“கர்ணா இடத்தில் இருந்து பேசுறேன்னு சொன்னீங்க. ஆனால் கிரிக்கு அண்ணனா தான் பேசிருக்கீங்க. என்னோட அண்ணனா நீங்க பேசவே இல்லை” கமலி பேசியதில் ராம் முகத்தை எங்கே வைக்க என தெரியாமல் திணற, அவளோ, மோகனின் பக்கமாய் திரும்பி, “நான் போயிட்டு வரேன் மாமா” என சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல, “போடா வெண்ண” என ராமின் தலையில் நோட்டினால் தட்டிவிட்டு சென்றான் கிரி.
எவ்வளவு வேகமாக வந்தாலும் பார்க்கிங்கில் தான் அவளை பிடிக்க முடிந்தது. “சாவி குடுங்க, நான் போகனும்” என இவள் நிற்க
“அண்ணன் ஏதோ பாசத்துல பேசிட்டான் விடேன்” என கிரி கூற
“என் அண்ணனுக்கும் என் மேல ரொம்ப பாசம் உண்டு.. பேச சொல்லவா!” என சிலிர்த்து நிற்க
Advertisement
எதுவுமே பேசாமல் அவள் வண்டி சாவியை எடுத்து இவளிடம் நீட்டினான் கிரி
“போயிடுவல்ல.. இல்லை கூட வரவா!? என இவன் கேட்க
“வந்த எனக்கு போக தெரியும்” என பட்டென பேசிவிட்டு இவள் நகர, அவள் முழங்கையை இறுக பற்றி பிடித்து நிறுத்தினான்.
Advertisement
எதுவுமே பேசவும் இல்லை, அவளிடம் கேட்கவும் இல்லை. ஓரிரு நிமிடங்கள் அவளை பார்த்த வண்ணமே இருந்தான்.
Advertisement
பின் பிடித்த பிடியை விட்டுவிட்டு “வீட்டுக்கு போயிட்டு கால் பண்ணு.. கால் பண்ண பிடிக்கலைன்னா, மேசேஜாவது போடு” என்றிட.
எதுவுமே சொல்லாமல் இவளும் வண்டியை கிளப்பி கொண்டு சென்றுவிட்டாள் கமலி.
அவள் தன் கண்களில் இருந்து மறையும் வரை பார்த்திருந்தவன் பெருமூச்செறிந்து விட்டு மீண்டும் அலுவல் அறைக்கு விரைந்தான்.
Advertisement
“என்னடா எதுவும் பிரச்சனையா? கமலி கோவிச்சிக்கிட்டாளா..” இவனை கண்டதும் மோகன் கேட்க, அவருக்கு பதில் சொல்லாமல் ராமை முறைத்து வைத்தான் கிரி.
“நீ முறைச்சா பயந்திடுவேனா! நான் பேச தான் செய்வேன். உன்னை கவனிக்க கூட மாட்றா! நான் கேட்க தான் செய்வேன்” என்றான் ராம்.
“அவ என்னை கவனிக்கனும்னு, நீ பேசற மாதிரி தெரியலை. இப்போ நான் அவ கையில அடி வாங்கனும் அதை தானே நீ எதிர்பார்க்குற!” என கிரி விசமமாய் கேட்க
“இல்லை இரண்டு மிதியை கூட எதிர்ப்பார்கிறேன்” என நமட்டு சிரிப்பு சிரித்தான் ராம்.
“இப்போ தான் பிரச்சனை சரியாகிருக்கு. அது பொறுக்கல உனக்கு” டேபிளில் கிடந்த நோட்டை எடுத்து ராமின் முதுகிலேயே இரண்டு வைத்தான் கிரி.
அதை தூசி போல தட்டிவிட்டு கொண்டு, “இரண்டு பேரோட மூஞ்சை பார்த்தா பிரச்சனை முடிஞ்ச மூஞ்சு மாதிரியா இருக்கு. நீ உன் வீட்டில் இருக்க, அவள் அவ வீட்டில் இருக்கா! இது முடிஞ்சு போன பிரச்சனையா!” ராம் ஏக கடுப்பில் பேச, கிரியோ அமைதியானான்.
“ ‘ஏன்டா உன் பொண்டாட்டிய வீட்டுக்கு கூட்டிட்டு வரலைனு’ உன் அம்மா, அக்கா இரண்டு பேருமே கேட்க போறதும் இல்லை, கவலை பட போறதும் இல்லை. ஏன்னா இப்போதைக்கு கமலி அவங்களுக்கு வேண்டாத ஒரு பொருள். அவளால ஒரு லாபமும் இல்லை அவங்களுக்கு.
