Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயம் எழுதும் கவிதை நீ

இதயம் எழுதும் கவிதை நீ 20 1

அத்தியாயம் 20.1

இரவு கந்தசாமி வீட்டில்…உணவு மேசையில் அம்பிகா முன்னால் வைத்திருந்த உணவு அப்படியே இருந்தது. ஒரு கவளம் கூட சாப்பிடாமல் அமர்ந்திருந்த பிரியாவையே அவர் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

பிரியா… சாப்பிடும்மா. காலையிலிருந்து எதுவுமே சாப்பிடலை!

எனக்கு வேண்டாம் அத்தே…என்றவள் முகத்தைத் சுருக்கிக் கொண்டாள்.அவள் கண்ணில் ராஜீவன் மகனுடன் உள்ளே நுழைந்தது,அதன் பின் சண்டையின் போது அவர்கள் புரிதல் என அனைத்தும் படமாக விரிந்தன.



Advertisement

“என்னம்மா இது? இப்படி சாப்பிடாம இருந்தா உடம்புக்கு என்ன ஆகும்?”என மீண்டும் அம்பிகா அவளை நிகழ்வுக்கு கொண்டு வந்தார்.

அத்தே, ப்ளீஸ்… என்னை வற்புறுத்தாதீங்க. எனக்கு பசியில்லை.

ஏற்கனவே தனது மகனின் செயல்களால் குழம்பி இருந்த அம்பிகா,மேலும் சோர்வடைந்து அமர்ந்தார்.

Advertisement

அப்போது அங்கே வந்த கந்தசாமி, “அக்கா நீ முதல்ல சாப்பிடு.பிரியாவை நான் சாப்பிட வெக்கிறே”என தட்டில் உணவை பரிமாறி அம்பிகா முன்பு வைத்தான்.

Advertisement

இல்ல தம்பி,”எனக்கும் பசியில்லை.நீ ஃபர்ஸ்ட் பிரியாவை சாப்பிட வை.நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கறே.”என ரூமை நோக்கி செல்ல…

கந்தசாமியும் பின்னால் சென்று அம்பிகாவிற்கு படுக்கையை தயார் செய்து தந்துவிட்டு வந்தான்.

இரவு மணி ஒன்பது…என்னதான் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் கண்களை தழுவவில்லை அம்பிகாவிற்கு.

Advertisement

ராஜீவனின் முகம் நினைவுக்கு வந்தது.
சிறுவயதிலிருந்தே ராம மூர்த்தியின் கண்டிப்பால் தனக்கு பிடித்த அனைத்தையும் மனதிற்குள் வைத்துக் கொண்டு எதையும் வெளியே காட்டாமல் இருக்கும் மகன்.ஒரே மகன் அவனுக்கு செய்யாமல் வேறு யாருக்கு செய்யப் போகிறோம்? எனவேஅவனுக்குப் பிடித்த வாழ்க்கையை அவன் வாழ வேண்டும் என்று நினைத்திருந்தார். பிரியாவை அவன் விரும்பியதால், அவள்தான் தன் வீட்டின் மருமகளாக வருவாள் என்றும் மனதிற்குள் முடிவு செய்திருந்தார்.

ஆனால் இப்போது?அவன் ரஞ்சிதாவை முன்னிலைப்படுத்துகிறான்.மகனோடு கொஞ்சம் கொஞ்சமாக தன் உறவை வளர்த்துக் கொண்டிருக்கிறான்.

‘என் பையனுக்குப் பிடித்த வாழ்க்கை இதுதானா? இல்லையென்றால், நான் நினைத்துக் கொண்டிருப்பதுதான் அவனுக்குப் பிடித்த வாழ்க்கையா?’

தன் கண்முன்னால் மகனின் வாழ்க்கை கேள்விக் குறியாக இருப்பதை அவர் விரும்பவில்லை.அவன் மகிழ்ச்சியாக அவன் வாழ்வை வாழ வேண்டும்.எந்த தாயுமே இதை மட்டுமே எதிர் பார்ப்பார்கள்.

