Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கலாட்டா கல்யாணம்

கலாட்டா கல்யாணம் 9

கலாட்டா – 9

கதிரவன் தன் கதிர்களை திசைகளெங்கும் பரப்பி உலகிற்கே வெளிச்சமூட்டிக் கொண்டிருந்த அந்த காலை வேளை அனைவருக்கும் இனிமையாய் விடிய, அஞ்சலிக்கு மட்டும் வில்லங்கமாய் விடிந்தது.



Advertisement

காலை எழுந்ததுமே கீதாவை தாங்கள் எப்போதும் சந்திக்கும் வழக்கமான இடமான தோப்பு வீட்டிற்கு 11 மணிக்கு வரச்சொல்லி மெசேஜ் ஒன்றை தட்டிவிட்டு அவளை சந்திக்க காத்திருந்தாள் அஞ்சலி.

நேரம் பத்தரையை நெருங்கும் போதே அன்னையிடம் சொல்லிக்கொண்டு புறவாசல் வழியாக தோப்பு வீட்டிற்கு விரைந்த அஞ்சலி, போகும் வழியெங்கும் கீதாவிடம் பேச வேண்டியதை மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டே சென்றாள்.

Advertisement

கீதாவோ அவளை காக்க வைத்துவிட்டு பதினொன்றரை மணிக்கே அங்கே வந்து சேர்ந்தவள் அஞ்சலியைக் கண்டு, “என்ன எலி நேத்து செம்ம காமெடி போல.. எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறுவலியே வந்திடுச்சு.. அந்த டைனோசர் வாயன் என் கிட்ட எவ்ளோ வாலாட்டுனான் தெரியுமா அதான் கடவுள் அவனுக்கு வச்சான் ஆப்பு.. ஹாஹாஹா” என்று அவள் அஜய்யை நினைத்து சிரித்துக் கொண்டிருக்க,

Advertisement

அவளை அடக்கிய அஞ்சலி, ” ஹேய் எருமை கொஞ்சம் வாயை மூடுடி.. நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச வந்திருக்கேன்” என்று அவள் தீவிரமாக கூற,

Advertisement

“என்ன பில்டப்பெல்லாம் பலமா இருக்கு.. வாட்ஸ் தி மேட்டர்” என்று அங்கிருந்த மரக்கிளை ஒன்றின் மேல் ஏறி அமர்ந்து கொண்டே கீதா வினவினாள்.

” அது.. அது வந்து..” என்று அஞ்சலி இழுக்க,

சற்றும் பொறுமை இல்லாத கீதாவோ, ” இப்போ நீ சொல்ல போறியா இல்லை நான் கிளம்பவா.. அங்க எங்க மீனு வேற அயிரை மீன் குழம்பு வச்சுக்கிட்டு இருக்கு.. செம பசி எனக்கு நான் போய் சாப்பிட்டு வரேன்..” என்று அவள் எழுந்து போக முற்பட,

” அட இருடி.. ” என்று அவளைத் தடுத்த அஞ்சலி,

” எனக்கு அஸ்வத்தை பிடிச்சிருக்கு” என்று விஷயத்தை போட்டு உடைக்க,

” சரி ஆள் யாருன்னு சொல்லு தூக்கிரலாம்.. நம்ம ஊரா அசலூரா??” என்று கீதா அஸ்வத் யாரென்று தெரியாமல் பேசிக் கொண்டிருக்க,

” ஹேய் லூசு.. நேத்து என்னை பொண்ணு பார்த்துட்டு போனாரே அவர் தான் அஸ்வத்” என்று அவளுக்கு விளக்கினாள் அஞ்சலி.

