Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 9.1

அத்தியாயம் 9

இரண்டு மாதம் மட்டும் வெளியில் வேலைக்கு செல்ல வேண்டாம் என்றான் பொற்செல்வன். தற்போது நான்கு மாதங்கள் முடிந்த நிலையிலும், பிரச்சனைகள் தீரவில்லை, இன்னும் சில காலம் பொறுத்திரு என்றேதான் சொல்லிக்கொண்டிருந்தான்.

“ம்மா இனி என்னால வெய்ட் பண்ண முடியாது. வேற இடத்துக்கு அப்ளை பண்ணிட்டேன், அங்க வேலை கிடைச்சிடுச்சுனா கண்டிப்பா கிளம்பிடுவேன்” என்றாள் செந்தமிழ்செல்வி.

“அடுத்த வாரம் உன்னை பொண்ணு பார்க்க வருவாங்க, மாப்பிள்ளை உறுதியாகிடுச்சுனா வேலைக்கு போகக்கூடாது”



Advertisement

“யாரை கேட்டு அடுத்த வாரமே வர சொன்னிங்க? இப்போ ஷோ காட்டுற மூடுல நான் இல்ல” என்றாள்.

“ஷோ காட்டுறனு என்னடீ பேச்சு இது? உனக்கு பையனையும், பையனுக்கு உன்னையும் பிடிக்குதானு தெரிஞ்சுக்கத்தான பொண்ணு பார்க்க வரது?”

“ஓ அப்படியா? இப்போ இருக்க மாதிரியே வந்து நிற்க சம்மதிச்சிடுவிங்களா?”

Advertisement

இரவு உடையோடும் கொண்டையோடும் இருப்பவளை முறைத்தவர், “உன் அம்மாவால இவ்வளோதான் முடியும்னு வரவங்களுக்கு காட்டப்போறியா?”

Advertisement

“இப்படி காரணம் சொல்லி என்னை கார்னர் பண்ணாதம்மா” என்றாள் பாவமாக.

“நீயும் என்னை படுத்தாத செல்வி. பையனை பார்க்காமலே கல்யாணம் வேண்டாம்னு சொல்றது சரியா? உனக்கு பிடிக்கலனா வேற பார்க்கலாம். பொண்ணு பார்க்கவே வரக்கூடாதுனா கல்யாணம் எப்படி பண்றது?”

“ம்மா எதுக்கு இப்படி சோகமா பேசுறிங்க?”

Advertisement

“இப்போ வந்திருக்க வரனும், அவங்க குடும்பமும் ரொம்ப நல்ல மாதிரியா என் மனசுக்கு படுது. உன் அப்பா அளவுக்கு வசதியில்லைனாலும் என் அளவுக்கு ஏழைப்பட்டவங்க இல்ல.

மாப்பிள்ளை சென்ட்ரல் கவர்மண்ட் வேலைல இருக்காரு. சொந்த வீடு இருக்கு, கார் இருக்கு. அக்கா, தங்கைனு இரண்டு பொண்ணு பிள்ளைகளோட வளர்ந்திருக்கார். உன்னை நல்லா பார்த்துப்பாங்க. உன் போட்டோவை பார்த்ததும் பையனுக்கு பிடிச்சிடுச்சாம். இதை தவற விட்டா என் வசதிக்கு இப்படி அமையுறது கஷ்டம்” என்றார் கவலையாக.

“அப்பா வசதி அளவுக்கு இல்லைனு சொல்றதை ஒத்துக்கறேன், அதென்ன என் வசதினு சொல்ற?”

“பின்ன என்ன சொல்றது?”

“நம்ம வசதினு சொல்லனும்” என்று முகம் திருப்பிக்கொண்டாள் கோபமாக.

மகளின் பேச்சில் நெகிழ்ந்த போதும், அத்தனை வசதி படைத்தவன் மகளை இப்படி மாற்றி வைத்திருக்கிறோமே என்று வருத்தமும் உண்டானது.

“நானெல்லாம் டென்ந்த், ப்ளஸ்டூ, டிகிரினு எல்லாமே ஆவ்ரேஜ் மார்க்தான். நீ அப்படி இல்ல, தினமும் கொஞ்ச நேரம்தான் வீட்டுல படிப்ப, ஆனா டென்ந்த், ப்ளஸ்டூல நல்ல மார்க் வாங்கின.

