Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 7.2

வீட்டிற்குள் வந்ததும் பையை கோபமாக எறிந்து, “நினைச்சதை சாதிச்சிட்டான்” என்று முணுமுணுக்க, அது சாம்பவியின் காதிலும் பட, “யாரை மரியாதையில்லாம பேசுற செல்வி?” என முறைத்தார் மகளை.

“கிடைச்ச வேலை போய்டுச்சு, கோபத்துக்கு மரியாதை தெரியுமா?” என்றாள் முறைப்பாகவே.

அன்று மகள் அத்தனை கோபமாக பேசிய பின்னேயும், இன்று இவளின் பாதுகாப்பிற்காக பொற்செல்வன் பார்க்கிறான். அமிர்தாம்மாவின் வீட்டிற்கு ப்ரியமாக செல்பவள் சில மாதங்களாக அதனை தவிர்த்திருந்தாள். இணைபிரியா நண்பர்களாக இருந்தவர்களுள் ஏதோ நிகழ்ந்திருக்கிறது என்று சாம்பவிக்கு தோன்ற, “செல்வா தம்பியை இப்படி மரியாதை இல்லாம பேசமாட்டியே, உங்களுக்குள்ள என்ன பிரச்சனை செல்வி?” என்றார்.

“பிரச்சனையா? அதெல்லாம் ஒன்னுமில்லம்மா”



Advertisement

சாம்பவி நம்பாமல் பார்க்க, “பிரச்சனைனா உன்கிட்ட சொல்லாம யார்கிட்டம்மா சொல்லப்போறேன்?” என்றாள்.

மகள் தன்னிடம் ஏதும் மறைக்கமாட்டாள் என்று தன்னை சமாதானம் செய்துகொண்டார். அன்னையின் முகம் இலகுவானதும், “எதுக்காக நான் வெளில வேலைக்கு போக வேண்டாம்னு சொல்றாங்க? உன்கிட்ட எதோ சொல்லியிருக்காராம்” என்றாள்.

“இப்போ புதுசா ஒரு ப்ராடக்ட் லான்ச் பண்ணினாங்கள்ல? அதுல எதோ பிரச்சனை ஆகிடுச்சாம். திறமையை புதுசா கண்டுபிடிக்கிறதுல காட்டுறதை விட்டுட்டு யார் புதுசா கண்டுபிடிக்கிறாங்க, அதை எப்படி கெடுக்கலாம்னே இருப்பானுங்க போல. செல்வாவோட நேருக்கு நேர் மோத முடியாம, முதுகுல குத்த பார்க்குறானுங்க.

Advertisement

செல்வா தம்பியோட சேர்த்து வச்சு உன்னை நிறைய இடத்துல பார்த்திருக்கானுங்களாம், உன்னை பர்டிகுலரா நேம் சொல்லி விசாரிச்சிருக்கானுங்க. அவரால உனக்கு ஏதும் ஆகிடக்கூடாதுனு ரொம்ப பயந்துக்கிறார். ஒன்னு இரண்டு மாசத்துல எல்லாம் சரி பண்ணிடறாராம். இந்த வேலை போய்டுச்சினா வேற வேலை அவரே பார்த்துக்கொடுக்குறாராம்” என்றார்.

Advertisement

அன்னை இத்தனை சொன்னபோதும், இப்படி பிரச்சனை இருக்கும் என்றெல்லாம் நினைக்கவில்லை. ‘எப்படிலாம் பேசி சமாளிச்சிருக்கான்’ என செல்வி நினைத்திருக்க, “எவ்வளோ பெரிய விசயம் சொல்லிட்டிருக்கேன்? என்ன செல்வி அமைதியா இருக்க?” என முறைத்தார் மகளை.

“நான் பேசி மட்டும் என்ன ஆகப்போகுதும்மா? இந்தியால மட்டுமில்லாம அதர் கன்ட்ரீஸ்க்கும் ப்ராடக்ட் போகுது. கோடி கோடியா சம்பாதிக்கிறாங்கள்ல? இப்படி பிரச்சனையெல்லாம் வரத்தான செய்யும்? அதெல்லாம் சமாளிப்பாங்க. நீ கவலைப்படாத” என்றாள் அசால்ட்டாக.

தந்தை வீட்டில் வளரும் வரை செந்தமிழ்செல்வியின் குணம் வேறு. அப்பொழுது அவள் சிறுபெண், பணம், உழைப்பின் அருமை பெரிதாய் தெரியாது. வீட்டில் வேலை பார்க்கும் ஆள்களிடமும் அதிகாரமாகத்தான் இருப்பாள்.

