உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் அத்தியாயம் 62 (நிறைவு பகுதி)
“ப்பா தாத்தாவ கூட்டிட்டு வரேன்” என கௌதமனிடம் கூறிவிட்டு யாழினியாள் பின் வீட்டை நோக்கி ஓட, “ஆலி… நானையும் தூக்கிட்டு போ ஆலி” எனச் சத்தம் போட்டான் சின்னவன்.
“நீ இருக்கியே… வா டா” என வீராவை தன் தோளில் அமர்த்திக் கொண்டான் சர்வேஷ்.
“சல்வேஷ்… சப்போத்தா டீக்கு தூக்கிட்டு போலியா? அதுல நலைய புரூட் இலுக்கு” எனத் தோளில் அமர்ந்த வாண்டு வேலை வாங்கியது.
Advertisement
“சர்வா…” என்ற சத்தம் வந்த திசையை அவன் பார்க்க, “தாத்தாவ கூட்டிட்டு வரலாம். இங்க வா” என அவனை தன் பக்கம் இழுத்தாள் யாழி. அவள் அப்படி தான். அவள் அடிமை அவளுக்கு மட்டுமே. “இரு டி… பழத்த பிச்சு கொடுக்காட்டி என்னை புடுங்கி எடுத்துடுவான். நீ போ, நான் பின்னாடியே வர்றேன்” என்றவன் இரண்டு வாண்டுகளையும் சமாளிக்கும் உக்தியை கற்றிருந்தான்.
ரகுவின் தங்கை, நிவியின் குழந்தைக்கு முடி எடுக்கவிருக்க, தாய் மாமன் முதலாவதாகச் சென்று நிற்க வேண்டுமே. அதற்கு ‘குடும்பம்’ மொத்தமும் நாளை பாண்டியை நோக்கிப் பயணிக்கிறது. அது முடிந்ததும் சென்னைக்குப் பயணம். ‘குடும்பத்தில்’ ரகுவின் வட்டமும் கௌதமனின் வட்டமும் அடக்கம். ரகுவை சார்ந்தவர்களுக்கு ரகுவாகவும், கௌதமனை சார்ந்தவர்களுக்குக் கௌதமனாகவும் நடந்து கொள்வான் நம் நாயகன்.
“அப்போ எனக்கும் பிச்சு குடு. தாத்தாட்ட கொடுத்து மில்க் ஷேக் போடச் சொல்லலாம்” என அவனோடு சென்றாள் யாழி.
Advertisement
“நாலு பழமோ என்னவோ தான் பழுத்திருக்கு. அத அப்படியே சாப்பிட்டா ஆகாதா?” சர்வேஷ் முறைத்தான்.
Advertisement
“சும்ம சும்மா கண்ணு இருக்குன்னு மொறைக்காத சர்வா. மாடிக்கு போலாம். காத்து நல்லா வருது. கட்டில்ல உக்காந்து சாப்பிடலாம்.” அவன் அவளுக்கு தலையாட்டுவதும், அவள் அவனுக்குத் தலையசைப்பதும் என்றும் போல் இன்றும் அரங்கேறியது. காலங்கள் மாறினாலும், கவிதைகளின் வரிகள் மாறினாலும், அதன் அழகு மாறுவதில்லை.
மாடியில் அரவம் கேட்டது. “அம்மா… ஆலி நாளைக்கு வீலாவ அலிக்கிலா” அலறிக் கொண்டே தலை தெறிக்க மாடியிலிருந்து ஓட்டம் பிடித்தான் வீரா.
“டேய்.. சர்வா, அவன பிடிடா”
Advertisement
“சின்ன பையன் யாழி…”
“சின்ன பையனா அவன்? குட்டி பிசாசு, என் பழத்த நசுக்கிடுச்சு”
“நான் தோட்டத்துல இருந்து பிச்சு தரேன். நீ வா உக்காரு” என வேப்ப மரத்தடியில் கிடந்த கட்டிலைக் காட்டினான்.
