Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தமிழிசை 07

நல்லோரையும் எளியோரையும் சோதிப்பதையே பொழுதுபோக்காக வைத்திருக்கும் விதி, அவை இரண்டையும் ஒருங்கே கொண்ட  தமிழுக்கும் பார்த்திக்கும் கூட தனித்தனியாக இரு தணல் படுக்கைகள் செய்து வைத்துக் காத்திருக்கிறது, காலம் கனியும் போது இருவரையும் அதன் மேல் தள்ளி அழகு பார்க்க என!



Advertisement

அது தெரியாமல் தமிழ் திருமணத்தைத் தள்ளி வைக்கிறேன் என்ற, பார்த்திபனும் தன் விருப்பத்தை விட அவள் உணர்வுகளே பெரிதென ஏற்றுக்கொண்டான்.

அதில் “உன் இஷ்டம்.” சொல்வது இப்போது இவன் முறையாகிப் போனது.

Advertisement

Advertisement

என் விருப்பத்துக்கு அவள்/அவன் உட்பட வேண்டும் என்று நிற்கும் அடக்குமுறை காதலின் அடர்த்தியைக் குறைக்கும்.

ஒருவர் விருப்பத்தில் மற்றவருக்கு முரண் கருத்து இருந்தாலும் இருவரின் உணர்வுகள் நேர்மறையானதாக இருக்குமிடத்து, அவரவர் இஷ்டத்துக்கு முடிவை எடுக்கும் சுதந்திரம் காதலில் இருக்குமானால் அந்தக் காதல் அமரத்துவ வரம் பெற்றதாகும்.

Advertisement

பார்த்தியும் தமிழும் தங்கள் காதலை அப்படி ஒரு நிலையில் வளர்த்து வைத்திருந்தனர். ஆனால் அதை அப்படியே வாழ விடுவார்களா என்பது தான் கேள்விக்குறி…

வெளியே…

“அத்தை என்னத்தை நீங்க? கோயில்ல பூஜை முடிஞ்சுதுனா எனக்கு ஃபோன் பண்ணிருக்கலாம்ல, இவரை அனுப்பி உங்களைக் கூப்பிட்டிருப்பேன்! ப்ச்..  பாருங்க, இந்த வெயில்ல எப்பிடி மூச்சு வாங்க நடந்து வந்திருக்கீங்க?”

பெற்ற பிள்ளைகள் எல்லோரையும் முந்தி, சித்ரா துடிக்க…

“கசாப்புக் கடைக்காரன் கத்தி எதுக்கு ஆட்டுக்குட்டி கழுத்தை மசாஜ் பண்ணுது?” என்று முணுமுணுத்த நிரஞ்சனா ஆஸ்கார் நாயகி அண்ணியை ஊன்றிக் கவனித்தாள்.

“நீங்க உக்காருங்க அத்தை! நான் போய் உங்களுக்குத் தண்ணி எடுத்துட்டு வரேன்.” என்று திரும்பிய சித்ரா இரண்டு அடி எடுத்து வைத்துவிட்டு நின்றவள் “ஷ்ஷ்…” என்று நாக்கைக் கடித்தாள்.

“நான் ஒருத்தி! எல்லாத்தையும் மறந்திடுவேன். அத்தை! தமிழும் பார்த்தியும் உள்ள கிச்சன்ல இருக்காங்க. ரொம்ப நாள் கழிச்சுப் பார்த்திருக்காங்க… ரொம்ப நேரமா உள்ள வேற இருக்காங்க… நான் வேற விவஸ்தை கெட்டு, நல்லவேளை உள்ள போயிருப்பேன்!” என்றாள் கூடத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் கேட்கும் அளவில் குரலின் டெசிபலைக் குறைத்து.

பார்த்திக்குக் கேட்டுவிட்டால் என்ற எச்சரிக்கை. அவள் முயற்சி படுதோல்வி அடைந்ததைப் பாவம் அறியாது போனாள்.

அவள் பேச்சில் பர்வதம் “என்ன?” என்று திகைப்பாய் பார்க்க, மற்றவர்களோ அவருக்கு மேலே திகைத்துப் போய் பார்த்திருந்தனர் சித்ராவை.

கூடத்தில் இத்தனை பேர் இருக்க, சமையல்கட்டில் குடும்பம் நடத்துமளவு தரங்கெட்டவர்கள் இல்லையே தமிழ், பார்த்தி இருவரும்.

