ஆட்டோவில் இருந்து இறங்கியதுமே, “தாத்தா..” என்று வராஹி ஓடி வந்து அவரை கட்டிக்கொண்டாள். இந்த கொஞ்ச மாதங்களில் தாத்தாக்கும் பேத்திக்கும் இடையில் நேசம் அதிகரித்து இருந்தது.
Advertisement
“என்ன வரா? எப்படி இருக்கீங்க எல்லாரும்? என்ன சொல்றா உன் அத்தை” என்றார் அவரும் குதூகலமாக.
மணிமேகலை டென்ஷனாக ‘வாங்க அப்பா’ என்றார்.
Advertisement
Advertisement
“என்ன மணி, ஏன் டென்ஷனா இருக்க? எதாவது பிரச்சனையா?” ஒரு நிமிடத்தில் அவர் மனம் கடிவாளம் இல்லா குதிரையைப் போல பலதையும் எண்ணி தவித்து போனது.
“தாத்தா இன்னிக்கு அத்தைக்கு ரிசல்ட், அதான் அத்தை டென்ஷனா இருக்காங்க. நீங்க பயப்படாதீங்க” என்று வல்லபன் தான் பதில் கூறினான்.
Advertisement
“அது எல்லாம் நீ நல்ல மார்க் தான் மணி வாங்குவ? எதுக்கு டென்ஷன்?” என்றார் மகளை பார்த்து ஆதுரமாக.
பின் அவர் சென்று குளித்து வர, காலை உணவுடன் கீழே வந்தார் பத்தும்மா.
“வாம்மா தங்கச்சி” என்றார் உற்சாகமாக.
நல விசாரிப்புக்கு பின், ‘வாங்க அண்ணா, சாப்பிடலாம்’ என்று அவரே உணவை எடுத்து வைத்தார். வராஹியும் வல்லபனும் பள்ளிக்கு தயார் ஆகி வந்து அமர்ந்தனர்.
“மணி நீ வாங்கி வை” என்று சுந்தர்ராஜன் கண்களாலும் கைகளாலும் மகளுக்கு செய்கை காட்டினார். அவரது செய்கையை எல்லாம் மணிமேகலை கவனிக்கவில்லை. ஆனால் பிள்ளைகளும் பத்தும்மாவும் கவனிக்கத்தான் செய்தனர்.
இத்தனை வருடங்களுக்கு பிறகு படித்து பரீட்சை எழுதும்பொழுது கூட அவருக்கு டென்ஷனாக இல்லை. ஆனால் ஃபெயில் ஆகிவிட்டால் எல்லாரும் என்ன நினைப்பார்கள். அதுவும் ஹரியும் அம்மாவும் அவளை இளக்காரமாக பார்ப்பார்களே என்ற பதட்டம் அவருக்குள் பிரவாகம் எடுத்தது.
“இல்ல பத்து நான் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்” என்று சலுகையாக கூறி அமர்ந்தே இருந்தார் மணிமேகலை.
சுந்தர்ராஜன் ‘என்ன இந்த பெண் இப்படி செய்யுதே, மாமியார் வேலை செய்ய இப்படி இருக்கலாமா? இத்தனை வருஷத்துக்கு பிறகு இப்ப தான் ஒரு நல்லது கூடி வருது. அதை கெடுத்துவிட கூடாதே’ என்று நினைத்து கொண்டே, மீண்டும் மகளுக்கு பலவாறு ஜாடை காட்டினார்.
அவர் கண்களை போட்டு உருட்டு உருட்டு என்று உருட்டுவதை பார்த்து அதற்கு மேல் தாங்க முடியாது என்று பொங்கி விட்டார் பத்தும்மா.
“இங்க பாருங்க அண்ணே, இரண்டு அடி வேணா கூட அடிச்சுக்கோங்க.. இப்படி கண்ணை கண்ணை உருட்டி கையை கையை ஆட்டி எதோ செய்றீங்களே.. அதை நிப்பாட்டுங்க.. பயமா இருக்கு” என்றார் பட்டென்று.
அவர் ‘ங்கே’ என்று விழிக்க.. வராஹியும் வல்லபனும் கிளிக் என்று சிரித்தனர்.
“இப்ப எதுக்கு அண்ணே, நீங்க இப்படி நாட்டியம் ஆடிட்டு இருக்கீங்க”
“என்னது நாட்டியமா?”