“நிஜமாவா?” எனக் கேட்டாள் கட்டிலில் அமர்ந்து கொண்டே.
“அடுத்த லீவுக்கு நீ வரும் போது, தோட்டத்துக்கு போலாம்.” என்றான் கட்டிலில் கிடந்த வேப்பம் பூவை தட்டிவிட்டுக் கொண்டே.
“சத்தியமா?”
“பிராமிசா.” என்றான் எப்பொழுதும் போல் சத்தியங்களை வாரித் தெளிப்பவன்.
‘எப்படி? உன் மாமன் இன்னும் உன் அத்தய முழுநிலா நாளைக்கு மலைக்கு கூட்டிட்டு போறானே அப்படியா?’ நினைப்பது கட்டிலா இல்லை நாமா? இருவரும் தான்.
“நல்ல பழம் டா” என்றவள், கட்டிலில் கிடந்த வேப்பம் பழத்தை அவன் வாய்க்குள்ளும் திணித்தாள்.
“ம்ம்ம். ஏய் யாழி, நீ இங்கயே உன் தாத்தா கூடவே இருந்து படிக்கக் கூடாதா? இப்படி கெஸ்ட் மாதிரி வந்து போகதுக்கு, பக்கத்துல இருக்க வீட்ட வாங்கி அதை ஒடச்சு உங்க வீட்ட எதுக்கு பெருசு பண்ணணும்?”
“இந்த படம் முடியட்டும்ன்னு அப்பா சொன்னாங்க சர்வா. வீரா பையன ஃபர்ஸ்ட் ஸ்டேண்டர்ட் சேக்கும் போது இங்க வந்துடுவோம் சர்வா” என்றவள் கட்டிலில் படுத்தாள். அந்தி வெயில் படாத அந்த மரத்தடி நிழல் யாழிக்கு அவ்வளவு பிடிக்கும். இந்த கட்டிலில் படுத்து கொண்டு வானை வியந்து பார்த்த இரவுகள் அதிகம். இந்த திருச்சி வீடு, தாத்தா பராமரித்து வரும் தோட்டம் யாழியின் சொர்க்கம்.
“தோட்டத்துலயும் ஒரு வீடு வேணும் ப்பா. எனக்கு அங்கயே இருக்கணும் போல இருக்கு” என்ற மகளுக்காகவே சென்னையிலிருந்து திருச்சிக்குக் கூடிய சீக்கிரம் புலம் பெயர இருக்கிறார்கள்.
“நீ கண்ண மூடிட்டு கனவு காணு… நான் ஓட்டமா ஓடி போய் சர்பத்தையும் வளையலையும் எடுத்துட்டு வரேன்” என எழுந்தான் சர்வேஷ். “என் பங்க நீ குடிச்சிடாதா. வீராக்கும் சேத்தே எடுத்துட்டு வா” என அவன் பின்னோடு கத்தினாள்.
சற்று நேரத்தில், “ஆலி நானுக்கும் பலுக்கணும்” என வந்த வீராவை தன் தோள் மீது சாய்த்துக் கொண்டாள். வேப்பமரம் பூவை தூவியது. “ஆலி… ஸ்டால்ஸ் எங்க?” என அக்காவை பிராண்டினான் குழந்தை.
“அது நைட் தான் டா வரும்.”
“நைட் எப்போ வலும் ஆலி?”
“நீ தூங்கு. நைட் வந்ததும் எழுப்பறேன்”
“தூணி எலுந்தா நாளைக்கு வலுமா நைட்?”
“ஆமா டா”
“தூணி எழுந்தா சன் தான் வலும் ஆலி”
“அது நைட் தூங்கினா, சன் வரும். சன் இருக்கும் போது தூங்கி எழுந்தா மூன் வரும்”
“மூன்.. ஸ்டால்ஸ் எல்லாம் வலுமா?”
