மறுநாள் பிறக்கும் தைப்பொங்கலைக் கோலாகலமாக வரவேற்க மற்ற வீட்டின் சுவர்கள் எல்லாம் சுண்ணாம்பு பூசிப் புதுப்பொலிவுடன் காத்திருக்க, பார்த்தியின் வீட்டு சுவர்கள் மட்டும் சோகத்தின் சாயத்தைப் பூசிக் காத்திருந்தது, தனக்கான விடியல் எப்போதென்றறியா விரக்தியுடன்.
Advertisement
உள்ளே கிச்சனில் தேங்காய் சட்னி செய்யத் தேவையானவற்றை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாள், தமிழ்.
முகத்தில் கொஞ்சம் கூட ஒளி இல்லை. ஆயுள் முடியும் வரை வாழ்ந்தாக வேண்டிய கடமைக்கான வாழ்வை அவள் வாழ ஆரம்பித்து வருடங்களாகிறது என்று அவளை முதல் முறை பார்ப்பவர்கள் கூட துல்லியமாக சொல்லி விடுவர்.
Advertisement
Advertisement
ஜாரில் எல்லா வஸ்துக்களையும் போட்டவள், அதை மிக்ஸியில் இணைத்து ஆன் செய்தாள்.
அடுத்த நொடி அவள் ஜாரில் போட்டிருந்த அத்தனையும் தெறித்து சுவர், சமையலறை மேடை, எதிரில் நின்றிருந்த அவளின் மேல் என்று எல்லா இடமும் சிதறியிருந்தது.
Advertisement
கவனமின்மை! இப்போதெல்லாம் அடிக்கடி இதனால் பாதிக்கப்படுகிறாள். அவள் கவனமெல்லாம் அவன் ஒருவனிடமே தேங்கி அவளை அனுதினமும் சிதைத்துக் கொண்டிருக்கிறது.
நல்லவேளையாக மிக்ஸியை உடனே ஆஃப் செய்து விட்டிருந்தாள். அந்தளவில் அவள் சுய உணர்வோடு இருப்பதே இப்போதைக்குப் போதும்!
பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் பேசிவிட்டு உள்ளே வந்த பர்வதம், கிச்சன் இருக்கும் நிலையைப் பார்த்துத் திகைத்தவர் அவசர அவசரமாகத் தமிழை ஆராய்ந்தார்.
“என்னம்மா ஆச்சு? கண்ணுல எதுவும் காரம் பட்டுச்சாமா?”
அவள் உடையைத் தட்டி விட்டவாறே அவள் முகத்தைப் பிடித்து கண்களில் ஆராய,
“எனக்கு ஒன்னும் இல்லை, அத்தை!” என்றவாறு அவர் கரங்களை விலக்கி விட்டவள் தன்பாட்டில் கிச்சனை சுத்தம் செய்ய ஆரம்பித்திருந்தாள்.
பர்வதம் சுற்றியும் பார்த்தவர், “ஜாருக்கு மூடியை மாட்டாம மிக்ஸியைப் போட்டியாமா?” என்ற, அவளிடமிருந்து மெலிதாக, “ம்ம்..” என்ற சத்தம் மட்டும் வந்தது.
அவருக்கு அவளை எண்ணி ஆயாசமாக வந்தது.
“கொஞ்சம் கவனமா இருக்கக் கூடாதாம்மா தமிழ்? முதல்ல உன்னை யாரு இந்த வேலையெல்லாம் பார்க்க சொன்னது? நான் வந்து செய்திருப்பேன்தான?” என்ற அவளிடம் எந்த சத்தமும் இல்லை.
“துடைப்பத்தை என்கிட்ட குடுத்துட்டு, நீ போய் துணியை மாத்திக் கிளம்பு தமிழ்.”
“இல்ல, நான் இதை முடிச்சிட்டே போய்க்கிறேன்.”
“சொன்னா கேளும்மா. என்னை மேல மேல பாவியாக்காத. வேலைக்கும் போய்ட்டு வந்து வீட்டுலயும் உன்னைக் கஷ்டப்பட விட்டா, என் குற்ற உணர்ச்சியே என்னைக் கொன்னுடும்.” என்று கலங்கிப் போய் உரைத்தவர்,
“என் பையன கண்ணுல பார்க்கிற வரைக்கும் நான் உயிரோட இருக்கணும், தமிழ்! அதுக்காகவாச்சும்…” என்றவர் மேலே பேசி முடிக்கும் முன், அவள் கை துடைப்பத்தை அவரை நோக்கி நீட்டியிருந்தது.
அவளைக் கட்டிப்போடும் மந்திர வார்த்தைகள் அவை. தெரிந்தேதான் பர்வதம் அதை உச்சரித்தது.
