தனமும் இலக்கியாவும் காத்தமுத்துவோடு பதற்றமாக அந்த மருத்துவமனைக்கு வர கணேசன் முகம் முழுவதும் வியர்த்து போய் “எம்மாடி அந்த பயலுக மறுபடியும்”என்று கதறி விட்டார் மனிதர்.
Advertisement
“என்னாச்சுனு கேட்குதேம்ல எங்கய்ய எம்மவன். லேய் முத்து எங்கடா அவேன். ஒண்ணுமில்லை மே எஞ்சாமிக்கு”என்று தனம் ஒரு பக்கம் அழவும் இலக்கியா பதற்றமாக “எங்கே முத்து அவர். மாமா என்ன சொல்றாங்க என்ன பிரச்சினை.”என்று காத்தமுத்துவை உலுக்கினாள்.
Advertisement
“மயினி நேத்தைக்கு அழகர் கோயில் போயிட்டு வாரப்பா பெரச்சனையாமே. அவனுக தான் அண்ணே தென்னந்தோப்புக்குள்ள போகையில பின்னாடி இருந்து வெட்டிப்புட்டானுக. சத்தம் கேட்டு போவங் காட்டியும் அண்ணனை”என்று அவன் பேச முடியாமல் கதற இலக்கியா சரிந்தமர்ந்து விட்டாள்.
Advertisement
“பெருசா வெட்டுப்படல ஆனாலும் கழுத்தெலும்பு கிட்ட காயம் அதிகமா இருக்கு. ரத்தம் நெறைய போயிருச்சு”என்றான் தவிப்புடன்.
Advertisement
“எங்க அவர் எந்த ரூமில் இருக்காரு”என்று கேட்கவும்
“உள்ள கட்டு போட்டுக்கிட்டு இருக்காங்க. போலீஸ்ல தாக்கல் சொல்லிட்டேம். நம்மாளுக வெட்ட வந்தவனுகளை கொண்டு ஸ்டேசன் ல ஒப்படைச்சுட்டானுக. இருந்தாலும் அண்ணன்”என்று அவன் விசும்பி விட
“ஒண்ணும் ஆகாது அவருக்கு. அத்தை அமைதியாக இருங்க. நல்லாகிடும்”என்று சமாதானம் செய்ய முயற்சி செய்ய அதற்குள் மருத்துவர் வந்து விட்டார்.
“கலைச்செல்வன் கூட வந்தவங்க யார்”செவிலிப்பெண் கேட்க
“நாங்க தான் டாக்டர்”என்று இலக்கியா முன் செல்லவும் “இது போலீஸ் கேஸ் மா. கம்ப்ளைன்ட் பண்ணனும். ரொம்ப ப்ளீடிங் அதனால தான் ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணி இருக்கோம் மா. கம்ப்ளைன்ட் தரணும்”என்றார் அவர்.
“ஓகே மா.”என்றவர் “நர்ஸ் இவங்க கிட்ட ஃபார்மாலிட்டி முடிச்சுடுங்க.”என்று கூறி விட்டு மறுபடியும் கலை இருந்த அறைக்குள் சென்றவர் துரிதமாக சிகிச்சை அளிக்க துவங்கி இருந்தார்.
ஒரு மணி நேரம் கழித்து தான் வெளியே வந்தார் மருத்துவர்.
“இன்னும் ஒரு அரை மணி நேரம் கழிச்சு போய் பாருங்க. ஹீ ஷேஃப். காயம் தான் அதிகம். பட் ஆழமில்லை. ஐ திங்க் இவர் மேனேஜ் பண்ணி தப்பிச்சு இருக்கணும்”என்று சொல்லி விட்டு “இன்னும் ஒரு வாரம் இங்கே இருக்கட்டும். காயம் ஆறுறதைப் பொறுத்து சொல்றேன்”என்று கிளம்பி விட்டார் அவர்.
அரை மணி நேரம் கடப்பதற்குள் கலையின் குடும்பம் செத்துப் பிழைத்தது.