“ம்ம்ம்”
“இப்போ அதுவும் தூணுதா?”
“ஆமா டா”
“அத யாலு எலுப்புவா ஆலி?”
“டேய்… நீ பேசாம தூங்கு. அது வரும். அப்போ உன்ன எழுப்பி ஸ்டார்ஸ் பத்தி கத சொல்றேன்”
வெளியே சென்று வந்த கௌதமன் குளித்து, உடை மாற்ற அலமாரியைத் திறந்தான்.
“என்னங்க, ரதிக்கு வாங்கி வச்சிருக்க கம்மலும் ஆரமும் உள்ள இருக்கு எடுத்து பெட்டியில வைங்க. நாளைக்கு காலையில அவசரத்துல மறந்திடுவோம்” என அடுக்களையிலிருந்து குரல் கொடுத்தாள் யசோ.
“மலரக்கா வந்து கிச்சன பாக்க மாட்டாங்களா? நீ வந்து புருஷனுக்கு சேவை செய் வா” எனச் சிரித்துக் கொண்டே அலமாரியை நோட்டமிட்டான். வைத்த இடத்தில் நகை இல்லை என்றதும் ஒவ்வொரு இடமாகப் பார்க்க ஆரம்பித்தவன் பார்வை நினைவு புத்தகமிது விழுந்தது.
வருடங்களுக்குப் பின் மீண்டும் திறந்தான். வலப் பக்கத்துத் தாளில் பல படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. விராவைப் போல் இருந்த குட்டி ரகு, தூக்க முடியாது அவன் பேபியை தூக்கி நின்றான்.
குச்சி மனிதர்கள் சிரித்துக்கொண்டிருந்தனர்.
மை ஹீரோ என அவன் ஒட்டியிருந்த அவன் ஐயாவின் இருகரத்தில் இரு குழந்தைகள் தொங்கிக் கொண்டிருந்தனர்.
வலப்பக்கம் கண்கள் சென்றன. ‘அந்தி மாலைப் பொழுதில் ஒரு தோப்பு வீடு என்ன என்ன அம்சங்களைப் போர்த்திக் கொள்ளுமோ, அவை அத்தனையும் அந்த வீடு போர்த்திக் கொண்டிருந்தது. பெரிய திண்ணையோடு இருந்த அந்த வீட்டின் வாசலில் மூன்று பெரியவர்களும் ஒரு குட்டி மகனும் நின்றிருந்தனர்.’ எனக் கதை ஆரம்பமாகியிருந்தது.
கௌதமன் விரல்கள் எழுத்தை மெல்ல வருடி விட்டன. ஒவ்வொரு வார்த்தையும் இன்னும் மனப்பாடமாக நினைவில் உள்ளது. அவனால் உணரமுடிந்த… உணரமுடிகின்ற வரிகளும், வார்த்தைகளும் அதில் அடக்கம்.
புத்தகத்திலிருந்த திருமண பத்திரிக்கையைப் பார்த்தான். இதே போல் ஒன்றைத் தான் தங்களது திருமணத்திற்குத் தேர்ந்தெடுத்தான். கூர்கில் அவள் கேட்டு, அவன் தேர்ந்தெடுத்த அதே அறைக்குத் தேனிலவு சென்றனர்.
“இப்படி குடும்பமா ஹனி மூன் வர பாக்கியம் யாருக்கு வரும்?” என மகளை தோளில் போட்டு தூங்க வைத்துக் கொண்டே அவன் புலம்பியதெல்லாம் அன்று காற்றோடே கரைந்தது.
“அம்மா, அப்பா, நானு எல்லா ஒண்ணா தூணுணோம்” என அவள் லீவன், பிக்கி, தல்சல் மாமன்மார்களிடம் கூறி தகப்பன் மானத்தைக் காற்றில் பறக்கவிட்டதெல்லாம் வேறு கதை.
