Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 10.2

செந்தமிழ்செல்வியை பார்த்து ஐந்து மாதம் ஆகிறது. அண்ணனின் பிரச்சனை, அண்ணியின் வேதனை, தனது தொழில் விசயங்கள் என்று செந்தமிழ்செல்வியை நினைக்க நேரமில்லா வண்ணம் தன்னை வகுத்துக்கொண்டான்.

செல்வியை பிடிச்சது, மனசை வெளிப்படுத்தினேன். அவளுக்கு பிடிக்கலனும்போது வருத்தமாயிருந்தாலும் விலகுவதுதான் சரி என்று முன்பு நேர்மையாய் நினைத்த மனது, அவளுக்கு திருமணம் செய்யப்போகிறார்கள் என்று தெரிந்ததும் தறிகெட்டு தவித்தது.

திருமண வயதுள்ள பெண்ணுக்கு மணம் முடிக்க பெற்றோர் ஆசை கொள்வார்கள்தானே? என்று தன்னை தேற்ற முயன்றான். ஆனால் முடியவில்லை.

அஞ்சு வருசமா என்னைப் பார்க்குறா, பழகியிருக்காதான? என்ன குறை எனகிட்ட? ஏன்டி என்னை பிடிக்கல? என் மனசை சொல்லியும் என்னை நிராகரிக்க எப்படி மனசு வந்துச்சு? என்று நினைத்திருந்தான் கோபமாக.



Advertisement

தன்னிடம் பேசிவிட்டு வெளியில் சென்ற செல்வன் அரைமணி நேரம் கழித்துதான் வந்தான். வந்ததிலிருந்து தம்பியின் முகம் இறுகியிருக்க, “என்ன செல்வா? கோபமா இருக்க மாதிரி இருக்கே? எதாவது போன் வந்ததா? என்னைத் தேடி யாராவது வந்தாங்களா?” என பதைப்போடு கேட்டான் தேவராஜ்-

“ம்ப்ச் அண்ணா, அப்படிலாம் ஏதும் இல்ல, இது வேற டென்ஷன். டாக்டர் பேசக்கூடாதுனு சொல்றாங்க, அடங்குறிங்களா? பேசிப் பேசி தலைவலி வந்திடப்போகுது, அப்புறம் நாளைக்கு போக முடியாது” என அச்சுறுத்த, நாளை மறுநாள் கோர்ட்டிற்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே தூங்க முயன்று கண்மூடினான்.

தேவராஜ் பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்து தனது ஆரோக்யத்தைப் பற்றி நினைக்க மறந்திருந்தான் பொற்செல்வன். உடற்பயிற்சி, சரியான நேரத்திற்கு உணவு, தூக்கம் என்று எதைப்பற்றியும் யோசிக்க நேரமில்லை.

Advertisement

அண்ணனின் பிரச்சனை சற்றே தணிந்த நிலையில், இன்று செல்வியின் நினைவு பாடாய் படுத்த, ராகுலுக்கு அழைத்தான்.

Advertisement

“செல்வி எப்படி இருக்கா?”

“கன்னம் இன்னும் தடிச்சிருக்கு, செல்வியை அடிச்சது அவங்க அண்ணன் இல்ல, சாம்பவி மேடம், அப்பா பண்றமாதிரி அம்மா பண்ணியிருந்தா என்னாகும்னு செல்வி கேட்டுருக்கு, மேடத்துக்கு கோபம் வந்து அடிச்சிட்டாங்களாம், அடிச்சிட்டு வருந்தினாங்க” என்றான்.

ராகுல் கொடுத்த விபரம் எல்லாம் போதவில்லை பொற்செல்வனுக்கு.

Advertisement

“அறையிலேயே உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தான். இரவு எட்டு மணிபோல் ஆரம்பித்தவனுக்கு நள்ளிரவு ஆனதே தெரியவில்லை. உடல் ஓய்விற்காக ஏங்க, வியர்த்து நனைந்த உடலோடு படுத்தவன், சில நொடிகளிலேயே உறங்கிப்போனான்.

