“என்ன பிளான் A வா???!!” என்று அனைவரும் அதிர்ச்சி அடைய,
Advertisement
” இப்போ எதுக்கு எல்லாரும் இப்படி ஷாக் ஆகுறிங்க?? நம்ம ஆல்ரெடி இந்த பிளானை போட்டோம் தான?? இப்போ அதை கொஞ்சம் விரிவு படுத்தி A2 அஹ் போட போறோம்” என்று மதுரம் அவர்களை அடக்கினார்.
“அட வாயை மூடுடி.. ஒரு விஷயத்தை ஆரம்பிக்கும் போதே இப்படி நெகட்டிவா பேசாத.. பாசிட்டிவிட்டி தான் எல்லாமே.. முடியலைன்ற வார்த்தையே இந்த மதுரத்தோட அகராதியில் இல்லை” என்று அவர்களை ஊக்கப்படுத்தினார் மதுரம்.
Advertisement
” ஏன் பாட்டி உங்க டிக்ஷனரியை எலி கடிச்சு பாதி பக்கம் காணாம போய்டுச்சா??” என்று ஜீவா பாட்டியை வார, அவனின் அறிவிற்கு பரிசாய் சொம்பு ஒரு காற்றில் பறந்து வந்து அவன் நெற்றியை முத்தமிட்டுச் சென்றது.
” இந்த மதுரம் பேசுறப்போ இடையில யாரும் இப்படி கேனைத்தனமா பேசக் கூடாது.. முதல்ல நான் சொல்றதை கேளுங்க” என்று தன் திட்டத்தை அவர் விளக்கத் துவங்கினார்.
” நம்ம திட்டப்படி பிளான் Aல என்ன பண்ண நினைச்சோம்” என்று அவர் அனைவரிடமும் கேட்க,
“ஹம்ம்.. வேறென்ன நீ பெத்த ரெண்டு எருமை மாடுங்களையும் ஒன்னா சேர்த்தா.. இப்படி டெய்லி ஏணி போட்டு ஏறி வந்து என் இடுப்பு உடையாம காப்பாத்திக்கிறது தான் பிளான் A” என்று வாசுதேவ கிருஷ்ணன் பதிலளித்தார்.
” கரெக்ட்.. இப்போ நம்ம இவங்க ரெண்டு பேரோட சேர்த்து இவனுங்களோட அந்த ரெண்டு மீசைக்கார மாமனாருங்களையும் சேர்க்கணும் அதான் பிளான் A2″ என்று மதுரம் விளக்க,
அவரை மொத்த குடும்பமும் வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்து வைத்தனர்.
” ஏன் பாட்டி இங்க இவங்க ரெண்டு பேரை ஒன்னா சேர்க்குறதுக்குள்ளையே நம்ம டங்குவாரு அந்துறும்.. இதுல அந்த இத்துப்போன நாரையெல்லாம் சேர்த்து வைக்கிறது சாத்தியமா??” என்று வினோத் கேட்க,
“சேர்த்து வச்சுத்தான் ஆகணும்.. அப்போ தான் என் பேரனுங்க அவங்களோட ஆளுங்க கூட சேர முடியும்.. அவங்க இவனுங்களை வேணாம்னு சொல்றதுக்கு முக்கிய காரணமே, ‘ அவன் பார்த்த மாப்பிள்ளையை என் பொண்ணுக்கு கட்டவா ‘ அப்படின்ற ஈகோ தான்.. அதை சரி செய்யனும்னா அவங்க ரெண்டு பேரும் ஒன்னா சேரணும்” என்று மதுரம் விளக்கிக் கூற,
அனைவருக்கும் அவர் கூறுவது தான் சரி என்று தேன்றினாலும், அதை நடத்திக் காட்டுவது சுலபமான காரியம் அல்ல என்று புரிந்தது.