“அதுவும் சரி தான்.. நீங்க குரங்கு சேஷ்டை இல்லை பண்ணிட்டு இருக்கீங்க”
“என்னது குரங்கு சேஷ்டையா?”
“நானும் நேத்துல இருந்து பார்க்கிறேன், நான் என்ன சொன்னாலும் அதேய திருப்பி என்னதுன்னு சேர்த்து அதிர்ச்சியா கேள்வி கேக்குறீங்க?”
இவர்கள் பேசுவதில் கவனமில்லாமல் கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தார் மணிமேகலை.
“இல்லம்மா, நீயே உடம்பு முடியாத பொண்ணு. உன்னை வேலை செய்ய விடலாமா? அதான் மணியை கவனிக்க சொன்னேன்”
“பாவம், மேகாவே ரிசல்ட் நினைச்சு பயந்துட்டு இருக்கு.. விடுங்க ண்ணா இதுல எனக்கு என்ன கஷ்டம் இருக்கு. ஒரு நாள் என் கையால என் மருமகளுக்கு சமைச்சு கொடுக்கிறதுல என்ன இருக்கு சொல்லுங்க?”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே வந்தியத்தேவன் வந்துவிட்டார்.
“வாங்க வாங்க தம்பி” என்று பரபரப்பாக எழுந்தார் சுந்தர்ராஜன்.
“நீங்க உட்கார்ந்து சாப்பிடுங்க அங்கிள்..” என்று சகஜமாக கூறி வல்லபன் வராஹி இருவருக்கும் டிபன் பாக்ஸை கொடுத்தார்.
அதை வாங்கிக்கொண்டு பிள்ளைகள் பள்ளிக்கு கிளம்பிவிட்டார்கள்.
“உனக்கு ஆபிஸ்க்கு நேரம் ஆகுதே.. நீ கிளம்பலையா தேவ்” என்றார் பத்தும்மா.
“நான் கொஞ்ச நேரம் கழிச்சு போறேன் ம்மா..” என்றார் பல்லை கடித்து கொண்டு.
பின்னே வேலைக்கு கிளம்ப இருந்தவனை, ‘மேகாவுக்கு இன்னிக்கு ரிசல்ட்.. நீ கூட இருந்தா தான் கெத்தா இருக்கும்.. உனக்கு காதலிக்கவே தெரியலை, நான் சொல்ற மாதிரி செய்யுன்னு அவரை நிறுத்தி வைத்துவிட்டு இப்பொழுது கிளம்பலையா’ என்று கேட்டா என்ன சொல்லுவார்.
மணிமேகலை மிகவும் படபடப்பாக காணப்பட்டார்.
ஒரு வேலை ஃபெயில் என்று ரிசல்ட் வந்தால், வந்தியத்தேவன் தன்னை பற்றி என்ன நினைப்போரோ.. என்று வேறு கலக்கமாக இருந்தது.
“என்ன மேகா, எதுக்கு இவ்வளவு டென்ஷன்.. ரிலாக்ஸ் ஆகு.. கண்டிப்பா நல்ல மார்க் தான் வரும்.. இல்லைன்னாலும் அடுத்து என்னன்னு யோசிக்கலாம். இப்ப சாப்பிடு” என்றார் வந்தியத்தேவன் உரிமையாக.
“ரொம்ப நல்லா இருக்கு தம்பி” என்று அவருக்கு பதில் கூறி, பத்தும்மாவை ஒரு மாதிரியாக பார்க்கவும்,
அவர் அசால்ட்டாக என்ன என்பது போல திரும்பி பார்த்தார்.
“உங்க கையால உங்க மருமகளுக்கு சமைச்சதா சொன்னீங்க?” என்றார் அவர் விடாமல்.
“நான் வேற என் பிள்ளை வேற இல்ல அண்ணே. அதான் அப்படி சொன்னேன். நீங்க என்ன கல்யாணத்துக்கு முன்னவே என்னையும் என் பையனையும் பிரிச்சு பார்க்குறீங்க?” என்று கேட்டாரே பார்க்கலாம்.
“இல்ல இல்ல.. நான் அப்படி நினைக்கலை” என்று சுந்தர்ராஜன் பதறி பின் வாங்கிவிட்டார்.
பேசிக்கொண்டே தட்டில் இரண்டு சப்பாத்திகளை வைத்து, கொஞ்சமாக காய்கறி சப்ஜியை வைத்து மணிமேகலையிடம் கொடுத்தார்.