” ஓஹ் அவரா!!!” என்று சாதாரணமாய் சொன்னா கீதா பின்பே அவள் சொல்வதை உணர்ந்து, ” என்னாது நேத்து பார்த்த மாப்பிள்ளையா??” என்று அதிர்ந்தவள்,

” உனக்கென்ன பைத்தியமா எலி.. நேத்து எவ்ளோ பெரிய கலவரம் நடந்துச்சு.. நம்மோட நிலவரம் என்னன்னு புரிஞ்சுமா அந்த மாப்பிள்ளையை பிடிச்சிருக்குன்னு சொல்ற” என்று கேள்வியெழுப்பினாள் கீதா.

” அதெல்லாம் எனக்கும் தெரியும்.. நீ கொஞ்சம் உன் வாயை மூடிட்டு நான் சொல்றதை கேளு.. அப்பாவையும் சித்தப்பாவையும் ஒன்னா சேர்க்கணும்.. அதுக்கு உன் உதவி வேண்டும்” என்று அஞ்சலி தீவிரமாக கூற,

” சத்தியமா உனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு எலி.. உனக்கு அந்த மாப்பிள்ளையை பிடிச்சதுக்கும் நம்ம அப்பாங்களை ஒன்னா சேர்க்குறதுக்கும் என்ன சம்மந்தம்” என்று அவள் குழம்ப,

அஞ்சலி சற்று தயக்கத்துடன்  அஸ்வத் தன்னிடம் கூறியதை கீதாவிடம் பகிர்ந்து கொண்டாள்.

” ஏண்டி சரியான லூசு குடும்பமா இருக்கும் போல.. அவங்க ஏதோ சொல்றாங்கன்னு நீயும் இப்படி உளறிகிட்டு இருக்க… நம்ம அப்பாங்களும் அவங்களோட அப்பாங்களும் ஒன்னா சேர்ந்துட்டா மட்டும் போதுமா?? நேத்து தான உங்கப்பா அவங்களை அவ்ளோ கேவலப்படுத்தி அனுப்புனாரு.. அப்பறம் எப்படி அவங்க உன்னை மருமகளா ஏத்துப்பாங்க.. பைத்தியங்களா.. நிச்சயம் இது அந்த டைனோசர் வாயனோட ஐடியாவா தான் இருக்கும்.. அதான் அவனை மாதிரியே அவனோட ஐடியாவும் இவளோ மட்டமா இருக்கு” என்று கீதா தேவையே இல்லாமல் அஜய்யை இதில் நுழைத்து அவனை வசை பாட,

அவளை முறைத்துக் கொண்டிருந்த அஞ்சலி, “சும்மா ஏதாவது லூசு மாதிரி பேசிகிட்டு இருக்காத … ஹெல்ப் பண்ண முடிஞ்சா பண்ணு இல்லைனா விடு.. அதுக்காக தேவையில்லாம அவங்களை எல்லாம் திட்டாத” என்று  கோபப்பட,

” அடேங்கப்பா கல்யாணம் ஆகாததுக்கு முன்னாடியே மாமியார் வீட்டுக்கு இவளோ சப்போர்ட்டா .. முடியலைடா சாமி.. சரி சொல்லித் தொலை என்ன பண்ணனும்.. உனக்கு தங்கச்சியா பிறந்து தொலைச்ச பாவத்துக்கு செஞ்சு தொலைக்கிறேன்” என்று பிகு செய்து கொண்டாள் கீதா.

” நீ ஒன்னும் அவ்ளோ கஷ்டப்பட்டு எனக்கு ஹெல்ப் பண்ண வேண்டாம்” என்று அஞ்சலி முகத்தை திருப்பிக் கொள்ள,

அவளின் கோபத்தை ரசித்த கீதா, அஞ்சலியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, ” அட சொல்லுங்கள் அஞ்சலி சொல்லுங்கள், உங்கள் கட்டளையை சிரம் மேற்கொண்டு நிறைவேற்றவே இந்த ஜென்மத்தையே கொண்டேன் நான்” என்று அவளிடம் வம்பு வளர்த்து அவளை தன் குறும்பினால் சமாதானப் படுத்தினாள் கீதா.