செவிலியர் பார்க்கலாம் என்று கூறிய பிறகு அவசரமாக உள்ளே நுழைய கலை மருந்தின் வீரியத்தில் உறங்கிக் கொண்டிருந்தான்.
அதற்குள் காவல்துறை அதிகாரி வந்துவிடவே காத்தமுத்துவிடம் விசாரித்து கொண்டிருந்தனர்.
அவனும் தனக்குத் தெரிந்தது எல்லாம் தகவல் தர
“பழைய பகையோ”என்ற இன்ஸ்பெக்டர் “எங்க கான்ஸ்டபிள் இருப்பார். ஸ்டேட்மென்ட் தர சொல்லணும். அவனுகளை நாங்க பார்த்துக்கிறோம். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க”என்று கிளம்பி இருந்தார் அவர்.
தனம் அழுதபடியே இருக்க இலக்கியா அவனின் கைவிரலை மட்டும் பிடித்தபடி அமர்ந்திருந்தாள்.
அவனிடம் அசைவு தெரியவே தன் விரல்களை விலக்கிக் கொள்ள பார்க்கவும் அரைகுறை உறக்கத்திலேயே அவள் விரல்களை இறுக்கிப் பிடித்து இருந்தான் கலை.
“எய்யா தம்பி”என்று தனம் அழுதபடி முன்னே செல்லவும் “சத்தம் போடாம பாருங்க மா”என்று நர்ஸ் குரல் கொடுத்தார்.
விசும்பிக் கொண்டே புடவை முந்தானையை எடுத்து கண்களைத் துடைத்துக் கொள்ள “ஒண்ணும் இல்லத்தா ஏ கலங்குற”என்று வலியோடு முகத்தைச் சுருக்கியபடி கடிந்து கொண்டான்.
“ஐயா”என்று தந்தையை அழைக்கவும் அவர் ஒரு பக்கம் அழுதார்.
“ஆளாளுக்கு அழுதா நா யாரை பாக்க”அலுத்துக் கொண்டே கையை அசைக்க அது உயிர் போகும் வலியைக் கொடுத்தது.
“செரி செரி அழுவல”என்று சொல்வதையே தனம் அழுதுகொண்டே தான் கூறினார்.
இலக்கியா அவனைப் பார்த்தபடியே அமர்ந்திருக்க “ஓ பங்குக்கு நீ எதுவும் சொல்லலையா.”என்று அவன் கேட்க
“ரெண்டு அடி போடலாம் னு இருக்கேன்”என்றாள் கண்ணீரை உள்ளிழுத்து மூக்கை உறிந்தபடி.
“கொஞ்சம் அசட்டையா இருந்துட்டேன் கோடு போட்டானுக”என்றான் இலகுவாக. ஆனால் அங்கே அவனுக்கு வலி உயிர் போகிறது என்று அனைவருக்கும் புரியத்தான் செய்தது.
“நா போய் சாப்புட என்ன குடுக்கலாம் னு கேட்டுட்டு வாரேன்”என்று தனம் கணவனை அழைத்துக் கொண்டு நகர இப்போது இலக்கியா கலை இருவர் மட்டுமே அந்த அறையில்.
‘உன் நினைவில் மூழ்கி சுற்றினேன்’என்றால் என்ன சொல்வாளோ என்ற யோசனை அவனுக்கு.
“என்னப்பா விடு எனக்கு எதுவும் இல்லை. இன்னும் ஒரு வாரத்தில் ஆறிப்போவும்”என்று சமாதானம் செய்ய
“ஆமாம் சார் சூப்பர் ஹீரோ பாருங்க உடனே ஆறிப் போக”என்று திட்டி விட்டு “உயிரே போயிட்டு எனக்கு”என்றாள் தவிப்பாய்.
“அப்படி எல்லாம் போ மாட்டேன். “என்று கண்சிமிட்ட
“போய் பாருங்களேன்”என்று மிடுக்காய் சொல்லி விட்டு கண்களை சிமிட்ட அவள் விழி நீர் அவன் கரத்தில் பட்டுத் தெறித்தது.