உரிமையாக வீட்டினுள் வருவதற்கே தயங்கி வெளியே நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவள் தமிழ்.

தமிழின் அருகே இடம் இருந்தும் தருண் பக்கத்தில் வந்து அமர்ந்தவன் பார்த்தி.

சொல்லப் போனால் பெரிதான பார்வைப் பரிமாற்றங்கள் கூட இருவரிடமும் இருந்திருக்கவில்லை.

ஏன், தமிழிடம் தனியாகப் பேச என்று முடிவெடுத்து அவளை சமையலறை அனுப்பிய பின்னும் இத்தனை பேர் முன்னில் எப்படி செல்வது என்று தயங்கி அமர்ந்திருந்தவனை,

“அண்ணா இவர் பேசினதைக் கேட்டதும் அவ முகமே மாறிப் போய்டுச்சு. நீ போய் அவ கூட பேசி ஒரு முடிவெடு!” என்று நிரஞ்சனாதான் கட்டாயப்படுத்தி அனுப்பியிருந்தாள்.

அப்போதும் மித்துக்குட்டியையும் தூக்கிக் கொண்டுதான் போனான்.  நிரஞ்சனா மகளைக் கொடு எனக்  கேட்டும் கொடுக்கவில்லை.

அப்படிப்பட்டவர்களை இப்படித் திரித்துப் பேசுகிறாளே பாவி! தான் நாகரீகமானவள் என்பதை எவ்வளவு அநாகரீகமாகக் காட்டிவிட்டாள்.

ச்சீ!’ என்றிருந்தது அவர்களுக்கு.

இதற்கு அவள் கணவன் எதுவும் சொல்வானா என்று பார்க்க, அவன் எங்கே இங்கே கவனம் வைத்திருந்தான்? பொறுப்பாக செல்ஃபோனில் ரீல்ஸ் ஸ்வைப் பண்ணிக் கொண்டிருந்தான்.

கவுண்டமணி காமெடியில் வரும் மிக்சர் மாமா வம்ச வாரிசாக இருப்பானோ இவன் என்று ஐயமே வந்து விட்டிருந்தது தருண் மற்றும் ராஜேஷுக்கு.

நிர்மலாவுக்கு மட்டும்தான் சித்ராவுக்கு ஒத்து ஊத சொல்லி வாய் நமநமத்தது. ஆனால் கணவன் முன்னர் கொடுத்த எச்சரிக்கையில் கமுக்கமாக இருந்து கொண்டாள்.

சிறு விரல் தீண்டல் கூட இல்லாது மெல்லிய குரலில் தங்கள் எதிர்காலம் குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த காதலர்கள் இருவருக்கும் வெளியே தங்களை வைத்து நடக்கும் குடும்ப அரசியல் தெரியாது போகவே, வந்த வேலை முடிந்ததும்… அதாவது காபி தயாரித்து முடிந்ததும் இதற்கு மேல் இங்கே நிற்பது முறையல்ல என்று வெளியே வந்து கொண்டிருந்தனர்.

பார்த்தியின் கையில் குழம்பிக் கோப்பை இருக்க, அத்தை, மாமா இருவரும் தனக்குப் புரியாத மொழியில் தாலாட்டுவதாக நினைத்து, இருவரும் பேசிக்கொள்ள ஆரம்பித்த ஐந்தாவது நிமிடமே உறங்கி விட்டிருந்த மித்துவைத் தமிழ் தன் தோளில் போட்டு மறுகையால் அணைத்துப் பிடித்தபடி, புன்னகை தாங்கிய முகத்துடன்  நடந்து வந்து கொண்டிருந்தாள்.

இந்தக் காட்சியைக் கண்டதும் நிரஞ்சனாவின் மனதில், தமையன் மற்றும் தமிழ் அவர்களுக்குப் பிறந்த குழந்தையுடன் அந்நியோன்ய தம்பதிகளாக நடந்து வருவது போல் கவித்துவக் கற்பனைக் காட்சி ஒன்று மலர முடிவே எடுத்து விட்டாள், தலைகீழாக நின்றாவது இம்முறை இவர்கள் திருமணத்தை நடத்தியே தீருவது என்று!

சித்ரா, தாயிடம் கக்கிய விஷத்துக்கு விஷமுறிவு மருந்து கொடுக்க அவகாசமின்றி பார்த்தியும்  தமிழும் வெளி வந்திருக்க, தருண் மனைவிக்குக் கண் ஜாடை காண்பித்தான், உன் அண்ணியிடம் கத்தி பார்த்தி மற்றும் தமிழ் இருவருக்கும் விஷயத்தைத் தெரியப்படுத்தி விடாதே என!

