“ம்ப்ச்.. அட்டன் பண்ணலைனா விடுறாங்களா?” என கடுப்போடு முணுமுணுக்க, “செல்வா” என தேவராஜின் குரலில் சட்டென திரும்பினான்.
தேவராஜ் நன்றாக விழித்திருக்க, “அண்ணா, என் பேரை சொன்னிங்க, உங்களுக்கு காண்ஷியஸ் இருக்கு. டாக்டர் ரொம்ப பயமுறுத்திட்டார்” என்றவனுக்கு கண்கள் கலங்கியது.
தம்பியின் கலக்கத்தை காண சகிக்காமல், “டேய்” என்ற தேவராஜின் முகம் சுருங்க, அவனின் வலி புரியவே, “பேசாதிங்க, டாக்டரை கூப்பிடறேன்” என்று வெளியேறியவன் செவிலியரிடம் சொல்லிவிட்டு வந்தான்.
Advertisement
செவிலியரோடு மருத்துவரும் வந்தார். பரிசோதித்து, அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என்ற நிம்மதியான வார்த்தையையும், பேசக்கூடாது என்ற அறிவுரையையும் சொல்லி மேலும் சில பரிசோதனைகள் செய்ய எழுதிக்கொடுத்து கிளம்பினார்.
தேவராஜ் வாய்மேல் கை வைத்து, “ப்ளீஸ் ண்ணா, எதுவானாலும் இன்னும் இரண்டு மூணு நாள் கழிச்சு பேசிக்கலாம், டாக்டர் உங்களை பேசவே கூடாதுனு சொல்லியிருக்காங்க” என்றான்.
தேவராஜிற்கும் தலை வலித்தது, ஆனால் மனம் அமைதியடையவில்லை. அறையை நோட்டம் விட்டவன், தொலைகாட்சி இல்லை என்றதும், “நியூஸ்பேப்பர் வாங்கி வா செல்வா” என்றான்.
Advertisement
“ஆப்ரேசன் பண்ணியிருக்காங்க, பேசவே முடியல, பேப்பர் படிக்கப்போறிங்களா?” என முறைத்து, இன்றைய செய்தித்தாளில் உள்ள முக்கிய செய்திகளை சொல்லி, “இதான் இன்னைக்கான நியூஸ்” என்றான்.
தேவராஜ் எதிர்பார்த்த செய்தியை அறிய முடியாமல் போகவே, அவனின் முகம் அதிருப்தியை காட்டியது. மார்டின்லூர்து இறந்துவிட்டானா என்று அறிய மனம் பெரிதாய் உந்தியது. ஆனாலும் வலி, மற்றும் மருந்தின் தாக்கம் அவனை பேச விடாமல் செய்ய, சற்று நேரத்திலே அவனயறியாமல் கண் மூடினான்.
தேவராஜ் மீது திட்டமிட்டு விபத்து நடத்தினார்களா? இல்லை எதேச்சையாக நடந்த விபத்தா? என்பதே பொற்செல்வனுக்கு பெரும் மனஉளைச்சலாக இருந்தது. தேவராஜோடு இவன் ஒருவனே இருக்க, முழுதாய் எதையும் ஆராய முடியாமல் போனது.
விபத்து திட்டமிட்டதாக இருந்தால், விபத்தை ஏற்படுத்தியவனின் ஆட்கள் அண்ணனை தேடி வரலாம், என்ற சந்தேகத்தாலேயே தேவராஜைவிட்டு விலகவில்லை பொற்செல்வன்.
விபத்து நேர்ந்ததை விசாரிக்க காவல் துறையில் புகார் அளித்திருந்தான். காவலர் நேரில் வந்து விசார்த்தார்கள், விபத்து ஏற்படுத்தியவனை கைது செய்தாகிவிட்டதா என கேட்டான். உன் அண்ணனாவது பிழைத்துவிட்டான், ஆக்ஸிடண்ட் பண்ணியவன் மூன்று மணி நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டான் என்றார் காவலர்.
ஆனாலும் அவனின் விபரங்களை சேகரிக்க சொன்னான். வாடகைக்கு டேக்ஸி ஓட்டுபவன், சொந்தங்களை அனுசரித்து வாழ்பவன், மனைவி, குழந்தைகளை உயிராய் நினைப்பவன் என்ற சிறந்த குடும்பத் தலைவனுக்கான தகவல்கள் வந்ததே அன்றி, இறந்தவன் மார்டின் ஆளா என்பதற்கான அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை.
இறந்தவன் மார்ட்டின் ஆளாக இருந்து, தனது அண்ணனின் உயிரை பறிக்க வந்தவனாக இருந்திருந்தால், அவனால் முடியாத பட்சத்தில் வேறொருவன் வருவான். எதுவாகினும் எதிர்கொள்ளலாம். தன்னை மீறி எவன் அண்ணனிடம் நெருங்கிவிட முடியும் என்று மனதை உறுதிபடுத்தினான்.
