தமிழிசை 06
தமிழிசை 06
கண்கள் முழுதும் நிரம்பி நின்ற காதல், நேசம், ஏக்கம், ஆசை, தவிப்பு, படபடப்பு, நிறைவு, குற்றத்தாக்கல் என்று இன்னும் எத்தனையோ உணர்வுகளை ஒன்று கூட்டித் தன்னை வந்து மோதிய அவள் பார்வையை தன் விழிகளால் கவ்விக் கொண்டான் பார்த்திபன்.
வெறும் இரண்டே இரண்டு செக்கன்களில் மோதிக்கொண்ட பார்வைகளின் தாக்கம் அவள் மனதில் உணர்வுப் பேரலைகளை எழுப்ப, காரணமே இன்றிக் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
அதை மற்றவர்களிடம் இருந்து மறைக்க அமைதியாகத் தலை குனிந்து கொண்டாள் பெண்.
Advertisement
அவள் நிலை சொல்லாதே புரிந்து கொண்டவனும் பார்வையை
“எப்போ அத்தான் வந்தீங்க?” என்று ராஜேஷிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே தருண் அருகில் அமர்ந்து கொண்டான்.
“எப்போ வந்தீங்களாவா? மாப்பிள்ளை ஊருல இருந்து வந்திருக்கானேனு ஆசை ஆசையா பல்லுக் கூட விளக்காம அஞ்சு மணி பஸ்ஸ பிடிச்சு வந்தா, நீ சாவகாசமா பத்து மணிக்கு எந்திரிச்சு வந்து எப்போ வந்தீங்கனா கேட்கிற? இது சரி வராது தருண். வர வர இந்த வீட்டுல மாப்பிள்ளை மரியாதை குறைஞ்சிட்டே வருது. இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்.”
Advertisement
“அதான? நீங்க வந்தப்போ அவனை நான் எழுப்பலாம்னு போனா, அவன் தூங்கட்டும்னு சொல்லிட்டீங்க. அதை மறுத்து யாரும் எதுவும் சொல்லவும் இல்ல. நீங்க வந்ததை தலைப்புச் செய்தி மாதிரி கத்தி அறிவிக்கவும் ஆளு இல்லயே!” குத்திக் காட்டினாள் நிர்மலா.
Advertisement
ராஜேஷ் பற்றி அங்கிருக்கும் அனைவருக்கும் தெரியும். அவன் மனத்தாங்கல் ஏதுமின்றி முழுக்க முழுக்க வேடிக்கையாகத்தான் பேசினான் என்று! மற்றவர்களுக்கே புரிந்தது என்கையில் அவன் மனைவி நிர்மலாவுக்கு அது புரியாது போக வாய்ப்பில்லையே!
தெரிந்தும் தமிழ் அங்கே சகஜமாய் உணர்ந்து விடக் கூடாது என்பதற்காகவே தன் வார்த்தையில் விஷத்தைத் தெளித்தாள்.
சித்ராவும் தனக்கு வேண்டியதை அவள் செய்வதில் சுவாரசியமாகி அடுத்து என்ன நடக்கும் என்று பார்த்திருக்க, அத்தனையையும் புஸ்ஸென்றாக்கினான் ராஜேஷ்.
Advertisement
“அது ஒன்னும் இல்லை மாப்பிள, சித்ரா சமைச்சது சரியில்லனு சொல்லி உங்க அக்கா சரியா சாப்பிடவே இல்ல. அதுதான் பசில கண்ட மாதிரிக்கு உளறுறா. நீ ஒன்னும் கண்டுக்காத சரியா? பசி வந்தா அவ, அவளா இருக்கமாட்டா. முழுப் பைத்தியமா மாறிடுவா.” கேலி பேசியே சூழ்நிலையை சகஜமாக்கினான்.
“உங்களுக்கு ஏத்துக்கிட்டு நான் பேசினா, நீங்க என்னையே பைத்தியம்னு சொல்லுவீங்களா? இப்பிடிப் பேசியே வெளி ஆளுங்க முன்னாடி உங்க மரியாதையை விட்டுக்குடுங்க.”
“இங்க யாருமா வெளியாளுங்க இருக்காங்க? எல்லாம் நம்ம குடும்பத்தாளுங்க மட்டும்தான இருக்காங்க? ஒருவேளை அவங்ககிட்ட நான் இயல்பா இருக்கிறது உனக்குப் பிடிக்கலன்னா சொல்லு, வண்டி பிடிச்சுத் தரேன். நம்ம வீட்டைப் பார்த்துப் போ.”
