“ஏ தமிழ்! இப்போ எதுக்கு நீ இவளோ பதட்டப்படுற? எனக்கு ஒன்னுமில்ல. நான் நல்லாதான் இருக்கேன். நைட் தூங்கக் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. அதான் எந்திரிக்கவும் லேட்”
“லேட்டா தூங்கினீங்களா? ஏன் லேட்டா தூங்கினீங்க? அப்போ தினமும் லேட்டாதான் தூங்கறீங்களா?”
“இப்ப மட்டும் இல்ல தமிழ், குவைத்லருந்து வந்ததுலருந்து தூக்கம் கொஞ்சம் பிரச்சனைதான். இடம் மாறி இருக்குல? பழக நாளாகும்.”
அவள் நம்பும்படி பொய்யுரைத்தவன் அடுத்து அவள் ஆழ்ந்து சிந்திக்கும் முன் குளித்துத் தயாராகி அவளை வெளியே அழைத்துச் சென்றுவிட்டான்.
இன்றோடு அவர்கள் கொடைக்கானல் வந்து ஐந்து நாட்கள் ஆகிறது. பகல் முழுதும் அவளை வெளியில் அழைத்து சென்று விடுபவன், இரவு குளிரையும் பொருட்படுத்தாமல் தாமதமாக அறைக்கு அழைத்து வந்து உறங்க வைத்துவிட்டுத் தான் உறங்காமல் முழித்திருப்பான்.
இந்த ஸ்பாட்டுக்குதான் செல்ல வேண்டும் என்று எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி சாலையோர மரங்களைப் பார்த்துக் கொண்டு வெறும் தெருவில் நடந்து போவது கூட சுகமாகத்தான் இருந்தது இருவருக்கும்.
ஆனாலும் தமிழுக்கு ஏதோ ஒன்று குறைவது போலவே இருக்கும். அதை சிந்தித்து அவள் முகம் மாறும் நேரங்களில் அழகாக அவளை சமாளித்து அப்படியெல்லாம் எதுவுமில்லை என்று நம்ப வைத்திடுவான் பார்த்தி.
ஒருவாறு ஊசி போட போகும் முன் குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து ஏமாற்றும் அன்னை போல் அவளை ஏமாற்றி, அன்று ஊருக்குக் கிளம்ப புறப்பட்டுக் கொண்டிருந்தான்.
“எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டியா தமிழ்? கிளம்பலாமா?”
“ஹ்ம்ம்… எடுத்துக்கிட்டேன்.”
“சரி வா…” என்றுவிட்டு முன்னே நடக்க, அவன் தொலைபேசி இசைத்தது.
“யாருங்க?”
“நிரஞ்சனாதான்” என்றுவிட்டு அழைப்பை ஏற்றவன் “சொல்லு நிரஞ்சா.” என்ற முன் அந்தப் பக்கம் அவள் கத்த ஆரம்பித்தாள்.
பார்த்தி சட்டென தமிழைத் திரும்பிப் பார்த்தவன், அவள் தன்னையே பார்த்திருக்கவும்,
“நாங்க கிளம்பிட்டோம் நிரஞ்சா… இதைப்பத்தி வீட்டுக்கு வந்ததும் பேசிக்கலாம். அதுவரைக்கும் நீ யாருக்கிட்டவும் எதுவும் பேசக்கூடாது!” என்று வைத்து விட்டான்.
“என்னாச்சுங்க? ஏதாவது பிரச்சனையா?”
“வீட்டுக்குப் போய்ப் பேசிக்கலாம், தமிழ்!” என்றதோடு முடித்துக் கொள்ள, திடீரென மர்மமாக மாறிப்போன அவனை எண்ணிக் குழம்பிய மனதோடே பயணப்பட்டாள் அவள்.
கொடைக்கானலில் இருந்து நான்கு மணி நேரங்கள் பயணம் முடித்து திருப்பூரில் வந்திறங்கினர் தமிழும் பார்த்தியும்.
ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு வீட்டில் சென்று இறங்கிய இருவரையும் முதலில் ஓடி வந்து வரவேற்றது மித்துதான்.