அடுத்த நாள் மாலை ஏழு மணிபோல் வீட்டிற்கு வந்தார்கள் இருவரும். நவீனா வீட்டைவிட்டு போன வேதனையை பொற்செல்வனிடம் சொல்லலாம், மகன் எதாவது செய்வான் என்று காத்திருந்த அமிர்தவள்ளி, தேவராஜைப் பார்த்ததும் பதறிப்போனார்.

“தேவாக்கு என்னாச்சு? தலைல கட்டு” என்று கையை ஆராய, அங்கேயும் கட்டு போடப்பட்டிருந்தது. “என்ன செல்வா இது? அதான் நாலு நாளா போன் கூட எடுக்கலையா? எப்படி ஆச்சு?” என்றார் கண்ணீரோடு.

“சின்ன ஆக்ஸிடண்ட்ம்மா”

“சின்ன ஆக்ஸிடண்ட்டா? தலை, கை, கால்னு எல்லா இடத்துலயும் கட்டு போட்டிருக்கு?”

“ம்மா, முதல்ல ரூம்க்கு போலாம்” என்று தேவராஜை தாங்கலாக அழைத்துக்கொண்டு போனான் அவனறைக்கு.

அமிர்தவள்ளி பின்னோடு வர, “ம்மா, எனக்கு சாப்பிட வேணும், போய் ரெடி பண்ண சொல்லுங்க, அண்ணாக்கு துடைச்சி விட்டுட்டு வரேன்” என்றான்.

அமிர்தவள்ளி சென்றதும் “நீ துடைச்சிவிட வேணாம், நான் பார்த்துக்கிறேன்” என்றான் தேவராஜ்.

“ஸ்யூரா?”

“ம், பார்த்துக்கிறேன்”

“சரி சீக்கிரம் ரெடி ஆகி வாங்க, நானும் போய் குளிச்சிட்டு வரேன்” என்று வெளியேறினான்.

பொற்செல்வனைப் பார்த்த்தும், “எப்படிடா ஆச்சு? ஏன் சொல்லல? தலைல பெருசா காயம் போல” என கலங்கினார் அமிர்தவள்ளி.

தந்தையும் தவிப்போடு பார்க்கவே, “தலைல கொஞ்சம் அடி ஆழமா பட்டுடுச்சும்மா, இப்போ பரவால்ல” என்றான்.

“இப்படி நிலைமைல கோர்ட்டுக்கு போயே ஆகனுமா?”

“நானும் வேண்டாம்னு சொன்னேன்ம்மா, போயே ஆகனும்னு பிடிவாதம் பண்றார், என்ன பண்ணட்டும்?”

“நவீனா நம்ம வீட்டை விட்டு போய்ட்டாடா” என்றவருக்கு அழுகை அடக்க முடியவில்லை, கதறிவிட்டார் அமிர்தவள்ளி.

“விவாகரத்து பண்ணப்போறாங்க, இப்போ இல்லைனாலும் அப்புறம் போய்த்தானே ஆகனும்? அதுக்கு இப்போவே போறது பரவால்லதான்”

“நீ சரி பண்ணிடுவேனு நம்பினேன் செல்வா, தேவாகிட்ட பேசவேயில்லையா?” என கேட்டார் புருஷோத்தமன்.

“என்னை நம்புறிங்கள்லப்பா?”

“முன்ன நம்பினேன், இப்போ நம்பிக்கை போச்சு செல்வா” என்றார் வேதனையாக.

“இப்போவும் நம்புங்க, எல்லாம் சரியாகும்”

“நவீனா வீட்டைவிட்டு பேனதுலயிருந்து வேதனையா இருக்கு செல்வா, இன்னைக்கு கோர்ட்டுக்கு போனா எல்லாருக்கும் விசயம் தெரிஞ்சிடும். சம்மந்தி வீட்டுக்கு என்ன பதில் சொல்வேன்?”

