நேற்று காலையில் கல்லூரியில் தனக்கு பிடித்தார்ப்போல வந்து நின்ற கமலியை ஆசைதீர பார்த்து, அதை முழுதாய் அனுபவித்து கொண்டாடி தீர்க்கும் முன் எத்தனை மனகசப்புகள், எத்தனை சண்டைகள், எத்தனை விவாதங்கள், எத்தனை சமாதானங்கள். என யோசித்தபடியே தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்த கமலியை இவனும் விடாது பார்த்து வைத்தான்.
இவளை பார்த்து சரியாய் இருபத்தி நான்கு மணி்நேரங்கள் தான் ஆகின்றது. இந்த இருபத்தி மணி நேரத்திற்குள் அத்தனை சண்டைகள் இருவரிடையேயும். வாய் சண்டையும் போட்டாயிற்று, இதழ் சண்டையும் போட்டாயிற்று.
வாய்சண்டை இவன் கோபத்தை தூண்டினாலும், இதழ் சண்டைகள் அவனை அடியோடு நிதானமிழக்க வைத்திருந்தது. ஒரு வித மோன நிலையில் கமலியை பாரத்தவனுக்கு நினைவுகள் எங்கோ தப்பி செல்ல, தலையை உலுக்கி நிதானத்திற்கு வந்தான். ஆனால் அவளோ அவனை பார்வையாலேயே கொள்ளை அடித்து கொண்டிருந்தாள்.
Advertisement
இவன் தான் முதலில் தெளிந்தது ‘ம்க்கும்’ என குரலை செருமியபடி “கமலி” என்றிட, திடுக்கிட்டு இமை தட்டி விழித்தாள் கமலி.
தலையை லேசாய் வளைத்து, பிடறியை வருடியபடி “சைட் அடிச்சது போதும்” என இவன் கூறிய நொடி, குப்பென முகம் சிவந்திட, பட்டென இவள் பார்வை வேறு பக்கமாய் திரும்பிவிட்டது.
ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க கூட வெகுவாய் தயக்கம். பலவித எண்ணங்கள் அவர்களது மனதை நிறைவாய் நிறைத்து தயக்கத்தை புகுத்தி இருந்தது.
Advertisement
சட்டென நியாபகம் வந்தவளாய், இவனை நிமிர்ந்து பார்த்து “காய்ச்சல் சரியாகிடுச்சா?” என இவள் கேட்க
Advertisement
இவனும் இவள் முகம் நோக்கி, “ம்..” என தலையசைக்க, அவனை உற்று பார்த்தவளோ “முகத்தை பார்த்தா சரியான மாதிரி தெரியலை” என அவளுக்கு அவளே சொல்லி கொண்டு, அவன் பேச்சின் மேல் நம்பிக்கை இல்லாதவளாய், இருந்த இரண்டடி இடைவெளியையும் குறைத்து கொண்டு அவனை நெருங்கினாள்.
இவன் புருங்கள் மேலேறி அதிர்வை பிரதிபலிக்க, அவனது முகமாற்றங்களை உள்வாங்கியபடியே, நெற்றியில் கை வைத்து தொட்டு பார்த்தாள். அந்த ஒற்றை தொடுகையிலேயே இதமாய் கண் மூடி கிறங்கி விட்டான் கிரி.
சிறு தொடுகையில் கிறங்க வைக்கும் கமலியும், அதில் மயங்கி நிற்கும் கிரியும் காதலின் படிநிலைகளை மகிழ்வாய் உள்வாங்கி கற்றுக் கொண்டிருந்தனர். இப்போதும் இவள் கேள்வி கேட்டதில் அவனில் பெரிதாக எதுவும் பதிலில்லை.
Advertisement
நெற்றியில் உணர்ந்தது பத்தாது என, அடுத்து கழுத்தில் பதிந்தது இவள் விரல்கள், “சூடு இல்ல தான். ஆனால் முகம் ரொம்ப டயர்டா இருக்கே” என சொல்லி கொண்டிருக்கையிலேயே பட்டென அவள் விரல்களை இறுக பிடித்துக்கொண்டு “அதான் விட்ருச்சுன்னு சொல்றேன்ல.. பிறகென்ன சந்தேகம். தொட்டு பார்த்து தான் தெரிஞ்சுக்கனுமா?” என அழுத்தமாய் இவன் கேட்க.
“என்கிட்ட என்ன தெர்மா மீட்டரா இருக்கு. கரெக்டா டெம்பரேச்சர் எவ்ளோ இருக்குன்னு சொல்றதுக்கு! என்கிட்ட கை தான் இருக்கு, தொட்டு பார்த்தா தான் தெரியும்” என ஒரு முறைப்பை பறக்கவிட்டு “நேத்து நைட், சாப்பிட்டிங்களா, மாத்திரை போட்டீங்களா!” கேள்வி கேட்டே கொன்றாள் அவனை.
அவளை மேலும் கீழுமாய் ஒரு பார்வை பார்த்து “அவ்வளவு அக்கறை இருக்குறவ.. நேத்து நைட் உன்னை உன் வீட்டில் டிராப் பண்ணும் போதே, சாப்பாடு கொடுத்து மாத்திரையையும் போட வச்சிருக்கனும்” என்றவன், கூடவே “வாசலோட என்னை நிறுத்திட்டு வீட்டுக்குள்ள ஓடிப்போயிட்டு. இப்போ இவ்வளவு அக்கரையா பேச வந்துட்டா.. போடீங்” என இவன் திட்ட துவங்கிட
கோபத்திற்கு பதிலாய் மீண்டுமாய் ஒரு முக சிவப்பு அவளில் “உங்களுக்கு காய்ச்சல் இருக்குன்றதை கூட, மறந்து ஓடுற அளவுக்கு பேசி வச்சது நீங்க தான். இப்போ பழியை என் மேல போடாதீங்க” இதை சொல்வதற்குள்ளேயே போதும் போதும் என்றானது.