பார்த்தி அவளைத் தூக்கிக் கொண்டே வீட்டினுள் நுழைய, அடுத்த நொடியே அவனிடமிருந்து பிள்ளையைப் பிடுங்கிக் கொண்டாள் நிரஞ்சனா.
“நிரஞ்சா!”
“என்ன நிரஞ்சா? எங்க கூட சேர்த்து இந்தப் பச்சைப் புள்ளையவும்தான இத்தனை நாள் ஏமாத்திட்டு இருந்திருக்க? பிறகென்ன பாச வேசம் வேண்டிக் கிடக்கு?” என்ற பார்த்தியின் முகம் இறுகியது.
அதைத் தாங்காதவள், “ஏன் ணா இப்பிடி? நீயா இப்பிடினு யோசிக்க வேண்டியதா இருக்கு!” என்று கலங்க, அவனால் என்ன சொல்ல முடியும்?
இதில் தமிழ் வேறு எதுவும் புரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.
“என்னாச்சு நிரஞ்சா, அவருக்கிட்ட ஏன் இப்படி பேசிட்டு இருக்க?” கேட்டவள் அங்கிருந்த பர்வதம் மற்றும் சித்ராவின் முகங்களை ஆராய்ந்தாள்.
பர்வதம் அழுகையை அடக்கி சிறுத்து விட்ட முகத்தோடு நின்று கொண்டிருக்க, சித்ரா முகத்தில் எந்த உணர்வுகளும் இல்லை.
அதில் மீண்டும் நிரஞ்சனாவைப் பார்த்தவள், அவள் தன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் விம்மி வெடித்துக் கொண்டு நிற்கவே, பார்த்தி முகம் பார்த்தாள்.
அவன் இறுகிய தோற்றமே அவளுக்குள் பிரளயத்தைத் தோற்றுவிக்க,
“இங்க என்னதான் நடக்குது? யாராச்சும் சொல்லுங்களேன்!” என்று குரலை உயர்த்தினாள்.
“அதான் கேட்கிறால? சொல்லுண்ணா. உனக்குக் கஷ்டமா இருக்குனா சொல்லு, நானே சொல்லிடுறேன்.” என்ற அவன் அமைதியாகவே நின்றான்.
அவள் முகம் பார்த்து தன்னால் சொல்ல முடியாது. தங்கையே சொல்லிக் கொள்ளட்டும் என்று இருந்து விட்டான்.
நிரஞ்சனா, கூடத்து மூங்கில் டீப்பாயின் மேல் வைக்கப்பட்டிருந்த ஒரு கடிதத்தை எடுத்து வந்து தமிழின் கையில் திணித்தவள்,
“இந்தா… பார்த்து சந்தோஷப்பட்டுக்க. உன் புருஷன் திரும்ப குவைத் போறதை உறுதிப் படுத்தி போஸ்ட் வந்திருக்கு.” என்ற தமிழுக்கு ஒன்றுமே புரியவில்லை.
கிராம் பெறுமதி கூடப் பெறாத அந்தகக் கடிதம் மெட்ரிக் தொன் எடையில் கையில் கனக்க, அதையும் நிரஞ்சனாவையும் பார்த்தியையும் மாறி மாறிப் பார்த்தவள், நேரமெடுத்து அவள் வார்த்தைகளைக் கிரகிக்க முயன்றாள்.
விஷயம் இதுதான் என்று தெளிந்ததும்…
“இது… இது ஒருவேளை முன்னாடியே அவங்க அனுப்பி நம்ம கைக்கு லேட்டா கிடைச்சதா இருக்கும். இவரு அன்னைக்குதான போய் திரும்பி வரலைனு பதிவு பண்ணிட்டு வந்தாரு. அதுக்கு முன்னாடி போட்ட லெட்டரா இருக்கும் இது. இல்ல பார்த்தி?” என்று நம்பிக்கையோடு அவன் முகம் நோக்க, அவன் முகம் செத்து விட்டிருந்தது. அவள் முகத்தைப் பார்க்க வெட்கித் தலை குனிந்து நின்றிருந்தான்.
