ஞாயிற்று கிழமை ஆதலால் “ராணிம்மா எங்க அண்ணி?” என்றான் பொற்செல்வன்.
தேவேந்திரன், “உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன் செல்வா, உன் ராணிம்மா வில்வித்தை வீராங்கணை ஆகப்போறாளாம். ஒரு வாரமா க்ளாஸ் சேர்த்து விடச்சொல்லி பிடிவாதம். வெள்ளிக்கிழமை போய் ஜாயின் பண்ண வச்சிருக்கேன். மேடம் ப்ராக்டீஸ் போயிருக்காங்க” என்றான் பெருமையோடு.
Advertisement
அமிர்தவள்ளி, “பின்ன… அவளோட விளையாட இன்னொரு குழந்தை இருந்தா வீட்டுல இருந்திருப்பா, பொழுதன்னைக்கும் என் முகத்தையே பார்த்துட்டு எவ்வளோ நாளைக்கு இருப்பா?” என குறை சொன்னார் மருமகளை பார்த்தவாறு.
இளைய மகன் அருகே இருக்க, “என்ன பேச்சு இது?” என மனைவியிடம் முணுமுணுத்தார் புருஷோத்தமன்.
“சின்ன அண்ணி எங்க?” என்றான் பொற்செல்வன்.
Advertisement
“சாப்பாடு வேணாம்னுட்டு உள்ள இருக்கா, அவ முகமே சரியில்ல செல்வா” என வருந்தினார் அமிர்தம்.
Advertisement
“அண்ணியை வர சொல்லுங்க” என்று பணியாளிடம் சொல்லியினுப்பினான் பொற்செல்வன்.
நவீனா வெளியே வர, “வந்து சாப்பிடுங்க அண்ணி, முக்கியமான விசயம் பேசனும்” என்றான்.
“எனக்கு பசியில்ல”
Advertisement
“அப்பாம்மா சாபிட்டு இருக்காங்க, நீங்களும் சாப்பிடுறிங்களா? இல்ல நான் பேச ஆரம்பிக்கட்டுமா?”
பசி எனும் உணர்வே இல்லாமல் நவீனா ஒரு இட்லியை வைத்துக்கொள்ள, இவன் இன்னும் இரண்டு தோசையை எடுத்து வைத்தான் நவீனாவின் தட்டில்.
ஏதும் பேசாமல் குனிந்த தலையோடும், வேதனையோடும் உண்டு முடித்து நவீனா எழ, “இங்கையே கை கழுவுங்க” என்று பணியாளைப் பார்க்க, அவர் ஒரு கிண்ணத்தை எடுத்து வந்தார்.
நவீனா கை கழுவியதும், “உங்களுக்கு என்ன அண்ணி குறை?” என்றான்.
“எனக்கேதும் குறையில்ல” என்றாள்.
இவ்வீட்டில் என்ன குறை என்று கேட்கிறான் என நினைத்து நவீனா பதில் சொல்ல, “ம் குட். உங்களுக்கு ஒரு குறையும் இல்ல. அப்புறம் எதுக்கு அண்ணாவோட சந்தோசமா வாழ்ற மாதிரி நடிச்சிட்டிருக்கனும்? அண்ணனை டிவோர்ஸ் பண்ணிடுங்க” என்றான்.
அமிர்தம் “என்ன பேச்சு செல்வா பேசுற?” என்று பேரதிர்வோடு அதட்டினார்.
“நான் சரியாத்தான்ம்மா பேசுறேன், அண்ணாக்கு அண்ணி மேல இன்ட்ரஸ்ட் இல்லனும்போது, டிவோர்ஸ் சரியான ஆப்ஸன்தான? நம்ம நிம்மதிக்காக அவங்க வாழ்க்கையை பணையம் வைக்கனுமா?”
அமிர்தவள்ளி, “நீ நினைக்கிற மாதிரிலாம் இல்ல, தேவாவை இதுவரை நவீனா குறை சொன்னதேயில்ல. இன்னும் கொஞ்ச நாள்ல தேவாக்கு நவீனா மேல அக்கறை வரும். அவங்க வாழ்க்கை நல்லா இருக்கும். நீயே ஆச்சர்யப்படுவ” என்றார்.
“ம்… நீங்க இவ்வளோ சொல்றிங்க, அண்ணி அப்படி ஏதும் சொல்லலையே” என்றான்.
என்ன செய்து தேவராஜ் நவீனா வாழ்வை சரி செய்யலாம் என்ற யோசனையில் அமிர்தவள்ளி இருக்க, அதை தரைமட்டமாக்கும் படி இருக்கும் மகனின் பேச்சில் கோபம் வந்தது.