அதன் பின் அஞ்சலி, அஸ்வத் தன்னிடம் சொன்ன திட்டத்தை கீதாவிடம் சொல்லி அதற்கான வேலையை தொடங்க அவளிடம் ஆலோசனை கேட்க,

கீதாவிற்கு இதில் கொஞ்சமும் விருப்பமில்லை என்றாலும் தன் அக்காவிற்காக அரை மனதுடன் சம்மதித்தாள் அவள்.பின்பு  இருவரும்  அங்கிருந்து கிளம்பி அவரவர் இல்லத்தை நோக்கி சென்றனர்.

” பாட்டி என்ன இப்படி ரீல்ஸ் பண்ணிட்டு ஜாலியா உட்காந்துட்டு இருக்கிங்க.. நம்ம பிளான் என்னாச்சு” என்று காலையில் எழுந்ததில் இருந்து இதே கேள்வியை கேட்டு மதுரத்தை ஒரு வழி செய்து விட்டான் அஸ்வத்.

அவன் காதைப் பிடித்து திருகிய மதுரம், ” உன்னோட அழும்பல் ஓவரா இருக்கு டா பேராண்டி.. நேத்து தான உன் லவ்வையே கன்பார்ம் பண்ண.. அதுக்குள்ள கல்யாணத்துக்கு அவ்ளோ அவசரமா?? அவன் அவன் காதலிச்சு பத்து பதினைந்து வருஷமா காத்துட்டு இருக்கான் உனக்கென்ன.. பொறுமையா இரு யோசிப்போம்” என்று அவனை அடக்க,

” ஏதே அப்போ நீ பிளான் போடாம சும்மா தான் அடிச்சு விட்டியா நைட்டு..” என்று அதிர்ந்து போய் கேட்டான் அஸ்வத்.

” நீ முதல்ல ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பு.. என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும்” என்று அவனை போராடி வேலைக்கு அனுப்பி வைத்த பின் தன் கணவருக்கு  , ‘ ரெடி ‘ என்று மெசேஜை தட்டிவிட்டு ஒரு புன்னகையுடன் காத்திருந்தார்.

மெசேஜ்ஜைக் கண்டதும் தனக்கு கொடுத்த வேலையை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டதைத் உணர்ந்து, சரியாக தன் மகனின் அறைக்கு முன்னர் சென்று நின்று ” அய்யோ நெஞ்சு வலிக்குதே” என்று கத்திக்கொண்டே நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்து விழுந்தார் வாசுதேவ கிருஷ்ணன்.

அவர் விழுந்ததைக் கண்டு பதறிப்போன பரமசிவன், ” அய்யோ அப்பா” என்று அவரிடம் விரைந்தார்.

அவரின் சப்தம் கேட்டு அடுப்படியில் இருந்து தனமும் வந்துவிட, அவரும் தன் மாமனாரின் நிலையைக் கண்டு பதறிப்போய் , ” அய்யோ  மாமாக்கு என்ன ஆச்சு” என்று தன் கணவரிடம் கேட்க,

பரமசிவனோ தன் தந்தையின் கன்னத்தை தட்டி, ” அப்பா எழுந்துக்கோங்க பா.. என்னப்பா ஆச்சு” என்று அவரை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தார்.

வாசுதேவ கிருஷ்ணனோ மனதிற்குள் தன் மகனை , ‘ டேய் மவனே இதான் நேரம்னு உன் மனசுல இருக்க கோபத்தை எல்லாம் அடிச்சு தீத்துக்கிறயா டா.. அய்யோ இப்படியே அடிச்சா நான் நெஜமாவே பரலோகம் போய்துவேன் போலயே.. அப்பறம் நான் இல்லாம என் மதுரம் டார்ஜிலிங் என்ன பண்ணுவா?? என்னை அடிக்கிறதை நிப்பாட்டிட்டு ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு போடா பரதேசி’ என்று  வசைபாடிக் கொண்டிருந்த சமயம் அவரைக் காக்கவென்றே அங்கு வந்த தனம், ” என்னங்க எனக்கு என்னமோ பயமா இருக்கு வாங்க ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போகலாம்” என்று தன் கணவனிடம் அறிவுறுத்தினார்.