“அப்டியே நம்பித் தொலடி. உன் புருஷன் அன்னைக்கு போனது, போகலங்குறத உறுதிப்படுத்த இல்ல, போறத உறுதிப்படுத்த! நான் அந்த கடை அண்ணாக்கு எடுத்து விசாரிச்சேன்.” என்ற, தமிழுக்கு உடலை விட்டு உயிர் நழுவும் உணர்வு. மனம் இன்னதென்றறியா ஒரு தவிப்பில் சிக்கித் திணறியது.
பார்த்தி மேல் வேறு யார் குற்றம் சாட்டியிருந்தாலும் நம்பியே இருக்க மாட்டாள். சொல்வது நிரஞ்சனா என்கையில் முழுதாக அதைப் பொய் என்று ஒதுக்க முடியவில்லை.
“பார்த்தி?” அப்போதும் நீ என்னிடம் பொய் உரைத்தாயா என்று கேட்க வராமல், அவன் பெயரையே கேள்வியாக்கியவளை எதிர்கொள்ள சத்தியமாக அவனால் முடியவில்லை.
“உள்… உள்ள வா தமிழ்!” என்றுவிட்டு லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு அவன் அறைக்குள் விரைய, தமிழ் செல்லும் அவன் முதுகைப் பார்த்தவாறு பேயறைந்தவள் போல் அசையாதிருந்தாள்.
நிரஞ்சனாதான் அவளைத் தள்ளியவள், “போடி போய்ப் பேசு. என்ன ஆனாலும் போக மட்டும் விட்றாத!” என்ற விரக்தியான ஒரு பார்வையை அவளிடம் செலுத்தியவள், பொம்மை போல் நடந்து சென்றாள்.
அவளின் நிலையைத் தாங்காத நிரஞ்சனா அடுத்து எடுத்தது என்னவோ ராஜேஷுக்குத்தான்.
அவரிடம் விவரத்தை சொல்லி புலம்ப, பர்வதத்துக்கு மனம் பதைத்தது.
தமிழுக்காக, தெய்வமாய் மதிக்கும் தமையனையே இந்தப் பேச்சுப் பேசுபவள், இதற்குகாக் காரணம் தான் என்று தெரிய வந்தால் தன்னைப் பேசியே கொன்றுவிடுவாள் என்று மகளுக்கு அஞ்சினார்.
வழக்கமாக என்றால் மருமகளிடம் ஆறுதலும் ஆலோசனையும் தேடியிருப்பார்.
இப்போது அவளை நினைத்தாலே…
அவர் அவளுடனான பேச்சு வார்த்தையை முற்றிலும் நிறுத்தி ஒரு வாரத்துக்கு மேலாகிறது.
அறையில் தரையைப் பார்த்தவாறு கட்டிலில் அமர்ந்திருந்தான் பார்த்தி.
தமிழ் உள்ளே வந்தவள் அவனருகே செல்லாமல் சுவரோடு சாய்ந்து தலையைக் குற்றி அமர்ந்துவிட அவளை அங்ஙனம் காணப் பார்த்திக்குத் தாங்கவில்லை.
கலங்கிய கண்களுடன் அவளைப் பார்த்தான், ஏதாவது கேட்பாளா என்று!
அவள் எங்கே பேசும் மனநிலையில் இருந்தாள்? மொழி மறந்த பாவையாக அமர்ந்திருந்தவள், மனதுக்குள் ஓடியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
‘இனி அவன் உருவத்தை எதிரில் காண இயலாதா?’
‘இந்த அறைக்குள் அவனின்றித் தனிமையில் மூச்சு முட்ட இருக்க வேண்டுமா?’
‘அவனைத் தொட்டுணரும் தருணத்திற்காக இனியும் வருடக் கணக்கில் என் தவம் தொடரப் போகிறதா?’
மீண்டும் மீண்டும் இந்தக் கேள்விகளே அவளைப் போட்டு வதைக்கத் தொண்டைக் குழி ஏறி இறங்கியது வலியில். ஆனாலும் அழுதாளில்லை.