” அங்க இருக்கவங்களை இங்க இருந்துட்டே எப்படி சேர்த்து வைப்பிங்க பாட்டி.. ஏதும் மந்திரம் தந்திரம் வச்சிருக்கீங்களா?” என்று ஜீவா கேட்க,
” உன்னையெல்லாம் எவன்டா போலீஸ்ல எடுத்தான்.. போலீஸ் தொப்பியை கழட்டும் போது மூளையும் சேர்த்து கழட்டி வச்சிடுவியா?? அவங்களை நாம சேர்க்கணும்னா முதல்ல அஸ்வத்தும் அஞ்சலியும் சேரணும்.. அந்த பொண்ணு தான் நம்மளோட துறுப்புச் சீட்டு” என்று பாட்டி விளக்கமளிக்க,
அப்போது அஜய்யோ, ” அவங்களை சேர்க்குறது இருக்கட்டும்.. முதல்ல அந்த அவதார் குட்டியை என் கூட சேர்த்து வைக்க ஐடியா குடு பாட்டி” என்று கீதாவை எப்படி தன் பக்கம் இழுப்பது என தன் பாட்டியிடமே ஆலோசனை கேட்டான்.
“அட படவா!! பாட்டிகிட்ட கேட்கிற கேள்வியா இது?? சரி விடு அவளாம் ஒரு மேட்டரே இல்லை நமக்கு.. தட்டி தூக்கிரலாம்.. பாட்டி இருக்கேன்.. கவலைப்படாத..அவளை உன்னை காதலிக்க வைக்க வேண்டியது இந்த பாட்டியோட பொறுப்பு” என்று அவனிற்கு வாக்கு கொடுத்த மதுரம் பின் அனைவரையும் பார்த்து,
“சரி சரி நேரமாச்சு.. எல்லாரும் போய் படுங்க..நாளைக்கு காலையில இருந்து நம்ம பிளானை எக்சிகியூட்(Execute) பண்ண போறோம்.. நீங்க என்ன பண்ணனும்னு வாட்ஸ்அப் பண்ணுறேன்.. பீ ரெடி கைய்ஸ்.. வீ வில் ராக் இட்” என்று அனைவரையும் உற்சாகப் படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்த மதுரம் பின் சற்று நேரம் தன் கணவருடன் உரையாடிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
“ஏட்டி இப்போ என்னத்துக்கு சாப்பிடாம விட்டத்தை வெரிச்சுகிட்டு கெடக்கவ.. இப்போ என்ன கல்யாணமா நின்னு போச்சு.. பொண்ணு தான பார்க்க வந்தாக.. விடு உனக்குன்னு ஒருத்தன் இனிமேலா பிறக்க போறான்.. எப்போவோ பிறந்திருப்பான்.. வா வந்து ரெண்டு வாய் தின்னுபுட்டு போத்தா” என்று காமாட்சி தன் மகளை உணவருந்த அழைக்க,
அஞ்சலியோ கடுப்புடன் அவரை நோக்கி, ” எனக்குன்னு பொறந்தவனை தான் நீங்க துரத்தி அனுப்பிட்டீங்களே..அப்பறம் என்ன பேச்சு..இப்போ சாப்பாடு ஒன்னு தான் கேடு..” என்று தந்தையின் மீதுள்ள கோபத்தை தாயிடம் காட்டினாள்.
“அடியாத்தி.. அடி பாவிமகளே.. இப்படி ஏதும் உன்ற அப்பன் காதுல விழுகிற மாதிரி பேசி வச்சுப்புடாத.. அப்பறம் அந்தாளு உன்னை விட்ருவாரு.. என்னை கொன்னே போட்டுடுவாரு.. தயவு செஞ்சு கண்டதையும் மனசுல போட்டு குழப்பிக்காத … உங்க அப்பாவை மீறி இங்க ஒன்னும் நடக்காதுத்தா.. புரிஞ்சு அடுத்த சோலியைப் பாரு ” என்று அவளிற்கு நிதர்சனத்தை எடுத்துரைத்தார் காமாட்சி.
