Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயம் எழுதும் கவிதை நீ

இதயம் எழுதும் கவிதை நீ 20 3

அத்தியாயம் 20.3

அம்பிகா தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,சமையலறை பின்பக்கம் சென்று கதவைத் திறந்து வெளியே ஓடி வந்தார்.

சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனத்தை நிறுத்தி உதவி கேட்க, பின்னால் வந்த கந்தசாமி, சரோஜா, பிரியா மூவரும் அம்பிகாவை பிடித்துக் கொண்டனர்.

“தம்பி இவங்க எங்க அக்காதான். கொஞ்சம் மனநிலை சரியில்லை அப்பப்போ இப்படி வீட்டை விட்டு ஓடி வந்துருவாங்க.நாங்க பாத்துக்கறோம் நீங்க கிளம்புங்க” என்றான் கந்தசாமி



Advertisement

இல்ல… இல்ல.. இவன் சொல்லற எதையும் நம்பாதீங்க.என் வீடு இருகூர்ல இருக்கு என்னை என்பையன் கிட்ட கொண்டு போய் விடுங்க தம்பி- அம்பிகா

சரிங்கம்மா காருல ஏறுங்க…என்றவரை “என்னய்யா நான் இவ்வளவு தூரம் சொல்றே.இவங்க பைத்தியம்னு உனக்கு ஒரு டைம் சொன்னா புரியாது” என கந்தசாமி அதட்டினான்.

பதிலுக்கு காரில் இருந்தவர்,” சரிப்பா போலீஸ்க்கு ஃபோன் பண்றே அவங்க வந்து இந்த பிரச்சனையே தீர்க்கட்டும்” என ஃபோனை எடுக்க…கந்தசாமி பின்வாங்கினான்.

Advertisement

காரில் இருந்தவருக்கு ராம மூர்த்தியை தொழில் முறையாக நன்றாகவே தெரியும்.ஒன்றிரண்டு முறை அம்பிகாவையும் பார்த்திருக்கிறார். எனவே அம்பிகாவை காரில் அமருமாறு சொல்ல…அவரும் அமர்ந்து கொண்டார்.
கந்தசாமி குடும்பம் அவமானத்துடன் வீடு திரும்பினர்.

Advertisement

பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த அம்பிகாவின் உடல் இன்னும் நடுங்கிக்கொண்டிருந்தது.
கந்தசாமியின் முகமும், அவன் பேசிய வார்த்தைகளும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தன.

‘என் தம்பியா நினைச்ச ஒருத்தன் இப்படி மாறுவான்னு கனவுலகூட நினைக்கலையே!’

அவளுடைய கண்கள் கலங்கின.

Advertisement

“அம்மா… உங்களுக்கு என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா?” என்று வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தவர் கேட்டார்.

“இல்லை” என அம்பிகா தலையசைத்து
“ஒண்ணுமில்லை தம்பி. கொஞ்சம் பயந்துட்டேன்” என இயல்புக்கு திரும்பினார்.

“உங்க வீட்டுக்குப் போகணுமா? இல்ல வேற எங்கேயாவது போகணுமா?”

“எங்க வீட்டுக்குதான்…இருகூர் போகணும் தம்பி.”

அவர்களின் வீட்டை நோக்கி வாகனம் திரும்பியது.

வீட்டில்…ரஞ்சிதா சித்தார்த்தை ராஜீவனின் கைகளில் இருந்து வாங்கிக்  கொண்டு வாசலை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.

ராஜீவன் அவளைத் தடுக்கவில்லை. ஆனால், அவளுடைய ஒவ்வொரு அடியும் அவனுடைய இதயத்தை அழுத்தியது.

“ரஞ்சிதா…”அவள் நின்றாள். ஆனால் திரும்பவில்லை.

“நீ எங்கே போனாலும் நான் தடுக்க மாட்டேன். ஆனா, சித்துவைப் பார்க்கிறதுக்கு மட்டும் என்னைத் தடுக்காதே.”