தேவராஜிற்கு மீண்டும் பரிசோதனைகள் நடத்தப்பட்டது. மாலை மருத்துவர் வந்தார். காயம் தவிர்த்து வேறு ஏதும் பெரிய பிரச்சனை இல்லை, தேவராஜ் விரைவில் நலமடைவார் என்றார்.
பொற்செல்வன் வீட்டிற்கு கிளம்ப கேட்க, குறைந்த பட்சம் இரண்டு நாள்களாவது இருக்க வேண்டும் என்று மறுத்துவிட்டார் மருத்துவர். மார்ட்டின் இறந்த நேரம் ட்ராவல் செய்வதை விட, மருத்துவமணையில் இருப்பது மேல் என்று பொற்செல்வனும் சம்மதித்தான்.
தேவராஜ்தான் கிளம்பியே ஆக வேண்டும் என்று பிடிவாதம் செய்துகொண்டிருக்கிறான். அண்ணன் எதற்காக இத்தனை அவசரம் காட்டுகிறான் என்று அறியாவதவனா? “கேஸ் ஹியரிங் அப்போ நாம அங்க இருப்போம், அதுவரை அமைதியாய் இருங்க” என்றான் கட்டளையாக.
அதிர்ந்து விழித்த தேவராஜ், “என் மொபைல் தா” என்றான்.
“அதெல்லாம் பேசக் கூடாது” என்றான் கட்டளையாக.
“சும்மா மெஸேஜ் மட்டும் பார்க்குறேன்டா”
“நீங்க தெரிஞ்சிக்க ஆசைப்பட்ட மெஸேஜை நான் சொல்லிட்டேன். மொபைல் யூஸ் பண்ணக்கூடாதுனு டாக்டர் சொன்னதை கேட்டிங்கதானே?” என்றவன், “வீட்டுக்கு வீடியோ கால் பண்ணப்போறேன், அமைதியா கண் மூடிப்படுங்க. இல்ல… அம்மா அழறதை பார்க்கவேண்டியிருக்கும்”
“வேண்டாம் பண்ணாத. எனக்கு அடிப்பட்டதை சொல்லாத”
“கேஸ் ஹியரிங் போயே ஆகனும்னு பிடிவாதம் பண்றிங்க, சொல்லாம எப்படி இருக்க முடியும்? கோர்ட்டுக்கு அண்ணியோட நம்ம அப்பாம்மா வருவாங்க. அப்போ உங்களை பார்த்தா ஆக்ஸிடண்ட் ஆனது தெரியாதா?”
“அம்மாப்பா எதுக்கு வராங்க?”
“அண்ணியை பெத்த பிள்ளையா நினைச்சிட்டாங்களே? வராம எப்படி இருப்பாங்க?”
“ம்ப்ச் செல்வா, அப்பாம்மாகிட்ட பேசி புரிய வைடா. கோர்ட்டுக்கு அவங்க வரக்கூடாது”
“அப்பாம்மாக்கு ஆர்டர் போட என்னால முடியாது. தவிர, அண்ணிக்கு அவங்க சப்போர்ட் அந்த டைம்ல ரொம்ப முக்கியம்”
“நான் டிவோர்ஸ் பண்ணப்போறேன், இனி அவகிட்ட உரிமை கொண்டாடுறதை நிறுத்தனும் செல்வா. இல்லைனா அம்மாப்பா கொடுக்குற பாசமே அவ ஃப்யூச்சரை ஸ்பாயில் பண்ணிடும்”
“அண்ணியைப் பற்றின கவலை உங்களுக்கு வேண்டாம். ஸ்ட்ரெயின் பண்ணிக்காம தூங்குங்க” என்றவன், ராகுலுக்கு அழைத்து தொழில் சம்பந்தமாக பேசி முடித்து, நவீனாவிற்கு அழைத்தான்.
“எங்க இருக்கிங்க? ஹியரிங்க்கு இன்னும் இரண்டே நாள்தான் இருக்கு, அத்தை கால் பண்ணினாங்களாம், அட்டன் பண்ணலையாம், பேசி நாலு நாள் ஆச்சுனு புலம்பிட்டிருக்காங்க” என்று அமிர்தவள்ளி ஆதங்கத்தோடு தனதையும் கொட்டினாள்.
பொற்செல்வனிடம் இதை எதிர்பார்க்காத நவீனாவிற்கு கண்கள் கலங்கியது. முயன்று அழுகையை அடக்கியவள், “என் அப்பாம்மாக்கு இன்னும் தெரியாது, டிவோர்ஸ் வரைக்கும் இங்கையே இருக்கிறேனே” என்றாள்.
