்கும் தாத்தா..” 

இப்படி அப்படி என்று பேச்சு கொடுத்து அவன் வாயில் இருந்து விஷயத்தை வாங்கி விட்டார். 

வராஹி “அத்தையை பத்திரமா பார்த்துப்பேன்னு நான் சொல்லி தான் இங்கே கூட்டிட்டு வந்திருக்கேன் வீரு. நாம தான் இனிமே அவங்களை பார்த்துக்கணும் சரியா” என்று கூறி உள்ளாள்.

“நீ கவலையே படாதே வரா.. அது இனி என் பொறுப்பு” என்று வீர்யாவும் வாக்கு கொடுத்திருக்கிறாள்.

அப்பொழுது அவர்கள் ஏரியாவில் ஒரு சிலர் மணிமேகலை பற்றி கிண்டலாக பேசுவதை வீர்யாவும் வராஹியும் கேட்டுள்ளார்கள்.

அதை பார்த்து வராஹி வருத்தப்பட,

“நீ ஒன்னும் கவலை படாதே வரா, நான் பார்த்துகிறேன்” என்று வீர்யா தோழிக்கு தைரியம் சொல்லியிருக்கிறாள்.

அதன் பிறகு வராஹிக்கு தெரியாமல் வீர்யாவும் சம்பவ்வும் போட்ட திட்டம் தான் இந்த அதிகப்படியான மரியாதைக்கு காரணம் என்று கூறினான் சம்பவ்.

“அப்படி என்ன திட்டம் டா போட்டீங்க? என்னால எங்க வீட்டையே இத்தனை வருஷத்துல மாத்த முடியலை. நீங்க என்னடான்னா ஒரு ஏரியாவே மாத்தி இருக்கீங்க?” என்றார் சுந்தர்ராஜன் உண்மையான ஆர்வத்தோடு.

 

“எங்களுக்கும் இதை எப்படி டீல் பண்ணன்னு ஆரம்பத்துல புரியலை. நாங்க வீர்யா வீட்டு கேட் கிட்ட நின்னு யோசிச்சிட்டு இருந்தோமா, அப்ப நீங்க இங்க வராண்டாவில் பேப்பர் படிச்சிட்டு இருந்தீங்க”

சுந்தர்ராஜனுக்கு பெரிய முறுக்கு மீசை. ஆளும் வாட்டசாட்டமா இருப்பார்.

“டேய் இந்த தாத்தா ஆர்மில மேஜரா இருந்தாரு. மிலிட்டிரில ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீசர். அவர் பொண்ணை யாரவது கிண்டல் செஞ்சா துப்பாக்கி எடுத்து சுட்டுடுவாரு.. “

“நிஜமாவா வீர்யா” என்றான் சம்பவ், வீர்யா கூறியதை கேட்டு.

“இல்லை சம்பவ், ஆனா அப்படின்னு நாம் செய்தியை பரப்பணும். எல்லாரையும் நம்ப வைக்கணும். அப்புறம்  யாருமே அத்தையை கிண்டல் செய்ய யோசிப்பாங்க இல்ல..”

“சூப்பர்  ஐடியா வீர்யா ..”

“அப்புறம் என்ன தாத்தா.. கச்சிதமாக கதையை பரப்பி விட்டுடோம்..”

“அது எப்படிடா நீங்க சொன்னதை எல்லாரும் நம்புனாங்க?”

நீங்களும் அத்தையும் சொன்னதா நாங்களே கொஞ்சம் கதை எல்லாம் சேர்த்து சொன்னோம். 

“அப்படி என்ன சொன்னீங்க?” என்றார் மணிமேகலை இப்பொழுது ஆர்வமாக.

“ஒரு முறை ஒரு தீவிரவாதியை தாத்தா தனி ஒரு ஆளா பிடிச்சு காட்டுக்குள்ள கட்டி வச்சிருந்தாங்க. ‘பாம் எங்க வச்சிருக்கீங்கன்னு மரியாதையா உண்மையை சொல்லிடுன்னு’ அவரை மிரட்டி இருக்காங்க. அவன் வாயே திறக்கலை.. நீ இப்ப வாயை திறக்கலைன்னாலும் நாங்க கண்டுபிடிச்சிடுவோம்னு அவன் கிட்ட சவால் விட்டிருக்காரு. அப்புறம் எப்படியோ அவங்க நெட் ஒர்க்கை ட்ரேஸ் பண்ணி பாம்மை  டிஃப்யூஸ் பண்ணிட்டாங்க.. அப்ப தாத்தா அவன்கிட்ட, “இனி நீ எதுக்குமே வாயே திறக்க கூடாது. திறந்தா வாய்லயே சுட்டுடுவேன்னு” கடுப்பா சொல்லி இருக்காரு.. 