அதற்கு மேலும் தாளாத பார்த்தி, அவள் முன்னே வந்து மண்டியிட்டு அமர்ந்தவன், கைகளுக்குள் அவள் முகத்தை சிறை எடுத்து,
“தமிழ்! என் தங்கம். என்னைப் பாருமா. ஏதாவது பேசுடி. இல்ல, ஏன்டா இப்பிடி என்னை ஏமாத்தினேனு அடிச்சுக் கேட்கவாவது செய்! இப்பிடி அமைதியா மட்டும் இருக்காதமா!” என்றான் கெஞ்சலாய்.
அவன் வலி தாங்காது தன் மௌனம் கலைத்தவள் கேட்ட முதல் கேள்வி,
“எப்போ வருவீங்க?” என்பதுதான்.
“தமிழ்!” துடித்து அவள் மடியில் சுருண்டவன் வெடித்துவிட்டான்.
இத்தனை வருடங்கள் சுமந்த பாரத்துக்கும் சேர்மதியான கண்ணீரை அவள் மடியில் கவிழ்த்தான்.
தமிழ் பதறி விட்டாள். தன் கவலைகள் அத்தனையும் பின்னுக்குப் போய்விட அவனை ஆற்றுப்படுத்துவதே முதன்மையாகப் பட்டது.
தன் மனதை மறைத்து அவனுக்கு ஆறுதல் கூற, அவன் வேதனை கூடியதே ஒழிய குறைந்தபாடில்லை.
அவள் கருவறைக்குள்ளே குடிபுக ஆசைப்படுபவன் போல் அவள் வயிற்றோடு தலையை அழுத்திக் கொள்ள, அணிந்திருந்த சுடிதாரைத் தாண்டி அவனின் கண்ணீரின் ஈரம் அவளை சுட்டது.
அவளின் வேதனையோடு அவன் வேதனையையும் தன்னில் சுமந்தவள் கண்ணீருடன் அவனைகக் கைகளால் வளைத்து முதுகைத் தட்டிக் கொடுத்தபடியே அவன் மேல் தலை சாய்த்தாள்.
“இதெல்லாம் ஒன்னுமே இல்ல பார்த்தி… நீங்க தைரியமா இருந்தாலே எல்லாம் சரியாயிடும். இதே நம்ம கல்யாணம் நடக்கலனா எந்தக் கவலையுமில்லாம போய்ட்டு வந்திருப்பீங்கல? அப்டிப் பார்த்தா இப்போ நீங்க கலங்கி நிக்கிறதுக்குக் காரணம் நான்தானே?
இப்ப என்ன, கல்யாணமானா என்னை விட்டு நீங்க எங்கேயும் போகக் கூடாதுனு கேட்டேன். எல்லாமே நாம நினைக்கிற மாதிரி நடந்திடுமா? கல்யாணத்துக்கு அப்புறம் போயே ஆகணும்னு உங்களுக்கு ஒரு தேவை வந்தா நம்மளால என்னதான் பண்ண முடியும்? ஹ்ம்ம்?”
வார்த்தைகளால் அவனை வருட, வறண்ட நிலத்தில் விழுந்த முதல் துளி நீர் போல் அவன் மனதுக்குள் முதல் ஆறுதல் துளிர்த்தது.
மெல்ல அவள் மடியிலிருந்து எழுந்தமர்ந்தவன் அவள் முகத்தைக் கைகளில் ஏந்திக் கொண்டான்.
“நீ என்னை நம்புறதான தமிழ்? நான் உன்னைக் கல்யாணம் பண்ணணுங்கிறதுக்காக குவைத் போகலனு பொய் சொல்லல, கல்யாணத்துக்கு அப்புறம்தான் அது மாதிரி சூழ்நிலை அமைஞ்சுதுனு நம்புறல?” என்றான் எதிர்பார்ப்பாய்.