‘பெருங்காதலை எனக்கு காட்டின என் உயிர்மூச்சுக்கு…’ என்ற வாசகத்தை தாங்கி இன்று வரை திறக்கப்படாமல் இருந்த அந்த ஒற்றைக் கவரை பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ அதை கையில் எடுத்தான்.
இந்த லெட்டர நீ படிக்கிறன்னா… உன் மனசுல மட்டுமே நான் வாழ்ந்துட்டு இருக்கேன் இல்லையா? எனக்காக இன்னும் நீ அழுதுட்டு இருக்கியா பேபி?
அஞ்சு வயசுல உன் கைய பிடிச்ச அன்னைல இருந்து, உன் கைய விட்ட அன்னைக்கு வரைக்கும் நான் தனிமையை உணர்ந்ததே இல்ல பேபி. இப்போ உன்ன தனியா விட்டுட்டேன். கோவிச்சுக்காத பேபி.
என்னை ஆசை தீர நினைச்சுக்கோ. நம்ம பேரன்பை எவ்வளவு வேணுமோ நினைச்சுக்கோ. நம்ம சண்டை… அழுகை… சிரிப்பு… காதல்ன்னு வாழ்ந்த நிறைவான நாட்கள் எவ்வளவு அழகானவை இல்ல? அத எனக்குக் கொடுத்த நீ அதை எல்லாம் ஆசை தீர நினை. ஆனா ரொம்ப நாளைக்கு அதையே நினைச்சு என்னை உனக்குள்ள அடைக்காத. என் ஆன்மாவை போக விட்டுட்டு உன்ன ஃபிரியாக்கிக்கோ பேபி.
இதோட நம்ம பாதை ரெண்டா பிரியுது பேபி. எனக்கான வழியில நான் போயிட்டேன். உனக்கான வழிய நீ தேர்ந்தெடுத்துத் தான் ஆகணும். முடங்கிடாத. வீட்ட விட்டு வெளியில போ. பிடிச்சத எல்லாம் செய். மனம் விட்டுச் சிரி. வயிற வாட விடாத. வயிறு நிறைஞ்சதும் ஐஸ் கிரீம் சாப்பிடு. அம்மாவையும் ஐயாவையும் அழவிடாத, பத்திரமா பாத்துக்கோ. தாத்தா பாட்டிக்குத் தைரியம் சொல்லு. குடும்பம், எல்லாரும் கிடைக்கிற வரம் இல்ல பேபி.
நான் தனியா நின்ன போது என் கை பிடிச்சு என்னை வாழ வச்ச. அதே மாதிரி ஒரு நாள் உன் தனிமைய துடைக்க ஒரு கை நீளும். கண்டிப்பா அத பிடிச்சுக்கோ பேபி. காலையில எழுந்துக்க ஒரு காரணம் வச்சுக்கோ. எனக்காக காத்திருக்காம, மலை கோட்டைக்குப் போய் பௌர்ணமி நிலவ பாரு. திரும்பவும் நீ சிரிக்கணும். அப்போ தான் என் கூட்டுக்கு நான் நிம்மதியா போக முடியும்.
அடுத்த ஜென்மம் பத்தி தெரியாது. இந்த ஜென்மம் உன் கூட வாழ்ந்துட்டேன். நிறைவான சந்தோஷமான வாழ்க்கைய வாழ்ந்துட்டேன். எனக்கு அது போதும் பேபி. என் ஆன்மாவோட உன் நினைவுகளையும் சுமக்க முடியும்னா, உன் நினைவோட போறேன். உன்னோட தல நரைக்க வாழக் கொடுத்து வைக்காத எனக்காக அழு. என்னை பிரிஞ்ச உனக்காக அழு… நம்ம பிரிவ நினைச்சு அழு. எவ்வளவு முடியுமோ அழுது முடிச்சிடு. முடிச்ச அப்பறம் என்னை விட்டுடு. முடிஞ்சு போன நம்ம வாழ்க்கைய திரும்பி பாக்காம, உன் முன்னாடி இருக்க உனக்கான பாதையில போ பேபி. நீ தண்டு இல்ல… செடி. ஒரு பூ உதிர்ந்தா என்ன? பூத்துக் குலுங்கு.