நவீனாவின் கோரிக்கை பொற்செல்வனுக்கு பெரும் வேதனையை உண்டாக்கியது. கண்களை இறுக மூடித்திறந்தவன், “பேக்தான் பண்ண சொன்னேன், உங்கம்மா வீட்டுக்கு போக சொல்லலை அண்ணி” என்றான்.
“என்னால தனியா இருக்க முடியாது, போய்த்தான் ஆகனும்னா என் அம்மா வீட்டுக்கே போறேன், எதாவது சொல்லி சமாளிச்சிக்கிறேன், நீங்க சிரமப்பட வேண்டாம்” என்றாள் விம்மலோடு.
“புருஷன் சரியில்லனா அம்மா வீட்டுக்குத்தான் போகனுமா? உங்களால உங்களை பார்த்துக்க முடியாதா?” என கடிந்தவன், நவீனாவின் மனநிலையை எண்ணி கோபம் குறைத்து, “இனிதான் நீங்க நீங்களா இருக்கப்போறிங்க, நீங்க தங்க பீஸ்ஃபுலான வீடு ஏற்பாடு செய்திருக்கேன், உங்களுக்கு துணையா இரண்டு லேடீஸ் இருப்பாங்க. என்னோட உதவி கூட கொஞ்ச நாளைக்குதான்.
உங்க திறமைக்கேத்த வேலை பார்க்கப்போறிங்க, கேஸ் ஹியரிங்க்கு அடுத்த நாள் ஜாயின் பண்ணிக்கலாம். வேலைக்கு போய் உங்க செலவையும் பார்த்துக்கிட்டு உங்கப்பாம்மாக்கும் ஹெல்ப் பண்ணுங்க.
உங்க அருமை புரியாதவங்களை மனசுலயிருந்து தூக்கி தூரப்போட்டுட்டு உங்களுக்கான வாழ்க்கையை வாழுங்க. கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் மாறும். நீங்க எதிர்பார்த்த வாழ்க்கையை விட நல்ல வாழ்க்கை கிடைக்கும்”
நவீனாவிடம் பதிலில்லாமல் போகவே, “நான் திங்க்ஸ்னு சொன்னது, உங்க சர்டிஃபிகேட்ஸ், உங்க அம்மா உங்களுக்கு கொடுத்த ஜுவல்ஸ் மட்டும்தான். மத்தபடி வீட்டுக்கு தேவையானதெல்லாம் ஆல்ரெடி வாங்கியாச்சு. உங்களை கூட்டிட்டு போக நாளைக்கு காலைல ராகுல் வருவான், அவனோட கிளம்பிடுங்க. அம்மாப்பாக்கிட்ட நான் பேசிடறேன்” என்று இணைப்பை துண்டித்தான்.
வீட்டை விட்டு போ என்று எத்தனை சுலபமாக சொல்லிவிட்டேன் என்று நவீனாவை நினைத்து வருந்தினான் பொற்செல்வன். எல்லாம் மாறும் என்று தேற்றிக்கொண்டு உள்ளே வந்து அண்ணனை பார்த்தான்.
தேவராஜ் இவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
“தூங்கலையா நீங்க?”
“மார்ட்டின் செத்துட்டா மட்டும் பிரச்சனை ஓய்ஞ்சிடாது, என் மொபைல் தா செல்வா” என்றான் கெஞ்சலாக.
“முட்டாள்… ஏன்டா இப்படி செய்த? மொபைலை உடைச்சிட்டா பிரச்சனை முடிஞ்சிடும்னு நினைச்சியா?”
“அண்ணா ப்ளீஸ், ஸ்ட்ரெயின் பண்ணிக்காதிங்க, மொபைல் இருந்தாலும் வர பிரச்சனையை ஃபேஸ் பண்ணித்தான் ஆகனும். மார்ட்டின் செத்துட்டான், இனியாவது பாஸிட்டிவா நினைக்கலாமே, பழைய மொபைலும், நம்பரும் உங்களோட பழைய லைஃபை நியாபகம் செய்திட்டே இருக்கும். அதனாலதான் அதை உடைச்சேன். ஊருக்கு போனதும் புது மொபைல், புது நம்பர், புது லைஃப்” என்றான்.
“என்னத்த புது லைஃப்?” என சலித்துக்கொண்டவன், “அதுல நிறைய பேரோட கான்டாக்ட் இருக்குடா, என்னை கேட்காம எதுக்கு உடைச்ச?” என்றான்.
“பழைய கான்டாக்ட் ஏதும் வேணாம்னுதான் உடைச்சேன்”
“ம்ப்ச் செல்வா… நீ நினைக்கிறமாதிரி இல்லடா, சில போன் கால்ஸ் அட்டன் பண்ணலைனா பிரச்சனை வீடு தேடி வந்திடும். அதோட எனக்கு ஹெல்ப் செய்தவங்களோட நம்பராவது எனக்கு தெரியனும்ல? அப்போதான என்ன நடக்குதுனு என்னால தெரிஞ்சிக்க முடியும்?” என்றான்.