இதற்கெல்லாம் நடுவில் பிரியா… ஒருவேளை மகன் ரஞ்சிதாவுடன் வாழ்ந்தால் பிரியாவின் நிலை.இவை எல்லாம் மீண்டும் மீண்டும் குழப்ப தூக்கம் வராமல் தவித்தார்.

அப்போது வெளியே ஏதோ சத்தம் கேட்டது.முதலில் காற்றில் ஏதாவது விழுந்திருக்குமென்று நினைத்தார். ஆனால், மீண்டும்  சத்தம் கேட்டதும் எழுந்து அமர்ந்தார்.

‘இந்த நேரத்தில் என்ன சத்தம்?’என எண்ணியவாறே,மெதுவாகக் கதவைத் திறந்து வெளியே வந்தார். வீட்டின் பின்பக்கத்திலிருந்து பலமாக காற்று வீசியது. ஜன்னல் கதவுகள் மோதும் சத்தமாக இருக்குமோ என்று நினைத்தவர், அந்தப் பக்கமாக நடந்தார்.

பிரியாவின் அறை… ஜன்னல் அருகே வந்தபோது, உள்ளே இருந்து அவளுடைய குரல் கேட்டது.

அப்பா ஒரே நிமிஷம் இந்த ராஜீவன் மட்டும் அமைதியா இருந்திருந்தா,அந்த ரஞ்சிதா வீட்டு ஆளுங்க அவளை கூட்டிட்டு போய்ருப்பாங்க…எப்பவும் பூனை மாதிரி இருக்கறவேன் இன்னைக்கு புலியா மாறி சண்டைக்கு நிக்கறான். எனக்கு இதுக்கு மேலையும் நம்பிக்கை இல்லப்பா.அவன் நிச்சயமா வரப்போறது இல்ல -பிரியா.

பிரியா, உனக்கு இப்போதா தெரியுது. ராஜீவன் பூனை இல்ல புலிங்கறது. எனக்கு எப்பவோ அவனைப் பத்தி தெரியும்.அதுனாலதான் அவனுக்காக இவ்வளவு தூரம் பொறுமையா காத்திட்டு இருக்கே.

என்னங்க அவனை ஒரேயடியா இவ்வளவு புகழ்றீங்க .அவன் ஒன்னும் அந்த அளவுக்கு தகுதியானவன் இல்ல -சரோஜா.

சரோஜா உனக்குதான் அவனோட மதிப்பு புரியல..அந்த ராம மூர்த்தி கட்டியிருக்கற வீடு இப்போ அம்பது லட்சம் தேறும்…அப்போ எதிர்காலத்துல அதோட மதிப்பு இன்னமும் அதிகமாகும். அப்பறோம் அம்பிகா பேருல இருக்கறே எங்க பூர்வீக இடம் அதுவும் கோடி கணக்குல போகும்.ராஜீவனும் கைநிறைய சாம்பாரிச்சுட்டு இருக்கான்.

அன்னைக்கு ராம மூர்த்தி இறந்த அப்போ இரண்டு லட்சம் ராஜசேகர் கைலே கொடுத்து எல்லா சடங்கும் செய்யச் சொன்னான்.இன்னமும் பல மடங்கு சம்பாதிப்பான்.இதெல்லாம் எங்கையோ இருந்து வந்த அந்த ரஞ்சிதாக்கு போக நான் விடுவனா? -கந்தசாமி.

ஆனா அவன் மனசுல அந்த ரஞ்சிதா தானேப்பா இருக்கா-பிரியா

பிரியா உனக்கு நம்ப ராஜீவனைப் பத்தி தெரியாது,ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டா பையன் நம்ம பக்கம் வந்துருவான்- கந்தசாமி

இவ்வளவு நாளா எனக்கு அந்த நம்பிக்கை இருந்துச்சு.ஆனா இப்போ அவன் பையன் இருக்கானே.நீங்க எல்லா அவனைப் பாத்தீங்களானு தெரிலே.அந்த பையனோட அவன் உள்ளே வரும்போது எவ்வளவு சந்தோசமா வந்தான் -பிரியா.