அவரை இயலாமையுடன் நோக்கிய அஞ்சலி, “என்னால முடியலை மா.. ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு.. நான் இது வரைக்கும் பசங்களே பார்க்காம வளர்ந்த பொண்ணு இல்லை.. பசங்க கூட படிச்சிருக்கேன்.. ஃப்ரெண்டா பழகியிருக்கேன்.. ஆனா இன்னைக்கு வந்தவர்கிட்ட தோணுன மாதிரி வேற யார்கிட்டயும் தோணலை.. அவரை நீங்களா தான கூட்டிட்டு வந்தீங்க?? நீங்க தான் அவர்தான் மாப்பிள்ளைன்னு சொல்லி என் மனசுல ஆசையை விதைச்சீங்க.. இப்ப வந்து அவர் வேண்டாம் மறந்துருனு சொன்னா நான் என்ன பண்ண?? ” என்று அவள் கேள்வி கேட்க,
அவளை அணைத்து தலையை வருடிக் கொடுத்த காமாட்சி, ” நீ சொல்றதெல்லாம் சரிதேன் கண்ணு.. ஆனா உன்ற அப்பாவை மீறி நான் என்னடா செய்ய முடியும்.. உன்ற அப்பனுக்கும் சித்தப்பனுக்கும் நடக்குற சண்டை என்ன இன்னைக்கு நேத்து நடக்குற சண்டையா?? இத்தனை வருஷ பகை அவரை மாற விடாது கண்ணு.. அவர் பார்த்த மாப்பிள்ளையை ஒரு போதும் இவர் ஒத்துக்க மாட்டாரு.. அதுனால அவரை மறக்குரது தான் உனக்கு நல்லது” என்று மகளை சமாதானப்படுத்தியவர் சந்தன பாண்டியன் அழைக்கவும் அவரைக் காண சென்று விட்டார்.
காமாட்சி கூறிய அனைத்தையும் அவள் மனம் அறிந்தே இருந்தாலும், அவளால் அதை ஏற்க முடியாமல் அஸ்வத்தின் மேல் தோன்றிய பிடித்தம் அவளை தடுத்தது.
இடையில் காமட்சியும் அபியும் அவளை சாப்பிட அழைத்துப் பார்த்து ஓய்ந்து போய் கடைசியில் தங்கள் வேலையை கவனிக்க சென்றுவிட்டனர்.
அவளின் மனம் ஒரு நிலை இல்லாமல் தவிக்க, நேரம் போனதே தெரியாமல் அவள் சிந்தனையில் மூழ்கியிருந்த சமயம் அவளின் செல்பேசி சிணுங்கி அஞ்சலியின் கவனத்தைக் கலைத்தது.
ஏதோ புது எண்ணில் இருந்து ” ஹாய்” என்று வாட்ஸ்அப் மெசேஜ் வந்திருக்க, யாரது என்று குழப்பத்துடன் அந்த மெசேஜ் வந்திருந்த எண்ணின் டிபியை(DP) பார்த்தவளுக்கு அஸ்வத்தின் புகைப்படத்தைக் கண்டதும் மனதில் பூமழைச் சாரல் வீசியது.
அவனின் மேசேஜைக் கண்டு அல்லியவளின் முகம் தாமரையாய் மலர, அடுத்த நிமிடமே தன் தந்தையை எண்ணி காய்ந்து போன சருகாய் வாடிவிட்டது.
” அய்யோ இவங்க எதுக்கு மெசேஜ் பண்ணிருக்காங்க.. அப்பாக்கு தெரிஞ்சா கொன்னுடுவாரே.. இப்போ என்ன பண்றது” என்று அவள் அவனிடம் பேசத் தயங்க,
அவனுடன் பேசலாமா வேண்டாமா என்று பிடித்தத்திற்கும் தயக்கத்திற்கும் இடையில் அவள் போராட, இறுதியில் அவன் மேலுள்ள பிடித்தமே வென்றது.
” ஹாய் ” என்று பதிலுக்கு அவளும் அவனுக்கு அனுப்பிவிட,
அடுத்த நொடியே அவன் பார்த்து விட்டதற்கு அடையாளமாக புளூ டிக் விழுந்தது.