இதற்கு மேல் ஒரு வார்த்தை அபஸ்வரத்தில் வந்தால் கூட, தாய் வீட்டு விஜயத்தை இனி நீ நினைத்துப் பார்க்க முடியாது என்ற எச்சரிக்கையைக் கண்களில் காட்டி அவன் சொல்ல, வாயைக் கப்பென மூடிக் கொண்டாள்.
நல்லவேளையாக தலைவனைக் கண்டதும் தோன்றிய உணர்ச்சிக் கோர்வைக்குள் சிக்கியிருந்த தமிழின் கவனத்தை இவர்களின் வாக்குவாதம் ஈர்க்கவில்லை.
இல்லையென்றால், என்னால்தான் இந்தப் பஞ்சாயத்து என்று அடுத்தநொடி அந்த இடத்தை விட்டு அகன்றிருப்பாள்.
அவள் குணம் தெரிந்த பார்த்தி, தமக்கை பேச ஆரம்பித்ததில் இருந்து தமிழ் மேலேயே கவனம் வைத்திருந்தவனுக்கு, அவள் சிந்தை இங்கு இல்லை என்பது பெருத்த ஆசுவாசத்தைக் கொடுத்தது.
தந்தையின் மடியில் இருந்த மித்துவுக்கு மாமனின் கவனம் வெகுநேரமாக தன்னில் இல்லையென்று புரிந்ததோ என்னவோ, தன் பிஞ்சுக் கரத்தால் அவன் கன்னத்தில் அடிக்க அவள் முகம் பார்த்த பார்த்தி,
“என்னடா பட்டுக்குட்டி?” மருமகளைத் தன் கைக்கு மாற்றிக் கொண்டு கொஞ்சினான்.
“எவ்ளோ நேரமா அத்தையையே பார்த்திட்டிருப்பீங்க, என்னையும் பாருங்க மாமானு சொல்றா என் பொண்ணு.” என்றான் தருண் நக்கலாக.
“என்ன மாப்பிள நீ, சின்னப் புள்ளை அடிச்சுத் திருத்துற அளவா இருந்து வைப்பே? இந்தப் பார்க்காத மாதிரிப் பார்க்கிறது, பார்க்காத நேரத்துல பார்க்குறதுனு பாட்டு வரிலாம் வருமே!? அது மாதிரிப் பார்க்கத் தெரியாதா உனக்கு?” இது ராஜேஷ்.
இருவரும் சற்று முன் நிர்மலாவால் நிலை குழம்பிய சூழ்நிலையை பார்த்தியை ஓட்டி மீட்க முயன்றனர்.
அது பார்த்திக்கும் புரிந்தாலும் அவர்கள் பேச்சு சிறு கூச்சத்தைக் கொடுக்க, இதழ் பிரியாது புன்னகைத்தவன் அடிக் கண்ணில் தமிழை நோட்டமிட்டான்.
ம்ஹூம்… அவள் இன்னும் தெளிந்திருக்கவில்லை. சிறிது தனிமை கிடைத்தால் ஒற்றை அணைப்பில் அவளை சரிப்படுத்திவிட அவனால் முடியும்.
ஆனால் அதை எப்படி இத்தனை பேர் மத்தியில் ஏற்படுத்திக் கொள்வது என்றுதான் அவனுக்கு யோசனையாக இருந்தது.
வீட்டின் பின்புறம் துவைத்து வைத்த மகளின் துணிகளை காயப்போட சென்றிருந்த நிரஞ்சனா, திரும்பி வந்தவள் ஒரே பார்வையில், தமையனினதும் தமிழினதும் நிலையைக் கண்டு கொண்டாள்.
ராம பாலத்துக்கு தன்னாலான உதவி புரிந்த அணிலைப் போல் அண்ணனின் காதல் பாலத்துக்கு அவளால் முடிந்ததை செய்ய எண்ணி,
“அண்ணா! எந்திரிச்சதும் இங்க வந்து உக்காந்துட்டியா? இங்க எல்லாரும் மூக்கு முட்ட சாப்டு தான் உக்காந்திருக்காங்க. மித்துவை என்கிட்ட குடுத்துட்டுப் போய் நீ சாப்பிட்டு வா.
