Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 1.2

“செல்வி” என்றபடி உள்ளே வந்தார் சாம்பவி.

மகள் தயாராகாமல் இருப்பதை கண்டு, “ரெடியாகலயா? நேரமாச்சு செல்வி, சீக்கிரம் போய் குளிச்சு வா” என்றார் அவசரமாக.

“நான் வரலைம்மா, எதாவது சொல்லி சமாளிச்சுடு ப்ளீஸ்”

பெரிதாய் அதிர்ந்தவர், “என்னடீ சொல்ற? ஏன் வரல? உடம்பேது சரியில்லையா? அப்படியேன்னாலும் கிளம்பிடுவியே, என்னால சமாளிக்கவே முடியாது செல்வி, உன்னைத்தான் ரொம்ப எதிர்பார்ப்பாங்க, போய்ட்டு வந்துட்டு ரெஸ்ட் எடுத்துக்கலாம்” என்றார் கெஞ்சலாக.



Advertisement

“ம்மா ப்ளீஸ்…” எனும்போதே அவளின் கைப்பேசி அழைத்தது.

அழைப்பை ஏற்க மனமில்லை, ஆனால் ஏற்காமலும் இருக்க முடியாதே என நொந்தபடி அழைப்பை ஏற்றவள், “ஹலோ” என்றாள் சன்னக்குரலில்.

“ஹலோ வா? என் நம்பரை டெலீட் பண்ணிட்டியா?” என உரிமையாக அதட்டினார் அமிர்தவள்ளி.

Advertisement

செந்தமிழ்செல்வி அமைதியாக இருக்க, “என்ன ஆச்சு உனக்கு? இரண்டு மூணு மாசமா உன் போக்கே சரியில்ல. ஏன் இன்னும் வீட்டுக்கு வரல? எவ்வளோ வேலையிருக்கு? சம்மந்தி வீட்டுலயிருந்து கிளம்பிட்டாங்களாம். சீக்கிரம் வா” என கட்டளையிட்டு இணைப்பை துண்டித்தார்.

Advertisement

புருஷோத்தமன் அமிர்தவள்ளி தம்பதிக்கு மூன்று மகன்கள். முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள். இரண்டும் ஆண் குழந்தைகள் ஆதலால் பெண் குழந்தை வேண்டும் என்ற ஆசை வர, பெண் மகவின் வரவிற்காக காத்திருந்தார் அமிர்தவள்ளி.

முதல் குழந்தைகளுக்குப் பின்னே ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகுதான் கர்ப்பமானார். ஆனால் பிறந்ததென்னவோ மீண்டும் ஆண்குழந்தைதான்.

விரும்பியது கிடைக்கவில்லை என்றுபோதும், குழந்தையின் தெய்வீக அழகு மனதை தேற்றியது என்றால் மிகையல்ல.

Advertisement

பெரிய மகன்களில் ஒருவனான தேவேந்திரனுக்கு சரியாக இருபத்தி ஏழு வயதில் திருமணம் முடித்துவிட்டார்கள். மற்றொருவனான தேவராஜ் முப்பத்தி மூன்று வயதிற்கு பின்னேதான் திருமணத்திற்கு சம்மதித்தான். சென்ற வருடம்தான் அவனுக்கும் திருமணம் முடிந்தது.

இரட்டையர்களில் ஒருவனான தேவேந்திரனின் திருமண வாழ்வில் உண்டான நிறைவைபோல் தேவராஜ் கொடுக்கவில்லை. பெற்றவர்கள் பலமுறை மகனிடம் இதைப்பற்றி கேட்டுவிட்டனர்.

என் சந்தோசத்தை படம் போட்டு காட்டனுமா? என்று காட்டமாக கத்துவான் தேவராஜ்.