உடனே , ” இன்னும் தூங்கலையா??” என்று ஆச்சிரியபடுகிற ஸ்மைலியுடன் அவன் அனுப்ப,
அப்போது தான் மணியைப் பார்த்த அஞ்சலி அதிர்ந்து விட்டாள்.
” அடக்கடவுளே ஒரு மணி ஆனது கூடவா தெரியாம இருந்தேன்.. இப்போ அவர் என்னைப்பத்தி என்ன நினைப்பார்?” என்று தன்னையே நொந்து கொண்ட அஞ்சலி,
“தூக்கம் வரலை” என்று பதில் அனுப்பி வைத்தாள்.
” அப்போ பேசலாமா??” என்று அடுத்த நொடியே வந்து விழுந்த மெசேஜைக் கண்டு பெண்ணவளின் இதயம் தாறுமாறாய் துடித்தது.
“இப்போவா??” என்று அவள் தயங்கி தன்னருகில் உறங்கிக் கொண்டிருந்த அபியை யோசனையாக பார்க்க,
” உங்களுக்கு பிடிக்கலைனா வேண்டாம்” என்று அஸ்வத் சோகமாக பதிலனுப்ப,
அவனின் சோகத்தை மெசேஜ் மூலமே உணர்ந்துகொண்ட அஞ்சலிக்கும் அவனுடன் பேச வேண்டும் என்று உள்ளம் தவிக்க, அடுத்த நொடியே யோசிக்காமல் அவனிற்கு அழைத்து விட்டாள்.
மறுமுனையில் அஸ்வத்தும் உடனே அழைப்பை ஏற்று விட, இருவருக்கும் ஒரு நொடி என்ன பேசுவது என்றே புரியவில்லை.
ஆனால் அஸ்வத் அவளுடன் பேசி அவள் மனதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் தன் மனதில் உருப்போட்டு வைத்ததை கட கடவென கொட்டி விட்டான்.
” ஹாய் அஞ்சலி.. எனக்குத் தெரியும் இந்த நேரத்துல ஒரு பொண்ணு கிட்ட இப்படி மெசேஜ் பண்றது, போன் பண்றதுலாம் ரொம்ப தப்புன்னு.. பட் எனக்கு வேற வழியில்லை.. எனக்கு பொதுவா இந்த அரேன்ஜ்ட் மேரேஜ் மேல நம்பிக்கை இல்லை.. அப்பா சொன்னாருன்னு தான் உங்களை பார்க்க வந்தேன்.. உங்களை பார்க்கிறதுக்கு முன்னாடி வரைக்கும் கூட எனக்கு இதுல பெரிசா எந்த ஈடுபாடும் இல்லை.. ஆனா உங்களை பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு.. இது சில்லியா இருக்கும்.. பட் இதான் உண்மை.. நீங்க இல்லாம லைஃப் இல்லை அப்படின்னு சொல்ல மாட்டேன்.. பட் நீங்க கூட இருந்தா லைஃப் ரொம்ப அழகாயிருக்கும்னு நினைக்கிறேன்.. என் வாழ்க்கையை அழகாக்க உங்களுக்கு சம்மதமா???” என்று அவன் தன் மனதில் உள்ளதை கொட்டிவிட்டு அவள் பதிலுக்காக படபடப்புடன் காத்திருக்க,
அந்தப்பக்கம் அஞ்சலியோ அவனின் கூற்றில் முகம் முழுக்க புன்னகையுடன் அமர்ந்திருந்தாள்.
தன்னைப்போல் தான் அவனும் தன்னை விரும்புகிறான் என்று உணர்ந்து கொண்டவளுக்கு உற்சாகம் ஊற்றெடுக்க, என்ன பேசவென தெரியாமல் அவள் சந்தோஷத்தில் மிதந்தாள்.