“போய் குளிச்சிட்டு துணியை மாத்திட்டு வாம்மா. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.” என்றவர் கடகடவென ஒதுங்க வைத்து விட்டு மீண்டும் சட்னிக்கான எல்லாவற்றையும் தயார் செய்து தோசையையும் சுட்டு முடித்தார்.
தன்னை சுத்தப்படுத்தி வந்த தமிழிடம், தட்டில் இரண்டு தோசைகளைப் போட்டு கொஞ்சமாக சட்னி வைத்து நீட்டினார்.
மறுப்பே சொல்லாமல் வாங்கிக் கொண்டவள், பெரிய செம்பு நிறையத் தண்ணீரை எடுத்துக் கொண்டு தரையில் அமர எப்போதும் போல் பர்வதத்துக்கு சுருக்கென்றது.
இந்த இரண்டு தோசையை உள்ளே அனுப்ப அவள் படப்போகும் பாட்டைக் காணத் தெம்பில்லாதவராக சாமியறைப் பக்கம் நகர்ந்தார்.
‘ஒரு தாயா நாள் தவறாம உங்க எல்லாருக்கிட்டயும் நான் வடிக்கிற கண்ணீருக்குத்தான் இரக்கம் காட்ட மனசில்லை. உயிரை வெறுத்து நடைப்பிணமா நடமாடுற அந்தப் பொண்ணுக்காக இரங்கியாவது நீங்க எல்லாரும் சேர்ந்து இதுக்கு ஒரு முடிவைக் கொடுக்கலாம் இல்லையா?
ஆறு வருஷம் அனாயாசமா ஓடிப் போயிடுச்சு. அவகிட்ட இருக்க மொத்தத்தையும் உறிஞ்சியும் எடுத்தாச்சு. இன்னும் அவகிட்ட என்ன மிச்சமிருக்குனு அவளைப் போட்டு இப்டி வதைக்கிறீங்க? இப்பிடியே போயிட்டிருந்தா, குடல் சுருங்கி அந்தப் பாவப்பட்ட பொண்ணு வாழ்க்கைதான் முடிஞ்சு போகும் போல! ஆனா அப்பிடி ஒண்ணு நடக்கிறதுக்கு முன்னாடி தயவு செய்து என் உசுரை எடுத்துடுங்க. என் உயிரை எடுத்தாவது அவளை வாழ வைங்க. இங்க பாவி நான்தான்! நான்தான் சாகணும்!’
மனதில் தேங்கிக் கிடக்கும் வேதனைகளைக் கண்ணீருடன் கடவுளிடம் சமர்ப்பித்தபடி அவர் அமர்ந்திருக்க, அரை மணித்தியாலம் கடந்த நிலையில் தன்னுடன் போராடி உணவை முடித்து வெளியே வந்தாள், தமிழ்.
அவள் வரும் அரவம் கேட்டதுமே பர்வதம் அவசர அவசரமாக முந்தானையை இழுத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
“சாப்பிட்டியாமா?” சாப்பிட்டிருப்பாள் என்று தெரிந்தும் கேட்டார்.
“சரிம்மா. பார்த்துப் போயிட்டு வா.” என்று மட்டும் சொல்லி அனுப்பி வைத்தார். எங்கே போகிறாய் என்ற விசாரிப்பெல்லாம் இல்லை.
அவள் என்ன சினிமா, பார்க் என்றா சுற்றி வரப் போகிறாள்? ஒருவேளை அப்படி சுற்றி விட்டு வந்தால் அதை எண்ணி மகிழப் போகும் முதல் ஆளே அவர் தான்!
ஆனால் இவள் செல்லப்போவது இவர்கள் திருமணம் நடந்த திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் ஆலயத்துக்கு.
பர்வதம் வீட்டின் சாமியறையில் செய்ததை இவள் அங்கே கோவில் சந்நிதானத்தில் செய்யப் போகிறாள். அவ்வளவுதான்!
அதைத் தாண்டி வழி தவறிப் போகும் பெண் அவளல்ல என்று பர்வதம் நன்கு அறிவார்.
“மருமக வேலைக்குத்தான போறான்னு அசால்டா இருந்துடாதீங்க. கொஞ்சம் கண்காணிப்புலயே வச்சிருங்க. அவளுக்கும் வயசு இருக்குதான? வயசு வேகத்துல எதுவும் தப்பா போயிடாம பார்த்துக்கங்க.” சில விஷமிகள் நல்லது சொல்வது போல் நாராசமாய் பேசிய போதெல்லாம்…
“என் மகனன்றி பிற ஆண்களுக்கு என் மருமகள் நெருப்பு!” என்று அவர்கள் முகத்தில் தன் நம்பிக்கையெனும் உமிழ்நீரைக் காறி உமிழ்ந்திருக்கிறார்.
