கோபத்தில் அவன் புசுபுசுவென மூச்சு விட, ” அடச்சீ.. இப்படி சைக்கிளுக்கு காத்தடிக்குற மாதிரி மூச்சு விடுறதை விட்டுட்டு நான் சொல்றதை ஒழுங்கா பண்ணு” என்று உத்தரவு பிறப்பித்த மதுரம்,
“வெளியே வந்ததும் அந்த ரெண்டு தடிமாடுங்க கிட்டயும் அவருக்கு ஹார்ட்ல ஒரு தீராத நோய்.. இன்னும் கொஞ்ச நாளைக்கு தான் உயிரோட இருப்பாரு .. அதுனால அவர் மனசு கோணாம அவரை பத்திரமா பார்த்துக்கோங்க.. அவரோட ஆசையை எல்லாம் நிறைவேத்தி வைங்க. . அவர் வருத்தப்பட்டா நிலமை ரொம்ப மோசமாயிடும்..அப்படி இப்படின்னு இன்னும் ஒரு நாலைஞ்சு பிட்டை போட்டு விடு என்ன.. இதையும் சொதப்பிராத டா கண்ணா.. இதுல தான் உன் நண்பனோட வாழ்க்கையே அடங்கிருக்கு.. அவன் கல்யாணம் ஆனா தான் உனக்கு கல்யாணம் நடக்கும்னு நான் வேண்டிருக்கேன் டா” என்று அவன் தலையில் இடியை இறக்கினார் மதுரம்.
Advertisement
‘ வேணாம் வலிக்குது அழுதுருவேன் ‘ என்கிற நிலைமையில் இருந்தான் வினோத்.
அப்போது ராமனும் வந்துவிட, மதுரம் அவனிற்கு கண்ணைக் காட்டினார்.
Advertisement
Advertisement
” அப்பாக்கு என்னடா?? நல்லா தான இருக்கார்??” என்று அவனிடம் ராமன் விசாரிக்க,
பாட்டியை நோக்கி ஒரு பார்வை வீசியவன் வேறு வழியில்லாமல் தன் விதியை நொந்து கொண்டு அவர் கூறியதை போல், ” அவருக்கு Cardiomyopathy அங்கிள்” என்று முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு அவன் கூற,
Advertisement
அதற்குள் பரமசிவனும் அங்கு வந்து சேர்ந்து விட, அவர்களுக்கு அந்த நோயைப் பற்றி புரியாதலால் குழம்பிப் போய் , ” அப்படின்னா” என்று இருவரும் கோரசாய் வினவினர்.
” அப்படின்னா என்ன சொல்ல அது ஒரு இதயத்தசைநோய் அங்கிள். அதாவது நம்ம இதயத்தில் இருக்க தசையில இருந்து மற்ற உடல் உறுப்புகளுக்கு போற இரத்தவோட்டம் பாதிக்கப்படும்.. இது இதய தசைகளை பாதிக்கிற ஒரு நோய் அங்கிள்” என்று அவன் விளக்க,
” என்னடா என்னென்னமோ சொல்றா … நேத்து வரைக்கும் நல்லா தான இருந்தாரு.. இப்போ திடீர்னு இப்படி சொல்ற… இது ஒன்னும் சீரியஸ் இல்லையில.. சரி பண்ணிடலாம்ல.. அவர் இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லை டா.. என் நெஞ்சுல கல்லைத் தூக்கி போட்டுடாத..” என்று பதட்டத்துடன் மதுரம் தன் மகன்களை முந்திக் கொண்டு வினவ,
‘ உலக மகா நடிப்பு டா சாமி ‘ என்று கவுண்டமணி கூறுவது தான் அப்போது வினோத்தின் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
அதை வெளியே சொன்னால் பாட்டி தனக்கு பால் ஊத்தி விடும் சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பதால் அதை வெளியில் காட்டாமல் தொண்டையை செறுமிக் கொண்டு, ” உண்மையை சொல்லணும்னா.. இது கொஞ்சம் சீரியஸ் ஸ்டேஜ் தான்.. இந்த நோய் சிம்ப்ட்டம்ஸ் இல்லாம கூட வரும்.. அதான் நமக்கு இத்தனை நாளாக தெரியலை .. இப்போ அது ரொம்ப மோசமடைந்து விட்டது.. இனி நம்ம எந்த ட்ரீட்மென்ட் கொடுத்தாலும் அது அவர் வாழ்நாளை கொஞ்சம் நீட்டிக்குமே தவிற உயிரைக் காப்பாத்த முடியாது” என்று அவன் மதுரம் சொன்னது போல் சொல்லி விட,
அடுத்த நொடி, ” அய்யோ !!!” என்ற அலரலுடன் மயங்கிச் சரிந்தார் மதுரம்.
