Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 11.2

மகளின் முகவாட்டம் கண்டு, “செல்வா தம்பி வீடு பார்த்து வச்சிருக்காரில்ல? கண்டிப்பா அவங்களை சேர்த்து வைக்காம விட மாட்டார், நீ கவலைப்படாத செல்வி” என்றார் சாம்பவி.

“என்ன பார்த்துப்பார்? கோர்ட்டு கேஸ்னு அலைஞ்சி அவமானப்பட்ட பின்ன வாழ்ந்து என்ன யூஸ்?” என்றாள் கோபமாக.

உண்மைதான் என்பதாய் சாம்பவி ஆமோதிக்க, “நவீனாக்கா இன்னைக்கு எப்படி அழுதாங்க தெரியுமாம்மா? அந்த வேதனைலாம் அவரால புரிஞ்சிக்க முடியாது” என்றாள்.

“அதெல்லாம் புரியும். புரிஞ்சதாலத்தான் தனியா வீடு பார்த்து வச்சிருக்கார். நைட்டும் பகலும் கூடவே இருக்கமாதிரி வேலைக்கு ஆள் போட்டு, நவீனாவை பத்திரமா பார்த்துக்க நினைக்கிறார்”



Advertisement

பொற்செல்வனைப் பாராட்டியதில் கோபம் வந்தது செல்விக்கு. “நீங்க நினைக்கிறமாதிரி இல்லைம்மா, விவாகரத்து விசயம் வெளில தெரியாம இருக்க நவீனாக்காவை ப்ரொட்டெக்ட் பண்றார். அவர் முன்ன மாதிரி இல்ல, ரொம்ப மாறிட்டார்” என்றாள்.

“மாறிட்டாரா? அதெப்படி உனக்கு தெரியும்? நீ ஆஃபீஸ் போயே ஆறு மாசம் ஆகுது”

“இ… இல்ல, நவீனாக்காவோட பேசினதை வச்சு சொல்றேம்மா”

Advertisement

“சூழ்நிலை எல்லாருக்கும் சாதகமாவே அமையாது. ஒருத்தரோட நியாயம், இன்னொருத்தருக்கு அநியாயமா இருக்கும். நாமளா நேர்பட கேட்காம பார்க்காம யாரையும் குற்றம் சொல்லக்கூடாது செல்வி” என்று அறிவுரை வழங்கி, “சாப்பிட வா” என்றார்.

Advertisement

“நீங்க இன்னைக்கு ஆஃபீஸ் போகலையாம்மா?”

“போகனும், மதியத்துக்கு மேல அமிர்தாம்மா வீட்டுக்கு போறேன், உன்னையும்தான் வர சொல்லியிருக்காங்க, மூணுமணிபோல ரெடியா இரு” என்றார்.

“நான் வரல, நீங்க போய்ட்டு வாங்க”

Advertisement

“ஏன் வரல? அன்னைக்கு செல்வா தம்பிகிட்ட அப்படி பேசினதுக்கப்புறம் கூட உன்மேல அவங்களுக்கு கோபம் இல்ல. நவீனா டிவோர்ஸ்னால ரொம்ப மன உளைச்சல்ல இருப்பாங்க, நம்மளோட பேசினா ஆறுதலா இருக்கும்னுதான் கூப்பிடறாங்க. போகலைனா தப்பாகிடும்”

“ஆறுதலுக்குத்தான் நீங்க போறிங்கள்ல? இன்னுமென்ன? செல்வா சார் கேட்டு நான் நடிக்க மறுத்துட்டேன். என்மேல கோபமா இருக்கார், எனக்கும் அவரை பார்க்க கஷ்டமாயிருக்கு. எனக்கு உடம்பு சரியில்லைனு சொல்லிடுங்க” என்று உண்டவள், அதன் பின்னே சாம்பவி எத்தனை கேட்டும் பொற்செல்வன் வீட்டிற்கு செல்ல சம்மதிக்கவில்லை.