மருமகளிடம் கேட்டால் எதிர்பார்த்த பதில் கிடைக்கும்தான். ஆனாலும் வருத்தமே மிஞ்சும். மருமகள் தன்னை மகிழ்விக்க சொல்கிறாள் என்பது அப்பட்டமாய் தெரிந்தாலும், நாகரீகம் கருதி அதற்குமேல் கேட்கமாட்டார் அமிர்தவள்ளி.

தேவராஜ் நவீனாவிற்கு திருமணம் முடிந்து இரண்டு வருடம் முடியப்போகிறது. ஆனாலும் அவர்களின் இணக்கத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. திருமணம் செய்ய தாமதம் செய்தால் தேவராஜ் போல் சின்னவனுக்கும் இல்லற வாழ்வில் ஈடுபாடில்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் வந்தது அன்னைக்கு.

தேவராஜ் திருமணம் முடிந்த மூன்றாவது மாதத்திலிருந்து பெண் பார்க்கிறார்கள் சின்னவனிற்கு. ஒரு வருடம் கழித்து, இவர்கள் அந்தஸ்த்திற்கு ஏற்றார் போல் பெண் அமையவே மகனிடம் பேசினர்.

புகைப்படத்தில் பெண் அழகாக இருப்பதால் பெண் பார்க்கும் வைபவத்திற்கு சம்மதித்தான் பொற்செல்வன். ஆனால் பெண் வீட்டார் இங்கு வரவேண்டும் என்றான்.

அது நம் வழக்கத்திலில்லை என்று பெற்றோர் சொன்னபோதும், நானா அங்க போய் வாழப்போறேன்? பொண்ணுதானே இங்கு வந்து வாழப்போகிறாள்? அப்போ அவங்கதான் முதல்ல நம்ம வீட்டை பார்க்கனும் என்று நியாயம் பேசினான் பொற்செல்வன்.

முறையை மாற்றப் பிடிக்காமல் நாம் நினைத்தாலும் அவர்கள் இதற்கு சம்மதிக்கமாட்டார்கள்’ என்றார் அமிர்தவள்ளி.

“நான் வரமாட்டேன், அவர்கள்தான் இங்கு வரவேண்டும், விருப்பமில்லை என்றால் வேறு பெண் பாருங்கள் என்றுவிட்டான் முடிவாக.

வேறு வழியில்லாமல் மகன் சொன்னதை அமிர்தவள்ளி பெண் வீட்டாரிடம் சொல்ல, பெண்ணை விடுத்து நாங்கள் வருகிறோம் என்றனர் பெண்ணை பெற்றவர்கள்.

அவர்களா இங்கு வந்து வாழப்போகிறார்கள்? கட்டாயம் பெண்ணும் இங்கு வரவேண்டும் என்றான் பிடிவாதமாக.

நேரில் பார்த்த பின்னே உனக்கோ அல்லது பெண்ணுக்கோ ஒருவருக்கொருவர் பிடிக்காமல் போனால் இப்படி நிகழ்வு இருவர் மனதிலும் வலியை உண்டாக்கும். ஆகவே பிடித்தம் வந்த பின்னே பெண்ணை அவர் வீட்டில் சென்று பார்க்கலாம் என்றனர்.

“நாம அங்க போனா மட்டும் வலிக்காதா?” என முறைக்க, முதலில் அவர்கள் வரட்டும். பிறகு பெண்ணை பார்ப்பது பற்றி யோசிக்கலாம் என்று மன்றாடி சம்மதிக்க வைத்தார் அமிர்தவள்ளி.

இப்படியாக இன்று பெண் வீட்டார் வரவிருக்கிறார்கள் பொற்செல்வனைப் பார்க்க.

மணக்கவிருப்பவள் வரவில்லை என்பதில் பொற்செல்வனுக்கு வருத்தம் என்பதை விட கடுப்பாகவே இருந்தது. ஆனாலும் இனி பெற்றோரிடம் பேசுவது வீண் என்று, பெண் வீட்டினரிடம் நேரடியாக பேசிவிடலாம் என நினைத்துக்கொண்டான்.