Advertisement

இங்கே வந்த பின்னேதான் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட மக்கள் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்று உணர்ந்தாள். அதனை அன்னையிடம் சொல்லியும் வருந்துவாள்.

உழைப்பை மிஞ்சிய பணத்தை ஊதியமாக வழங்குகிறார்கள் என்று சாம்பவி சொல்லும் போது, ஆமாம்மா… பணம் இருக்கும் எல்லார்கிட்டயும் இந்த குணம் வராது. இன்னும் இன்னும் இவர்களுக்கு பணவரவு அதிகமாக வேண்டும் என்பாள்.

மழையால் காய்கறிகள் வீணாகிப்போனால், அத்தனை உழைப்பும் வீணாகிப்போனதே என்று பொற்செல்வனை விட இவள்தான் அதிகம் வருந்துவாள்.

இப்படிபட்ட மகள்தான் இன்று எத்தனை பெரிய பிரச்சனைக்கு அலட்டாமல் பதில் சொல்கிறாள் என்று வருத்தத்தோடு பயமும் வந்தது. ஆம்… பயம்தான். எங்கே அவளின் தந்தை, தாத்தாவின் குணம் எட்டிப்பார்க்கிறதோ என்று பயந்துபோனார்.

அன்னையின் வாடிய முகம் கண்டு, “ம்ப்ச் என்னம்மா? செல்வா சார் எல்லாத்தையும் ஈஸியா சமாளிச்சிடுவார்ன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. அதனால அவங்க பிரச்சனை பத்தின கவலை எனக்கு இல்லை. ஆனா எனக்கு திரும்ப முதல்லயிருந்துயில்ல வேலை தேடனும், நீ என்னைப் பத்தி யோசிம்மா” என்றாள்.

“உன்னைப் பத்தி புதுசா ஒன்னும் யோசிக்க இல்ல. இந்த வேலை போனதுல எனக்கு சந்தோசம்தான். இரண்டு நாள் முன்னாடி புரோகர்கிட்ட உன் போட்டோ கொடுத்து, ஜாதகமும் கொடுத்திருக்கேன். கல்யாணத்துக்கு தயாராகு”

“ம்மா, நான்தான் ஒரு வருசம் டைம் கேட்டேனே, அதுக்குள்ள எதுக்கு போட்டோ கொடுத்திங்க?”

“இன்ஸ்டண்ட்டாலாம் மாப்பிள்ளை பிடிக்க முடியாது. இப்போயிருந்து பார்த்தாதான் சரியா இருக்கும்னு அப்போவே சொல்லிட்டேன். மாப்பிள்ளை அமைஞ்சிட்டா அஞ்சாறு மாசம் டைம் கேட்டுக்கலாம்”

“ஆறு மாசத்துல கல்யாணமா? விளையாடுறிங்களா?” என முறைத்தாள்.

“எத்தனை மாசம் டைம் கொடுத்தாலும் உனக்கு பத்தாது. நீ வெளில வேலைக்கு போறது கூடத்தான் எனக்கு பிடிக்கல, ஆனாலும் போனதான? உனக்கு பிடிக்காத பையனை கட்டி வைக்கமாட்டேன்.

நீ மறுக்காத அளவுக்கு பையனை உன் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தறேன். நியாயமான காரணம் இருந்தா வேண்டாம்னு சொல்லலாம். நீ மறுக்க காரணம் இல்லைனா உடனே கல்யாணம்தான்” என கட்டளையாக சொல்லி,

“எனக்கு நான்வெஜ் சாப்பிடனும் போல இருக்கு, போய் எடுத்துட்டு அப்படியே கொஞ்சம் ஸ்னேக்ஸ் வாங்கிட்டு வரேன்” என்று கிளம்பினார் சாம்பவி.

சாம்பவி சென்று அரைமணி நேரத்தில் அழைப்பு மணி ஒலிக்கவே, அதுக்குள்ள போய்ட்டு வந்துட்டாங்களா என வியந்தபடி கதவைத் திறந்தாள் செந்தமிழ்செல்வி.

சாம்பவியின் பெற்றோர் வந்தனர். தனது அன்னை வழி தாய் தந்தையோடு சிறு வயதில் பெரிதாக ஒட்டமாட்டாள்தான். ஆனாலும் அவர்கள் மீது வெறுப்பெல்லாம் இல்லை செல்விக்கு.

தனது தந்தைக்கு இப்படி பயப்படுகிறார்களே என்றும், பெற்ற மகளுக்காக கூட தந்தையை கேள்வி கேட்க இயலாதவர்களாக இருக்கிறார்கள் என்றும் மிகுந்த வருத்தம் உள்ளது.