சாம்பவியின் மொபைல் ஒலிக்கவே, எடுத்து பேசியவர், பின்னேதான் பார்த்தார் தனக்கு மூன்று லட்சம் பணம் வந்திருப்பதை. இத்தனை பெரிய தொகையா? யார் போட்டிருப்பார்கள்? இளவரசனாக இருக்குமோ? எதற்கு போட்டான்? என்ற பதட்டத்தோடே ஆராய, ராகுலிடமிருந்து வந்திருந்தது.

ராகுலிற்கு அழைத்து கேட்க, “செல்வாசார்தான் போட சொன்னார். காரணம் ஏதும் எனக்கு தெரியாதுங்க மேடம்” என்றான் ராகுல்.

வேறு வழியில்லாமல் பொற்செல்வனுக்கு அழைக்கப்போக, அன்னையின் பேச்சுகளை கேட்டிருந்தவள், “செல்வா சார்க்கா பண்றிங்க? பண்ணாதிங்க” என்றாள்.

“என் அக்கௌண்ட்டுக்கு பணம் வந்திருக்கு, நான் பணம் ஏதும் கேட்கல, எதுக்கு அனுப்பினார்னு தெரிஞ்சுக்கனும்ல?”

“எனக்கு தெரியும்” என்றவள், நவீனா வீட்டினில் நடந்ததை விளக்கினாள்.

சாம்பவிக்கு இது நல்லதாக படவில்லை. மகள் ஏதேனும் துடுக்காக பேசியிருப்பாளோ? அதனை செல்வா கண்டித்திருப்பாரோ? கண்டித்தது பிடிக்காமல் வம்பளந்திருப்பாளோ? என்று யோசித்தவர் “உண்மையை சொல்லு செல்வி” என்றார் மன்றாடலாக.

செந்தமிழ்செல்வி அமைதியாக இருக்க, “அமிர்தாம்மா வீட்டுக்கு சில மாசமாவே வர விரும்புறதில்ல. அன்னைக்கு செல்வா தம்பிக்கு பொண்ணு வீட்டார் பார்க்க வரும்போது கூட வரமாட்டேனு பிடிவாதம் செய்த. இன்னைக்கும் வரமாட்டேங்குற. என்கிட்ட கூட சொல்லாம மூணு லட்சத்தை அனுப்பி வச்சிருக்கார். அந்தளவுக்கு என்ன பேசி வச்ச?” என்றதற்கும் பதிலில்லை செல்வியிடம்.

“இனி உன்கிட்ட கேக்குறது வேஸ்ட், நான் செல்வாகிட்டயே பேசிக்கறேன்” என்று அழைப்பு விடுத்தார் பொற்செல்வனுக்கு.

பொற்செல்வன் அழைப்பை ஏற்கவும், “செல்வி எதாவது தப்பா பேசியிருந்தா நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் தம்பி” என்றார்.

“அவ ஏதும் தப்பா பேசலை ஆன்ட்டி”

“அப்புறம் எதுக்கு மூணு லட்சம் அனுப்பியிருக்கிங்க?”

“என்னால உங்க பொண்ணு வேலை போனது உண்மைதானே? அதுக்குத்தான்”

“இல்லங்க தம்பி, இந்த பணம் வேண்டாம், எனக்கு உங்ககிட்ட பேசனும், பத்து நாளா நீங்க ரொம்ப பிஸியா இருக்கிங்கனுதான் தொல்லை பண்ணல, இன்னைக்கு ஆஃபீஸ் வருவிங்களா?” என்றார்.

“ஆஃபீஸ் வரமாட்டேன், கொஞ்சம் பர்சனல் வேலையிருக்கு, அதை முடிச்சிட்டு ஃபேக்டரிக்கு போகனும், என்ன விசயம்னு சொல்லுங்க” என்றான்.

“இல்லங்க தம்பி, நேர்லதான் பேசனும்”

“எதாவது எமர்ஜன்ஸிங்களா?”

“எமர்ஜன்ஸினு சொல்ல முடியாது. ஆனா இம்ப்பார்ட்டண்ட்”

“நாளைக்கு ஆஃபீஸ் வருவேன், பேசலாம்” என்று இணைப்பை துண்டித்தான்.