“இவன் என்னங்க பேசுறான்? நீங்க வாயை திறக்காம இருக்கிங்க, எடுத்து சொல்லுங்க” என கணவனை சாடிய அமிர்தவள்ளி, பெரிய மகன் மருமகளையும் பார்வையால் துணைக்கழைத்தார்.
“விருப்பத்தோட வாழுறாங்களா இல்லையானு நமக்கு தெரியாது, ஆனாலும் தேவராஜ் இதுவரை நவீனாகிட்ட சத்தமா பேசியோ, சண்டை போட்டோ நாம யாரும் பார்த்ததில்ல. நவீனாவும் பெருசா தேவராஜை குறை சொன்னதில்ல.
டைம் எடுத்தாலும், எல்லாம் சரியாகும்ன்ற நம்பிக்கை இரண்டு பேருக்குமே இருக்கலாம். புருசன் பொண்டாட்டி விசயத்துல நீ தலையிடாத” என்றான் தேவேந்திரன்.
பொற்செல்வன் தந்தையைப் பார்க்க, தேவேந்திரனும் தந்தையைத்தான் பார்த்தான். பொற்செல்வன் எத்தனை பெரிய விசயத்தை சொல்லியிருக்கிறான், ஆனாலும் அப்பா தடுக்கவில்லையே, அப்படியானால் விவாகரத்து விசயம் அப்பாவிற்கு முன்பே தெரிந்திருக்குமோ என்று யோசித்தபடி நவீனாவைப் பார்த்தான்.
செல்வா சொல்வது போல நவீனாவும் விவாகரத்து வேண்டாம் என்று சொல்லவில்லையே, இவ்வீட்டினில் பொற்செல்வனுக்கு தெரிந்தது நமக்கு தெரியவில்லையே.
தொழிலில் கொள்ளை லாபம் பார்க்கும் நான்… குடும்பத்தை பார்க்க தவறிவிட்டேனே… நவீனா நல்ல பெண்… அவளுக்கா இப்படி நடக்க வேண்டும் என்று வருந்தினான் தேவேந்திரன்.
தனக்காக பொற்செல்வன் ஏன் பேச்சு வாங்க வேண்டும் என்று, “சின்னவரை திட்ட வேண்டாம். நான்தான் டிவோர்ஸ் பண்ண முடிவெடுத்திருக்கேன்” என்ற நவீனா மாமனார் மாமியார் முகத்தை பாராமல் உள்ளே சென்றிருந்தாள்.
“ம்மா, புருசன் பொண்டாட்டினா சண்டை வரத்தான் செய்யும். நவீனா எதோ கோபத்துல பேசிட்டு போகுது. பேசி சரி பண்ணிடலாம், கவலைப்படாதிங்க” என்றான் தேவேந்திரன்.
செந்தமிழ்செல்வியிடமிருந்து குறுஞ்செய்தி வர, இவளா? என கோபப்பட்டபோதும் செய்தியை பார்க்காமல் இருக்க முடியவில்லை. பேச வேண்டும் என்று செய்தி அனுப்பியிருந்தாள்.
நம்மளை சோதிக்கன்னே இருக்கா என நினைத்தபடி பதில் அனுப்பாமல் அச்செய்தியையே பார்த்திருந்தான்.
‘ரொம்ப முக்கியமான விசயம் பேசனும். கால் பண்ணுங்க, உங்க கால்க்காக வெய்ட் பண்ணிட்டிருப்பேன்’ என்று அடுத்த குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தாள் செந்தமிழ்செல்வி.
இங்கே அன்னையின் மனதை மாற்ற நினைத்து, “ஜெயப்ரதா வீட்டுல கல்யாணத்தைப் பத்தி பேசினாங்களாம்மா?” என்றான் தேவேந்திரன்.
“அதைபத்திதான் இன்னைக்கு பேச நினைச்சேன், நவீனா பேச்சுல எனக்கு எல்லாம் மறந்து போய்டுச்சு தேவேந்திரா, அடுத்த மாசமே கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொல்றாங்க, ஆனா நம்ம வீட்டு நிலைமையை பார்த்தியா?” என்றார் வேதனையோடு.
மகன் சொல்வதும் சரியெனப்பட, “சம்மந்தி வீட்டுல அடுத்தமாசம் கல்யாணம் வச்சிக்கலாம்னு சொன்னாங்க செல்வா. வெளிப் பிரயாணம்லாம் குறைச்சுக்கோ, கல்யாண வேலை பார்க்கனும்” என்றார்.