அவ்வளவுதானா விஷயம்.பிரியா நீ ராஜீவன் கிட்ட சித்தார்த் இனிமே நம்ம பையன்.அவனை நான் பார்த்துக்கறேன். அவனோட எதிர்காலம் சிறப்பா இருக்க நான் என்ன வேணாலும் செய்வேன். இப்படி எல்லா பேசி அவனை உன் வழிக்கு கொண்டு வா – கந்தசாமி

என்ன சொல்றீங்க?என் பொண்ணு அந்த குட்டி குரங்கை பார்த்துக்கணுமா? ஒரு நிமிஷம் அடங்கி இருப்பானா அவன்.எழவு வீட்டுல கூட ஒரு நிமிஷம் நிக்காம ஓடிட்டே இருந்தான் – சரோஜா.

சரோஜா உனக்கும் நான் சொல்றது புரியல.அந்த ரஞ்சிதாவோட அண்ணியே கொஞ்சம் தூண்டி விட்டா … அவ இவளை அவங்க தம்பிக்கு கல்யாணம் கட்டி வெச்சிருவா.கொஞ்ச நாள் அந்த ராஜீவனோட பையனை பார்த்துக்கற மாதிரி நடிப்போம். அப்பறோம் ரொம்ப குறும்பு பண்றானு ஹாஸ்டல்ல தள்ளி விட்டுருவோம்.
அதுக்குள்ள பிரியாவுக்கு ஒரு குழந்தை வந்துச்சு ராஜீவன் எல்லாத்தையும் மறந்துட்டு நம்ம ப்ரியாவை மட்டுமே சுத்தி சுத்தி வருவான் – கந்தசாமி

பிரியாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.அந்த இருட்டிலும் அவளுடைய முகம் அம்பிகாவிற்கு பிரகாசமாகத் தெரிந்தது.அதே சமயம் ஒரு அருவருப்பும் உண்டானது.

அதெல்லாம் சரிதான்.உங்க அக்காவ என்ன பண்றது?நாம்ம இவ்வளவு பண்ணுனா உங்க அக்கா அமைதியா இருப்பாங்களா?ஒரு இடத்துல நமக்கு எதிரா திரும்புனா? – சரோஜா.

அடிப்போடி போக்கத்தவளே! இதை கூடவா நான் யோசிக்காம இருப்பேன். எல்லா சொத்தும் நம்ம கைக்கு வரவரைக்கும்தான் அவ நமக்கு தேவை. அதுக்கு அப்பறோம் முதியோர் இல்லமோ இல்ல பைத்தியகார ஹாஸ்பிடல்லோ எதுலையாவது அவளையும் தள்ளி விட்டற வேண்டியதுதான் – கந்தசாமி.

சரி இப்போ அந்த ராஜீவன் எதுக்குமே பிடி கொடுக்கலைனா என்ன பண்றது? -சரோஜா

எல்லாம் நடக்கும்.என்னுடைய கனவு பலிக்கும் – கந்தசாமி

“உன்னோட எந்த கனவும் பலிக்க போறது இல்ல கந்தசாமி” என அம்பிகா கத்த… அதிர்ச்சியில் உறைந்தனர் மூவரும்.

அம்பிகாவின் குரல் அந்த இரவு நேரத்தில் வீட்டையே அதிர வைத்தது.
ஜன்னலுக்கு அருகில் நின்றிருந்த அவரது கண்கள் கோபத்தில் சிவந்திருந்தன.

“அத்தை… நீங்க எப்போ வந்தீங்க?” என பிரியா தடுமாறினாள்.

“நான் எப்போ வந்தா உனக்கென்ன? இவ்வளவு நாளா உன்னை என் பொண்ணு மாதிரிதானே நினைச்சேன்! என் பையனோட வாழ்க்கையைப் பகிர்ந்துக்க போற,சந்தோசமா வாழப் போறேனு நினைச்சனே… ஆனா உன் மனசுல இவ்வளவு வன்மமா இருக்கு?” என அம்பிகா பிரியாவைப் பார்த்துக் கேட்டார்.

“அத்தை, நீங்க நினைக்கிற மாதிரி இல்ல…” என அருகில் வர முயன்றாள்
பிரியா.