அவளின் மௌனம் அஸ்வத்திற்கு பீதியைக் கிளப்ப, “அஞ்சலி.. லைன்ல இருக்கீங்களா?? கோச்சுக்கிட்டிங்களா?? உங்களுக்கு பிடிக்கலையா?? பேசுங்க அஞ்சலி ஏதாவது… சாரி உங்களை ஏதும் ஹர்ட் பண்ணிருந்தா” என்று அவன் அஞ்சலியின் பதிலுக்காக காத்திருக்க,
“அவ கனவுலயே உங்க கூட டூயட் பாடிக்கட்டு இருக்கா மாமா.. இப்போதைக்கு பேச மாட்டா” என்று அபிநயா தான் அவனிற்கு பதிலளித்தாள்.
அப்போது தான் கனவில் இருந்து விழிப்பதைப் போல் முழித்த அஞ்சலி அங்கு தன் போனை வைத்து பேசிக்கொண்டிருந்த அபியைக் கண்டு திகைத்தாள்.
” நீ அப்போ தூங்கலையா??” என்று அஞ்சலி அதிர்ச்சியுடன் கேட்க,
“நீ ஹலோ சொல்றதுக்கு முன்னாடியே முழிச்சுட்டேன்.. இப்படி நீ இவளோ ஸ்லோவா இருந்தா பாவம் மாமா.. போ போய் அவர்கிட்ட பேசிட்டு வா முதல்ல” என்று அவளின் கைகளில் போனைத் திணித்துவிட்டு அறையை விட்டு வெளியேறிவிட்டாள் அபிநயா.
” அஞ்சலி!!!” என்று பெயருக்கு வலித்து விடும் போல் மென்மையாக அஸ்வத் அழைக்க,
அஞ்சலிக்கு தான் அவனிடம் பேச கூச்சம் வந்து தடுத்தது.
“ம்ம்ம்ம்” என்று மட்டும் அவள் சொல்ல,
” அபி சொன்னது எல்லாம் உண்மையா?? உனக்கு நெஜமாவே என்னை பிடிச்சிருக்கா?? என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா??” என்று அவன் கேட்க,
அப்போது தான் அஞ்சலிக்கு தன் தந்தையின் நினைப்பே வர, தூக்கி வாரி போட்டது.
“எனக்கு பிடிக்கிறது இருக்கட்டும்.. எங்கப்பா இந்த கல்யாணத்துக்கு எப்போவும் ஒத்துக்க மாட்டாரு” என்று அழுதுவிடும் குரலில் அவள் சொல்ல,
” அதெல்லாம் சமாளிச்சுக்கலாம்.. உனக்கு என்னை பிடிச்சிருக்கா இல்லையா?? சே எஸ் ஆர் நோ” என்று அவள் மனதை அறிந்தாலும் அதை அவளின் வாய்வார்த்தையாக கேட்க அஸ்வத் காத்திருக்க,
அஞ்சலியும் தயங்கிக் கொண்டே , ” பிடிச்சிருக்கு” என்று தன் மனதை உரைத்தாள்.
அதைக் கேட்டு அஷ்வத்தின் மனம் குத்தாட்டம் போட்டாலும் பாட்டி சொல்லியது நினைவில் வர, தன் சந்தோஷத்தை சற்று நேரம் ஒத்தி வைத்து விட்டு அவளிடம் தீவிரமான குரலில், ” உங்க அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் என்ன சண்டை?? எல்லாத்தையும் தெளிவா சொல்லுங்க.. ” என்று அவளிடம் அனைத்து விஷயங்களையும் கறந்து விட்டான்.
” சோ உங்க சித்தப்பா லவ் பண்ணினது தான் உங்கப்பாவுக்கு பிரச்சனை அப்படித்தான??” என்று அவன் கேட்க,
” ம்ம்.. ஆமா.. ஆனா அவர் லவ் பண்ணதை விட அவர் கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டது தான் அவருக்கு ரொம்ப கோபம்.. மத்தபடி சித்தப்பா மேல ரொம்ப பாசமா இருந்ததா அம்மா சொல்லுவாங்க.. ரொம்ப பிடிச்சிவங்க நம்மளை ஏமாத்திட்டா ஒரு கோபம் வருமே .. அதான் அப்பாவுக்கு.. அவர் பாசத்தையும் சரி கோபத்தையும் சரி, அளவுக்கு அதிகமா தான் காட்டுவாரு” என்று தன் தந்தையைப் பற்றி அவள் கூற,
அதை உள்வாங்கிக் கொண்ட அஸ்வத், ” சோ உங்க அப்பாவுக்கு வெறுப்பெல்லாம் இல்லை.. ஏமாற்றத்தினால் வந்த கோபம் தான்.. அப்போ அவர் மேல நிச்சயம் பாசம் இன்னும் இருக்கும்.. அவர் மேல பாசம் இருக்கா இல்லையான்னு டெஸ்ட் பண்ணி பாத்துடலாம்” என்று அவன் கூற,
” எப்படி ??” என்று அவள் பதில் கேள்வி கேட்டாள்.