பெண் வீட்டார் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவார்கள் என்ற செய்தி வர, “எங்க இவளை இன்னும் காணோம்?” என்ற கோபத்தோடு செந்தமிழ்செல்விக்கு அழைத்தார் அமிர்தவள்ளி.

“கட்டிக்கப்போறவளை வீட்டுக்கு வரவழைக்க முடியல, இவளை மூச்சு விடாம கூப்பிட்டிருக்காங்க” என முணகியவன், “ம்மா, அப்பா கூப்பிடறார் பாரு” என்றான்.

தற்போதுதான் கணவன் நியாபகம் வர, சரியாக உடுத்தியிருக்கிறாரா என்று ஆராய விரைந்தார் அறைக்கு.

“என்னங்க… என்ன டிரஸ் இது? எடுத்து வச்சிட்டுத்தான போனேன்? அதைகூட பார்த்து மாத்திக்கமாட்டிங்களா?” என அங்கலாய்த்து, தான் எடுத்து வைத்திருந்த உடையை எடுத்து கொடுத்து, “போய் சீக்கிரம் மாத்திட்டுவாங்க” என்று விரட்டினார்.

“நான் டிரஸ் சேன்ஜ் பண்றது இருக்கட்டும், முதல்ல தேவராஜிக்கு என்ன பிரச்சனைனு கேளு, அவன் முகமே சரியில்ல” என்றார்.

“எனைக்குத்தான் அவன் முகம் சரியா இருந்திருக்கு? நானும் எப்படி எப்படியோ கேட்டுட்டேன். புருசன் பொண்டாட்டி இரண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் குறையே சொல்றதில்ல. எதாவது சொன்னாத்தான மேற்கொண்டு என்ன செய்யனு யோசிக்க முடியும்? என்னவோ போங்க” என சலித்து,

“அவன் விசயத்தை அப்புறம் பார்க்கலாம். இந்த வரனை எப்படியாவது பொற்செல்வனுக்கு முடிச்சாகனும். சீக்கிரம் டிரஸ் மாத்திட்டு வாங்க” என்று கட்டளையிட்டு வெளியேறினார்.

கால்மணி நேரம் கழித்து செந்தமிழ்செல்வி வரவே, “இவ்வளோ நேரமா உனக்கு? வா வா… எல்லாம் சரியா இருக்கா பாரு” என்றார் வீட்டை சுற்றி கண்களை சுழற்றயபடி.

“எல்லாம் சரியா இருக்கு ஆன்ட்டி”

“சரியா இருக்கா? நீ சொன்னா சரிதான்” என்று மகிழ்ந்து, “வா கிச்சன் போலாம்” என்று அழைத்துப்போக, தேவராஜ் வெளியில் செல்வது பார்த்து, “பலகாரம்லாம் சரியா இருக்கானு பாரு, இதோ வந்துடறேன்” என்று மகனிடம் விரைந்தார் அமிர்தவள்ளி.

சற்றே மூச்சு வாங்கியபடி தன் முன்னே வந்து நிற்கும் அன்னையைப் பார்த்தவன், “ம்ப்ச்… என்னம்மா?” என்றான் சலிப்பாக.

“எங்கடா கிளம்பற? சின்னவனை இன்னைக்கு பார்க்க வராங்கனு நேத்தே சொன்னேன்தான? இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க, உள்ள வா” என்று மகனின் கையைப் பிடித்தார்.

“செல்வாவைதான பார்க்க வராங்க? நானெதுக்கு? விடும்மா, எனக்கு வேற வேலையிருக்கு” என்று கையை உதறிவிட்டு வெளியேறினான் தேவராஜ்.

அமிர்தவள்ளி முகம் வாடிவிட, “தெரிஞ்சதுதானே? எதாவது சொல்லி சமாளிப்போம், வாங்கத்த” என்று அழைத்துப்போனாள் ராஜலஷ்மி.

அமிர்தவள்ளியின் மூத்த மருமகள் ராஜலஷ்மி. தேவேந்திரனின் மனைவி.

