மகேந்திரனோடு உண்டு முடித்து வீடு வந்து சேர்ந்த பிரசன்ன வர்த்தினி அவர்களின் அறைக்குச் செல்லவில்லை. உடலை விட உள்ளம் சோர்வாக இருந்தது. தன்னையும், தன் ஊஞ்சலாடும் மனத்தையும் வசை பாடியபடி அப்படியே நடுவீட்டில் இருந்த திவானில் சாய்ந்துவிட்டாள்.
தாத்தா அவரது அறையில் உறங்கியிருக்க, வீட்டில் யாருமில்லை. அந்த அமைதியில் அவளின் கண்கள் அயர்ச்சியில் அசந்தன. உறங்கி போனவளை ஏலக்காய் தேநீரின் சுவை எழுப்பியது.
Advertisement
“பார்த்து எந்திரி வர்த்தினி, இப்ப தூங்கினா நைட் எப்படி தூங்குவ?” என்று அவள் பக்கத்தில் இருந்த ஒற்றை சோஃபாவில் அமர்ந்தார் வைதேகி.
“வாஷ்ரூம் போய்ட்டு வரேன் அத்த” என்றவள் அங்கிருந்த ஓய்வறையைப் பயன்படுத்திவிட்டு வந்தமர, வைதேகியின் பார்வை அந்த திவானில் கிடந்த பைகளில் பதிந்தது.
“ஷாப்பிங் போய்ட்டு வந்தியா?” என்று கேட்டவர் அவளுக்குத் தேநீரை நீட்டினார்.
Advertisement
“ஆமாத்த” என்றவள், “அவருக்கு வாங்கினேன்” என்று சொல்லி கணவனுக்கு வாங்கிய கை கடிகாரத்தைக் காட்டினாள்.
“அடடே! சூப்பரா இருக்கு. கண்டிப்பா அவனுக்குப் பிடிக்கும்” என்றவர் கண்களில் நிறைவான உணர்வு. காலையில் தன் பேச்சைக் கேட்டுக்கொண்டு தன் மருமகள் கணவனைக் கவனிக்கும் வேலையில் இறங்கிவிட்டாள் போல என்று மனத்தார மகிழ்ந்தார்.
ஆனாலும் அவள் முகத்தில் என்னவோ குறைந்தது. தூங்கி எழுந்ததால் இருக்கும் என்று நினைத்து அதனை ஒதுக்கியவர்,
“ப்ச், போங்கத்த. எனக்கு செய்ற அட்வைஸ்ல கொஞ்சம் உங்க புள்ளைக்குச் சொல்லுங்க” என்றாள் எரிச்சலாக. பிரசன்னாவும் பேசக்கூடாது என்று நினைக்கிறாள், ஆனால் முடியவில்லை.
“சாப்பாடு எடுத்துட்டுப் போனதுக்கு அவ்வளவு லெக்சர் கொடுக்கிறார். டெல்லிக்கும் கேரியர் தூக்கிட்டு வருவியா கேட்கிறார்? இதுல எங்க நான் இதை கொடுக்க?” என்று ஒரு வேகத்தில் சொல்லிவிட்டு அமைதியானாள்.
காதல் கொண்டு செய்த திருமணம். வீட்டினருக்குப் பெரிதாக விருப்பமில்லாமல் செய்து வைத்த ஒன்றும் கூட. பெரிதான காரணமில்லை. பெண்பிள்ளை எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம். அரசியல் குடும்பம் என்றாலும், அவளுக்கு அதெல்லாம் இல்லாது ஒரு அமைதியான வாழ்க்கை வேண்டும் என்ற நினைப்பு.
ஆகையால் அவர்களிடம் மகேந்திரனைப் பற்றி குறை சொல்லவே முடியாது. ஏற்கெனவே உணர்ச்சிவசப்பட்டு மூன்று மாதம் அங்கிருந்து அவனைக் காயப்படுத்திவிட்டாள். திலக்கின் நிலையால் தானும் தன் நிலை இழக்கிறோம் என்று புரிந்து, கொஞ்சமாக தன்னைத் தேற்றி வந்தாலும் மகேந்திரன் சில நேரம் அவளை வாட்டி விடுகிறான்.