“எனக்கும் கஷ்டமாத்தான்ப்பா இருக்கு, எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணித்தான் ஆகனும்” என்க, தேவேந்திரனும் ராஜலஷ்மியும் வந்தனர்.

தேவேந்திரனும் நவீனாவைப் பற்றி கவலைப் படவே, அண்ணனிற்கு ஆறுதல் சொல்லி, “அண்ணி கூட நீங்க வரிங்களா அண்ணி?” என்றான் ராஜலஷ்மியிடம்.

“நான் கேட்டேன் செல்வா, அவ வேணாம்னுட்டா”

“ஓ.. சரி விடுங்க நான் பார்த்துக்கிறேன்” என்றவன் ப்ரித்திகாவை விசாரித்துவிட்டு, அறைக்குள் சென்று அரைமணி நேரத்தில் தயாராகி வந்தான்.

பின்னே இருவரும் உணவுண்டதும், “டேப்லட் சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்கண்ணா, நான் அரைமணி நேரத்துல வந்துடறேன், கோர்ட்டுக்கு நானே கூட்டிட்டு போறேன்” என்றான்.

தேவராஜ், “உனக்குத்தான் ரெஸ்ட்டே இல்ல, நான் டிரைவரோட போறேன் செல்வா” என்றான்.

“வேண்டாம், நானே வரேன்” என்று நவீனாவை பார்க்க கிளம்பினான்.

நவீனா தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து அழைப்பு மணியை ஒலிக்கவிட்டான். கதவு திறக்காமல் போகவே, நவீனாவிற்கு அழைத்தான்.

“நான்தான் அண்ணி, கதவைத் திறங்க” என்றான் பொற்செல்வன்.

“நான் இருக்கேனு சொல்லாதிங்கக்கா” என்ற செல்வியின் குரல் நன்றாக கேட்டது பொற்செல்வனுக்கு. “இதோ வரேன்” என்று இணைப்பை துண்டித்து, ஐந்து நிமிடம் கழித்து கதவைத் திறந்தாள் நவீனா.

நவீனாவின் வீங்கி சிவந்திருந்த முகத்தை பார்த்தவன், “ம்ப்ச், என்ன அண்ணி? என்மேல நம்பிக்கை இல்லையா? எதுக்கு இப்படி அழுதிருக்கிங்க?” என்றபடி உள்ளே வந்தான்.

“கோர்ட்டு, கேஸ், இப்படி நிலைமை வரும்னு நான் நினைக்கவேயில்ல, எப்படியாவது தடுத்துடுவிங்கனு நம்பினேன்” என கண்ணீர் விட்டாள்.

“கேஸ் ஃபைல் பண்ணினா கோர்ட்டுக்கு போய்த்தான் ஆகனும், இந்த டிவோர்ஸ்க்கு காரணம் அண்ணாதான்னாலும், அதை நீங்களும்தானே கேட்டிங்க?”

என்ன சொல்வாள் இதற்கு? விவாகரத்து கொடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்றல்லவா சொல்லியிருந்தான் தேவராஜ். இயலாமையில் நவீனாவின் கண்ணீர் அதிகமாகிட, அதை சகிக்க முடியாமல் அறையிலிருந்து வெளியே வந்தாள் செந்தமிழ்செல்வி.

தன்னை முறைத்துக்கொண்டிருக்கும் செல்வியை தானும் முறைத்தபடி அவளை தன்னுள் நிறைத்துக்கொண்டிருந்தான் பொற்செல்வன்.

“டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணலைனா தற்கொலை செய்துக்குவேனு சொல்லி தேவா சார் மிரட்டியிருக்கார், அப்ளை பண்ணாம என்ன பண்ணுவாங்க? எதோ நவீனாக்கா ஆசைப்பட்டு டிவோர்ஸ் கேட்டமாதிரி கேட்குறிங்க? ஆப்போஸிட்ல இருக்கவங்களோட சிட்டிவேஷனை கொஞ்சம் கூட புரிஞ்சிக்காம பேசுறிங்க” என பொறிந்தாள் செல்வி.