தமிழ்! என்ன நீ ஒன்னும் சொல்லாம பார்த்துட்டு இருக்க? அண்ணா சாப்பிட்டாரா இல்லையானு கேட்டுக் கவனிக்கமாட்டியா? இதெல்லாம் சரி கிடையாது சொல்லிட்டேன். என்னை வீணா நாத்தனார் அவதாரம் எடுக்க வைக்காத நீ! போய் அண்ணாக்கு என்ன வேணும்னு கேட்டுப் பண்ணிக் குடு. போ!” என்று குழந்தையை வாங்கிக் கொள்ள முயல அவள் வரமாட்டேன் என்று பார்த்தியின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.
தருண், “டேய்! மித்து மா. அப்பாகிட்ட வாங்க தங்கம்!!” என்று கேட்டும் அவள் மாட்டேன் என்றதும் பார்த்தியின் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு.
அரங்கேறிக் கொண்டிருந்த காட்சியிலும் உணர்வு சுழலில் இருந்து வெளிவரக் கிடைத்த போதுமான இடைவெளியிலும் தமிழின் மனமும் சற்றுத் தெளிய நிமிர்ந்து மலர்ந்து விரிந்திருந்த பார்த்தியின் முகத்தை ரசித்தாள்.
அந்த ரசனையை அடுத்த நொடியே ரணமாக மாற்றியது தருணின் வார்த்தைகள்.
“மாமா வந்ததுல இருந்து ரொம்பத்தான் அழிச்சாட்டியம் பண்ற மித்துக்குட்டி. இந்த மாமா மடி எல்லாம் இன்னுமொரு ஒரு மாசத்துக்குத்தான். அப்புறம், அப்பா தூக்குனு நீ என்கிட்டதான் வந்தாகணும் பார்த்துக்க!” என்று மகளை செல்லமாய் மிரட்ட பார்த்தி சட்டென தமிழைப் பார்த்தான்.
அவன் நினைத்தது போல் நொடியில் நிறம் மாறி வேதனையை சுமந்திருந்தது அவள் முகம்.
‘
தருண் சொல்வது சரிதானே? இந்த ஒரு மாதம்தான் அவனை இப்படி இருந்து ரசிக்கக் கூடத் தனக்குக் காலக்கெடு. மித்துவாவது மாமன் இல்லை என்று தன் தந்தையின் அன்பில் அவனைத் தற்காலிகமாக மறக்கலாம்.
ஆனால் நான்?
அவனிடத்தில் யாரை இட்டு நிரப்ப?‘
அவள் மனவோட்டம் என்னவென்று அவளவனுக்கா புரியாது? வேதனை சுமந்த அவள் முகத்தைக் காணத் தாங்காது…
“தமிழ்!”
இது நாள்வரை கதிர் அலைகள் கடத்தி வந்த அவன் குரலிலான தன் பெயரின் உச்சரிப்பை, இன்று அருகருகே இருக்கும் காற்றலைகள் கடத்தி வந்து தன் செவி சேர்த்ததில் உண்டான சிலிர்ப்புடன் அவனை ஏறிட்டுப் பார்த்தவள் கண்களுக்கு அவன் கண்கள் ஆறுதல் சொல்லின.
உதடுகளோ, “போய் காபி போட்டு எடுத்துட்டு வா, தமிழ்!” என்று அவளோடான தனிமைக்கு சாக்கு சொன்னது.
அவளும் எழுந்து சமையலறை பக்கம் நடந்தாள்.
அதைக் கண்ட சித்ரா, “என்ன பார்த்தி நீ, நிரஞ்சனாதான் எதுவும் புரியாம பேசுறான்னா நீயும் வீட்டுக்கு வந்த பொண்ணுகிட்ட வேலை வாங்கிக்கிட்டு இருக்க? நான் போட்டிருக்க மாட்டேனா அந்தக் காபியை?” என்று தன்னை வீட்டுக்கு உரிமையாளராகவும் தமிழைத் தள்ளி வைக்கும் நோக்கத்தோடும் பேச, அவளுக்குப் பதில் நிரஞ்சனாவிடமிருந்து வந்தது.
“நான் ஒன்னும் வீட்டுக்கு விருந்தாளியா வந்தவங்ககிட்ட வேலை வாங்கல. இன்னும் கொஞ்ச நாளுல இந்த வீட்டுக்கு உரிமையா வரப்போறவகிட்டதான் வேலை வாங்கினேன். அது கூட நான் வேலை வாங்குற லிஸ்ட்ல சேராது. அவளுக்கு உரிமையானவருக்கு அவ வேலை பார்க்குறா? இதுல என்ன தப்பிருக்கு?”
சித்ராவின் மனப் பற்கள் நறறநறத்துக் கொண்டாலும் இந்த உலக வாயாடியோடு வாதாடி உள்ளதைக் கெடுக்க வேண்டாம் என்று அமைதியாகிவிட்டாள்.