உன் வாழ்க்கையை பத்தி கவலை இல்லை. உன் சந்தோஷத்தை பத்தி கவலை இல்லை. ஆனால் எங்களுக்கு கவலை இருக்கு கிரி” என நிறுத்திவிட்டு
“அப்பாகிட்ட, அம்மாகிட்ட சொல்லி கமலிக்கிட்ட பேசுங்கனு சொன்னால், அவங்க தனிப்பட்ட பிரச்சனையில நீ் தலையிடாதனு என்கிட்டயே சொல்றாங்க.!
உன்னை இப்படி தனியா பார்க்க முடியலை கிரி. உன் கூட பொறந்தவனா இருந்தா பார்த்திட்டு இருந்திருக்க மாட்டேன். வேற வயித்துல பொறந்துட்டேன்னு ஒதுங்கி நிக்க சொல்றியா!” கிரியின் தனிமை ராமை இந்தளவிற்கு பேச வைத்தது.
“இப்போ நீ பேசுறதால என்னாக போகுது? கமலியை கட்டாயபடுத்தி வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்றியா! அப்படி வந்தா நான் முதலில் சந்தோஷமா இருக்க மாட்டேண்ணா!” என்றான் கிரி.
“அது தான் தெரியுமே! அதனால தான் நானே பேசிட்டேன். நீயும் கூப்ட மாட்ட, அவளும் வர மாட்டா! ‘நீயே கூப்பிடலை, நான் ஏன் வரனும்னு கமலி அங்கேயே இருந்திட்டா?’ என்னடா பண்ணுவ? நாலஞ்சு வருசம் லவ் பண்ணி கல்யாணம் பண்ணவங்களே அன்டர்ஸ்டாண்டிங் இல்லாமல் டைவர்ஸ்ல போய் நிக்கிறாங்க. நீ வாழ்க்கையில் எந்தளவுக்கு கஷ்டபட்டேன்னு அவளுக்கு தெரியலை! அவளை பத்தி எதுவும் உனக்கு தெரியலை. இப்போ கூட கமலி வெயிட் குறைச்ச விசயம் கூட உனக்கு தெரியலை.. உங்க வாழ்க்கை எங்க எப்படி போய் நிக்கும்னு கவலையா இருக்கு கிரி. சண்டை வந்தாலும் பரவாயில்லை உனக்கு அவ தான், அவளுக்கு நீ தான்னு இரண்டு பேருக்கும் புரிஞ்சா போதும் கிரி. எனக்கு அதான் வேணும்” கிரியின் வாழ்வை பற்றிய கவலை ராமை இந்தளவிற்கு பேச வைத்தது.
ராமின் பேச்சுகள் அசரீரி போல அவன் காதுகளில் கேட்டு கொண்டே இருந்தாலும், கிரி அதற்கு எந்த விதமான எதிர்வினையும் புரியாமல் தான் இருந்தான்.
மோகனும் இத்தனை அமைதியாய் இருந்து பார்த்ததில்லை, ராமும் இத்தனை பேசி கேட்டதில்லை கிரி. ஆக தான் இல்லாத நேரத்தில் தன்னை பற்றி, தன் வாழ்க்கை பற்றி நிறைய விவாதங்கள் ஓடியிருக்கிறது. சித்தி, சித்தப்பா தன்னிடம் பேச தயங்கி இருக்கலாம். தயக்கமே இல்லாத ராம் கொட்டி தீர்த்துவிட்டான். எல்லாவற்றையும் ஒரு புள்ளியில் கொண்டு வந்து சேர்ப்பித்தான் கிரி.
“கப்பிள்ஸ் பிராப்ளம்குள்ள வரது தப்பு தான் கிரி. ஆனால் உங்க விசயத்தை பார்த்துட்டு அப்படியே இருக்க முடியலை. பேசாமல் சீதா கிட்ட சொல்லி, கமலிட்ட பேச சொல்லவா!” என ராம்
“எப்பா..நீ பேசன வரை போதும்! இதுக்கே என்னை வச்சு செய்வா.. இதில் சீதா வேறையா!” வெட்டொன்று, துண்டு ரெண்டு என பேசும் சீதாவின் பேச்சு நியாபக அடுக்குகளில் வந்து போனது கிரிக்கு.
“ஓ.. தலைவருக்கு, நான் இப்ப கமலியை பேசினது தான் கஷ்டமா போச்சு போல” என கிரியின் மனதை இவன் படிக்க
“ஆமாம்.. நான் இருக்கும் போது நீ பேசினது தப்பு தான் ண்ணா!” இவன் குறை கூற
“நான் பக்கம் பக்கமா, பேசுனதுக்கு, இரண்டே கேள்வியில் மூக்குடைச்சுட்டு போயிட்டா.. கமலி, கவலை பட வேண்டியது நான்டா..” என்றான் ராம்.