அவளும் அரும்பாடு பட்டு நாவை அடக்கி அமர்ந்திருந்தாள்.

தமிழ், பர்வதத்தைக் கண்டு விட்டு மரியாதையாகப் புன்னகைக்க, அவரால்தான் பதிலுக்குப் புன்னகைக்க முடியவே இல்லை.

ஆனாலும் எதிர்வினையாற்ற வேண்டுமே என்ற கட்டாயத்தில் மிக மெலிதான ஒரு தலையசைப்பைக் கொடுக்க, வேண்டா வெறுப்பான அவர் செயலில் தமிழின் முகம் சட்டென மாறியது.

வருங்கால மாமியாரின் முகத்தை உன்னிப்பாக ஆராய்ந்தவள் அவர் உணர்வுகளையும் ஓரளவு தெளிவாகப் படித்து விட்டாள்.

அவளறியாதது,  தன்னுடன் சேர்த்துப் பார்த்தியும் அனைவர் உணர்வுகளையும் படித்துக் கொண்டிருக்கிறான் என்று!

அதன் பின்னும் அந்த இடத்தில் நிற்க அவளின் இயல்பு அவளை விடவில்லை.

நிரஞ்சனாவை மட்டும் பார்வை வட்டத்துக்குள் கொண்டு வந்தவள்,

“நிரஞ்சா! பாப்பாவைப் படுக்க வைக்கிறியா? நான் அப்பா வரதுக்குள்ள வீட்டுக்குப் போகணும்.” என்றிட அவள் இவளை முறைத்தாள்.

“இப்பதான வந்த! அதுக்குள்ள வீட்டுக்குப் போகணும்னு நிக்கிற… நீ இல்லனா அங்க இருக்க புதையலை பூதம் தூக்கிட்டுப் போயிடுமா என்ன?”

“பாப்பாவை வாங்கிக்கோ நிரஞ்சா. அவ கிளம்பட்டும்.” இதை சொன்னது பார்த்திபன்.

“அண்ணா.. நீயே…”

“சொன்னா கேட்டுக்கணும் நிரஞ்சா மா. குழந்தையை வாங்கிட்டு அவளைப் போக விடு!” என்றான் அழுத்தமாக.

அண்ணனின் அந்தக் குரலை மீற முடியாமல் நிரஞ்சனா குழந்தையை வாங்கிக் கொள்ள, தமிழ் குழப்பமும் தவிப்புமாக அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள், தன் மேல் கோபமோ என்று!

ஆனால் அவனோ காதலும் கனிவும் ததும்ப அவளை நோக்கிப் புன்னகைத்தவன்,

“பார்த்துப் போ, தமிழ்! நான் அப்புறம் உனக்கு ஃபோன் பண்ணுறேன். அப்புறம்… செல்வா மாமா என்னை எதுவும் பேசினா அவரை எதிர்த்து எதும் பேசாத. அமைதியா இரு.” என்றவும்தான் தமிழ் தெளிந்து புன்னகைத்தவள், அவனிடம் தலையசைத்து விட்டு அடுத்து தருண் மற்றும் ராஜேஷிடமும் முறையாக விடைபெற்றுக் கொண்டாள்.

மற்ற அனைவருக்கும் பொதுவாக ஒரு, “போய்ட்டு வரேன்..” அவ்வளவு தான்.

எங்கே நிரஞ்சனா வந்தால் பேச்சிலேயே பிடித்து வைத்துக் கொள்வாளோ என, அவள் அறையை விட்டு வெளிவரும் முன்னே கிளம்பியிருந்தாள்.

அவள் வீட்டின் படிக்கட்டைத் தாண்டுவதை ஒருவித இறுக்கத்துடன் பார்த்திருந்த பார்த்திபன், அவள் பிம்பம் கண்ணை விட்டு மறைந்ததும் மனதுக்குள் எழுந்த ஒரு ஆற்றாமைப் பெருமூச்சுடன் இருக்கையில் அமர்ந்து கொண்டவன், மனதின் அழுத்தங்களை ஓரம் ஒதுக்கி விட்டுத் தன்னவள் கைப்படத் தயாரான பானத்தை வீணாக்க மனமின்றி ஒரு சொட்டு மிச்சம் வைக்காது குடித்து முடித்தான்.