மணிமேகலை சாப்பிடாமல் இருக்கவும், அவரே சப்பாத்தியை பிய்த்து சப்ஜியுடன் அவர் வாய் அருகில் கொண்டுபோகவும், பெரியவர்கள் முன் என்ன இது என்று செல்லமாக வந்தியத்தேவனை முறைத்துவிட்டு அவரே சாப்பிட்டார்.
இன்னும் இரண்டு சப்பாதிகளை சாப்பிட்ட பிறகே விட்டார் வந்தியதேவன்.
பெற்றவரின் மனம் இதை எல்லாம் பார்த்து குளிர்ந்து தான் போனது. இப்படி பட்ட சலுகை எல்லாம் மகள் பிறந்ததில் இருந்தே அனுபவித்ததாக அவருக்கு நியாபகம் இல்லை. இனி எப்பொழுதும் என் மகள் மகழ்ச்சியாக வாழட்டும் என்று மனதார இறைவனை வேண்டிக்கொண்டார்.
பின் லாப்டாப் முன் அமர்ந்து ரிசல்ட்டிற்காக காத்து கொண்டிருக்க தொடங்கினார்கள் வந்தியத்தேவனும் மணிமேகலையும். அவர்களுக்கு கொஞ்சம் தனிமை கொடுத்து விட்டு, சுந்தர்ராஜனும் பத்தும்மாவும் முன்புறம் வாசலில் அமர்ந்து அடுத்து என்ன செய்யலாம் என்று பேசிகொண்டிருந்தார்கள்.
மணிமேகலை கைகள் எல்லாம் வேர்த்து போய் இருந்தது. வந்தியத்தேவன், மெல்ல அவர் கைகளை பிடித்து தட்டி கொடுத்தார்.
அடுத்த பத்து நிமிடத்தில் மெல்ல ஓபன் ஆனது ரிசல்ட் பக்கம்.
மணிமேகலை என்பது சதவீதகம் எடுத்து பாஸ் ஆகி இருந்தார்.
“கங்கிராட்ஸ் மேகா..” என்று தோளோடு அனைத்து கூறினார் வந்தியத்தேவன்.
மமணிமேகலையால் பதில் கூற முடியவில்லை. அமைதியாக அவர் தோளில் சாய்ந்து கொண்டார்.
“எனக்கு அப்பவே தெரியும், நீ நல்ல மார்க் தான் எடுப்பன்னு.. நீ தான் தேவை இல்லாம பயந்து சின்ன குழந்தையாட்டம் மூஞ்சியை தூக்கி வச்சிட்டு இருந்த.. இப்ப தான் உன் முகம் பார்க்க நல்ல இருக்கு.. ரொம்ப அழகா இருக்க இப்ப “
“உங்களுக்கு எப்படி சொல்ல.. எனக்கு ரொம்ப நாளா மாப்பிள்ளை பார்க்கிறாங்க.. அதுல பாதி பேர் என் தோற்றத்தை பார்த்து வேண்டாம்னு போயிடுவாங்க.. அவங்களை நினைச்சு எனக்கு வருத்தம் இருந்ததே இல்லை.. புறத்தோற்றத்துக்கு முக்கியம் கொடுக்கிற அவங்க அறியாமை தான் எனக்கு தெரியும்.. ஆனா மீதி நிறைய பேர், பொண்ணு படிக்கலைன்னு சொல்லி போயிடுவாங்க.. தோற்றத்தை குறை சொல்றவங்க அறியாமை உள்ளவங்களா இருக்கலாம், ஆனா படிக்காம நிக்குறது என்னுடைய முட்டாள்தனம்னு எனக்கு தோன்றும்.. பல நாள் அதை நினைச்சு அழுத்திருக்கேன். இப்ப தான் முதல் படியை தாண்டி இருக்கேன். அதான் இவ்வளவு டென்ஷன்..”
“புரியுது மேகா. இனி படிப்படியா நாம அடுத்த கட்டத்துக்கு போலாம். இப்ப வா அம்மாகிட்டயும் உங்க அப்பாகிட்டயும் சொல்லுவோம்”
மார்க்கை கூறியதும் பத்தும்மா மிகவும் மகிழ்ந்து மணிமேகலை கட்டிப்பிடித்து அவர் கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.
அவரும் பதிலுக்கு திரும்பி அவர் கன்னத்தில் முத்தம் வைத்தார்.. பார்க்கவே கவிதையாக இருந்தது.
