Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 26 1

அத்தியாயம் 26

வீட்டிற்கு வரும் வழியிலேயே, செந்திலிடமிருந்து இவனுக்கு போன் வந்தது, எடுத்து “சொல்லுங்க மாமா” என்றிட

“செந்தில்னே கூப்பிடுறா.. இது ஏதோ தள்ளி வச்ச மாதரி இருக்குடா” என்றவனுக்கு சிறிதும் பதில் கூறாமல் “என்னன்னு சொல்லுங்க” என இவன் விலக்கியே வைக்க

செந்திலிடம் பெரு மூச்சு கிளம்பியது “நாளைக்கு தான்டா தனி குடுத்தனம் போக போறோம், காலையில் ஆறு டூ ஏழு பால் காய்ச்சிறோம். உன்னை நேரில் பார்த்து சொல்லலாம்னு வீட்டுக்கு வந்தேன். நீ கடையிலேயே இருந்துட்ட போல.. அதான் போன் பண்ணினேன்”



Advertisement

“ஆறு டூ ஏழு தான வந்துடுறேன்” என இவனும் வைத்துவிட்டான். அங்கே செந்திலுக்கு தான் திக்கென இருந்தது. முன்னெல்லாம் போன் செய்கையில் அவ்வளவு நேரம் போனில் பேசுவான். இப்போதோ “என்ன? ஏது?” என அதோடு நிறுத்திக் கொள்கிறான். நல்ல நண்பனை இழந்து விட்டோமோ என கிடந்து அடித்து கொண்டது அவன் மனம்.

கிரி வீட்டிற்கு வந்து சேருகையில் மணி ஆறை தொட்டுவிட்டது. சோர்ந்து போய் தான் வந்தான். இவன் வீட்டினுள் வருவதற்கும், துரை வீட்டில் இருந்து வெளியே வருவதற்கும் சரியாய் இருந்தது.

வந்தவனை கேட்டினுள்ளே வைத்து பிடித்தான் கிரி. “ஏண்டா, உன்னை கடைக்கு வர சொன்னது நியாபகம் இருக்கா இல்லையா!” துரையை பார்த்ததுமே கோபமாய் கேட்டபடி வந்தான் கிரி.

Advertisement

“எப்பா, எகிறாத.. உன் வீட்டில் கட்டிலையும் மெத்தையும் மாத்த சொன்ன.. மாத்திட்டேன். சின்னதா சோபா போட சொன்ன, போட்டாச்சு. நீ சொன்ன வேலை முடிஞ்சதில்லை.. இனி நீ என்கிட்ட பேசுன மவனே!” என கடுப்பில் பேசி இருந்தான் துரை.

Advertisement

“கடைக்கு வர சொன்னேன். அதை செய்யாமல் என்னடா வெட்டி பேச்சு பேசிட்டு இருக்க” மிரட்டினான் கிரி.

“வந்தேனே..” என இவன் அசால்ட்டாய் கூற

“கிழிச்ச..” “எப்படா வந்த?” “நல்லதா ஒரு வழிய காட்டுனா கப்புன்னு பிடிச்சுக்க வேண்டாமா! நீயெல்லாம் பிசினஸ் பண்ணி என்னடா பிரயோஜனம்!”  இன்னும் இவனை திட்டிக்கொண்டிருந்தான் கிரி.

Advertisement

துரை காய்கறி கடை தான் வைத்திருக்கிறான். தங்களது கடைக்கும் அவனை விட்டே சப்ளை செய்ய சொல்லாம் என நினைத்து தான் துரையை வர சொன்னான். இவன் வராமல் போனதுடன், இப்போது வாய் சவடால் வேறு பேசிக்கொண்டிருக்க, கடுப்பாகி விட்டான் கிரி.

“நீ திட்டுறத முதல்ல நிறுத்துடா.. நான் கடைக்கு வந்தேன்னு சொல்றேன்ல..நம்ப மாட்டியா?” இவனும் சிலிர்த்து நிற்க

“எப்படா வந்த? நான் உன்னை பார்க்கவே இல்லை. டெய்லி பிரஷ் வெஜிடபிள் சப்ளை பண்ற விசயமா சித்தப்பாகிட்ட வந்து பேச சொன்னேன்ல ஏன் வரலை. ஏன் என்னையோ சித்தப்பாவையோ பார்க்கலை” என்றான் இன்னும் கோபமாக!