காலேஜ் படிக்கும்போது எக்ஸாம் டைம் மட்டும்தான் படிப்ப, பார்ட் டைம் வேலையும் பார்த்துக்கிட்டு, நல்ல பர்சன்ட்டேஜ்ல டிகிரி வாங்கின. உன் படிப்புக்கும், திறமைக்கும் உன் அப்பா மாதிரி தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்குவ.

 உன்னை கட்டிக்கிறவனுக்கு ஆரம்பத்துல உன் அருமை புரியாது. இப்போ அழகுக்காக கல்யாணம் செய்ய சம்மதிச்சாலும், போகப்போக உன்னை பொக்கிஷமா நினைப்பாங்க. உன் திறமையும், பக்குவமும், ஆயிரம் பொன்னுக்கு சமம்னு புரிஞ்சிப்பாங்க” என்றார் பெருமையாக.

அப்பொழுதும் செல்வி முறைத்துக்கொண்டே இருக்க, “நான் இவ்வளோ சொல்லியும் உனக்கு கல்யாணம் செய்துக்க தோணலையா?” என்றார்.

“எனக்கு என் அப்பா மாதிரி தனி சாம்ராஜ்யம் உருவாக்க வேணாம்” என்றாள் வெடுக்கென.

தந்தையை முன்னிருத்திப் பேசியதில் கோபம் கொள்கிறாள் என்று புரிய, “என் மனசுல என்ன இருக்கோ அதை வெளிப்படையா உன்கிட்ட கூட சொல்லக்கூடாதா? எப்படியானாலும் நீ அவர் பொண்ணுதான? அப்படி இப்படி எதாவது வார்த்தை வந்தா சகிச்சுக்கோ செல்வி.

மாப்பிள்ளையைப் பத்தி எவ்வளோ சொன்னேன்? அதெல்லாம் உன் மண்டைக்கு ஏறல, உன் அப்பாவை பத்தி பேசினதுல மட்டும் கவனம் இருக்கு” என்றார் கோபமாக.

செந்தமிழ்செல்வி அமைதியாக இருக்க, “ப்ளீஸ் செல்வி, பையனைப் பாரு. உனக்கு பிடிக்கலனா விட்டுடறேன்” என்றார் கெஞ்சலாக.

“இப்போ இப்படி சொல்லுவ, அப்புறம் பிடிக்கலனு சொன்னா காரணம் கேட்ப, பிடிச்சிருக்குனு சொன்னாலும் உடனே கல்யாணம் செய்யனும்னு கேட்குறாங்கனு சொல்லுவ. ம்ப்ச்… எதுவானாலும் இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்மா” என்று மகளும் கெஞ்சினாள் பாவமாக.

“கொஞ்ச நாள்ல என்ன சாதிக்கப்போற?”

“எந்த கமிட்மண்ட்டும் இல்லாம நிம்மதியா இருக்கத்தான் டைம் கேட்குறேன்”

“உனக்கு கல்யாணம் செய்யும் எண்ணம் வரும்போது இப்படி பையனை எப்படி தேடி பிடிக்கிறது?” என்று கேட்டவருக்கு மகனின் குரல்போல் வெளியில் கேட்கவே அவசரமாக வெளியே வந்தார்.

கதவைத் திறந்த நேரம், காவலாளி இளவரசனின் சட்டையைப் பிடிக்கப் போக, “தம்பி தம்பி, அவன் என் மகன்” என்றார் சாம்பவி.

“ஓ… சாரி மேடம்” என்ற காவலாளியை முறைத்தவாறு உள்ளே சென்றான் இளவரசன்.

அண்ணனை கண்டதும் செந்தமிழ்செல்வி உள்ளே செல்ல முயல, வேக நடையோடு சென்று அவளின் கைப்பிடித்து வந்து சோபாவில் அமரவைத்து தானும் அமர்ந்தான்.

“கையை விடு” என்று அவளின் கையை விடுவிக்க முயல, “உங்களைப் பார்க்கத்தான வந்திருக்கேன்? பார்த்து ஒன்றரை வருசம் ஆகுது. உள்ள போனா என்ன அர்த்தம்?” என்றான் கையை விடாமல்.