“நீ கண்டிப்பா நல்ல மார்க் தான் வாங்குவேன்னு எனக்கு தெரியும். அதான் நேத்தே உனக்கு ஒரு கிபிட் வாங்கி வச்சிருந்தேன்.. இந்தா” என்று அழகாக கிபிட் ராப் செய்த ஒரு பரிசு பொருளை கொடுத்தார்.
சுந்தர்ராஜனுக்கு இன்று ரிசல்ட் என்று முன்னவே தெரியாது. தெரிந்து அளித்திருக்க வேண்டும் என்று இப்பொழுது தோன்றியது.
“ரொம்ப சந்தோசம் மணி.. அப்பா உனக்காக எதுவும் வாங்கிட்டு வரலை” என்றார் கொஞ்சம் சங்கடமாக.
“நீங்க வாழ்த்து சொன்னதே எனக்கு சந்தோசம் தான் ப்பா..” என்று முகம் மலர கூறினார் மணிமேகலை.
பின் ஆசையாக பத்தும்மா கொடுத்த பரிசை பிரித்து பார்த்தார்.
நான்கு புத்தகங்கள் இருந்தன..
“தேங்க்ஸ் பத்தும்மா” என்றார் மீண்டும்.
இருவரையும் ஆசையாக பார்த்துக்கொண்டிருந்தார் வந்தியதேவன்.
“நீ ஒன்னும் கவலை படாதே மேகா.. மிலிட்டரி காரன் ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரல.. அதான் ஒன்னும் கிப்ட் வாங்கிட்டு வரலை” என்று மகனின் காலை வாரினார் பத்தும்மா.
“அதானே, என் காலை வாரலைனா உங்களுக்கு தூக்கம் வராதே.. காலையில் இருந்து மேகாக்கு இது பிடிக்கும் அது பிடிக்கும்னு என்னை சமைக்க வச்சிட்டு.. இப்ப இப்படி வேற கோர்த்து விடறீங்களா?”
“வெட்டி வாய் வேலைக்காகாது மை சன்”
“பத்து, உங்களுக்கு முன்னவே தேவ் எனக்கு கிப்ட் கொடுத்திட்டாங்க” என்றார் மணிமேகலை லேசான வெட்கத்தோடு.
“அப்படி போடு.. குருவுக்கு மிஞ்சிய சிஷ்யனாகிடுவ போலயே மகனே..” என்று மேலும் கலாய்க்க,
“ஆளை விடுங்கம்மா நான் கிளம்புறேன்” என்று வந்தியத்தேவன் ஓடியே விட்டார்.
சுந்தர்ராஜனால் பார்வையாளராக மட்டுமே இருக்க முடிந்தது.
“சரி மேகா, நீ நிவேதாவுக்கு போன் பண்ணி சொல்லு, அப்புறம் வீட்லயும் போன் பண்ணி சொல்லு.. நான் கொஞ்ச நேரம் போய் படுக்கிறேன்” என்று கூறி சுந்தர்ராஜனிடமும் விடைபெற்று சென்றுவிட்டார்.
“ரொம்ப நல்லவங்களா இருகாங்க மணி. இப்ப கூட அவங்க மகன் என்ன கொடுத்தாருன்னு ஒரு பேச்சுக்கு கூட கேட்கலையே.. இப்படி எல்லாம் மாமியார் கிடைக்கிறது வரம் ம்மா..”
“ஆமா ப்பா” என்று கூறி அடுத்து நிவேதவிடம் நேரில் சென்றே கூறி வந்தார். நிவேதா மணிமேகலைக்காக ஒரு அழகிய புடவையை பரிசாக கொடுத்தார்.
சாம்பவிக்கும் மகாக்கும் அழைத்து கூற, அவர்களும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்த்து கூறினார்கள்.
அப்படியே திருமணம் முடிவானத்துக்கும் வாழ்த்து கூறினார்கள்.
மாலை பிள்ளைகள் வந்ததும் ஒரே கூச்சல் கொண்டாட்டம் தான். அன்றைய தினம் இந்த கொண்டாட்டத்தில் சென்றது.
மறுநாள் தான் சுந்தர்ராஜன் மணிமேகலையிடம் கல்யாணத்தை பற்றி பேசினார்.