“செல்வி, நான் கிளம்பறேன், ஆஃபீஸ் போய்ட்டு மதியத்துக்கு மேல அமிர்தாம்மா வீட்டுக்கு போய்ட்டுதான் வருவேன், சாப்பிடாம இருந்திடாத. பத்திரம்” என்று சொல்லி கிளம்பினார்.

நான்கு மணிபோல் அமிர்தவள்ளி வீட்டிற்கு வந்தார் சாம்பவி. நவீனாவைப் பற்றி புலம்பினார் அமிர்தவள்ளி.

ஒரு காரியத்தை கையிலெடுத்தால் அதை செய்து முடிக்காமல் ஓயமாட்டான் பொற்செல்வன், பேச்சுத் திறமை, பொறுமை, திட்டமிடல் என அனைத்திலும் தேர்ந்தவன் என்பது அவனின் அன்னைக்கு தெரியாமல் போனது ஆச்சர்யமாக இருந்தது சாம்பவிக்கு.

“செல்வா தம்பி அப்படிலாம் விடமாட்டார் ம்மா” என்றார்.

“அவ தனியா இருக்கிறதே எனக்கு வேதனையா இருக்கு சாம்பவி”

“கவலைப்படாதிங்க, காலைல கூட செல்வி போய் பார்த்துட்டு வந்தா”

“அப்படியா? நவீனா இருக்கிற இடம் செல்விக்கு தெரியுமா? தினமும் அவளோடவே இருக்க சொல்லு சாம்பவி” என்றார் கோரிக்கையாக.

“நைட்ல கூட படுத்துக்க ஒருத்தர், பகல்ல வேலை செய்ய ஒருத்தர்னு இரண்டு பேரை வேலைக்கு போட்டுருக்கார். அதுமட்டுமில்லாம டிரைவர் போட்டுருக்கார், வெளில போற வேலையில்லைனாலும் பொழுதுக்கும் வீட்டுகிட்டத்தான் இருக்கனும்னு பேசியிருக்காராம். இதெல்லாம் பத்தாதுனு நைட் வாட்ச்மேன் போட்டுருக்கார், கவலைப்படாதிங்க” என தேற்றினார்.

பிறகு தேவராஜின் உடல்நிலைப் பற்றி விசாரிக்க, “காயம் ஆழமானு கூட தெரியாது. சரியாகிடும்னு சொல்றான், என்கிட்ட எதையும் முழுசா சொல்லமாட்டானுங்க” என குறைப்பட்டார் மகன்களை.

“உங்களுக்கு கஷ்டமாயிருக்குமேனு மறைப்பாங்க” என்றவர், “நானும் முக்கியமா உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்” என்றார்.

இளவரசன் பேசியதனைத்தும் சொல்லி, “நானும் இந்த வேலையில நீடிப்பனா தெரியாது, இந்த முறை போகலைனா எங்கையாவது கிளம்பி போய்டுவேன்னு மிரட்டுறான். அவனும் ரொம்ப பிடிவாதக்காரன். அவனோட போக சம்மதிக்கலைனா மகனை திரும்ப பார்க்க முடியாதோனு பயமாயிருக்கு” என்றார்.

அமிர்தவள்ளிக்கு இதில் மகிழ்ச்சிதான், “இது நல்ல விசயம் சாம்பவி. செல்விக்கு கல்யாண வயசு. நீ தனியா இருந்து பண்ணினா நல்லாவா இருக்கும்? அவ அண்ணன் அவளுக்கு நல்ல இடமா பார்ப்பான். உனக்கும் உன் மகனோட இருக்கலாம், அவனுக்கும் இத்தனை வருசம் கழிச்சு அம்மா பாசம் கிடைக்கும், சந்தோசமா கிளம்புற வழியைப் பாரு” என்றார்.