“வந்தேன்டா.. உன் ரொமன்ஸ்ல பூஜை வேலை கரடியா நான் எதுக்குன்னு கிளம்பி போயிட்டேன்” என இவன் கூறியதும்

“நானா, ரொமான்ஸ்ஸா? எப்போ..” என தனக்கு தானே பேசியபடி,  புருவங்களை தேய்த்தபடி யோசித்திருக்க

“இதோ இப்போ..” என துரையின் போனை எடுத்து, அதில் கேலரியில் எதையோ தேடி எடுத்து அவன் முன் நீட்டினான். அதில் வாயில் விரல் வைத்தபடி கிரியும், கோபமாய் முறைத்து கொண்டிருந்த கமலியும் அழகான புகைப்படமாக, தத்ரூபமாக பதிந்து போயிருக்க, அப்படியே மாறியது கிரியின் முகம்.

நேரில் ஆட்டிபடைப்பது போதாது என்று போட்டோவில் கூட ஆட்டிபடைத்து கொண்டிருந்தவளை தானாகவே எழுந்த புன்னகையோடு ஆழ்ந்து ரசித்து பார்த்திருந்தான். கோபக்காரி.. எவ்வளவு கோபம் இந்த மூக்கில்! இருடி அந்த மூக்கை என்ன பண்றேனு பாரு! இவன் ஒரு உலகத்திற்குள் சென்றுவிட

‘நீ அங்கலாம் போக வேணாம் ராசா, இங்கேயே இரு’ என்பதை போல “நான் அங்கே வந்தேன்னு சொன்னால் நம்ப மாட்ட.. அதான் எவிடன்ஸ் எடுத்து வச்சுட்டேன்.. எப்படி?” என துரை காலரை ஏற்றி விட்டு கொண்டு, அந்த உலகத்தை விட்டு அவனை தன் பேச்சிற்கு இழுத்து வைத்தான்.

இவன் என்ன புதுசா ஏதோ சொல்றான், என போனை விட்டு, துரையில் கவனமானான் கிரி.

“நீ வர வர சரியில்லை மச்சா. நேத்து ஊருக்கு வந்ததை என்கிட்ட நீ சொல்லவே இல்லை. இன்னைக்கு சொல்ற.. அதுவும் பெட்டை மாத்து கட்டிலை மாத்துனு ஆர்டர் வேற போடுற. திடீர்னு கடைக்கு காய்கறி சப்ளை பண்ணுனு சொல்ற! ஆனால் வந்தேன்னா, வரலையான்னு ஒரு போன் பண்ணி கூட கேட்க மாட்ற! கடை திறக்கவாவது கூப்பிடுவியா இல்லையா” நக்கலாய் பேசிய துரையை முறைத்து தள்ளினான் கிரி.

“அப்புறம் மச்சா.. புதுசா பொம்பளை சவகாசம் வேற.. வச்சிருக்க போல. கட்டின பொண்டாட்டி உயிரோட இருக்கும் போது இன்னொரு பொண்ணு சவகாசம் உனக்கு சரியில்லை பார்த்துக்க” என துரை பேச பேச, புருவம் நெறித்து “என்னடா லூசு மாதிரி உளறிட்டு இருக்க” என கிரி கடுப்பாக

“அப்போ இந்த போட்டோவில் இருக்குற பொண்ணு யாரு? அவகிட்ட எதுக்கு பம்மிட்டு நிக்கிற! உன் பொண்டாட்டி இருக்க வேண்டிய இடத்தில் இந்த பொண்ணு யாரு?” துரை கோபத்தில் அடுக்கடுக்காய் கேள்வி கேட்டிட, கிரியோ குழப்பமானான் இவன் பேச்சில். இருக்கும் சோர்வில் மண்டை வேறு காய்ந்தது இவனுக்கு.

“எங்கம்மா அப்பையே சொல்லுச்சு, இந்த கல்யாணம் அனவிங்க கூட சவகாசம் வச்சுக்காதடா, அப்பப்போ கட்டின பொண்டாட்டி இருக்குறதையே மறந்துடுவானுங்க, நீயெல்லாம் எம்மாத்திரம்னு’ அதே மாதிரி  கட்டினவளை மறந்துட்ட, பிரண்டையும் மறந்துட்ட. ஒர்க் ஷாப் கூட வரலை நீ.. அங்கேயும் நமக்கு பிரண்ட்ஸ் இருக்காங்க நியாபகம் இருக்கா” என துரை பேசிக்கொண்டே செல்ல..