ரஞ்சிதா மெதுவாகத் திரும்பி,
“அவனைப் பார்க்க நான் எப்போ தடுத்தேன்? அவன் உன்னை அப்பான்னு ஏத்துக்கிறதுக்கு நான் தடையா இருந்தேனா?”

“அவனுக்கு உன் மேல பாசம் வரணும்னு நானும் ஆசைப்பட்டேன். அவனுக்குத் தகப்பனா நீ இருக்கணும்னுதான் நினைக்கிறேன். ஆனா, அவனுக்கு அப்பாவா இருக்கிறது மட்டும் போதாது அவன் அம்மாவுக்கு நீ என்னவா இருந்தே?என்னவா இருக்கப் போறேனு கொஞ்சம் யோசிச்சுப் பாரு.” என்றவளின் குரலில் கோபத்தைவிட வலியே அதிகமாக இருந்தது.

“நான் உன்னை வெறுத்துட்டேன்னு நினைக்காதே. வெறுத்திருந்தா இவ்வளவு வலிக்காது. உன்னை இன்னும் மனசுக்குள்ள வெச்சிருக்கிறதாலதான் என்னால இங்க இருக்க முடியல.”

அவன் மனதில் நம்பிக்கை மெல்லத் துளிர்விட்டது. ஆனால், அவள் அடுத்ததாகச் சொன்ன வார்த்தைகள் அந்த நம்பிக்கையை அடக்கின.

“அதனாலதான் நான் போறேன். என்னை நானே கொஞ்சம் தேத்திக்கணும். என் பையனுக்காகவும் நான் நிம்மதியா இருக்கணும்.”

ராஜீவன் கண்களை மூடி மூச்சை இழுத்தான்.

அவளைத் தடுக்க வேண்டும் என்று மனம் துடித்தது. ஆனால், அவளுடைய விருப்பத்தை மதிக்காமல் மீண்டும் அவளை வதைக்க அவனுக்கு விருப்பமில்லை.

“சரி,” என்றான்.

அந்த ஒரு வார்த்தை ரஞ்சிதாவைச் சற்றே வியக்க வைத்தது.அவள் எதுவும் பேசாமல் வெளியே செல்ல…

அப்போது வெளியே ஒரு வாகனம் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. வாகனத்திலிருந்து இறங்கிய அம்பிகா, வீட்டின் வாசலைப் பார்த்ததும் வேகமாக உள்ளே வந்தார்.

உள்ளே வந்த  அம்பிகாவைப் பார்த்ததும் ரஞ்சிதாவின் முகம் மாறியது.

அம்பிகாவின் கண்கள் ரஞ்சிதாவையும் அவளுடைய கையிலிருந்த பையையும் மாறி மாறிப் பார்த்தன.

“எங்கே கிளம்பிட்டிருக்கேம்மா?”

ரஞ்சிதா பதில் சொல்லவில்லை.

அம்பிகா அவளருகே வந்து,“என்கிட்ட சொல்லாம எங்கே போறே?”என்றார்.

“அத்தை…”

“நான் உன்னை எங்கே போறேனு?” கேட்டேன் ரஞ்சிதா. ”

“நான் இந்த வீட்டை விட்டுப் போறேன். என் பையனைக் கூட்டிக்கிட்டு என் வாழ்க்கையைப் பார்க்கப் போறேன்.”

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அம்பிகாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

ஏன்ம்மா இந்த வீட்டை விட்டுப் போறே?இது உன் வீடும்மா.

அந்த வார்த்தைகளைக் கேட்ட ரஞ்சிதாவின் முகத்தில் வேதனை படர்ந்தது.

“இந்த வீடு எனக்குச் சொந்தம்தான் அத்தை. அதனாலதான் இத்தனை வருஷம் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருந்தேன்.”

“இந்த வீட்டுல எனக்கு அன்பு கொடுத்தவர் மாமா மட்டும்தான். அவர் இருந்த வரைக்கும் நான் தனியா இருக்கிறேன்னு நினைக்கவே இல்லை. அவர் போனதுக்குப் பிறகுதான் இந்த வீட்டுல எனக்குன்னு யாருமே இல்லாத மாதிரி தோணுச்சு.”