இதற்கெல்லாம் காரணமான சித்ராவை வஞ்சனையின்றி வசையும் பாடிக் கொள்வார்.
காலமும் நேரமும் வெண் சாயமேற்றிய கறுப்புத் துணிக்கும் சாய வாசனை படாத அசல் வெண் துணிக்கும் இருக்கும் வித்தியாசத்தை பர்வதத்துக்கு செய்முறைப் பரீட்சை வைத்துப் புகட்டியிருந்தது.
என்ன, அதை உணர்ந்து கொள்ளப் பர்வதம் கொடுத்த குருதட்சணைதான்…
மாமியாரிடம் தகவல் சொல்லிவிட்டு, அவர் மனதின் பயணங்கள் செல்லும் தூரம் பற்றிய கவலையெல்லாம் இல்லாது, தன் கைப்பையை எடுக்கத் தன்னறைக்குள் சென்றவளுக்கு எப்போதும் போல் மூச்சடைக்கும் உணர்வு.
அதைக் கிஞ்சித்தும் மதிக்கவில்லை அவள். அப்படியேனும் அடைத்துக் கொண்டால் நல்லதுதான் என்று எப்போதும் தோன்றும் அலட்சியத்துடன் தன் உடமைகளை சரி பார்த்து எடுத்துக் கொண்டவள், அறை வாசல் வரை வந்து திரும்பிப் பார்த்தாள்.
எதிர் சுவரில் அவள் மறந்துவிட்ட புன்னகையுடன் உயிர்ப்பாய் சிரித்துக் கொண்டிருந்தது, தமிழின் பிம்பம்.
பார்த்துப் பார்த்து அவன் எடுத்துக் கொடுத்த கூறைப்பட்டில் நெற்றியிலும் வகுட்டிலும் அவன் வைத்து விட்டிருந்த குங்குமம் ஜொலிக்க, கழுத்தில் ஆண்டாண்டாய் அவள் செய்த காதல் தவத்திற்கு அங்கீகாரமாய் அவனால் பூட்டப்பட்டிருந்த மஞ்சள் தாலி புது சோபையைக் கொடுக்க, தமிழ் தங்க விக்கிரகமாக மின்னினாள்.
தன் விம்பத்தில் நிலைத்த பார்வையை அடுத்து ஒரு நடுக்கத்துடன் தன்னவன் மேல் படரவிட்டாள்.
ஆறு ஆண்டுகளாய் அவனின் அந்த முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவளைக் குற்றம் சாட்டிக் கேட்கும் அதே கேள்வியை இப்போதும் மனசாட்சி கேட்க, மனம் விண்டு போனாள் பெண்.
அவனும் அவளுக்கு சற்றும் சளைக்காது பட்டு வேட்டி சட்டையில் ஆண்மைக்கான இலக்கணத்துடன் அழகுற மிளிர்ந்தான் என்றாலும், முகத்தில் இருக்கும் அந்த சிரிப்பு மட்டும் அவளுடையதைப் போல் உயிர்ப்பாய் இல்லை. கண்களிலும் காதல் கை சேர்ந்துவிட்ட களிப்பு இல்லை.
ஒருமாதிரியான குற்றத் தவிப்பு, இயலாமை, தாள முடியாத பாரம், மீள முடியாத சோகம் என்று இன்னும் எத்தனையோ மறைக்கப்பட்ட உணர்வுக் குவியல்கள் அவன் குற்றுயிர்ப் புன்னகையின் பின்னாக ஒளிந்து கொண்டிருந்தன.
அவற்றை அன்றே உணர்ந்திருந்தால் பெரிதாக எதையும் தடுக்க முடியாது போனாலும், குறைந்தபட்சம் திருமணத்தை நிறுத்தி அவனின் குற்றவுணர்ச்சியையாவது களைந்திருப்பாள்.
இன்று எதற்கும் வழியற்றுப் போனதே பெரும் அழுத்தம் ஒன்று தொண்டைக்குழிக்குள் உருப்பெற்று இதயத்தை அழுத்த கதவைப் படாரென்று அடித்து சாற்றியவள், மாமியாரிடம் சொல்லிக்கொள்ளக் கூட செய்யாது வெளியேறினாள்.
அவளின் தீடீர் செயலில் புரியாது விழித்தாலும் இது வழக்கம்தானே என்று பர்வதம் ஒரு இயலாமைப் பெருமூச்சுடன் மனதை சமாதானம் செய்து கொண்டார்.
வாசல் தாண்டி தமிழ் பேருந்து நிலையம் நோக்கி நடக்க, அவள் எதிரில் நிரஞ்சனா மகள் மற்றும் மகனுடன் எதிரே வந்து கொண்டிருந்தாள்.