அவன் சொன்ன தோனியில் கிரி வாய் விட்டு சிரித்திட, மோகனோ “நான் தான் புருஷன், பொண்டாட்டிக்குள்ள தலையிடாதன்னு சொன்னேன்ல” என மோகனும் சிரித்துவிட, ராமோ.. “இரண்டு பேரும் சிரிச்சீங்க.. அவ்வளவு தான்” கோபம் கொண்டிட, அந்நேரம் கிரியையும், மோகனையும் காக்க அங்கே வந்து சேர்ந்தனர் டெக்னிக்கல் லேபரர்ஸ்.
சிசிடிவி கேமரா, ஸ்கேனிங் மெஷின், கம்ப்யூட்டர், ஆன்லைன் பில்லிங் சிஸ்டம் என இவற்றை இன்ஸ்டால் செய்வதற்கு டெக்னிகல் லேபர்ஸ் வந்திறங்கினர்.
அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டு அவர்களோடு இவர்களும் இணைந்து கொண்டனர். இடையில் கமலியின் நியாபகம் இவனை துளைத்திட, போனை எடுத்துக்கொண்டு ஓரமாக சென்றுவிட்டான்.
கமலி இன்னும் சிம் வாங்கவில்லை என கர்ணாவிற்கு தான் அழைத்தான். எடுத்தவனிடம் கமலியிடம் கொடுக்க சொல்ல, வாங்கி பேசினாள் கமலி. “வீட்டுக்கு போனதும் எனக்கு கால் பண்ண சொன்னேன் கமலி” எடுத்ததுமே அதிகாரம் தான் இவனிடம்.
“ப்ச்.. மறந்துட்டேன்” என நெற்றியில் தட்டிக்கொண்டு “பத்திரமா வந்துட்டேன்” என்றிட, இவனோ அதன் பின் இரண்டொரு நிமிடங்கள் அமைதி காத்தான், பின் இவளது கோபமும் நியாயம் தானே என நினைத்து “வைக்கிறேன்” என்று வைத்தும் விட்டான்.
அதன் பின் வேலை அவர்களை உள்ளிழுத்து கொண்டது. இடையில் சுபா வீட்டு சாப்பாட்டோடு வந்து மூவருக்கும் பரிமாறி அவர்கள் வயிறார உண்ட பின்பே அவர் கிளம்பினார்.
இதற்கிடையில் வீட்டு அலங்கார பொருட்களும், வீட்டிற்கு தேவையான எலக்ட்ரிக், பிளாஸ்டிக் பொருட்களும் இரண்டு லாரிகளில் வந்து இறங்கியது.
வேலை முடிய மாலை ஐந்தாகிப்போனது. நன்றாக இருந்த ராம், மோகனே களைத்து போயினர் என்றால், காய்ச்சலில் வந்து வேலை பார்த்தவனின் நிலை, சொல்லவே வேண்டாம் அவன் முகமே கூறிவிட்டது அவன் களைப்பை.
அந்நேரம் போன் வந்தது கிரிக்கு, எடுத்து பேசிவிட்டு மோகனிடம் விரைந்தான். “கிராசரி ஆர்டர் எல்லாமே ரெடியாம், பார்த்து பைனல் பண்ண மதுரைக்கு வர சொல்றங்க சித்தப்பா, நான் போயிட்டு வரேன். எப்படி ஸ்டாக் எல்லாத்தையும் எடுத்துட்டு முழுசா பே பண்ணிடவா, இல்லை டிஸ்கவுண்ட், கமிஷன் எதுவும் கேட்கனுமா சித்தப்பா” என இவன் கேட்டபடி நின்றான்.
அவனது சோர்ந்த முகத்தை பார்த்த ராம் “வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்குற வேலைய பாரு கிரி. இன்னைக்கு நான் மதுரைக்கு போய் பார்த்துகிறேன்” என்றான் ராம்.
“ஆமாண்டா.. நீ போய் ரெஸ்ட் எடு.. மதுரைக்கு அவனே போகட்டும், கார் இருக்கல்ல, டிரைவர் போட்டுக்கலாம். இன்னும் ஒரு வாரத்தில் கடை திறக்கனும். ஏதாவது இழுத்து வச்சிடாத” என மோகனும் அவனை கண்டித்து அனுப்பி வைத்திட, வீட்டிற்கு வந்துவிட்டான் கிரி.