“எனக்கு விருப்பம் தான் ப்பா.. நீங்க பத்துகிட்டே பேசி முடிவு எடுங்கப்பா..” என்று முடித்துக்கொண்டார்.
“இன்னும் என்ன மணி நீ பெயர் சொல்லி கூப்பிடற? இனி மரியாதையா கூப்பிட பழகிக்கோ ம்மா..”
“பத்துக்கு பதிலா அத்துன்னு வேணா கூப்பிடு” என்று வந்தார் பத்தும்மா..
உடன் வந்தியத்தேவனும் வந்தார்.
‘இந்த அம்மாகூட எப்படி பேச போறேன்னு தெரியலையே’ என்று கொஞ்சம் கலக்கமாக தான் இருந்தது சுந்தர்ராஜனுக்கு.
“அப்புறம் தங்கச்சி, நிச்சயம் கல்யாணம் எல்லாம் எங்க வச்சுக்கலாம் எப்ப வச்சுக்கலாம்னு பார்க்கலாமா?”
“தேவ்வுக்கு ரொம்ப ஆடம்பரமா செய்யறதுல இஷ்டம் இல்ல. எளிமையா செஞ்சா போதும்னு நினைக்கிறான். ஆனா பெண்ணை பெத்தவங்களா உங்க விருப்பமும் இதுல நாங்க பார்க்கணும். நீங்க என்ன நினைக்கறீங்க சொல்லுங்க? அப்புறம் என்ன செய்யலாம்னு முடிவு செய்யலாம் ”
அவர் மகளை தான் பார்த்தார். மகளது விருப்பம் தான் இதிலே முக்கியம்.
மணிமேகலை ஒரு விரிந்த புன்னகையோடு அமர்ந்திருந்தார். அவர் ஒரு கருத்தும் சொல்லவில்லை.
“மணிக்கு பெத்தவங்களா நாங்க நியாயமா நடந்துக்கிட்டது இல்லை. உங்களுக்கும் ஓரளவுக்கு தெரிஞ்சிருக்கும்” என்று ஆரம்பித்தார்.
“உக்கும்.. இந்த இத்துப்போன பிளாஷ்பேக்கை இன்னும் எத்தனை தடவை கேட்க வேண்டி வருமோ?” என்று சத்தமாக முனுமுனுத்தார் பத்தும்மா.
“இல்ல நான் என்ன சொல்ல வந்தேன்னா.. மணிக்கு பிடிச்ச மாதிரி எல்லாம் செய்யலாம்னு தான்” என்றார் சுருதி இறங்கிய குரலில்.
“ஹரி கல்யாணம் மாதிரி குலதெய்வ கோவில்ல வச்சுக்கலாமா? இல்லை உங்க பக்கத்துக்கு கோவில்ல செய்யணும்னாலும் சொல்லுங்க”
“முதல்ல ரெஜிஸ்டர் ஆஃபீஸ்ல கல்யாணத்தை முடிச்சிட்டு, அப்புறம் பெரியவங்க சொல்ற கோவில்ல நெருங்கிய சொந்தக்காரங்க நண்பர்களை மட்டும் கூப்பிட்டு மாலை மாத்தி தாலி கட்டிக்கலாம்னு நான் நினைக்கிறேன்” என்றார் வந்தியத்தேவன்.
“நம்ம சொந்த ஊர் தஞ்சாவூர்.. அவங்க கும்பகோணம்.. அதனால் ஊர்ல இருக்கிற கோவில்னா சொந்தகாரங்க வர சௌகரியமா இருக்கும் தேவ்” என்றார் பத்தும்மா.
“இல்ல பத்து, எனக்கு இங்க சென்னைன்னா கொஞ்சம் இலகுவா இருக்கும்” என்றார் மணிமேகலை.
“அப்புறம் என்ன அண்ணா, அதான் இரண்டுபேரும் அவங்க விருப்பத்தை சொல்லிட்டாங்களே.
முறைப்படி நிச்சயத்தை நம்ம வீட்டோட செஞ்சுப்போம். கல்யாணத்தை இங்கே பார்த்தசாரதி கோவில்ல வச்சுக்கலாம். இந்த மாச கடைசியா ஒரு முஹூர்த்தம் இருக்கு, அடுத்த மாசம் முதல் வாரத்தில் ஒரு முகூர்த்தம் இருக்கு. எங்களுக்கு ரெண்டும் ஓகே.. நீங்க வீட்ல பேசிட்டு சொல்லுங்க..”