தமிழகத்தில் இவர்கள் இருவருக்கு மட்டும்தான் தேவராஜ் கடத்தலில் சம்மதப்பட்டிருப்பது தெரியும். மற்றபடி தேவராஜை தெரிந்தவர்கள் எல்லாம் வெளி மாநிலத்தவர்கள். அவர்களுக்கும் தேவராஜின் உருவம் தவிர, உண்மையான பெயர் உட்பட வேறு எந்த விபரமும் தெரியாது.
மேற்கண்ட விசயங்களை சொல்லி, “அதர் ஸ்டேட்க்கு போனா ஸ்மக்லிங் சம்மதப்பட்டவங்க்கிட்ட பேசவே மாட்டிங்களாம், உங்க குரல் கூட அவங்களுக்கு தெரியாதாமே?” என்று தேவராஜின் தொழில் யுக்திகளையும் சொல்ல,
“எப்படி செல்வா இதெல்லாம்?” என தம்பியை வியந்து பார்த்தான் தேவராஜ்.
“அதெல்லாம் நம்ம ஊருக்கு போய் சொல்றேன். இனியாவது என்னை நம்புங்க. உங்களுக்கு ஹெல்ப் பண்ண நானிருக்கேன், நாளை மறுநாள் நாம கிளம்பனும். எதையும் யோசிக்காம ரெஸ்ட் எடுங்க” என்றான்.
சுப்புராஜ், ராஜவேலு இருவரும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள், ஒரு நாள் அடிப்படை செலவிற்கே ஆயிரம் ரூபாய் பத்தாது என்ற அளவிற்கு குடும்பத்தில் உறுப்பினர்கள் அதிகம்.
நேர்மையாக உழைத்து சமாளிக்க முடியாமல் இத்தொழிலிற்கு வந்தார்கள். அப்படியொன்றும் பெரிதாய் முன்னேறிவிடவில்லை. இவர்களை நம்பித்தான் குடும்பம். தற்போது அவர்கள் இல்லாத நிலையில் அவர்களின் குடும்பத்தை நினைத்து மிகவும் வருந்தினான்.
“இதெல்லாம் உனக்கு எப்படி செல்வா தெரியும்? அவங்க பேரும் நியூஸ்ல வந்துச்சா?”
“செய்யிறது தப்பான தொழில், குடும்பம் பிள்ளைனு ஆனதுக்கப்புறமாவது அந்த தொழிலை விட்டுட்டு வந்திருக்கனும், அதைவிட்டுட்டு தலைவனாகனும்னு ஆசைப்பட்டா இதுதான் நடக்கும். வருத்தப்படுறதை தவிர நம்மளால ஒன்னும் பண்ண முடியாது” என்றான்.
‘பொற்செல்வன் சொல்வது உண்மைதான், உதவி செய்ய நினைத்தால் நாமும் மாட்டுவோம்’ என்று தேவராஜ் வருந்த, “ஒன்னு இரண்டு வருசம் போகட்டும்ண்ணா, எதாவது ஹெல்ப் பண்ணலாம்” என்றவனை அதிர்ந்து பார்த்தான்.
“அவனுங்க தப்பானவனுங்களா இருந்தாலும், உங்களை காட்டிக்கொடுக்க நினைக்கல, சப்போஸ் அவங்க ப்ளான் சக்ஸஸ் ஆகியிருந்தா உங்களை கண்டிப்பா உள்ள இழுத்திருக்கமாட்டாங்க. அந்த ஒரு காரணத்துக்காக அவங்க குடும்பத்துக்கு ஹெல்ப் பண்றேன்.
ஆனா நீங்க அதுல தலையிடக் கூடாது. நானும் நேரடியா ஹெல்ப் பண்ணப்போறதில்ல, வேறொருவர் மூலமாத்தான் பண்ணப்போறேன், பண உதவி பண்ணப்போறதில்ல, அவங்க பசங்களை நல்ல ட்ரஸ்ட்ல சேர்த்துவிட்டு படிக்க வைப்பேன், அவ்வளோதான்” என்றான்.
தேவராஜின் முகத்தில் அத்தனை நிம்மதி. அதனைப் பார்த்த பொற்செல்வனின் மனமும் லேசானது. தேவராஜின் பழைய பிரச்சனைகள் அவனைத் தொடராது என்று உறுதியாக கூற முடியாது.
ஆனால் குறைந்தபட்சம் சில மாதங்களுக்காவது அண்ணனிற்கு தேவையில்லாத அழைப்புகள் வராது என்று நிம்மதியடைந்தான்.