சிறகு இருக்குன்னு பறவை பறந்துட்டே இருக்கிறது இல்ல… நாமளும் கால் இருக்குன்னு ஓடிட்டே இருக்கிறது இல்ல. நினைவில நான் இருக்கேன்னு என்னையே நினைச்சுட்டு இருக்காத. நினைவுகாளோட சமாதான உடன்படிக்கை பண்ணிக்கோ.
கடிதத்தை முடிக்க முடியவில்லை. கௌதமன் கண்கள் கலங்கின. நினைத்திருக்கிறான் பல முறை. ரகுவின் இடத்தில் கௌதமனும், கௌதமனிடத்தில் ரகுவும் இருந்திருக்கலாம் என்று. சிலர் அவனைக் கௌதமனாக எண்ணிப் பழக, சிலர் அவனை ரகுவாக எண்ணிக் கொண்டிருக்க, யசோ மனதில் அவன் ஒரு கலவை. ரகுவும் அவனே. கௌதமனும் அவனே. அவனை அப்படியே அவனாகவே ஏற்றுக் கொண்டதால் அவளுக்கு அவர்களது திருமண வாழ்வில் எந்த ஏமாற்றமும் இல்லை.
“துணி மாத்தாம என்ன பண்றீங்க?” நின்றிருந்தவன் முதுகோடு கட்டிக் கொண்டாள். என்ன உணர்ந்தாளோ, சட்டெனக் கௌதமனைத் திருப்பியவள் பயந்தே போனாள்.
“எ..என்ன ஆச்சு கௌதமன்? ஏ..ஏன் அழறீங்க?” கேட்டவளின் பார்வை அவன் கரத்திலிருந்த நோட்டு புத்தகத்தில் படிந்து, மயிலிறகைத் தீண்டி, கடிதத்தில் தேங்கியது.
கௌதமனைக் கேள்வியாகப் பார்த்தாள். “திரும்பி வராட்டா நீ படிக்கதுக்காக எழுதினது.” என அதை அவளிடம் நீட்டினான்.
கடிதத்தைப் புத்தகத்தின் கடைசி பக்கத்தில் வைத்தாள். “குட்டி போட்டிருக்கில்ல?” என மயிலிறகை ஆராய்ந்தாள். புத்தகத்தின் நடுவே மயிலிறகை வைத்து, நினைவு புத்தகத்தை மூடினாள்.
மூடிய புத்தகத்தைக் கட்டில் மீது போட்டவள், “அதுதான் வந்துட்டுட்டியே அப்பறம் என்னவாம்?” என மார்பில் முத்தமிட்டு அதில் முகம் புதைத்தாள்.
“கூசுது டி” என சிரித்தான். “அப்படியா… இதுக்கேவா?” என அவனைக் குறும்பு பார்வை பார்த்தாள்.
மாடி சுற்றுப்பயணத்தை முடித்து, திறந்திருந்த ஜன்னல் வழி வந்த வேப்பமரத்து தென்றல், கட்டிக் கொண்டு நின்றிருந்த ஜோடிக்கிடையே புகமுடியாது, கட்டிலில் கிடந்த புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தது. ரகு கதை எழுதியிருந்தான். சந்திரிகா, ஐயா, ரகு, யசோ பக்கங்களை நிறைத்திருந்தனர். ஒரு பக்க இடைவெளிக்குப் பின் கௌதமன் கரத்தில் பொக்கை வாய் யாழி மலர்ந்து சிரித்தாள், கௌதமன் தொடை மீது மகள் அமர்ந்திருக்க, கௌதமன் யசோவின் முன் மோதிரம் ஒன்றை நீட்டியிருந்தான்.