“செரித்தா விடு விடு. சரியாப் போகும்”அவளது ஒவ்வொரு பாவனையையும் உள்வாங்கியபடி அவன் ஆறுதல் கூற அமைதியாக கேட்டுக் கொண்டாள்.
ஒரு வாரம் கழித்து மருத்துவனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர் கலைச்செல்வனை. இலக்கியா தன் மகனை பார்த்து விட்டு நேரே கலையிடம் வந்து விடுவாள் தினமும்.
வெரோனிகா மிகவும் உதவியாக இருந்தார் அவளுக்கு.
இடையில் இலக்கியாவின் குடும்பம் வந்து பார்த்து விட்டு செல்ல செல்வத்தின் அம்மா சும்மாயிராமல் “இதுக்குத்தேன் இவ கூட கலியாணம் வேணாமின்னு சொன்னேன். என்ன எழவெடுத்த ராசியோ இப்படி கொண்டாந்து படுக்க வச்சிருக்கா”என்று பேச சங்கரி அழுதே விட்டார்.
“அம்மா”என்று செல்வமே மனம் தாளாமல் அதட்டி விட்டு வேகமாய் மகளின் புகுந்த வீட்டினரை தயக்கத்துடன் பார்த்தார்.
தனம் பல்லைக் கடித்துக் கொண்டு நிற்க கலையோ”ஆத்தா கண்ணு மசமசங்குது நா ஒறங்குதேன்”என்று விழி மூடிக் கொள்ள பெருமாள் தன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்.
தன் அம்மாவை வசைபாடியவர்”அந்த புள்ள வாழ்ற வீடு அவக முன்னாடி அப்படி பேசுறீயேத்தா கொஞ்சமாச்சும் கூறு இருக்கா இதுக்குதான் வந்தியா நீயி. அக்கறையில வாரனு ஒரு நிமிஷம் சந்தோஷப்பட்டுட்டேன். நீயெல்லாம் திருந்தாத செம்மம்”என்று திட்டிட வேகமாய் தனம் ஓடி வந்தார்.
“எம்மவ அந்த மாதிரி”என்று சங்கரி அழ
“இந்தாத்தா வாய மூட மாட்ட.”என்று அதட்டி விட்டு “இங்காரு ஆத்தா. பெரிய மனுசின்டு சும்மா விடுதேன். இதே வேற ஆராச்சும் இருந்தா எம்முன்னாடி எம்மருமவள நாக்கு மேல பல்லை போட்டு பேச விடுவேனா நானு. அந்த புள்ள ராசி தான் எம்மவன் இந்த காயத்தோட தப்பிச்சான். ஒன்னிய கேட்டோமா எப்படி இது ஆயிருக்கும் என்னன்டு. வந்தா பாத்துட்டு மட்டும் போவத்தானத்தா”என்றார் கடுப்பாக.
“ஏதோ மனசுல கருக்குனு பட்டதை சொன்னேம்”என்று அவர் நீட்டி மொழக்க
“எனக்குக் கூடதேன் மனசுல என்னென்னவோ ஒன்னியபத்தி அம்புடுது அத்தெல்லாம் சொல்ல ஆவுமா”என்றவர் பெருமாளிடம் “இந்தாருண்ணே இன்னமேட்டுக்கு எவ்வீட்டுப் பக்கம் வாரதுனா நீயி மட்டும் வா. இலக்கி அம்மாவை கூட்டிட்டு வா. அவ்வளவு தான். எம்மருமவளை ஆவாதவகளுக்கு எம்மூட்டு திண்ணையில கூட எடம் கெடையாது சொல்லிப்புட்டேன்”என்று நேரடியாக சொல்லி விட்டு முந்தானையை உதறி சொருகிக் கொண்டு சென்றார்.