செந்தமிழ்செல்வியின் கன்னத்தில் அடிபட்ட தடம் இன்னும் இருந்தது. மனம் வலித்தபோதும் அதனை காட்டிக்கொள்ளாமல், “நீயும் என் அண்ணியும் ஃப்ரண்ட்ஸ்னா அதை உங்களோட மட்டும்தான் வச்சிக்கனும். என்னை கேள்வி கேட்க நீ யாரு?” என்றான்.

பொற்செல்வன் மீதான கோபம் இன்னும் இருக்கிறது. ஆனாலும் கன்னம் தடித்திருப்பதை பார்த்தால் அக்கறையாக விசாரிப்பான், நமக்கு அவனின் அக்கறை வேண்டாம் என்பதற்காகத்தான் வெளியே வராமல் இருந்தாள்.

ஆனால் செல்வி நினைத்தவாறு ஏதும் நடக்கவில்லை. அவனின் அக்கறை வேண்டாம் என்று நினைத்தவளுக்கு, தனது கன்னத்தை பார்த்தும் அவன் ஏதும் கேட்காதது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது.

‘நான் யாரா?’ என அதிர்ந்தபோதும், “உங்களுக்கு நான் யாரோனா எதுக்கு என்னை வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லி என் கரியரை ஸ்பாயில் பண்ணுனிங்க?” என்றாள் முகம் சிவக்க.

“இது அந்த யாரோ இல்ல, என் குடும்ப விசயத்துல தலையிட நீ யாருனு அர்த்தம்” என்றவன், “உன்னை வேலைக்கு போக வேண்டாம்னு சொன்னதுக்கும் நீதான் காரணம். நீ என்னோட தனியா பேசிட்டிருந்ததை என் எனிமி பார்த்துட்டான்.

என்னை எதிர்க்க முடியாம அவன் வீரத்தை உன்கிட்ட காட்ட நினைச்சான், என்னால உனக்கு பிரச்சனை ஆகிடக்கூடாதுனுதான் வேலைக்கு போக வேண்டாம்னு சொன்னேன்.இனி அவனால பிரச்சனை வராது. நீ தாராளமா எங்கன்னாலும் வேலைக்கு போகலாம்” என்றவன்,

செல்வியை கோபப்படுத்த வேண்டியே, உன் நம்பர் கொடு” என்றான்.

‘என்ன? என் நம்பர் இல்லையா?’ என செல்வி அதிர்ந்து பார்க்க, இங்கு என்ன நடக்கிறதென்று புரியாமல் நவீனாவும் விழிக்க, “நீ வேலைக்கு வரலைன்னுட்ட, அப்புறம் எதுக்கு உன் நம்பர்னு டெலீட் பண்ணிட்டேன்” என அசால்ட்டாக சொல்லி, “நம்பர் சொல்லு” என்றான் மீண்டும்.

“இனியும் நான் வேலைக்கு வரப்போறதில்ல, அதனால என் நம்பர் உங்களுக்கு தேவையில்ல” என்றாள் கோபமாக.

“அதுவும் சரிதான்” என்றவன், ராகுலுக்கு அழைத்து, “ராகுல் சாம்பவி மேடம் அக்கௌண்ட்க்கு த்ரீ லாக்ஸ் அனுப்பிடுங்க” என்று இணைப்பை துண்டித்து,

“என்னால உனக்கு ஆறுமாசம் வேலை போச்சு, அதுக்கான பணம் ஆன்ட்டி அக்கெளண்ட்க்கு போய்டும்” என்றான்.

செந்தமிழ்செல்விக்கு ஆத்திரமாக வந்தது. “பணம் போட்டா ஆச்சா? அது எவ்வளோ நல்ல ஜாப் தெரியுமா?” என்றாள்.

“அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது. உன் வேலை போனதுக்கு நான் மட்டும் காரணமில்ல, நீயும்தான். ஹார்ஸ் ரைடிங் அப்போ நான் யாரையும் பார்க்கமாட்டேன்னு உனக்கு தெரியும்தானே? தெரிஞ்சும் எதுக்கு அங்க வெய்ட் பண்ணின? என்கிட்ட வேலை செய்ய பிடிக்காம போனவளுக்கு பேச்சு என்ன வேண்டிகிடக்கு?

அன்னைக்கு என்னோட சேர்த்து வச்சு அவன் பார்க்கலைனா உன்னை என் எனிமி பார்த்திருக்கமாட்டான். உன்னை பாதுகாக்க ஆள் போட்டு, அவனுக்கு சம்பளம் கொடுத்துனு எனக்கும் இத்தனை இம்சை இருந்திருக்காது” என்றான்.

ஓ… நான் உங்களுக்கு இம்சையா? என ஆத்திரம் வர, “உங்க காசு எனக்கு தேவையில்லை, என் அம்மாகிட்ட அதை அனுப்ப சொல்லிடறேன்” என்று வெடித்து வெளியேறினாள் செந்தமிழ்செல்வி.

அண்ணியும் செந்தமிழ்செல்வியும் தோழிகள் என்பதால், அண்ணியின் இப்படிபட்ட சூழ்நிலையில் நிச்சயம் செல்வியின் ஆதரவு தேவைப்படும் என்று செல்வியின் வீட்டிற்கு அருகில்தான் நவீனாவிற்கு வீட்டை ஏற்பாடு செய்தான். ஆனாலும் மிக அருகில் என்று இல்லை. நான்கு கிலோமீட்டர் தூரம் இடைவெளியில்தான் சாம்பவி தங்கியிருக்கிறார்.

வேகமாக செல்பவளையே சுவாரஸியமாக பார்த்திருந்தவன், “அண்ணி நடந்து போறா, அவளுக்கு போன் செய்து வண்டியை எடுத்து போக சொல்லுங்க” என்றான் இலகுவாக.

“ஆமா… வண்டியில வந்துட்டு எதுக்கு நடந்து போறா? ம்ச்ப் மொபைல் கூட எடுத்துக்கல” என்று அவளின் கைப்பையை எடுக்க, “கொடுங்க, நான் கொடுத்துட்டு வரேன்” என்றான்.

இத்தனை நேரம் கோபமாக பேசியவனா? என வியந்தபோதும், “எனக்காகத்தான் இங்க வந்தா, நீங்க ரொம்ப திட்டிட்டிங்க, உங்க மேல கோபமா போயிருக்கா. நானே போறேன்” என்றாள் நவீனா.

“உங்களுக்கு காட்டுல வண்டி ஓட்டுறது கஷ்டம், அதோட நீங்க இருக்க மைண்ட்செட்க்கு வண்டி ஓட்டுறது சரிவராது. கோர்ட்டுக்கு டைம் ஆகுது, நீங்க போய் ரெடியாகுங்க, நான் போய்ட்டு வரேன்” என்று நவீனாவின் கையிலிருந்த பையை வாங்கிக்கொண்டு கிளம்பினான்.

துணைக்கு ஆளிருந்து இதமான மனநிலையில் இருந்தால் ஒரு கிலோமீட்டர் தூரம்வரை நடப்பாள். கோபத்தில் இருந்தால் இருநூறு மீட்டர் கூட நடக்கமாட்டாள். அதுவும் தனியாக என்றால் சற்று தூரம் நடந்துவிட்டு எங்காவது அமர்ந்திடுவாள் என்று செல்வியைப் பற்றி அறிந்தவன் பொற்செல்வன்.

எங்கு அமர்ந்திருக்கிறாள் என்று பார்த்துக்கொண்டே வர, இதோ… நினைத்தவாறே ஓர் மரத்தடியில் முகத்தை மூடியபடி அமர்ந்திருந்தாள் செந்தமிழ்செல்வி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!