நிரஞ்சனா மீண்டும் வரும் வரை அந்த இடத்தில் ஒரு அசாத்தியமான அமைதி நிலவியது.

மகளை சரியாகப் படுக்க வைத்துவிட்டு, வெளியே வந்த நிரஞ்சனா, தமிழ் அங்கே இல்லாதது கண்டு,

“அதுக்குள்ள கிளம்பிட்டாளாண்ணா? என்கிட்ட சொல்லிட்டுப் போறதுக்கு கூட நேரமில்லையாமோ அம்மணிக்கு?”

“ம்ம்.. நீ வந்தா பிடிச்சு வச்சுப்பேன்னு, விட்டா போதும்னு ஓடிட்டா.” என்ற பார்த்தியின் குரலின் வேறுபாட்டை உணர்ந்து கொண்ட நிரஞ்சனா, தமையனின் முகத்தைப் பார்க்க இறுகிப் போயிருந்தது அது.

“என்னாச்சு ணா? ஏன் ஒரு மாதிரி இருக்க?”

“உனக்கு நான் தமிழை விரும்புறதிலேயோ, கல்யாணம் பண்ணிக்கிறதிலேயோ ஏதாவது ஆட்சேபனை இருக்கா நிரஞ்சா?”

அவன் கேள்வியில் திகைத்த நிரஞ்சனா, “இதென்ன ண்ணா கேள்வி? தமிழ்தான் உனக்குன்ற விஷயத்துல உன்னை விட நான், டபிள் ஸ்ட்ராங்கா இருக்கேன்.” என்றாள் குரலிலும் உறுதியைக் காட்டி.

“ம்ம்… அத்தான்! மாப்பிளை!! உங்களுக்கு இதுல எதுவும் மனஸ்தாபம் இருக்கா?” என்ற, இருவருமே அவன் ஏன் இதைக் கேட்கிறான் என்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும்…

“இது உன் வாழ்க்கை மாப்பிளை. உன் விருப்பம் மட்டும்தான் இங்க முக்கியம். ஆனாலும் நீ கேட்டதால சொல்லுறேன், தமிழை மாதிரி ஒரு பொண்ணு கூட  வாழ்க்கை அமைய நீ குடுத்து வச்சிருக்கணும். அதே மாதிரி உன்னை மாதிரி ஒரு பையன் புருஷனா கிடைக்க தமிழும் குடுத்து வச்சிருக்கணும்.” என்று ராஜேஷ் சொல்ல,

தருணோ, “இதே பதில்தான் மச்சான் என் மனசுலையும் இருக்கு” என்று விட்டிருந்தான்.

இருவரின் வார்த்தைகளிலும் பார்த்தி, மனம் நிறைந்து புன்னகைத்தவன், அடுத்து தமையனைக் கேட்டான்.

அவன் பெரிதாக என்ன சொல்லிவிடப் போகிறான்? ஏதோ ஒருபக்கமாக தலையசைத்து வைத்தான். நீ என்ன  செய்தால் எனக்கு என்ன என்பது போல்.

அவனைப் பற்றித் தெரிந்ததுதானே என்று அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாத பார்த்தி, எஞ்சியிருந்த மூவரையும் பார்த்து…

“அப்போ உங்க மூணு பேருக்கும் மட்டும் இதுல என்ன பிரச்சனை? எதுக்காக தமிழை ஒதுக்கி வைக்கிற மாதிரிப் பேசுறீங்க?” என்று கேட்டு விட மூவரும் அவனின் இந்த நேரடிக் கேள்வியை எதிர்பாராமல் திகைத்து விட்டனர்.

மற்றவர்களிடம் கேட்டது போல் தங்களிடமும் ‘உங்களுக்கு எதுவும் பிரச்சனை இருக்கிறதா?’ என்று ஆம் அல்லது இல்லை என்ற இரு தேர்வு வினாவைக் கேட்பான்… உள்ள(த்)தை மறைத்து ஆமோதிப்பாய் தலையாட்டி வைப்போம் என்று காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் என்ன பிரச்சனை என்று விவரிக்கும் படி ஃபைவ் மார்க் கொஸ்டினைக் கொடுத்து விட்டானே என்று அவர்கள் யோசித்துக் கொண்டு நிற்கும் போதே,

சித்ராவை நோக்கிக் கடுமையாகத் திரும்பியது அவன் பார்வை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!