“என் பெரிய பொண்ணுக்கு செஞ்ச மாதிரியே மணிக்கும் நாங்க நகை செஞ்சு வச்சிருக்கோம்.. அது எல்லாம் நாங்க குறை இல்லாம செஞ்சிடுவோம்”
“ஹா ஹா.. அது வேணும் இது வேணும்னு கேட்கிற ஆள் நாங்க இல்லை.. ஆனா மேகாக்கு செய்றது உங்க கடமை. அதை வாங்கிக்கிறதும் வேண்டாம் சொல்றதும் அவ உரிமை.. இதுல எங்களை உள்ளே கொண்டு வராதீங்க அண்ணே.. நீங்க பேசிட்டு சொல்லுங்க, அடுத்து ஆக வேண்டியதை பார்க்கலாம்” என்று கூறி தாயும் மகனும் கிளம்பி விட்டனர்.
இப்படி நல்ல மனிதர்களை போய் என்னவெல்லாம் பேசிவிட்டார்கள் மனைவியும் மகனும் என்று நினைத்து பெருமூச்சு விட்டார்.
மகள் அவளாக அழைத்து கூறட்டும் என்று பரிமளா இதுவரை அழைத்து பேசவே இல்லை.
“நான் போய் சமையல் வேலையை பார்க்கிறேன் அப்பா. கொஞ்ச நேரத்துல பசங்க வந்திடுவாங்க” என்று மணிமேகலை எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.
“சும்மா பார்த்திட்டே இருக்காம மணி நம்பருக்கு கால் போட்டிருந்தா இந்நேரம் பேசி இருக்கலாமே?”
“உக்கும்.. நான் தான் பேசணுமா? ஏன் அவ என்கிட்ட சொல்ல கூடாதா?”
“இங்க பாரு பரிமளா இந்த வீண் பிடிவாதம் வெட்டி வீராப்புக்கு எல்லாம் நேரம் இல்லை. இப்ப தான் மாப்பிள்ளையோட அம்மா வந்து பேசிட்டு போனாங்க, என்று நடந்த பேச்சு வார்த்தைகளை கூறினார்”
“என்ன என்ன.. நான் தானே பொண்ணோட அம்மா, நான் இல்லாம நீங்களாவே எல்லாம் பேசி முடிச்சிட்டீங்களா?” என்றார் புசுபுசுவென.
“இங்க பாரு, இப்பவும் நான் தான் உன்னை விட மனசு வராம போன் போட்டிருக்கேன். கல்யாணத்தை பத்தி பேசதானே நான் ஊருக்கு வந்தேன்.. என்ன ஏதுன்னு ஒரு தடவையாவது கேட்டியா?”
“——————-”
“இந்த ரெண்டு தேதில எது ஒத்து வரும்னு நம்ம ஜோசியர்கிட்ட ஒரு வார்த்தை கேட்டு சொல்லு. தேதி ஒத்து வந்ததும் நீ கிளம்பி உடனே இங்க வர வழியை பாரு. நான் மருமகளுக்கு போன் போட்டு உன்னை கூட்டிட்டு வர சொல்றேன்”
அதன் பிறகு பரிமளா எந்த பிகுவும் செய்யவில்லை. அப்படி செய்தால் அவர் இல்லாமலே மகளின் திருமணம் நடக்கும் என்று புரிந்து போனது.
தேதி முடிவானதும் சுந்தர்ராஜன் மற்ற மூன்று பிள்ளைகளுக்கும் அழைத்து பேசினார்.
பின் மீண்டும் அனைத்தும் ஜெட் வேகம் தான்..
ராமிற்கு லீவ் கிடைக்கவில்லை. அவரே தங்கைக்கு அழைத்து பேசினார். திருமணத்திற்கு பிறகு அவர்கள் அபார்ட்மெண்டிற்கும் போகும்படி கேட்டுக்கொண்டார்.
“நீ சொன்னதே சந்தோசம் தான் அண்ணா.. நானும் பசங்களும் இங்க நல்லாவே செட் ஆயிட்டோம். கொஞ்ச நாள் இங்கவே இருக்கோம். அப்புறம் பார்த்துக்கலாம்” என்று கூறி அவர் மனம் நோகாமல் மறுத்து விட்டார்.
“அண்ணாவும் வரலை, அப்புறம் மச்சான் முறை எல்லாம் நான் தானே செய்யணும்” என்று கெத்தாக சுற்றிக்கொண்டிருந்தான் ஹரிப்ரசாத்.
