புருஷோத்தமனின் தந்தை அழகேசன் 1950களில் பிரபல நடிகர் ஆவார். அழகேசன் நடிக்க வரும்முன்னே உணவிற்கே கஷ்டப்பட்டவர் ஆதலால், தனது சம்பாதனை முழுவதையும் விவசாய நிலம் மட்டுமே வாங்கினார்.
இருநூறு ஏக்கர் நிலத்தை வாங்கிய பின்னேதான் அவரின் தாபம் தீர்ந்தது. அதன்பின்னே வந்த வருமானத்தில் தனது சொந்தபந்தங்களுக்கு உதவுவது. சொந்த ஊரில் மின்சார வசதி, சாலை வசதி, ஏழை குடும்பத்திற்கு உதவுவது என்று தனது காலத்தை கழித்தார் மனநிறைவோடு.
அழகேசன் காலத்திற்கு பின்னே விவசாயத்தை பெரிதாக்க எண்ணி, இருபத்து ஐந்து ஏக்கரில் செம்மரம் வளர்க்க திட்டமிட்டார் புருஷோத்தமன். இரண்டாயிரத்து நான்காம் ஆண்டிற்கு பின்னேதான் செம்மரம் யார் வேண்டுமானாலும் வளர்க்கலாம் என்று அரசாங்கம் அனுமதி கொடுத்தது.
அதற்கு முன்னுள்ள காலங்களில் செம்மரம் வளர்ப்பது அத்தனை சுலபமில்லை. முறைப்படி அரசாங்கத்திடம் அனுமதி வாங்க வேண்டும்.
Advertisement
விற்பதற்கும் தமிழ்நாட்டின் வனத்துறைக்கு கடிதம் எழுதவேண்டும். மரத்தின் உயரம், அகலம், எத்தனை வருடம் பழமையானது என்று ஒவ்வொரு மரத்திற்கும் குறிப்பு கொடுக்கவேண்டும்.
வனத்துறையினர் மரம் வெட்ட அனுமதி கொடுத்த பின்னே மரங்களை வெட்டி அதற்கான எண்களை கொடுத்து, வனத்துறை குடோனுக்கு அனுப்பி வைப்பார்கள். வனத்துறையினர் மரங்களுக்கான வரியை எடுத்துக்கொண்டு அசல் தொகையை உரிமையாளரிடம் கொடுத்துவிடுவார்கள்.
செம்மரம் திருடு போகாமல் பாதுகாப்பதற்காக செம்மரம் வளரும் இடத்தை சுற்றியுள்ள நிலங்களை சொந்தங்கள் விவசாயம் செய்துகொள்ள அனுமதி கொடுத்தார். அப்பொழுதும் மரங்கள் திருடு போகத்தான் செய்தது.
Advertisement
இருநூறு ஏக்கர் நிலத்தை தனது நடிப்பின் மூலம் சுலபமாக வாங்கிவிட்டார் அழகேசன். அதனை பராமரிப்பு செய்ய புருஷோத்தமன் எடுத்துக்கொண்ட சிரத்தை மிக அதிகம்.
Advertisement
ஐந்து ஏக்கருக்கு ஒரு வீடு வீதம் இருநூறு ஏக்கருக்கு நாற்பது வீடுகள் கட்டி, குத்தகைக்கு விவசாயம் செய்பவர்கள் அங்கேயே தங்க வழி செய்த பின்னேதான் செம்மரம் திருடு போவது குறைந்தது.
ஐந்து வருடத்திற்கு முன்னே செம்மரம் சம்பந்தமான பொறுப்புகளை பெரியமகன் தேவேந்திரனிடம் ஒப்படைத்துவிட்டார் புருஷோத்தமன். தேவேந்திரனோடு பிறந்த தேவராஜ் எதிலும் நாட்டம் காட்டுவதில்லை.
சொந்த ஊரில் வசித்தாக வேண்டும் என்ற நிலை வந்த பின்னேயும், விவசாயம் மட்டுமே பார்த்துக்கொண்டிருக்க பொற்செல்வனுக்கு விருப்பமில்லை. செம்மரம் தொழிலை அண்ணன் பார்த்துக்கொள்ள, பழங்கள், மற்றும் காய்கறி வியாபாரங்களை தான் பார்த்துக்கொள்கிறேன் எனப்பொறுப்பேற்றான்.
Advertisement
பழங்களை பழரசம் போன்று அல்லாமல் பாணமாக மாற்றி வியாபாரம் செய்ய திட்டமிட்டு, அரசாங்க அனுமதி பெற்று, பழங்களை பதப்படுத்த தொழிற்சாலை அமைத்து, பாணமாக விற்க ஆரம்பித்தான்.