கணவன் ஊரில் இல்லாத காரணத்தால், மகனைத் தாயிடம் விட்டு விட்டு மகளைப் பள்ளிக்குக் கொண்டு சென்று விட்டு வர என்று இவர்கள் வீட்டுக்குத்தான் வந்து கொண்டிருந்தாள் அவள்.
நிரஞ்சனாவின் பார்வை தமிழின் மேல் கோபமாய் நிலைத்தது.
தமிழோ அவளை ஏறெடுத்தும் பாராமல் தன் பாதையில் நடந்தவள், “அத்தை!” என்ற மித்துவின் குரலில்தான் தன் தவறுணர்ந்து நின்றாள்.
என்றோ அவள் மனதில் தன்னோடு சேர்த்து எல்லோருமே அவளுக்கு விரோதியாகிவிட்டிருந்தனர்.
அதற்காகக் குழந்தைகளிடம் அந்த விரோதத்தைப் பாராட்தியதில்லை அவள். அதுவும் மித்துவிடம் பாராமுகம் காட்டிட அவளால் முடியுமா?
பார்த்தியின் செல்லப்பிள்ளை அல்லவா அவள்?
அவர்கள் இருவரின் இனிமைப் பேச்சில் ஒரு அங்கமாகவும் இருந்திருக்கிறாளே அவள்?
“மித்து மாதிரி ஒரு குட்டிப் பாப்பா வேணும், தமிழ்!”
திருமணம் செய்வது என்று முடிவான தருணத்தில் இணக்கம் கூடிப் போன அவன் பேச்சுக்களில் அதிகம் இடம்பெற்று அவள் செவிகளைத் தனியாக நாணச் செய்த கூற்று இது.
இப்போது அவள் செவிக்குள் முராரி ராகம் இசைத்தது.
கலங்கத் துடித்த விழிகளைக் கட்டுப்படுத்திக் குழந்தையைத் திரும்பிப் பார்த்து முயன்று புன்னகைத்தவள், “என்னடா?” என்றாள் கேள்வியாக.
“ஒன்னும் இல்ல அத்தை. நீங்க என்னைப் பார்க்காம போனீங்க, அதான் பை சொல்லக் கூப்பிட்டேன். பை அத்தை!” என்று கையசைத்தவள்,
“தம்பி! நீயும் அத்தைக்கு பை சொல்லு.” என்று தாயின் கையில் இருந்த ஒன்றரை வயதே நிரம்பிய அஸ்வந்தின் கையைப் பிடித்து அசைக்க, அவனும் “ஆஆ பாஆஆஆய்” என்று மழலையில் மிழற்றிக் கொண்டே இரு கைகளையும் ஆட்டிக் காட்டினான்.
தமிழின் புன்னகையின் அளவு சற்றே விரிந்தது. திரும்பி இவர்களை நோக்கி நடந்து வந்தவள், நிரஞ்சனாவின் முகத்தைப் பார்க்காமலே அவள் கையில் இருந்த அஸ்வந்தைத் தூக்கி, அவன் இரு கன்னங்களிலும் முத்தமிட்டாள்.
“ஆடு பகை.. குட்டி உறவோ?” கோபத்துடன் சீண்டிய தோழியின் குரல் அவள் காதுகளில் விழவில்லை. காரணம்…
‘உன் அக்கா, உன் வயசுல இருக்கும் போதுதான் உங்க மாமா வந்து அவளை முதல் முதல்ல தூக்கினாரு. அவரு மடியில வச்சுத்தான் அவளுக்கு மொட்டை போட்டுக் காதும் குத்தினாங்க. ஆனா உனக்கு அது எதுக்கும் குடுத்து வைக்கலையே செல்லம்…’ என்று குழந்தையிடம் மானசீகமாகத் தன் வேதனையைக் கொட்டிக் கொண்டிருந்தாளே அவள்!
“மித்து! உன் அத்தைக்கு பஸ்சுக்கு நேரமாச்சு. சொல்லிடு.” நிரஞ்சனாவின் குரலில் நடப்புக்கு வந்தவள், குழந்தையை அவளிடம் கொடுத்துவிட்டு, மித்துவின் கன்னத்தையும் கிள்ளி முத்தம் வைத்து விட்டு மீண்டும் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தாள்.
செல்லும் அவளையே சில நொடிகள் வெறித்திருந்தன, நிரஞ்சனாவின் விழிகள்.
தன் மகனைக் கையில் தூக்கிய நொடி அவள் மனதில் என்னவெல்லாம் தோன்றியிருக்கும் என்று அவளை சரியாகக் கணித்த நிரஞ்சனாவுக்கு அவளை நினைக்கக் கண்கள் பனித்துக் கொண்டு வந்தது.