” உன்னோட சிஸ்டர் கீதா அந்த பொண்ணு கூட பேசுவிங்களா நீங்க??” என்று அவன் பதில் சொல்லாமல் அடுத்த கேள்வி கேட்க,
” அப்பாங்க ரெண்டு பேர் மட்டும் தான் பேசிக்க மாட்டாங்க.. மத்தபடி நாங்க எல்லாரும் நல்லா பேசிப்போம் அப்பாக்கு தெரியாம” என்று அவள் சிரிப்புடன் கூற,
” இங்க மாதிரி தான் அங்கயுமா??” என்று நினைத்து சிரித்துக் கொண்டவன்,
” சரி அப்போ நாளைக்கு நீங்க என்ன பண்ணனும்னு சொல்றேன்.. நம்ம பிளான்லாம் நடக்கணும்னா அதுக்கு உங்க சிஸ்டர் கீதாவோட ஹெல்ப்பும் வேண்டும்.. சோ அவங்களையும் நம்ம டீம்ல சேர்த்துக்கோங்க.. நீங்க என்ன பண்ணனும்னு நாளைக்கு நான் சொல்லுறேன்.. இப்போ ஆல்ரெடி லேட் ஆச்சு.. போய் தூங்குங்க.. குட் நைட்” என்று அவன் கூறிவிட்டு அழைப்பை துண்டிக்கப் போக,
” அவ்ளோதானா??” என்று அவளின் குரல் அவனை நிறுத்தியது.
“வேறென்ன??!!” என்று அவன் புரியாமல் கேட்க,
அதைக்கேட்டு கடுப்பான அஞ்சலி, ” நத்திங்.. போய் நல்லா தூங்குங்க” என்று எரிச்சலுடன் மொழிந்தாள்.
“ஹாஹா.. சரி காலையில பேசலாம் .. பை” என்று சொல்லிவிட்டு அவன் அழைப்பை துண்டித்து விட,
அவள் போனையே முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
” சரியான டியூப்லைட்” என்று தன்னவனை அவள் அர்ச்சனை செய்து கொண்டிருந்த நேரம்,
” கனவுக் காட்டில் கண்மூடி இத்தனை காலமாய் அலைந்தேன்
கண்மணி உன்னைக் கண்டெடுக்க,
தேடலின் முடிவாய் கையில் கிடைத்த உன்னுள்
முற்றுப்புள்ளியாய் முடிந்திடவே துடிக்கிறேன்!!
என்னை சுருட்டி மடக்கி உன் முந்தானையில் முடிந்து கொள்வாயா முழுநிலவே?? “
என்று அஸ்வத் அவளிற்கு குறுஞ்செய்தி அனுப்பி அவளுள் குறுகுறுப்பை உண்டாக்கினான்.
காதல் வந்தால் இரவும் பகலாகும் அந்த பகலும் அழகாகும் என்பது போல் புதிதாய் காதலில் இணைந்த இரு உள்ளங்களும் உறங்காமல் தங்கள் இணையை நினைத்து கனவுலகில் மிதந்து கொண்டிருக்க,
இவர்களோடு சேர்த்து இன்னொரு ஜீவனும் உறங்காமல் தன் உற்றவளை நினைத்து உள்ளம் தவிக்க விழித்துக் கொண்டிருந்தான்.