அவர் அடுத்து எழுந்த போது அவரைச் சுற்றி மொத்த குடும்பமும் பதற்றத்துடன் நிற்க,
அஜய்க்கும் அஸ்வத்திற்கும் அப்போது தான் வினோத் மூலம் உண்மை தெரிந்திருக்க, தங்கள் பாட்டியின் நடிப்புத் திறமையை எண்ணி வியந்து போய் நின்றிருந்தனர்.
எழுந்த நொடியே மீண்டும் தன் நடிப்பை தொடங்கிய மதுரம், ” அய்யோ என்னோட தெய்வம் இல்லாம நான் மட்டும் எப்படி உயிரோட இருப்பேன்.. டேய் அஸ்வத்து எனக்கும் ஏதாவது ஊசியை போட்டு அவரோடயே என்னையும் அனுப்பி வச்சிடு டா” என்று அழுது கொண்டே ஆர்ப்பாட்டம் செய்ய,
அனைவரும் சேர்ந்து அவரை சமாளிப்பதற்குள் அனைவருக்கும் போதும் போதும் என்றாகிவிட்டது.
ஒருவழியாய் அழுது கரைந்து அனைவரையும் சோர்வடைய வைத்த பின்பு தெளிவாய் அமர்ந்த மதுரம் அனைவரையும் தீர்க்கமாக நோக்கி,
” இதோ பாருங்க . நான் சொல்றதை எல்லாரும் தெளிவா கேளுங்க.. என் வீட்டுக்காரர் இத்தனை நாளாக உழைச்சு துறும்பா இழைச்சு இந்த குடும்பத்துக்காக எவ்வளவோ பாடு பட்டிருக்காரு.. முக்கியமா ராமா பரமா உங்களுக்காக அவர் எவ்வளவோ தியாகங்கள் செஞ்சிருக்காரு.. அந்த நன்றிக்கடன் கொஞ்சமாச்சும் உங்க மனசுல இருந்ததுனா நான் சொல்றதை கேட்டு நடங்க.. அவரோட கடைசி காலத்துலயாவது அவரை சந்தோஷமா வாழ விடுங்க.. அவருக்கு இருக்கது இன்னும் ஒரு மாசமே ரெண்டு மாசமா தான்.. அதுவரைக்கும் உங்க ரெண்டு பேரோட வெட்டி வீராப்பை தூக்கி பரண்ல போட்டுட்டு வாங்க .. உங்க ரெண்டு பேரை நினைச்சு தான் அவர் இப்போ இப்படி படுத்த படுக்கையா ஆகிட்டாரு.. நம்ம எல்லாரும் இப்படி பிரிஞ்சி இருக்கதுதான் அவர் மனசை போட்டு ரொம்ப வாட்டி வதைச்சு இப்போ இந்த நிலைமையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கு.. அதனால் கொஞ்ச நாளைக்கு நம்ம எல்லாரும் ஒன்னா ஒரே வீட்டுல இருக்கலாம்..” என்று அவர் மெதுவாய் தன் வலையை வீச,
.அவரின் இருபக்கமும் நின்றிருந்த அவரின் மகன்கள் அதை மறுத்துக் கூறும் முன்பே அவர்களை கைநீட்டி தடுத்தவர், ” இதுதான் என்னோட முடிவு.. உங்களை இத்தனை வருஷமா தோளுலையும் மாறுலையும் தூக்கி போட்டு வளர்த்த உங்க அப்பா அம்மாவோட இந்த சின்ன ஆசையை விட உங்களுக்கு உங்க வீணாப்போன பகை தான் முக்கியமாக போச்சுனா எங்களை அந்த வீட்டுக்கு வர சொல்லாதீங்க.. நானும் என் புருஷனும் எங்க கடைசி காலத்தை சத்திரத்துலயோ இல்லை எங்கயாவது ரோட்டுலயோ வாழ்ந்து முடிச்சுக்கிறோம்.. வாழ்ந்தா எல்லாரும் ஒன்னா வாழலாம் இல்லை நாங்க எங்கேயோ போய் தனியா சாகுறோம் .. இதான் என்னோட முடிவு.. இதுல எந்த மாற்றமும் இல்லை” என்று உறுதியாக ஒலித்த அவர் குரலை எதிர்த்து பேச அங்கிருந்த யாருக்கும் மனம் வரவில்லை.