ஆனால், நிரஞ்சனும் நிவேதாவும் தான் மச்சான் முறை செய்வார்கள் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் மணிமேகலை.
தங்கையின் கல்யாணத்திற்கு பத்து நாட்கள் முன்னவே வந்து அணைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்தார் மகா. சாம்பாவியும் அவருடன் சேர்ந்துகொண்டார்.
பரிமளாவிற்கு மகள் தன்னை விட்டு மனதளவில் ரொம்ப தூரம் சென்றுவிட்டார் என்று புரிந்தது. இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் சுந்தராஜன் உடன் இருந்து நிறைவாய் அனைத்தையும் செய்தார்.
திருமண நாள் அழகாக விடிந்தது..
“நாங்க மாப்பிள்ளை கொண்டுவந்தப்ப என்னமோ படிக்கணும்ன்னு சொன்னீங்க” என்று ஆரம்பித்தார் சடகோபன்.
“இப்பவும் மணி படிக்க தான் போகுது.. மாப்பிள்ளையே பார்த்து படிக்க வைக்கிறதா சொல்லி இருக்காரு.. அப்புறம் பாருங்க நீங்க சொன்ன இடத்துல எங்க பேரன் பேத்தியை ஹாஸ்டெல் அனுப்பிடலாம்னு சொன்னாங்க.. ஆனா இங்க என் பேரன் பேத்தியையும் சேர்த்து அரவனைச்சிக்கிறாங்க.. இன்னும் விளக்கம் வேணும்னா அதோ, மாப்பிள்ளையோட அம்மா.. அவங்ககிட்ட கேளுங்க” என்று பத்தும்மாவை கை காட்டிவிட்டு நகர்ந்துவிட்டார் சுந்தர்ராஜன்.
ராஜம் பரிமளா பக்கத்தில் அமர்ந்திருந்தார். அவர்களுக்கும் ஆண்களின் சம்பாஷனைகள் கேட்டது.
அதை கண்டும் காணாமலும் பொதுவாக பேசிக்கொண்டிருந்தனர் இருவரும்.
வராஹி, வீர்யா, சம்பவ், ரகு, வல்லபன் என்று பிள்ளைகள் ஓடி ஆடி விழாவை சிறப்பித்தனர்.
நூற்றெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான பார்த்தசாரதி கோவிலில், சுற்றமும் நட்பும் சூழ, வந்தியதேவனின் விருப்பத்திற்கு ஏற்ப எளிமையாக நடைபெற்றது மணிமேகலை–வந்தியத்தேவனின் திருமணம். அன்பும் அறமும் நிறைந்த இல்லற வாழ்க்கைக்குத் தயாராக, இருவரும் இறைவன் சன்னதியில் மணவாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தார்கள்.
பெண்ணை பெற்றவர்கள் இருவரும் கண்கள் கலங்கி நின்றனர்.. அவர்களது பல நாள் கவலை ஏக்கம் வருத்தம் எல்லாம் இன்று இந்த திருமணத்தில் கரைந்து போனது.
இதை பார்த்து பத்தும்மா ‘அய்யயோ’ என்று அலறினார். பக்கத்தில் இருந்த சாம்பாவியும் மகாவும் “என்ன என்னம்மா” என்றனர் பதறிப்போய்.
“உங்க குடும்பத்தோட இத்துபோன பிளாஷ்பேக்கை மறுபடியும் சொல்ல போறாங்க போல” என்றார் சுந்தர்ராஜன் பரிமளா ஜோடியை கைகாட்டி.
சாம்பவிக்கும் மகாவிற்கும் அவர் சொன்ன தினுசில் சிரிப்பாக வந்தது.
சடகோபன் சுந்தர்ராஜன் பஞ்சாயத்து ஒருபக்கம், பத்தும்மா கலாட்டா ஒரு பக்கம் பிள்ளைகளின் ஆரவாரம் என்று கலகலப்பாக இருந்தது சூழ்நிலை.
திருமணம் முடிந்ததும் மணிமேகலை வாராஹியும் வல்லபனையும் தான் முதலில் தோளோடு அனைத்துக்கொண்டார். “நம்ம குடும்பத்துல புதுசா இப்பல இருந்து இரண்டு பேர் சேர்றாங்க.”. என்றார் நெகிழ்ச்சியாக.