பரமசிவனிற்கும் அது தான் சரி என்று தோன்ற, துரிதமாய் தன் தந்தையை கைகளில் அள்ளிக்கொண்டு காரை நோக்கி அவர் விரைந்த சமயம் எதிர்வீட்டில் இதற்காகவே காத்துக் கொண்டிருந்த மதுரம் தன் நடிப்பைத் தொடங்கினார்.

“என்னங்க உங்களுக்கு என்ன ஆச்சு?? டேய் பரமா எதுக்கு டா என் வீட்டுக்காரரை இப்படி தூக்கிட்டு போற?? என்ன பண்ணீங்க என்னோட தெய்வத்தை” என்று அவர் கத்திய கத்தலில் , கோர்ட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்த ராமனும் வெளியே வந்துவிட்டார்.

அங்கு தன் தந்தையைக் கண்டு பதறிய ராமன், ” அய்யோ அப்பாக்கு என்ன ஆச்சு??” என்று தன் அன்னையிடம் வினவ,

” எனக்கு மட்டும் என்ன தெரியும்.. கட்டையில போற வயசில கூட எங்களை ஒன்னா இருக்க விடாம அண்ணனும் தம்பியும்  பிரிச்சு வச்சுட்டிங்களே.. என் புருஷனுக்கு என்னாச்சோ ஏதாச்சோ ” என்று அவர் குறி பார்த்து தாக்கினார்.

அவரின் பேச்சு சரியாய் அவரின் இரு மகன்களையும் சென்று தாக்க, குற்றவுணர்ச்சியில் தலையைக் குனிந்து கொண்டனர்.

சீதாவிற்கும் தனத்திற்கும் இவர்களின் திட்டம் தெரியாததால் பதட்டத்துடன், ” அய்யோ இதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம் முதல்ல மாமாவை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகலாம் வாங்க” என்று அவசரப்படுத்த,

அஜய்யும் பணிக்கு சென்று விட்டதால் யார் காரை ஓட்டுவது என்று அவர்கள் யோசித்து தயங்கி கொண்டு நின்றனர்.

அதற்குள் பரமசிவனின் காம்பவுண்டுக்குள் நுழைந்திருந்தார் மதுரம்.

அவரைத் தொடர்ந்து வந்த ராமன் உள்ளே செல்லாமல் வெளியே தயங்கி நிற்க, அவர் செல்லாததால் சீதாவும் அவருடனே கைகளைப் பிசைந்து கொண்டு பதட்டத்தில் நின்றிருந்தார்.

” டேய் இன்னும் என்னடா பண்ணிகிட்டு இருக்கிங்க.. சீக்கிரம் காரை எடு” என்று மதுரம் விரட்ட,

“அத்தை அவருக்கு கார் ஓட்டத் தெரியாதுன்னு மறந்துட்டிங்களா?? நான் வேணும்னா டாக்சி புக் பண்ணவா??” என்று தனம் கேட்க,

“அதெல்லாம் வேண்டாம் நான் காரை எடுத்துட்டு வரேன்.. ” என்று கூறிய ராமர் யார் பதிலையும் எதிர்பார்க்காமல் தன்னுடைய காரை எடுக்க விரைந்தார்.