பழம், காய், மற்றும் கற்றாழைகளை பயன்படுத்தி அழகு சாதன களிம்புகள் தயாரிக்கும் பணி ஆரம்பித்தான். இத்தொழில் நல்ல வரவேற்பை பெற்று நாடு முழுவதும் மட்டும் அல்லாமல் கடந்த மூன்று வருடங்களாக அயல்நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யபடுகிறது.
இதுமட்டுமல்லாது பருத்தி உற்பத்தி செய்து, பஞ்சுமெத்தைகள், தலையணைகள் என மொத்தமாகவும், சில்லறையாகவும் வியாபாரம் செய்கிறான்.
வியாபார விசயமாக மாதத்தில் பாதிநாள் வெளியில்தான் இருப்பான் பொற்செல்வன். இரண்டு தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், காடு, மற்றும் தோட்டத்தில் பணிபுரிபவர்கள் என ஐநூற்றிற்கும் மேமேற்பட்டோருக்கு சம்பளம் போடும் பணி சாம்பவியுடைதாகும்.
ஆரம்பத்தில் சாம்பவிக்கு உதவியாகத்தான் செந்தமிழ்செல்வி இருந்தாள். பொற்செல்வன் தொழிற்சாலை ஆரம்பித்த பின்னே தனக்கு உதவியாக வர கேட்டுக்கொள்ளவே, அவனோடு பணிபுரிந்தாள்.
நல்ல ஈடுபாட்டோடுதான் வேலை செய்து வந்தாள். உழைப்பிற்கேற்ற சம்பளம் என்பதைவிட கூடுதலாகவே சம்பளம் கொடுக்கப்பட்டது. பொற்செல்வனின் செயலில் அதிர்ந்துதான் வேலையை விட்டு நிற்க முடிவெடுத்தாள்.
அன்னையையும் தன்னோடு அழைத்துச் செல்ல விருப்பம்தான். ஆனால் இக்கட்டான சூழலில் அன்னைக்கு வேலையும் கொடுத்து, பாதுகாப்பையும் கொடுத்தவர்கள் ஆதலால் அனைத்தையும் விட்டுவிட்டு தன்னோடு அன்னை வருவார் என்ற நம்பிக்கை இல்லை செந்தமிழ்செல்விக்கு. வெளியில் வேலைக்கு செல்ல நிச்சயம் சம்மதிக்கமாட்டார் என்றறிவாள்.
ஆனால் இனி இவ்விடத்தில் வேலை செய்ய தன்னால் ஆகாது, நாளை மறுநாள் பணியில் சேர அறிவுருத்தியிருக்கிறார்கள். எப்படியாவது அன்னையை சம்மதிக்க வைத்து, நாளை கிளம்பியாக வேண்டும் என்று நினைத்திருகிகிறாள்.
பத்து நிமிடங்களாக தொடாமல் எழுப்பினார் சாம்பவி. செல்வியிடம் சிறு அசைவு கூட இல்லை. “செல்வி… செல்வி…” என்று மகளை லேசாய் உலுக்கினார். தற்போதுதான் சற்றே கண்ணசைத்தாள். அப்பொழுதும் இமை திறக்கவில்லை.
“உடம்புக்கு என்னடீ பண்ணுது? இப்படி தூங்குற… நைட்டும் சாப்பிடல. ஒன்பது மணியாகப்போகுது. வா டாக்டர்கிட்ட போய்ட்டு வரலாம்”
பெரும் அயர்வோடு கண்விழித்தவள், “உடம்பு நல்லாத்தான்ம்மா இருக்கு. இரண்டு நாளா சரியா தூங்கல. அதான் இன்னைக்கு தூங்கிட்டேன்” என்றாள்.
“என்ன? இரண்டு நாளா சரியா தூங்கலையா? ஏன் தூங்கல? நைட்டெல்லாம் தனியா முழிச்சிட்டிருந்தியா? என்னை எழுப்பியிருக்கவேண்டியதுதானே?”
“எழுப்பியிருந்தா என் ஆசையை நிறைவேத்தியிருப்பியாம்மா?”
“ஆசையா? இரண்டு நாளா உன்னை தூங்க விடாம செய்த ஆசையா?” என்று சாம்பவி அதிர்விற்குள்ளானார்.
மகள் சில நாள்களாக வேலைக்கு செல்லாமல் இருப்பதே சாம்பவிக்கு குற்றவுணர்வாக இருக்க, இன்றும் வேலைக்கு வரமாட்டாள் போலவே என்று புலம்பியபடி தனக்கான மதிய உணவை பாத்திரத்தில் அடைத்து, மற்ற சின்ன வேலைகளையும் செய்து முடித்து வர, “ம்மா காஃபி” என்று ஆயாசமாக அமர்ந்தாள் செந்தமிழ்செல்வி.