பல மாதங்களுக்குப் பிறகு வந்திருக்கிறார்கள் என “வாங்க பாட்டி” என்று சிரித்த முகத்தோடு உள்ளே அழைத்தாள்.

உள்ளே வந்தவர்கள், “சாம்பவி எங்க?” என்றனர்.

“கண்ணு முன்னாடி நானிருக்கேன், என்னை விசாரிக்காம அம்மாவை கேட்குறிங்க, எதுக்கு இவ்வளோ பதட்டம்? அப்பா ஏது போன் செய்தாரா? முதல்ல ரிலாக்ஸ் ஆகுங்க” என்று தண்ணீர் கொடுத்தாள்.

வாங்கிப் பருகிய பின்னேயும் “அம்மா எங்க போயிருக்கா?” என்றார்.

“அம்மா மார்கெட் போயிருக்காங்க, என்ன விசயம் பாட்டி?”

“வேணாம், சாம்பவி வந்திடட்டும்” என்று காத்திருக்க, அரைமணி நேரம் கழித்து வந்தார் சாம்பவி.

பெற்றோரை பார்த்ததும் விசயம் புரிந்தவராய், “நல்லா இருக்கிங்களாப்பா? அதுக்குள்ள விசயம் தெரிஞ்சிடுச்சா?” என்றார் இலகுவாக.

“மருமகன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடு சாம்பவி, எப்படியும் புரோகர் சொல்லிடுவார். அவர் பொண்ணுக்கு அவர்கிட்ட கேட்காம மாப்பிள்ளை பார்க்க சொல்லியிருக்க. நீ மாப்பிள்ளையை பிரிஞ்சிருக்கேனு தெரிஞ்சா பொண்ணு கேட்டு வரவங்களும் உன்னைத்தான் தப்பா நினைப்பாங்க. புருசன் பொண்டாட்டி சண்டையை புள்ள கல்யாணத்துல காட்டாத.” என்றார்.

“அப்பா மாப்பிள்ளை பார்க்கனுமா? நான் பார்க்கட்டுமானு செல்விகிட்ட கேட்டேன், அவ என்னை பார்க்க சொல்லிட்டா”

“ஓ… அப்போ நாங்களும் இதுல தலையிட வேண்டாம்னு சொல்ற, அப்படித்தான?”

“ஆமாம்மா” என்றார்.

சாம்பவியின் பெற்றோர் முகம் வாடிவிட, அதனை பெரிதாய் கண்டுகொள்ளவில்லை சாம்பவி. “செல்வி, டிவி ஆன்பண்ணி விடு, தாத்தா பாட்டி பார்த்திட்டிருக்கட்டும், நான் சமைக்கறேன்” என்று கிச்சன் சென்றார்.

பெரியவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மருமகன் இவர்களிடம்தானே வந்து கத்துவார். மகளுக்கு திருமண வயது வந்துவிட்டது, வரன் பார்க்கவில்லையா என்று கேட்பதுபோல விசயத்தை சொல்லிவிடலாம் என்ற யோசனை வந்தது.

அழைப்பு வந்தது சாம்பவியின் அன்னைக்கு. ‘அச்சோ மருமகனா? நாம சொல்றதுக்கு முன்னாடி விசயம் போய்டுச்சா?’ என்ற அச்சத்தோடு அழைப்பை ஏற்றார்.

“என் பொண்ணு சென்னைக்கு வேலைக்கு போறாளாம், உங்க பொண்ணோட சேர்த்து நீங்களும் என்கிட்ட மறைச்சிட்டிங்க. என் இளவரசியை அஞ்சுக்கும் பத்துக்கும் வேலை பார்க்க வச்சிருக்கிங்க” என கத்தினார் தாமோதரன்.

“இல்லங்க மாப்பிள்ளை, உங்களுக்கு யாரோ தப்பா சொல்லியிருக்காங்க, செல்வி இங்கதான் இருக்கா”

“எனக்கு சொன்னவங்க தப்பா சொல்ல வாய்ப்பே இல்ல”

“நான் சாம்பவி வீட்டுலதான் இருக்கேன், செல்வி கூட வீட்டுலதான் இருக்கா” என்றார் பவ்யமான குரலில்.

“வீடியோ கால் வரேன், காட்டுங்க” என்று தாமோதரன் மகளை காணும் ஆவலோடு அழைக்க, “இப்போ இல்லைனாலும் இரண்டு மாசம் கழிச்சு வெளில வேலைக்கு போகத்தான் போறேன் பாட்டி, யாரும் என்னை ஒன்னும் செய்ய முடியாது” என்று பாட்டி மொபைலை திருப்பும் முன்னே உள்ளே சென்றிருந்தாள் செந்தமிழ்செல்வி.