மதுரத்தின் பிடிவாதத்தை பற்றி நன்கு அறிந்த அவரின் மகன்களோ அவர் தன் முடிவில் இருந்து பின் வாங்க மாட்டார் என்பதை உணர்ந்து இருந்தனர். அதனால் அவர்கள் தான் தங்கள் வீராப்பில் இருந்து கீழிறங்கி வரவேண்டியதாய் இருந்தது, என்னதான் இருந்தாலும் பெற்றவர்கள் ஆயிற்றே.. அந்த பாசம் அவர்களை தங்கள் பகையை விட்டு இறங்க வைத்தாலும் ஈகோ இன்னும் குறையாமல் இருக்க,
இராமனோ, “நான்லாம் யார் வீட்டுக்கும் போக மாட்டேன்… வேணும்னா அவங்களை இங்க வர சொல்லுங்க” என்று தன் கெத்தை விட்டுக்கொடுக்காமல் மறைமுகமாக அவரின் ஒப்புதலைத் தர,
மற்ற அனைவரும் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தனர்.
பரமசிவனும் தன் ஈகோவைப் பிடித்து தொங்கிக் கொண்டு, ” நானும் யார் வீட்டுலயும் போய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.. அப்பா இங்க தான் இருக்காங்க.. அதனால் அவங்களை இங்க வர சொல்லுங்க” என்று அவரும் தன் சம்மதத்தை கொடுக்க,
‘ என்னடா நடக்குது இங்க ‘ என்பது போல் பார்த்திருந்தனர் மற்றவர்கள் அனைவரும்.
இருவரையும் அடக்கிய மதுரம், “ரெண்டு பேரும் அடிச்சுக்க வேண்டாம்.. கொஞ்ச நாளைக்கு நம்ம எல்லாரும் நம்ம பூர்வீக வீடு அதாவது உங்க அப்பாவோட அப்பா வீடு ஒன்னு போடி பக்கத்துல லட்சுமிநாயக்கன்பட்டில இருக்கு .. நாம எல்லாரும் ஒரு ரெண்டு வாரத்துக்கு அங்க தான் தாங்க போறோம்.. எல்லாரும் ஏதும் காரணம் சொல்லாம கிளம்புற வழியைப் பாருங்க … என் பேச்சை மீறுரவங்க யாரும் எங்களுக்கு சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை .. அவங்களுக்கும் எங்களுக்கும் இருக்க உறவு இங்கேயே முடிஞ்சு போச்சு” என்று தீர்மானமாக அவர் கூறிவிட, அந்த அறையெங்கும் அவர் பேசிய பின் குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு நிசப்தம் நிலவியது.
அவர் கூறியதைக் கேட்டு அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் அதிர்ந்து நின்றனர்.