“இளவரசன் அவ்வளோ சொன்னதுகப்புறம் எனக்கும் அவனோட இருக்கத்தான் ஆசையா இருக்கு. ஆனா பையனை பார்க்க வர சாக்குல வருவாரோ? பார்க்கும் சூழ்நிலை வருமோனுதான் ரொம்ப தயக்கமா இருக்கு”

“உன் மகனுக்கு உன்னைப் புரியும், அவ்வளோ சொத்தை விட்டுட்டு உங்களுக்காக படிச்சி வேலை வாங்கியிருக்கான், மத்ததை யோசிக்காம இருப்பானா? எல்லாம் அவன் பார்த்துப்பான். தைரியமா அவனோட போ சாம்பவி” என்றவர்,

“என்ன… உன்னையும் செல்வியையும் பார்க்காம இருக்கிறதுதான் கஷ்டம், இன்னைக்கே அவளை கூட்டிட்டு வர சொன்னேனே? ஏன் வரல?”

“செல்வா தம்பிகிட்ட அன்னைக்கு அப்படி பேசிட்டாள்ல? அவர் முகத்துல முழிக்க சங்கடப்பட்டுகிட்டு வரமாட்டேங்குறா. நல்லாத்தான் இருக்கா, ஆனா உடம்பு சரியில்லனு சொல்ல சொன்னா”

“அதெல்லாம் அவன் ஒன்னும் நினைக்கமாட்டான், கிளம்பறதுக்குள்ள ஒருமுறை வந்து பார்த்துட்ட போக சொல்லு” என்றார்.

“சரிங்க” என்று விடைபெற்றார் சாம்பவி.

பொற்செல்வன் வீடு வர இரவு பதினொரு மணி ஆகியிருந்தது. மகனிடம் பேச காத்திருந்த அமிர்தவள்ளியிடம் தேவராஜ் உண்டானா? மருந்து உண்டானா? என விசாரித்து, “ம்மா ரொம்ப டையர்டா இருக்கேன், நான் சாப்பிட்டேன், நீங்க போய் தூங்குங்க” என்றான்.

“இல்ல செல்வா” என தவிக்க,

“அண்ணி வீட்டுக்கு போய்ட்டு வந்தேன்ம்மா, அவங்கப்பாம்மாகிட்ட பேசிட்டேன், ரொம்ப வேதனை பட்டாங்க, நான் பார்த்துக்கிறேனு சொல்லிட்டு வந்திருக்கேன். நிம்மதியா போய் தூங்குங்க, காலைல பேசிக்கலாம்” என்று உள்ளே சென்றிருந்தான்.

நவீனா வீட்டில் என்ன சொன்னார்கள்? என்று கேட்கவும், சாம்பவி ஊரை விட்டு செல்லப்போகிறார், இனி அவரும் வேலைக்கு வரமாட்டார் என்று மகனிடம் பேச அமிர்தவள்ளிக்கு நிறைய இருந்தது. ஆனால் மகன் அதீத அலுப்பில் இருக்கிறானே என்று வாடிய முகத்தோடு தனதறைக்குள் சென்றார்.

அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்திருந்தான் பொற்செல்வன். அமிர்தவள்ளி தூங்கிக்கொண்டிருக்க, புருஷோத்தமன் எழுந்திருந்தார்.

“இந்நேரமே எழுந்திட்டிங்களாப்பா?” என்றபடி ஷூவை போடப்போனான்.

“ம்… சம்மந்தி வீட்டுல என்னப்பா சொன்னாங்க?”

“டிவோர்ஸ் விசயத்தை சொன்னதும் ஷாக் ஆகிட்டாங்கப்பா, அண்ணி அண்ணன் மேல ஒரு குறையும் சொன்னதில்ல போல. மாப்பிள்ளையா டிவோர்ஸ் கேட்டார்னு நம்பவேயில்ல, உண்மையை சொன்ன பின்னாடி அழுதாங்க. பேசி சமாதானம் செய்துட்டு வந்திருக்கேன்” என்றபடி ஷூ போட்டு முடித்து, “பை ப்பா” என்று கிளம்பியிருந்தான்.