“நான் ஒன்னு சொல்லட்டா வர்த்தினி. அவன் கேட்டது தப்புத்தான். நான் உன்னை அவனைக் கவனிச்சிக்கோ சொன்னது நிஜம், அதே நேரம் உன்னையும் நீ கவனிக்கணும். அவனை கவனிக்கணும்ன்றதுக்காக உன் உலகமே அவன்தான்னு நினைச்சுப் போனா, அவனால உன் அன்பைப் புரிஞ்சிக்க முடியாது. உனக்கும் உன் எதிர்ப்பார்ப்புக்கும் ஏத்த மாதிரி அவனால அன்பு காட்ட முடியாது” என்றார் வைதேகி பொறுமையாக.
“நீயே ஏன் எதிர்ப்பார்க்கிற? அவனையும் எதிர்ப்பார்க்க வைன்னு சொல்றேன்” என்று வைதேகி சொல்ல, புரியாமல் பார்த்தாள் பெண்.
“கூடவே சுத்துறது மட்டும் அன்பு கிடையாது. நீ அவனை விட்டு பிரிஞ்சு இருந்தது தப்பு, அதுக்குப் பதில் செய்றேன்னு இப்ப போற இடமெல்லாம் போகவும் கூடாது. உன் உலகம் ராஜாவைத் தாண்டியும் இருக்கணும். ராஜாவும் அதைத்தான் விரும்புறான். நீ ப்ராக்டிஸ் பண்ணு. உன் வர்க்ல கான்சென்ரேட் பண்ணு” என்றார் வைதேகி.
தன்னை இழக்காமல் காதல் செய்ய வேண்டும் என்கிறார். அது சாத்தியமா என்ற பெரிய கேல்வி பிரசன்னாவிற்கு. காதல் என்றால் பிதற்றல் என்று இருக்கும் பெண் இல்லை! அதே சமயம் கணவனுக்காக செய்வதில் நேசம் வெளிப்படும்தானே? அவனுக்கான நேரம் கொடுப்பது தவறா?
தனக்குள் உழன்றவளை வைதேகியின் வார்த்தைகள் வேறு திசைக்கு உள்ளிழுந்தன.
“எங்களையே எடுத்துக்கோயேன். நானும் உன் மாமாவும் மாசம் ஒரு நாள் எந்த வேலையும் இல்லாம, பசங்க இல்லாம நாங்க மட்டும் எங்காச்சும் போவோம். முடியலன்னா வீட்ல நாங்க மட்டும் இருப்போம். அண்ட் நான் என்னோட வேலை பார்க்கிறப்போ அவர் போன் செய்யல, மெசெஜ் பண்ணலனு நாங்க சண்டை போட்டது இல்லை. எனக்குனு ஒரு உலகம் இருக்கு. நான் ஒரு டாக்டர், என்னை நம்பி நாலு பேரு இருக்காங்க. அது போலத்தான் நமக்கு நிறைய ரோல்ஸ் இருக்கு. ஒரே ஒரு ரோல்ல ஃபிட் இன் ஆகி மத்ததைக் கோட்ட விடாத!”
“இது ராஜா விஷயத்துல மட்டுமில்ல, திலக் விஷயத்துலையும் இதான் செஞ்ச நீ. வாழ்க்கைன்றது எல்லா பக்கமும் வர காத்தை எதிர்த்துத் துடுப்புப் போடுற மாதிரி. பேலன்ஸ் இஸ் தி கீ!” என்றார்.
பிரசன்னாவின் முகம் பிரகாசமானது. தனக்கு வேண்டிய அத்தனை அன்பையும், எதிர்ப்பார்ப்பையும் கணவன் ஒருவனிடமே எதிர்ப்பார்ப்பதால், அதில் துளி ஏமாற்றம் கிடைத்தாலும் அவளால் தாங்க முடிவதில்லை என்பது உள்ளம் உரக்கச் சொன்னது.
வைதேகி வார்த்தைகள் வாஞ்சையாக அவளைத் தொட்டுத் தழுவியது. அவள் தேடிக்கொண்டிருந்த வார்த்தைகள் இதுதானோ? சில மாதங்களாக ஒரு உணர்வெழுச்சியில் தவித்தவளுக்குத் தேவையான வார்த்தைகள்.