பெருமாள் “வாங்க. ஒங்களுக்கு வந்து பொறந்துச்சே அந்த சீவன்”என்று திட்டிய படி அழைத்துச் சென்றார்.
சங்கரிக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தாலும் அதை அடக்கியபடி தனம் பேசியதில் நெஞ்சம் நிறைந்த நிம்மதியுடன் சென்றிருந்தார்.
*************
வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர் கலைச்செல்வனை. அழகினியனுக்கு தகவல் சொல்லி இருந்தான் காத்தமுத்து.
பதறியடித்து கொண்டு அவன் அழைக்க கலையோ இப்போது வர வேண்டாம். என்று கூற
“என்ன கலை நீங்க”என்று அலுப்பாக கேட்க
“இல்லை இனியா. ஆத்தா என்னைய இப்படி பாத்தா சொணங்குவாக. வேணாமே. கொஞ்சம் நல்லாவட்டும் பெறவு கூட்டிட்டு வா.”என்று சொன்னான் சமாதானமாக.
“நான் டெடியை கூட்டி வரலை. நான் மட்டும் இப்போ வர்றேன் நீங்க எதுவும் சொல்லாதீங்க”என்று அவன் கூறவும் கலை வேறு வழியின்றி சம்மதிக்க அழகினியன் மட்டும் வந்து விட்டுச் சென்றான்.
இலக்கியா உணவூட்ட வந்த தனத்தை மறுத்து விட்டு தானே அவனுக்கான அனைத்தும் பார்த்தாலும் இயற்கை உபாதைகளுக்கு காத்தமுத்து தான் உதவி செய்தான்.
“எங்கண்ணனுக்கு நா செய்யுவேன். நீ எதுவும் பேசாதத்தா”என்று தனத்தையே அமைதிப்படுத்தி விட்டான் அவன்.
கலை வீட்டிற்கு வந்தும் நடுக்கூடத்தில் தான் உணவு உறக்கம் அனைத்தும். அங்கே தான் அவன் வெளியே செல்ல நன்றாக இருந்தது.
இலக்கியா ஒரு வாரம் வரைக்கும் பொறுத்தவள் “கலை உள்ளே ரூமில் தூங்குங்க நான் பார்த்துக்குவேன்”என்று கூற அவனோ இரவில் கழிவறை செல்ல சங்கடமாக இருக்கும் என்று மறுத்தான்.
“மயினி அண்ணனுக்கு செரமம்”என்று காத்தமுத்து வர
“இல்லை இங்கே டேபிள் ஃபேன் அவருக்கு ஒரு பக்கம் முழுசும் கொசு கடிச்சு இருக்கு பாருங்க. உள்ளேன்னா சிரமம் இல்லை முத்து. நீங்க வேணும்னா அவரோடு உள்ளே படுங்க நான் ஹால்ல ஸ்டே பண்ணிக்கிறேன்”என்றாள்.
தனம் உட்பட இதுவரைக்கும் நடுக்கூடத்தில் தான் படுக்கை. அவர்கள் உறங்கும் இடத்தில் மட்டும் தான் மேலே இருக்கும் காற்றாடி இருந்தது. கட்டில் போட்டு இருக்கும் இடத்தில் காற்றாடி போட வசதி இல்லாமல் போக டேபிள் ஃபேன் வைத்திருந்தனர்.
இலக்கியா பிடிவாதமாக கூறவும் தனம் இதை விட்டாலும் இருவரும் நெருங்கி வர வாய்ப்பு இல்லை என்று உணர்ந்து “லேய் முத்து. உங்கண்ணேன் உள்ள படுக்கட்டும். இலக்கி பாத்துக்கும். நீ வீட்டுக்கு போ. எத்தனை நா இங்கனயே மொடக்குவ”என்று அவனிடம் கண் காட்டி அனுப்பி வைத்து விட்டார் தனம்.
இலக்கியா அவனுக்கு தகுந்தாற் போல படுக்கையை சரி செய்து போட்டு வைத்தாள்.