தேவராஜ் தேவேந்திரன் இருவரும் இரட்டையர்கள் என்றாலும் தேவேந்திரன் ராஜலஷ்மிக்கு திருமணம் முடிந்து நான்கு வருடம் கழிந்த பின்னேதான் தேவராஜ் திருமணம் முடித்துக்கொண்டான். அதோடு ராஜலஷ்மியை விட நவீனா மூன்று வயது இளையவள் ஆதலால் ராஜலஷ்மியை மூத்த மருமகள் என்று அழைத்து பழகிவிட்டார் அமிர்தவள்ளி.

“என்னை விடு ராஜி, நவீனாக்கு கஷ்டமா இருக்காதா? இவன் ஏன் இப்படி இருக்கான்?” என்று வருந்தி, “நவீனா ரெடியாட்டாளா பாரு, செல்வி கிச்சன்ல இருக்கா. நான் அங்க பார்க்கறேன்” என்று கிச்சன் சென்றார்.

“எல்லாம் சரியா இருக்குங்க ஆன்ட்டி” என்றாள்.

“சரியா இருக்கா?” என்று நிம்மதியாகி, “தேவேந்திரன் வெளில போய்ட்டான். ராஜீ நவீனாவை பார்க்க போயிருக்கா, நீ போய் ப்ரித்திகாவை பாரு” என்று பேத்தியை கவனிக்க அனுப்பி வைத்து சின்ன மகனிடம் வந்தார்.

“எதுக்கும்மா இவ்வளோ ஆர்பாட்டம்? வந்து உக்காருங்க” என்று தானும் அமர்ந்து அன்னையையும் அருகே அமர வைத்தான்.

“தேவா கிளம்பிட்டான்டா” என வருந்த, தனக்கும் வருத்தம்தான் என்றாலும் “அண்ணனையா பார்க்க வராங்க?” என்றான் கிண்டல்போல்.

“ம்ப்ச் போடா” என சலித்தவர், “பொண்ணு வரலைன்ற கோபத்துல எதாவது ஏடாகுடமா பேசி வச்சிடாதடா. நல்ல குடும்பம், போட்டோவில பொண்ணு தேவதை மாதிரி இருக்கா. எப்படியாவது பேசி முடிச்சாகனும்” என்று சொல்லி கணவனிடம் சென்றார்.

இவன் செந்தமிழ்செல்வியை பார்க்க, அண்ணன் மகளிடம் எதோ பேசியபடி அவளை தயார் செய்துகொண்டிருந்தாள். சிறுமியிடம் தானும் சிறுமிபோல் பேசும் செந்தமிழ்செல்வியின் பாவனையை ரசித்துப்பார்த்தான்.

செல்வியின் உள்ளுணர்வு அதை அறிந்துவிட, வெகு இயல்பாக அறைக்கதவை சற்றே சாற்றினாள். ‘அவளைத்தான் பார்க்குறேனு கண்டுபிடிச்சிட்டா’ என அறிந்து அங்கே சென்றவன், கதவை நன்றாக திறந்துவிட்டு “ராணிம்மா இன்னும் ரெடியாகலையா?” என்றான் மகளிடம்.

செந்தமிழ்செல்வியின் இமைகள் தன்போல் படபடக்க, தன் அவஸ்த்தையை மறைக்க, ப்ரித்திகாவின் உடையை சரிசெய்வதுபோல் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

“ரெடியாகிட்டேன் சித்தப்பா. செல்விக்கா மேக்கப் போட்டுவிட்டாங்க, அதான் லேட்”

“அம்மாயிகிட்ட டிரஸ் காட்டிட்டு வரியா?” என்று அமிர்தவள்ளியிடம் சிறுமியை அனுப்பி வைத்து செந்தமிழ்செல்வியை பார்க்க, கழுத்திற்கும் ஜாக்கட்டிற்கும் இடையே இருக்கும் செந்தமிழ்செல்வியின் முதுகுப்பகுதி சிலிர்த்திருந்தது.