“ம்ப்ச் ம்மா… இப்போ என் கல்யாணம்தான் ரொம்ப முக்கியமா? ஆல்ரெடி வாழ வந்த பொண்ணு வாழ்க்கையை இழந்து நிற்குறதெல்லாம் உங்களுக்கு கண்ணு தெரியல, முதல்ல அதை சரி செய்வோம், என் கல்யாணத்தை அப்புறம் பார்க்கலாம்” என்று கடுகடுத்தபடி வெளியே வந்து செல்விக்கு அழைத்தான்.
இவள் அழைப்பை ஏற்க, “போன்ல பேசவெல்லாம் எனக்கு நேரமில்ல, நைட் வரைக்கும் நான் பிஸி. நாளைக்கு நேர்ல மீட் பண்ணலாம்” என்றான்.
“நான் இன்னைக்கு ஈவ்னிங் கிளம்பிடுவனே” என இவள் கவலையாய் சொல்ல,
“உனக்கு எது முக்கியமோ அதை மட்டும் பாரு, என்னை இம்சை பண்ணாத” என இணைப்பை துண்டித்தான் கோபமாக.
தேவராஜைப் பற்றி அவனின் வெகு சில நண்பர்களில் ஒருவனான சுமனிடம் தகவல் கேட்டிருந்தான். “தேவா என்னோட இப்போ டச்ல இல்ல” என்றான்.
சுமனின் பதட்டம் அறிந்தபோதும், அவனிடம் மேற்கொண்டு விசாரிக்காமல், எதாவது தெரிந்தால் தனக்கு தெரியப்படுத்த கோரிக்கை விடுத்து வந்தவன், அன்றிலிருந்தே சுமனை கண்காணிக்க சுந்தரை நியமித்தான் பொற்செல்வன்.
முக்கிய தகவல் சொல்ல வேண்டும், போனில் வேண்டாம், நேரில் சொல்கிறேன் என்று சுந்தர் சொல்லியிருக்க, அவனை காணத்தான் தற்போது பொற்செல்வன் கிளம்பினான்.
நிச்சயம் அண்ணியைப் பற்றி சொல்லத்தான் செந்தமிழ்செல்வி அழைத்திருப்பாள். தனக்கும் அவள் சொல்லும் தகவல் மிகவும் உபயோகமாக இருக்கும்தான், ஆனால் அதைவிட சுந்தரை காண்பது அவசியமாக இருக்கவே, அவளைப் பார்ப்பதை தவிர்த்து, சுந்தரை காண கிளம்பியிருந்தான்.
சுந்தர் இருக்கும் இடத்திற்கு செல்வதற்குள் இன்று பார்த்தே ஆக வேண்டும் என்று விதவிதமாக பல குறுஞ்செய்திகளை அனுப்பியிருந்தாள் செல்வி. சுந்தரை நேரில் பார்த்து பேசிய பின்னே மொபைல் பார்க்கும் நிலையில் இல்லை பொற்செல்வன்.
காதல் தோல்வி, இல்லையேல் மனவாழ்வில் ஈடுபாடின்மை போன்ற விசயங்களாக இருக்கும், மனோதத்துவ நிபுனரிடம் செல்ல வலியுறுத்தலாம் என்றுதான் நினைத்தான். ஆனால் அப்படி ஏதும் இல்லாமல் சுந்தர் சொன்ன விசயங்கள் பொற்செல்வனை நிலையிழக்கச் செய்தது.
நவீனா பற்றிய கவலை குறைந்து, முதலில் அண்ணனை இவ்விசயத்திலிருந்து எப்படி மீட்டெடுப்போம் என்ற கவலையும் வேதனையும் அதிகமானது. சுந்தர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். தீர ஆராயாமல் சொல்லமாட்டான், என்ன செய்து இவ்விசயத்திலிருந்து அண்ணனை விடுவிக்கலாம் என்று தீவிரமாக யோசித்தவனுக்கு எப்படியாகினும் தன் ஒருவனால் இவ்விசயத்தை சரி செய்ய முடியாதென்று புரிந்தது.
பெற்றோருக்கு தெரியாமல் முடிக்க வேண்டும். தேவராஜ் ஒத்துழைத்தால் வேலை சற்றே சுலபமாகும். ஆனால் அண்ணனிடம் பேசினால் நிச்சயம் தீர்வு கிடைக்காது.
கடக்க முடியாத சூழல் என்பதால்தான் அண்ணியை விவாகரத்து செய்யும் முடிவிற்கு வந்திருக்கிறார், தன்னிலை என்னவானாலும் அண்ணியின் வாழ்வை பாதித்துவிடக்கூடாது என்று எண்ணுகிறார்.