பல மாதங்களுக்கு பின்னே, உடற்பயிற்சி, கூடைப்பந்து விளையாட்டை முடித்து, குதிரையில் சவாரி செய்துகொண்டிருந்தான். பொற்செல்வன் நினைவெல்லாம் செல்வியிடம்தான். அரைமணி நேரத்திற்கு பின்னே அவளின் நினைவிலிருந்து மீண்டு, வழக்கமான வேலைகளை செய்ய ஆரம்பித்தான்.

தோட்டம், தொழிற்சாலை சென்றுவிட்டு அலுவலகம் வர பிற்பகல் ஆகியிருந்தது.

“சாம்பவி மேடம் நீங்க வந்ததும் உங்களை பார்க்க வரவானு கேட்டு சொல்ல சொன்னாங்க சார்” என்றான் ராகுல்.

“ஓஹ்… மறந்தே போய்ட்டேன், வர சொல்லுங்க” என்றான்.

சாம்பவி வந்ததும் முதலில் மன்னிப்பைத்தான் வேண்டினார். மூன்று லட்சம் பணம் வேண்டாம் என்றார்.

“இதுக்குத்தான் என்னை பார்க்கனும்னு சொன்னிங்களா?”

“இல்ல, வேற காரணம் இருக்கு”

“ம் சொல்லுங்க”

சாம்பவி சொல்லி முடித்ததும் “ஓ…” என்றவன், “பர்சனல் ப்ராப்ளம் இருக்கும்போது அதை பார்த்துதானே ஆகனும்?” என்றான்.

உண்மையில் பொற்செல்வனுக்கு வருத்தமாக இருந்தது. செல்வியை பார்க்காமல் இருப்பது முடியாத காரியம் என்று கடந்த ஆறு மாதங்களாகவே உணர்ந்திருந்தான். செல்வியும் அவளின் அம்மாவும் இவ்வூரைவிட்டே கிளம்பப்போகிறார்கள் என்பதை ஏற்க மறுத்தது மனம்.

செல்வியிடம் விருப்பம் சொன்னேன், அதனால்தான் என்மீது கோபமாக இருக்கிறாள். எனக்கு செல்வி வேண்டும் என்று கேட்டுவிட மனம் துடித்தது. அவளுக்கு பிடிக்காமல் இவர்களிடம் கேட்டு என்ன லாபம் என்று நிதானித்தான்.

சாம்பவி தவிப்போடு பார்த்திருக்க, “ஹம்… எவ்வளோ நாள் டைம் கொடுத்திருக்கார் உங்க மகன்?” என்றான்.

“ஆறு மாசம்”

“தென் வாட்? இன்னும் அஞ்சு மாசம் வேலை செய்ங்க” என்றவன், “எனக்கு ஹெல்ப் பண்ணுங்க, இப்போ இருக்க ஒர்க் ப்ரஸர்க்கு புதுசா வரவங்களுக்கு கைட் பண்ண டைம் இல்ல, டென் டேஸ்க்குள்ள ஹையர் பண்றேன், மூணு, இல்ல நாலு மாசம் நீங்களே அவங்களை ட்ரைன் பண்ணிடுவிங்க” என்றான்.

பொற்செல்வன் சொன்னதை செய்ய சம்மதித்து, மீண்டும் பணத்தைப் பற்றி பேசினார்.

“செல்விக்கு என்னால வேலை போனது உண்மைதானே? நானும் வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லும்போதே அதுக்கான பணத்தை கொடுக்குறேனு சொல்லியிருந்தேன். அப்போ அதுக்கு காம்பன்ஸேட் பண்ணித்தான ஆகனும். இதுக்கு ஏன் நீங்க இவ்வளோ ஃபீல் ஆகுறிங்க? இன்ஃபேக்ட் பணம் கொடுத்த பின்னாடிதான் எனக்கு பீஸ்ஃபுலா இருக்கு” என்றான்.

சாம்பவிக்கு ஏற்புடையதாக இல்லைதான். ஆனால் பொற்செல்வன் எத்தனை சொன்னாலும் பணத்தை இனி திரும்ப பெறமாட்டான் என்றுணர்ந்து அதிருப்தியோடு விடைபெற்றார் சாம்பவி.

இதோ மேலும் ஐந்து மாதங்கள் கடந்துவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!