மகள் குரல் கேட்டதும் சென்னைக்கு செல்லவில்லை என்று நம்பினார் தாமோதரன். மருமகனின் நிம்மதியான பார்வையில் சற்று தைரியம் வர,  “செல்விக்கு வரன் பார்க்கலாமில்லங்க மருமகனே, அவளுக்கும் கல்யாண வயசு வந்துடுச்சே” என்றார்.

உள்ளிருந்த சாம்பவிக்கு அன்னையை என்ன செய்யலாம் என்று கோபம் வந்தது சாம்பவிக்கு. மாமியாரின் வார்த்தையிலும், முக பாவனையிலும் மகளுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கிறாள் என்று புரிய, “என் பொண்ணு கழுத்துல என் அனுமதியில்லாம எவனும் தாலி கட்ட முடியாது அத்தை. அதைபத்தி கவலைப்படாதிங்க” என்றார்.

சாம்பவியின் அன்னை முகம் தடுமாற்றத்தை காண்பிக்க, “என்னாச்சு அத்தை? அங்க ஏதும் பிரச்சனை இல்லையே” என்றார் தாமோதரன்.

“தரகர் செல்விக்கு ஒன்னு இரண்டு இடம் சொன்னாராம்”

“என் பொண்ணுக்கு மாப்பிள்ளை காட்டுற அளவுக்கு அங்க எவன் இருக்கான்? செல்விம்மா அந்தஸ்த்துக்கு தகுந்தமாதிரி வரன் என்னால மட்டும்தான் பார்க்க முடியும், உங்க பொண்ணை ஒழுங்கா இருக்கச் சொல்லுங்க” என்றார் கட்டளையாக.

சாம்பவி அன்னை முகம் நிம்மதியை காட்ட, “என் பொண்ணுகிட்ட கொடுங்க அத்தை” என்றார் கனிவாக.

“செல்வி, செல்வி” என்று அறையருகே நின்றபடி அழைக்க, சிறு கத்தியோடு வெளியே வந்தவளைப் பார்த்ததும் அரண்டு போனார் சாம்பவியின் அன்னை.

“மொபைலை திருப்புனிங்க, என் கையை கிழிச்சுக்குவேன்” என கத்தினாள் செல்வி.

பதறிய தாமோதரன், “நான் வைக்கிறேன் அத்தை” என்று இணைப்பை துண்டித்த பின்னேதான் கிச்சனிலிருந்து வெளியே வந்தார் சாம்பவி.

கத்தியை கீழே போட்டு, “ஏன் பாட்டி இப்படி பண்றிங்க?” என்று கண்ணீரோடு தளர்வாய் கேட்டாள் செல்வி.

“என்ன இருந்தாலும் உன் அப்பா செல்விம்மா”

“யார் இல்லைனு சொன்னது? அவர்தான் என் அப்பா. ஆனா என் அம்மாவை யோசிக்காதவருக்கு என் மனசுலயும் இடமில்ல. இங்க வரும்போது அவர் கால் பண்ணினா இனி அட்டன் பண்ணாதிங்க. உங்களால எங்கப்பாவை எதிர்க்க முடியலன்றதுக்காக எங்கம்மா நிம்மதியை கெடுக்காதிங்க” என்று கோபத்தோடு சொல்லி வெளியே செல்ல, அங்கே பொற்செல்வனின் விசுவாசி ராகுல் இருந்தான்.

“செல்வி, என்னாச்சு? கண்ணெல்லாம் கலங்கியிருக்கு?” என்றான்.

“ப்ச் ஒன்னுமில்லை சார், ஆமாம்… நீங்க என்ன இங்க இருக்கிங்க?”

“உங்க பாதுகாப்புக்காக செல்வா சார் இருக்க சொன்னார்”

“எங்களை பார்த்துக்க எங்களுக்கு தெரியும், நீங்க கிளம்புங்க. இப்படி எங்க வீட்டையே சுத்தி நடந்திட்டிருந்தா அன்கம்ஃபர்டபிளா இருக்கும்”

“சரி செல்வி” என்று அவ்விடம் விட்டு சற்று தள்ளி வந்து, செல்வாவிற்கு அழைத்த ராகுல், “சார், இங்க பாதுகாப்புக்கு வேற ஆளை போட்டா பெட்டரா இருக்கும், நான் இங்கயிருக்கிறது செல்விக்கு பிடிக்கல” என்றான்.

“இன்னைக்கு ஒருநாள் இரு. நாளைலயிருந்து வேற ஆள் போட்டுக்கலாம்” என்று இணைப்பை துண்டித்தான் பொற்செல்வன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!