தன்னைத் தொலைத்த பின் எதை யாருக்குத் தன்னால் கொடுக்க முடியும்?
சுயத்தை நேசிப்பவரால் மட்டுமே பிறரை நேசிக்க முடியும். அந்த நேசத்தில் புரிந்துணர்வு கிட்டும். மகேந்திரன் தன்னிடம் எதிர்ப்பார்ப்பதும் அதுதான் என்று புரிந்தது.
“அத்தை! தேங்க் யூ சோ மச்” என்று எழுந்து வந்து அவரை அணைத்துக்கொண்டாள் பிரசன்னா.
“ஹேய்! என்ன பண்ற?” என்று அவர் அதிர,
“ஐ லவ் யூ” என்று சொல்லி அவரின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள்.
“அடியே! எச்சீ. என்ன பண்ற?” என்று வைதேகி அவளை முறைத்தாலும் அவர் கண்களில் சிரிப்பு இருந்தது.
“இப்படியே சிரிச்சிட்டு இருக்கணும். சரியா?” என்று அவள் தலையை ஆதுரமாக வருடினார்.
“நீங்க ஒரு ரேர் பீஸ் அத்த” என்று சொல்லி மீண்டும் அணைத்தவள் கடையில் வாங்கிய பைகளை மாடிக்கு எடுத்துச் சென்றாள்.
இரவு கவிழத் தொடங்கிய நேரம் மெல்லிய சாரல் சிவன்தாங்கலை நனைத்தது. ராஜமகேந்திரனின் கார் வீட்டுப் போர்ட்டிகோவில் நுழையும்போதே மாடியில் இருந்து பார்த்துவிட்டாள் பிரசன்னா.
“அவன் ஃப்ரஷ் ஆகிட்டு வருவான். நீங்க சாப்பிடுங்க. அப்புறம் அதுக்கும் எதாச்சும் பேசுவான் உங்க புள்ள” என்ற வைதேகி கணவனுக்கு இட்லி வைத்தார்.
“பின்ன உன் மகனாச்சே, உன்னை மாதிரிதான் எடக்கா பேசுவான்” என்றதும் கணவனை முறைக்க,
“டேய் அமைதியா சாப்பிடு” என்று தேசிகன் மகனை கண்டித்தார்.
மகேந்திரன் மாடியேறி வந்த போது அவர்கள் பேச்சு மெல்லத் தேய்ந்தது. அறைக்குள் மனைவி இருப்பதே உற்சாகம் கொடுத்தாலும் அது கொஞ்சமும் அவன் நடையிலோ நகையினாலோ தெரியவே இல்லை.
பிரசன்னவர்த்தினி கணவனையே கண்கொட்டாது பார்த்தாள்.
‘கெத்தாமாம்!’ இதுதான் தோன்றியது.
இந்த ஆண்கள் எல்லாம் ஏன் அன்பைக் காட்டினால் என்னவோ கீரிடம் இறங்கியது போல் நினைக்கிறார்கள் என்று புரியவில்லை. உன்னைத் தேடுகிறேன் என்று சொன்னால் இவனை நாடு கடத்தவா போகிறார்கள்.
“சாப்பிட போகலையா?” என்று மகேந்திரன் மனைவியிடம் கேட்க,
‘கேசுவலா பேசுறாராம்’ என்று மனத்தில் நினைத்தவளுக்கு மதியம் அவன் பேசிய விதத்தில் கோபமிருந்தது. அதனுடன் வைதேகி கொடுத்த அறிவுரையின்படி தன்னை அவன் தேடும்படி செய்ய வேண்டும் என்று தெளிவாக முடிவெடுத்திருந்தாள் பெண்.
“நெக்ஸ்ட் வீக்’ல இருந்து AP லா ஆசோசியட்ஸ்ல ஜாய்ன் பண்ணலாம்னு இருக்கேன். அவங்க நம்ம காலேஜ் சீனியர்ஸ்தான், அதுக்காக அப்ளை பண்ணிட்டு இருந்தேன். இனிதான் சாப்பிட போகணும்” என்றதும்,
“வாவ்! சூப்பர். நல்ல முடிவு” என்றதும் பிரசன்னாவின் இதழ்கள் நக்கலாக வளைந்தன.