“ஆமாம் அப்படியே சம்மதத்தை கேட்டு தான் எல்லாம் பண்றீங்க” இவள் வாய்க்குள்ளே முனுமுனுத்தது நன்றாகவே இவன் காதுகளை எட்டிவிட
“பார்ரா.. எல்லாத்தையும் தூக்கி குடுத்த மாதிரி ரொம்ப தாண்டி சலிச்சிக்குற!” என்றவன் “மேடம்.. இப்போதைக்கு லிப்ஸை மட்டும் தான் கொடுத்திருக்கீங்க. வேறெதுவுமே இன்னும் குடுக்கல” ஏக்கம் கலந்த சிரிப்பு தெரித்தது வார்த்தைளில்.
அவனது சிரிப்பிலும் பார்வையிலும் என்ன கண்டாளோ “ப்ளீஸ் கிரி, இனி இந்த பேச்சு வேண்டாம்” என இவள் நேரடியாக அவன் முகம் பார்க்க
“சரி.. பேசலை” என இன்னுமே நமட்டு சிரிப்பு சிரித்து வைக்க,
அவன் சிரிப்பின் பின்னால் இருக்கும் அர்த்தம் கமலிக்கு தெரியாமல் போனால் தானே அதிசயம். அர்த்தம் புரிந்து பதிலுக்கு அவள் பார்த்த பார்வையில், வாயில் விரல் வைத்து “ஓகே.. நிஜம்மா பேசலை” என உறுதி கொடுத்து நிற்க, அவனை முறைத்தபடி இவள் நிற்பதும், இவன் வாயில் விரல் வைத்து நின்றதும் அழகாய் பதிந்தது, ஏதோ இவனிடம் சொல்ல வந்த துரையின் போனில்.
ஆம் போட்டோ எடுத்துவிட்டான் துரை. ‘பாவி கல்யாணம் ஒரு பொண்ணோட, கடலை ஒரு பொண்ணோடவா.. இருடி.. இருக்கு உனக்கு”’ என கருவி கொண்டே சென்றான் துரை.
நிஜமாகவே கமலி முறைக்கிறாளோ என சந்தோகம் கொண்டு, அந்த பேச்சை அப்படியே விட்டுவிட்டு, டேக் டைவர்ஷன் போட்டு “வா, சித்தப்பாவை பார்க்க போகலாம்” என அழைத்து சென்றான் கிரி.
சூப்பர் மார்க்கெட்டின் இறுதியில் ஆபீஸ் ரூம் போல் கட்டபட்டிருந்த ஒரு அறைக்குள் அழைத்து சென்றான்.
அங்கே பெரியளவில் முழுமையான ஆபீஸ் போல ஒரு பத்து பேராவது அமரும் வகையில் இருந்தது அந்த அறை.
அங்கே ராமும் மோகனும் அமர்ந்திருந்தனர். “சித்தப்பா” என அழைத்தபடி இவன் உள்ளே நுழைய, மோகனோ, “வாடா, வாம்மா கமலி” என இருவரையும் வரவேற்று, தன் அருகில் இருந்த சேரில் அமர சொல்லி, “நேத்தே வருவன்னு எதிர்பார்த்தேன்..மா.. இவ்வளவு லேட்டாவா வருவ” என சகஜமாய் பேச துவங்கிவிட்டார்.
முன்பே மோகனுக்கு அவளின் மீது ஒரு மரியாதை உண்டு. கமலி என்பவள் ராஜி மற்றும் வசந்தாவைப்போல செலவாளி கிடையாது, சுயநலவாதியும் கிடையாது, பணத்தின் அருமை தெரிந்தவள், பெரியவர்களை மதிக்க தெரிந்தவள் என்பதில் நம்பிக்கை உண்டு அவருக்கு. அது போக, இவள் எடை குறைந்த செய்தி, ராம் மூலம் ஏற்கனவே அவருக்கு தெரியும் என்பதால், அதை பற்றி எதுவும் கேட்காமல், அவள், அவளது பெற்றோர், அண்ணன் குடும்பம், அண்ணியின் உடல்நிலை, குடும்ப தொழில் என பேச்சுகள் தொடர்ந்தது.
மோகனி்ன் கேள்விகளும், அதற்கு லேசாய் சிரித்தபடி பதில் சொல்லி கொண்டிருந்த கமலியையும் பார்த்த ராம், தன் அருகில் கிரியின் மேல் பார்வையை ஓட்டினான். அவனோ ஆர்டர் எடுக்க வேண்டிய டீலர்களின் பட்டியலை எடுத்து பார்வையிட்டு கொண்டிருந்தான். சோர்ந்து காணப்பட்ட அவன் முகத்திலிலேயே படிந்தது ராமின் பார்வை.
இவன் பார்ப்பதை அறிந்து, அவனருகில் சேரை இழுத்து போட்டு “என்னண்ணே?” என கிரி கேட்க
“காலையில் வந்தப்போ கூட பரவால்லாம இருந்த.. இரண்டு மணி்நேரம் கூட தொடர்ந்து வேலை பார்க்கலை, அதுக்குள்ள டயர்டா ஆகிட்ட.. வீட்டுக்கு வேணா போ, ரெஸ்ட் எடு, காய்ச்சலை சரி பண்ணிட்டு அப்புறமா வாடா!” என்றான் ராம்.