அலங்காரம் செய்யப்பட்டிருந்த மேடையில் கௌதமன் மடியில் யாழி அமர்ந்திருக்க, யசோவின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டினான் கௌதமன். கர்ப்பிணியான யசோ, சிறந்த புதுமுக இசை அமைப்பாளருக்கான விருதைக் கையில் ஏந்தியிருந்த பிரபு மற்றும் குழுவோடு நின்றிருந்தாள். கை நிறைய வளையல்களோடு உப்பிய கன்னத்தில் சந்தம் மினுங்க யசோ சிரிக்க, அவளைச் சுற்றி அவர்களது சொந்தம் அத்தனையும் பூரித்திருக்க, யாழியின் கரம் படித்து நின்றிருந்தனர் ராஜீவன் மற்றும் தர்ஷனின் குட்டி வாண்டுகள்.
ஒருவழியாக யாழியின் பிக்கி மாமாவின் திருணமும் நடந்தது. கௌதமன், ராஜீவன், தர்ஷன் என அந்த நாளை அமர்க்களப்படுத்திய புகைப்படங்கள் கௌதமன் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை.
சென்ற வருடம் மழலையர் பள்ளியில் குடும்பப்படம் வரைக என்ற வீட்டுப்பாட பத்தகத்தில் வீரா அவன் திறமையைக் காட்டியிருந்தான். அதில், அசோக மரத்தடியில் இரு தாத்தாக்களும், பாட்டியும் கண்ணாடி போட்ட நான்கு முடி குச்சி மனிதர்களாக அமர்ந்திருந்தனர். திண்ணையில் அமர்ந்திருந்த அம்மா முதுகில் சவாரி செய்து கொண்டிருந்தான் வீரா. கௌதமன் புஜத்தை முறுக்கிப் பிடித்திருக்க, யாழி மற்றும் சர்வேஷ் இருகரங்களிலும் தொங்கிக் கொண்டிருந்தனர். அனைவரும் குச்சி மனிதர்களாக இருந்தாலும் அனைத்து குச்சி மனித முகங்களில் சிரிப்பு அப்பிக் கிடந்தது.
படங்கள் முடிந்து, வெள்ளை பக்கங்கள் காற்றுக்குப் படபடத்தன. பல இன்ப நினைவுகளை சுமந்திருக்கும் புத்தகம் இன்னும் பல பல புது உறவுகளாலும், இன்ப நினைவுகளாலும் நிரப்பப்பட காத்திருந்தது.
“தீண்டாமைய ஒழிக்காம தான் மாடியில ரெண்டு சுத்திட்டு இருக்கா?” செல்லமாகத் தலையில் கொட்டினான் கௌதமன். வலிக்காத தலையை அவளும் வலிப்பது போல் தேய்த்து கொண்டாள்.
“பேபி… இன்னைக்குப் பௌர்ணமி. மாடியில நிலாச் சோறு சாப்பிடலாமா?” முகத்தில் நடத்தி கொண்டிருந்த ஊர்வலத்தை நிறுத்திக் கேட்டான் கணவன்.
“நம்ம ஐஸ் கிரீம் கடை, ஆண்டு விழான்னு ஆப்பர் போட்டிருக்கிறான்… நிலாச் சோறும். நிலா ஐஸ் கிரீமும்.” அவன் விட்ட இடத்திலிருந்து அவள் தொடர்ந்தாள்.
“இல்லன்னா மட்டும் மேடம் ஐஸ் கிரீம் வாங்கிறதே இல்ல. சரி ஐஸ்கிரீமுக்கு அப்பறம் என்னன்னு சொல்லவே இல்ல” அவன் உல்லாசமாகச் சிரித்தான்.
“தீண்டாமையை ஒழிப்போம்…” எனச் சிரித்தாள் கௌதமனின் யசோதரா.