“நிறுத்து! இனிமே உன் வார்த்தையை நம்புற அளவுக்கு நான் முட்டாள் இல்லை!” அம்பிகா.

பின் கந்தசாமியை பாரத்து,” உன் மனசுல இவ்வளவு வன்மமா?எனக்கு அந்த பூர்வீக இடம் வேணும்னு கேட்டிருந்தா.சரி தம்பிக்குதானேனு நானும் சந்தோசமா கொடுத்திருப்பேன். ஆனா நீ என்னோட ராஜீவன் வாழ்க்கையே கெடுக்க பாக்கறீயே. உன்ன போய் நம்புனனே.

கந்தசாமியின் முகம் மாறியது.
ஆனால் அடுத்த நொடியே அவன் முகத்தில் இருந்த அதிர்ச்சி மறைந்து, கண்கள் கூர்மையாகின.

“அக்கா… நீ இப்போ கோபத்துல இருக்க. முதல்ல உள்ளே வா. நிதானமா பேசலாம்.”

“எனக்கு உன்னோட எந்தப் பேச்சும் வேண்டாம்!”என அம்பிகா திரும்பி நடக்க ஆரம்பித்தார்.

“அம்பிகா!”கந்தசாமியின் குரல் மாறியிருந்தது.

அம்பிகா அவனைத் திரும்பிப் பார்த்தார்.

“நீ இங்க நடந்ததை வெளியே சொல்லிட்டா… உன் பையனோட வாழ்க்கை மட்டுமில்ல, நீயும் இந்த உலகத்தை விட்டே போய்ருவே.”- கந்தசாமி

அந்த வார்த்தைகள் மிரட்டலாக ஒலித்தன.

அம்பிகாவின் இதயம் ஒரு கணம் நின்று மீண்டும் துடித்தது.

“என்ன மிரட்டுறியா?”- அம்பிகா

“நான் உன்ன மிரட்டலை. நடக்கப் போறதைச் சொல்றேன்.”- கந்தசாமி

உன்னால முடிஞ்சதே பண்ணிக்க. இனியும் ஒரு நிமிஷம் நான் இங்கே இருக்க மாட்டேன் என கிளம்ப ஆரம்பித்தார்.

அடுத்த நொடியே கந்தசாமி பிரியாவையும் சரோஜாவையும் பார்த்தான்.அந்த ஒரு பார்வையே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.
அடுத்த நொடி இருவரும் அம்பிகாவை பிடிக்க ஓடினர்.

அம்பிகா புடவையை ஒரு கையில் தூக்கிக் கொண்டு வேகமாக கேட்டை நோக்கி நடந்தார்.

பிரியாவும் சரோஜாவும் ஓடி வந்து அம்பிகாவை பிடித்தனர்.அவர் இருவரையும் தட்டி விட்டு வெளியே போக முயல கந்தசாமி வந்து கேட்டை அடைத்து விட்டான்.

அம்பிகா பின்பக்க வாசல் வழியாக செல்ல முடிவெடுத்து,வீட்டினுள் செல்ல… கந்தசாமி தன் திட்டம் சரியாக நடப்பதாக நினைத்து வீட்டின் கரண்ட்டை கட் செய்தான்.

அம்பிகாவிற்கு வீட்டின் மின்சாரம் துண்டிக்கப்பட்டதும் திக் என்றானது.
கந்தசாமி எந்தளவு மோசமானவன் என தற்போது நன்றாகவே தெரிந்தது.இந்த இக்கட்டான நிலையில் ராமமூர்த்தியை நினைத்து வேதனைப்பட்டார்.நல்ல வேலையாக மகனின் வாழ்க்கையை காப்பாற்றி விட்டார் என எண்ணிக் கொண்டார்.

என்ன ஆனாலும் சரி இந்த இடத்தை விட்டு எப்படியாவது வெளியேற வேண்டும்.மகனிற்கு இவர்களின் உண்மை முகத்தை தெரியப்படுத்த வேண்டும் என எண்ணிக் கொண்டார்.

—கவிதை எழுதும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!