“எனக்கு உன்னை பார்க்க விருப்பமில்லைனு அர்த்தம்” என்றாள்.

உள்ளே வந்த சாம்பவி, “ஏன் செல்வி இப்படி பேசுற?” என கடிந்து, மகனுக்கு தண்ணீர் கொடுத்து, “நல்லா இருக்கியா இளவரசா? வரேனு போன் கூட பண்ணல?” என்றார் மகனைப் பார்த்த மகிழ்வோடு.

“நான் நல்லாவே இல்லம்மா” என்றான் வருத்தத்தோடு.

தகப்பனோடு மகனுக்கு பிரச்சனையோ என்று, “ஏன் இளவரசா? அங்க உங்கப்பா… அந்த பொம்பள… ம்ப்ச்” என்று தனது கேள்வியை கேட்க முடியாமல் தடுமாறினார் சாம்பவி.

அன்னையிடமே இது குறித்து ஏதும் பேசியதில்லை எனும்போது தங்கை முன்னே எப்படி பேசுவது என்று இளவரசன் சில நொடி தயங்க, “அப்பாக்கு மாதிரி அம்மாக்கும் அஃபையர் இருந்திருந்தா” என்றவளை மேலே பேச விடாமல் பளீரென அறைந்திருந்தார் சாம்பவி.

இதுவரை மகளை அடித்திராத சாம்பவிக்கு தற்போது அடித்தும் கோபம் தணியவில்லை. அன்னையின் சிவந்த முகத்தில் அவரின் கோபத்தை உணர்ந்த இளவரசன், “ம்மா அவ சின்ன பொண்ணு, இப்படியா அடிப்பிங்க?” என்று கடிந்தபடி, ஐஸ்கட்டிகளை எடுத்து வந்து தங்கையின் கன்னத்திற்கு ஒத்தடம் கொடுக்கப்போக, கண்ணீரோடே அதனை தட்டிவிட்டாள் செல்வி.

“ம்ச்ச்” என்று தங்கையின் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் ஒத்தடம் கொடுத்தபடி, “இப்படி பேசலாமாடா?” என்றான்.

தந்தையின் தவறுகள் தெரிந்தும் இன்னும் தந்தையோடிருக்கும் அண்ணனிற்கு விளக்கம் கொடுக்க பிடிக்கவில்லை என்றபோதும், “அம்மா எதாவது தப்பு செய்திருந்தா அப்பா சும்மா இருப்பாரா? நீயும் அம்மாவை பார்க்க வருவியானுதான் கேட்க வந்தேன்” என்று அன்னைக்கு விளக்கம் கொடுத்தாள் விம்மலோடு.

“அவரையும் என்னையும் கம்ப்பேர் பண்ணி எந்த பேச்சும் கூடாது” என்று கட்டளையிட்ட சாம்பவி, மகளின் கன்னத்தை பார்த்து பதறிப்போனார்.

இளவரசன் ஒத்தடம் கொடுத்தபோதும், விரலின் தடம் ஆழப் பதிந்திருந்தது. கன்னம் உப்பிச் சிவந்திருக்க, இப்படியா அடிச்சேன்? என்று தன்னையே நொந்தபடி “டாக்டர்கிட்ட போலாம் செல்வி” என்றார்.

“வேணாம், இப்படி வெளில வரமாட்டேன்” எனப் பிணங்கினாள் உதட்டை பிதுக்கியபடி.

“இளா, நான் போய் ஆயின்மண்ட் வாங்கி வரேன்” என்று கிளம்பப்பார்க்க, “நான் போய் வாங்கி வரேன்” என்று கிளம்பினான் இளவரசன்.

அரைமணி நேரத்தில் இளவரசன் வர, “நான் போட்டுக்கமாட்டேன்” என்றாள்.

“நான் கையை பிடிச்சிக்கிறேன், நீ போட்டு விடும்மா” என்றவன், முன்புபோல் கையை அழுத்திப் பிடிக்காமல், செல்வி தடுக்க முடியாதபடி பாசத்தோடு அணைத்திருந்தான்.

“தொடதம்மா, எரியுது” என்றாள் பலவீனமாக.

“ம்மா அவ ஸ்கூல் புக்ஸ் இருக்கா?”

“ம், எதுக்கு?”