அப்போது தான் பல்ப் எரிந்தது கிரிக்கு, கமலி வெயிட் லாஸ் ஆனது தெரியாமல் அவள் வேறு இவள் வேறு என  துரை நினைத்து கொண்டிருக்கிறான் என

“டேய் புரியாமல் பேசாதடா..” என தடுத்தவனிடம், “எப்பா உன் சவாகாசமே வேணாம். கட்டில், மெத்தையை மாத்த சொன்ன மாத்திட்டேன். அவசர தேவைக்கு உன் வண்டியை எடுத்துட்டு போனேன். எடுத்துட்டு போன மாதிரி பத்திரமா கொண்டு  வந்து விட்டுட்டேன். இனி உன் சவகாசமே வேண்டாம்ப்பா.. அம்மாகிட்ட உன் வண்டி சாவியை கொடுத்திருக்கேன்.. வாங்கிக்க” என கிரி் சொல்ல வருவதை கேட்காமலேயே துரை கேட்டை நோக்கி செல்ல

‘அய்யோ அடுத்து இவனோட மல்லுகட்டனுமா..’ என நினைத்து கொண்டிருக்கையிலேயே.. “டேய் போறது தான் போற.. அந்த போட்டோவை எனக்கு அனுப்பிவிட்டு போடா” என கிரி கத்த

அவன் கத்தலில் ஸ்லோ மோஷனில் திரும்பிய துரை “அனுப்புறேன்டா.. உனக்கில்லை.. உன் மச்சானுக்கு.. அனுப்புறேன். வந்து வாயிலையே அவன்  குடுப்பான் வாங்கிக்க” என இவனும் பதிலுக்கு கத்தி விட்டு சென்றுவிட்டான்.

கிரிக்கோ அவன் பேச்சில் ஒரு பக்கம் சிரிப்பு, ஒருபக்கம் கடுப்பு என ஒருங்கே எழுந்தது. அவன் சென்றதும் ‘இவனை எப்படி சமாளிக்கிறது?’ என நினைத்தபடி அப்படியே வண்டியின் அருகில் சென்று அதை தடவி கொடுத்தான் கிரி.

இவனது யுனிகார்ன் பைக் தான். அவசரத்திற்கு அவ்வப்போது எடுத்து சென்று மீண்டும் கொண்டு வந்து விட்டுவிடுவான் துரை. இப்போது இரண்டு நாட்களுக்கு முன் எடுத்து சென்றவன் இன்றைக்கு கொண்டு வந்து கொடுத்திருக்கிறான். பின் இவனும் வீட்டினுள் வந்துவிட்டான்.

காலையில் வீட்டை விட்டு கிளம்பியவன் மாலை ஆறு மணிக்கு தான் வருகிறான். அவனை பார்த்ததும் வசந்தா, “மதியம் சாப்பிட்டியா இல்லையாடா? டீ குடிக்கியா” என கேட்க, “குடும்மா” என சொல்லிவிட்டு சோபாவில் அமர்ந்தான் கிரி.

“டேய், துரை வந்தான். கட்டில், மெத்தை சோபானு கொண்டுவந்தான். பைக் சாவியையும் கொடுத்துட்டு போயிட்டான்டா” என்றிட “ம்.. நான் தான் மாத்த சொன்னேன் மா” என இவன் கூற

“இதே மாதிரி கட்டில், மெத்தை, சோபா அப்புறம் வீட்டுக்கு தேவையானதை ராஜிக்கும் கொஞ்சம் வாங்கி கொடேன்டா” என வசந்தா கூற

இவனோ புருவம் சுருக்கி பார்க்க, “என்னடா மறந்துட்டியா.. ராஜி நாளைக்கு தாண்டா தனி குடுத்தனம் போக போறா!” என்ற நொடி, செந்தில் போனில் பேசியது நியாபகம் வந்தது.

“தனியா வீடு பார்த்து வச்சா நாம தான் எல்லாத்தையும் வாங்கி குடுக்கனும், வெறும் கையா எப்படிடா அனுப்ப!” மெல்ல மெல்ல தூபம் போட்டார் வசந்தா.

வசந்தா பேச்சை உள்வாங்கியவன், ராஜியிடம் நேரடியாக “என்னென்ன வேணும்க்கா” நெற்றியை தேய்த்தபடி இவன் கேட்க

“அம்மா சொன்னங்கல்ல.. அது போதும் கிரி. அதுவும் பணம் இருந்தா வாங்கி தா.. இல்லைன்னா பார்த்துக்கலாம்” என்றிட

“வீடு சின்னதா, பெரிசா” இவன் கேட்க

“நம்ப வீடு மாதிரி, இதே அளவு தான் கிரி” என்றிட.. “சரி வாங்கிடலாம்.. கடைக்கு வர்றியா.. பிடிச்சதை எடுத்துப்ப” இவன் பேச

“நீயே பார்த்து  செய் கிரி. உன் செலக்‌ஷனே நல்லா தான் இருக்கும்” என ராஜி அதோடு முடித்துவிட்டு சமையலறைக்குள் போய் விட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!