இந்த பேச்சுக்கள் எல்லாம் சமையலறையில் நின்றிருந்த தமிழின் காதுகளில் படத்தான் செய்தது.
ஆனால் அதை விடவும் எண்ணி வருந்த அவளுக்கு எத்தனையோ இருந்ததில் அதைப் புறம் தள்ளியவள், தன் யோசனையோடே பாலை எடுத்து தன்னவனுக்கான பானத்தைத் தயாரிக்க ஆரம்பித்தாள்.
பால் பொங்க ஆரம்பிப்பதற்குள் அவள் நினைவுகளில் சதா சுனாமி அலைகளாய் பொங்கிப் பிரவாகிக்கும் பார்த்தி அடுப்படிக்கு வந்து விட்டிருந்தான். அவன் கையில் மித்து.
தமிழ் அவன் வந்தது கண்டு லேசாக சங்கடமுற்றவள்,
“நீங்க ஏன் இங்க வந்தீங்க? முடிஞ்சதும் நானே எடுத்திட்டு வந்திருப்பேனே?” என்றாள் பார்வையை அடுப்பில் பதித்தபடி.
“ஏன், நான் இங்க வந்தா என்ன?”
அவள் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டுமே என்று வார்த்தைகளில் கவனமின்றி பதில் சொன்னவன் பார்வையோ, அவளதைப் போல் உரியவனுக்கு விரோதம் செய்து வேறெங்கோ நிலைக்காது தன்னவள் என்ற உரிமையில் அவளின் முழு நீளத்துக்கும் பயணித்தது.
வெளியே அத்தனை பேரின் மத்தியில் அவள் முகத்தைத் தாண்டி முழுதாய் ஆராய அவகாசம் கிட்டவில்லை.
இங்கே
மித்துவுக்கு அவன் பார்வையின் உரிமை புரியும் வயதில்லை என்பது அவனுக்கு மிகுந்த வசதியாகப் போய்விட, இப்போது நிதானமாகத் தன்னுடமையை ரசித்தான்.
விகல்பமில்லாத ரசனை அவனது.
சொந்த கிராமத்து மண்ணில் வாழப் பிரியம் கொண்ட ஒருவன் தவிர்க்க முடியாத சூழ்நிலையால் பட்டணத்தில் நிரந்தரமாகக் குடியேறி, வருடம் ஒருமுறை திருவிழாவுக்கு வந்து போக நேரும் போது ஆழ்ந்த மூச்சை எடுத்து மண் வாசத்தை நுகரும் போது அடையும் ஒரு ஆத்ம பரவசம் அவனுள்!
முடிந்த வரை நெஞ்சாங் கூட்டின் கனவளவைக் கூட்டி அவள் மீது பட்டு வரும் காற்றை உள்ளிழுத்துக் கொண்டான்.
பாதத்தில் இருந்து சென்ற வழியில் திரும்பி மீண்டும் அவள் முகத்துக்கு வந்த பார்த்திபன் விழிகளில் அவள் முக சிவப்பு அகப்பட்டு விட, அவன் உதடுகளுக்குள் ஒரு புன்னகை ஒளிந்து கொண்டது.
“திரும்பி நின்னாலும் கவனம் முழுக்க என் மேலதான் இருக்கு. அப்புறம் எதுக்குத் திரும்பி நின்னுக்கிட்டு?” என்றவன் சீண்ட,
“ப்ச்… முதல்ல நீங்க இங்க இருந்து போங்க.” என்றாள் அவள் சில்லிட்ட நாணத்தோடு.
“நீ என்னை நேரா பாரு, நான் போறேன்.” என்றான் அவன் விடாப்பிடியாய்.
“நான் நேராப் பார்த்தா மட்டும் தினமும் நான் பார்க்கிற மாதிரி இங்கேயே இருந்துடவா போறீங்க?”
மனதின் தவிப்பு சலிப்பாக உருமாறி அவள் குரலில் வெளிப்பட்டிருந்தது.
கேட்டுவிட்ட பின்தான் என்ன கேட்டோம் என்பதையும் சட்டென அவ்விடம் சூழ்ந்த அமைதியையும் உணர்ந்தாள்.
‘ப்ச்.. தமிழ்! பைத்தியக்காரி மாதிரிப் பேசி வைக்காத. நீ அவனுக்கு ஆறுதலா இருக்கணுமே தவிர, மேலதிக காயமா ஆகிடக் கூடாது.’ மனதுக்குள் தன்னைத் தானே கடிந்து கொண்டவள் திரும்பி அவன் முகம் பார்த்தாள்.