“எதாவது புக்ல மயிலிறகு வச்சிருப்பா, போய் எடுத்து வாங்க”

சாம்பவிக்கும் தற்போதுதான் நியாபகம் வர, “காலேஜ் புக்லயும்தான் வச்சிருந்தா” என்று சென்று எடுத்து வந்து, அதன் உதவியோடு களிம்பை போட்டுவிட்டார்.

“அப்படியே படு கொஞ்ச நேரம்” என்று இளவரசன் தனது மடியினில் சாய்க்க, “எனக்கு ரூம்க்கு போகனும்” என்றாள்.

இயற்கை உபாதையாக இருக்கலாம் என்று தங்கையை விடுவித்தான். அறைக்குள் சென்றவள், கதவை தாழிட்டுக்கொண்டாள்.

செல்வியின் கோபம் தணியட்டும் என்று தனிமையில் விட்டவன், “வெளில யாரும்மா? புதுசா இருக்கான்?” என்றான்.

“செல்வா தம்பியோட தொழில்முறை எதிரிகளால செல்விக்கு ஆபத்தாகிடுமோனு காவலுக்கு ஆள் போட்டிருக்கார், நல்லவன்தான். உன்னை அவன் பார்த்ததில்ல. யாரோனு நினைச்சு கை வச்சிட்டான்”

“ஓ… அப்படியா?” என்றவன், செல்விக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கியாம்மா?” என்றான்.

சாம்பவி ஆமாம் என்பதாய் தலையசைக்க, அன்னை பார்த்திருக்கும் வரனின் விபரங்களை சொல்லி, “அப்பா உங்களுக்கு செய்தது மன்னிக்க முடியாத துரோகம்தான், அதுக்காக செல்விக்கு இப்படி இடம் பார்ப்பிங்களா?” என்றான் சிறு கோபத்தோடு.

“அப்பா வரன் பார்க்கட்டுமானு செல்விகிட்ட முன்னாடியே கேட்டுட்டேன், அவர் பார்த்தா கல்யாணமே செய்துக்கமாட்டேனு சொன்னா. அதுக்கப்புறம்தான் நான் பார்க்க ஆரம்பிச்சேன், என் தகுதிக்கு எப்படி பார்க்க முடியுமோ அப்படித்தான் என்னால பார்க்க முடியும்.

செல்விக்கு இருபத்திமூணு வயசு ஆகுது, உன் அப்பாக்கு பொண்ணைப் பத்தி யோசனை இருந்தா கல்யாணத்தை பத்தி யோசிக்க வேண்டாமா?” என்றார்.

“செல்விக்கு அப்பா வேண்டாம்னா பரவால்லம்மா, நிராகரிப்புக்கு தகுதியானவர்தான். ஆனா அவர் சொத்துல செல்விக்கு உரிமை இருக்கு. அவளுக்கு பிடிக்கலைனாலும் நாம சொல்லி புரிய வைக்கனும். அவளுக்கேத்த வரனை நான் பார்க்குறேன், இப்போ பார்த்திருக்க இடம் வேண்டாம்னு சொல்லிடுங்க” என்றான் தன்மையாக.

பட்டென கதவைத் திறந்தவள், “அதானே பார்த்தேன், நீயாவது காரணமில்லாம அம்மா, தங்கச்சியை பார்க்க வரதாவது? அங்க கல்யாணம் செய்துக்கிட்டா அப்பாக்கு கௌரவ பிரச்சனை, அவர் கௌரவத்தை காப்பாத்த கிளம்பி வந்திருக்க” என்று அண்ணனை தீயாய் முறைத்தவள், “ம்மா என்னைக்கானாலும் நீ பார்க்குற பையனைத்தான் நான் கல்யாணம் செய்துப்பேன். யார் என்ன செய்றாங்கனு பார்ப்போம்” என்றாள்.

சிறுபிள்ளைத் தனமாக உளறும் தங்கையைப் பார்த்து சிரித்தபடி, “ம்மா இங்க பார்க்குற வேலையை விட்டுடுங்க, இனி நாம மூணுபேரும் ஒன்னா இருக்கப்போறோம்” என்றான்.

மகன் ஆசைப்பட்டாலும் அவனின் அப்பா விடவேமாட்டார், சாத்தியமில்லாத விசயத்தை எத்தனை சுலபமாய் சொல்கிறான் என்று அதிர்ந்து விழித்த சாம்பவி, “அப்படிலாம் டக்குனு வேலையை விட முடியாது இளவரசா” என்றார்.