அம்பிகாவால் அவளை நேராகப் பார்க்க முடியவில்லை.

“ரஞ்சிதா…”

“நான் உங்களைக் குறை சொல்லல அத்தை. நீங்களும் உங்க மகன் நல்லா இருக்கணும்னுதான் நினைச்சீங்க. உங்க மனசுல பிரியாவை மருமகளா கொண்டு வர ஆசை இருந்திருக்கலாம். அதுக்காக உங்களை நான் வெறுக்கல.”

“ஆனா, என் வாழ்க்கையைப் பத்தி முடிவு எடுக்கிற உரிமை எனக்கும் இருக்கு அத்தை. நான் எவ்வளவு நாள் காத்திருக்கணும்? எவ்வளவு நாள் அழணும்? எவ்வளவு நாள் அவர் மனசுல எனக்கு இடம் கிடைக்குமானு தெரியாம வாழணும்?”

அம்பிகா தன் கண்களில் வழிந்த  கண்ணீரைத் துடைத்தார்.

“என்னை மன்னிச்சிடும்மா. நான் உன்னைப் புரிஞ்சுக்கவே இல்லை.” – அம்பிகா

அவளுடைய மனதிலும் அம்பிகாவைப் பற்றிய அன்பு இருந்தது. ஆனால், அந்த அன்பு அவள் அனுபவித்த வலியை அழித்துவிடவில்லை.

“அத்தை, நீங்க எனக்கு மாமியார் மட்டும் இல்லை. என் அம்மா மாதிரிதான். உங்க மேல எனக்கு இன்னைக்கும் அன்பு இருக்கு. அது எப்பவும் மாறாது.”

அம்பிகா அவளுடைய கைகளைப் பற்றிக்கொண்டார்.

“அப்படின்னா என்னை விட்டுட்டுப் போகாதேம்மா!”என அவர் அழுதுகொண்டே சொன்னார்.

“இந்த வீட்டுல நீயும் சித்துவும் இல்லாம என்னால இருக்க முடியாது. உன் மாமனார் உன்னை எவ்வளவு ஆசையா பார்த்தார்னு உனக்கே தெரியும். அவர் ஆசைப்பட்ட மாதிரி இந்தக் குடும்பம் நல்லா இருக்கணும்மா.”

ரஞ்சிதாவின் கண்களிலும் கண்ணீர் திரண்டது.

“அவர் ஆசைப்பட்ட வாழ்க்கை வாழனும்னுதான் நானும் ஆசைப்பட்டேன் அத்தை. ஆனா, ஆசைப்பட்டதெல்லாம் நடந்துடுமா?”

அம்பிகா பதில் சொல்ல முடியாமல் நின்றார்.

அப்போது ராஜீவன் அவர்களருகே வந்தான்.

“அம்மா…”

அம்பிகா மகனைப் பார்த்தார்.

“நீ பேசாத ராஜீவா!”அவருடைய குரல் சற்று உயர்ந்தது.

“இத்தனை நாள் பேச வேண்டிய நேரத்துல நீ பேசல. இப்போ உன் மனைவி போறேன்னு நிக்கும்போது மட்டும் என்ன பேசப் போறே?”

ராஜீவன் தலைகுனிந்தான்.

அம்பிகா ரஞ்சிதாவை நோக்கித் திரும்பினார்.

ரஞ்சிதா இவ்வளவு நாளா பொறுத்திட்டு இருந்தே.எனக்காக நீ மறுபடியும் இந்த வீட்டுல இருக்கனும்மா.நான் உனக்கு ஒரு உறுதி தரேன்.நிச்சயமா என் பையன் உன்னை நல்லா பாத்துப்பான்.

தன்னுடைய சுயமரியாதையை இழக்க தயாரில்லாத ஒரு அம்மா தன்னுடைய மகனையும் நல்லாதான் வளர்த்திருப்பா. நானும் என் பையனை அப்படிதான் வளர்த்திருக்கேன்.