அப்ப அந்த தீவிரவாதி இரண்டு நாளா தூங்காததுனால கொட்டாவி விட்டிருக்கான். இப்ப ஏன்டா வாயை திறந்தேனு தாத்தா கன் எடுத்து அவன்  வாய்க்குள்ளவே ஷூட்  பண்ணிட்டாங்க.. டுமீல்ன்னு ஒரே ஒரு சத்தம்.. சாப்டர் க்ளோஸ்.”

‘ஆங்..’ என்று விழித்தனர் கதை கேட்டுக்கொண்டிருந்த மூவரும். ஒரு சதவீதம் கூட சந்தேகமே வராது. உண்மையில்  நடந்தது போலவே கூறினான் சம்பவ்.

“டேய் என்னடா சொல்ற.. கொட்டாவி விட்டப்ப அந்த கேப்ல வாய்க்குள்ள சுட்டேனா?”

“எஸ் தாத்தா.. ஒரே ஷாட்..”

“டேய்..  எங்க ஊர் திருவிழால பலூன் கட்டி வச்சிருப்பாங்க. சரியா சுட்டா பரிசு கொடுப்பாங்க.. நான் அந்த பலூனை கூட ஒழுங்கா சுட்டது இல்லையே டா” என்றார் சுந்தர்ராஜன் பாவமாக.

“அது இங்க இருக்கிறவங்களுக்கு தெரியாது இல்ல தாத்தா..”

“அப்புறம் ஒரு நாள் நீங்க ட்ரைனிங் கொடுத்த உங்க டீம்ல ஒருத்தன் தப்பு செஞ்சான்னு கண்டுபிடிச்சு..”

“கண்டுபிடிச்சு?”

“அவனை மூனு நாள் சாப்பாடு தண்ணி கொடுக்காம தலைகீழா தொங்க விட்ட்டுடீங்க”

“யாரு நானா?”

“நீங்க தான் தாத்தா.. பின்ன நானா?”

“டேய்.. என்ன டா சொல்ற?அப்புறம்..”

“இன்னும் நிறைய இருக்கு.. ஒரே நாள் எல்லாம் சொல்ல முடியாது தாத்தா.. நான் வீர்யா வீட்டுக்கு போறேன். என்னை விட்டுட்டு அவங்க ரெண்டு பேரும் ப்ரொஜெக்ட்டை முடிச்சிடுவாங்க” என்று எழுந்து கொண்டான்.

“பார்த்தீங்களா தாத்தா.. நான் சொன்னப்ப நம்பலை தானே நீங்க” என்றான் வல்லபன்.

மணிமேகலைக்கு சிரிப்பாக வந்தது.. இந்த வீர்யா இருக்காளே.. அப்பப்பா.. என்ன ரீல்..

“ஏன்டா இப்படி பொய் சொல்றீங்களே தப்பில்ல?” என்றான் வல்லபன் கோவமாக.

“நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னா எதுவும் தப்பில்லைன்னு வீர்யா சொல்லி இருக்கா..” என்று சொல்லிவிட்டு ஓடியே விட்டான் சம்பவ்.

“பேங்க் மனேஜர் சுந்தர்ராஜனை இப்படி மேஜர் சுந்தர்ராஜன் ஆக்கிட்டாங்களே அப்பா” என்று கலகலவென சிரித்தார் மணிமேகலை. மகள் இப்படி வாய் விட்டு சிரித்து எல்லாம் பல வருடங்கள் ஆகி இருந்தது.

ஆதுரமாக மகளை பார்த்து,

“சீக்கிரமா உனக்கு ஒரு வழி செய்யணும் ம்மா” என்றார் கரகரப்பாக.

“அப்பா நான் பதினாறு வயதில் இருந்து வீட்டோட இருக்கேன். கிட்டத்தட்ட பதினேழு வருஷமா இருக்கேன்.. உடனே அதை எல்லாம் சரி செய்ய முடியாது.. தயவு செஞ்சு தப்பை சரி செய்றேன்னு அவசரப்பட்டு எதையும் சொதப்பிடாதீங்க..

நானே  யோசிச்சு சொல்றேன்.. கொஞ்ச  நாள் போகட்டும்.. நீங்க அம்மாகிட்ட பேசி ஹரி கல்யாணத்தை சீக்கிரமா முடிங்க” என்று எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

அவர் குரலில் என்றும் இல்லாத ஒரு தெளிவும் திடமும் இருந்தது. அது சுந்தர்ராஜனுக்கும் ஒரு புது தெம்பை கொடுத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!