“நான் உங்கள அப்டி நினைச்சிடுவேன்னு தான் என்கிட்ட இதை சொல்லாம இருந்தீங்களா? நீங்க என்னைப் புரிஞ்சிக்கிட்டது அவ்வளவுதானா?” என்று அவள் வேதனையாய் கேட்க, அவள் தலையைத் தன் மார்போடு புதைத்துக் கொண்டவன்,
“இல்லடா… அப்படி நினைச்சு சொல்லாம இல்ல. இங்க இருக்கிற கொஞ்சநாளும் உன்னைச் சந்தோசமா வச்சுக்கணும்னு நினைச்சுதான் சொல்லல” என்ற, தன் தலையால் அவன் மார்பில் முட்டிக் கொண்டவள், ஞாபகம் வந்தவளாக…
“இதனாலதான் ஆசையிருந்தும் நமக்கு நேரமிருக்கு, நேரமிருக்குனு என்கிட்ட தள்ளியிருந்தீங்களா?” அவன் மார்பில் நாடியைக் குற்றி அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.
பார்த்தி அவன் நெற்றியில் முத்தமிட்டவன், எதுவும் பேசாது அவள் தலையை வருடிக் கொடுத்தான்.
“என்னைப் பாவியாக்காதீங்க பார்த்தி. எனக்கு உங்களைத் தவிர எதுவும் பெருசில்லை. பிளீஸ்…” என்றவளை மேலே பேச விடாமல் தடுத்து அவள் இதழ்களின் மேல் ஆட்காட்டி விரலை வைத்தவன்,
“ஐஞ்சு பத்துநாளுக்கு என் சந்தோஷத்தைப் பார்த்து ரெண்டு வருஷத்துக்கு நீடிக்கிற துன்பத்தை உனக்கு அறிமுகப்படுத்தி வைக்க விரும்பல தமிழ்.” என்றவனைக் காதல் பொங்கப் பார்த்தாள்.
“அப்படியெல்லாம் இல்ல பார்த்தி…”
“உஷ்… இதெல்லாம் உனக்கு சொன்னாப் புரியாது. அனுபவிச்சுப் புரிஞ்சுக்கோனு விட எனக்கு மனசில்லை. நான் சொன்னது போல நமக்கு நேரம் நெறைய இருக்கு தமிழ். ரெண்டு வருஷம்… ரெண்டே ரெண்டு வருஷம் எனக்காக… நமக்காகக் கொடு. எல்லாத்தையும் முடிச்சிட்டு உன்கிட்ட ஓடி வந்துடுறேன். அதுக்கப்புறம் இழந்ததுக்குலாம் சேர்த்து போதும் போதும்கிற அளவுக்கு வாழ்வோம்.”
அவள் தோள்களைத் தடவி தேறுதல் சொன்னவனுக்குத் தன் மனதை ஆற்றுப்படுத்தத் தெரியவில்லை. ஒற்றைத் துளி கண்ணீர் விழிகளிலிருந்து உருண்டோடியது.
அவளுக்கும் மனம் வெகுவாகக் கனத்தது என்றாலும் அவனுக்காகக் கடினப்பட்டு அடக்கிக் கொண்டாள்.
“எப்ப கிளம்பணும்?”
“நாளான்னைக்கு… நாளைக்கு முடிக்க வேண்டிய வேலை கொஞ்சம் இருக்கு.”
“ஹ்ம்ம்…” என்றவள் மரணத் தவிப்பில் தகிக்கும் முகத்தை அவனிடம் மறைத்து அவன் மார்போடு ஒண்டிக் கொண்டாள்.
அந்நேரம் ராஜேஷ் அவனுக்கு அழைத்தான். அவளைக் கைகளுக்குள் வைத்துக் கொண்டு அழைப்பை ஏற்றவன்,
“சொல்லுங்க அத்தான்!” என்று அவன் நிரஞ்சனா மூலம் தான் அறிந்ததைக் கேட்டு ஏன், எதற்கு என்று காரணம் கேட்க கடைசிவரை காரணம் சொல்லாமலே சமாளித்தவன்,
“ரொம்ப அவசியம் அத்தான். என்னை நம்புங்க. ரெண்டே வருஷம் தான்.” என்று அவரை சமாளித்து வைத்தவன் குனிந்து தமிழைப் பார்த்து,
“உனக்குக் காரணம் தெரிய வேண்டாமா தமிழ்?” என்க, அவன் மார்பிலேயே இடம் வலமாய் தலையசைத்தாள்.