‘என்னைத் தேடி தவிக்கிறப்போ தெரியும் எவ்வளவு நல்ல்ல முடிவுன்னு’ என்று நினைத்தவள் முகம் அவள் பாவனையை அப்படியே காட்டினாலும் கணவனுக்குப் படிக்கத் தெரியவில்லை. நக்கல் செய்கிறாள் என்று புரிந்தாலும் ஏன் எனத் தெரியாது,
“என்ன இந்த உதடு வளையுது?” என்றபடி அவளின் இதழ்களைப் பிடித்துக்கொள்ள,
“ப்ச். வலிக்குது” என்று அவன் கையைத் தட்டிவிட்டவள்,
“வாங்க சாப்பிட போலாம்” என்று அழைத்தாள்.
இருவரும் உண்டு சிறிது நேரம் வீட்டினருடன் கதை பேசி, கைப்பேசியில் மகேந்திரனின் தம்பிகள் அயன், வியனிடம் பேச என ஒரு மணி நேரம் சென்றது.
மாடிக்கு வரவும்,
“தூங்கிடாதீங்க. ஒரு நிமிஷம் உட்காருங்க” என்று சொல்லியவள்,
“இங்க பாருங்க எனக்கு எந்த அட்வைஸும் பண்ணாம நான் ஒன்னுத் தருவேன். வாங்கிக்கணும்” என்று முன்னெச்சரிக்கையாக சொல்ல,
“என்ன?” என்றவனின் பார்வையே மாறியது.
“என்ன தர போற?” என்று விஷமமாக அவளிடம் கேட்டான். டீ ஷர்ட்டும், காற்சட்டையும் என்று இரவு உடையில் இருந்தவள் மேல் அவன் பார்வை பதிந்தது.
பிரசன்னாவுக்கோ அவனுக்குத் தன் பரிசு பிடிக்குமா என்ற யோசனையில், அவனின் பார்வை புரியவில்லை.
“சரி கொடு” என்று சொல்லி அவன் ஆவலாக பார்க்க, அந்த உயர்ரக கைகடிகாரம் அவன் கைகளில் அழகாக இருந்தது. பிரசன்னா அவன் கையில் அணிவித்து, அவன் முகத்தை அண்ணாந்து பார்க்க, கணவன் பார்வையோ மனைவியை உரிமையாக கண்களவு செய்தது.
வெகு நாட்கள் கழித்து இதமாக ஒரு இணக்கம். இவ்வளவு நெருக்கம். தனக்கு எதுவும் வேண்டும் என்று யாரிடமும் கேட்காதவன், ஆனால் மனைவி தனக்காக செய்கையில் மனம் விடுமுறை கேட்கும் குழந்தை போலானது.
“பிடிச்சிருக்கா?” ஆசையாக பிரசன்னா கேட்க,
“அழகா இருக்கு. இந்த குட்டி ஸ்டட், விரிச்சு விட்ட உன் முடி, கண்ணுக்குப் போட்டிருக்க காஜல், இந்த லிப் ஷேட்…” என்று அவன் சொல்லிக்கொண்டே போக,
“மகேந்திரன்ன்ன்!!” என்று பல்லைக் கடித்தவள், அவன் தலையைப் பிடித்து உலுக்கினாள்.
“நான் வாட்சைக் கேட்டேன்” என்றதும், வாய்விட்டு சிரித்தவன் அப்படியே அவளை அணைத்த வாக்கில் தலையணையில் சாய்ந்தான்.
“நீதான் வாட்சை மறைச்சிட்டு இருந்தியே” என்றவன் இப்போது நிதானமாக அதனியப் பார்வையிட்டான்.
“ஹே! இந்த கலெக்ஷனா? செம, ரொம்ப காஸ்ட்லியா இருக்குமே. எனக்குப் பிடிச்ச கலர், டிசைன். தேங்க்ஸ் எ லாட்” என்றவன் அவளை அணைத்துக் கொள்ள,
“என்ன தீடீர்னு பிரசண்ட் எல்லாம்?” என்று கேட்டான்.