“உடனே வேலையை விட வேண்டாம். அஞ்சு மாசம் டைம் எடுத்துக்கோங்க” என்று தனது மொபைலிலிருந்து பணி நியமன ஆணையை காண்பித்து, அன்னையின் பாதம் பணிந்து எழுந்தான். படித்துப் பார்த்த சாம்பவியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

அன்னையின் கண்களை துடைத்துவிட்டபடி, “அப்பா காசுலதானே வாழமாட்டிங்க? என் சம்பாத்தியத்துல இருப்பிங்கதானே?” என்றான்.

பல கோடி சொத்துகளுக்கு வாரிசான இளவரசன் அனைத்தும் துறந்து, கடின உழைப்பை போட்டு, சுங்கத்துறையின் உயர் அதிகாரிப் பணியை தனதாக்கியிருந்தான்.

உன் சம்பாத்தியமா? என்ற யோசனையோடு அன்னையிடமிருந்து மொபைலை பிடுங்கிப் பார்த்த பின்னே மிகுந்த சந்தோசம் அடைந்தாள். இந்த வேலை வாங்குவது எவ்வளவு கடினம் என்பதும், தந்தையை எதிர்க்கவே இதனை சாதித்திருக்கிறான் என்பதும், தந்தைக்கு இது பெரும் அடியாக இருக்கும் என்பதிலும் செல்வியின் சந்தோசம் அதிகமானது.

“கங்ராட்ஸ்ண்ணா” என்றாள் மிகுந்த சந்தோசத்தோடு.

“தேங்க்ஸ் டா” என்று மகிழ்வோடு தங்கையருகே செல்ல, “அதுக்காக நீ சொல்ற மாதிரி கேட்க மாட்டேன், உன்கூடலாம் வரமாட்டேன். நானும் படிச்சிருக்கேன். என்னாலயும் சுயமா வாழ முடியும்” என்றாள் ரோசமாக.

இளவரசன் அன்னையைப் பார்க்க, கணவனின் குணமறிந்த சாம்பவி, “உன் அப்பா வேலைக்கு போக சம்மதிச்சாரா? அவருக்கு இதுல சந்தோசமா?” என்றார்.

“நான் வேலைக்காக படிச்சதே அவருக்கு தெரியாது. எதோ பொறுப்பில்லாம சுத்திட்டிருக்கேனு நினைச்சிட்டிருக்கார். எனக்கு வேலை கிடைச்சதும் தெரியாது, தேவைப்படும்போது சொல்லிக்கிறேன்” என்றவன்,

செல்வியையும் பார்த்தபடி “இனி நாம மூணுபேரும் ஒன்னா இருக்கலாம்” என்றான் மீண்டும்.

“இல்ல இளவரசா, இப்போ உன்னோட வந்தா உன் அப்பாவை பார்க்குற மாதிரி ஆகிடும், கொஞ்ச நாள் போகட்டும்” என்று சொல்ல, இளவரசனின் முகம் வாடிப்போனது.

மகனின் மனநிலையை மாற்றி உண்ண வைப்பதற்காக, இப்படி சிறந்த பணிக்கு தேர்வாக எத்தனை கடினப்பட்டாய்? பணியில் உனக்கான பொறுப்புகள் என்னென்ன? என்றெல்லாம் சாம்பவி ஆர்பரிப்போடு பேசிக்கொண்டிருக்க,

அன்னையின் கேள்விகளுக்கு பதிலளித்தவன், “பேச்சை மாத்தினா மறந்து போறதுக்கு நானொன்னும் சின்ன பையன் இல்லம்மா, உங்களுக்காவும், செல்விக்காகவும்தான் கஷ்டப்பட்டு படிச்சி இந்த வேலையை வாங்கினேன்.

அஞ்சு இல்லைனா ஆறு மாசம்தான் டைம். அதுக்கப்புறம் என்னோட வந்திடனும், இல்லைனா வேலையை ரிசைன் பண்ணிட்டு எங்கேயாவது போய்டுவேன், அதுக்கப்புறம் யார் நினைச்சாலும் என்னை எப்போவும் பார்க்க முடியாது” என்றான் தீர்க்கமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!