அவன் அவளையேதான் ஆழ்ந்த பார்வையில் பார்த்திருந்தான்.
“நீ….நீங்க ஒன்னும் நினைச்சுக்காதீங்க! அ..அது தெரியாம பேசிட்டேன்.”
“ம்ஹூம்… தெரியாம பேசல. மறந்து போய் மனசுல இருந்ததை அப்டியே பேசிட்ட. அதுல ஒன்னும் தப்பில்லையே, தமிழ்! எத்தனை நாளைக்குத்தான் நான் எந்தக் கஷ்டத்தையும் உணர்ந்திடக் கூடாதுனு, வார்த்தைகளை வடிகட்டிப் பேசுவ?
என்கிட்ட உன் உணர்வுகளை மறைக்காம பேசு, தமிழ்! தன்னோட துணைக்கு ஆறுதலா இருக்க உன்னால மட்டும்தான் முடியும்னு இல்ல, என்னாலயும் முடியும்னு காட்ட எனக்கும் வாய்ப்புக் கொடு!” என்றவன் வார்த்தைகளில் தமிழ் மேலான பெரும் கர்வமே குடியிருந்தது.
தமிழ் அவன் வார்த்தைகளில் நெக்குருகி நின்றாள். இப்படிப்பட்டவனை இனியும் பிரிந்திருக்க வேண்டுமா என்று மனம் போட்டு நச்சரிக்க, மீண்டும் தன்னை மீறி,
“கண்டிப்பா போய்த்தான் ஆகணுமா?” என்று கேட்டே விட்டிருந்தாள்.
‘இல்ல டி. எனக்கு எங்கேயும் போக வேணாம். உன் பக்கத்துலயே இருந்திடணும்.’
மனம் ஊமையாய் உருக, அவன் வாயோ வரவு செலவுக் கணக்கை இடித்துக்காட்டிய மூளையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு…
“ரெண்டே வருஷம், தமிழ்! அதுக்குப் பிறகு நீயே போ’னு சொன்னாக் கூட, உன்னை விட்டு ஒரு இன்ச் அசையமாட்டேன்.” என்றிருந்தது.
தன் முகவாட்டத்தைக் கஷ்டப்பட்டு மறைத்த தமிழ், “ஹ்ம்ம்… உங்க இஷ்டம்.” என்று பதிலிறுத்து விட்டு, அடுப்பை ஆஃப் பண்ணி பாலை இறக்கி வைத்தாள்.
“என் இஷ்டம், திரும்பி போறதுக்குள்ள உன்னைக் கல்யாணம் பண்ணிட்டு போகணும்றதுதான். ஆனா அதுக்குத்தான் உனக்கு இஷ்டமில்லையே!” என்றதற்கு அவளிடம் பதிலே இல்லை.
அந்தக் கேள்வி தன் காதிலேயே விழாதது போல் பாவித்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இந்த விஷயத்துல மட்டும் ஏன் தமிழ் கொஞ்சம் கூட என் மேல இரக்கமே காட்ட மாட்டேன்ற? இன்னைக்கு ஒரு அஞ்சு நிமிசம் உன்கூட தனியா பேச எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கு? இனியும் இந்த ஒருமாசம் பூராவும் இதே போராட்டமாதான் இருக்கும். இதுவே கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்பிடி எந்தக் கஷ்டமும் இல்லையே? முழுநாளும் என் பொண்டாட்டியா, என் பக்கத்துலயே இருப்பியே?” என்றவனை நிதானமாகத் திரும்பிப் பார்த்தாள்.
“அப்பிடி நினைச்சு நான் இன்னைக்கு சம்மதம் சொன்னா ஒரு ஒருவாரம், ரெண்டு வாரம் உங்க பக்கத்துல இருக்க முடியுமா? அதுக்கு அப்புறம்?” என்றவள் கேட்டு நிறுத்த,
“தமிழ்?” என்றவனுக்கு அவள் கேள்வியின் விகுதி புரிவதாய்!
“இப்போ நான் உங்க கூட இருக்கேன்னா, இன்னும் கொஞ்ச நேரத்துல நான் இங்க இருந்து போகணும்னு என் மனசுக்குத் தெரியும். கஷ்டப்பட்டுனாலும் அந்தப் பிரிவை ஏத்துக்க அது பக்குவப்பட்டு இருக்கு.