“நீங்க அதுல போங்க.. நான் பைக்ல வரேன்” என்று பரமசிவன் ஒதுங்கிக் கொள்ள,

“அய்யோ என் புருஷன் இப்படி மரணப்படுக்கையில இருக்கப்போ கூட இப்படித்தான் உங்க சண்டையை தூக்கிட்டு அலையுவிங்களா?? உங்களையெல்லாம் இந்த வயித்துல தான் பெத்தேன்னு நினைக்கிறப்போ வயிறு எரியுது டா.. ” என்று புடவைத் தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டு அழுவதைப் போல் மதுரம் பாசாங்கு செய்ய,

” அய்யோ என்னத்தை இப்படிலாம் பேசிக்கிட்டு.. என்னங்க இப்போ கூட உங்க வெட்டி வீராப்பு ரொம்ப அவசியமா?? ஒழுங்கா வந்து மாமா வண்டியில ஏறுங்க” என்று தன் கணவரை அதட்டிய தனம் ராமனின் காரில் ஏறிக்கொள்ள,

ராமனும் பரமசிவனும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே தங்களுடைய தந்தையை தூக்கிக் கொண்டு காரில் கிடத்த, பெண்கள் மூவரும் பின் இருக்கையில் வாசுதேவ கிருஷ்ணனிடம் அமர்ந்து கொண்டனர்.

ஓட்டுநர் இருக்கையில் ராமன் அமர்ந்து கொள்ள, பரமசிவன் ராமன் அருகில் அமரத் தயங்கி யோசனையோடு  நின்று கொண்டிருக்க,

” டேய் என் வீட்டுக்காரரை கொல்லாம நீங்க அடங்க மாட்டீங்களா?? ஆஸ்பத்திரிக்கு போகணும் சீக்கிரம் உள்ள ஏறு டா” என்று மதுரம் அதட்டல் போட அதுவும் சரியாய் வேலை செய்தது.

பரமசிவனும் அடுத்த நொடி காருக்குள் ஏறியிருக்க, அடுத்த நொடியே கார் அந்த தார் சாலையில் பறந்தது.

” மது டார்ஜிலிங்” என்று கிருஷ்ணனின் குரல் காதுக்குள் ஒலிக்க,

” யோவ் ஒழுங்கா உன்னை மயக்கம் போட்ட மாதிரி நடின்னு சொன்னா அப்பப்போ எதுக்குயா முழிச்சு என்னை பார்த்து கண்ணடிக்குற?? நல்லவேளை இவனுங்க யாரும் பார்க்கலை.. மரியாதையா கண்ணை மூடிட்டு படு இல்லை நெஜமாவே  உனக்கு வைத்தியம் பார்க்குற மாதிரி பண்ணிருவேன்” என்று மதுரம் மெதுவாய் அவரின் காதுக்குள் முணுமுணுக்க,

கிருஷ்ணனும் பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டார்.

இதை பின் சீட்டில் இருந்து கண்ட சீதாவும் தனமும், “அத்தை.. அப்போ இது டிராமாவா” என்று வாயைப் பிளக்க,

” இதையே இப்போத்தான் கண்டுபிடிக்குறீங்களா?? எனக்கு மருமகளா இத்தனை வருஷம் இருந்தும் இன்னும் ஒரு கூரும் பத்தலை.. சரி சரி வாயை மூடுங்க .. உங்க புருஷன்காரங்களுக்கு கேட்டுத் தொலைஞ்சுற போகுது” என்று அவர்களை அடக்கி வைத்தார் மதுரம்.

முன் சீட்டில் அமர்ந்திருந்த ராமன் – பரமசிவன் சகோதரர்களுக்கோ நினைவுகள் பின்னோக்கிப் பயணமானது.

இருவரும் இப்படி ஒன்றாய் பயணம் செய்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என இருவரும் ஒன்றாய் இருந்த நாட்களை எண்ணி ஒரு மோன நிலையில் இருக்க,  ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்துக் கொண்டு பாசப்பயிரை  வளர்க்க, அதை பின்னால் இருந்து கவனித்துக் கொண்டிருந்த மற்றவர்களோ தங்களின் திட்டம் வெற்றியடையப் போவதை எண்ணி மனதிற்குள் குத்தாட்டம் போட்டனர்.

அப்போது அவர்களின் மகிழ்ச்சியைக் குலைப்பதைப் போல் வந்து சேர்ந்தது அந்த அழைப்பு.

– தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!