தினமும் தேநீர் அருந்தும் பழக்கமில்லை செல்விக்கு. என்றாவது ஓர்நாள்தான் கேட்பாள். தான் குடித்து மீதமிருந்த பாலில் தற்போதுதான் உறைமோர் ஊற்றினார் சாம்பவி.
வழக்கமாக ஒன்பதரை மணிக்கு அலுவலகம் கிளம்பிடுவார் சாம்பவி. “பால் இல்ல செல்வி, கடைக்கு போய் வாங்கி வந்து டீ போட நேரமாகிடும்” என்றவர், “இன்னைக்கும் வேலைக்கு வரலையா?” என்றார்.
“இன்னைக்கு ஒரு நாள் நீயும் லீவ் போடும்மா, நிறைய பேசனும்” என்றாள்.
“நீ வேலைக்கு வராததே எனக்கு கஷ்டமா இருக்கு, என்னையும் வேற லீவ் போட சொல்ற?. அங்க உள்ள வேலை உனக்கு தெரியும்தானே? செல்வா தம்பிக்கு இருக்க வேலைல உன் வேலையையும் சேர்த்து பார்க்குறார். நான் பார்க்குறேனு சொல்லியும் கேட்கல. இப்படி பொறுப்பில்லாம இருக்கலாமா?” என்றார்.
“இவ்வளோ பேச நேரமிருக்கு, எனக்கு காஃபி போட நேரமில்லையா?” என முறைத்தபடி தானே பால் வாங்க சென்றாள்.
மகள் பால் வாங்கி வரும்வரை காத்திருந்து, “உன் போக்கே சரியில்ல. உன்னை வந்து பேசிக்கறேன்” என்று கிளம்பினார் பணிக்கு.
பகலெலாம் நன்றாக யோசித்திருந்தவள், மாலை சாம்பவி வந்ததும் தனது விருப்பத்தை சொன்னாள் முடிவு போல.
சுத்தமாய் இதை எதிர்பார்க்கவில்லை சாம்பவி. தனியாக எப்படி இருப்பாய்? இங்கு என்ன குறை? பாதுகாப்பு, சம்பளம் என்று அனைத்துமே அதிகப்படிதான். வெளியே வேலைக்கு செல்ல ஒப்புகொள்ளவேயில்லை.
வெளியே வேலைக்கு செல்ல அனுமதிக்கவில்லை என்றால் பட்டினி இருந்து சாவேன் என்றாள் செந்தமிழ்செல்வி.
மகளின் வார்த்தையில் ஆடிப்போனார் சாம்பவி. எத்தனை பெரிய வசதியான வாழ்வை இழந்து, தனக்காக அனைத்தையும் அனுசரிக்கும் மகள்… இத்தனை காலங்களில் ஓர்நாள் கூட இறப்பை பற்றி பேசியதில்லை.
இன்று சொல்கிறாள் என்றால்… அந்தளவிற்கு என்ன நடந்திருக்கும்? என்று யோசிக்கவெல்லாம் தோணவில்லை. மகள் வாயிலிருந்து சுத்தமாய் எதிர்பார்க்காத அந்த ஒற்றை வார்த்தையிலேயே அதிர்ந்து போனார்.
அன்னையின் அதிர்ந்த முகம் கண்டு, “ம்மா இங்க எந்த குறையும் இல்லைனு நீ சொல்லித்தான் எனக்கு தெரியனுமா? அமிர்தம் ஆன்ட்டி என்னை பெத்த பிள்ளையாட்டம் பார்க்குறாங்க. ஆனாலும் காரணமில்லாம வெளிய போக நினைப்பேனா? ப்ளீஸ்ம்மா… என்னை அனுப்புங்க” என்றாள் மன்றாடலாக.
“அப்போ காரணம் இருக்கு. விரும்பி செய்திட்டிருந்த வேலையை விடுற அளவுக்கு என்ன நடந்தது? யாராவது உன்னை தப்பா பார்த்தாங்களா? நடந்துக்கிட்டாங்களா? எதுவானாலும் சொல்லு செல்வி. செல்வா தம்பி பார்த்துக்கும்” என்றார்.
பிரச்சனையே அவன்தான் என்று சொல்லாவா முடியும்? “அவங்க நம்ம முதலாளி, அவ்வளோதான். என் பிரச்சனையை நானே பார்த்துப்பேன். என்னை சுயமா இருக்க விடு” என்றாள் சிறு கோபத்தோடு.
