அஜய்யின் கார் ஸ்மிருதியின் வீட்டு வாசலில் முன்பு வந்து நின்ற கணமே, வீட்டினுள்லிருந்து ஈஸ்வரன், சகுந்தலா, ஹேமா, அம்ரிஷ் உட்பட பாட்டியும் கூடவே வாயில் வரை வந்து விட்டனர்,…
Advertisement
தன் மகளை கண்ட சகுந்தலா,.. “ஸ்மிருதி எப்படி டா இருக்க” என்று கேட்டு மகளை தழுவிக்கொண்டார், ஏனோ ஸ்மிருதிக்கு அப்பொழுது அழுகை வர, அவளும் தன் அம்மாவை அணைத்து கொண்டு கண்ணீர் சிந்தினாள்,…
“புள்ள முதல் முதலா கல்யானம் முடிஞ்சி போனதுக்கு பிறகு, வீட்டுக்கு வருது, அத போயி அழ வச்சிகிட்டு இருக்கியே” தன் மனைவியிடம் மெல்ல கடிந்து கொண்ட ஈஸ்வரன்,..”நல்லா இருக்கியாமா” என்றார் மகளிடம்…
Advertisement
Advertisement
“ம்ம்ம்… இப்படி வாசல்லையே மாப்பிள்ளையையும் நிற்க வச்சி பேசிக்கிட்டு இருங்க, அக்கம் பக்கத்து வீட்ல உள்ளவளுங்க காரி துப்புவாளுங்க” என வாயில் வெற்றிலையை மென்றவாறு சொன்ன கனகவள்ளி பாட்டி, அஜய்யின் அருகில் வந்தவாறு,.. “எப்படி பா இருக்க, நல்லா இருக்கியா,” என பாசமாக கேட்க,.. “நல்லா இருக்கேன் பாட்டி, நீங்க எப்படி இருக்கீங்க” என அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றவாறு விசாரித்தான் அஜய்,…
“நல்லா இருப்பா” அவனை ஆசீர்வதித்தவர்,.. “எனக்கென்னப்பா அமோகமா இருக்கேன், என் பேத்தி உன்னை எப்படி பார்த்துக்கிறா நல்லபடியா பார்த்துகிறாளா?” ஆர்வத்தோடு கேட்டவரிடம் “ஆமா பாட்டி” என்பதோடு முடித்து கொண்டான் அஜய்,..
Advertisement
ஸ்மிருதி அதனை கண்டும் காணாதது போலும் இருந்து கொண்டாள்,…
“வாங்க மாப்பிளை, உள்ளே வாங்க” என ஈஸ்வரன் அழைக்க, “இருங்க இருங்க,” என்றவாறு வேகமாக உள்ளே நுழைந்து கையில் ஆரத்தி தட்டுடன் வந்தார் சகுந்தலா….
“இப்போ இது எதுக்குமா” ஸ்மிருதி எரிச்சலுடன் கேட்க, “வாய மூடுடி, என்ன பண்ணணுன்னு எங்களுக்கு தெரியும்” தன் பேத்தியின் வாயை மூட வைத்தார் கனகவள்ளி பாட்டி,…
ஆரத்தி சுற்றி முடித்ததும், ஸ்மிருதி வேகமாக வீட்டினுள் சென்றுவிட, “இவளுக்கு அப்படி என்ன அவசரமாம்” என ஸ்மிருதியின் செய்கையை கண்டு மீண்டும் வசைபாடினார் பாட்டி…
“விடுங்கத்த பயண களைப்பா இருக்கும்” மாமியாரிடம் சொன்ன சகுந்தலா “உள்ளே வாங்க மாப்பிள்ளை” அஜய்யை அழைக்க, அவனும் சிறுதலையசைப்புடன் உள்ளே நடந்தான்,…
“எப்படி இருக்கீங்க அண்ணா” என்றவாறு உள்ளே நுழைந்த அஜய்யிடம் கேட்டாள் ஹேமா,..
“இங்கே தான் இருந்தான் இவ்வளவு நேரமா, இப்போ எங்க போனானு தெரியலயே” பார்வையால் தன் மகனை தேடி கொண்டிருந்தவளிடம், “விஷ்ணு வந்துட்டானா?” என்றான் அஜய்,..