என்மேலையும் நிறைய தப்பு இருக்கு நிறைமாதமா நீ நிக்கும்போது ஒரு அம்மாவா நான் உன்னை தாங்கி நின்றிருக்கனும் அதை நான் செய்ய தவறிட்டேன்.அதுதான் கடவுள் எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையை தந்துட்டார்.இனி நீயும் சித்துவும் இல்லாம ஒரு நொடி கூட என்னால இந்த வீட்டுல இருக்க முடியாதும்மா.
தயவு செஞ்சு வீட்டுக்குள்ள வாம்மா.
இனி உன்னோட வாழ்வு என்னோட பொறுப்பு.

ராஜீவனிடம் திரும்பி,”ராஜீவா இவ்வளவு நாளா நீ எதுவும் பேசாம இருந்தது போதும்.உன் வாழ்க்கைக்கான தெளிவான முடிவு நீதான் எடுக்கனும்.அதை தெளிவா மத்தவங்க கிட்ட பேசி புரிய வெக்கனும். அதை நீ முதல்ல செஞ்சிருந்தா இன்னைக்கு உன் வாழ்க்கை இப்படி கேள்விக்குறியா இருந்திருக்காது.உன் மனைவியும் மகனும் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டாங்க.

முதல்ல கந்தசாமி வீட்டுக்கும்,ரஞ்சிதா வீட்டுக்கும் போய் தெளிவா பேசிட்டு வா. உன்னோட வாழ்க்கையை நீதான் சரியான பாதைக்கு கொண்டு போகனும். ரஞ்சிதாவை கூட்டிட்டு உள்ள வா.

ரஞ்சிதாவிடம் இருந்து சித்தார்த்தை வாங்கிக் கொண்டு அம்பிகா உள்ளே சென்றார்.

ரஞ்சிதா, “என்னை நம்பு இனி என்னோட வாழ்க்கையில இறுதி மூச்சு இருக்கற வரை உன்னை ஒரு நிமிஷம் கூட உன்னைப் பிரிய மாட்டேன். உன்னோட கனவுகளுக்குத் துணையா இருப்பேன். உன்னோட சுயமரியாதை எந்த இடத்துலையும் குறையாம பார்த்துப்பேன்.எனக்கு ஒரு வாய்ப்பு மட்டும் கொடு”என்று ராஜீவன் கெஞ்சினான்.

“சரி ஒரே ஒரு வாய்ப்புதான் இனி வாழப் போற இந்த வாழ்க்கையில  எனக்கு எந்த இடத்துலையாவது என்னோட சுயகெளரவம் குறையற மாதிரியோ, என்னோட கனவுகளுக்கு முட்டு கட்டை விழுகிற மாதிரியோ தோணுனா.அடுத்த நிமிஷமே உன்ன விட்டு விலகிருவேன்” என திடமாக சொல்லிவிட்டு மெளனமாக தலையை குனிந்தாள்.

ராஜீவனுக்கு அவளின் இந்த வார்த்தைகள் அளவில்லாத சந்தோசத்தை தந்தது.”சரி,உள்ளே போலாமா” எனக் கேட்டான்.

ரஞ்சிதா, தலையை மட்டும் சம்மதமாக ஆட்டிவிட்டு நிற்க…அடுத்த நொடி அவளை இரு கரங்களிலும் ஏந்தியவாறு உள்ளே சென்றான் ராஜீவன்.

“ஐயோ! இறக்கி விடு.அத்தை பார்த்தா என்ன நினைப்பாங்க?” – ரஞ்சிதா

அவன் அவளை இறக்கி விடுவதாக இல்லை.தன்னோடு இறுக்கி அணைத்த படி உள்ளே செல்ல…சித்தார்த் ஓடி வந்து இருவரையும் பார்த்து கைகளை தட்டி ஆரவாரமாக சிரித்தான்.

அம்பிகா ராம மூர்த்தியின் படத்திற்கு விளக்கேற்ற…இன்று அவரது முகம் மகிழ்ச்சியாக இருப்பதாக தோன்றியது. நால்வரும் அவரின் படம் முன்பு நின்று அவரை வணங்கினர்.
–கவிதை நிறைந்தது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!