“இந்த பக்கம் தலகாணி வைக்கிறேன். கம்ஃபர்டா படுங்க. என்னை எழுப்பணும் செல்வா. நான் தூங்குறேன்னு நினைக்க கூடாது ஓகே”என்று படபடப்புடன் கூற
“சரித்தா சரி.”என்று தானாகவே மெதுவாய் நடந்து வந்து படுத்தான்.
ஏசியை மிதமான குளிரில் வைத்து விட்டு அவனுக்கு போர்வை முதற்கொண்டு போர்த்தி விட்டாள்.
“தம்பிக்கு பேசினியா நீயி. என்ன பண்ணுதான். போய் பார்க்கணுமே”என்று வினவ
“இப்போ எல்லாம் ரொம்ப தூங்கறானாம். அதிகம் ஞாபகம் இல்லை போல. போகும் போது அம்மா னு சொல்லிட்டு தூங்கிடுறான். அப்படி தான் இருக்கும் னு டாக்டர் சொன்னாங்க”என்றவள் கண்கள் கலங்கி இருந்தாலும் சமாளித்தபடி அவன் கழுத்து வரை போர்த்தி சரி செய்தாள்.
“ஏற்கனவே தெரிஞ்சது தானப்பா. இங்கே வா”என்று அவளை ஒரு கையால் பிடித்து சாய்த்துக் கொள்ள மறுக்காமல் சாய்ந்து கொண்டாள்.
“தூங்குப்பா. காலையில் அங்கே போகணும் ல”என்று சமாதானம் செய்ய எழுந்து கொண்டவள் “சாரி”என்றபடி அடிபடாத கைப்பக்கம் படுத்துக் கொண்டாள்.
‘போடி கூவ’என்று முனகிக் கொண்டான் சற்று சுணக்கத்துடன்.
சற்று நேரத்தில் அவள் உறங்கி இருக்க அவளைப் பார்த்துக் கொண்டே படுத்திருந்தான் கலை.
“ஏன் என் பக்கம் சாஞ்சா என்னவாம். ஒம்புருஷன்தான நானு”என்று மெல்லிய குரலில் கேட்டுக் கொண்டவன் “ஒன்னிய அம்புட்டு புடிக்குதுடி நான் என்னத்த செய்யுவேன் எப்படி சொல்லி புரிய வைப்பேன்”என்றான் முனகலாக.
நடு இரவில் அவளை எழுப்பி விடாமல் கழிவறைக்குச் சென்று வந்தான்.
எழுந்து முறைத்தபடி அவள் அமர்ந்திருக்க “என்னால அதை எல்லாம் செய்ய முடியும்த்தா. என்னத்துக்கு மொறைக்குறவ.”என்று கேட்டுக் கொண்டே வர
“ஹ்ம்ம்”என்றவள் “ஆர் யூ ஓகே. தண்ணி எதுவும் வேணுமா”என்று வினவ
“தண்ணி குடு. போதும்”என்றவன் வந்து சாய்ந்தமர தண்ணீரைக் கொடுத்தாள்.
குடித்து விட்டு டம்ளரை நீட்டியவன் பார்வையை அந்த பக்கம் திருப்பிக் கொள்ள புரியாமல் விழித்து பின் தன் உடையை சரி செய்து கொண்டாள் சங்கடமாக.
“வேறெதுவும் வேணுமா”என்று கேட்டபடியே படுக்கப் போக மனதில் அவனுக்கு பெரும் பிரளயம் வெடித்தது.
“இலா”என்றவன் வேக மூச்செடுத்து “ம்ஹூம் எதுவும் இல்லை”என்று இறுக்கமாய் விழிகளை மூடிக் கொண்டான்.
“சாரி நான் கவனிக்கலை”அவன் எதனால் இப்படி தடுமாறுகிறான் என்று புரிந்து கூற வெறுமனே தலையை மட்டும் அசைத்துக் கொண்டான். அவனின் உணர்வுகளோ அங்கே பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்தது.