அன்றைய நிகழ்விற்கு பின்னே இன்றுதான் தனிமையில் பார்க்கிறான் செந்தமிழ்செல்வியை.

“எப்படி இருக்க?” என்றான்.

“நல்லாயிருக்கேன்”

“ஏன் வேலைக்கு வரதில்ல?”

“வரேனே”

“அது தெரியும், என்கூட ஏன் ஒர்க் பண்றதில்ல?”

சிலிர்த்திருந்த உடல் கோபத்திற்கு மாற, செந்தமிழ்செல்வியின் காதுமடல்கள் சிவந்து போனது. ‘ஏதும் நடக்காதது போல எப்படி கேட்கிறான் என்று ஆத்திரம் வந்தது.

ஆனால் அமிர்தவள்ளியையும், தன் அன்னையையும் நினைத்து… ‘கோபத்தை கட்டுப்படுத்து செல்வி’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்ட போதும், “உங்களோட வேலை செய்ய எனக்கு கம்ஃபர்டபிளா இல்ல” என்று கோபமாகத்தான் சொல்ல வந்தது.

இவன் முறைத்துக்  கொண்டிருக்க, “எனக்கு வெளில போகனும், விலகிப்போங்க” என்றாள்.

“இது என் வீடு”

“உங்க வீடுதான். அதுக்காக உங்களை உரசிட்டு போக முடியாதில்ல? விலகுங்க”

“ஏன் நான் உன்னை தொட்டதேயில்லையா?” என்று பட்டென கேட்டவன், பின்னே நிதானித்து, “ஸீ… உனக்கு பிடிக்கல, நான் விட்டுட்டேன். தென் வாட்ஸ் த ப்ராப்ளம் கேர்ள்? என்னை அவாய்ட் பண்ணி அசிங்கமா நினைக்க வைக்கிற. புரியுதா உனக்கு? பிடிக்காத பெண்ணை வற்புறுத்துற அளவுக்கு நான் கேவலமானவன் இல்லை. புரிஞ்சிக்கோ. லெட்ஸ் பி ஃப்ரண்ட்ஸ்? பழைய மாதிரி” என்றான்.

அமைதியாக இருந்தபோதும், செந்தமிழ்செல்வியின் தோள்பட்டை ஏறி இறங்கியதிலேயே அவளின் கோபம் உணர்ந்தவன், “முதல்ல திரும்பு செல்வி, உன்கிட்டதான பேசிட்டிருக்கேன்?” என்றான்.

செந்தமிழ்செல்வி திரும்பாமல் இருக்க, “என் மேல உள்ள கோபத்தை அஸ்வத்கிட்ட (குதிரை) ஏன் காட்டுற? அவன் என்ன செய்தான்? இரண்டு நிமிஷம் அவனுக்காக நின்னு வருடி கொடுத்திருக்கலாமில்ல? உன் வருடலுக்கு பழகியவனுக்கு ஏக்கமாகிடுச்சு போல, கனைச்சு கனைச்சு பார்த்துட்டு சோகமா மூஞ்சை வச்சிருக்கான், போய் அவனை பாரு, வாயில்லா ஜீவனையும் வாட்டாத” என்றான் கோரிக்கையாக.

அன்று அஸ்வத்தோடு நிகழ்ந்தது நினைவு வர, உடலெல்லாம் மின்சாரம் பாய்ந்தது, அதனை மறைக்க பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்தாள் செந்தமிழ்செல்வி.

இவன் இங்கிருந்து சென்றால் பரவாயில்லை என்று நினைத்த நேரம், “செல்வா…” என்று அமிர்தவள்ளி உரக்க அழைக்க, ‘ஹப்பா’ என்று நிம்மதியானாள் செல்வி.

திரும்பியிருந்தவளின் முதுகை முறைத்தபடி அவ்விடம் விட்டு அகன்றான் பொற்செல்வன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!