“ஆமா அண்ணா வந்துட்டாரு, பத்து நிமிஷத்துக்கு முன்னாடி தான் வந்தாரு, வந்ததும் வராததுமா கோபத்துல அவரோட போனையே தூக்கி போட்டு உடச்சிட்டாரு, விஷயத்தை பற்றியும் சொன்னாரு” என்றாள் முகம் வாட…
“சரி நீ அவன்கூட போய் இரு, நான் அம்ரிஷை பார்த்துகிறேன்” என அஜய் சொல்ல,… “அண்ணா நான் சொல்றேன்னு” என ஏதோ சொல்ல வந்த ஹேமாவிடம்,.. “வேண்டாம் மா, நீ எதுவும் சொல்ல வேண்டாம், நீ விஷ்ணு கூட இரு” என சொல்லி விட்டு அவளை விட்டு நகர்ந்து விட்டான் அஜய்,…
“மாப்பிள்ள வாங்க இப்படி வந்து உட்காருங்க” என ஈஸ்வரன் சோபாவை காட்ட, மெல்லிய புன்னகையுடன் வந்தமர்ந்தவன்,.. வீட்டை சுற்றி நோட்டமிட்டபடி “அம்ரிஷ் எங்கே அங்கிள்” என்றான் தன் மாமனாரிடம்,…
“அந்த சுட்டி பையனை கண்டுபிடிக்கிறது ரொம்ப சிரமம்ப்பா” என்று ஈஸ்வரன் நகைத்து கொண்டிருந்த நேரம், “இந்த சர்பத்தை எடுத்துக்கோங்க மாப்பிள்ள, வெயிலுக்கு இதமா இருக்கும்” என்றவாறு அஜய்யிடம் சர்பத் நிறைந்த டம்ளரை நீட்டினார் சகுந்தலா,… மறுக்காமல் அதனை வாங்கி கொண்டான் அஜய்…
“யாரு இந்த அம்ரிஷ் பையனை கேட்கிறீங்களா, அவன் அவனோட அத்தை பின்னாடியே அவ ரூம்க்கு போயிருக்கான்” என சொல்லிவிட்டு அவ்விடத்தை காலி செய்தார் சகுந்தலா…
“வண்டி ஓட்டுனதுல உங்களுக்கும் அசதியாக தான் இருக்கும், நீங்களும் போய் கொஞ்ச நேரம் கண்ணசந்துட்டு வாங்களேன்” ஈஸ்வரன் அக்கறையாக சொல்ல,.. “இல்ல பரவால்ல இருக்கட்டும் அங்கிள்,” என்றவாறு சர்பத்தை பருகினான் அஜய்,….
“இன்னும் என்னடா அங்கிள்னு கூப்டுட்டு உரிமையா மாமானு கூப்பிட வேண்டிய தானே” என்றவாறு அஜய்யை நோக்கி வந்து கொண்டிருந்தான் விஷ்ணு,…
“அதானே… நானும் கேட்கணும்னு தான் நெனச்சேன் நீயே கேட்டுட்டடா விஷ்ணு” என்றவாறு பாட்டியும் அவ்விடம் வந்து சேர்ந்தார்,…
ஒற்றை சோபாவில் வந்து அமர்ந்த விஷ்ணு, பார்வையால் ஸ்மிருதியை தேடியவாறு,.. “இந்த ஸ்மிருதி எங்கே போயிட்டா” என்றான் எரிச்சலான பார்வையோடு…
“அசதியா இருக்குனு ரூம்ல இருக்காப்பா” என சமையலறையிலிருந்து குரல் கொடுத்தார் சகுந்தலா….
“வண்டி ஓட்டிட்டு வந்தவன் இவன், அவளுக்கு டையர்டா இருக்காமா” தங்கையை அர்சித்தவன்,.. “சரி டா அப்போ நீயும் போய் ரெஸ்ட் எடுத்துக்கோ” என்றான் நண்பனிடம்…
“இல்லடா கொஞ்ச நேரம் உங்க கூட உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கேனே” அஜய் சொல்ல, “இன்னும் எப்படியும் சில நாட்கள் இங்க தான் இருக்க போற, ஆர அமர பொறுமையா பேசிக்கலாம், இப்போ நீ போ” என்றான் விஷ்ணு சிறு அதட்டலுடன்…
‘இவன் கேட்க மாட்டான்’ என்பதை அறிந்தவன்.. “சரி டா” என்று சொல்லிவிட்டு, ஸ்மிருதியின் அறை நோக்கி செல்ல போகையில், “மாமா” என்ற கூவலோடு அஜய்யின் அருகில் ஓடிவந்தான் அம்ரிஷ்,.. அம்ரிஷை கண்ட அஜய்யின் முகம் சந்தோசத்தில் மலர, அவனை தன் கைகளில் தூக்கி கொண்டான்,…
அஜய் அவன் பேச்சை கண்டு புன்னகைக்க,.. அம்ரிஷோ… “சரி மாமா, நான் சொன்ன அந்த டைனோசர் பொம்மை வாங்கிட்டு வந்தீங்களா” என ஆசையோடு கேட்க “நீ கேட்டு வாங்காம வருவேனா,” என அஜய் சொன்னதும், முகம் மலர்ந்த அம்ரிஷ்,.. “ஹை,… எங்க வச்சிருக்கீங்க, கொடுங்க மாமா என்கிட்ட கொடுங்க” என அவசரப்படுத்தினான் அம்ரிஷ்,…