“உங்களுக்கு முன்னாடியே கொடுக்கணும் தோணிச்சு. அப்போ முடியல, உங்களோட விக்டரிக்காக” என்றதும், மகேந்திரன் முகம் ஒரு நொடி வேறு உணர்வினைப் பிரதிபலித்தது.
உண்மையில் அவன் வென்றபோது தேசிகனைத் தவிர வீட்டினர் பெரிதாக மகிழவில்லை. மனைவியும் உடனில்லாத வருத்தம் இருந்தது.
இப்போது பிரசன்னா யோசித்து செய்திருக்க, கனிந்தது காதல் கொண்ட மனம்.
“தேங்க் யூ” என்றவன் மனத்தில் அலைப்புறுதல் நீங்கி ஒரு இனிமையான நிலை.
“சரி நான் ஒன்னுத் தரவா?” என்று கேட்க, இவன் பரிசு வாங்கியிருக்கிறானா என்று ஆவலில் முகம் பார்க்க, அவனோ அவள் முகம் நோக்கி குனிந்தான்.
காதலாக கன்னத்து முத்தமொன்று பெண்ணிடம்.
“உங்களை…” என்று அவனை இறுக்கியணைத்தவள் அவன் இரு கன்னங்களிலும் அழுத்தமாக முத்தம் வைத்தாள்.
“சாரி” என்றிட,
“எதுக்கு?” என்று கேட்டாள்.
“மதியம் உன்னை பேசிட்டேன். அப்போ ஆஃபிஸ்ல டென்ஷன். நீ பின்னாடி வரவும் உனக்கு டைம் ஸ்பெண்ட் பண்ண முடியலன்னு கோவம்” என்று ஒத்துக்கொள்ள, சில நேரங்களில் உறவுகளை இப்படியான வார்த்தைகள்தாம் காப்பாற்றுகின்றன.
உண்மையாக அவன் நிலை சொல்ல, அவளுக்குப் புரிந்தது. கூடவே தன்னைக் காதலிக்காத எந்த ஒரு மனிதனாலும், மனிதியாலும் பிற உயிரை ஆழமாக காதலிக்க முடியாது என்று புரிதல் இருந்தது. அதை உணரத்தான் அவளுக்கு அவகாசம் தேவைப்பட்டது.
இருவரும் பேசியபடி உறங்கியிருக்க, மறு நாள்,
“இன்னிக்கு திலக் அண்ணாவைப் பார்க்க போறேன்” என்று பிரசன்னா சொல்ல,
“நானும் வரேன். அத்தையையும் ஒன்ஸ் பார்த்துடுறேன்” என்று சொல்லி மகேந்திரனும் பிரசன்னாவோடு சென்றான்.
மகனின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம். இன்னும் சில தினங்களில் திலக் கண்விழித்து விடுவான் என்று நம்பிக்கையாக மருத்துவர்கள் சொல்லியிருந்தனர். அவனது உடல் மருந்துகளுக்கு நன்றாக ஒத்துழைப்பு செய்வதால், தொடர்ந்து முன்னேற்றம் கண்டது அவன் நிலை.
ஆனால் அமராவதியோ அல்லும் பகலும் மகனோடு இருந்து வாடியிருந்தார். மாலை வரை அங்கேயே இருந்த பிரசன்னா, கணவன் அன்றிரவு வேலை விஷயமாக கேரளா செல்கிறான் என்றதும்,
“பெரியம்மா ரொம்ப டயர்டா இருக்காங்க மகேந்திரன். நான் அவங்க கூட ஸ்டே பண்ணலாம் இருக்கேன், தங்கவா?” என்று கேட்டாள்.
அவன் பெண்கள் அனுமதி வேண்ட வேண்டும் என்று நினைப்பவன் இல்லை. இருந்தாலும் கணவன் மனைவி என்று வருகையில் இருவரும் எதையும் கலந்தாலோசித்து செய்தால் நலம் என்று நினைப்பான்.
தங்கவா? என்ற கேள்வியில் அவளின் தயக்கம் புரிந்தவன்,
“அதுக்கென்ன தங்கிட்டு வா. நான் நாளைன்னைக்கு அங்க வந்துடுவேன், நானே பிக் அப் பண்ணிக்கிறேன்” என்று சொன்னான்.