“சரி… நீ வேலைக்கு வர வேண்டாம். ஆனா வெளிலயும் வேலைக்கு போக வேண்டாம். வீட்டுலயே இரு. மாப்பிள்ளை பார்க்குறேன்” என்றார் தன்மையாக.
பெரிதாய் அதிர்ந்தவள், “கல்யாணமா? அதுக்கென்னம்மா அவசரம்? இன்னும் நாலஞ்சு வருசம் போகட்டும்” என்றாள்.
திருமண பேச்சு ஆரம்பித்தால் தந்தை நிச்சயம் இடைபுகுவார். அன்னையின் பெற்றோரும் அறிவுரை வழங்க கிளம்பிடுவார்கள். முக்கியமாக அன்னை பார்க்கும் மாப்பிள்ளைக்கு மணம் முடிக்க தந்தை சம்மதிக்கவேமாட்டார். முதலில் அவரை சமாளிக்கட்டும் என்று, “சரி பாரு. ஆனா வெளில வேலைக்கு போக சம்மதிச்சாதான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்வேன்” என்றாள்.
“நீ வெளில போய் வேலை செய்தா என்னை என்ன நினைப்பாங்கனு கொஞ்சமாவது யோசிச்சியா செல்வி?” என்றார் கலக்கமாக.
“என் பாதுகாப்புக்கு பயந்து வேணாம்னு சொன்னா அதுல ஒரு நியாயம் இருக்கு. கண்டவங்க பேச்சுக்கு எதுக்கும்மா நீ பயப்படுற?”
“கண்டவங்களை நினைச்சு நான் பயப்படல, உன் அப்பாவையும், அவர் குடும்பத்தையும்தான் சொல்றேன்”
“நானும் அவங்களைத்தான் கண்டவங்கனு சொல்றேன்”
“செல்வி” என்று சாம்பவி பேரதிர்விற்குள்ளாக, “எனக்கு அவர் அப்பா, உங்களைப் பொறுத்தவரை அவர் கண்டவர்தான்” என்றாள்.
மகளின் பேச்சில் மேலும் பதட்டம் வந்தது சாம்பவிக்கு. “பசிக்குது, எதாவது செய்து கொடும்மா” என்றாள்.
நேரம் பார்க்க, ஒன்பது ஐம்பதை காட்டவே, பெரும் மன உளைச்சலோடு சமையலறை சென்றார்.
அடுத்தநாள் அலுவலகம் கிளம்பும்போதே, செல்வியை கேட்டால் என்னவென்று சொல்வதென்று பெரும் தயக்கம் சாம்பவிக்கு.
அலுவலகம் வந்த சாம்பவி, பொற்செல்வனைப் பார்த்ததும் பதட்டமடைந்தார். பொற்செல்வனின் அலுவலகம் வேறு இடத்தில் இருக்கிறது. முக்கிய காரணம் இல்லாமல் இவ்விடம் வரமாட்டான் என்ற கவலையோடு, “சாரிங்க தம்பி, கொஞ்சம் லேட்டாகிடுச்சு” என்றார்.
செந்தமிழ்செல்வி அலுவலகம் வராதது விசயமல்ல. தன் செயலால் வராமல் இருக்கிறாளோ என்ற மனஉளைச்சல் இருக்கவே என்ன செய்யலாம் என்று யோசித்திருந்தவன் அவளின் அன்னையை பார்க்க நேரில் வந்திருந்தான்.
“ஹெல்ப்பா? நான் உங்களுக்கு செய்யவா?” என வியந்து, “சொல்லுங்க தம்பி, என்னால முடிஞ்சா கண்டிப்பா செய்யறேன்” என்றார்.
“உங்க பொண்ணுக்கு போன் செய்து வர சொல்லுங்க, அவ ஹெல்ப்பும் தேவை”
“அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல, என்கிட்ட சொல்லுங்க தம்பி, உதவின்னா செல்வி மறுக்கமாட்டா”
“கார் அனுப்பறேன், நான் சொன்னேனு சொல்லி ரெடியாக சொல்லுங்க, எவ்வளோ நேரம் ஆனாலும் பரவாயில்ல, உங்க பொண்ணும் வந்த பின்னாடியே சொல்றேன்”
வேறு வழியில்லாமல் சாம்பவி போன் செய்ய, செந்தமிழ்செல்வி அழைப்பை ஏற்றதும், நிலையை சொல்லி, “செல்வா தம்பி வெய்ட் பண்ணிட்டிருக்கார், கார் வரும். கிளம்பி வா” என்றார்.
செல்வி மறுக்க, “தம்பி இங்க உனக்காக வெய்ட் பண்ணிட்டிருக்கார். கிளம்பி வா செல்வி” என்று கட்டளையாக சொல்லி இணைப்பை துண்டித்தார் சாம்பவி.