“மாமாவோட பேக்ல தான் இருக்கு, வண்டில தான் பேக் இருக்கு, வா நாம எடுத்துட்டு வரலாம்” வாசலை நோக்கி நடக்க இருந்த நேரம்… “மாப்பிள்ள உங்க பையையும், ஸ்மிருதி பையையும் அறையில வச்சாச்சி, நீங்க சின்ன பையனுக்கு பொம்மையை எடுத்து கொடுத்துட்டு, அப்படியே அறைல கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கிருங்க” என்றார் ஈஸ்வரன்…
யோசனையுடன் நின்ற அஜய்யிடம்,.. “என்னடா, அதான் சொல்றாருல போ” என விஷ்ணு சொல்ல, ஒரு நீண்ட நெடிய மூச்சை விட்டுக் கொண்டு அம்ரிஷுடன் ஸ்மிருதியின் அறை நோக்கி நடந்தான் அஜய்,…
ஸ்மிருதி அறையின் கதவு வரைக்கும் வந்தவன், உள்ளே போக மனதில்லாமல் தயக்கத்துடன் நின்றான், “அத்த என்னை ரூமை விட்டு விரட்டி விட்டுடுச்சு தெரியுமா, கதவை உடைங்க மாமா” என்ற அம்ரிஷ் சொல்லியதில் தன்னை மறந்து சிரித்தவன், “அப்படியெல்லாம் சொல்ல கூடாது டா கண்ணா” என்று அவன் சொல்லி கொண்டிருந்த நேரம், தன் பலம் கொண்டு கதவை அடித்து தட்டி இருந்தான் அம்ரிஷ்,…
இதனை சற்றும் எதிர்பார்க்காத அஜய்,… “அம்ரிஷ் ஏன்டா இப்படி பண்ண” என கேட்டு கொண்டிருந்த அதே சமயம் ஸ்மிருதியும் கதவை திறந்திருந்தாள்,…
“யார் கதவை அவ்வளவு சத்தமா தட்டுனது” என ஸ்மிருதி கோபமான பார்வையுடன் கேட்க,.. “மாமா தான் அத்தை” என்றவாறு அஜய்யை மாட்டி விட்டான் அம்ரிஷ்,… இந்த முறை ஸ்மிருதியின் கோப பார்வை முழுக்க அஜய்யின் மீது திரும்பியது,…
“இப்போ என்ன வேணும் உங்களுக்கு” முக இறுக்கத்துடன் அவள் வினவ… “அத்த நீ முதல்ல தள்ளு,” என ஸ்மிருதியை அறைக்குள் தள்ளிவிட்ட அம்ரிஷ்,.. “வாங்க மாமா” என்றவாறு அஜய்யின் கரம் பிடித்து அறையினுள் அழைத்து சென்றான், இதனால் மேலும் கொதித்து போன ஸ்மிருதி,.. “ஏய் அம்ரி என்னை ஏண்டா தள்ளி விட்ட” என அந்த சிறுவனிடம் சண்டைக்கு வர, “பின்ன என்ன ரூம் உள்ள வர விடாம வழி மறைச்சி நின்னா தள்ளி தான் விடுவேன்” என தன் அத்தைக்கு பதிலடி கொடுத்தான் அந்த பொடியன்…
“உன்னை” என்றவாறு அடிக்க கைஓங்க வந்த ஸ்மிருதியை கண்டு பயந்த அம்ரிஷ்,… “மாமா, அத்தை என்ன அடிக்க வருது, அத்தையை திட்டுங்க மாமா” என்றான் அவன் கைவளைவில் வந்து நின்று கொண்டு… அஜய் தான் இவர்கள் இருவரிடமும் மாட்டி கொண்டு பேச கூட முடியாமல் திண்டாடினான்,..
“அம்ரிஷ்… கண்ணா இப்படியெல்லாம் பேச கூடாது, வா உனக்கு நான் டாய் எடுத்து தரேன்” என தன் பையினுலிருந்து அம்ரிஷ்க்கு பிடித்தமான டைனோசர் பொம்மையை எடுத்து கொடுத்தான் அஜய்,… அதனை கண்ட அம்ரிஷின் கண்கள் விரிய,.
“சூப்பரா இருக்கு மாமா” என்றவாறு அஜய்யின் கன்னத்தில் இதழ் பதித்தான்,….
“நான் அம்மாகிட்ட காமிச்சிட்டு வரேன்” என்றவாறு அவன் வேகமாக ஓடிட அவனின் சந்தோசத்தை கண்டு பூரித்து நின்ற அஜய்யை எரிச்சலுடன் பார்த்தவள்,.., “வேலை முடிஞ்சதுன்னா என்னோட ரூமை விட்டு வெளியேறுங்க” என்றாள்
தான் இப்போது அறையிலிருந்து வெளியே போனால் விஷ்ணு அவன் தங்கையின் மீது தான் கோபம் கொள்வான் என்பதை அறிந்த அஜய்,… “விஷ்ணு,… இந்த ரூம்ல தான் இருக்க சொன்னான்” என்று மெல்ல கூற.. அவளோ.. “முடியாது, என் ரூம் உள்ள யாரும் வர கூடாது, இப்போவே இந்த ரூமை விட்டு வெளியே போ” என சத்தமாக கத்தி இருந்தாள், அவனும் அவளின் கோபத்தை அதிகப்படுத்த விரும்பாமல் அமைதியாக அறையை விட்டு வெளியேறியவன் அங்கு நின்றிருந்தவளை கண்டு செய்வதறியாது நின்றான்….