*************
அந்த நள்ளிரவு நேரத்துல் மருத்துவமனையின் அந்த ப்ளாக் முழுவதும் அமைதியாக இருந்தது. உயர் தர வசதிகள் கொண்ட பிரிவு என்பதால் எந்த சத்தமும் இல்லை. எல்லாம் பெரிய பெரிய அறைகள். திலக் இருந்த பகுதியில் வாசலில் இரண்டு காவலர்கள் இருந்தனர்.
திலக் தனியறையில் இருந்தான். அவனது அறைக்குள் பாதுகாப்பின்றி நுழையக் கூடாது. அமராவதியும் பிரச்சன்னாவும் அதன் பக்கத்தில் இருக்கும் அறையில் தங்கினர். கணவன் ஊர் சென்றுவிட்டானா என்று அவனோடு அலைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பியபடி இருந்தாள் பிரசன்னா.
வெகு நேரமாக அவனிடமிருந்து பதில் இல்லை. கூடவே அந்த அறைக்குள் இணைய வசதி கிடைக்காத காரணத்தால் வெளியே வந்தவள், வெளியே ஜன்னலை வேடிக்கைப் பார்த்தபடி முதுகுக் காட்டி நின்றாள்.
காவலர்களில் ஒருவர் கீழே தேநீர் அருந்தச் சென்றார். மற்றொருவரும் உட்கார்ந்தபடியே உறங்கியிருந்தார். அவரின் முகத்தில் மயக்க மருந்து கலந்த கைக்குட்டை வைக்கப்பட்டது.
மருத்துவரின் உடையணிந்து, முகக் கவசம் அணிந்த ஒரு நபர் திலக்கின் அறைவாசலில் நின்றான்.
பிரசன்னாவைப் பார்த்தாலும் அவள் முதுகுக் காட்டி நின்றதாலும், அவள் அலைப்பேசியில் கவனமாக இருந்ததாலும் சட்டென உள்ளே நுழைந்துவிடலாம் என்று எண்ணினான் வந்தவன்.
ஏதோ ஒரு உந்துதலில் பிரசன்னா திரும்பிப் பார்த்தாள். என்னவோ சரியாகப் படவில்லை.
நள்ளிரவில் மருத்துவர் வர வேண்டிய அவசியமென்ன? திலக்கிற்கு எதாவது என்றால் நர்ஸ் தங்களிடம் சொல்லியிருப்பாரே என்று யோசித்தவள் வேகமாக அந்த நபரை நெருங்கினாள்.
“ஹலோ! என்ன இந்த நேரம் டாக்டர்?” என்று விசாரிக்க, அவன் கண்களைப் பார்த்தவளுக்கு சந்தேகம் வந்தது. டாக்டர் போலத் தெரியவில்லை.
“சொல்லுங்க, உங்களைத்தானே கேட்கிறேன்” என்று கொஞ்சம் குரல் உயர்த்தவும், வந்தவன் பிரசன்னாவின் வாயை மூடினான். அவள் பயந்து, பதறி அவனை உதறப்பார்க்க, அவன் கையில் கத்தியிருந்தது.
பிரசன்னா கத்த முயற்சித்து அவன் கையைக் கடிக்க, அவனோ சட்டென்று கத்தியைப் பிரசன்னாவின் வயிற்றில் குத்தி அப்படியே அவளைக் கீழே போட்டவன், திலக்கின் அறைக்குள் நுழையப் பார்க்க, கீழே விழுந்த பிரசன்னா வலியில் அலறியபடி, அவனின் கால்களை விடாதுப் பிடித்தாள்.
அந்த நேரம் சரியாக தேநீர் வாங்கச் சென்ற காவலாளி வந்துவிட, ஓட முயன்றவனை அவர் பிடித்துவிட அமராவதியும் சத்தம் கேட்டு வந்தவர் அலாரத்தை ஆன் செய்துவிட, எல்லாரும் அந்த தளத்தில் கூடிவிட, ரத்தவெள்ளத்தில் கிடந்த பிரசன்னாவைப் பார்த்து அமராவதிக்குக் கண்கள் சொருகின.