இப்படி நிலைக்கு கொண்டு வந்து விட்டுவிட்டாரே, என்ன அவசியத்திற்காக இச்செயலில் இறங்கியிருப்பார்? என்று நினைக்க நினைக்க கோபம்தான் அதிகமானது.
செம்மரம் தொழில் செய்வதால் பிரபல ரௌடிகளில் சிலரும் தேவேந்திரனுக்கு பழக்கமுடையவர்கள். தேவேந்திரன் மூலம் பொற்செல்வனும் அவர்களை அறிவான்.
பொற்செல்வனின் தொழிலுக்கும் பல இடையூறுகள் வரும். கவுன்சிலர் முதற்கொண்டு எம்.எல்.எ வரை வருடத்திற்கொரு முறை கவனித்தாக வேண்டும். அவ்வகையில் பொற்செல்வனுக்கும் பல அதிகார பலமுள்ளவர்கள் பழக்கம்தான்.
எப்படிபட்டவர்களுக்கும் இதுவரை கொடுத்துதான் பழக்கபட்டிருந்தானே அன்றி ஒருவரிடமும் உதவி கேட்டு நின்றதில்லை. அதோடு இவ்விசயத்தில் யாரை நம்புவது? விசயம் வெளியில் தெரிந்தால் குடும்ப கௌரவம் பாதிக்கபடுவதோடு, தேவராஜ் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் என்ன செய்வதென்றும் யோசித்தான்.
அப்படி யார் நம்பிக்கையானவர் என்று யோசிக்க, குடும்ப வக்கில்தான் சரியானவர் என்று தோன்றியது. வக்கிலுக்கு அழைத்துப் பேச, முக்கிய கேஸிற்காக வெளியில் இருப்பதாக சொன்னவர், என்ன விசயம் என கேட்டார்.
பொற்செல்வன் நேரில் பேச வேண்டும் என்று சொல்ல, நாளை சந்திப்பதாக சம்மதித்தார். இந்த நிலையில் வேலையில் கவனம் செலுத்துவது மிகக்கடினம்.
அஸ்வத் உண்டானா என்று குதிரையை பராமரிப்பவரிடம் கேட்டு, அவன் மீது ஏறியமர்ந்துவிட்டான். எஜமானனின் கட்டளையில்லாமல் போனாலும், வழக்கமாக எஜமானோடு செல்லும் மைதானத்திற்குள் சென்றிருந்தான் அஸ்வத்.
தேவராஜ் வீட்டிற்கு வந்து நான்கு நாள்கள் ஆகியிருந்தது. எங்கிருக்கிறாரோ? மனம் மாற முயற்சித்து துன்பத்தில் மாட்டிக்கொண்டாரோ? நிச்சயம் குடும்பத்தை நினைத்துதான் வருந்திக்கொண்டிருப்பார் என்று எண்ணங்கள் அண்ணனை சுற்றியே வலம் வந்தது.
இப்படி இருக்கும் ஓர்நாளும் யோசித்ததில்லை பொற்செல்வன். ஏன் குடும்பத்தாரும் கூட யோசித்திருக்கமாட்டார்கள். அண்ணனை பிரிய மனமில்லாத நிலையில் வற்புறுத்தல் காரணமாக விவாகரத்து கேட்கும் அண்ணியின் வேதனை ஒருபுறம்…
மகன் மருமகளை எப்படியாவது வாழவைத்திட வேண்டும் என்ற அன்னையின் தவிப்பு ஒருபுறம்… குடும்ப கௌவரவம் நிலைகுலைந்திடுமோ என்ற தந்தையின் மனக்கவலை ஒருபுறம்…
இப்படிப்பட்ட நிலையில் தேவராஜின் கசப்பான பக்கங்கள் மனதை பலமாக தாக்கியிருந்தது. பல சிந்தனைகளோடு குதிரை மீது சவாரி செய்து கொண்டிருந்தான் பொற்செல்வன்.
எப்படி இதை சரி செய்வேன் என்ற கவலையை போக்கி, இத்தனை கோடி சொத்திருக்கிறது. பணத்திற்காக மட்டும் அல்லாமல் தனக்காக உதவி செய்ய பலபேர் இருக்கும்போது நம்மால் செய்ய முடியாதா? அண்ணனை மீட்காமல் போனால் நானென்ன ஆண்பிள்ளை?
அவ்விசயத்திலிருந்து அண்ணனை மீட்டுவிட்டால் மற்ற பிரச்சனைகள் தன்போல் சரியாகிவிடும் நம்பிக்கையை வரவழைத்துக்கொண்டிருந்தான்.
குதிரை செந்தமிழ்செல்வியிடம் வந்து நின்ற பின்னேதான் அவள் அங்கு இருப்பதை கண்டான்.